கட்டுரைகள் காணொளிகள் 

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

மௌலானா மௌதூதி (ரஹ்) 1903ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் ஔரங்காபாதில் சூஃபிப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அரபு, பாரசீகம், சட்டம், ஹதீஸ் ஆகியன அவருக்கு சிறுபிராயம் முதலே கற்பிக்கப்பட்டன. வீட்டிலேயே இவற்றைப் பயின்று வந்த அவர் தனது பதினோராம் வயதில் வீட்டுக்கு அருகிலிருந்த ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் நவீனக் கல்வி அவருக்கு வாய்த்தது. இயற்கை அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை அங்குதான் பயின்றார். பிறகு 1916ல் ஹைதராபாதில் பேரறிஞர் ஹமீதுத்தீன் ஃபராஹி தலைமையாசிரியராக இருந்த தாருல் உலூம் அரபிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவருக்குக் கல்வி தடைப்பட்டது. தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு போபாலுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. அங்கே சர்ச்சைக்குரிய உர்து இலக்கியவாதியாக அறியப்பட்ட நியாஸ் ஃபதெஹ்பூரிக்கு அறிமுகமானார் மௌதூதி. அவர்தான் மௌதூதியை எழுத்துப் பணியை மேற்கொள்ளுமாறு ஊக்கம் தந்தார். இளம் வயது தொட்டே தான் வாழ்ந்த காலத்தின் முக்கியச் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்ட பலருடனும் மௌலானா மௌதூதிக்குத் தொடர்பிருந்தது. பல்வேறு சிந்தனைப் போக்குகளை அவர் கடந்து வந்திருப்பதற்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது.

இளம் மௌதூதியின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாகிப் போனது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உழன்றதால் முறையாகக் கல்வி கற்கும் சூழலை மௌதூதி இழந்தார். ஆரம்பத்திலிருந்தே உர்து மொழிவளமும், ஆய்வுநோக்கும் கொண்டவராக மௌதூதி திகழ்ந்ததால் பத்திரிகைத் துறை அவரை உள்ளீர்த்துக் கொண்டது. தனது 17ஆம் வயதில் ஜபல்பூர் காங்கிரஸ் கட்சியின் உர்து வாரப் பத்திரிகையான ‘தாஜ்’-ல் பணியாற்றத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்ததன் மூலம் அவரின் பொருளாதார நிலை சற்று முன்னகர்ந்தது. தடைப்பட்ட தன்னுடைய கல்வியை சுயமாகத் தொடர நினைத்தார்.

ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயில்வது, சர் சையித் அஹ்மத் கான் போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போன்றவற்றில் நேரம் செலவிட்டார். இது தவிர, இந்தக் காலகட்டத்தில் மௌலானா மேற்கொண்ட முயற்சிகள் பற்றி இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னோடியான அப்துல் ஹக் அன்சாரி கூறும்போது, அவர் “மேலைத் தத்துவச் சிந்தனைகளின் பக்கம் திரும்பி, முழுமையாக ஐந்து ஆண்டுகள் அர்ப்பணித்து, மேற்கத்திய தத்துவம் தொடர்பான முக்கிய ஆக்கங்கள், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் முதலானவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்” எனக் குறிப்பிடுகிறார். உலகின் மிகப் பெரும் சக்தியாக ஐரோப்பா எழுச்சிபெற்றதில் அங்கே உருவான அறிவுஜீவிகளான ஹெகல், ஆடம்ஸ்மித், ரூசோ, மால்தூஸ், வால்டேர், டார்வின், கோதே போன்றோரின் அறிவுசார் பங்களிப்பை மௌதூதி சுட்டிக்காட்டினார்.

ஜம்மியத் உலமா யே ஹிந்துடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்வில் மற்றொரு திருப்பத்தை உண்டாக்கியது. அந்த அமைப்பின் ஏடான ‘முஸ்லிம்’ல் (பின்னர் அது ‘ஜம்மியத்’ என பெயர் மாற்றம் பெற்றது) பொறுப்பாசிரியரானார். சற்றேறக்குறைய மூன்றாண்டுகள் அதில் பணியாற்றிய அவருக்கு முக்கியமான அனுபவங்களெல்லாம் அங்கே கிடைத்தன. அந்த சமயத்தில் காந்தியால் வழிநடத்தப்பட்ட கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்குபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்காக வேலை செய்தார். அப்போது, காங்கிரஸின் தேசியவாதம் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இட்டுச்செல்வதை அவதானித்தார். மதக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கிய அந்த நேரத்தில் காங்கிரஸின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு அதிருப்தியடைந்தார். இஸ்லாம் வன்முறை சமயமாகத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் காலப்பிரிவில்தான் அதற்குப் பதிலளிக்கும் நோக்கில் மௌதூதியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூல் வெளியானது. தேசியவாதம் இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தியது மட்டுமின்றி உஸ்மானிய பேரரசைக் கவிழ்ப்பதற்கு முதன்மைக் காரணியாக விளங்கியதையும் மௌதூதி கண்ணுற்றார். ஜம்மியத் உலமா – காங்கிரஸ் ஆதரவுநிலையைத் துறந்து முற்றிலுமாக அவர் விலகுவதற்கு மேற்சொன்ன விஷயங்களெல்லாம் வழிவகுத்தன.

பிறகு, டெல்லியிலிருந்து ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்த அவர், இஸ்லாத்தை ஆய்ந்தறிவதில் தீவிரமாக ஈடுபட்டார். நிஜாமின் ஆட்சியில் ஏற்பட்ட சரிவும், மௌதூதியின் ஆழ்ந்த வாசிப்பும் ஓர் உண்மையை அவருக்குத் தூலமாகப் புலப்படுத்தியது. இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றாததே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனும் உண்மைதான் அது. குர்ஆனின் பக்கம் முஸ்லிம்களை மீளச்செய்ய வேண்டும் எனும் அவரின் வேட்கை 1932ல் ‘தர்ஜூமானுல் குர்ஆன்’ எனும் உர்து பத்திரிகையை ஆரம்பிக்க வழிகோலியது. இந்த இதழ் இஸ்லாமிய புனர்நிர்மாணத்துக்கு அவரது பெரும் பங்களிப்பாகக் கொள்ளப்படுகிறது.

1937ல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் அதையொட்டி காங்கிரஸ் அமைத்த மாகாண அமைச்சரவையும் மௌலானா மௌதூதியின் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகின. “இந்து அரசாங்கம்” என இதைக் குற்றம் சாட்டிய மௌதூதி, முஸ்லிம்களை அரசியல் மட்டத்திலும், கலாச்சார ரீதியிலும் இது ஓரங்கட்டுவதோடு, கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களாக அவர்களை மாற்றவே முனைகிறது எனக் கண்டித்தார். முஸ்லிம் லீகும் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை மேற்கொண்டது. எனினும் மௌதூதியின் கண்ணோட்டம் அதிலிருந்து வேறுபட்டு தனித்து நின்றது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை மதச்சார்பற்ற தேசத்துக்காக உழைப்பதால் இவற்றுக்கு மத்தியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என அவர் சாடினார். முஸ்லிம் லீக்கை “ஜமாஅத்தே ஜாஹிலிய்யா” என்றதோடு, ஷரிஆ அடிப்படையில் அது அரசை அமைக்க முயலாததால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் “முஸ்லிம்களின் இறைமறுப்பு அரசாக”த் திகழும் என்றார். ஜின்னா மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளிலும், சட்டங்களிலும் மட்டுமே அறிவு பெற்றிருப்பதால் இஸ்லாமிய ஆட்சி மலர்வதற்கு அவர் எதிரானவர் என்பது மௌலானாவின் கருத்தாக இருந்தது. மதச்சார்பின்மை, தேசியவாதம் போன்றவற்றை எதிர்த்துவந்த மௌதூதி இப்படியாக அபிப்ராயம் கொண்டிருந்தது வியப்புக்குரியதன்று.

இந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, 1941ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி எனும் பேரியக்கத்தை 75 பேர்களுடன் சேர்ந்து மௌதூதி நிறுவினார். ‘ஹுக்குமத்தே இலாஹி’ (அல்லாஹ்வின் அரசாங்கம் அல்லது இஸ்லாமிய அரசு) என்பது அதன் குறிக்கோளாக இருந்தது. இறை ஆட்சியை நிர்மாணிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவத்தின் அங்கம் அது என்றும் கூறினார். ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்’ என்கிற அவரது நூலில் இலாஹ் (இறைவன்), ரப் (அதிபதி), இபாதத் (வழிபாடு), தீன் (வாழ்கைநெறி) ஆகிய குர்ஆனிய சொற்பிரயோகத்தின் வழி இவற்றை நிறுவினார். இறைவனுக்கு அன்றி அதிகாரம் மனிதனின் கரங்களில் ஒப்படைக்கப்படுவதை ஜாஹிலிய்யா என்று எதிர்த்தார்.

இஸ்லாத்தை முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைத்தார். மனித உடலின் எந்தவொரு பாகமும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்து இருப்பதை இஸ்லாத்திற்கு உருவகப்படுத்திக் காட்டினார். இதன் மூலம் முழு வாழ்க்கைத் திட்டத்தின் உயிர்நாடியாக அரசு இருப்பதை விளக்கினார். ஜாஹிலிய்யாவுக்கும் இது பொருந்தும் எனச் சுட்டிக்காட்டி, இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாதென அழுத்தமாகப் பதிவு செய்தார். மானுடத்தின் வரலாற்றை ‘ஹக்’-க்கும் (சத்தியம்/நீதி) ‘பாத்தில்’-க்கும் (அசத்தியம்) இடையிலான – இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யாவுக்குமான – தொடர் போராட்டமாக அணுகினார். இவையெல்லாம் இஸ்லாத்தைக் குறுக்கிப் புரிந்துகொள்ளும் பிற இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து மௌலானா மௌதூதியை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகின.

தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஆவல்கொண்டார் மௌதூதி. ஆனால் அவரது குரலுக்கு அந்நாட்டின் அதிகார வர்க்கம் செவிசாய்க்காததோடு, இஸ்லாமிய ஆட்சிக்கான எதிர்பார்ப்பை சுமந்திருந்த மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தியது. மௌதூதி வாழ்ந்த காலமெல்லாம் தொடர்ந்து அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டே வந்தார். சில சறுக்கல்களும் அதில் இருக்கவே செய்தன.

காதியானிகளுக்கு எதிராக அவர் எழுதியதற்காக 1953 மே மாதம் 11 அன்று மௌலானா மௌதூதிக்குத் தூக்கு தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அதற்கு எதிராக உலகம் முழுக்க முஸ்லிம்களின் கண்டக் குரல்களும் போராட்டங்களும் வெடித்தன. அரசுக்கு மௌதூதி கருணை மனு அளிக்கும்படி கோரப்பட்டது. ஆனால் அவர் அதைக் கடுமையாக மறுத்துவிட்டார். பின்னர் அவருக்குக் கொடுத்த தண்டனை தளர்த்தப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; அதுவும் பிற்பாடு விலக்கப்பட்டு மௌதூதி விடுதலை செய்யப்பட்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி பேரியக்கத்தை மௌதூதி மிகச் சிறப்பாக தலைமை தாங்கினார். தீனை மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார். அரபு, வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் முதலான பல மொழிகளுக்கு அவரின் உர்து ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. முப்பது ஆண்டுகள் செலவழித்து அவர் எழுதிய ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ தஃப்சீர் அவரது ஆகப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.

முதுமைக் காலத்தில் கடும் உடல் சுகவீனத்தால் அவதியுற்றார் மௌதூதி. 1972ல் ஜமாஅத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக அனுமதிக்குமாறு ஜமாஅத் தலைமையை அவர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோள் ஷுறா உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மௌலானாவின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மருத்துவராக இருந்த அவரது மகன் சிகிச்சைக்காக அங்கே மௌதூதியை அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி 1979 செப்டம்பர் 22ஆம் நாள் பேரறிஞர் மௌதூதி (ரஹ்) இம்மண்ணை விட்டு அகன்றார். உலகின் பல இடங்களில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது உடல் லாஹூரிலுள்ள அவருடைய இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment