கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 5) – மரியம் ஜமீலா

1965, செப்டம்பர் 6-24 இல் இந்தியா வஞ்சகமாக பாகிஸ்தானை ஆக்கிரமித்த போது மௌலானா மௌதூதி, லாஹுரில் பாகிஸ்தான் வானொலியில் ஐந்து உரைகளை நிகழ்த்தினார். அதில், தாய்நாட்டை தற்காப்பதற்காகப் போராடுவது உண்மையான ஜிஹாத் எனப் பிரகடனம் செய்தார். போர் முயற்சிகளுக்கு இந்த உணர்ச்சிகரமான உரைகள் ஆற்றிய பங்கை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

மௌலானா மௌதூதி, காஷ்மீரில் நீதியை நிலைநாட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். முஸாஃபராபாத்தில் ஆஸாத் காஷ்மீர் வானொலியில் அவர் நிகழ்த்திய உரையில் காஷ்மீர் முஸ்லிம்களுக்கெதிரான இந்தியாவின் அட்டூழியங்களை கடுமையாகத் தாக்கினார். 1965 செப் 24 இல் அமுலுக்கு வந்த ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்த உத்தரவின் ஷரத்துக்களும், 1966 ஜனவரி 10 இன் தாஷ்கண்ட் பிரகடனமும் இந்தியாவின் அரசியல் வெற்றியை முன்னிறுத்தி காஷ்மீர் பிரச்னைக்கு நியாயமான தீர்வைத் தராது எனக் கூறி அவற்றை நிராகரித்தார்.

“உலக வல்லரசுகள் காஷ்மீர் பிரச்னையில் முனைப்பான ஆர்வம் எதுவும் காட்டவில்லை. இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில், ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை கைதுறந்து கொண்டிருந்த சமயம் இந்நிலைமை அவர்களால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இந்தியாவை பல்வேறு வழிகளில் தூண்டின. நியாயமான ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள இந்தியாவை நிர்பந்திக்காதது மட்டுமின்றி அது தன் நெறிகோணிய நிலையில் நீடிக்கவும் தொடர்ந்து உதவின. இரு வல்லரசுகளும் இந்தியாவிற்கு தொடர்ச்சியாக வளரும் பொருளாதார மற்றும் இராணுவத் தரவுகளை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், காஷ்மீரில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான எந்தவொரு அசைவையும் ரத்து செய்வதன் மூலம் சோவியத் யூனியன், இந்தியாவிற்கு அவ்வப்போது உதவியுள்ளது. உண்மையில் இவ்விரு அரசுகளும், இந்தியா ஏகாதிபத்திய அரசாக உருவாவதை தங்களின் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாகக் கருதுகின்றன என்று தோன்றுகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும், சீனாவிற்கு நிகரான மாற்று சக்தியாக இந்தியாவை தயார் செய்வதில் மும்முரமாக இருப்பதாகத் தெறிகிறது; மேலும் இந்தியாவை அணு ஆயுத சக்தியாக உருவாக்குவதிலும் அவை உதவுகின்றன. இத்தகைய சூழலில் காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் இவ்வல்லரசு நாடுகளின் உதவியை நாடுவது வீணானது. இவ்விஷயத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தாஷ்கண்ட் பிரகடனத்திற்குப் பின் உடைந்திருக்கும். அது அமெரிக்காவின் வெளிப்படையான ஆதரவுடன், காஷ்மீர் பிரச்னையை பின்னுக்குத் தள்ளி ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் இந்தியாவின் பிடியை நீட்டிக்கும் ரஷ்யாவின் முயற்சியை தெளிவாகக் காட்டுகிறது.

எமக்கு, ஜிஹாத் ஒன்றே தீர்வாகத் தெறிகிறது. ஏற்கனவே வீரச் சுதந்திரப் போராளிகள் தங்கள் உயிரையும் உடமைகளையும் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் தங்கள் போராட்டத்தில் விவரிக்க முடியாத அளவு துன்பங்களை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய குறைந்தபட்ச கடமை என்னவெனில், காஷ்மீரின் உண்மை நிலை குறித்த செய்திகளை எல்லா இடங்களிலும் திறனாக பரவச் செய்து காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான பொதுக் கருத்தை உலகம் முழுவதுமிருந்து திரட்ட வேண்டும். மேலும், இந்தியாவின் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்கள் குறித்து உலக முஸ்லிம் நாடுகளையும் பிற சிறிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் விளிப்படையச் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் இந்தியா குறித்து எந்த மாயைகளுக்கும் உள்ளாகாமல் அதன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களை தயார் செய்துகொள்ள முடியும். மேலும் காஷ்மீர் மக்கள், தங்களை இந்தியப் பிடியிலிருந்து விடுவித்து தங்கள் எதிர்காலத்தை தங்களின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதற்காக தார்மீக, பொருளாதார உதவிகளை செய்யக் கூடும். (15)

1967, ஜுன் 5-9 இல் எகிப்து, சிரியா, மற்றும் ஜோர்டானுக்கு எதிராக இஸ்ரேல் இரக்கமற்ற ஆக்கிரமிப்பை நிகழ்த்திய போது, மௌலானா மௌதூதி தனது அரபுச் சகோதரர்களுக்கு ஆதரவாக தன் ஆற்றல் முழுவதையும் திரட்டி ஸியோனிச ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனின் –குறிப்பாக ஜெரூசலத்தின் புனிதத் தலங்களின்- விடுதலைக்காக பாடுபட்டார்.

“முழு முஸ்லிம் உலகமும் பூரண ஒற்றுமையோடு, உறுதியுடன் அரபுகளோடு கைகோர்த்து நிற்பதே இப்போதைய தேவை. எந்தவொரு தேசமும் மற்றொரு தேசத்தை அடிமைப்படுத்த முடியாது என்றும் போரினால் எல்லைகள் மாற்றப்பட முடியாது என்ற கொள்கைகளுக்கும் உலகம் முழுவதுமுள்ள நீதிமான்களிடம் அவர்கள் ஆதரவு தேட வேண்டும். இவ்விஷயத்தில் நாம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்; இல்லையெனில் விளைவுகள் கற்பனை செய்வதற்கே பயங்கரமாக இருக்கும். தற்போதைய நிலையில் யூத அச்சுறுத்தலை முஸ்லிம் நாடுகள் அலட்சியப்படுத்தினால், எதிர்காலத்தில் பேரழிவுகள் ஏற்படக் கூடும்.

இத்தோல்வியின் பரந்த செயல்விளைவுகளை மட்டுப்படுத்த நாம் ஒரு முழுமையான திட்டத்தை பரிணமிக்க வேண்டும். மேலும் நமது இந்த இழிநிலைக்கான அடிப்படைக் காரணிகளை களைய வேண்டும். இது ஒரு அரேபிய-இஸ்ரேலிய போர் என்றும் அரேபியர்கள் சந்தித்த தோல்வி அவர்களது தோல்வி மட்டுமே என்றும் சிலர் கூறினும், இது உலக முஸ்லிம் மக்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு அளவிட முடியாத சேதத்தை விளைவித்துள்ளது. பழங்கால நகரமான ஜெரூசலத்தை ஸியோனிஸ்டுகள் ஆக்கிரமித்து அல்-அக்சா பள்ளிவாசலை இடித்து அவ்விடத்தில் சாலமன் ஆலயத்தை கட்டுவதற்கான அபாயகரமான திட்டம், அரேபியர்களை மட்டுமே எதிர்கொள்ளும் பேரிடர் அல்ல. அது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும், ஏற்பட்ட கடுங்காயமாகும். ஏனெனில் புனித ஜெரூசலம் நகரம், அரேபியர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; எல்லா முஸ்லிம்களும் அதை தங்கள் முதல் கிப்லாவாக போற்றுகின்றனர். மேலும் உலக யூத இனத்தின் கட்டுக்கடங்காத விரிவாக்கத் திட்டம், புனித நகரங்களான மக்கா-மதீனாவிற்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை நாம் உணர வேண்டும். இது அதிமுக்கியமானதொரு சவால்; இது அரேபியர்களுக்கு மட்டும் உண்டான தீங்கு அல்ல; மாறாக முழு முஸ்லிம் உலகிற்கும் சகிக்க முடியாத ஒரு செயல் ஆகும்” (16)

1966 மார்ச் இல் மக்காவில் நடந்த ‘ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமியா’ (உலக முஸ்லிம் குழுமம்) வின் கூட்டத்தில், அதன் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரான மௌலானா மௌதூதி முஸ்லிம் நாடுகள் இராணுவ விவகாரங்களில் அமெரிக்கா, சோவியத் யூனியன் அல்லது பிற நாடுகளைச் சாராமல் தன்னிறைவு அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உலக முஸ்லிம்கள் அனைவரும் தேசியவாதத்தை நிராகரித்து தங்களையும் இஸ்லாத்தையும் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஒரே கூட்டணியாக ஒன்றுபடுமாறு கேட்டுக் கொண்டார். எல்லா இனங்களையும் தேசங்களையும், உலகளாவிய தேசத்தின் அடிப்படையாகத் திகழும் ஒரு குழுவாக ஒன்றுகூட்டி, நீடித்து நிற்கும் நீதியையும் உலகளாவிய அமைதியையும் கொண்டுவரும் சக்தி படைத்த ஒரே கோட்பாடு இஸ்லாம் மட்டுமே எனப் பிரகடனம் செய்தார்.

இஸ்லாம் தனது மனித சமத்துவம் என்ற கருத்துருவாக்கத்தை ஒரு விளைவற்ற தத்துவமாக வழங்கவில்லை. இக் கருதுகோளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை நிறுவியது. அச் சமூகத்தில் பல்வேறு இனங்களையும் தேசங்களையும் முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்தது. அனைத்து இன, நிற, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளும் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்ல. இதே கொள்கையின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தேசத்தை நிறுவி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. முழு முஸ்லிம் உலகமும் ஒரே சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத் திகழ்ந்தனர். ஒருவர் –அவர் கிழக்கிலிருந்து வந்திருப்பினும் மேற்கிலிருந்து வந்திருப்பினும்- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உடனே அவர் இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினராக மாறிவிடுவார்; மேலும் பிற முஸ்லிம்களைப் போன்றே சம உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் அனுபவிப்பார்.

ஒருவர் கறுப்பினத்தவராகவோ, ஈரானியராகவோ, காப்டு* அல்லது பெர்பராகவோ**  இருப்பினும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின் அவர் திருத்தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது அரேபியப் பின்பற்றாளர்களைப் போல, முஸ்லிம் சமூகத்தில் ஒரே நிலையில் இருப்பார். அவரது சமூக அந்தஸ்து அவர்களுக்கு இணையானதாக இருக்கும். ஒழுக்க மாண்புகள் மற்றும் நற்காரியங்களின் அடிப்படையில் அவர் இஸ்லாமிய சமூகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். ஒரு இஸ்லாமிய நம்பிகையாளர் –அவரது இனத் தொடர்பு, பிறப்பிடம், தாய் மொழி அல்லது நிறம் எதுவாக இருப்பினும்- மற்ற எந்தவொரு முஸ்லிமிற்கும் சகோதரரே; மேலும் முஸ்லிம் சமூகத்தில் எங்கே சென்றாலும் பிற முஸ்லிம்களைப் போலவே சம உரிமைகளை அனுபவிப்பார். முஸ்லிம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் வேறு எந்த முஸ்லிம் நாட்டிற்கும் அவரால் தங்கு தடையின்றி செல்ல முடியும். அந்நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியும்; தான் விரும்பிய வரை அங்கேயே வசித்து வியாபாரத்தில் ஈடுபடவும் முடியும்; அரசாங்கத்தில் உயர் பதவிகளை அடையவும் முடியும். மேலும் எந்தச் சிரமும் இன்றி திருமணம் செய்து கொள்ளவும் முடியும்.

ஒரு முஸ்லிம் தன் நாட்டைவிட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்த சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் நிரம்பக் காணக்கிடைக்கின்றன. அவர், ஒரு நாட்டில் கல்வி கற்றிருப்பார். மற்றொரு நாட்டில் வியாபாரம் செய்திருப்பார்; வேறொரு நாட்டில் ஒரு அமைச்சர் அல்லது இராணுவத் தளபதியாக பணியாற்றிருப்பார். இன்னும் ஒரு நாட்டிற்குச் சென்று அங்கேயே வசித்து திருமணமும் செய்திருப்பார். இதற்கு, எல்லோரும் அறிந்த மிகச் சிறந்த உதாரணம், இப்னு பதூதா.

இப்னு பதூதா, 27 வருடங்களாக, பல்வேறு முஸ்லிம் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். அவருக்கு பாஸ்போட்டும் விசாவும் தேவைப்படவில்லை. அவரது தேசம் குறித்து எவரும் அவரை விசாரிக்கவில்லை. தனது வாழ்வாதாரத்திற்காக பொருளீட்டுவதிலும் அவர் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை. ஒரு இடத்தைப் பார்வையிடுவதற்கு அவருக்கு யாருடைய அனுமதியும் தேவைப்படவில்லை. அரசாங்கப்பணியை அவர் நாடினால், அது சிரமமின்றி அவருக்குக் கிடைத்தது.  சுல்தான் முஹம்மத் துக்ளக் இன் ஆட்சிக் காலத்தில் அவர் இந்தியா வந்தார். தன் சொந்த நாடான மொராக்கோவின் ஒரு மூலையிலிருந்து வந்துள்ளார் என்ற விஷயம், இங்கு அவர் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு தடையாக இருக்கவில்லை.

பின்னர் சுல்தான் அவரை தன் தூதராக சீனாவிற்கு அனுப்பினார். இது, அரசாங்கத் தூதரகப் பணியாற்றுவதற்குக் கூட அவருக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை என்பதை நிறுவுகிறது. மேலும் அக்காலத்தில், பொது உடைமை மட்டுமின்றி பொதுக் குடியுரிமைக் கொள்கையும் முழுமையாக செயல்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது. முழு இஸ்லாமிய உலகின் மனிதவளமும் எந்தவொரு முஸ்லிம் நாட்டிற்கும் கிடைக்கப் பெற்றது. முஸ்லிம் உலகின் தற்காப்பும் பாதுகாப்பும் அனைத்து முஸ்லிம்களின் கூட்டுப் பொறுப்பாகத் திகழ்ந்தது. கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்நிலையே இஸ்லாமிய உலகில் நீடித்தது. இன்றைய சிந்தனையாளர்கள் ஏங்கும் உலகளாவிய தேசத்திற்கான அடிப்படைக் கொள்கைகளையும் கோட்பாட்டையும் இஸ்லாம் வழங்குகிறது என்பதற்கு வேறென்ன சான்று இருக்க முடியும்? உண்மையில் இஸ்லாம் அத்தகைய ஒரு தேசத்தை உருவாக்கி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதைத் திறனாக செயல்படுத்தியும் வந்துள்ளது. (பக் 19-24)

இந்தோனேஷியாவிலிருந்து மொராக்கோ வரை எங்கு சென்றாலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். இக்கலாச்சாரத்தின் அடிப்படை, எல்லா முஸ்லிம் நாடுகளிலும் ஒரே அளவில் வெளிப்படுகிறது. ஒரு முஸ்லிம், எங்கு சென்றாலும் தொழுகைக்கான அழைப்பைக் கேட்ட கணம், தான் தன் கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் இருப்பதை உணர்கிறார். ஒரு உள்ளூர் முஸ்லிமைப் போலவே அவரும் ஜமாத்தின் உறுப்பினர் ஆவார். ஜமாத்தில் யாரும் அவரை அந்நியராகக் கருதுவதில்லை. மாறாக அவர் வேறொரு முஸ்லிம் நாட்டிலிருந்து வந்திருப்பதை அறிந்தவுடன் அவரைக் கட்டித் தழுவ மக்கள் விரைகின்றனர். அவரது மொழியை அவர்கள் அறியாதிருப்பினும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது அவர்கள் மத்தியில் பொதுவான முகமனாகத் திகழ்கிறது. தொழுகையின் முறைகளும் அதன் உள்ளடக்கங்களும் இந்தோனேஷியாவிலிருந்து மொராக்கோ வரை ஒரே மாதிரியாக உள்ளன. அந்தத் தனியான அந்நியரை, தொழுகைக்கு இமாமாக ஜமாத் தேர்ந்தெடுக்க முடியும். அவரும், அவர்களது தலைவர் வழிநடத்த தன் தொழுகையை நிறைவேற்றலாம்.

பள்ளிவாசலுக்கு வெளியே முஸ்லிம் சமூகத்தில் எங்கு சென்றாலும் தன்னையும் உள்ளூர் முஸ்லிம்களையும் பிணைக்கும் கலாச்சாரக் கூறுகளை அவர் காண்பார். ஹராமான அனைத்தும் அவருக்கும் அவர்களுக்கும் பெரும் வெறுப்புக்குரியது என்ற நம்பிகையோடு அவர் அவர்களோடு அமர்ந்து உணவருந்த முடியும். தூய்மையின் சட்டங்கள் அவரைப் போலவே அவர்களாலும் பேணப்படுகிறது. எந்தவொரு முஸ்லிம் நாட்டிற்கு அவர் சென்றாலும், உயர்ந்தோரும் பொதுமக்களும் அனைவருமாக அவரது நாட்டு முஸ்லிம்களை தங்கள் உறவினர்கள் போலக் கருதி நலன் விசாரிக்கின்றனர். அவர்கள் நலமாக இருப்பதைக் கேட்டால், அந்நற்செய்திக்காக அல்லாஹ்வை புகழ்கின்றனர்; அவர்களது முகம் மகிழ்ச்சியில் பொலிவடைகிறது. இல்லையெனில் சொந்த நாட்டு மக்களின் கஷ்டங்களைக் கேட்டு வருத்தமடைவது போல வருத்தமடைகின்றனர்.

அது மட்டுமல்ல, திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் பிற சட்டங்கள், முஸ்லிம் நாடுகளில் ஒரே மாதிரியாகவே உள்ளன. எந்த அளவுக்கெனில் ஒரு நாட்டின் பிரஜை மற்றொரு நாட்டின் பிரஜையை திருமணம் செய்வதில் எந்தச் சிரமும் இருப்பதில்லை. இத்தகைய நிலைமைகள் முஸ்லிம் நாடுகளைத் தவிர உலகின் வேறெந்த பகுதிகளிலும் நிலவுவதில்லை. இது, எல்லா முஸ்லிம் நாடுகளுக்கிடையேயும் பொதுவான உணர்ச்சிகள், பரஸ்பர பரிவிரக்கம், பொதுவான கலாச்சார மற்றும் நாகரிக அடிப்படையிலான உறுதியான ஆழமான –தேசியவாத வெறி நிலவும் இக் காலத்திலும் பிரிக்க முடியாத- ஒரு பந்தம் இருப்பதை நிரூபிக்கிறது. மேலும் கிழக்கிலிருந்து மேற்கு வரை, முஸ்லிம் நாடுகள் அனைத்தும் புவியியல் ரீதியாக அடுத்தடுத்து உள்ளன. அவை ஏன் தங்கள் பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்கவும், தங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளவும் ஒன்றிணையக் கூடாது? (பக் 33-35)

குறிப்புகள்

(15) காஷ்மீர்: மனித இனத்தின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல், செய்யது அபுல் அஃலா மௌதூதி, ஜமாத்தே இஸ்லாமி, லாஹுர், பிப்ரவரி 1966, பக் 53-55, சுருக்கம்.

(16) “பாலஸ்தீன் விவகாரத்தை எதிர்கொள்வது எப்படி?”, செய்யது அபுல் அஃலா மௌதூதி, மத்தியக் கிழக்கு நெருக்கடி, சவுத்ரி குலாம் முஹம்மது, சிராக்-ஏ-ராக் பதிப்பகம், கராச்சி, மார்ச் 1968, பக் 161-163, சுருக்கம்.

* காப்டு – பண்டை எகிப்திய மரபினரான கிறுஸ்தவர் – மொ.ர்

** பெர்பர் – பார்பரியின் பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வடஆப்பிரிக்க இனத்தவர் – மொ.ர்

Related posts

Leave a Comment