கட்டுரைகள் 

இஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு

இன்று இஸ்லாத்தை நாம் குறுநிலை நோக்கு கொண்ட சில கோட்பாட்டுச் சட்டகங்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். ஒருபக்கம் முழுமைத்துவ இஸ்லாமிய வாதங்கள் மக்கள் பரப்பில் முன்வைக்கப்பட்டாலும் மறுபக்கத்தில் இஸ்லாத்தை வரையறுக்கின்ற போக்கும் தொடர்கிறது என்பதை மேம்போக்கான பார்வையிலும் புரிந்துகொள்ளலாம்.

சர்வதேச அரங்கில் எழுச்சிக்கான முன் வரைபுகளைக் கொண்டு இஸ்லாம் வெற்றிநடை போடுகின்ற போதிலும் தமிழ் இஸ்லாமியப் புலத்தில் பரிதாபகரமான நிலைகளையே காணக்கூடியதாகவுள்ளது. இந்தக் கட்டத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை கருத்தியல் ரீதியாகவும் செயற்பாட்டளவிலும் நகர்த்துவதற்கான அவசியம் உணரப்படுகிறது என்பதனால் இங்கு இலக்கியம் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடுகளில் உரையாடலை தொடங்குவதற்கான முயற்சியாக இந்தக் கட்டுரை அமைகிறது.

இறைவன் இயற்கையாக மனித உடலின் உறுப்புகளுக்கு ‘சுவையுணர்வை’ வைத்திருக்கிறான். புலனுறுப்புகளின் மூலம் நாம் அனுபவிக்கும் இனிமையான உணர்வுகளையே அழகு என்கிறோம். மனிதனின் அழகியல் மீதான நாட்டம் என்பது இயல்பானது. இஸ்லாம் ஒருபோதும் மனித உணர்வுகளை ஒடுக்காது; மாறாக, நெறிப்படுத்தும். அவ்வாறுதான் நாம் இஸ்லாமிய ஆதாரப் பனுவல்களை அடிப்படையாகக் கொண்டும் ஷரீஆவின் இலக்குகள் குறித்த அகல்விரிவான பார்வைகள் மூலமும் கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை இஸ்லாம் கையாண்டிருப்பதை விளங்க வேண்டும். ஒரு மனிதன் 24 மணி நேரமும் கடின உணர்வுடன் இயங்குபவன் அல்ல, அவனுக்கு இயல்பிலேயே நகையுணர்வும் அழகியல் நாட்டமும் இருக்கும். பின்நவீனத்துவ கோட்பாட்டாளர்களில் ஒருவரான மிஷைல் பூக்கோ இவ்வாறு குறிப்பிடுவார் “புரட்சியாளன் என்பவன் சோகமானவனாகவே இருக்க வேண்டுமென்பது அபத்தமாகும்.” இஸ்லாம் இந்த அடிப்படையிலேயே வழிகாட்டியுள்ளதுடன் நபிகளின் வாழ்வியலும் இதற்கு நல்ல உதாரணமாகும்.

திருக்குர்ஆன், அடிப்படையில் மனிதனை அழகியல் ரசனையுள்ளவனாக பயிற்றுவிக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நுண்ணலகிலும் உட்பொதிந்திருக்கும் பேரழகை பிரக்ஞைபூர்வமாக ஆராதிக்குமாறு தூண்டுகிறது. வணக்க வழிபாடுகளில் கூட தம்மை அலங்கரித்துக் கொள்ளுமாறு ஏவுகின்ற அல்குர்ஆன், அல்லாஹ் வெளிப்படுத்தியிருக்கும் அலங்காரங்களை புறக்கணிப்பவர்களை விமர்சிக்கிறது. கால்நடைகள், பயன்பாடுமிக்கவை போலவே அழகியல் அம்சங்களும் கொண்டவை. அவ்வாறே கோள்களும் நட்சத்திரங்களும் அழகின் வெளிப்பாடுகள் என அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.

திருக்குர்ஆனின் செயல்வடிவமாகத் திகழ்ந்த நபிகளின் வாழ்வும் அல்குர்ஆனின் அழகியற் கோட்பாட்டை நன்கு புரிந்துகொண்டு செயற்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான் எனப் பிரகடனம் செய்யும் நபிகள், திருக்குர்ஆனை அழகிய ராகங்களில் ஓதுமாறு பணித்தார்கள். வரட்சி நிலவிய காலத்தில் அல்லாஹ்விடம் மழை வேண்டித்தொழுது பூமியில் அழகை, பசுமையை நிலவச் செய்யுமாறும் பிராத்தித்தார்கள். அக்கால வாகனங்களான குதிரைகளை நன்கு பராமரிப்பதுடன் அழகுபடுத்துமாறும் கூறினார்கள். உணவிலும் அழகையும் சுவையையும் விரும்பிய நபிகள் வீட்டு உபயோகப் பொருட்களிலும் பயன்பாட்டையும் அழகையும் வரவேற்றார்கள். குழந்தைகளுக்கு அழகான பெயர்களை சூட்டவே விரும்பினார்கள். குழந்தைகளின் விளையாட்டை இரசித்தார்கள். அவர்களோடு குதூகலமாக இருந்தார்கள். துறவு வாழ்க்கையை மறுத்த நபிகள், மனைவிமார்களுடன் இன்பமாக வாழ்ந்தார்கள். அவர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். தனது தோழர்களுடன் உண்மையாக நடந்து கொண்ட நபிகள், நகைச்சுவையாக பேசுவதுடன் கலகலப்பாக நடந்து கொள்கிறார்கள். அனைவருடனும் புன்னகைத்திருக்கிறார்கள். விளையாட்டை விரும்பி ரசித்ததுடன் ஹபஸாத் தோழர்களுக்கு ‘ரக்ஸ்’ எனும் நடனமாடுவதற்கு பள்ளிவாயலில் அனுமதியளித்தார்கள். அதனைத் தனது தோழர்களும் தோழியரும் கண்டுகளிக்க இடமளித்தார்கள். சில தோழர்கள் அதை தடுக்க முயன்றபோது தொடர்ந்தும் நடனமாட ஹபஸியர்களை வேண்டி ‘நமது மார்க்கத்திலுள்ள தாராளத்தன்மையை யூதர்கள் அறிந்து கொள்ளட்டும்’ எனச் சப்தமிட்டார்கள். அழைப்புப் பணிக்காக மாத்திரமின்றி ரசனைக்காகவும் கவிதை பாடுவதை ஊக்குவித்தார்கள்.

இவ்வாறு வாழ்க்கையை அழகுணர்ச்சியுடன் அனுபவிப்பதற்கான தாராளமான வழிகளை திருக்குர்ஆனும் நபிகளின் மேலான வாழ்வும் நமக்குக் காட்டித்தருகின்றன.

இலக்கியம் ஒரு பொது அறிமுகம்

உலகமயமாக்கலின் அதி விளைவுகளினால் இன்றைய உலக நாடுகளின் புலங்கள் சுருங்கி, மொழிகளின் எல்லைகள் மங்கிப்போய் விட்டன. சந்தை நுகர்வில் பொருள், புகழ் சார்ந்த போட்டா போட்டிகளில் தனது சுயத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான தேவை மானிடத்துக்கு உருவாகியிருக்கிறது. நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேனா? என்ற கேள்விக்கு மத்தியில் நான், என் அடையாளம் குறித்த கரிசனையில் மனிதன் நாட்டம் கொள்கிறான்.

எனவேதான், இருபதாம் நூற்றாண்டில் இலக்கியத்தை ஒரு நுண்கலையாக மட்டும் அணுகும் முறை மாறிவிட்டது. இன்று இலக்கியம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மதிப்பிடப்படுகிறது. வாழ்வின் நுட்பங்களையும் ஆழங்களையும் குறித்துப் பேசும் ஒரு களமாக அது உருவகம் செய்யப்படுகிறது. நாம் முற்றிலும் அறியாத விடயங்களை இலக்கியங்கள் நமக்கு சொல்வதில்லை. நாம் அறிந்த விசயங்களையே மீண்டும் மீண்டும் இலக்கியங்கள் மூலம் கற்றுக்கொள்கிறோம். அது எம்மை நேற்றுடன் பிணைக்கிறது, அந்தரங்கங்களை அடையாளப்படுத்துகிறது. வாழ்க்கையை கருத்தியலுடன் இணைக்கிறது. இவ்வாறு தொடர்புறுத்தலையே இலக்கியம் செய்கிறது.

பொதுவாக, ஒரு கருத்தை அல்லது சிந்தனையை மனதில் தாக்கமுறும் வகையில் கலையழகுடன் வெளிப்படுத்துதல் இலக்கியம் ஆகும். வரலாற்றில் தோன்றிய எல்லாச் சமூகங்களிலும் இலக்கியமும் தனியலகாக காணப்பட்டிருக்கிறது. காலவோட்டத்தில் பாடல், கவிதை, கதை, நாடகம், சினிமா எனப் பல வடிவங்களை தனக்குள் அது உள்ளீர்த்திருக்கிறது.

இஸ்லாம் பொருட்களை அலங்கரிப்பதை விட மனிதப் பண்பாட்டையும் வாழ்வொழுங்கையும் அலங்கரிப்பதற்கே உயர்ந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது. அதேவேளை மனித உணர்வுக்கும் இயல்புக்கும் மதிப்பளித்து அவனது உள்ளுணர்வுகளையும் ஆற்றலையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதற்கு வழிகாட்டுகிறது. இந்தக் கருத்துப் புலத்திலிருந்துதான் நாம் இஸ்லாமிய இலக்கியத்தை அடைய வேண்டும்.

இஸ்லாமிய இலக்கியம் என்பது “விசுவாசியின் சுயத்திலிருந்து உருவாகும் அழகியல் வெளிப்பாடாகும். முஸ்லிமின் நம்பிக்கை கோட்பாடுகளுக்கு ஏற்ப வாழ்க்கையையும் மனிதனையும் பிரபஞ்சத்தையும் அது புத்துயிர்ப்புச் செய்வதுடன், இன்பத்தையும் பயனையும் பெற்றுக் கொடுத்து, சிந்தனையிலும் உணர்விலும் அதிர்வை ஏற்படுத்தி நிலைப்பாடொன்றை எடுக்கவும் செயல்வாதியாக மாறுவதற்கும் தூண்டுதல் அளிக்கிறது” என கலாநிதி நஜீப் அல்-கைலானி குறிப்பிடுகிறார்.
பொதுவாக சமூக விஞ்ஞானங்களை வரைவிலக்கணப்படுத்துவது சிரம சாத்தியமாகும். இலக்கியம் வரலாற்றில் பல கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தன் வரையறைகளை மீறி வளர்ச்சியடைவதே இலக்கியத்தின் பொதுப்போக்காகும்.

கருத்து வெளிப்பாடு, கலையம்சம் ஆகியவைகளே இலக்கியத்தின் மைய ஊற்றுகளாகும். இந்த நோக்குநிலைகளின் வேறுபாட்டிலேயே இஸ்லாமிய இலக்கியத்தையும் ஏனைய இலக்கியங்களையும் நாம் பிரித்தறிய முடியும். இஸ்லாமிய இலக்கியமென்றால் அது அறபு மொழியில் அமைந்திருக்க வேண்டும், படைப்பாளி முஸ்லிமாக இருக்க வேண்டுமென்கிற கருத்துக்கள் தகுந்த மறுப்புவாதங்கள் மூலம் இஸ்லாமிய இலக்கியத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த வரட்சியான இறுக்கத்தை தளர்த்தியிருக்கின்றன. இஸ்லாமிய இலக்கியம் ஏனைய இலக்கியக் கோட்பாடுகளுடன் உறவாடி உலகப் பரிமாணம் அடைவதற்கும் பரவலான வாசகப் பரப்பை உருவாக்கிக் கொள்ளவும் காரணமாய் அமைந்திருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியம் என்பது ஏனைய இலக்கியங்களைப் போல் மனிதப் பலவீனங்களால் நிகழும் குற்றங்களை பெரும் அழகியலுடன் உருவகப்படுத்துவதில் குறைவான கவனத்தைச் செலுத்தினாலும், உண்மைத் தன்மையான மனிதப் பலவீனங்களை மறைத்து கற்பனாவுலகில் மனித இயல்பைச் சித்தரிக்கும் போக்கை கொண்டிருக்காது. அவ்வாறே உபதேசமே உருவாகவும் இஸ்லாமிய இலக்கியம் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அபாயங்களும் இஸ்லாமிய இலக்கியத்தின் அவசியமும்

முஸ்லிம் சமூகம் 19ம் நூற்றாண்டிலிருந்து மேற்கத்திய பௌதீக மற்றும் சிந்தனா ரீதியான ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு வருகிறது என்பது வெளிப்படை உண்மை. அதிலும் குறிப்பாக இலக்கியம் கீழைத்தேயவாதிகளின் மூலம் அதன் ஆக்கிரமிப்புக்கு இரையாகியிருக்கிறது. பல இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் ‘மேற்குமயப்படுத்தல்’ எனும் இந்தப் பகட்டுக்கு துணை போயிருக்கிறார்கள்.

வளர்ச்சி, முன்னேற்றம், நாகரிகம் என்று முதலாளித்துவம் விரித்திருக்கும் அகிலவலைக்குள் நாம் அறியாமலே சிக்கியிருக்கிறோம். இவற்றைப் பூஜிக்கும் மனப்பான்மை வீட்டை அடிப்படையாகக் கொண்ட நுகர்வியம் -அதாவது தொலைக்காட்சிகள் மூலம்- நமது குடும்ப அலகுக்குள் கச்சிதமாக செலுத்தப்பட்டிருக்கின்றன.

தகவல் முதலாளியத்தின் பிற்போக்கான கருத்தியல்களே தமிழுலகத்தை உள்ளீர்த்திருக்கிறது. அதன் விளைவுகளான வணிக இலக்கியக் குப்பைகளின் பரவலான உற்பத்திகளும் அதற்கான மக்களின் ஏற்புமைகளும் நமது சமூகத்தின் ரசனை மட்டத்தை எந்தளவு அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்பதையும் நமது கருத்தியல் பலம் எந்தளவு வரட்சி கண்டுள்ளது என்பதையும் காட்டி நிற்கிறது.

நமது சமூகத்தின் ஆன்மீக மற்றும் கருத்தியல் பலவீனங்களுக்கான அடிப்படைகளைக் கண்டறிவோமாயின் அங்கு எம்மைச் சூழ ஆக்கிரமித்திருக்கும் முதலாளிய வலைவிரிப்புகளைக் காணலாம். அவற்றைக் கடத்தும் ஊடகங்களாகவே தற்கால இலக்கியங்கள் செயற்பட்டு வருகின்றன.

இளைஞர் யுவதிகளின் வழிகேடு, சமூகத் தீமைகளின் அதிகரிப்பு, ஆன்மீக வறுமை எனப் பிரச்சினைகளை லாவகமாக முன்வைத்துச் செல்லும் நாம் இந்தப் பிரச்சினைக்கான மூல வேர்களைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க முயற்சிக்காமல் அல்லது மாற்றீடுகள் குறித்து கவனம் செலுத்தாமல் சமூகத்தைக் குற்றம் சாட்டுவதிலும் எளிமைப்படுத்தல்களுடன் பிரச்சினைகளை அணுகுவதிலுமே தொடர்ந்துமிருக்கிறோம்.

இந்த நூற்றாண்டிலும் இசை, சினிமா ஆகியவை ஹராம் (தடுக்கப்பட்டவை) எனும் மார்க்கத் தீர்ப்புகள் மூலம் மக்களின் வாழ்வியலைக் கடந்து விட முடியாது. இஸ்லாம் இலக்கியத்துக்கு எதிரானதாக இருக்க முடியாதென்பதை குர்ஆனிலிருந்தும் நபிகளின் வாழ்வியலில் இருந்தும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும். கலை இலக்கியங்களுக்கு அப்பால் எந்தச் சமூகமும் தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள முடியாது. கலை இலக்கியங்கள் இஸ்லாத்தின் மாண்புகளை சீர்குலைத்துவிடும் எனக் கருதுகிறவர்கள் தங்களின் பலவீனமான கருத்துக்களைத் திணித்து எதிர்ப்புச் சக்தியற்ற உடலாகவே இந்தச் சமூகத்தை வளர்க்கிறார்கள். ஒருபக்கம் இலக்கியங்களுக்கான எதிர்ப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மறுபக்கம் மக்கள் தட்டையான இலக்கியங்களில் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. வெறுமனே பிரதியீடுகளற்ற மறுப்புவாதங்ளும் புரிதல்களற்ற பக்கச்சார்புகளும் இஸ்லாமிய வாதமாகமாட்டாது.

கலாநிதி இமாரா அவர்கள் கலை வெறுப்புத் தன்மையை இவ்வாறு குறிப்பிடுவார்: “இஸ்லாம் கலைகளை வெறுக்கிறது என்ற எண்ணத்தில் கலைகள் விசயத்தில் கடினபோக்குடையோர் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்ற அழகை உய்த்துணர்வதற்கான வாயில்களை மூடிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் அழகு என்னும் இந்த அருளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட. அதாவது பைத்தியக்காரன் ‘அறிவு’ என்னும் அருளுக்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவான்? ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும்? இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும்? எனவே, கலைகள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்தத் தர்க்கவியல் நுழைவு இன்றியமையாதது. உண்மையில் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறையும் ஒழுங்கும் கூட இதுதான்.”

கலை என்பதை நாம் ஏன் வெறுமனே ஒரு கேளிக்கை அம்சமாகப் பார்க்க வேண்டும். அது நமது புரிதலிலுள்ள பிழை. எந்த விசயத்தை எடுத்தாலும், நலவும் கெடுதியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. கலாநிதி இமாரா குறிப்பிடுவது போல பிரித்தறியக்கூடிய அறிவு எமக்கு இருப்பதனாலேயே நாம் மனித இனமாகிறோம். இறைவன் மாபெரும் அருட்கொடையாக எமக்களித்த கற்பனையாற்றலை இன்றைய இலக்கிய அபத்தங்களுக்கும் மலிவான ஆபாசங்களுக்கும் எதிராக, அநீதியைக் கண்டித்து சமாதானத்தை வலியுறுத்தும், ஒடுக்கப்படும் மக்களின் பாலான குரலாக, ஆன்மாவை இன்பமூட்டும் அழகியலாக மற்றும் வாழ்வின் இலக்குகளை அடையாளப்படுத்தும் கலையாக ஏன் பயன்படுத்தக்கூடாது. உன்மத்தமான இஸ்லாமியப் பனுவல்களுக்கு ஒற்றைத்தன்மையான மூடிய பொருள்கோடல்களை வழங்குவதும் புறக்கணிப்புத் தன்மையுடன் தீயதை மட்டும் நோக்குவதும் எவ்வளவு பெரிய பிற்போக்குத்தனம்.

தமிழ் இஸ்லாமிய இலக்கியத்திற்கான கடந்த நூற்றாண்டுகளில் மிகக் காத்திரமான பங்களிப்புகள் நமது முன்னோர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு கூட பெறுமதியான இலக்கியப் படைப்புகளை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். வரலாற்றோட்டத்தின் இடையில் தமிழ் இஸ்லாமியப் பண்பாட்டு வெளியில் தோன்றிய தூய்மைவாதப் போக்கு ஹலாலின் (ஆகுமாக்கப்பட்டவை) பரப்பைச் சுருக்கி ஒற்றைத் தன்மையான வியாக்கியானத்துடன் இஸ்லாமியப் பனுவல்களை அணுகியது. இதன் தாக்கம் இஸ்லாத்துக்கும் இலக்கியத்துக்குமிடையிலான தூரத்தை அதிகப்படுத்தி இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இலக்கிய வாதிகளுக்குமிடையிலான இணைப்பையும் துண்டித்தது. இதன் விளைவே தஸ்லீமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி போன்றோர்களின் கீழ்த்தரமான ஆக்கங்களுக்கு விமர்சனங்களாலும் கண்மூடித்தனமான மார்க்கத் தீர்ப்புகளாலும் எதிர்வினையாற்ற முடிந்ததே தவிர, இஸ்லாத்தின் மாண்பையும் நபிகளின் வாழ்வியலின் பெறுமானங்களையும் பறைசாற்றும் இலக்கியப் படைப்புகளை எம்மால் உருவாக்கமுடியாமல் போனமையாகும்.

பெருங்கடலென விரிந்துகிடக்கும் இலக்கியப் பரப்பில் மிகக் குறுகிய வாசகப் பரப்புடன் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பெரும் போராட்டங்களை இஸ்லாமிய இலக்கியவாதிகள் எதிர்நோக்குகிறார்கள். விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது எமக்கான எழுத்திலக்கியம். இஸ்லாமிய இலக்கிய நோக்கு நுண்கலைகளை ஆதரிக்கிறது. ஆனால் பெருங்கதையாடல்கள் மிகைத்துவிட்ட நமது சமூகக் கட்டமைப்பில் கலாச்சாரத் தனித்துவங்களை தக்கவைப்பதற்காக போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கின்றன. அவற்றுக்காகப் பாடுபடும் கலைஞர்களையும் நாம் கண்டுகொள்ளவில்லை. அறிஞர்களை மட்டுமல்ல கலைஞர்களைப் புறக்கணிப்பதிலும் நாம் முன்னணியிலேயே இருக்கிறோம்.

பிரதியீட்டு இலக்கியம்

காட்சியியல் ரீதியான விம்பங்கள் மனித வாழ்வின் பொழுதுபோக்குத் தன்மையை தீர்க்கின்ற முக்கிய செயற்பாடாக இருப்பதனை அவதானிக்கலாம். அதனால்தான் சினிமாவை இலக்கியத்தின் இறுதி வாரிசு என அழைக்கிறார்கள். அவ்வாறே இசையும் மனித இனத்தின் பொதுவான அம்சமாக இருக்கிறது. இமாம் இப்னு கல்தூன் “இசையும் ஓசையும் மனித ஆன்மாவில் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் தோற்றுவிக்கின்றன என்பது ஐயத்திற்கு இடமற்றது” எனக் குறிப்பிடுகிறார்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை அடையாள அழிப்புக்கும், மீள் எழுச்சியின் தேவைப்பாட்டுக்குமான கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இறுக்கமான போக்குகளுக்கு மத்தியில் நவ புத்தியிர்ப்புவாத முகாம்கள் இலக்கியம் குறித்த உடன்பாட்டு நிலையிலிருந்தாலும், இலக்கியம் குறித்த தேடல்களும் அதை வளர்ப்பதற்கான முன்னெடுப்புகளும் மிகக் குறைவாகும். தொடர்ந்தும் ஈரானிய சினிமாவையும் சொற்பமான இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களையும் எமக்கான சினிமாவாகக் கொண்டாடுதல், தமிழ் பேசும் மக்களிடையே இஸ்லாமிய இசை என்ற பெயரில் அரபுலக இசைகளையும் பாடல்களையும் மாற்றீடாக முன்வைத்தல், நுண்கலைகள் மீதான கரிசனையின்மை என்று விமர்சனத்துக்குரிய நிலை அங்கு நிலவுகிறது.

எந்தப் பண்பாட்டு-கலாச்சார சமூக மாற்றத்திலும் மூன்று வகையான நிலைகள் இருப்பதாக பேராசிரியர் தாஹா ஜாபிர் அலவானி குறிப்பிடுவார். அந்தக் கருத்துக்களை இலக்கிய வெளிக்கும் ஒப்பிட்டு நோக்க முடியும். “ஒரு சிந்தனைப் படையெடுப்பின் போது அதனைக் கடுமையாக எதிர்க்கின்ற ஒரு குழு அந்தப் பண்பாட்டிற்குள் இருக்கும். முற்றுமுழுதாக அதன் கருத்துகளை ஏற்று அதற்கு அடிமைப்படுகிற ஒரு குழுவும் இருக்கும். வெளியிலிருந்து வருகின்ற ஒரு சிந்தனையின் நல்ல அம்சங்களை எடுத்துக் கொண்டு ஊறு விளைவிக்கின்ற பகுதிகளை நீக்கிவிட்டு தங்களுடைய பண்பாட்டோடு இணைத்து மாற்றீடு செய்கின்ற கலாச்சார, நாகரிக பதிலீடுகளை உருவாக்குகின்ற ஒரு குழுவும் இருக்கும். இதில் மூன்றாவது குழுவே ஆரோக்கியமானது.” எவ்வாறு ஐரோப்பியர்கள் இஸ்லாத்தின் பண்பாட்டையும் அறிவியலையும் உள்ளீர்த்து தமது பின்னடைவுக்கான மரபுகளைத் தூக்கி எறிந்து புதிய சிந்தனைகளுக்கான வருகையை ஆதரித்தார்களோ அவ்வாறே இலக்கியப் பரப்பிலும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுடன் ஊடாட்டங்களையும் பரிமாற்றங்களையும் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது.

நமது சமூக மட்டத்தில் ஜப்பானிய, இலத்தீன் அமெரிக்க, இங்கிலாந்து சினிமாக்களாலும் கலை மேதைகளின் திரைப்படங்களாலும் சினிமா குறித்த ரசனை மட்டத்தை அதிகரிக்க வேண்டும். மக்களைப் பீடித்திருக்கும் தட்டையான கலை விரோத இசை, நாவல், கவிதைகளிலிருந்து மீட்டெடுக்ககூடிய தரமான ஆக்கங்கள் வெகுமக்கள் தளத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும். இவற்றை வெற்றிகரமாக நிகழ்த்துவற்கு உலக இலக்கிய ஆர்வலர்களுக்கும் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.

அகத்திலும் புறத்திலும் பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் சமூகம் இலக்கியம் சார்ந்த இன்பங்களில் மூழ்கிப் போவது எந்தளவு ஆரோக்கியமாக அமையும் என்ற கேள்வி தோன்றலாம். ஆனால் இந்த இஸ்லாமிய இலக்கியத்தின் வெற்றிடத்தால் ஒழுக்கவீழ்ச்சிகளும் ஆபாசங்களும் மலிந்து, மனிதனின் சீரிய இயல்பைக் கெடுத்து அவனை வன்முறைகளின் பால் தூண்டும், இஸ்லாமிய வாழ்வின் இலக்குகளை மறந்து சடவாதப் பிணங்களாக அலையவிட்டிருக்கும் தற்கால தட்டையான இலக்கியங்களின் பேராபத்துக்களை ஆய்வுநோக்கில் அணுகுவோமாயின் முக்கியத்துவப்படுத்த வேண்டிய, பரவலான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டிய துறையாக நாம் இஸ்லாமிய இலக்கியத்தைக் கண்டுகொள்வோம்.

அடுத்த தலைமுறைகளின் சொந்தக்காரர்களான சிறார்களுக்குரிய இலக்கியம் மிகக் கச்சிதமாக தயாரிக்கப்பட வேண்டும். நவீன இலக்கிய ஆய்வாளர்கள் இலக்கியத்தில் முன்னேற்றமடைந்திருக்கும் சமூகங்களை அடையாங் காண்பதற்கு சிறுவர் இலக்கியத்தின் அடைவுகளை நிபந்தனையாக்குகிறார்கள். ஏனைய படைப்புகளைப் போலல்லாது சிறுவர் இலக்கியம் பல நுண்ணிய தள வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. சிறுவர் உளவியல் வாசிப்புக்கள் மூலம் அவர்களது உணர்வோட்டங்களைப் புரிந்து கொண்டு கவர்ச்சியும் கலையழகும் கொண்ட நல்ல படைப்புகள் உருவாக வேண்டும்.

அவ்வாறே நமது புலத்தில் பெண்களின் நிலை மிகவும் வரையறுக்கப்பட்டதாகும். கட்டாயமாக, பெண்ணிய எழுச்சி ஏற்பட வேண்டியிருக்கிறது; பெண்களின் பங்களிப்பில்லாமல் சமூக மாற்றத்தை கனவுகூட காணமுடியாது. பெண்களை முன்னேற்றமடையச் செய்வதில் இலக்கியத்தின் வகிபாகம் இன்றியமையாததாகும். அவர்களின் கருத்துநிலைகளை வலுவூட்டக்கூடிய பெண்களின் தார்மீகப் பெறுமானங்களை உணர்த்தும் படைப்புகள் இந்த மாற்றத்தை நிகழ்த்தும் சக்தி வாய்ந்தவை.

மேலும் மதத்தின் பெயரால் போலித் தூய்மைவாதங்களை உருவாக்கி இஸ்லாத்தின் விரிந்த உலகப் பரிமாணங்களை முடக்கும் சக்திகள், தாம் நிகழ்காலத்திற்கு வரவேண்டிய தேவையை உணர வேண்டும். இஸ்லாமிய இலக்கியத்தின் மீது உடன்பாடு கொண்ட இயக்கங்கள் பரவலான தேடலுக்குக் கதவுகளை திறந்துவிடுவதுடன் அவற்றுக்கு ஊக்கமளிப்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இஸ்லாமியக் கலாசாலைகள் இஸ்லாமிய இலக்கியம் குறித்த பாடவிதானங்களை தோற்றுவிப்பதுடன் இலக்கியப் பட்டறைகளில் உலக இலக்கிய உரையாடல்கள் நமது கிராமங்களில் நடைபெறுமாயின் ஆரோக்கியமான விளைவுகளைக் காணலாம்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் எந்த நம்பிக்கையூட்டக் கூடிய அடைவுகளும் நமது புலத்தின் இலக்கியத்தில் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ‘சுய விமர்சனமே சமூக மாற்றத்தின் அடிப்படை’ என்று பேராசான் முஹம்மத் அல்-கஸ்ஸாலி கருதுவது போல நம்மை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். இலக்கியம் குறித்த இன்னும் பலமான அழுத்தங்களும் இஸ்லாமிய புத்திஜீவிகள் மட்டத்திலான உரையாடல்களும் வலுப்பெற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

Related posts

One Thought to “இஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு”

  1. எம்.எஸ்.எம் அனஸ்

    முன்னற்றம்மான
    கருத்துக்கள் மேலும்
    விவாதங்கள் தேவை

Leave a Comment