நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கடவுள் சந்தை: உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்குகிறது?

இந்தியாவில் கடவுளும் உலகமயமாக்கமும்

பாகிஸ்தானியப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர், துப்பாக்கிகளை ஏந்திய குழுவினர், 2008 நவம்பரில் மும்பை நகரத்தைத் தாக்கியபோது, ‘அவர்கள் ஏன் நம்மை வெறுக்கிறார்கள்?’ என்ற கேள்வியைத் தானும் கேட்கும் கணத்திற்கு இந்தியா வரநேரிட்டது. இந்தக் கேள்விக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டின்மீது 9/11 தாக்குதல்களுக்கு ஏறத்தாழ ஜார்ஜ் புஷ் அளித்த விளக்கத்தையே இந்தியர்கள் பலரும் பதிலாக அளித்தனர்: இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நம்மை வெறுப்பதற்குக் காரணம், நாம் நல்லவர்கள், அவர்கள் தீயவர்கள்; நாம் சுதந்திரர்கள், ஜனநாயகத் தன்மையுடன் வாழ்பவர்கள், அவர்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத் தன்மையையும் வெறுப்பவர்கள்.

இந்த ‘நாம் X அவர்கள்’ பிளவு, உலகமயமாக்கத்துடன் மேலும் தொடர்புடையது. மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு மிகவும் புழக்கத்துக்கு வந்த சொல் அது. ‘உலகப் பொருளாதாரப் போட்டியில் நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் முழுத் தோல்வியடைந்த குழுவினர். நமது பொருளாதார அற்புதத்தின் பிரகாச ஒளியை மங்கச் செய்வதற்குக் கங்கணம் பூண்டவர்கள். ஆகவே பாகிஸ்தானியர் நம்மை வெறுக்கிறார்கள்’ என்று இந்தியாவில் பலர் வாதிட்டார்கள். உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அழிப்பதற்காகவும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பிற தொழில்களிலும் இந்தியாவின் வெளிஒப்பந்தப் பணியாளர்களைப் பெறுவதைக் குறைப்பதற்காகவும், அயல்நாட்டுச் சுற்றுப் பயணிகள் வராமல் தடுப்பதற்காகவும் செய்யப்பட்ட சதி என்று அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நோக்கப்பட்டன.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நாகரிகத்திலும் இந்தியா உலகமயமாக்கல் போட்டியில் வெற்றி பெற்றுவருவதாக நோக்கப்படுகிறது. மும்பைத் தாக்குதல்களுக்குச் சற்றுப் பின்னர் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் எழுதிய நன்கறியப்பட்ட அயல்நாட்டுக் கொள்கைத் திறனாளரான ராபர்ட் கப்லான் எழுதினார்:

உலகமயமாக்கல், இந்தியர்களைத் தங்கள் இந்துமதத்தின் உயிர்த்துடிப்பான, சுதந்திரமான ஜனநாயகத்தில் வேர்களைத் தேடுமாறு செய்துள்ளது. ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள முஸ்லிம்கள் உலக இஸ்லாமியச் சமுதாயத்தில் வேர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்… தாடிகளுக்குள், வட்டக் குல்லாய்கள், புர்க்காக்களுக்குள் சில சமயம்; சில சமயங்களில் பின்வாங்குகிறார்கள். பிற நிகழ்வுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் சேரிகளுக்குள் (ghetto) ஒதுங்குகிறார்கள்.

1. இந்தியாவிலும் இதுபோன்றதொரு உணர்வு எதிரொலிக்கப்பட்டது. தமது வலுவான இந்துத்துவ நோக்குகளுக்குப் பெயர் பெற்ற விமர்சகரான எம். வி. காமத், ‘தி ஆர்கனைசரில்’ எழுதினார்:

அழிக்க முடியாத இந்தியா, மகிழ்ச்சியான புன்முறுவலையும் மன்னிக்கும் முகபாவத்தையும் சுமந்தவாறு, நிலவுக்கு ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், அதன் ‘நோய்பிடித்த’ அண்டை வீட்டுக்காரனும், இந்திய முஸ்லிம்கள் பலரும் வட்டக் குல்லாய்கள் அணிந்தும், பெண்களை புர்க்கா அணியுமாறு கட்டாயப்படுத்தியும், மையநீரோட்டத்தில் மற்றபடி கலந்துகொள்வதை மறுத்தும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள்.

2. இங்கு ஏதோ ஒரு விசித்திரம் நடந்துகொண்டிருக்கிறது. மெய்யாகவே தங்கள் மரபான உடைக்குள்ளும் மதக் குறியீடுகளுக்குள்ளும் பின்னடையும் சில முஸ்லிம்களின் மிகத் தீவிரமான பழமைவாதம், முழு ‘உலக இஸ்லாமியச் சமுதாயத்திற்கும்’ அடையாளமாக முன்நிறுத்தப்படுகிறது. மாறாக, இந்தியாவின் சாதனைகள் —‘எல்லா’ இந்தியர்களுக்குமானவை; இந்தியாவின் ‘எல்லா’ மதங்களுக்கும் சமயக் கோட்பாடுகளுக்கும் சொந்தமானவை—இந்துமதத்தின் புகழுக்காகவே முன்நிறுத்தப்படுகின்றன. தனது இந்து நாகரிகத்துடன் இந்தியா, உலகமயமாக்கலின் பிரகாசமான, முன்நோக்கும் முகமாகக் காட்டப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான், உண்மையில் இஸ்லாம், அதன் இருண்ட, பேய்த்தனமான, பின்நோக்கும் கீழ்ப்பக்கமாகக் காட்டப்படுகிறது. உலகம் இரண்டாகப் பகுக்கப்படுகிறது — உலகப் பொருளாதாரத்தில் விளையாடி வெற்றிபெறுவதற்குத் தேவையான சரியான வகை நாகரிக மூலவளங்களைப் பெற்ற வெற்றியாளர்கள்; மற்றவர்கள், முழு இழப்பாளர்களாக இல்லாவிட்டாலும் பின்தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.

இந்தப் புத்தகம் எதைப் பற்றியது?

இந்தப் புத்தகம் ‘நாம் X அவர்கள்’ கதையாடலுக்குச் சவால் விடுகிறது. இந்தியா, அரசியல்மயமாக்கப்பட்ட இந்துப் பெரும்பான்மைவாதத்தில் வளரும் உணர்வின் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மதத்தன்மையிலிருந்து விடுபட்டதல்ல என்பதைக் காட்ட முனைகிறது.

எங்கு நோக்கினாலும், அரசியல்மயமாக்கப்பட்ட மதத் தன்மைதான் இன்று காணப்படுகிறது. உலகமயமாக்கல் முழு உலகையும் மேலும் மதத்தன்மை கொண்டதாக்கியிருக்கிறது. எல்லா மதங்களுமே மேலும் அரசியலாக்கப்பட்டுள்ளன. பொருளாதார நிலையில் அவை நெருக்கமாக ஒன்றிழுக்கப்படும்போது, உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் மதம் பற்றியும், நாகரிகப் பாரம்பரியம் பற்றியும் மேலும் சுய உணர்வு பெறுகிறார்கள். உலகமயமாக்கல், கடவுளர்க்கு நல்லதாக உள்ளது என்று கூறலாம். ஆனால் வருத்தமான விஷயம், கடவுளர்க்குப் பதிலாகக் கடவுளரின் போர்வீரர்களுக்கும் தங்கள் மதத்தின் பெயரால் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டுபவர்களுக்கும் அது நல்லதாக இருக்கிறது. உலகத்தின் இந்தப் பொதுவான போக்கிற்கு இந்தியா விதி விலக்கல்ல.

உலகமயமாகும்போதே இந்தியாவில் மாறிக்கொண்டிருக்கும் மத (நிலக்) காட்சியை ஆராய முனைகிறது இந்தப் புத்தகம். இந்துமதத்தின் அன்றாட வெளிப்பாடுகளின் போக்குகளும் இழைநயமும் எவ்விதம் மாறுகின்றன என்பதை மட்டும் இது வருணிக்கவில்லை, உலகப் பொருளாதாரத்திலும், உலக விஷயங்களிலும் முக்கியமான பங்காற்றும் ஒன்றாக எழுகின்ற இந்தியா அனுபவிக்கக் கூடிய பெரிய அளவிலான அரசியல், பொருளதார, நிறுவன இடப் பெயர்ச்சிகளுடன் அந்த மாறும் போக்குகளை இணைத்தும் காட்டுகிறது. எவ்விதம் நவீன இந்துக்கள் தங்கள் கடவுளர்களை தைரியமிக்க புதிய உலகத்திற்குக்கொண்டு செல்கிறார்கள், இந்து நிறுவனங்கள் நவதாராளமயக் கொள்கையும் (நியோ லிபரலிசம்)* உலகமயமாக்கலும் திறந்துவிட்ட புதிய வாய்ப்புகளை எவ்விதம் பயன்படுத்திக்கொள்கின்றன என்பவற்றை விளக்குவது இந்தப் புத்தகத்தின் ஒட்டுமொத்த இலட்சியம் ஆகும்.

இந்தப் புத்தகம், தனது பரந்த தூரிகைத் தீட்டுதல்களில் வரைந்து காட்டும் படம் இதுதான்:

  • தனது பொருளாதாரத்தில் இந்தியா தாராளமயமாகியும் உலகமயமாகியும் வரும்போது, இந்த நாடு ஒரு பிரபலவகை இந்துமதத்தின் உயரும் அலையை அனுபவிக்கின்றது. இது தொடாத சமூகப் பகுதியோ, பொதுநிறுவனமோ இல்லை. வளரத் தொடங்குகின்ற இந்து நடுத்தர வகுப்பினரிடையே பிரபலமான மதத்தன்மையின் எழுச்சி காணப்படுகிறது. புனித யாத்திரைகளின் அதிகரிப்பு, புதிய அதிக ஆடம்பரமான சடங்குகளின் கண்டுபிடிப்புகள் ஆகியவை இதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
  • இந்த மதத்தன்மை, நேரு காலத்தில் மிகவும் மதச்சார்பற்றிருந்த பொதுநிறுவனங்களை இடப்பெயர்ச்சி செய்கின்ற, புதிதாக வளர்ந்துவரும் அரசு-கோயில்-பெருவணிகக் குழுமக் கூட்டிணைவால் மதத்தன்மை வளர்க்கப்படுகிறது. வேறு சொற்களில் கூறினால், ஒரு நவதாராளமயச் சந்தைப் பொருளாதாரத்தை உற்சாகப்படுத்துவதற்கெனத் தன் இடத்தில் இருத்தப்பட்ட ஓர் ஒழுங்குபடுத்தப்படா ஆட்சி, இந்தியாவின் கடவுள் சந்தையில் மதச்சேவைகளுக்கான தேவைகளையும் அளிப்புகளையும் (demand & supply) உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • புதிய அரசியல் பொருளாதாரத்தால் உதவிபெறும் ஒரு புதிய இந்துமதத்தன்மை, பொதுநிலையிலும் தனிப்பட்ட நிலையிலும் அன்றாட வாழ்க்கைக்குள் இன்னும் ஆழமாக உட்பதிக்கப்படுகிறது. அரசின் வழக்கமான நடைமுறைகளிலும் தேர்தல் அரசியலிலும் இந்துச் சடங்குகளையும் குறியீடுகளையும் பயன்படுத்துவது மிகவும் பரவலாகிவிட்ட நிலையில், அரசியல் சட்டப்படி அதிகாரபூர்வ மதம் எதுவும் அற்றதாக இருக்க வேண்டிய ‘மதச்சார்பற்ற’ இந்திய அரசின் மெய்யான மதமாக இந்துமதம் ஆகிவிட்டது.
  • உலகப் பொருளாதாரத்தில் இந்தியா வெளிப்படத் தோன்றும் நிலையில், தேசியப் பெருமை, பெரும் வல்லரசாக இந்தியா உருவாகும் கனவு ஆகிய உணர்ச்சிகளுடன் இந்து மதத் தன்மை உருக்கி இணைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வெற்றி, இந்து மதிப்புகளின் மேம்பாட்டால் நிகழ்ந்ததாகக் கற்பிக்கப்படுகிறது. தன் பழைய இந்து நாகரிகத்தால்தான் மிகப்பெரிய வல்லரசு நிலைக்குத் தகுதியுள்ளதாக இந்தியா ஆகிறது என்று பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் பழமையான மதப் பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் கஷ்டப்பட்டுப் பெற்ற இந்தியாவின் சாதனைகள் யாவும் பெரும்பான்மைச் சமூகத்தின் மதத்திற்குள்ளாக உறிஞ்சப்படுகின்றன.
  • அரசியல் இந்துமதத்தின் இந்தப் புதிய கலாச்சாரம், சம அளவுகளில் வெற்றியுணர்வும் சகிப்பின்மையும் கொண்டது: உலகம் முழுவதும் இந்து நாகரிகத்தின் மிக உயர்ந்த சகிப்புத் தன்மையையும் அகிம்சையையும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிற அதே நேரத்தில், அது உள்நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராகச் சகிப்பின்மையைத்தான் —இன்னும் சொன்னால், வன்முறையைத்தான்— சகித்துக்கொள்கிறது.

இதுதான், சுருக்கமாக இந்தப் புத்தகம் சொல்லப்போகும் விஷயம்.

வாசகர்களுக்கு யதார்த்தத்திற்கு மாறான எதிர்பார்ப்புகள் ஏற்படலாகாது என்று உடனே இரண்டு எச்சரிக்கைகளைச் சொல்லியாக வேண்டும். நாட்டின் பெரும்பான்மை மதமான வெகுசன இந்துமதத்தின் மாறும் போக்குகள்மீது இந்தப் புத்தகம் முழுமையாகக் கவனத்தைக் குவிக்கும். இந்தியாவின் சிறுபான்மை மதங்களில் நிகழும் மாற்றங்கள் பற்றி எங்கு, எப்போது தேவையோ அப்போது சொல்லப்பெறும். ஆனால் அவற்றில் விரிவான ஆய்வு நடத்தப்பெறாது.

மனத்தில் வைக்கவேண்டிய இரண்டாவது விஷயம், இந்தப் புத்தகம் இந்துமதத்தைப் பற்றியதே அன்றி, இந்துத்துவம் அல்லது இந்து தேசியவாதத்திற்காக அமைப்புற்ற இயக்கங்கள் பற்றியது அல்ல. இது வருணிக்கின்ற வெகுசன பொது மதத் தன்மையின் போக்குகள் அரசியல் வட்டத்தின் மதச்சார்பற்ற-மதம்சார்ந்த, வலது-இடது பிளவுகளுக்கு ஊடாக வெட்டிச் செல்கின்றன. சங்கப் பரிவாரம் மேலும் வெளிப்படையாகவும் மிக அடிக்கடியும் மத, தேர்தல் நோக்கங்களுக்காக பெரும்பான்மைச் சமுதாயத்தின் மதக்குறியீடுகள் வாயிலாக வெளிப்படையாக இந்தியாவைப் படிமப்படுத்துகிற பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அவை சங்கப் பரிவாரத்திற்கு மட்மே உரிய தனித்தகைமை அல்ல.

இவை யாவற்றிற்கும் பிறகு இந்தப் புத்தகம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறது: காவிநிறம் பூசிய வல்லரசுக் கனவுகள் காணும் இந்த இந்தியா, இந்து அல்லாத சிறுபான்மையினருக்கு எந்த இடத்தை விட்டுவைத்திருக்கிறது? நாடு தன்னை ‘இந்தியா@சூப்பர்பவர்.காம்’ என்று காணத் தொடங்கும்போது, ‘இதே நாட்டைத் தங்கள் வீடெனவும் கருதுகின்ற’ முஸ்லிம்கள், கிறித்துவர்கள், நாத்திகர்கள், பிற இந்து அல்லாதவர்களுக்கு என்ன நிகழப் போகிறது? மதச்சார்பற்ற கலாச்சாரத்தையும் நிர்வாக முறையையும் வளர்க்காமல் நாடு வெறும் மதச்சார்பு என்ற வாக்குறுதியை மட்டுமே வைத்து எவ்விதம் நடத்தப் போகிறது?

விசாரணைக்கான முறை: தகவல் மூலங்களும் விளக்க முறைகளும்

இந்த நூல் ஒரு குறித்த ஆய்வுத்திட்டத்தின் கல்வித்துறை அறிக்கை அல்ல. அதேசமயம் இது சமய விவாதத்துக்கான நூலோ, கருத்தியல் விவாத நூலோ அல்ல. பதிலாக, இந்தப் புத்தகம் அரசியல் பகுப்பாய்வையும் தத்துவச் சிந்தனையையும் பொதுக் களத்தில் கிடைக்கக்கூடிய மிகப் பலவான மூலங்களிலிருந்து மிகவும் உழைத்துச் சேகரித்த மெய்யான தகவல்களுடன் இணைக்கிறது. அடித்தளத்திலிருந்து தொடங்கி அன்றாட இந்து மதத்தன்மை பற்றிய, கிடைப்பவற்றில் மிகச் சிறந்த மெய்ம்மைகளையும் புள்ளிவிவரங்களையும் ஆதரவாகக்கொண்டு, உலக மயமாக்கலையும் மதத்தின் மறுஎழுச்சியையும் பற்றிய மிகக் கூர்மையான சமூகக் கோட்பாடுகளை வாசகருக்கு அளிப்பதே இதன் நோக்கம். ஓர் உயர்ந்த உச்சாணியிலிருக்கும் கல்விசார் சமூக அறிவியல்களுக்கும் குடும்பம், தெரு, உணவு விடுதி போன்று எங்கெல்லாம் கல்வித்துறைசாராத நுண்புலமிக்க வாசகர்கள் வாழ்ந்து, பணிசெய்து, படிக்கிறார்களோ அவர்களுக்கும் இடையிலுள்ள சுவர்களை உடைக்கும் முயற்சி இது. சுருக்கமாகச் சொன்னால், வாசகருக்கு ஒளியூட்டவும் அவரைச் சிந்திக்கவைக்கவும் உதவுகின்ற கண்டிப்பான நேர்மையான ஆய்வுப் படைப்பு இது.

எந்த ஒரு சமகாலச் சமூக வரலாற்று நூலையும் போல, இந்தப் புத்தகமும் பல வேறான தகவல் மூலங்களிலிருந்து கிடைத்த புள்ளிகளை இணைக்க முயலுகிறது. வெகுசன ஊடகங்கள், கருத்துக்கணிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசாங்க அறிக்கைகள், சிந்தனைக்கூடங்களின் ஆய்வறிக்கைகள், கோயில்கள்/ ஆசிரமங்களின் வலைத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த தகவல்களைப் பயன்படுத்துகிறது. இந்தத் தகவல்கள் காட்டுவன:

  • புதிதாக வளம்பெற்ற நடுத்தர வகுப்பினர், அதிகத் தத்துவமான, நவ வேதாந்த வடிவ மதத்தன்மையை விட்டுவிலகி, அதிகமான சடங்கு, மூடநம்பிக்கை சார்ந்த கோயில்கள், புனித யாத்திரைகள், பிரபலமான புனிதர்கள், சாமியார்கள், பெண் சாமியார்களை மையமாகக்கொண்ட வெகுசன மத வடிவத்தைத் தழுவிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மதத்தன்மை எழுவதற்கான அறிகுறிகள் நம்மைச் சுற்றி எங்கும் உள்ளன: சிறுகோயில்களும் பிரம்மாண்டமான கோயில்களும் கட்டுவதில் காணப்படும் பெருக்கம்; அவற்றில் சில நடுத்தர வகுப்பினரின் ருசிக்குத் தீனிபோடக்கூடிய கடவுளர்களையும் தேவியர்களையும் கொண்டவை; பிற புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘மிகவும் பழைய’ சடங்குகளைச் செய்கின்றன. புனித யாத்திரைகளில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் குருமார்கள், சாமியார்களின் கும்பல்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளன.இந்த மதத்தன்மை மேலும் மேலும் வெளிப்படையாகவும் அரசியலாகவும் மாறிவருகிறது. எளிய வீட்டு விஷயங்களாக இருந்த ஹோமங்கள் (அல்லது யாகங்கள்), ஜாக்ரண்கள், கதாக்கள் ஆகியவை மேலும் மேலும் பகட்டாக, செலவு பிடிக்கின்றவையாக, வெளிப்படையாக மாறுகின்றன. மேலும், யாகம், யாத்திரை போன்ற மதச் சடங்குகள், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது, எய்ட்ஸைத் தடுப்பது போன்ற நல்ல காரணங்களிலிருந்து, பெரும்பான்மை இந்து உணர்வைத் திரட்ட உதவுகின்ற கெடுநோக்குள்ள ‘ஷோபா’ யாத்திரைகள், சமாஜ மகோற்சவங்கள் (சமுதாயத் திருவிழாக்கள்) வரை எல்லா விதமான அரசியல் காரணங்களுக்காகவும் மக்களைச் சேர்க்கும் கருவிகளாகின்றன.
  • இந்த மதத்தன்மையின் எழுச்சிக்குப் பெரும்பாலும் முக்கூட்டாக இணைந்து செயல்படும் அரசு, கோயில்கள், வணிகப் பகுதியினர் ஆகியவற்றின் நிறுவன ஆதரவு இருக்கிறது.இந்தக் கடைசிப் பிரச்சினை இந்து மதத்தன்மையின் எழுச்சியை விளக்கவேண்டிய அவசியத்தை நமக்குத் தருகிறது. இந்தியர்கள் உள்ளார்ந்து, அடுத்த உலகைப் பற்றிச் சிந்திப்பவர்களாக உள்ளனர்; இந்துமதம் என்பது வாழ்க்கையின் பிற பகுதிகளிலிருந்து ஆன்மிக நோக்கத்தைப் பிரிக்க முடியாத ஒரு முழுமையான வாழ்க்கை வழி என்று சிலர் சொல்கின்றனர்.3 நவீனத்தன்மையால் மீதி உலகம் மதத்தன்மையில் குறைவுபடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தியா எப்போதுமே மதத்தன்மையோடுதான் இருக்கும்.

‘உலகத்தில் நாம் இப்படித்தான் இருப்போம்’ என்பது போன்ற கோட்பாடுகளை விட்டு இந்தப் புத்தகம் விலகி நிற்கும். மாறாக, மதத்தன்மை என்பது வேறெந்தக் கலாச்சார நிகழ்வையும் போன்றது என்று கருதுகிறது. அது மாறும் காலத்தோடு சேர்ந்து கூடுகிறது, குறைகிறது, மாறுகிறது. நேரு கால சோஷலிச அரசு தனியார் துறைக்கு அளித்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருக்கும் அரசு-கோயில்-பெருவணிகக் குழுமக் கூட்டிணைவால் இந்துமத எழுச்சியை விளக்கமுடியும் என்று இந்தப் புத்தகம் வாதிடுகிறது.

ஓர் அர்த்தத்தில், அரசு-கோயில்-தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு, பொதுக்களத்தில் இந்துமதச் சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார்களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.

ஆனால் அரசு, மதஅமைப்பு, வணிக/பெருவணிகக் குழும மேட்டுக்குடிமக்கள் ஆகியோரை முன்பைவிட மேலும் நெருக்கமான உறவுக்குள் இப்போதைய நவதாராளமயப் பொருளாதார ஆட்சி கொண்டுவருகிறதென்று இந்தப் புத்தகம் வாதிடும். இந்திய அரசு தனது அரசுத்துறைக் கடமைகளிலிருந்து பின்வாங்கிச் செல்லும் சமயத்தில், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், சுற்றுலா வசதிகள், மேலும் பிற சமூக சேவைகளை இயக்க அது தனியார்துறையுடனும் இந்து நிறுவன அமைப்புடனும் கூட்டுச்சேர்க்கையை நாடுகிறது. இதனால் பொதுச் சரக்குகளை உற்பத்தி செய்ய என்று ஒதுக்கப்பட்ட பொது நிதிகள் மேலும் மேலும் இந்துப் பாரம்பரியச் சார்புகொண்ட தனியார் அறக்கொடை நிறுவனங்களுக்குத் திருப்பப்படுகின்றன. பதிலுக்கு, இது இந்துமதத்தை ‘நவீனப்படுத்த’ உதவுகிறது: மதச்சடங்குகளில் நடுத்தர வகுப்பினரின் தீராத பசியைத் தீர்க்கச் சேவைபுரிகிற, புதிதாக உருவாக்கப்பட்ட, ஆங்கிலம் பேசுகிற, கணினிப் பயன்பாடுள்ள பல்வேறு சாமியார்கள், ஜோதிடர்கள், வாஸ்து சாஸ்திரிகள், யோகா குருநாதர்கள் போன்றவர்கள் எல்லாம் இந்த அரசு, பெருவணிகக் குழுமத் துறையினர், கோயில் ஆகியவற்றின் சேர்க்கையில் உருவான விளைபொருள்களே!

புத்தகத்தின் அமைப்பு

இந்தப் புத்தகம், உலகமயமாக்கம், மதச்சார்பின்மை என்னும் இரண்டு பெரிய கருத்துகளில் தொடங்கி நிறைவுறுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் வைக்கப்பட்ட மூன்று இயல்களின் உள்ளடக்கங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:

இதன் தொடக்க இயலுக்கு ‘இந்தியாவும் உலகப் பொருளாதாரமும்: மிகச் சுருக்கமான ஓர் அறிமுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, ‘இந்தியாவைப் பாதிக்கிற வகையில் உலகமயமாக்கம்’ என்ற நிகழ்வுக்கு ஒரு விரிவான முன்னுரை அளிக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி, பிறகு அது சந்தைச் சீர்திருத்தங்களுக்கும் உலகச் சந்தைகளோடு இணைப்புறுதல்களுக்கும் திரும்பிய வழியைச் சொல்லுகிறது. புதிய பொருளாதாரத்தின்கீழ் மேலும் மோசமாகி வருகிற தீவிர சமூக-பொருளாதாரச் சமமின்மைகள் மீது இது சிறப்புக் கவனம் செலுத்துகிறது. கல்விச் சந்தைக்குள் மத நிறுவனங்கள் நுழையப் புதிய வாய்ப்புகளை உயர் கல்வியைத் தனியார்மயப்படுத்தியமை திறந்துவிட்டுள்ளது. அது பற்றிய ஓரளவு போதுமான விவரங்களையும் தருகிறது. மீதிப் புத்தகத்திற்குக் களம் அமைப்பதாக இந்த இயல் அமைந்துள்ளது.

இயல் இரண்டுக்குத் தலைப்பு, ‘கடவுளர்களின் நெரிசல் நேரம்: உலகமயமாக்கமும் நடுத்தர வகுப்பினரின் மதத்தன்மையும்.’ சமகால இந்தியாவில் கடவுளர்களின் நெரிசல் நேரத்தை இந்த இயல் ஆராய்கிறது. ஊடக அறிக்கைகள், கருத்துக்கணிப்புகள், கல்விசார் ஆய்வுகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, இந்து நடுத்தர வகுப்பினர் எவ்விதம் மேலும் மதத்தன்மை பெற்றவர்கள் ஆகிறார்கள், முன்பு எப்போதையும்விடப் பொதுக்களம் எப்படி இந்துமயமாகிறது என்ற வழிகளை இந்த இயல் விளக்குகிறது.

இயல் மூன்றின் தலைப்பு ‘அரசு-கோயில்-பெருவணிகக் குழுமக் கூட்டிணைவும் இந்து தேசியவாதத்தின் இழிவும்’ என்பது. இந்த இயல் எழுச்சியுறும் இந்துமதத்தன்மை, இந்து தேசியவாதம் ஆகியவற்றின் நிறுவன அடிப்படைகளை நோக்குகிறது. அரசு, கோயில்கள், தனியார்துறை ஆகியவற்றிற்கிடையிலான இணைவை மூன்று பரந்த தலைப்புகளில் நோக்குகிறது: இந்து அர்ச்சகர்களின் (பூசாரிகளின்) பயிற்சி, மத அறக்கட்டளைகளால் ‘நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்’ உருவாக்கப்படுதல், மதச் சுற்றுலா. மேலும் இந்த இயல், சாதாரண அல்லது அன்றாட இந்து தேசியவாதம் என்ற நிகழ்வையும் நோக்குகிறது. தேசத்தை வழிபடுவதும், இந்துக் கடவுளர்களையும் தேவியர்களையும் வழிபடுவதும் எவ்விதம் வேறுபாடின்றிப் போகிறது என்பதை விளக்குகிறது.

இயல் நான்கின் தலைப்பு ‘இந்தியா@சூப்பர்பவர்.காம்: நாம் எப்படி நம்மை நோக்குகிறோம்’ என்பதாகும். இது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வெற்றி எவ்விதம் மாபெரும் இந்துமனம் (சிந்தனை) என்பதற்கு உரியதாக நோக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. இந்த வெற்றி மனநிலையின் இருண்ட பகுதியை —அதாவது இந்து அல்லாத சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், குறைந்த அளவில் கிறித்துவர்கள் ஆகியோர் மீதான வெறுப்பாக இது எவ்விதம் வெளிப்படுகிறது என்பதை— காட்டுகிறது. ஒற்றைக் கடவுள் மதங்களின் கடவுளை வெளிப்படையாகப் பழிப்பதும் இந்து வெற்றி மனப்பாங்கு நூல்களை வெளியிடுவதும் புதுதில்லியிலிருந்து இயங்குவதுமான ‘வாய்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பதிப்பகத்தின் பங்கையும் இது ஆராய்கிறது.

இயல் ஐந்தின் தலைப்பு, ‘மதச்சார்பின்மை: ஒரு மறுசிந்தனை (இந்தியாவை மனத்தில்கொண்டு)’ என்பதாகும். மதச்சார்பின்மை, மதச்சார்புநிலை ஆகிய சமூகக் கோட்பாடுகளின் கண்ணாடி வழியாக இந்தியாவின் மதச்சார்பின்மை அனுபவத்தைக் காண்கிறது. கடவுள் சந்தை ஏன் இந்தியாவுக்கே தனித்தன்மை வாய்ந்த ஒரு மதச்சார்பின்மைப் பாணி மூலமாகவும், நவதாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஊடாகவும் தொடர்ச்சியாகக் கொழிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

ஒரு தனிப்பட்ட குறிப்பு

இந்தப் புத்தகம் கடந்த சில ஆண்டுகளாக நான் மேற்கொண்ட வேறொரு மிகப் பெரிய முயற்சியினூடாக உருவான திட்டமிடப்படாத துணைவிளைவு ஆகும். இது எதிர்பாராமல் திடீரென எழுச்சியுற்ற காரணத்தினாலும், திரண்டுவந்த நேரத்திலேயே அதற்கு அதிகப் பொருள் பொதிந்ததாக இருந்ததாலும், இந்தப் புத்தகம் என் மனத்துக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

2005இல் ஜான் டெம்பிள்டன் அறக்கொடையினரிடமிருந்து சமகால இந்தியாவில் நவீன அறிவியலுக்கும் இந்துமதத்திற்குமான தொடர்பு பற்றி ஒரு புத்தக அளவிலான ஆய்வை மேற்கொள்ள எனக்கு உதவித்தொகை கிடைத்தது. குறிப்பாக சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்ட தந்தையருள் ஜவஹர்லால் நேரு, பீம்ராவ் அம்பேத்கர், இன்னும் பிற மதச்சார்பற்ற மனிதமையவாதிகளுக்குப் பிடித்தமான சிந்தனையாகிய அறிவியல் மனப்பாங்கின் பணியைப் பற்றி ஆராய ஆர்வமாக இருந்தேன். மெய்யாகவே, இந்தியாவின் அரசியலமைப்பில் குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வது வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவீன அறிவியலின் கலாச்சாரத் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முற்படும் எவரையும்போல, நானும் ஒரு முரண்சூழலை எதிர்கொள்ளவேண்டிய நிலை நேரிட்டது. எங்குப் பார்த்தாலும் அறிவியல் இருக்கிறது, ஆனால் எங்குமே அறிவியலின் விமரிசன மனப்பான்மை இல்லை. நடைமுறையில், இந்தியா ‘அறிவியலில்’ மூழ்கிக்கொண்டிருக்கிறது: ஆசிரமங்களிலும் தொலைக்காட்சிகளிலும் சாமியார்கள், அரசாங்க உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள்கூட, ஜோசியம் முதல் வாஸ்துவரை எல்லாவிதமான மூடநம்பிக்கைகளையும் அறிவியல் என்று கருதும் கலையில் கூர்மை பெற்றுள்ளனர்.

படித்த, ஆங்கிலம் பேசுகின்ற, நகர்ப்புறப் பணக்காரரான வகுப்பினர்தான் இந்துப் போலி அறிவியலின் மிகப்பெரிய நுகர்வோராக இருக்கின்றனர். இதனால் இந்திய மக்கள் தொகையில் வளர்ந்துவரும் இந்த வகுப்பினரின் கலாச்சார, மத உலகநோக்கு பற்றி புரிந்துகொள்ள இயல்பாகவே எனக்கு ஆர்வம் எழுந்தது. இந்திய நடுத்தர வகுப்பினரின் மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ள நான் செய்த முயற்சி, ‘கடவுளரின் நெரிசல் நேரம்’ என்று நான் குறிப்பிடும் ஓர் இயலில் வந்து முடிந்தது. அந்த இயலே இந்த நூலின் மையக்கருவாக ஆயிற்று.

நடுத்தர வகுப்பினரின் மதத்தன்மை பற்றி நான் கவனத்தைக் குவிக்கத் தொடங்கிய போதே, இந்தியப் பொருளாதாரத்தில் வளரும் உலகமயமாக்கம் பற்றி நான் நோக்க வேண்டியதும் ஆயிற்று. இந்தியா 1990களின் தொடக்கத்தில் தழுவிக்கொண்ட சந்தைச் சீர்திருத்தங்களும் வணிக தாராளமயமாக்கமும் கொண்டு வந்த ஆசைகளிலும் கனவுகளிலும் ஏற்பட்ட பெரும் தாவலைப் பற்றி முதலில் புரிந்துகொள்ளாமல், இன்றிருக்கும் நடுத்தர வகுப்பினரின் மனநிலையை அறிவது சாத்தியமில்லை.

மாறிவரும் அரசியல் பொருளாதாரப் பின்னணியில் மதத் தன்மையை நான் வைக்கத் தொடங்கியபோதே ஒவ்வொரு சான்றும் அடுத்த கண்டறிதலுக்குக் கொண்டுசென்றது, விரைவில் ஒரு முழுப்படம் உருவாகத் தொடங்கியது. தனியார்துறையிலும், பொதுத்துறையிலும் மதச்சேவைகளின் தேவை & அளிப்பு (demand & supply) ஆகிய இரண்டையும் தாராளமயமாக்கம் எவ்வாறு அதிகரித்து உள்ளது என்பதை நான் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அதை அறிவதன் முன்னரே, தன்னளவில் நிற்கக்கூடிய கருத்துசார் முடிவொன்றை நான் உருவாக்கியிருந்தேன்.

எனது அசல் ஆய்வுத்திட்டத்திலிருந்து விடுப்புப் பெற்றேன். இந்தப் புத்தகத்தின் ஆய்வும் எழுத்தும் டெம்பிள்டன் நிறுவனத்தின் எவ்வித நிதி உதவியுமின்றி முற்றிலும் எனக்குச் சொந்தமான நேரத்தில் செய்யப்பட்டது. இந்தப் புத்தகத்தின் இருப்புக்கும், இது தெரிவிக்கும் சிந்தனைகளுக்கும் டெம்பிள்டன் அறக்கொடை நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இந்தப் புத்தகம் அச்சானதுடன், நான் எங்குத் தொடங்கினேனோ அங்குத் திரும்புகிறேன். எனது அசலான ஆய்வுத் திட்டம் முழுமையடையும் நிலையை நெருங்கியுள்ளது. அது விரைவில், ‘விதியுடன் சந்திப்பு: இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கும் மதச்சார்பின்மையும்’ என்ற தலைப்பில் வெளிவரும்.

(தமிழில்: க. பூரணச்சந்திரன்)

நூல்: கடவுள் சந்தை – உலகமயமாக்கல் இந்தியாவை எவ்வாறு மேலும் இந்துவாக ஆக்குகிறது

வெளியீடு: அடையாளம்

Related posts

Leave a Comment