தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1

2:40-46. “இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள். நான் அருளியுள்ள குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக ஆகிவிடாதீர்கள். என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள். அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைத்துவிடாதீர்கள். தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். கீழ்ப்படிபவர்களுடன் இணைந்து நீங்களும் கீழ்ப்படியுங்கள். பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்து விடுகிறிர்களா? நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா? பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களைத்தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிவார்கள்.”

இஸ்ராயீலின் மக்களுடைய வரலாற்றை படித்துப் பார்ப்பவர் அவர்கள்மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளையும் அவற்றை நன்றிகெட்டத்தனத்தால் அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டுப் போவார். இங்கு அவர்களைக் குறித்த விரிவான விவரங்களுக்கு முன்னால் அவர்கள்மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகள் சுருக்கமாக நினைவூட்டப்படுகின்றன. அவர்கள் தன்னிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அல்லாஹ் அழைப்பு விடுக்கிறான். அவ்வாறு நிறைவேற்றினால் தானும் அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதாக வாக்களிக்கிறான்.

“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்”

இந்த வாசகம் எந்த வாக்குறுதியைக் குறிப்படுகிறது? அது அல்லாஹ் ஆதமிடம் பெற்ற பின்வரும் வாக்குறுதியா? “என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். யாரெல்லாம் அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுக்கிறார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் என்றென்றும் அவர்கள் வீழ்ந்து கிடப்பார்கள்” அல்லது அல்லாஹ் ஆதமிடம் முன்னர் பெற்ற வாக்குறுதியா? அது மனிதனின் இயல்பில் வைக்கப்பட்டுள்ள, தன் படைப்பாளனை அறிய வேண்டும், அவனுக்கு இணையாக யாரையும் ஆக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற வாக்குறுதியாகும். அதற்கு விளக்கமோ ஆதாரமோ அவசியமில்லை. ஏனெனில் மனித இயல்பு தன்னிச்சையாக இறைவனைத் தேடுகிறது, அவன்பால் முன்னோக்குகிறது. ஷைத்தானின் வழிகெடுக்கும் முயற்சிதான் அதனைத் திசைதிருப்புகிறது. அல்லது அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுடைய மூதாதை இப்ராஹீமிடம் பெற்ற வாக்குறுதியா? இந்த அத்தியாயத்தில் இதுகுறித்த விவரம் வருகிறது. “இப்ராஹீமை அவரது இறைவன் பல விசயங்களில் சோதித்தபோது அவர் அவற்றை நிறைவேற்றிக் காட்டினார். அப்போது அவன், “நான் உம்மை மனிதர்களுக்குத் வழிகாட்டியாக ஆக்கப் போகின்றேன்” என்றான். அதற்கு அவர், “எனது வழித்தோன்றல்களிலிருந்தும் வழிகாட்டிகளை ஏற்படுத்துவாயாக” என்று கேட்டார். “என் வாக்குறுதி அநியாயக்காரர்களைச் சாராது” என்று அவன் கூறினான்.” அல்லது தூர் மலையை அவர்களின் தலைக்கு மேலே உயர்த்தி அவர்களிடம் வாங்கிய தனிப்பட்ட வாக்குறுதியா? இதுகுறித்த விவரமும் அடுத்து வரும் வசனங்களில் இடம்பெறுகிறது.

உண்மையில் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரே வாக்குறுதியைப் போன்றவைதான். அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமான உடன்படிக்கை என்னவெனில், அவர்கள் உள்ளத்தால் அவனையே முன்னோக்க வேண்டும், தங்களை முழுமையாக அவனிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். இதுதான் ஒரே மார்க்கமான இஸ்லாமாகும். தூதர்கள் அனைவரும் இதைத்தான் கொண்டு வந்தார்கள். ஈமானியக் கூட்டம் வரலாறு முழுதும் இதைத்தான் சுமந்து செல்கிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் தன்னை மட்டுமே வணங்கும்படியும் அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறான்.

அதேபோன்று அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுமாறு அவர்களை அழைக்கிறான். அது அவர்களிடம் உள்ள வேதத்தை உண்மைப்படுத்துகிறது. அவசரப்பட்டு அதனை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிட வேண்டாம் என்றும் அதனை ஏற்றுக்கொள்பவர்களில் அவர்கள்தாம் முதலாமவர்களாகத் திகழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறான்.

“நான் அருளியுள்ள குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக ஆகிவிடாதீர்கள்”

முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்த நிரந்தரமான மார்க்கம் ஒன்றுதான். அது அல்லாஹ் அளித்த தூதுத்துவத்தின், அவன் மனித சமூகத்திற்கு அளித்த வழிகாட்டலின் இறுதி வடிவமாகும். அது மனித சமூகத்தின் ஆரம்ப காலம்தொட்டு தூதர்கள் கொண்டுவந்த அனைத்தையும் ஒன்றுசேர்க்கிறது. பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் ஒன்றுசேர்க்கிறது. இன்னும் அவற்றோடு அதன் நீண்ட எதிர்காலத்திற்கு அல்லாஹ் நாடிய நன்மைகளையும் இணைக்கிறது. அது மனிதர்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. அவர்கள் இறைவனின் மார்க்கத்தில் அவனது வாக்குறுதியில் ஒன்றிணைகிறார்கள். பல பிரிவுகளாக, கூட்டங்களாக, சமூகங்களாக, இனங்களாக பிரிந்துவிடுவதில்லை. மாறாக அவர்கள் இறைவனின் வாக்குறுதியைப் பற்றிப்பிடித்தவாறு அவனது அடியார்களாக ஒன்றிணைகிறார்கள்.

மறுமைக்குப் பகரமாக உலக ஆதாயத்தைப் பெறும்பொருட்டு, தாங்கள் அடைந்துகொண்டிருக்கும் இலாபங்களைக் காக்கும்பொருட்டு தங்களிடமுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியதை மறுத்துவிட வேண்டாம் என்று அல்லாஹ் இஸ்ராயீலின் மக்களுக்குக் கட்டளையிடுகிறான். (அவர்களிலும் குறிப்பாக மதகுருமார்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் தங்களின் தலைமைத்துவம் பறிக்கப்பட்டுவிடுமோ தாங்கள் அடைந்துகொண்டிருக்கும் இலாபங்களை இழந்துவிடுவோமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தார்கள்) அவனை மட்டுமே அஞ்சும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறான்.

“என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள்”

மார்க்கத்தை விற்று உலக ஆதாயத்தைப் பெறுவது அக்காலம்தொட்டே யூதர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வசனம் அவர்களின் மதகுருமார்கள், தலைவர்கள் அவர்களிலுள்ள செல்வந்தர்களுக்கேற்ப மார்க்கச் சட்டங்களை வளைத்ததையும் அவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும்பொருட்டு பொய்யான மார்க்கத் தீர்ப்புகள் அளித்ததையும் குறிக்கிறது. இஸ்லாத்தில் நுழைந்துவிடாமல் அவர்களின் சமூகத்தினரை தடுக்கவும் தங்களிடமுள்ள தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் இவ்வாறு செய்துகொண்டிருந்தார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக நபித்தோழர்கள் கூறுவதுபோன்று இந்த உலகிலுள்ள அனைத்துமே அற்ப ஆதாயங்கள்தாம். அல்லாஹ்வின் வசனங்களின்மீது நம்பிக்கைகொள்ளுதல், நம்பிக்கைகொள்வதால் மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையில் அனைத்துமே அற்ப ஆதாயங்கள்தாம்.

தொடர்ந்து வசனங்கள் அவர்கள் செய்துகொண்டிருந்த தீய செயல்களை எச்சரித்துக் கொண்டே செல்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தி சந்தேகத்தை பரப்பும்பொருட்டு அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலந்தார்கள். சத்தியத்தை மறைத்தார்கள்.

“அறிந்துகொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைத்துவிடாதீர்கள்”

திருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துவதுபோன்று யூதர்கள் தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் உண்மையைப் பொய்யோடு கலந்தார்கள். உண்மையை மறைத்தார்கள். எப்போதும் முஸ்லிம் சமூகத்தில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்கள் யூதர்களாகத்தான் இருக்கிறார்கள். இதற்கான ஏராளமான உதாரணங்களை பின்னால் காணலாம்.

பின்னர் ஈமானிய அணியில் இணைந்துவிடுமாறும் கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுமாறும் ஒதுங்கியிருத்தலையும் இனவெறியையும் விட்டுவிடுமாறும் அவர்கள் அழைப்பு விடுக்கப்படுகிறார்கள்.

“தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். கீழ்ப்படிபவர்களுடன் இணைந்து நீங்களும் கீழ்ப்படியுங்கள்”

பின்னர் அவர்கள் – அவர்களிலும் குறிப்பாக மதகுருமார்கள் – இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் வேதம்வழங்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள்தாம் நம்பிக்கையின்பால் அழைப்புவிடுக்கும் அழைப்பாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களோ இறைமார்க்கத்தைவிட்டும் தடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக கண்டிக்கப்படுகிறார்கள்:

“பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்து விடுகிறிர்களா? நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா?”

இந்த வசனம் அச்சமயத்தில் இஸ்ராயீன் மக்களிடம் இருந்த எதார்த்த நிலைமையைத்தான் எதிர்கொள்கிறது. உண்மையில் குறிப்பிட்ட சமூகத்தையோ தலைமுறையையோ அல்லாமல் எல்லா சமூகத்திலும் தலைமுறையிலும் உள்ள மனநிலையை, குறிப்பாக மதகுருமார்களை எதிர்கொள்கிறது.

இந்த மதகுருமார்களால் ஏற்படும் ஆபத்து – அவர்களிடம் மார்க்கம் உந்தித் தள்ளும் உணர்வாக, கொள்கையாக அல்லாமல் தொழிலாக மாறிவிடும்போது – அவர்கள் தம் உள்ளத்தில் இல்லாதவற்றை தம் நாவால் வெளிப்படுத்துகிறார்கள். நன்மையான விசயங்களைச் செய்யும்படி அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றின்படி செயல்படுவதில்லை. நன்மையின்பால் அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் அதனை வீணாக்கி விடுகிறார்கள். வார்த்தைகளை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றி அவர்களின் மன இச்சைக்கேற்ப கருத்துகளை திரிக்கிறார்கள். அதிகாரம் பெற்றவர்களை, செல்வந்தர்களை திருப்திபடுத்தும் நோக்கில் மார்க்கத்தின் சட்டங்களை வளைக்கிறார்கள். இவ்வாறுதான் யூத மதகுருக்கள் செய்துவந்தார்கள்.

நன்மையின் பக்கம் அழைப்புவிடுத்து அதற்கு மாறாக செயல்படும் அழைப்பாளர்கள், தாம் அழைக்கும் விசயத்தைக் குறித்து மனித மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அதனால் அழைப்பாளர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் எந்த மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறார்களோ அதுவும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதுதான் மக்களின் உள்ளங்களில், சிந்தனைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் அழகிய வார்த்தையைச் செவியேற்கிறார்கள். ஆனால் மோசமான செயலைக் காண்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே காணப்படும் இந்த முரண்பாடு அவர்களை தடுமாற்றத்தில் தள்ளிவிடுகிறது. அது மக்களின் உள்ளங்களில் பரவியிருக்கும் ஈமானிய ஒளியை அணைத்துவிடுகிறது. மதகுருமார்களின்மீது நம்பிக்கை இழந்த அவர்கள் மதத்தின்மீது நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.

அவர்கள் கூறும் வார்த்தை எவ்வளவு அலங்காரமானதாக இருந்தாலும் அது உயிரோட்டம் அற்ற வார்த்தையாகவே வெளிப்படுகிறது. ஏனெனில் அது நம்பிக்கைகொண்ட உள்ளத்திலிருந்து வெளிப்படவில்லை. தான் கூறும் விசயத்தை உண்மையாகவே நம்பும் மனிதன் அதற்கான வாழும் முன்மாதிரியாகத் திகழ்வான். அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இருக்காது. அவன் கூறும் வார்த்தை அலங்காரமற்று சாதாரணமாக இருந்தாலும் மக்கள் அதனை நம்புவார்கள். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும். செயலாக வெளிப்படும் அவனது வார்த்தைதான் பலம்பெற்றதாக விளங்கும். அது தன் உண்மைத்தன்மையிலிருந்தே பலத்தையும் அழகையும் பெற்றுக்கொள்கிறது, வெறும் அலங்காரத்திலிருந்து அல்ல. செயலாக வெளிப்படும் வார்த்தை உந்தித் தள்ளும் வாழ்வாக மாற்றமடையும்.

சொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.

பின்னர் குர்ஆன் முதலில் மதீனாவில் வாழ்ந்த யூதர்களையும் அவர்களினூடாக மனிதர்கள் அனைவரையும் விளித்து உரையாடுகிறது. பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவிதேடுமாறும் மதீனாவில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆதாயங்களைவிட அவர்கள் அறிந்திருக்கும் சத்தியத்திற்கு முன்னுரிமை வழங்கி ஈமானிய அணியில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதற்கு துணிவும் தைரியமும் பொறுமையாக அல்லாஹ்விடம் உதவிதேடுவதும் அவசியம் என்கிறது.

“பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களைத்தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக அறிவார்கள்.”

சத்தியத்தை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமான ஒன்று. ஆயினும் இறைவனை அஞ்சி கீழ்ப்படிபவர்களுக்கு, மறுமைநாளில் அவனை சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புபவர்களுக்கு அது கடினமான ஒன்றல்ல.

பொறுமையைக் கொண்டு உதவிதேடுவது குர்ஆனில் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. அது ஒவ்வொரு கஷ்டத்தையும் எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறை. சத்தியத்திற்கு முக்கியத்துவம் அதனை ஏற்றுக்கொண்டு தலைமைப்பதவி, சம்பாத்தியம், இலாபம் ஆகியவற்றை விட்டுவிடுவது பெரும் கஷ்டமான காரியமாகும்.

தொழுகையைக் கொண்டு உதவிதேடுதல் என்றால் என்ன?

தொழுகை அடியான் இறைவனைச் சந்திக்கும் இடமாகும். அதிலிருந்தே அடியான் தனக்குத் தேவையான பலத்தைப் பெற்றுக் கொள்கிறான். அவனது ஆன்மா அதிலிருந்து இந்த உலகின் ஆதாயங்கள் அனைத்தையும்விட மதிப்பிற்குரிய ஒன்றை பெற்றுக்கொள்கிறது. நபியவர்களுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள். இத்தனைக்கும் அவர்கள் வஹியின்மூலம், உள்ளுதிப்பின்மூலம் தம் இறைவனுடன் உறுதியான தொடர்பில்தான் இருந்தார்கள். இந்தப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொரு நம்பிக்கையாளனும் இந்த ஊற்றிலிருந்து தாகம் தீர சுவையான நீரை பருகிக் கொண்டேயிருக்கலாம். இது என்றும் வற்றிவிடாத பொங்கும் ஊற்று.

மறுமையில் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதன்மீதான உறுதியான நம்பிக்கை அவனை பொறுமையை மேற்கொள்ளக்கூடியவனாகவும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனாகவும் இறைவனை அஞ்சக்கூடியவனாகவும் ஆக்குகிறது. இதுதான் அவனுக்கு விசயங்களை அணுகுவதற்கான சரியான அளவுகோலை அளிக்கிறது. இந்த அளவுகோலை அவன் பெற்றுவிட்டால் இந்த உலகிலுள்ளவை அனைத்தும் அவனுக்கு முன்னால் அற்ப இன்பங்களாகவே வெளிப்படும். அவன் மறுமைக்குப் பகரமாக இந்த அற்ப இன்பங்களை தேர்ந்தெடுத்துவிட மாட்டான். எவ்வித தயக்கமுமின்றி அவன் மறுமைக்குத்தான் முன்னுரிமை வழங்குவான்.

இவ்வாறு திருக்குர்ஆனை ஆய்வுக் கண்கொண்டு பார்ப்பவர் இஸ்ராயீலின் மக்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரைகளில் அனைவருக்குமான நிரந்தர அறிவுரைகளைப் பெறுவார்.

(தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரி)

Related posts

Leave a Comment