கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கறுப்புப் பணமும் இந்தியாவின் வறுமையும் – அருண் குமார்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பொருளாதார பிரச்னைக்குப் பின்னாலும் நாட்டில் மலையளவு குவிந்துகிடக்கும் கறுப்புப் பணம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என பெரும் பரிவர்த்தனைகளில் ஊழல் கறை படிவதும், பள்ளிக் குழந்தையின் அட்மிஷனுக்கே லஞ்சம் கொடுப்பதுமாக இருக்கும் ஒரு நாட்டில், இது ஒன்று ஆச்சர்யமில்லைதான். இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் அதிகாரபூர்வ ஏஜென்சிகள் வெளியிடும் தகவல்கள் சிறு துளி மட்டுமே.

கறுப்புப் பணத்தின் காரணமாக அரசாங்கத் திட்டங்கள் தோல்வியடைகின்றன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய சமூக அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் போகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான இந்தியர்கள் பரிதாபத்துக்குரிய வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் தேசியவாதம் பேசி மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால் உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களைக் காட்டிலும் பெரும்பாலான இந்தியர்கள் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவுமே மக்களின் வாழ்க்கைத் தரத்தை இம்மியளவும் உயர்த்தவில்லை. கறுப்புப் பணம் மற்றும் ஊழலே இதற்கு மூலகாரணம்.

“செலவீனங்கள் (முதலீடுகள்) எல்லாம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல.”

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 2005ஆம் ஆண்டு தனது பட்ஜெட் உரையில் இவ்வாறு கூறினார். அதாவது, மக்கள் நலத் திட்டங்கள் என்று ஒதுக்கப்படும் நிதி, அதற்குரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல என்பதே அர்த்தமாகும்.

“மக்கள் நலத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, அதை செயல்படுத்துகையில், ஒதுக்கப்பட்ட நிதியின் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே, அத்திட்டத்தின் பயனாளியிடம் சென்று சேருகிறது.”

இது 1987ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கூறியது. ஊழலை முன்வைத்து அவர் இப்படிக் கூறியிருந்தாலும், அதற்கு ஊழல் மட்டுமே முழுக் காரணமல்ல; அதிகாரத்துவ திறனின்மையும் செலவீன பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என்பதே பொருள்.

மேலோட்டமாகப் பார்த்தால், அரசாங்கத்தின் செலவிடுதல் முறையில் குறுக்கிடுவது மட்டுமே கறுப்புப் பணத்தின் தாக்கம் என்று தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசாங்கத்தின் திட்டங்கள் குடிமக்களுக்கு பயனளிக்கும்வகையில் செயல்படுத்தப்படாமல் போவதற்கும் கறுப்புப் பணமே காரணம். சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள், தொழில்துறை இருப்பிடம், சாலைவிதிகள் என அனைத்து விதிகளும் தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் மோசமான காற்று மற்றும் குடிநீர் மாசுபாடு உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சுகாதாரமற்ற குடிநீர் வசதிகளால் பெரும்பாலான ஏழைகள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகின்றனர். இது மனித வளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான ஒரு நாட்டில் மிகக்குறைந்த தனிநபர் வருமானத்தைப் பற்றி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

பள்ளிகள் கட்டுவதற்கு ஒதுக்கப்படும் நிதி ஊழல்வதிகளால் உறிஞ்சப்படுகிறது. ஆசிரியர்கள் போதுமான அளவில் பணியமர்த்தப்படுவதில்லை அல்லது சரியாக பள்ளிக்கு வருவதில்லை. இதனால் கல்வியறிவு மிக மோசமான நிலையிலேயே உள்ளது. பிரதம ஆய்வறிக்கை, ‘இந்தியாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 50 சதவிகித குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு புத்தகங்களை படிக்குமளவுக்குக்கூட திறனில்லை’ என்று கூறுகிறது. இதனால் சரியான கல்வியைப் பெறாமல், நல்ல வேலைக்குச் செல்ல முடியாமல் வறுமையிலேயே நீடிக்கிறது அவர்களது வாழ்க்கை.

கறுப்புப் பணம் என்பது பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள மக்களை மட்டும் பாதிக்கக்கூடிய ஒன்று அல்ல. அது, மேல்தட்டு சமூகத்தையும் பாதிக்கிறது. சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் கறுப்புப் பணம் தடைகளை ஏற்படுத்துகிறது. விளையாட்டு, தொழில்நுட்பம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், இந்தியர்கள் (ஒரு சிலரைத் தவிர) எவரும் அதில் உலகளவில் சாதனை படைத்திருக்க மாட்டார்கள். அதற்குக் காரணம், நம்மிடம் திறமையான ஆட்களும் வளங்களும் இல்லை என்பதல்ல. இருக்கிற வளங்களை முறையாகப் பயன்படுத்த முடிவதில்லை என்பதே உண்மையான காரணம். இதனால் தனிமனிதன் சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டுப் போகிறான். இது, குழு மனப்பான்மையையும் கூட்டு முயற்சியையும் உருவாக்குவதை சிரமமாக்குகிறது.

இன்று பரந்துவிரிந்திருக்கும் 127 கோடி ஜனத்தொகையில் ஒரு 3.9 கோடிப்பேர் அனைத்து வசதிகளுடனும் கூடிய சொகுசான வாழ்க்கையை அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள். காரணம், சட்டத்துக்கு உட்பட்டு, பெரும் வருவாயைத் தாண்டி சட்டத்துக்கு புறம்பாகப் பெறப்படும் கறுப்புப் பணம். பகட்டான வாழ்க்கை முறையும், ஆடம்பரமான சொத்துகளும் உடைய சொகுசு வாழ்க்கைக்கு மத்தியில் ஏழை மக்களின் வாழ்க்கை நிலவுவதையே இது காட்டுகிறது. கறுப்புப் பணத்தின் வளர்ச்சி வறுமை பெருகுவதற்கும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

இதுவரை கறுப்புப் பணத்தின் மறைமுக பாதிப்புகளை மட்டுமே பார்த்தோம். இனி, இந்த பிரச்னையின் தீவிரமான பாதிப்புகள் குறித்து பார்க்கலாம். உதாரணமாக, சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றன. இதனால் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. இது நோய்கள் பரவுவதை ஊக்குவிக்கிறது. இது, குறிப்பாக ஏழைகளையே பாதிக்கிறது. இது சீரழிந்து வரும் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம், கிராமப்புறங்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. 1991க்குப் பின்னர் தாராளமயமாக்கலுக்குப் பிறகும், பொது சுகாதாரத் துறையில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகும் சிகிச்சை செலவுகளும் அதிகரித்துவிட்டன.

1987 மற்றும் 1996க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, ‘சிகிச்சை செலவுகளில் மருந்துகள் விலை மட்டுமின்றி, டாக்டர் ஃபீஸ், சோதனை என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளதாக’ கூறுகிறது. இதில் ஏழைகள்மீது தொடர்து பொருளாதார சுமைகள் சுமத்தப்படுவதே துயரமானது. பணக்காரர்களின் வருவாய் செலவு 2.18 சதவிகிதத்தில் இருந்து 2.44 சதவிகிதமாக மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் ஏழைகளுக்கு 7.18 சதவிகிதத்தில் இருந்து 39.63 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கல்வி தனியார்மயமாக்கப்படுவது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால் கல்வி விலையுயர்ந்த ஒன்றாக மாறி வருகிறது. சமூகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்விக்கான செலவு அதிகரித்து வருகிறது. இதனால் மிகவும் வறுமையான குடும்பங்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. அனுப்பும் ஒரு சிலருக்கும் தங்களது மொத்த வருவாயையும் பள்ளிக் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்வி, சுகாதாரம் என அனைத்துச் சேவைகளும் இன்று விலையுயர்ந்து ஏழைகளின் பொருளாதாரச் சுமைகளை அதிகரிக்கின்றன.

இறுதியாக, பண மதிப்பழிப்பு நடவடிக்கை. இது நுகர்வோர்மீதான மிகப்பெரிய தாக்குதல். இவ்வளவு செலவுகளையும் கடந்து மீதியிருக்கும் வருவாய்தான் அவர்களது உணவு மற்றும் பிற அத்யாவசியத் தேவைகளுக்கு. அதிலும் முக்கால்வாசிப் பணம் சமூகத்தின் முக்கிய நோயான போதைப் பழக்கத்துக்கு வீணாகி விடுகிறது. எனவே, கறுப்புப் பணத்தின் தாக்கம் நம் எதிர்பார்ப்புக்கு மிஞ்சியது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஊதிய உயர்வு காரணமாக வறுமை குறைந்துவருவதாக அரசு கூறுகிறது. ஆனால் கறுப்புப் பணம் மற்றும் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வறுமைக்கோடும் மாறி வருகிறது. அதாவது, வறுமை குறைகிறது என்பதைவிட வறுமையை உருவாக்கும் காரணிகள்தான் மாறிக்கொண்டே வருகின்றன என்பதே சரியாகும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதை கொள்கை வகுப்பதில் சேர்க்காமல் இருப்பது, அதைக் கட்டுப்படுத்துவதை மேலும் சிரமம் ஆக்குகிறது.

குறிப்பு

இக்கட்டுரை அருண் குமார் எழுதிய Understanding the Black Economy and Black Money in India: An Enquiry into Causes, Consequences and Remedies என்ற புத்தகத்தில் இருந்து உரிமை பெற்று ஸ்க்ரோல் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ்

நன்றி: மின்னம்பலம்

Related posts

Leave a Comment