கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறநெறி நுண்மதி – ஒரு இஸ்லாமியப் பார்வை

சிறார்களுக்கும் பதின்பருவத்தினருக்கும் அறநெறிசார்ந்த விடயங்களில் நல்லது – கெட்டது அல்லது சரி – பிழை என்பவை பற்றிய சரியான புரிதலை எவ்வாறு வழங்குவது? கருணை, சகிப்புத்தன்மை மற்றும் இவைபோன்ற ஏனைய அறநெறிசார்ந்த நற்பண்புகளை அவர்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அவர்களின் அறவியல் ஆளுமைக்கு உருக்கொடுக்கும் நவீன முறைகள் எவை? என்பன போன்ற கேள்விகள் அறம், ஒழுக்கம், பண்பாடு, விழுமியம் ஆகியவை தொடர்பிலே இளம்சமுதாயத்தின் மீது நமக்குள்ள அக்கறையினால் எழுகின்றன.

குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ப்பருவம் வரைக்கும் ஏனைய வளர்ச்சிக் கோலங்களோடு உருப்பெறும் மற்றொரு வளர்ச்சிக் கோலம்தான், பிள்ளைகளின் அறநெறி வளர்ச்சி (Moral Development) ஆகும். அறநெறி வளர்ச்சி பற்றி சமூக தளத்தில் நிலைபெறும் பன்மைத்துவ நோக்கானது, ஒரே நிலையிலான அல்லது ஒற்றைத்தன்மை வாய்ந்த பண்பாட்டை, அறநெறியை மறுவாசிப்புச் செய்கிறது. குறிப்பிட்டதொரு சமூகத்தில் வாழ்கின்ற சக மனிதர்களுடன் தனது மனோபாவங்கள் மற்றும் நடத்தைகளை ஒத்திசைவாக்கிக் கொள்வதற்கான ஆற்றலின் வளர்ச்சி என்பதாக சிலர் அறநெறி வளர்ச்சியைக் கருதுகின்றனர். அதாவது, அச்சமூகத்தின் நெறிகள், விதிமுறைகள், சட்ட ஒழுங்குகள், வழக்காறுகள், பண்பாடுகள், சடங்குகள் மற்றும் மரபுகள் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்குகின்ற அறநெறி சிந்தனையின் முதிர்ச்சியாக அல்லது  ஒரு சமூகத்தில் நிகழ்கின்ற அறநெறியினை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு ஒத்திசைவாக செயற்படும் திறனாக சமூகம் அதனைப் பார்க்கின்றது.

ஆனால், அறநெறியின் பிரமாணம் “சமூகம்” என்பதாக ஏற்றுக்கொண்டு, அதற்கு சாதகமாக செயற்பட முடியாது என அறநெறித் தத்துவம் (Ethical Philosophy) உணர்த்துகிறது. உதாரணமாக, ஒரு பெண் தன்னுடைய உடலை அந்நியரின் பார்வையிலிருந்து முழுமையாக மறைத்துக்கொள்வதை கீழைத்தேய சமூகம் அறநெறியின் அம்சமாகக் கருதுகின்ற அதேவேளை, மேற்குலகு அதனை ஒரு பண்பாடற்ற விடயமாகப் பார்க்கின்றது. எனவே, சமூகத்திற்கு சமூகம் அறநெறிகளும், ஒழுக்க விழுமியங்களும், அவற்றின் பெறுமானங்களும் வெவ்வேறாக நோக்கப்படுவதால் எழுகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு பொதுத்தன்மைவாய்ந்த அறநெறிப் பிரமாணம் அவசியமாகின்றது. மேலும், எல்லா சமூகங்களும் சரியான அறநெறிகளை இதன்மூலம் கண்டடைந்து செயலாற்றுவதற்கு இதனால் உதவமுடியும். இவ்வகையில், நாம் திருக்குர்ஆனை அணுகும்போது இப்படியான பொதுத்தன்மைவாய்ந்த, நிலையான அறநெறிப் பிரமாணத்தை (Ethical Criteria) இலகுவாகக் கண்டுகொள்கிறோம்.

பகுத்தறிவு எனும் அறநெறிப் பிரமாணம்

திருக்குர்ஆனில் பிரயோகிக்கப்பட்டுள்ள تفکر تعقل،; تدبر،; (தஃபக்குர், தஅக்குல், ததப்புர்) ஆகிய அறபுமொழிப் பதங்கள் சிந்தித்தல், “புத்தி”யை உபயோகித்தல், ஆழமாக நோக்குவதன் மூலம் உண்மையை அறிதல் என்பன பற்றியதாகும். இதன்படி இஸ்லாமிய உளவியலிலும் சரி, ஏனைய இஸ்லாமிய மானுடவியல்களிலும் சரி, பகுத்தறிவை ஒரு மூலப்பிரமாணமாகக் கொள்வதற்கு திருக்குர்ஆன் எமக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. திருக்குர்ஆன் மற்றும் சுன்னா முதலியவற்றுக்கு அடுத்தநிலையில், பகுத்தறிவின் ஒரு செயற்பாடான ஒப்புநோக்கல் (قیاس) என்பது, இஸ்லாமிய சட்டத்துறையில் ஒரு சட்டப் பிரமாணமாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஒப்புநோக்குவதற்கு அப்பாலும் இஸ்திஹ்ஸான், இஸ்திஸ்ஹாப், மஸ்லஹா முர்ஸலா, சத்துத் தராயிஃ போன்ற வடிவங்களிலும் பகுத்தறிவை விரிவாகப் பிரயோகிப்பதன் மூலம் மானுடத்தை வளம்பெறச்செய்ய முடியும். மேலும், இது இஸ்லாமிய வட்டத்துக்குள் மட்டுமன்றி, ஏனைய தெய்வீக மற்றும் உலகாயத இயக்கங்களின் இடையேயும், உண்மையை நிறுவுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரமாகவும் இருந்துவருவதைக் கருத்திற்கொள்ளும்போது, பகுத்தறிவை உலக அறநெறியின் ஒரே பிரமாணமாக ஏற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று, பகுத்தறிவின் செயற்பாடு காலத்திற்கு காலமோ, இடத்திற்கு இடமோ, சமூகத்திற்கு சமூகமோ மாறும்தன்மை வாய்ந்தது அல்ல. இயல்பூக்கத்தைப் (فطرة) போன்று அதுவும் நிலையானதாகும். எனவே, அதன் மூலம் பெறப்படும் முடிவுகளும் தீர்க்கமானவையே. எனினும், சுன்னாவின் அணுகுமுறைகளுக்கு ஏற்ப, அதன் முடிவுகள் நெகிழ்வதுபோன்று, பகுத்தறிவின் அணுகுமுறைகளுக்கு ஏற்பவும் அதன் முடிவுகள் நெகிழ்ச்சியுறக் கூடும். எனவே, பகுத்தறிவின் விதிமுறைகள், வரையறைகள் பற்றிய விரிவான தெளிவைப் பெறுவதற்கு இஸ்லாமிய அளவையியலையும் மெய்யியலையும் நாடவேண்டியுள்ளது.

அறநெறி நுண்மதி என்பது யாது?

மேற்கூறப்பட்ட முன்னோட்டத்தின்படி அறநெறி சார்ந்த விடயங்களில் கெட்டதிலிருந்து நல்லதை, பிழையிலிருந்து சரியானதை பிரித்தறிந்து ஒழுகுவதற்கான பகுத்தறிவினுடைய ஆற்றலின் வளர்ச்சி என்பதாக, திருக்குர்ஆனின் நிழலில் “அறநெறி வளர்ச்சி”க்கு வரைவிலக்கணத்தைக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கும்போது, நாம் வரையறுத்த அறநெறி சார்ந்த விடயங்களில் பகுத்தறிவதற்கான ஆற்றலே “அறநெறி நுண்மதி” (Moral Intelligence) ஆகும். பொதுவாக நுண்மதி என்பது புத்தியோடு, பகுத்தறிவோடு சம்பந்தப்பட்ட ஓர் விடயமாகும். பகுத்தறிவிற்கு இடமளிக்காத நிலையில், நுண்மதி குறித்து இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆராய்வது என்பது அசாத்தியமானது. மேலும், பகுத்தறிவை இஸ்லாத்திற்கு எதிரானதாகப் பார்ப்பதும் தவறானது. உண்மையில் பகுத்தறிவு நிரூபணபூர்வமாகக் கண்டடைந்த ஒன்றை, இஸ்லாமும் உறுதிசெய்கின்றது அல்லது இஸ்லாம் கண்டடைந்த ஒன்றை பகுத்தறிவும் உறுதிசெய்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

அறநெறி நுண்மதியைக் கருத்திற்கொண்டு சிறுவர்களை நெறிப்படுத்துவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சமூக தளத்தில் நிலவுகின்ற அறநெறி நுண்மதிக்கான வெற்றிடங்களால் நமது சிறார்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாம் எதிர்நோக்குகின்ற பண்பாட்டுச் சரிவுகள், அன்னிய கலாசார உள்வாங்கல்களால் தூண்டப்படுகின்றன. எனவேதான், நாம் இளம்பருவத்தினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பொதுவாக “நுண்மதி” (Intelligence) என்ற விடயத்திற்கு கல்விஉளவியலில் தனியான ஒரு இடம் வழங்கப் பட்டுள்ளது. எனினும், அதனை வரைவிலக்கணப்படுத்துவதில் உளவியலாளர்கள் கருத்து முரண்பாட்டைக் கொண்டுள்ளனர். கண்டுபிடித்து, கிரகித்து, நெறிப்படுத்தும் திறன் என்று அல்பிரட் பீனேயும், கருத்து நிலையில் சிந்திக்கும் திறன் என்று டேமனும், வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு ஒப்ப பொருத்தப்பாடு காணும் திறன் என்று ஸ்டேனும் நுண்மதியைக் கருத்துருப்படுத்துவதற்கு முயன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நுண்மதிக் கோலங்களில், தான் அணுகிய ஒன்றை விளக்க முற்பட்டதன் விளைவுதான் இந்த வெவ்வேறு வரைவிலக்கணங்களின் வெளிப்பாடு என்பது நமக்குப் புலனாகிறது.

நுண்மதியின்மை எனும் முட்டாள்தனம்

ஜாஹிலிய அரேபிய சமூகம் அறநெறி நுண்மதியற்று செயற்பட்டதையும், அதன் விளைவாக வழிதவறிப்போனதையும், இதனால் நேர்வழிபெறுவதற்கான சாத்தியமின்மையையும் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ ۚ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ

எவர்கள் அறிவில்லாமல் முட்டாள்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.  (6:140)

இங்கேسَفَهًا  என்பது, தான் செய்யும் காரியம் பிழை என்று உணர்ந்துகொள்வதற்கான திறனற்ற, நுண்மதியற்ற தன்மையையும், அதனால் ஏற்பட்ட முட்டாள்தனத்தினால் அந்த பிழையான காரியம் நிகழ்ந்ததையும் இது சுட்டுகின்றது. இஸ்லாமிய பரிபாசையில் سفاهة இற்கும், جهالة இற்கும் வித்தியாசம் உண்டு. ஜஹாலத் என்பது புரிந்துகொள்வதற்கான திறன் இருந்தபோதிலும் அறியாமையினால் ஏற்படும் அறிவற்ற நிலைக்கு இது சொல்லப்படும். ஆனால் சஃபாஹத் என்பது புத்தி இருந்தும்கூட அதனைப் பயன்படுத்தாமையினால் ஏற்படும் நுண்மதியற்ற முட்டாள்தனத்தைக் குறிக்கும்.

மேற்படி வசனத்தில் வந்துள்ள “ஸஃபஹ்” என்ற அறபுமொழிப் பதத்தை விளக்கிய தஃப்ஸீர்கலை அறிஞர்கள், அதனை “பகுத்தறிவைப் பயன்படுத்தாமை” என்பதாகவே வியாக்கியானப்படுத்தியுள்ளனர். இமாம் தபரி (ரஹ்) அவர்கள், தனது ஜாமிஉல் பயான் ஃபீ தஃப்ஸீருல் குர்ஆனில் “சிந்தையின் குறைபாடு” என்பதாகவும், இமாம் பைழாவி (ரஹ்) அவர்கள், தனது அன்வாருத் தன்ஸீல் வஅஸ்ராருத் தஃவீலில் “சிந்தையின் பொடுபோக்கு” என்பதாகவும், இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள், தனது பத்ஹுல் கதீரில் “பகுத்தறிவுச் சான்றுக்காகவோ, சமயச் சான்றுக்காகவோ அமையப்பெறாத புத்தியீனம் மற்றும் பொடுபோக்கு” என்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இமாம் பக்ருத்தீன் ராஸி (ரஹ்) அவர்கள், தனது தஃப்ஸீருல் கபீரில் “ஸஃபஹ் அல்லது ஸஃபாஹத்” என்பதற்கு வழங்கியுள்ள வியாக்கியானம் முற்றிலும் பகுத்தறிவுபூர்வமான ஒன்றாக இருப்பதைக் காணலாம். குறித்த ஒரு விடயத்தில் சரியாகப் பகுத்தறியாமையை அவர் ஸஃபாஹத் (முட்டாள்தனம்) என்கிறார். மேற்படி வசனத்தை விளக்கும்போது இமாம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

السفاهة وهي عبارة عن الخفة المذمومة، وذلك لأن قتل الولد إنما يكون للخوف من الفقر، والفقر وإن كان ضرراً إلا أن القتل أعظم منه ضرراً، وأيضاً فهذا القتل ناجز وذلك الفقر موهوم فالتزام أعظم المضار على سبيل القطع حذراً من ضرر قليل موهوم، لا شك أنه سفاهة

“முட்டாள்தனம் என்பது இழிந்துரைக்கப்பட்ட பொடுபோக்கான பண்பாகும். சிசுக்கொலையில் ஈடுபடுவதானது வறுமைக்கு அஞ்சியதாக அமைந்திருக்குமேயானால், வறுமை சேதமிக்கதாக இருந்தும் கூட, கொலை அதைவிட சேதமிக்கது (எனும்விதத்தில் இது முட்டாள்தனமே). மேலும், கொலையானது நிதர்சனமாகவும், அந்த வறுமையோ ஐயப்பாடாகவும் உள்ளன. எனவே, கற்பனையானதும், சிறியதுமான சேதத்தை (தவிர்ந்துகொள்வதைக்) கருத்திற்கொண்டு, உண்மையில் சேதம் விளைவிப்பவற்றிலும் மிகப்பெரியதில் ஈடுபடுவதானது எவ்வித சந்தேகமுமின்றி முட்டாள்தனமானதே”

நுண்மதிக் கோலங்களுள் அறநெறி நுண்மதி

நுண்மதிக் கோலங்களுள் அறநெறி நுண்மதி என்பது பெரும்பாலும் ஒரு புதிய விடயமாகும். புரிதிறன் நுண்மதி (Cognitive Intelligence) மற்றும் உணர்வுசார் நுண்மதி (Emotional Intelligence) என்பன ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுவது போன்று அறநெறி நுண்மதியும் (Moral Intelligence) ஒரு தனித்தன்மை வாய்ந்தது. தவறான நடத்தைகளிலிருந்து முறையான நடத்தைகளைக் கண்டறிவதன் மூலம் பெற்ற வலுவான அறநெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்படுவதற்கான ஆற்றலே அறநெறி நுண்மதி அல்லது அறவியல் நுண்ணறிவு ஆகும். ஒருவர் பலமான அறநெறிக் கோட்பாடுகளைக் கொண்டு, அவற்றின்படி செயற்படும் ஆற்றலைப் பெற்றவராக மிகச் சிறந்த, சரியான முறையில் நடப்பாரானால் அவருக்கு அறநெறி நுண்மதியாளர் என்று சொல்லப்படும்.

தனிநபர் ஒருவரின் இலக்குகள், விழுமியங்கள் மற்றும் செயற்பாடுகள் முதலானவற்றில் அறநெறி அடிப்படைகளை கைக்கொள்ளும் திறன் பற்றியதாகவும் அறநெறி நுண்மதி சுட்டப்படுகிறது. அதேபோன்று, கெட்ட விடயங்களிலிருந்து நல்ல விடயத்தை கண்டறியும் திறன் என்ற கருத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது. விழுமிய முறைமைகளின் கட்டமைப்பில் அமையப்பெற்ற அறநெறி சார்ந்த செயற்பாடுகள், எண்ணங்கள் மற்றும் புரிதல்கள் முதலானவற்றின் நேர்பாடான விளைவுகளை சாத்தியப்படுத்தக் கூடிய அறிதிறனையும் செயற்திறனையும் அறநெறி நுண்மதி உள்ளடக்குகின்றது.

இஸ்லாமிய உளவியல் (Islamic Psychology) மற்றும் இஸ்லாமிய அறவியல் (Islamic Ethics) ஆய்வுகளின்படி, எந்தவொரு காரணத்தினாலும் சரி, அறநெறி நுண்மதியைப் பெற்றிருக்காத சிறுவர்கள் மற்றும் பதின்பருவத்தினர் நிச்சயம் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பர். இவர்கள், தாம் கொண்டிருக்கும் தளர்வான மனோநிலை, மனவிருப்புகளை நெறிப்படுத்துவதில் பலவீனம், அறநெறி நற்பண்புகளைப் புரிந்துகொள்வதற்கான அறிவுத்திறனின் வளர்ச்சியின்மை மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட நம்பிக்கைகள் முதலான காரணங்களால் சமூக, பண்பாட்டு பின்னடைவுகளையும், நெருக்கடிகளையும் பெருமளவு சந்திப்பதோடு, வளர்ந்த அல்லது முதிர்ந்த பருவத்தில் அசாதாரண, தோல்வியுறும் நபர்களாக மாறிவிடுவர்.

அறநெறி நுண்மதிக்கூறுகள்

அறநெறி நுண்மதி (Moral Intelligence) என்ற சொற்பிரயோகத்தை, 2005ம் ஆண்டு போர்பா (Borba) என்ற உளவியலாளர் அறிமுகப்படுத்தி, அதற்கு இன்றியமையாத ஏழு அடிப்படைக் கூறுகளை வரையறுத்தார். அவை ஒத்துணர்வாற்றல், உணர்ந்தறிதல், சுயகட்டுப்பாட்டுத்திறன், மதிப்புணர்ச்சி, கருணையுணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மை என்பனவாகும். அறநெறிப் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது அவற்றை முறையாக அணுகுவதற்கு சிறுவர்களுக்கு உதவக்கூடியதாக இந்த ஏழு அடிப்படைக் கூறுகளும் அமைந்துள்ளன. மேலும், அறநெறி அளவீடுகளுக்கு அமைவாக சிறுவர்கள் செயற்படுவதற்கு இவை உதவுவதோடு, அவர்களை நற்பண்பாளர்களாக மாற்றி விடுகிறது. எனவே, இவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, இஸ்லாமியப் பனுவல்களின் வழிகாட்டலில் பின்வருமாறு அவற்றை நோக்குவோம்.

  1. ஒத்துணர்வாற்றல் (Empathy):

ஒத்துணர்வாற்றல் என்பது மற்றவர்களின் உணர்வில் பங்கெடுத்தலாகும். இந்நற்பண்பு ஏனையோரின் உணர்வுகள், தேவைகள் தொடர்பில் அக்கறையுடன் செயலாற்றவும், தேவையுடையோருக்கு உதவவும், ஏனையோரோடு அன்பாகப் பழகவும் சிறுவர்களுக்குத் துணைபுரிகிறது. நுண்மதியானது அறியாத ஒன்றை அறிந்துகொள்வதற்காக ஒருவரைத் தூண்டக் கூடியது. பண்பாட்டு நுண்மதி தேவையுடையோரோடு ஒத்துணர்வாற்றும் வகையில், அவர்களது தேவைகளை கண்டறிய நம்மைத் தூண்டுகிறது. அப்படி தேவையுடையோரை அறிய முற்படாமல் இருப்பதன் மூலம் அவர்கள் தேவையற்றோர் என்று தவறாகப் புரிந்துகொள்வதற்கு வழிவகுத்துவிடும். இது தொடர்பாக திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا ۗ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

“பூமியில் நடமாடி (தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோருக்குத்தான் (உங்களது தானதர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள் (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.” (2:286)

இவைதவிர, ஒத்துணர்வாற்றல் எனும் தார்மீக உணர்வு சரியான காரியங்களைப் புரிய சிறார்களை ஊக்குவிக்கின்றது. ஏனெனில் ஒத்துணர்வாற்றும் ஒருவர், மற்றவர்களின் மனவுணர்வின் வலியைப் புரிந்து கொண்டு செயலாற்றுவார். அநியாயமாகவோ, இரக்கமற்ற முறையிலோ அவர்களோடு நடந்துகொள்ள மாட்டார்.

  1. உணர்ந்தறிநிலை (Consciousness):

வழிதவறி குற்றமிழைத்த ஒருவர், அது குறித்து உணர்ந்துகொள்ளும்போது குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி, மனவேதனைப்படுவதுண்டு. தன் தவறை அல்லது தான் என்ன செய்திருக்கிறோம் என்று உணரும் ஆற்றலே உணர்ந்தறிநிலை ஆகும். இது மனமருட்சி (Temptation / وسوسة) எனும் செயற்பாட்டு ரீதியிலான ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கும் நிலைக்கு எதிரே சிறார்களின் அறநெறி நுண்மதியை வலுவடையச் செய்து, சரியாக சிந்திக்கவும், சீரான வழியில் செயற்படவும் உதவுகிறது. மேலும், அறநெறி நுண்மதியின் வலுவூட்டலில், தனிநபர்களின் பலமான ஆளுமைகள் வளர்ச்சியடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ –  أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِنْ لَا يَشْعُرُونَ

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், நிச்சயமாக நாங்கள்தாம் சீர்திருத்தம் பேணுவோர் என்று அவர்கள் சொல்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அவர்கள்தாம் சீர்குலைவை உண்டாக்குவோர் ஆவர். எனினும், அவர்கள் (இதை) உணர்ந்தறிய மாட்டார்கள்.” (02:11,12)

உணர்ந்தறிநிலை, ஒவ்வொரு விடயத்திலுமுள்ள சரி – பிழையை அடையாளம் கண்டு, தீர்மானிக்க சிறுவர்களுக்கு உதவுவதோடு, அறநெறி வழியில் அவர்களைச் செலுத்தி, வழி தவறுகையில் மனம் வருந்தச் செய்கிறது. எப்போதும் விழிப்போடிருக்கும் உணர்ந்தறி நிலையானது, சிறுவர்களை வழிதவறத் தூண்டும் அக, புறக்காரணிகள், சக்திகளுக்கு எதிரில் அவர்களைப் பலப்படுத்தி, அவர்கள் எதிர்கொள்ளும் மனமருட்சிகளிலிருந்து விடுபட்டு சரியான வழியில் செல்ல உதவுகிறது. இப்பண்பின் தொடரில் உண்மை, நேர்மை, கடமையுணர்ச்சி மற்றும் அமானிதம் பேணல் போன்ற நற்பண்புகள் காணப்படுவதை கருத்திற் கொள்ளல் வேண்டும்.

  1. சுயகட்டுப்பாட்டுத்திறன் (Self-Control):

பண்பாட்டு நுண்மதியின் இக்கூறானது, சிறார்கள் ஆவேசப்பட்டு செயற்படாமலும், பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்கின்ற திடீர்முடிவுகளை எடுக்காமலும் இருப்பதற்கு உதவுகிறது. இஸ்லாமிய உளப்போராட்டத்தில் (جهاد النفس) பிரதான பங்கு இதற்குண்டு. சுயகட்டுப்பாட்டுத் திறனுடையவர், தனது சகல நடவடிக்கைகளையும் முகாமைத்துவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஆற்றலைப் பெற்றவராக திகழ்வார். இதனால்தான் நபி முஹம்மத் (ஸல்)  அவர்கள், இத்தகைய நபரை உண்மையான பலசாலி என்றார்கள்.

لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِى يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ

“மல்யுத்த ஆற்றலைப் பெற்றவர் பலசாலி இல்லை. உண்மையான பலசாலி, கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்துவர் ஆவார்.” (ஸஹீஹ{ புகாரி)

தமிழில் மிக எளிய வடிவில் ‘சுயகட்டுப்பாடு’ என்று பிரயோகிக்கப்படும் இது, ஒரு செயலைப் புரியும்முன் சிறார்களை அது தொடர்பாக சிந்திக்கத் தூண்டுகிறது. இதனால் அவர்கள், ஆபத்தை விளைவிக்கும் காரியங்களைத் தவிர்த்து, சரியான முறையில் செயலாற்றும் திறனைப் பெறுவார்கள். இது, யாருடைய உதவிகளோ, வழிகாட்டல்களோ இன்றி, சுயமாகவே தங்களது காரியங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு வழியமைத்துக் கொடுப்பதனால், தற்காலிக இன்பங்களுக்கு மதிப்பளிக்காது, மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்த வேண்டிய கருணை, தயாளம் போன்ற பண்புகளை சிறார்கள் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

  1. மதிப்புணர்ச்சி அல்லது மரியாதை நோக்கு (Respectfulness):

வயது, அந்தஸ்து, பதவி முதலியவற்றின் அடிப்படையில் ஒருவருக்குக் காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பை, மரியாதையை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் வழங்குவதை இது குறிக்கும். அன்றாட வாழ்வின் அங்கமாக மரியாதையை உணர்ந்த ஒரு சிறுவன், மற்றவர்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதோடு, தனக்குரிய சுயமரியாதையைக் கருத்திற்கொண்டும் நடந்துகொள்வான்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ

“நம்மில் சிறியவருக்கு அன்பு காட்டாது, நம்மில் பெரியாரை மதிக்காது, நன்மையை ஏவாது, தீமையைத் தடுக்காது இருப்பவர் எம்மைச் சார்ந்தவரில்லை.” (சுனனுத் திர்மிதி)

மேலும்,

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُجِلَّ كَبِيرَنَا وَيَفِ لِعَالِمِنَا

“நம்மில் சிறியவருக்கு அன்பு காட்டாது, நம்மில் பெரியாரை கண்ணியப்படுத்தாது, நமது அறிஞருக்கு விசுவாசமாக நடக்காது இருப்பவர் எம்மைச் சார்ந்தவரில்லை.” (முஸ்னத் அல்-பஸ்ஸார்)

சிலர் இஸ்லாமிய சமத்துவத்தைக் காரணங்காட்டி, மதிப்புணர்ச்சியற்ற சமூகத்தை தோற்றுவிக்க முனைகின்றனர். அடிமைத்துவம், ஆக்கிரமிப்பு, வர்க்க முரண்பாடு முதலியவற்றை இல்லாதொழித்தல் என்ற கருப்பொருளில் பேசப்படவேண்டிய இஸ்லாமிய சமத்துவம் அவமரியாதை, கட்டுப்பாடில்லா சுதந்திரம், கலாசார சீர்கேடு முதலானவற்றிற்கு வழிவகுக்கும் விதத்தில் பேசப்படுவதானது, இஸ்லாமிய சமூக தளத்தில் பண்பாட்டுச் சரிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை கருத்திற்கொள்ளல் வேண்டும்.

மதிப்புணர்ச்சியுடையவர், மற்றவர்கள் தன்னோடு எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாரோ, அவ்வாறே மற்றவர்களோடு அவர் நடந்துகொள்வார். இதனால் அநீதி, கொடூரம், ஆக்கிரமிப்பு போன்ற தீயபண்புகளை தன்னிலிருந்து உதிர்த்து விடுவார்

  1. கருணையுணர்வு (Kindness):

துன்பம் முதலியவற்றைத் தீர்க்கும் வகையில் பிற உயிர்களுக்கு இரங்கும் உளப்பண்பாகவும், தன்னை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கத் தூண்டும் சக்தியாகவும் இது காணப்படுகிறது. சிறுவர்களுக்கு கருணையுணர்வை பயிற்றுவிப்பதனூடாக அவர்களது சுயநலப்போக்கைக் குறைத்து, அன்புள்ளம் கொண்டவர்களாக அவர்களை மாற்ற முடியும். ஒரு கருணையாளர், எப்போதும் துன்பத்திற்குள்ளான மக்களுக்கு ஆதரவாகவே குரல்கொடுப்பவராகத் திகழ்வார். நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட இப்பண்பை திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

“(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுப்பதாக உள்ளது. உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார். இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.” (09:128)

மேற்படி வசனத்தில் வந்துள்ள ரஊஃப் மற்றும் ரஹீம் என்ற பதங்கள் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் உள்ளவை என்பதும், அவை இறைத்தூதருக்கும் பிரயோகிக்கப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை. கருணைகாட்டல் என்பது செலவற்ற, எளிய காரியம் என்பதை சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதனூடாக அப்பண்பை அவர்களிடத்தில் வளர்த்துவிட முடியும்.

  1. பொறுமை அல்லது சகிப்புத்தன்மை (Tolerance):

பொறுமை என்பது, தான் விரும்பாத அல்லது தனக்கு எதிரான ஒரு விடயம் நிகழ்ந்ததாக உணரும் ஒருவர் அதனைப் பொறுத்துக்கொண்டு, அதற்கமைவாக சகிப்புத் தன்மையோடு நடத்தலைக் குறிக்கும். பண்பாட்டு நுண்மதிக் கூறான பொறுமை எனும் இப்பண்பானது கருணையுணர்வு, உணர்ந்தறிநிலை போன்ற ஏனைய கூறுகளின் உதவியுடன் வெறுப்பு, வன்செயல் மற்றும் காழ்ப்பு முதலிய உளப் பிரச்சினைகளுக்கு எதிராக நிற்கும் ஆற்றலை வழங்கி, தத்தமது ஆளுமைகளுக்கு ஏற்ப மற்றவர்களோடு மதிப்புணர்ச்சியுடன் நடக்க சிறுவர்களுக்கு உதவுகிறது. இது திருக்குர்ஆனில் முஃமின்களுக்குரிய பண்பாகவும் வர்ணிக்கப் பட்டுள்ளது.

…وَتَوَاصَوْا بِالصَّبْرِ

…”மேலும் பொறுமையை (சகிப்புத்தன்மையை)க் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசியுங்கள்.”

தான் கொண்டிருக்கும் இன, மொழி, கலாசார மற்றும் சிந்தனை வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று மற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் மனப்பாங்கு இதன் மூலம் ஏற்படுகிறது. இதனால் பக்க சார்பின்றி, நீதியோடு நடக்கவும், மற்றவர்களுக்குரிய சந்தர்ப்பத்தை வழங்கவும், மற்றவர் தொடர்பாக கருத்துவெளியிடுவதில் அவர்களது சகல கோணங்களையும் கருத்திற் கொள்ளவும் இப்பண்பு தூண்டுகிறது.

இவ்வாறான சகிப்புத்தன்மை கொண்டவர், ஒருவருடைய உரிமை அநீதியான முறையில் பரிக்கப்படும்போது, மக்களோடு இணைந்து சமத்துவத்தை வேண்டி, நீதிக்காக குரல்கொடுக்க முன்வருவார்.

  1. நேர்மை அல்லது விதிமுறை வழுவாமை (Fairness):

நேர்மை எனும் பண்பாட்டு நுண்மதிக்கூறானது, சிறார்கள் மற்றவர்களோடு நீதியுடனும், காழ்ப்பின்றியும் உறவாட வழிகாட்டுகிறது. சமத்துவ சிந்தனையில் பயிற்றுவிக்கப்பட்ட சிறார்கள் பிறர் உரிமைகளைப் பறிக்காது விதிமுறை வழுவாமல் செயற்படுவர். அதே போன்று, மற்றவர்கள் பற்றி காழ்ப்பற்ற நன்னோக்கையே கொண்டிருப்பர். இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

“முஃமின்களே! நீதியை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாளர்களாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.” (05:08)

பிறரின் ஆளுமைக் கூறுகளையும், விசேடத்துவங்களையும் உணர்ந்து, புதிய கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ள சிறார்கள் இப்பண்பின் மூலம் கற்றுக்கொள்கின்றனர். இன, மொழி, கலாசார, நம்பிக்கை முதலிய வேற்றுமைகளுக்கிடையில் பக்கச்சார்பின்றி, சாதிய நோக்குநிலையின்றி மற்றவர்களுக்கு மதிப்பளிப்பர்.

எனவே, மேற்கூறப்பட்ட விடயங்கள் பண்பாட்டு நுண்மதியை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக்கூறுகளாகும். நமது சிறுவர்களையும், இளம்பருவத்தினரையும் இப்பண்பாட்டு நுண்மதியின் அடிப்படையில் நெறிப்படுத்தவும், அவர்களை நற்பண்பாளர்களாக மாற்றவும் நாம் முயற்சிக்க வேண்டும். பண்பாட்டு விழுமியங்களுக்கான வெற்றிடத்தில் எமது சமூகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியினூடாக இன்றைய இஸ்லாமியப் பிரசங்கிகள் எதைநோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பண்பாடற்ற சமூகத்தன்மை, சமயநம்பிக்கையின் பெறுமானமற்ற பூச்சியத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமது ஆத்ம திருப்திக்காக மக்கள் நாடிச்சென்ற சமயப் பெரியார்களை நாம் இழந்து நிற்கும் தருணமிது. இப்போதெல்லாம், மக்களின் ஆன்மீக, பண்பாட்டுப் பயணங்களில் பங்கெடுக்கும் ஆன்மீகத் தலைவர்களை காண்பதரிது. மாறாக, லௌகீக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே இஸ்லாமியத் தலைமைகளை நாடிச் செல்லும் சமூக மரபு தோன்றியதானது நம்மை வருந்தச் செய்கிறது. இந்நிலையில், இளம்தலைமுறையினரை வழிநடாத்தும் பணியை நமது முதன்மையான செயற்திட்டமாகக் கொண்டு செயற்பட முயற்சிப்போம்.

Related posts

One Thought to “அறநெறி நுண்மதி – ஒரு இஸ்லாமியப் பார்வை”

  1. Dr.W.M.Younus

    இளம்தலைமுறையினரை வழிநடாத்தும் பணியை முதன்மை செயற்திட்டமாகக் கொண்டு செயற்பட முயற்சிப்போம்.

Leave a Comment