கட்டுரைகள் 

அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது.

[Daniel Haqiqatjou எழுதிய Do Science and the Quran Ever Conflict? Yes. என்ற பதிவின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்]

“அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது” என்பது தவறான கருத்து.

அறிவியல் ரீதியில் குர்ஆன் நூறு சதவீதம் துல்லியமானது எனச் சில முஸ்லிம்கள் கோருகிறார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உண்மையை பரிபூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அறிவியல் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அந்த உண்மையைப் படைத்தவனின் வாக்காக குர்ஆன் இருப்பதால், தர்க்க ரீதியில் அவ்விரண்டுக்கும் நடுவே கனகச்சிதமான பொருத்தம் நிலவியாக வேண்டும் (என எதிர்பார்க்கப்படுகிறது).

எனினும் இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அறிவியலொன்றும் உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியல்ல. இதை ஒப்புக்கொள்வதற்கு நீங்கள் ஒரு கூனிய (Thomas Kuhn எனும் அமெரிக்க இயற்பியலாளரின் கருத்தியலை ஏற்கும்) பின்நவீனத்துவவாதியாக இருக்க வேண்டியதில்லை. அறிவியலின் பெரும்பகுதி இயல்பிலேயே தற்காலிகத் தன்மையிலானது என்பதை அறிவியல்சார் சமூகமே ஒப்புக்கொள்கிறது. அதாவது, புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் அறிவியல் புதுப்பிக்கப்படுகிறது, பரிணமிக்கிறது.

உதாரணத்திற்கு, இன்று நம்மிடம் உள்ளதிலேயே அறிவியல் ரீதியில் மிக வலுவான கோட்பாடு ‘குவியப் புலக் கோட்பாடு’ தான் (Quantum Field Theory). அதையே கூட, இயற்பியலாளர்கள் முற்றிலும் பிழையானது என்றோ; அல்லது குறைந்தபட்சம், அதைக் காட்டிலும் முழுநிறைவான அதிகத் துல்லியமான (புவியீர்ப்பு விசையையும் கணக்கில் எடுத்துக்கொள்கிற) ஓர் கோட்பாட்டின் அரைகுறைத் தோராய வடிவமென்றோ எண்ணுகின்றனர்.

தம்முடைய ஆய்வுத் துறையைப் பொறுத்த மட்டில், தாம் இறுதி உண்மையைக் கண்டறிந்துவிட்டதாக எந்தவொரு விஞ்ஞானியாலும் இன்று கோர முடியாது (வெகு சிலர் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்). இன்னும் சொல்வதென்றால், “ஒருபோதும் அறிவியலால் நூறு சதவீதம் உண்மையை அறிந்துகொள்ள முடியாது; தமக்கு முந்தைய கோட்பாட்டை உண்மையல்ல என மட்டுமே அதனால் நிறுவ முடியும்” என்பார்கள் பாப்பரிய சாய்வு கொண்ட அறிவியலாளர்கள் (Karl Popper எனும் மெய்யியலாளரின் கருத்தை ஏற்பவர்கள்).

இதற்குத் தூலமான உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இயற்பியலாளர்கள் எல்லையற்ற அளவையும் வயதையும் கொண்ட இப்பிரபஞ்சம் மாறாத ஓர் நிலையில் இருந்துவந்ததாக நம்பினார்கள் (Steady State Theory). 1930-களில்தான் அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் வளர்ச்சிக்கான பெருவெடிப்புக் கோட்பாட்டை (Bing Bang Theory) தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள். ‘நித்தியப் பிரபஞ்சம்’ (eternal Universe) எனும் கருத்து, வரையறுக்கப்பட்டவோர் புள்ளியில்தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது எனும் குர்ஆனின் வருணனைக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக, 1900-களின் ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சமயத்தில் நடப்பிலிருந்த ‘பிரபஞ்சத்தின் மாறாநிலைக் கோட்பாட்டுடன்’ இணங்கிப்போக வேண்டுமென்பதற்காக தொடர்புடைய குர்ஆன் வசனங்களை மாற்றி விளக்க முனைந்திருந்தால், முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ பிரபலமாக்கப்பட்ட சமயத்தில் தம்முடைய நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் பின்வாங்க வேண்டி வந்திருக்கும். அதே வகையில் பார்த்தால், இன்று நடப்பிலுள்ள அறிவியலைப் பயன்படுத்தி சிலர் குர்ஆனுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டுக்கும் மாற்று விளக்கம் கொடுக்கிறார்களே, அந்த அறிவியல் மட்டும் மீண்டும் முப்பது நாற்பது ஆண்டுகளில் இதே போலத் தலைகீழாக மாறாது என்பது என்ன நிச்சயம்? அறிவியலின் சந்தடி நிறைந்த வரலாற்றுப் போக்கை கருத்தில் கொண்டால், அவ்வாறு நிகழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இறுதியாக, பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் இல்லை. குறைந்தபட்சம், இன்றளவில் இல்லை. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிட முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கிற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்ற செயலாகும்.

இவ்வாறு சொல்வதால், அறிவியலில் கண்டறியப்படும் பல்வேறு கருத்துகளின் ஒளியில் குர்ஆனைக் குறித்து சிந்திக்கவோ அதன் வசனங்கள் பற்றி ஆராயவோ கூடாது எனப் பொருளாகுமா? நிச்சயம் இல்லை. தாராளமாக அதைச் செய்யலாம். அவ்வாறான ஆராய்ச்சியில் ஈடுபடும்போது சிலர் தமது ஈமான் (இறைநம்பிக்கை) வலுப்படுவதாக உணர்கிறார்கள், நாம் அதை சிறுமைப்படுத்தக் கூடாது.

எனினும் இங்கு நம் கவனத்திற்குரியது என்னவெனில், அந்த தனிப்பட்ட அனுபவமானது ஓர் குர்ஆன் விளக்கவுரையாக மாறி, அதை அவர் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும்; இன்னும் கேடாக, “குர்ஆனும் அறிவியலும்” என்பது குறித்த ஓர் மெய்யியல் கோட்பாடாக அது உருவெடுப்பதும்தான். இது பிரச்சினைக்குரியது.

ஏனெனில், குர்ஆனைக் குறித்து சிந்தித்து அதைப் பொது அரங்கில் விளக்கவுரையாக முன்வைக்க முனையும்போது அது குர்ஆன் விரிவுரைக்கென்றே (தஃப்சீர்) சரிவர வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் அடியொற்றியதாகவும், இறைவாக்குடன் பேணப்பட வேண்டிய ஒழுங்கை (அதபு) பின்பற்றியதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இது தொடர்பில் நம் இறைத்தூதரின் (ஸல்) கருத்தாழமிக்க வார்த்தைகளை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்:

அல்லாஹ்வின் வேதத்தைக் குறித்து எவரொருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி கருத்துரைக்கிறாரோ, அவரது அக்கருத்து சரியாக இருந்தாலும் கூட, அவர் தவறிழைத்தவராகிறார்.

(தமிழில்: ஷான் நவாஸ்)

Related posts

Leave a Comment