தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அறிமுகம்

[ஹஜ் உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாடுகள் விசயத்தில் அவற்றின் வழிமுறைகளை விளக்கி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாமறிவோம். ஆனால் அவற்றின் நோக்கம், தத்துவம், உணர்வு என்று வரும்போது வெகு அரிதானவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. அந்த வகையில் அலீ ஷரீஅத்தி எழுதிய ஹஜ் எனும் ஆக்கம் அற்புதமானவொன்று. அதன் மொழிபெயர்ப்பை  ‘மெய்ப்பொருள்’ தளத்தில் தொடராக வெளியிட எண்ணியிருக்கிறோம். அதன் முதல் பதிவு கீழே.]

மொழிபெயர்ப்பாளர் பற்றி…

பண்ணாமத்துக் கவிராயர். இயற்பெயர் சையது முஹம்மது ஃபாரூக். 1940-ல் மாத்தளையில் (இலங்கை) பிறந்தவர். ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர். இன்ஸான் பண்ணையின் முன்னோடி இலக்கியவாதிகளில் ஒருவர். பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியர். 1960-கள் முதலே தமிழ்க் கவிதையிலும், குறிப்பாக மொழிபெயர்ப்புத் துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டு இயங்கிவருபவர். இலங்கையின் பல்வேறு பத்திரிக்கைகளிலும் தேசிய நாளிதழ்களிலும் இவருடைய ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

ஃபலஸ்தீனப் பேரவலங்களின் கொடுமைகளை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தமிழ்க் கவிதைகளாய்த் தந்த முக்கிய முன்னோடிகளில் ஒருவர் இவர். மஹ்மூத் தர்வேஸ், பௌசி அல்-அஸ்மார், சமி அல்-காசிம் போன்ற பல ஃபலஸ்தீனக் கவிஞர்களின்  கவிதைகளை அவர் தமிழிற்கு வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி அல்லாமா இக்பால், ஃபைஸ் அஹமது ஃபைஸ், காஸி நஸ்ருல் இஸ்லாம் முதலியோரின் உருது, பாரசீக, வங்காளக் கவிதைகளையும் ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வழங்கியுள்ளார். இருமொழிப் புலமையாளரான இவர் வெளியிட்டுள்ள நூல்கள்: ‘காரவான் கீதங்கள்: அல்லாமா இக்பால் கவிதைகள்’, ‘காற்றின் மௌனம்’, ‘ஸரன்தீபிலிருந்து மஹ்மூத் அல்-பரூதி’, ‘Genesis: Tamil Short Stories’. 1993-ல் ‘தமிழ் ஒளி’ விருதையும், 1996-ல் ‘கலா பூசணம்’ விருதையும் பெற்றுள்ளார். 2016-ல் இவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முகவுரை

‘மதத்தை பற்றி அறிந்த’, மதங்களின் வரலாற்றை ஆய்வுத் துறையாகக் கொண்ட ஒருவனென்ற முறையில் மதங்களின் கடந்தகால நிலையென்ன? அவற்றின் தற்போதைய நிலையென்ன? மதங்களின் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் இடையே காணப்படும் வித்தியாசங்களென்ன? என நான் ஒப்புநோக்கிய ஒவ்வொரு மதத்தினதும் வரலாற்று பரிமாணம் பற்றிய எனது படிப்பாய்வின் விளைவாக நான் பின்வரும் முடிவுகளுக்கு வந்தேன். எனது முடிவு என் சொந்த மதவுணர்வுகளையோ, முன்முடிவுகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல.

மனித இனத்தின் மகிழ்ச்சி, பரிணாமம் என்ற அடிப்படையில் நாம் ஒவ்வொரு மதத்தினதும் வலிமையை ஆய்ந்து மதிப்பிட்டால் முஹம்மது (ஸல்) அவர்களது தீர்க்கதரிசனம் போன்று (அதாவது இஸ்லாமும் மனிதனது சமூக முன்னேற்றத்தில் அதன் பங்கு; இயக்கம், பொறுப்பு, மனித அபிலாஷை, படைப்பூக்கம், விஞ்ஞான-பொருளாதார முன்னேற்றத்துடன் பொருத்தப்பாடு, நாகரிகம் மற்றும் சமூகத்தின்பால் முன்னேற்றமும் சார்பு போன்றவற்றில்) முன்னேற்றகரமான, சக்திவாய்ந்த, வசீகரம்மிக்க தீர்க்கதரிசனம் வேறு கிடையாதென்பதை நாம் அறிய வருவோம். அதேவேளை நடப்பு காலத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது தீர்க்கதரிசனம் போன்று நலிவுற்ற, முற்றிலும் வேறொன்றாக மாறிவிட்ட தீர்க்கதரிசனம் வேறில்லை என்பதையும் நாம் அறிய வருவோம்.

சகல பௌதிக வசதிகளையும் விஷயமறிந்த ஆலோசகர்களையும் கொண்ட ஏதோவொரு சக்தி பகிரங்கமாக அல்லது இரகசியமாக தலைசிறந்த படிப்பாளிகளான வரலாற்றறிஞர்கள், சமூக விஞ்ஞானிகள், சமூகவியலாளர்கள், சமூக உளவியல் அறிஞர்கள், அரசியல்வாதிகள், மானுடவியலாளர்கள், மத அறிஞர்கள், கீழைத்தேயவியலாளர்கள், இஸ்லாமிய கல்வித்துறை நிபுணர்கள், குர்ஆன் விளக்கவுரையாளர்கள் மற்றும் இஸ்லாமிய இலக்கியம், முஸ்லிம்களின் சமூக உறவுகள், முஸ்லிம்களின் பாரம்பரியங்கள், முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களின் பலம்-பலவீனம், முஸ்லிம் நலன்கள், முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நடத்தை, இன்னோரன்ன விடயங்களை நன்கறிந்தவர்கள் முதலானோர் அடங்கிய குழுவொன்றை பணிக்கமர்த்தி இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் கவனமாக விஞ்ஞான ஆய்வொன்றை தொடர்வதன் மூலம் இஸ்லாமிய சித்தாந்தத்தையே முற்றாக மாற்றிவிடப் பிரயத்தனம் செய்வது போல் தெரிகிறது.

என்னைப் பொறுத்தவரையில், நடைமுறை கண்ணோட்டத்தின் படியும் மனோபாவ கண்ணோட்டத்தின் படியும், முஸ்லிம் தேசத்தின் உந்துசக்தியாக அமைந்து, அதன் பிரஜைகளை உணர்வுள்ளவர்களாக, சுதந்திரவான்களாக, தன்மானமுள்ளவர்களாக, சமூக பொறுப்புணர்வுள்ளவர்களாக மாற்றியமைக்கும் இஸ்லாமிய சித்தாந்தத்தின் மிக முக்கிய தூண்களாவன: தௌஹீத், ஜிஹாத், ஹஜ்.

துரதிர்ஷ்டவசமாக தௌஹீத் என்ற கோட்பாட்டை போதிக்கும் பணி ஆரம்ப பாடசாலைகளுக்கு உள்ளாக மட்டுமே அடங்கி விடுகின்றது. அவற்றுக்கு அப்பால் மதத் தலைவர்களது தத்துவ மதக் கலந்துரையாடல்களில் அது பிரஸ்தாபிக்கப்படுவதுண்டு. ஆனால் மொத்தத்தில், அக்கலந்துரையாடல்கள் மக்களுக்கு அந்நியமானவை. மக்களது வாழ்வுக்கு பொருந்தாதவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், அல்லாஹ்வின் உள்ளமையும் ஏகத்துவமும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனால் தௌஹீத் அதன் உண்மையான அர்த்தத்தில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஜிஹாத் என்ற கோட்பாட்டை பொறுத்தவரை அது முற்றாக விலக்கப்பட்டு, வரலாற்றின் புதைகுழியில் புதையுண்டு போனதென்றே சொல்ல வேண்டும். ‘நன்மையை செய்யுமாறும், தீமையை தவிர்ந்து கொள்ளுமாறும் தூண்டும்’ ஜிஹாதின் அடிப்படைக் கோட்பாடு தீயவர்களை திருத்துவதில் பிரயோகிக்கப்படுவதற்கு பதிலாக, நண்பர்களை குறைகூறுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

இறுதியாக, ஹஜ் என்பது ஆண்டு தோறும் முஸ்லிம்கள் நிறைவேற்றும் அறிவுக்கொவ்வாத, அசூசையான செயலாகக் கருதப்பட நேர்ந்துள்ளது.

இஸ்லாத்தின் விரோதிகள் பிரத்யேகக் கொள்கையொன்றை அமல்படுத்தி மாற்றங்களை புகுத்துவதில் வெற்றிகண்டுள்ளனர். ‘பிரார்த்தனை நூல்’ சவக்குழியிலிருந்து நகருக்குள் கொணரப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் நகரப் பிரஜைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மடிந்தவர்களின் ஆன்மசாந்திக்காக சவக்குழிக்கு அருகில்நின்று ஓதுபவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மதப் பாடசாலைகளிலும் (மதறஸா) இதே அணுகுமுறையே காணப்படுகிறது. திருக்குர்ஆன் மாணவர்களின் கரங்களிலிருந்து பிடுங்கப்பட்டு பரண்மேல் வைக்கப்பட்டுவிட்டது. அதன் இடத்தை கொள்கைக் கிரந்தங்களும் தத்துவ உரைகளும் பிடித்துக் கொண்டு விட்டன. எனவே முஸ்லிம்களின் வாழ்வில் குர்ஆன் இடம்பெறாவிட்டால், முஸ்லிம் மாணவர்களது பாடத் திட்டத்தில் திருமறை சேர்த்துக் கொள்ளப்படாவிட்டால், விரோதிகளால் நமக்கு நேரக்கூடிய கதி வெட்ட வெளிச்சமானதே!

மக்கள் மீது பொறுப்பு கொண்ட ஒரு புத்திஜீவி, தனது மத நம்பிக்கை காரணமாக பொறுப்புணர்வு கொண்ட ஒரு முஸ்லிம் அல்லது இரட்டை பொறுப்புகளை கொண்ட ஒரு முஸ்லிம் புத்திஜீவி, செயலற்றுப்போய் வாளாவிருக்க முடியுமா? மேற்கத்திய சித்தாந்தத்தை கைக்கொள்வதன் மூலம் தமது மக்களை காப்பாற்றி அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கலாமென அவர் நினைக்கின்றாரா? முடியவே முடியாது!

என் அறிவுஜீவி நண்பனே, முஸ்லிம் சகோதரனே, ஒன்று மக்கள் மீது உனக்குள்ள கடமையை நீ உணர்வாயாக. அல்லது அல்லாஹ் மீது உனக்குள்ள கடமையை உணர்வாயாக. எதுவெனினும் பாதகமில்லை. நாம் ஒரே படகிலேயே கால் வைத்திருக்கிறோம். ஒரே கடமையையே கொண்டிருக்கிறோம். அடிமைத் தளையிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்வதற்காக, நமது கண்ணியத்தை மீண்டும் நாம் பெறுவதற்காக நமது விரோதி கையாண்ட அதே உபாயங்களை கடைபிடிப்பதே மிகச் சிறந்தது. எந்தப் பாதையிலிருந்து நாம் பிரிக்கப்பட்டோமோ அதே பாதைக்கு நாம் மீள வேண்டும்.

எனவே, புனித திருமறையை சவக்காட்டிலிருந்து  மீண்டும் நகருக்குள் கொணர வேண்டும். உயிருடன் இருப்போருக்கு அதை ஓதிக்காட்ட வேண்டும் (மரித்தவர்களுக்கு அல்ல)! குர்ஆனை பரணிலிருந்து எடுத்து மாணவர்களின் கண்முன்னால் அதை விரித்துப் படிக்கும்படி செய்ய வேண்டும். நம் எதிரிகள் திருக்குர்ஆனை தம்மால் ஒழிக்க முடியாமல் போனபடியால் அதை மூடி ஒரு மூலையில் வைத்து புனித கிரந்தம் என அதற்கு மரியாதை செய்யும்படி விட்டுள்ளனர். ‘குர்ஆன்’ என்ற அதன் நாமம் சுட்டுகின்றபடி நாம் அதனை ஓர் ‘நூலாக’, கற்கப்பட வேண்டிய நூலாக உபயோகித்தல் நம் கடமை!

இஸ்லாமிய அறிவுத்துறையின் சிரஞ்சீவி நூல் எனும் வகையில், இஸ்லாமிய போதனைகளுக்கு திருக்குர்ஆன் ஒருநாள் உபயோகிக்கப்படுமென நாம் எதிர்பார்ப்போமாக! இஜ்திஹாதில்1 பட்டம் பெறுவதற்கு குர்ஆன் அறிவு அவசியமென தேவைப்படும் அந்த நாளை காண்பதற்கு நாம் அவாவுகிறோம்.

நாம் குர்ஆனின்பால் திரும்பிச் சென்று, அதனை நமது வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொண்டால், தௌஹீதின் சாரத்தை நாம் உணர்வோம். குர்ஆனை நமது அமைப்பின் கட்டுக்கோப்பாக மாற்றிக் கொள்வோமெனில் ஹஜ், ஜிஹாது,2 இமாமத்,3 ஷஹாதத்4 போன்ற கடமைகளின் ஆக்கத் தன்மையையும் காரிய சித்தியையும் நாம் உணர்வோம். நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் உணர்வோம்.

இனி இக்கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை கவனிப்போம். ஏகத்துவ கண்ணோட்டத்தில் அதன் முக்கியத்துவத்தை ஆராய்வோம்.

மூன்று முறை ஹஜ்ஜை நிறைவேற்றி ஒருமுறை மக்காவை சுற்றிப் பார்த்ததனால் எனக்கேற்பட்ட சொந்த அனுபவத்தினதும், புரிதலினதும் தொகுப்பே இந்நூல். இது சடங்குகளை பற்றி ஒரு எளிய அடியானின் அபிப்பிராயங்களும் விளக்கங்களும் மட்டுமே. இவ்வெழுத்தின் அடிப்படையில் சடங்குகளை நோக்குவதற்கு எந்த முஸ்லிமுக்கும் உரிமை கிடையாது. ஏனெனில், இது ‘மார்க்கச் சட்டம்’ பற்றிய நூல் அல்ல. உங்களை சிந்திக்கத் தூண்டும் ஒரு நூல் மட்டுமே. ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பும் போது, ஹஜ் பற்றி பேசுவதற்கு தகுதி பெறுகின்ற ஒரு முஸ்லிம் ஹாஜி என்கிற முறையிலேயே சடங்கு வைபவங்களை பற்றி நான் விளக்க முற்பட்டுள்ளேன். நான் பிறரோடு என் அபிப்பிராயங்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதுவே ‘சம்பிரதாயமாக’ இருந்து வந்துள்ளது.

ஹஜ் செய்யும் பாக்கியம் பெற்ற சிறுபான்மையினர், அப்பாக்கியம் கிட்டப் பெறாத பெரும்பான்மையினருடன் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து (மிகவும் பின்தங்கிய கிராமங்களிலிருந்தும், பின்தங்கிய பூர்விக குடிகளிலிருந்தும் கூட) வரும் பத்து இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு பயிற்சியளிக்கக் கூடிய ஒரு தலைமை இருக்குமானால்; உணவு, சுகாதாரம் பற்றி மலர் வெளியீடுகளில் பிரபுத்துவத்தின் ஆடம்பரமானஆனால் ஹஜ்ஜுக்கு முரணான அசிங்கமான பகட்டுகளில் காட்டும் அளவுக்கு சடங்குகளின் அர்த்தத்தில் சற்று கரிசனை காட்டப்படுமானால்; சடங்குகளை நிறைவேற்றுவதில் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்தி தப்பெண்ணத்துடன் நடந்து கொள்வதற்குப் பதிலாக அந்தச் சடங்குகளின் அர்த்தத்தில் சற்று கரிசனை காட்டப்படுமானால், ஹஜ் என்பது ஆண்டுதோறும் உலகெங்குமிருந்து வரும் பத்து இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சித்தாந்தத்தின் நடைமுறை பயிற்சியாகவும், கொள்கை விளக்கமாகவும் அமைந்துவிடும்.

ஹஜ்ஜின் நோக்கத்தை, தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தை, ஐக்கியத்தின் அவசியத்தை முஸ்லிம் சமூகத்தின் விதியை அப்போது அவர்கள் அறிந்துகொள்ள முடியும். அறிவையும் தகவல்களையும் திரட்டிக்கொண்டு தம் தாயகத்துக்கும் தத்தமது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மீண்டு, தம் சமூகத்துக்கு அறிவொளி பாய்ச்ச முடியும். இதன் விளைவாக ஒரு ஹாஜி இருளில் ஒளிரும் ஓர் ஒளிக்கிரணம் போன்றும், தம் வாழ்நாள் பூராவும் தம் சமூகத்தின் மீது கவியும் இருளில் ஒரு வழிகாட்டி போன்றும் திகழ முடியும்.

- அலீ ஷரீஅத்தி

குறிப்புகள்

  1. இஜ்திஹாத் – மூலாதாரப் பனுவல்களிலிருந்து சட்டங்களை வடித்தெடுக்கும் ஆய்வுச் செயல்முறை
  2. ஜிஹாத் – அல்லாஹ்வின் பாதையில் மேற்கொள்ளப்படும் கடும் போராட்டம்
  3. இமாமத் – இஸ்லாமிய சமூகத் தலைமை
  4. ஷஹாதத் – உயிர்த்தியாகம்

முன்னுரை

ஹஜ் அனுபவத்தால் நான் பெற்ற படிப்பினை என்ன? ஹஜ்ஜின் அர்த்தமென்ன? என்பது தான் ஒருவர் கேட்க வேண்டிய முதல் கேள்வி. சுருக்கமாகச் சொல்வதாயின், ஹஜ் என்பது அல்லாஹ்வை நோக்கிய மனிதனின் பரிணாமப் பயணமாகும். அது ஆதத்தின் படைப்பு பற்றிய தத்துவத்தின் வெளிப்பாடாகும். இதை மேலும் விவரிப்பதாயின், ஹஜ்ஜின் செய்கைகள் ஒரே நேரத்தில் பல காட்சிகளை சித்தரிக்கின்றன என்று குறிப்பிடலாம். ‘படைப்பின் காட்சி’, ‘வரலாற்றின் காட்சி’, ‘ஐக்கியத்தின் காட்சி’, ‘இஸ்லாமிய சித்தாந்தத்தின் காட்சி’, ‘உம்மத்தின்1 காட்சி’ என்பனவே அவை.

இந்த ‘காட்சியில்’ பின்வரும் நிலைமைகள் எடுப்பாகத் தென்படுகின்றன. அல்லாஹ்வே அரங்க நெறியாள்வோன். சம்பந்தப்பட்ட மனிதர்களின் நடவடிக்கைகளே அரங்கேறும் நிகழ்ச்சி. ஆதம், இப்றாஹீம், ஹாஜர், ஷைத்தான் முதலானோர் பிரதான பாத்திரங்கள். மஸ்ஜிதுல் ஹறம்2, ஹறம் பகுதி, மஸ்ஆ,3 அறஃபா,மஷ்அர்,மினா6 ஆகியவை காட்சிகள் இடம்பெறும் களங்கள். கஅபா,7 சஃபா – மர்வா,8 பகல், இரவு, சூரியவொளி, அஸ்தமனம், சிலைகள், பலியிடும் சடங்கு ஆகியனவே முக்கிய சின்னங்கள். இஹ்றாம்,9 ஹல்க், தக்சீர்10 என்பனவே ஆடையும் ஒப்பனையும். இறுதியாக, இவற்றில் பாத்திரங்களேற்று நடிப்பது ஒரே ஒருவர்தான். அதுதான் நீ!

ஆணோ பெண்ணோ, வாலிபரோ வயோதிகரோ, கறுப்பரோ வெள்ளையரோ நீ யாராக இருப்பினும் நீ தான் பிரதான பாத்திரமேற்கிறாய். அல்லாஹ்வுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலேற்படும் மோதலில் ஆதத்தின் பாத்திரத்தை, இப்றாஹீமின் பாத்திரத்தை, ஹாஜரின் பாத்திரத்தை ஏற்று நடிப்பவன் அல்லது நடிப்பவள் நீ தான்.

இதன் விளைவாக நீயே இந்த ‘நாடகத்தின்’ பிரதான பாத்திரமாகிறாய். உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ஆண்டுதோறும் இந்நாடகத்தில் பங்குபெறுமாறு ஆர்வமூட்டப்படுகின்றனர். யாவரும் சரிநிகர் சமானமாகவே கருதப்படுகின்றனர். பால் பாகுபாடு, இன வேற்றுமை, அந்தஸ்து பேதம் எதுவும் கிடையாது. இஸ்லாமிய போதனைகளின் படி ‘யாவரும் ஒருவரே, ஒருவரே யாவரும்’.

ஒருவரின் உயிரை காப்பவன், யாவர் உயிரையும் காப்பவனாவான். ஒருவரைக் கொன்றவர், யாவரையும் கொன்றவனாவான்.

எனினும், இஸ்லாத்தின் வைரிகள் இஸ்லாத்துக்கெதிராக வேண்டுமென்றே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மனிதன் சிறப்பு உரிமைகளும் வரப்பிரசாதங்களும் கொண்டவன் என இஸ்லாம் அங்கீகரிக்கின்றது என்பதனை மறுப்பதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். ஹஜ்ஜின் மெய்ப்பொருளின்படி பார்த்தால், அது முக்கியத்துவமற்ற ஒரு கிரியையாக மாறிவிட்டது. இமாம் அலீ (ரழி) கூறுவது போல்,

“இஸ்லாம் என்றால் உட்புறத்தை வெளிப்பக்கமாக புரட்டியணியும் செம்மறித்தோல் அங்கி11 போலும்!”

நான் சின்னஞ்சிறியவனாகவும் ஹஜ் பிரம்மாண்டம் கொண்ட ஒன்றாகவும் இருக்க, ஹஜ்ஜிலிருந்து தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டதென்ன? இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது? தொடர்ந்துவரும் பக்கங்கள் இக்கேள்விகளுக்கு விடைகாண நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளின் விளைவாகும். எனது நோக்கம் ஹஜ்ஜின் போது என்ன செய்ய வேண்டுமென வாசகனுக்கு அறிவிப்பதல்ல. கிரியைகளின் வழிமுறைகள் (மனாசிக்)12 பற்றிய நூலை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம். அதற்குப் பதிலாக ஹஜ்ஜின் தாத்பரியம் பற்றிய எனது கண்ணோட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹஜ்ஜை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு இக்கருத்துகள் உதவ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், ஹஜ்ஜை பற்றி சிந்திக்கவாவது இவை உங்களைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.

– அலீ ஷரீஅத்தி

குறிப்புகள்

  1. உம்மத் – பொது இலக்குகளுக்காக ஒன்றுபட்டு உழைக்கும் இலட்சிய சமுதாயம்
  2. மஸ்ஜிதுல் ஹறம் – மக்காவிலுள்ள புனிதப் பள்ளிவாசல்
  3. மஸ்ஆ – சஃபா மற்றும் மர்வா குன்றுகளுக்கு இடைப்பட்ட பகுதி
  4. அறஃபா – மக்காவிலிருந்து பன்னிரண்டு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ‘அடையாளங்காண் மலை’.
  5. மஷ்அர் – அறஃபாத்துக்கும் மீனாவுக்கும் இடைப்பட்ட பகுதி. இங்கு யாத்திரிகர்கள் இரவில் தங்கியிருந்து மறுநாள் மினாவிலுள்ள சிலைகளுக்கு கல்லெறிவதற்காக (சுடுவதற்காக கற்களை (தோட்டாக்களை) சேகரிப்பர்.
  6. மினா – மக்காவுக்கு அருகேயுள்ள புனிதப் பள்ளத்தாக்கு. குறியீடான சிலைகள் இங்கே அமைந்துள்ளன.
  7. கஅபா – மக்காவிலுள்ள புனிதப் பள்ளிவாசலின் மையத்தில் அமைந்திருக்கும் கனசதுர வடிவக் கட்டிடம்.
  8. சஃபா மற்றும் மர்வா – கஅபாவுக்கு அருகிலுள்ள இரு மலைக்குன்றுகள்.
  9. இஹ்றாம் – புனித யாத்திரிகர்களின் உடை. இச்சிறப்பு உடை அணிந்ததிலிருந்து களையும்வரை அந்த யாத்திரிகர் இருக்கும் நிலையையும் அது குறிக்கும்.
  10. ஹல்க், தக்சீர் – ஹஜ்ஜின் சடங்குகளில் ஒன்று. சஃபா மற்றும் மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடியபிறகு தலைமயிரை அல்லது நகத்தைக் கத்தரிக்கும் சம்பிரதாயம்.
  11. செம்மறித்தோல் அங்கியின் வெளிப்புறம் அவலட்சணத்தைக் குறிப்பதற்கும், உட்புறம் அழகையும் கவர்ச்சியையும் குறிப்பதற்கும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
  12. மனாசிக் – ஹஜ்ஜின் போது நிறைவேற்றப்படும் சடங்கு வைபவங்கள்

Related posts

Leave a Comment