பச்சை மஞ்சள் சிகப்பு – நாவல் அறிமுகம்
![]()
2026 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் காட்சியில் நான் கொஞ்சம்போலத்தான் புத்தகங்களை வாங்கினேன். அதிலொன்று எழுத்தாளர் ட்டி,டி.ராமகிருஷ்ணனின் “பச்சை மஞ்சள் சிகப்பு’ (ஏறத்தாழ நானூறு பக்கங்கள்) நாவல். குறிஞ்சி வேலனின் மொழியாக்கத்தில் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ளது.
புத்தகக்காட்சியில் கூட்டமில்லாத நேரங்களில் அதுவரை நான் போயிராத அரங்குகளுக்கான போக்கை அமைத்துக் கொள்வதுண்டு. அப்படிப் போன அரங்குகளிலொன்று மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்.

எழுத்தாளர் ட்டி,டி.ராமகிருஷ்ணனின் பெயரைக்கண்டதும் புத்தகத்தை எடுத்தேன். ட்டி,டி.ராமகிருஷ்ணன் கேரளத்தின் முன்னணி எழுத்தாளரும் நண்பருமாவார். அவரின் ’சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ நாவலைப் படித்த பிறகே அவரின் படைப்புகள் மேல் எனக்கு ஈர்ப்பு வந்தது. அவரின் புத்தகங்கள் சில ஏற்கனவே தமிழில் வெளிவந்திருந்தாலும் இந்நாவல்தான் நான் வாசித்த அவரின் முதல் நாவல். இலங்கை நண்பர் சிராஜ் மஷ்ஹூரும் இதைப்பற்றி சிலாகித்திருந்தார்.
சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகியைப் போலவே பச்சை மஞ்சள் சிகப்பு நாவலும் தமிழ் நிலத்தில் நிகழும் கதைதான். எழுத்தாளர் ட்டி,டி.ராமகிருஷ்ணன் தொடர்வண்டித்துறையின் மேநாள் உயர் அலுவலர். கொங்கு மண்டலத்தில் நீண்ட நாள் பணியாற்றியிருந்ததால் அவரால் நல்ல தமிழில் புழங்கவியலுகிறது. அவரின் எழுத்துகளுக்கப்பால் தொடர்வண்டித்துறை பற்றிய அவரின் காணொளித் துணுக்குகளும் சுவையானவை.
என் சிறு பருவம் தொட்டு உடன் பயணிக்கும் விருப்பங்களில் பல உதிர்ந்து புதிய விருப்பங்கள் வந்து ஒட்டிக் கொண்டாலும் வானொலி, அஞ்சல், தொடர்வண்டி—என இம்மூன்று மட்டும் இன்றளவும் நீடிக்கின்றன.
என் பயண வாழ்வில் சில லோகோ பைலட்டுகளை (தொடர்வண்டி ஓட்டுநர்) சந்தித்து உரையாடியிருக்கிறேன். இவ்வளவு பென்னம் பெரிய உலோகப் பாம்பின் தலையாகி அதனை இழுத்துச் சென்றவர்கள். அவர்கள் பகிர்ந்த தகவல்களும் நினைவுகளும் தொடர் வண்டித்துறை மீதான ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் தணிய விடாமல் பார்த்துக் கொள்கின்றன.
தானியங்கி சமிக்ஞை முறை செயலுக்கு வருவதற்கு முன்னிருந்த உலோகப் பந்து சமிக்ஞை, நிலையங்களுக்கிடையேயான கை சுழற்சித்தொலைபேசி, அவசர காலத் தண்டவாள வெடி, வெளி மாநில பயணங்களுக்காக சென்னைக்குத் தகவல் அளித்துப் பெறும் பயண முன்பதிவு முறை என நிறைய சிறியதும் பெரியதுமான நடைமுறைகளைப் பற்றி இப்போதும் அறிந்து முடிக்க இயலவில்லை.
இது போன்ற தேடல்களுடன் ட்டி.டி.ராமகிருஷ்ணன் மீதான நம்பிக்கையும் இந்நாவலை முந்திக் கொண்டு வாங்க வைத்தன. ட்டி.டி.ராமகிருஷ்ணன் தன் படைப்புகளுக்காக வேண்டி கடின உழைப்பை ஆய்வு, பயணங்கள் வழியாக கொடுக்கக் கூடியவர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வட கேரளத்துக்கு தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். விடுப்புக்காலம் முடிந்து தன் பணியிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த சிப்பாயொருவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார்.
நீள் நிலத்தின் எங்கோ ஒரு தொலைவு மூலையில் பணியாற்றும் பட்டாளத்துக்காரர்களின் மேல் எனக்கு எப்போதும் துயரம் தோன்றும். அவரின் பணியைக் குறித்து உரையாடிக் கொண்டிருக்கும்போது மையக் கேரளத்தில் ஒரு நிலையத்தில் வண்டி நின்றது. அங்கு வெள்ளையும் சள்ளையுமாக நிலைய அலுவலர் கொடி காட்டிக் கொண்டிருந்தார். “இவன்மாருக்கு ஜீவிதம் சுகல்லே” என்றேன். சிப்பாயின் முகத்தில் ஏக்கம் மின்னி மறைந்தது.
அந்நிகழ்வுக்குப் பிறகு எனது வட இந்தியப் பயணங்களின் போது காற்றைப் போல கடந்து செல்லும் நிலையங்களின் கொடியசைக்கும் அலுவலர்களை நான் கவனிக்கத் தவறுவதேயில்லை. பயணங்களை வரவேற்றும் வழியனுப்பியும் வைப்பதால் அவர்களை எந்த பயணமும் தொலைவும் அலைக்கழிக்கப் போவதில்லை. கொஞ்ச காலத்துக்காவது தொடர்வண்டித்துறையில் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் விருப்ப எண்ணங்கள் தோன்றித் தோன்றி மறைந்ததுண்டு. இன்று அவ்வெண்ணமில்லை. ஆனால் தொடர் வண்டி இயக்கம், அதன் தொழில் நுட்பம் பற்றி அறியும் விழைவு இன்னமும் மங்காதிருக்கிறது.
என் கசபத் நாவலிலும் இரயிலில் இரவு வாழ்க்கைப் பற்றி கொஞ்சம் பத்திகள் வருகின்றன. இரயில் பயணங்கள் குறித்த ஒன்றிரண்டு எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்க நேர்ந்தாலும் அவற்றில் என் தேடல் நிறைந்திடவில்லை.
இந்நாவலில் நேர்மையான தொடர் நிலைய அலுவலர் தற்கொலை செய்து கொள்கிறார். கால் நூற்றாண்டுக்குப் பிறகு அவரின் குடும்பம் அதற்கான காரணங்களைத் தேடிப் போகிறது.
அரசுத் துறைகளில் சோம்பேறித்தனம், சலிப்பு, ஊழல், பொறுப்பின்மை என்பன பொதுவாகக் காணக்கூடியவைகளென்றாலும் அதைத் தாண்டி உள்ளூர்/பன்னாட்டுச் சதி, கொலை, பிண ஆதாயம் எனத் தொடர்வண்டித்துறைக்குள் நிலவும் அச்சுறுத்தும் இருள்களை நாவலுக்குள் காணும்போது தொடர்வண்டித்துறையென்பது நாம் வெளியிலிருந்து பார்த்து உருவகித்துக் கொண்டாடும் ஒன்றல்ல என்பது அதிர்ச்சியூட்டுகிறது. விதி விலக்கான நிகழ்வுகளை வைத்து மொத்தப் போர்வையைப் போர்த்தவியலாதுதான். என்றாலும், நினைவேக்கத்தின் சமகாலத் தாம்பாளத்தில் விள்ளல்கள் விழாமலில்லை.
ட்டி.டி.ராமகிருஷ்ணனின் மற்ற நாவல்களில் அவருக்கான தனியொழுக்கு இருக்கும். இந்நாவலில் தனது நடையை சற்று அப்பால் நிறுத்திவைத்துவிட்டு துறைசார் தகவல்களுடன் அவற்றினுள் உறையும் மனிதப்போக்குகளைச் சீராக அடுக்குகிறார். குறிஞ்சிவேலனின் மொழியாக்கமும் தடையின்றி நகர வைக்கிறது.
அலுவலகக் குறிப்புகள், தொழில் நுட்ப நுணுக்கங்கள் போன்றவை பொதுவே சலிப்படைய வைக்கக் கூடியவை. ஒரு துறையின் உள்ளுறை நிகழ்வுகளைப் புனைவிற்குள் வைக்கும்போது அக்கதைப்பரப்பு மேலும் துலங்குவதற்கு இம்மாதிரியான செய்நுட்பங்கள் தவிர்க்க இயலாதவை. தொடர் வண்டித்துறை ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஒரு வகையில் முதன்மைப் பயனுகக்கும் நாவல் எனலாம். மற்றவர்களுக்கும் தமிழ் தேசியம், வீரப்பன், சதி முயற்சிகள், மானிட நேசம், திகில் கதைக்களம் என மாறிமாறி ஊடாடி நாவல் தன்னை விரித்துக் கொடுக்கிறது.
இந்நாவலை வாசித்த பிறகும் தொடர்வண்டி மீதான தேடல் தணிந்தபாடில்லை. ஏலவே ஓடும் தொடர்வண்டிகளின் கால்களையொடித்து காவி வண்ணமடிக்கப்பட்ட புதிய வடமொழிப்பெயரிலான வண்டிகளின் அடைவுகளும் வீழ்ச்சிகளும், விடுதலை பெற்ற இந்தியாவில் முதன் முறையாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட தொடர்வண்டித் தடங்கள் எனச் சொல்லப்படுவதற்காகக் காத்திருப்பவை ஏராளம். ட்டி.டி.ராமகிருஷ்ணனோ அல்லது வேறு யாருமோ எழுதும் வரைக்கும் பொறுப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.
முடிக்கும் முன் நூலின் உருவாக்கத்திலுள்ள குறைகளைச் சுட்டாமல் கடக்கவியலவில்லை. அச்சுத் தொழில் நுட்பம் வெகுவாக முன்னேறிய காலக்கட்டத்திலிருக்கிறோம். நூல் உருவாக்கத்தில் புதுமை நிறைந்த வண்ண வடிவமைப்புகளுடன் போட்டி போட்டுக்கொண்டு நிறைய பதிப்பகங்கள் எழுந்து நிலைபெற்றுவருகின்றன.
இந்நூலின் தாள்கள் சரியாகக் கோர்க்கப்படாமல் கொத்தாக வெளியில் துருத்துகின்றன. அட்டைப்பட உருவாக்கத்திலும் பஞ்சு மிட்டாய் தரம்தான். இத்தனைக் குறைபாடுகளுள்ள இதன் விலைக்கும் குறைவில்லை. அரங்கில் உள்ள பணியாளர்களிடம் சொன்னேன். அவர்களும் என்னதான் செய்வார்கள்? ஆசிரியருக்காகவும் கருப்பொருளுக்காகவும் மட்டுமே வாங்கியாகிட வேண்டிய கட்டாயம்.
*****
நூல்: பச்சை மஞ்சள் சிகப்பு
ஆசிரியர்: ட்டி.டி. ராமகிருஷ்ணன்
தமிழில்: குறிஞ்சிவேலன்
வெளியீடு: அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (AMTI)
விலை ரூ.450
தொடர்புக்கு: +91 90870 49595 / +91 99761 44451

