கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?

நான் ‘தி இந்து’த்துவாவைப் படித்துத் தேவை இல்லாமல் மூல வியாதியை வரவழைத்துக் கொள்ள விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

‘என்னா கொடுமை சார் இது’ எனச் சொல்லி நேற்று ஒரு நண்பர் நேற்றைய (ஜூலை 2, 2018) ‘தி இந்து’த்துவா இதழின் ‘வணிக வீதி’யில் வெளிவந்துள்ள ‘இவர்களின் நோக்கம்தான் என்ன?’ என்கிற கட்டுரையை அனுப்பி இருந்தார். எம்.ரமேஷ் என்பவர் எழுதிய கட்டுரை அது.

‘தொண்டு நிறுவனங்கள்’ அல்லது NGO-க்கள் எனப்படும் அரசு சாரா நிறுவனங்கள் பற்றிய கட்டுரை அது.

இந்தியாவில் செயல்படும் ஏராளமான NGO-க்களின் நோக்கம் ‘இந்திய வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அந்நிய சக்திகளுக்குத் துணை போவதுதான்’ எனச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கம்.

நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. அப்படியான குற்றச்சாட்டுகள் வந்துள்ளன என்றுதான் சொன்னோம்…ஹி..ஹி என அந்த ‘இந்து’த்துவா ஆசிரியக் கும்பல் வழிந்தால் அதைப் போல ஒரு அயோக்கியத் தனம் ஏதும் இருக்க இயலாது.

ஏனெனில் அக்கட்டுரை முழுவதும் சொல்லப்படுவது இதுதான். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலையம், நிலக்கரிச் சுரங்கங்கள், அணு உலை மி்ன்திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து முடக்கி, இந்திய வளர்ச்சியைத் தடுக்கச் சதி்செய்கின்றன சில அந்நிய சக்திகள். NGO-க்களின் மூலம் அதை அவை நிறைவேற்றுகின்றன. NGO-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது இதன் விளைவுதான் என இக்கட்டுரை ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லிச் செல்கிறது.

சுரங்கத் தொழில் வளர்ச்சி 2.2 சதமும், அனல் மின் உற்பத்தி 8000 மெகாவாட் அளவும் பாதிக்கப் பட்டுள்ளதாம். இவற்றுக்கு எதிராக NGO-க்களால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களின் விளைவுதான் இந்த இழப்பாம். இதனால் எற்பட்ட நிலக்கரிப் பற்றாக் குறையினால் 2013 -14 ஓராண்டில் மட்டும் ரூ 26,400 கோடி இந்தியாவுக்கு இழப்பாம்.

சுருங்கச் சொல்வதானால்,

1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.
3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.

இந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?

இந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது?

இதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார்? எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்?

சற்று யோசியுங்கள்.

மக்கள் எதிர்த்தார்கள்.

பா.ஜ.க, அர்ஜுன் சம்பத் போன்ற இந்துத்துவ அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் முதலான இயக்கங்களும் அவற்றின் அடிவருடி அதிமுக அரசும்தான் எதிர்த்த மக்களைச் சமூக விரோதிகள் என்றன.

மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். போராடுகின்றனர். இந்நிலையில் NGO-க்களின் காசில் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன என ஊளையிட உன்க்கெத்தனை திமிர்?

NGO-க்கள் மீதான எதிர்ப்பு என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. முதன் முதலில், 1980களில் NGO-க்கள் மீது விமர்சனம் வைத்தது நக்சல்பாரி இயக்கங்கள்தான். அவர்கள் சொன்ன காரணம் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் தொண்டுகள் என்பன மக்களின் துயர்களைத் தற்காலிகமாகத் தீர்த்து அவர்களின் போராட்ட குணத்தை நீர்க்கச் செய்கிறது. இதன் மூலம் புரட்சிகர எழுச்சிகள் தடுக்கப்படுகின்றன என்பதுதான்.

பின் இந்தக் கருத்தாக்கம் பெரிய விவாதங்களுக்கெல்லாம் உட்படுத்தப்பட்டு அந்த அடிப்படையில் நக்சல்பாரி இயக்கங்களுக்குள் பிளவுகளும் வந்தன, ஒரு சில நக்சல் இயக்கங்கள் தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்தன. இந்த சர்ச்சை தொடர்கிறது.

ஆனால் இன்று தி இந்துத்துவா ஆட்கள் அந்த அடிப்படையில் இதை எதிர்க்கவில்லை. நக்சல்பாரி இயக்கங்கள் சொன்னது போல போராட்டங்களை மழுங்கடிக்க NGO-க்கள் செயல்படுகின்றன எனச் சொல்லவில்லை. போராட்டங்களைத் தூண்டிவிட NGO-க்கள் செயல்படுகின்றன; அதனால் இந்திய வளர்ச்சி பாதி்கப்படுகிறது எனச் சொல்கிறது திஇந்துத்துவா!

இவர்கள் இந்திய வளர்ச்சி எனச் சொல்வது கார்பொரேட் வளர்ச்சியைத்தான். கார்பொரேட் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது எனத்தான் தமிழிசை. பொன் இராதாகிருஷ்ணன், எடப்பாடி, இப்போது ‘தி இந்து’ த்துவா எல்லாம் கூவுகின்றனர்.

அது சரி. இதில் RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் நிலைபாடு என்ன?

ஒரு பக்கம் NGO-க்களைக் கிறிஸ்தவத்தைப் பரப்பச் செய்யும் சதி எனச் சொல்லிக் காய்வது. இன்னொரு பக்கம். அதே கிறிஸ்தவ நாடுகளில் இருந்து பல்லாயி்ரம் கோடிக் கணக்கான ரூபாய்களை பல்வேறு இந்துத்துவ NGO-க்கள் மூலம் திரட்டி இங்கே அனுப்புவது. இதுதான் இந்துத்துவாவின் NGO பற்றிய கொள்கை. அப்படியான பல NGO க்கள் சில பற்றிய விவரங்களை எனது ‘இந்துத்துவமும் சியோனிசமும்’ முதலான கட்டுரைகளிலும், ‘ஆட்சியில் இந்துத்துவம்’ நூலிலும் விளக்கியுள்ளேன். குஜராத் பூகம்ப நிவாரணம் எனத் திரட்டப்பட்ட நிதி மத வெறித் தாக்குதகலுக்கு இவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளி நாட்டு மனித உரிமைப் போராளிகளும் வெளிப்படுத்தியுள்ளனர். இதைப் பற்றி எல்லாம் தி இந்துத்துவா மூச்சு விடுமா?

இந்தக் கட்டுரையில் தி இந்துத்துவா கெட்ட NGO-க்களுக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டைத்தான் விரிவாகக் கொடுத்துள்ளது.

அது புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களால் மோடி ஆட்சியின்போது குஜராத்தில் கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட ஆயிரக் கணக்கான முஸ்லிம்களுக்காக நீதி வேண்டிக் கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருபவருமான டீஸ்டா செதல்வாடின் ‘சப்ரங் ட்ரஸ்ட்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான 1.4 கோடி ரூபாயை தன் சொந்த அக்கவுன்டுக்கு அந்த அமைப்பு மாற்றிவிட்டது என இன்று பாஜக அரசு அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டை, ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை போலக் கட்டம் கட்டி, பெட்டிச் செய்தியாய்க் கக்கி உள்ளது ‘தி இந்து’த்துவா.

வெட்கக் கேடு.

கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காதபோது தன்னந்தனியாக நின்று போராடிய இயக்கம் டீஸ்டா செடல்வாடின் இயக்கம். மோடி அரசு டெல்லியில் பதவி ஏற்றவுடன் மேற்கொண்ட முதல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று டீஸ்ட்டாவின் மீதான் தாக்குதல். அவரை எப்படியாவது உள்ளே தள்ள வேண்டும் என வெறித்தனமாக இன்று பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஏதோ அவர் மீதான குற்றச்சாட்டு நிறுவப்பட்டுவிட்டது போல கட்டம் கட்டிச் செய்தியா வெளியிடுகிறாய்?

என்ன இரும்பு இதயமடா உனக்கு!

ஆசிஃபா படுகொலைக்கும் உனாவில் நடந்த பாலியல் கொடுமைக்கும் நீதிவேண்டி கடந்த 14.4.2018 அன்று சங்கர்ஷ் எனும் என்ஜிஓ ஒன்று மகாராஷ்டிராவின் தானேவில் மக்களை ஒன்றுதிரட்டி போராடியது. படம்: விபவ் பிர்வேட்கர்.

அந்நிய சக்திகளாலும் NGO-க்களாலும் தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம்தான் இன்றைய போராட்டங்கள் எல்லாம் என்கிற கூற்றிற்கு ஒரு புகைப்பட எடுத்துக்காட்டை முன்வைக்கிறது தி இந்துத்துவா.

அது என்ன போராட்டம் ?

அந்த எட்டு வயதுச் சிறுமி ஆசிஃபா காஷ்மீரில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கசக்கி எறிந்து கொல்லப்பட்டாளே… அதற்கு எதிராக இந்தியாவே தன்னெழுச்சியாகத் திரண்டு போராடியதே, அந்த ஆசிஃபா படுகொலை எதிர்ப்புப் போராட்டத்தை NGO சதி எனச் சொல்லும் நீங்கள் மனிதர்களடா!

Related posts

Leave a Comment