நூல் அறிமுகம் 

சூஃபியிசம் என்றால் என்ன?

சூஃபியிசம் என்றால் என்ன?

ஆசிரியர்: மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)

பக். 176, விலை:ரூ.110

வெளியீடு:மெல்லினம், சென்னை.

தொடர்புக்கு: 31-பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை – 625 002+91 , 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை)

14305312_1224552410919781_5609752618118663897_o

மார்டின் லிங்ஸ் என்ற பெயர் ‘முஹம்மது: மூலாதாரங்களின் அடிப்படையில் அவரின் வாழ்வு’ என்றொரு அற்புதமான நூலின் வழியாக தமிழ் இஸ்லாமிய இலக்கிய வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிறது. அவரின் தெய்விக மணம் கமழும் பேனாவிலிருந்து கசிந்த மற்றுமொரு கருத்தாழமிகு ஆக்கத்தையே மெல்லினம் இங்கு உங்கள் முன் சமர்ப்பிக்கிறது.

‘சூஃபியிசம் பற்றிய மிக ஆதாரபூர்வ உரை’ என்பதான உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்நூல் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட உலக மொழிகள் பலவற்றுக்கும் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது தமிழில் உங்களுக்காக.

இஸ்லாமிய வரலாற்றுப் பரிணாமத்தில் குறிப்பிட்ட சமய-சமூக-அரசியல் காரணிகளின் சூழமைவிலேயே சூஃபியிசம் தோன்றி வளர்ச்சி கண்டது. இஸ்லாத்தின் மூலாதாரக் கோட்பாடுகளில் அது தனது வேர்களை பரப்பியிருக்கிறது. இஸ்லாமிய கிலாஃபத் மன்னராட்சியாக உருத்திரிந்து சீரழிந்தபோது, இஸ்லாத்தின் மையமான கோட்பாடுகளை தற்காக்கும் நோக்கில் வெடித்துக் கிளம்பிய இஸ்லாமியப் போராட்டங்கள் கருவிலேயே சிதைக்கப்பட்டபோது, இஸ்லாத்தை அதன் அடிப்படையான மட்டத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்ததில் சூஃபியிசத்தின் பங்களிப்பை இஸ்லாமிய வரலாறு அறிந்த எவரும் மறுக்க முடியாது.

ஆனால், இன்று அதனை இஸ்லாத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு நூதன கோட்பாடாக-நடைமுறையாக நிறுவுவதற்கு முயலும் தட்டையான வறட்டுவாதங்கள் பலரது செவிகளையும் மனங்களையும் நிறைத்திருக்கின்றன. இந்நிலையில், ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்பதை சமீபகால சூஃபி ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவரின் வார்த்தைகளில் இருந்து அறிந்துகொள்ள முனைவது முற்றிலும் நியாயமான ஒன்றாகப் படுகிறது. அதை இந்த நூல் சாத்தியமாக்குகிறது.

சூஃபிகள் எதை நம்புகின்றனர்? எதை அடைய முயலுகின்றனர்? என்ன செய்கின்றனர்? இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.

‘சூஃபியிசம் என்றால் என்ன?’ எனும் இந்நூல், சூஃபியிசம் குறித்த தெளிந்த, நம்பகமானவொரு அறிமுக நூலுக்கான தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, தனது சம்பூரணத் தன்மை மற்றும் சான்று வலிமையிலும் தனித்துவம் மிக்கதாக விளங்குகிறது. இந்நூலை வாசித்துப் புரிந்துகொள்வதற்கு சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் அவசியமில்லைதான்; எனினும், ஆன்மீக விஷயங்களில் ஓர் ஆழிய நாட்டமும் தேட்டமும் இருப்பது இங்கு முன்நிபந்தனைகளாகின்றன.

சூஃபியிசத்திற்கே உரிய குறியீட்டு மொழி உதாரணங்களை நூல் நெடுகப் பார்க்கலாம். எனவே, வாசகர் தனது அறிவு மற்றும் கற்பனையின் முழுக் கவனத்தையும் தற்காலிகமாக அதனிடம் ஒப்படைத்துவிடும்படி நூல் கேட்கிறது. வாசிப்பின் முடிவில் நிச்சயம் அது உங்களை உங்களிடம் திரும்பக் கொடுத்துவிடும்-ஆன்மிகப் புத்துணர்வு பெற்ற ஒரு ‘புதிய மனிதராக’.

மார்டின் லிங்ஸ் தனது பேசுபொருளை மிகப் பரிபூரணமாகவும் உள்ளார்ந்தும் அறிந்திருக்கிறார். தனது எழுபதாண்டு ஆன்மிக வாழ்வின் கனிச்சாற்றின் ஒரு பகுதியையே இந்நூலின் ஊடாக வாசகருக்கு பருகக் கொடுக்கிறார். பேசப்புகும் கருப்பொருளின் இதயத்திற்கே நேரடியாகச் செல்வது தான் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்தினதும் தனிப்பண்பாக எப்போதும் திகழ்கிறது. இந்நூலும் அதற்கு விதிவிலக்கில்லை.

சூஃபியிசம் என்றால் என்ன? என்பது பற்றிய தனது மிகக் கவனமான இவ்விளக்கவுரையில் நவீன எழுத்தாளர்களிடம் மிக அரிதாகவே காணப்படும் ஆழ்ந்த புரிதலை மார்டின் லிங்ஸ் வெளிப்படுத்துகிறார். அதேயளவு முக்கியத்துவத்துடன், எது சூஃபியிசம் அல்ல என்பது பற்றியும் விளக்குகிறார். மேலும், முக்கியத்துவமற்றவை என்பதாக வழமையாக அலட்சியப்படுத்தப்படும் சூஃபியிசத்தின் அம்சங்கள் பலவற்றை குறித்தும் சமரசமற்றதொரு வகையில் வலியுறுத்துகிறார்.

சூஃபியிசத்தின் அசல்தன்மை மற்றும் உலகப் பொதுமை தொடர்பான துவக்க அத்தியாயங்கள் மிக அடிப்படையான விடயங்களை தெளிவுபடுத்துவதன் மூலம், நூலின் இதயப் பகுதிக்குள் நுழைவதற்கு உங்களை ஆயத்தமாக்குகின்றன. இதை தொடர்ந்து இறைவேதம், இறைத்தூதர் மற்றும் இதயம் பற்றி அதிமுக்கிய மூன்று அத்தியாயங்கள் வருகின்றன. அடுத்து, சூஃபியிசத்தின் சித்தாந்தத்தையும் வழிமுறையையும் கையாளும் இரண்டு அத்தியாயங்கள்.

முத்தாய்ப்பாக, சூஃபியிசத்தின் பிரத்யேக தன்மை அடுத்த அத்தியாயத்தில் அழுத்தமாக உரைக்கப்படுகிறது. இறுதி அத்தியாயம், முன்சென்ற அனைத்து கோட்பாட்டு விளக்கங்களையும் வரலாற்று யதார்த்தமாக்கிய முக்கிய சூஃபிகள் சிலரை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாசகரின் மனத்தில் சூஃபியிசம் குறித்த ஒரு முழுநிறைவான சித்திரத்தைச் செதுக்குகிறது.

இந்நூலை வாசிக்கையில் இறைவன், இறைவேதம், இறைத்தூதர், சக படைப்பினங்கள் ஆகியோருடன் சூஃபிகளுக்கிருக்கும் உறவு என்ன என்பது பற்றி தெளிவு பிறக்கிறது. இந்த புரிதலின்மையின் காரணமாகவே, பெரும்பாலும் அவர்களின் குறியீட்டு மொழியை புரிந்துகொள்வதில் தடுமாற்றம் ஏற்படுகின்றது; அதன் விளைவாக அவர்கள் மீது ‘இணைவைப்பு’ முத்திரையும் குத்தப்படுகிறது. இவ்வித தப்பெண்ணங்களில் இருந்து விடுபடுவதை இந்நூல் துரிதப்படுத்துகிறது.

நூலை ஆழ்ந்து வாசிக்கையில் அதில் தெறிக்கும் சத்தியத்தின் வீரியம் வாசகரின் இதயத்திற்குள் மின்சாரத்தை பாய்ச்சுகிறது. மூலஊற்றான இறைவனின் பால் தாமும் வாரியிழுத்துச் செல்லப்பட வேண்டுமே என்றவோர் பெரும் ஏக்கம் வாசகரை ஆட்கொள்கிறது. ஆசிரியரின் ஊடுருவித் துளைக்கும் மொழி வசீகரத்திலிருந்து தப்புவதென்பதும் வாசகருக்கு இயலாதவொரு காரியமாகவே இருக்கப்போகிறது.

சாரமாகக் கூறுவதாயின், நமது ஆன்மிக வறுமையை போக்கவல்ல புதையல் இது எனலாம். இரத்தின சுருக்கமாகவும், மனதை பிரகாசமான ஒளியால் நிரப்புவதாகவும் அமைந்துள்ள இந்நூலை வாசிக்கையில் தஸவ்வுஃப் பற்றி அறிமுகமேதுமற்ற ஒருவருக்கும் கூட அதன் முன்சுவையை ருசிக்கும் அனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

Related posts

Leave a Comment