நூல் அறிமுகம் 

முஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா?

இந்த்துத்துவவாதிகளின் கட்டுக்கதைகளுக்கு ஆதாரங்களுடன் ஒரு மறுப்பு!

தன்னுடைய ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சக்திகளை நசுக்குவதையும் நிறுவனமயமாக்குவதையும் காலம், இடம், சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது பார்ப்பன இந்து மதம். பவுத்தம் முதலான பார்ப்பன எதிர்ப்புக் கருத்தியல்களையும், உழைக்கும் மக்களின் இறை நம்பிக்கைகளையும் பார்ப்பனியம் தின்று செரித்ததென்பது நாமறிந்த வரலாறு.

கல்வியறிவும் தகவல் தொடர்பும் அரசியல் விழிப்புணர்வும் வளர்ச்சியடையாத காலத்தில், இத்தகைய மோசடியைப் பார்ப்பனியம் அரங்கேற்றியதில் வியப்பில்லை. ஆனால், சமகால வரலாற்றையே திரித்து, பார்ப்பன இந்து மதத்தையும் சாதியத்தையும் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய முன்னோடிகளை நம் கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பை நிறுவனமயமாக்கும் இந்தச் சதியில் அய்யா வைகுந்தர், நாராயண குரு முதல் புரட்சியாளர் பகத் சிங் வரை அனைவரது மரபுக்கும் உரிமை பாராட்டும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், அம்பேத்கர் மீதும் கைவைத்துள்ளது.

‘நான் இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று பிரகடனம் செய்து புத்த மதத்திற்கு மாறியவர் அம்பேத்கர். பார்ப்பன இந்து மதத்தை எதிர்த்தும், அதைப் புத்துருவாக்கம் செய்ய முனைந்த காந்தியை எதிர்த்தும் அவர் நடத்திய போராட்டங்கள் மறக்க முடியாத வரலாற்று ஆவணங்களாக நம் கண் முன்னே இருக்கின்றன. இருப்பினும், இந்த உண்மைகளை அச்சமின்றி இருட்டடிப்புச் செய்துவிட்டு, “இந்த மண்ணில் தோன்றிய மதம் என்பதால்தான் அம்பேத்கர் புத்த மதத்தைத் தெரிவு செய்தார்” என்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் புத்த மதத்தையும் அம்பேத்கரையும் இந்து சட்டகத்துக்குள் திணிக்கிறார்கள், பார்ப்பன மதவெறியர்கள்.

தீண்டாமை வெறிபிடித்த பார்ப்பன சங்கராச்சாரியும், அம்பேத்கரைத் தலைவர் என்று கொண்டாடுவதும் தலித் சேரிகளுக்கு விஜயம் செய்வதும் நம் கண் முன்னே நடக்கிறது. அம்பேத்கர் பிறந்த மராட்டியத்திலேயே இன்று ‘சிவசக்தி, பீம்சக்தி, இந்து சக்தி’ என்ற முழக்கத்தின் கீழ் தலித் மக்களைத் தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறது, சிவசேனா.

அம்பேத்கரை ‘அபாயமற்ற பூசையறைப் படமாக’ மாற்றுவதன் மூலம் பொய்யான மனநிறைவையும், போலியான மகிழ்ச்சியையும் தலித் மக்களுக்கு உண்டாக்கி, அதன் மூலம் அவர்களைத் தனது  காலாட்படையாக மாற்றிக்கொள்ள முயல்கிறது, பார்ப்பன பாசிசம். பார்ப்பன பாசிச சக்திகளுடன் பல்வேறு தளங்களில் கூட்டு வைத்துக் கொண்டிருக்கும் பிழைப்புவாத தலித் தலைவர்களுக்கும், அம்பேத்கரைப் படமாக்கி விற்கும் இந்தத் தந்திரம், தங்களது துரோகத்தை மறைத்துக்கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.

சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் மனதில் இஸ்லாமிய எதிர்ப்பு இந்து நஞ்சை இறக்கி, அவர்களை குஜராத் இனப்படுகொலையில் தனது கையாட்களாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொண்டதை நாம் அறிவோம். தற்போது இந்தத் தந்திரம் இந்தியா முழுமைக்கும் விரிவாக்கப்படுகிறது.

குறிப்பாக, வட இந்தியாவில் நகரங்கள்-சிறுநகரங்களில் தலித் மக்களும் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் உதிரித் தொழிலாளர்களான ஏழை முஸ்லிம் மக்களும் அக்கம்பக்கமாகவும் ஒன்றுகலந்தும் வாழ்வதால், இந்த ஒற்றுமையைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. இவர்கள் தேர்தல் அரசியலில் தனக்கெதிரான வாக்குவங்கியாக உருவாகிவிடுவார்கள் என்பதனால் மட்டுமல்ல, தலித் மக்களின் மதமாற்றத்திற்கு இந்த ஒற்றுமை வழிவகுத்துவிடும் என்ற காரணத்தினாலும், தலித் மக்களிடையே முஸ்லிம் எதிர்ப்பு இந்து வெறியைப் பரப்புவதில் தீவிரமாக முனைந்திருக்கிறது.

கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

விடுதலைப் போராட்டக் கால அரசியல் சூழலில் முஸ்லிம் லீக் பற்றி அவர் தெரிவித்த கருத்துகளையும், சமத்துவம்-ஜனநாயகம் என்ற விழுமியங்களின் அடிப்படையில் அவர் முன்வைத்த விமர்சனங்களையும் தனது இந்து பாசிசச் சட்டகத்திற்குள் இழுத்துத் திணித்துக் கொள்கிறது.

முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள். கருத்தியல் தளத்தில் இன்று இந்து மதவெறி அரசியல் பெற்றிருக்கும் செல்வாக்கிற்குக் காரணமானவை இத்தகைய பல அரை உண்மைகள்தான். பிழைப்புவாத அறிவுத் துறையினர் புகலிடம் தேடுவதும் இத்தகைய அரை உண்மைகளில்தான்.

இந்த நஞ்சு பரவத் தொடங்கு முன்னரே இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென உணர்ந்து , உடனடியாக இந்நூலை எழுதியிருக்கிறார் தோழர் ஆனந்த் தெல்தும்ப்டே. அரசியல் முக்கியத்துவம் மற்றும் அவசியம் காரணமாக இந்நூல், பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பார்ப்பன பாசிசத்தின் பித்தலாட்டங்களை ஆதாரபூர்வமாக  அம்பலப்படுத்தும் இத்தகைய கருத்தியல் ரீதியான ஆயுதங்கள், பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், அம்பேத்கர் ‘இந்து மதத்தை எதிர்த்தார்’ என்பதையும், தலித் மக்கள் இந்துக்களல்ல என்பதையும் நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து போராட வேண்டிய நிலையிலேயே நாம் ஏன் இருக்கிறோம் என்பதையும் இத்தருணத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்த ஒரு கொள்கையும் திரளான மக்களால் தம் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போதுதான் அது உயிர் வாழ்கிறது. மக்கள் திரளின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டின் மூலம்தான் அக்கொள்கையின் சாரம் பாதுகாக்கப்படுகிறது. அம்பேத்கரை ஏற்றுக் கொள்ளும் அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக அவரைத் தம் வழிகாட்டியாகக் கொள்ளும் தலித் இயக்கங்களும் இந்து மதத்தை ஒழிப்பதற்கு அம்பேதகர் முன்மொழிந்த செயல்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலோ, அவற்றை நடைமுறைப் படுத்துவதிலோ உரிய அக்கறை காட்டுவதில்லை.

அம்பேத்கரை நேசிக்கும் தலித் மக்கள், இந்துக் கடவுளர்களையும் நேசிக்கிறார்கள். சடங்கு-சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். இந்து வழிபாட்டை மறுக்க வேண்டும், இந்து அடையாளங்களைத் துறக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வழிகாட்டுதல் மக்கள் மத்தியில் தீவிரமாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். தலித் மக்களும் பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் எழுந்து நின்று, “நாங்கள் இந்துக்கள் அல்ல!” என்று ஒரே குரலில் முழங்கத் தொடங்கும்போதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் இத்தகைய புரட்டு வேலைகள் நடைமுறையில் முறியடிக்கப்படும்.

நூல்: முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்: கட்டுக்கதைகளும் உண்மை விளக்கங்களும்

ஆசிரியர்: ஆனந்த் தெல்தும்ப்டே

தமிழில்: சிங்கராயர்

வெளியீடு: புதிய ஜனநாயகம்

(நன்றி: தலித் முரசு, செப்டம்பர் 2003)

Related posts

Leave a Comment