நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்

‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ எனும் நூல் தமிழின் முக்கியமான கோட்பாட்டாளர், விமர்சகர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ. மார்க்ஸால் எழுதப்பட்டது. பேராசிரியர் அ. மார்க்ஸ் இந்துத்துவம் குறித்து வெளியிட்ட மூன்று முக்கிய நூற்களான ‘இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு (ஜூலை 1999), ‘ஆட்சியில் இந்துத்துவம்’ (ஜூலை 2001), ‘இந்துத்துவத்தின் இருள்வெளிகள்’ (ஜூன் 2004) ஆகிய மூன்று முக்கியத்துவம் வாய்ந்த நூற்களின் பெருந்தொகுப்பு இது.

தமிழ் அறிவுச்சூழலில் இந்துத்துவ அரசியல் குறித்து நீண்டநெடுங்காலமாக வாசித்து சிந்தித்து பேசி எழுதி விவாதித்து களப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு பொது அறிவுஜீவி பேராசிரியர் அ. மார்க்ஸ் என்றால் அது மிகையாது. இந்துத்துவத்தை மதவெறியாக, வகுப்புவாதமாக சுருக்கிப் பார்க்கும் வழக்கமான வரட்டு செக்குலர் மற்றும் மையவாத முன்முடிவுகள் பலவற்றையும் கடந்து, இந்துத்துவம் எனும் சிக்கலான இயக்கவியல் கொண்ட ஒரு உயிர்ப்புமிக்க உயிரியைப் புரிந்துகொள்ள எண்ணும் எவரொருவரும் மார்க்ஸின் எழுத்துக்களை கவனியாமல் சென்றுவிட முடியாது.

இந்துத்துவம் பற்றிய தமிழ் முற்போக்கு-இடதுசாரிச்சூழலில் உள்ள இயல்பறிவு (common sense) என்னும் தளத்தின் மீதான அவதானத்தோடு, ஆங்கிலத்தில் இந்துத்துவம் குறித்து வரும் முக்கியமான ஆக்கங்கள் பலவற்றையும் உள்வாங்கி, மனிதவுரிமைகள் சார்ந்த தனது கள அனுபங்களையும் தொகுத்துக்கொண்டு இந்துத்துவத்தைப் புரிந்துகொள்ள முற்படுவதே இத்தொகுப்பின் முதன்மையான பலமாகும். ஏற்கெனவே இருக்கும் இயல்பறிவு நிலையிலேயே தேங்கி, வெறுமனே எதிர்ப்பு முழக்கங்களாகச் சுருங்கி விடாமல் இந்துத்துவத்தை எதிர்க்க நினைக்கும் ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாக இந்நூல் இருப்பதுதான் இதை முக்கியமான பங்களிப்பாகவும் மாற்றுகிறது. வழக்கமாக முற்போக்கு மையநீரோட்டம் தவறவிட்டுவிடும் செயல்பாடான ஒடுக்கப்பட்டவர்களின் நோக்குநிலையிலிருந்து (Vantage point) பிரச்சினைகளைப் பார்த்து ஒடுக்குமுறையை முறையாக எதிர்கொள்வது என்பதையும் மார்க்ஸ் மிகுந்த நுண்ணுணர்வோடு செய்கிறார். உண்மையில் அது அவரது கருத்துக்களோடு சேர்த்து ஒடுக்கப்படும் மக்கட்பிரிவினருக்கும் வலுசேர்க்கிறது.

இத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.

முஸ்லிம், கிறித்தவ மக்கள் தொடர்பாக இந்துத்துவம் பரப்பும் பொய்ப்பிரச்சாரங்கள் ஒவ்வொன்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் உண்மைத்தன்மையை உரசிப்பார்க்கிறார் ஆசிரியர். உதாரணத்திற்கு இத்தொகுப்பில் இருக்கும் ஒரு பகுதியான ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்’ என்ற பகுதியைச் சொல்லலாம். இப்பகுதி கேள்வி-பதிலோடு கூடிய உரையாடல் பாணியில் அமைந்திருக்கிறது. முஸ்லிம்களை மற்றமையாக்கியிருக்கும் ஒரு சொல்லாடல் சமூகத்தில் மேலாண்மை பெற்றிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் குறித்த ஒரு சாமானிய இந்துத்தன்னிலையிடம் இருக்கும் கேள்விகளை எதிர்கொண்டு அதன் உண்மைத்தன்மைகளை கேள்விக்குட்படுத்தி, அத்தகைய கேள்விகளுக்குப் பின்னிருக்கும் அரசியலை அத்தன்னிலை கொண்டோருக்கே வெளிச்சம் போட்டுக்காட்டி, முஸ்லிம்களின் மீதான அவர்களது தப்பபிப்பிராயங்களைக் களைவதே கேள்வி-பதில் பாணியில் அமைந்த இப்பிரதியின் நோக்கமாகும். இதில் கேள்விகள் இந்துத்துவச் சொல்லாடல்களை அகவயப்படுத்திக்கொண்ட ஒரு சாமானிய இந்துத்தன்னிலையிலிருந்து எழுவதாகவும், பதில்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக சார்பெடுத்து அவர்களின் நோக்குநிலையிலிருந்து இப்பிரச்சாரங்களை எதிர்கொண்டு அதை முறியடிக்க முனையும் ஒரு பொது அறிவுஜீவியின் குரலாகவும் வெளிப்படுகிறது.

‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்’ தொண்ணூறுகளில் பரவியிருந்த இஸ்லாமிய விரோதப் பிரச்சாரங்களைக் களையும் முகமாக மார்க்ஸ் வெளியிட்ட சிறுபிரசுரமாகும். அக்காலகட்டத்தில் முற்போக்கு வெளிகள் கூட இந்து மையவாத இஸ்லாமோஃபோபியாவிலிருந்து தப்பவில்லை என்பதை உணர்ந்த ஆசிரியர் முஸ்லிம்கள் பற்றி பரவலாக இருந்த பொய்ப்பிரச்சாரங்களை பொறுமையாக எதிர்கொண்டு, கரிசனையான குரலில் அதை மறுத்துரைத்திருக்கிறார். ‘யாராவது ஒன்றுவிட்ட சகோதர உறவுமுறை உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்வார்களா? இஸ்லாமியர் செய்துகொள்கிறார்களே?’, ‘இசுலாமியர் பசுவதை செய்பவர்களல்லவா? மாட்டிறைச்சி தின்பது இழிவல்லவா?’ போன்ற கேள்விகளில் தொடங்கி அரசமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு, முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பு, ‘பெருகிவரும்’ முஸ்லிம் மக்கள்தொகையின் அபாயம், நாட்டுப்பிரிவினை போன்ற முஸ்லிம்கள் பற்றி அடிக்கடி பேசப்படும் பொருள்கள் கேள்வி-பதில்களாக இடம்பெற்றிருக்கின்றன.

இந்நூலின் தனித்தன்மை அதன் உள்ளடக்கத்தை விட அதன் வடிவத்தில் தான் அமைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கும் சூழலில் சில மாதங்களுக்கு முன் ‘ஒரு முஸ்லிமோடு பேசுங்கள்’ (Talk to a Muslim) என்ற சமூக ஊடக ஹேஷ்டேக் இயக்கம் சில லிபரல்களால் முன்னெடுக்கப்பட்டது. இது தலித்கள் மீதான வன்முறையைத் தடுக்க சேரியில் போய் ‘சாதி ஒழிப்பு’ பற்றி பேசுவதற்கு ஒப்பானது என்பது போன்ற விமர்சனம் அதைத்தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெரும்பான்மைவாத வன்முறையை எதிர்கொள்ள லிபரல்கள் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் தரப்பைப் புரிந்துகொண்டு இந்துக்களிடம் சென்றுதான் பேசவேண்டும், அந்தவகையில் Talk to a Hindu என்பதாகத்தான் இயக்கம் கட்ட வேண்டும் என்று பேசப்பட்டது. இந்தப்புரிதலோடு ‘இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்’ நூலைப் பார்வையிடுவோர் அது இந்துத்தன்னிலையிடம் பேச முயன்ற ஒரு பிரதி என்பதை அடையாளங்கண்டுகொள்வர். அவ்வகையில், தமிழ்ச்சூழலில் முஸ்லிம்கள் எனும் பேசுபொருளை எடுத்துக்கொண்டு அரசியல்-இந்துத் தன்னிலையை விசாரணைக்குட்படுத்தும் முதன்மையான முயற்சி இது என்பதில் ஐயமில்லை. தமிழ்ச்சூழலில் இதற்கு முன்னும், பின்னும் இதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் இடம்பெற்றிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்துப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.

இதுபோன்ற வெகுஜனப் பரப்புக்கான படைப்புகளுடன் கோட்பாட்டு ரீதியான ஆக்கங்களையும் இந்துத்துவம் பற்றிய தனது பங்களிப்பாகச் செய்திருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக ‘இந்துத்துவம்: ஒரு கோட்பாட்டுப் புரிதல்’ என்ற கட்டுரையைச் சொல்லலாம். இந்து அடையாளம் எனும் கட்டமைப்பு, இந்துத்துவ அரசியலுக்குப் பின்னுள்ள வர்க்க/சாதிய நலன்கள், இந்துத்துவச் சொல்லாடல்களும் அவை உருவாக்கும் தன்னிலைகளும், இந்துத்துவத்துக்கும் நவீனத்துக்கும் உள்ள இயங்கியல் உறவு ஆகிய பரந்துபட்ட தளத்தில் எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருள் பற்றி உரையாடுகிறது அக்கட்டுரை.

மையவாத நோய் களைந்து தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பைப் புரிந்துகொள்வதும், சார்பெடுப்பதும் மார்க்சின் எழுத்துக்களில் நாம் வழிநெடுக காணும் பண்புகளாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் அதுசார்ந்த மையநீரோட்ட இடதுசாரிகளின் எதிர்வினை குறித்துப் பேசும் அவர் இவ்வாறு கூறுகிறார்: “இந்து வெறியர்கள் தாக்குகிறார்கள், இசுலாமியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து அல்லது மறைத்து ஏதோ இருவருமே சமநிலையில் மோதிக் கொண்டிருப்பதைப் போல சில நேரங்களில் மைய நீரோட்ட இடதுசாரிக்கட்சிகள் மத நல்லிணக்கக் கூட்டங்கள் போட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சில புரட்சிகர இயக்கங்கள் தவிர மற்ற யாருமே இடித்த இடத்தில் மசூதியை மட்டுமே கட்ட வேண்டும், ராமர் கோயிலைக் கட்டக் கூடாது எனச் சொல்லத் தயாராக இல்லை… இசுலாமியச் சிறுபான்மை உணர்வையும் இந்துத்துவத்தையும் நாம் ஒன்றாகப் பார்த்து விட முடியாது. முன்னது தற்காப்புக்கானது, பின்னது தாக்குதலுக்கானது” (மேற்காண் நூல் பக்கம் 77 – 78) என்று குறிப்பிடுகிறார். முஸ்லிம் பிரச்சினையில் மையநீரோட்ட இடதுசாரிகளின் புரிதலுக்கும் ‘பம்பாய்’ படம் எடுத்த மணிரத்னத்தின் கருத்தியலுக்கும் பெரிய அளவு வித்தியாசமில்லை என்பதை அறிவோருக்கு இவ்வாதத்தில் உள்ள உண்மை விளங்கும்.

இந்துத்துவவாதிகள் கிறித்தவ மதத்தை மண்ணின் மைந்தர்களான இந்துக்களை ஒடுக்கிய காலனித்துவச் சதியாக நிரல்படுத்துவர். இதைப் பின்வருமாறு பிரச்சினைக்குள்ளாக்குகிறார் ஆசிரியர்: “எனினும் மத மாற்றத்தின் மூலம் கிறிஸ்தவத்தை வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர்  இந்தியச் சாதிமுறையால் மிகவும் இழிவாக ஒதுக்கப்பட்ட தாழ்ந்த சாதியினரே. இவர்கள் மத்தியில் கிறிஸ்தவம் தனது கல்வி, மருத்துவ சேவைகளைச் செய்தது. இத்தகைய சேவைகளினால் மேல்நிலையாக்கம் பெற்ற அடித்தள மக்கள் சாதிரீதியான உரிமைகளைக் கோரி மேற்சாதி ஆதிக்க சக்திகளுடன் போராட நேர்ந்த போதெல்லாம் காலனிய அரசின் நிலை இரண்டுங்கெட்டானாகியது. சென்ற நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற ‘தோள்சீலைப் போராட்டம்’ முதலானவற்றைக் கூர்ந்து கவனிப்போருக்கு இந்த உண்மை புரியும். மதப்பிரச்சார்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றதையும் காலனிய அரசு தனது உள்ளூர் முகவர்களான இந்து மேற்சாதியினருக்கு ஆதரவாக முடிவெடுக்க நேர்ந்ததையும் காண முடியும்” (மே.கா.நூ. பக்கம் 146). இவ்வாறு பெரும்பாலும் லிபரல்களும் முற்போக்காளர்களும் தன்னூக்கமாகவோ எதிர்பாராத விதமாகவோ விழுந்துவிடும் இந்தியக் கருத்தியல் மற்றும் இந்து/இந்திய மையவாதம் ஆகிய பொறிகளை அனாயசமாகக் கடந்துவிடுகிறார் ஆசிரியர். மதமாற்றம் குறித்த விவாதங்களிலும் மேலாண்மை பெற்ற இந்து/செக்குலர் சொல்லாடல்களை பிரச்சினைக்குள்ளாக்கி அதை தலித்-பகுஜன் நோக்குநிலையிலிருந்து விளக்குகிறார்.

இந்துத்துவத்துக்கும் ஜெர்மன் நாஜிசம் மற்றும் இத்தாலிய ஃபாசிஸத்துக்கும் இருந்த உறவு, இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கும் முறை, காவல்துறை, நீதித்துறை போன்ற அரசின் உறுப்புகள் பெரும்பான்மை மதவாதத்தன்மையோடு நடந்துகொள்ளும் தன்மை, தலித்-பகுஜன்களும் இந்துத்துவமும், இந்துத்துவமும் சுதந்திரச் சந்தை பேசும் நவ-தாராளவாதமும் என இந்துத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் இந்து நூல் ஆராய்கிறது.

இறுதியாக ஒரு வார்த்தை. தமிழ்ச்சூழலில் முஸ்லிம்களை ஆதரிப்பது போல பாவனை காட்டும் பார்ப்பன லிபரல்களும் அவர்களிடம் விலைபோயிருக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில Native Informer களும் பேராசிரியர் மார்க்ஸை ‘முஸ்லிம் அடிப்படைவாதத்தை’ வளர்க்கும் அறிவுஜீவியாக சித்தரிக்கும்ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மையில் தமிழ்ச்சூழலில் அரசியல் தளத்தில் முஸ்லிம் நோக்குநிலை வாதங்களை வளர்த்தெடுத்தவர்களில் முதலாமானவராக மார்க்ஸ் இருப்பார் என்பதை நேர்மையாக இவ்விஷயங்களை அணுகும் யாரும் ஏற்றுக்கொள்வர். முஸ்லிம் சமூகத்தில் பிறந்து ஆனால் பார்ப்பனிய அரசியலை அகவயப்படுத்திக்கொண்டு, முஸ்லிம்களையும் அவர்களது அமைப்புகளையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த எம்.ஜே. அக்பர்கள் அல்ல முஸ்லிம் சமூகத்தின் சொந்தக்குரல்கள். மாறாக, முஸ்லிம் சமூகத்தில் பிறக்காத, அவர்களது தரப்பு நியாயத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் ஒலிக்கும் பேராசிரியர் மார்க்ஸ் போன்றவர்கள்தான் முஸ்லிம்களைச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொந்தக் குரல்கள். முஸ்லிம் சமூகமும் மார்க்ஸ் போன்றவர்களை மேடையேற்றி பேச்சுக்கு பாவிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாது, அவரது நூல்களை வாசித்தல், விவாதித்தல் மற்றும் பரவாலாக்கம் செய்தல் ஆகிய செயல்பாடுகளை தங்களது அமைப்பு அணிகளுக்குள் முன்னெடுப்பதுதான் நாம் அவரது செயல்வாதங்களுக்குச் செய்யும் நியாயமாக இருக்க முடியும். அந்தவகையில் இந்துத்துத்துவ எதிர்ப்புச் சமரில் நாம் ஏந்தவேண்டிய கருத்தாயுதமாக ‘இந்துத்துவத்தின் பன்முகங்கள்’ இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

Related posts

2 Thoughts to “இந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்”

  1. மிக்க நன்றிகள். இது எப்போது எழுதப்பட்டது? இந்த நூல் வந்தபோது அப்போதைய ‘இந்தியா டுடே’ இதழ் வரிக்குவரி காழ்ப்பையும், வெறுப்பையும் கக்கி எழுதியிருந்த ஒரு நூல் விமர்சனம் நினைவுக்கு வருகிறது, எனினும் தமிழுலகில் பெரிய அளவில் வாசிக்கப்ப நூல் அது. நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள்…

    1. ஆஷிர் முஹம்மது

      சார்… இது டிசம்பர் மாதம் வெளியான ‘சமூக உயிரோட்டம்’ என்ற மாத இதழில் வெளிவந்தது.

Leave a Reply to ஆஷிர் முஹம்மது Cancel reply