அறிமுகம்

அரசியலை விட்டு எவரும் தனித்து இருக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலவையும் தீங்கையும் பாதிக்கக் கூடியது அது. சமூகத்தின் அங்கத்தவர் ஒவ்வொருவரும் அதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கவே செய்கிறோம். விலகியிருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. விலகியிருக்கிறோம் என்ற கற்பிதத்தில் வேண்டுமானால் மிதக்கலாம். நாம் மனிதர்களாக நிலைத்திருக்கும் காலமெல்லாம், சமூகமாக வாழ்வை முன்னெடுக்கும் காலமெல்லாம் இதுவே நம் நிலை.

இதில் நம் முன்னிருக்கும் கேள்விகள்: எந்த அடிப்படைகளின் மீது நின்று நாம் அரசியலை  மேற்கொள்கிறோம்? நம்முடைய தீர்மானங்களை வகுத்துக் கொள்வதற்கான சட்டகம் எது? வழிகாட்டும் கோட்பாடுகள் எவை? இலக்குகளாகக் கொள்ளப்பட வேண்டியவை யாவை?  மானுடம் இதுநாள் வரை பெற்றுள்ள அனுபவம் தரும் படிப்பினை என்ன? அதிகபட்ச சமூக நலனை உத்தரவாதப் படுத்துவதற்கான ஆகச் சிறந்த வழிமுறைகள் எவை? இப்பாதையில் நம் நேசர்கள் யார்? விரோதிகள் யாவர்? என நீளுகின்றன அவை.

இவற்றை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நாங்கள் இறைவனின் வழிகாட்டலையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறோம்; அவனுடைய தூதர்களையே மாதிரிகளாகக் கொள்கிறோம் என்பதை பகிரங்கமாகச் சொல்கிறோம்.

இறைவனின் வழிகாட்டலுடனும் இறைத்தூதர்களின் மரபுடனும் இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதால் மட்டுமே எம்முடைய காரியங்கள் தாமாக இலகுவில் நிறைவேறிவிடப் போகின்றன என்ற மயக்கத்தில் உழலும் கற்பனாவாதிகள் அல்ல நாங்கள். அவற்றை சமூக யதார்த்தமாக மாற்றுவதில் நாங்கள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றிய தெளிவை எம் மார்க்கம் எமக்குத் தந்திருக்கிறது. தனித்துவமானவோர் உலகப் பார்வையை கொடையளித்திருக்கிறது.

அதனூடாக உலகை நோக்கி, அது அமைத்துத் தந்துள்ள அடிப்படைகளின் மீது நின்று சமூகத்துடன் உறவாடி, அது வகுத்துத் தந்துள்ள உயர் இலக்குகளின் முன்னாலிருக்கும் தடைகளுடன் சமர் செய்து, அதன் வழி ஈட்டப்படும் பயன்களை பரந்துபட்ட மக்களின் நலவாழ்வுக்காக சமர்ப்பித்து, நீதி சூழ்ந்தவோர் உலகை கட்டியெழுப்பிடத் தீரா வேட்கை கொண்டிருக்கும் எளிய இறையடிமைகள் நாங்கள்.

வேர் மட்டத்தில் சக மக்களோடு இணைந்து பணியாற்றியும் சிந்தித்தும் நாங்கள் கற்றறியும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளவுமே இத்தளம். கற்றுக் கொண்டதை சுமந்து கொண்டு வினையாற்றிட மீண்டும் சமூகத்திடமே மீளுவதற்கான கல்விப் பாசறை இது.

மக்கள் விரோத அரசு அமைப்பு, திரைக்குப் பின்னாலிருந்து ஆளும் பெருநிறுவனப் பணமுதலைகள், மூச்சடைக்கச் செய்யும் சாதி ஒடுக்குமுறை, சகலரையும் கீழடக்கத் துடிக்கும் பார்ப்பனியம், சமூகத்திடமிருந்து அந்நியப்படும் சுயநல வாழ்க்கைமுறை, திட்டமிட்டு திணிக்கப்படும் நுகர்வுவெறி, வரைமுறையின்றி சுரண்டப்படும் இயற்கை வளங்கள், முடிவிலா குழப்பத்தில் ஆழ்த்தும் கார்பரேட் ஊடகப் பெருங்கூச்சல், மடைமாற்றும் போலித் தீர்வுகள் என நமது நடப்பு உலகை நிறைத்திருக்கும் நச்சுச் சூழலுக்கு முகம் கொடுத்து, மோதி, வீழ்த்தி, மாற்றை கட்டுமானம் செய்யும் மானுடப் பொறுப்பை உவந்து சுமக்க முன்வரும் ‘முஸ்லிம்கள்’ நாங்கள்.

எவர் (மக்களை) இறைவனின் பக்கம் அழைத்து, நற்செயல்களில் ஈடுபட்டு, “நிச்சயமாக நான் (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களைச் சேர்ந்தவன்” என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்? (திருக்குர்ஆன் 41: 33)