கட்டுரைகள் 

பத்தாண்டுகளின் நிகழ்காலம்

முத்துக்குமாரின் தீக்குளிப்பிலிருந்தே துவங்குகிறேன். நிச்சயமாக அது ஒட்டுமொத்த தமிழகமும் குறிப்பாக மாணவச் சமூகம் உணர்ச்சிப் பிழம்பாக கனன்ற நேரம். அந்த உணர்வெழுச்சியானது மாணவர்களையும் இளைஞர்களையும் சமூக மாற்றத்துக்காக உழைக்கும் இயக்கங்களில் சென்றுவிடாமல் தடுத்ததோடல்லாமல் தமிழகம் தன்னை இந்தியாவிற்கெதிரான மாநிலமாக உணர்ந்துவிடக்கூடாது என மடைமாற்றப்பப்பட்டதில் சீமானின் பாத்திரம் மிக முக்கியமானது. மட்டுமல்ல ‘நாம் தமிழர்’ எனும் பெரும்பேற்றுப் பதாகையின் கீழ் தமிழர்களைக்கொண்டே தமிழர்களை கூறுபோடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

சரி, இது முடிந்து பத்தாண்டுகள் நிறைவுறப்போகும் நிலையில் இன்று ‘ஜல்லிக்கட்டு’ எனும் கோசத்தின்கீழ் ஒட்டுமொத்த மாணவச் சமூகமும் களமிறங்கியே விட்டது. இப்போராட்டத்தின் தன்மைகள் குறித்து நாம் அலட்சியப்பார்வை கொண்டிருந்தபோதும் ஒருபெரும்திரளான மக்களின் உணர்வை இந்த அரசுகள் அத்தனை அலட்சியமாகப் பார்க்கவில்லை என்பதைத்தான் போராட்டத்தின் இறுதிக்காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வகையில் மெரினாப் போராட்டமானது அரசுகளின் கண்ணில்விழுந்த மணற்துகள்தான். இனியொருமுறை இது நேர்ந்துவிடவே கூடாது என இவ்வரசு தீர்மானித்ததின் விளைவுதான் இத்தனை வன்மமும்.

போராட்டம் முடிந்துவிட்டது. இதோ “தேவைப்பட்டால் அரசியலுக்கு வரப்போவதாக” லாரன்ஸ் சொல்கிறார். ஆதியும் நாளை சொல்லக்கூடும். தொலையட்டும். அது அவர்களின் திட்டம், செயல்பாடு. இத்தனை பெரிய இளைஞர் கூட்டம் சரியான அரசியலை அல்லது மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்க முடியாதவாறு மீண்டும் மடைமாற்றப்படலாம். மீண்டுமொரு சீமான்கள் களமிறக்கப்படலாம். அது லாரன்சாகவோ, ஆதியாகவோ அல்லது நாமறிந்த அறியாத எதிர்பாராத எவரோ ஒருவராக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் இந்த அரசும், அதன் அமைப்புகளும் தம்மைக் காத்துக்கொள்ள எந்தவாய்ப்பையும் உருவாக்கும், எத்தகையவரையும் விலைபேசும். ஏனெனில் அது ‘அரசு’.

ஆனால் தோழர்களே, சகோதரர்களே, நண்பர்களே! நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இத்தனை திரளான மக்கள் கூட்டம் கூடிக்கலைந்த பின்னும் நம்முடைய நிகழ்ச்சிநிரல் என்ன மாற்றமடைந்திருக்கிறது? ஒடுக்குமுறைக்கு எதிராக களம்கண்ட இத்தனை லட்சம் இளைஞர்களின் அடிப்படை அறத்தை நாம் என்ன செய்யப் போகிறோம்? நேர்மையான சமூகத்தின்பால், அறத்தின்பாற்பட்ட அரசியலின் பால் அவர்களை செலுத்த நம்மிடமுள்ள திட்டங்களும், செயல்பாடுகளும் என்னென்ன?

எச்செயல்பாடுகளுமில்லாமல் சீமான்களிடமும், லாரன்சுகளிடமும், ஆதிகளிடமும் அவர்களை விட்டுத்தருவது என்னவகைச் சித்தாந்தம்? பார்போற்றும் நமது தத்துவத்தின் எப்பிரிவு இதை அனுமதிக்கிறது? இது எதுவுமே இல்லையெனில் மாற்றம் குறித்துப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது? லாரன்சைக் குறைகூறும் நம் யோக்கியதைதான் என்ன?எச்செயல்பாடுகளுமற்று இருக்கும் நாம் பிரச்சினைக்கு அடுத்தநாளே கல்லூரி வாசலில் காவலரை நிறுத்தும் வலிமை மிக்க அதிகாரத்துடன் எந்த அடிப்படையில் போட்டியிடுகிறோம்?

போகட்டும், காலமின்னும் கடக்கவில்லை. ஆனால் கடந்து கொண்டிருப்பதொரு ஊழிக்காலம் என்பதை மனதில் கொண்டு இனியேனும் இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி கட்சிகள், பெரியாரிய திராவிட அமைப்புகள், தலித் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டோ தனித்தனியாகவோ மாவட்டவாரியாக போராட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் கண்டடைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட நாட்களில் அவர்களை ஒன்றுதிரட்டி, மாற்று அரசியலை அறிமுகப்படுத்தி அரசியல் மயப்படுத்தத் தவறினால் அதன்விளைவுகளை அடுத்த பத்தாண்டுகளில் அனுபவிக்கப்போவதும் நாம்தான்.

இருப்பவர்களையெல்லாம் எதிர்கோட்டிற்கு அனுப்பியபின் எவரை வைத்து நாம் அணியமைக்கப் போகிறோம்? வெற்றிடத்தை காற்று நிரப்புவதைப் போல நல்லவைகளற்றதை அல்லவைகளே நிரப்பும். கொள்கை என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத ஒரு நடிகனால் இயலுமெனில் நம்மால் இயலாதா? என்ன செய்யப் போகிறோம்? இதுவே நம்முன் உள்ள கேள்வி.

Related posts

Leave a Comment