கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதி ஒழிப்பா, சாதி ஒளிப்பா?

Loading

சாதியை, அதன் விளைவுகளைப்  பேசினாலே சாதியவாதி என்று கூறுவதுதான் ‘நவீன உயர் சாதி இந்தியர்களின் கூற்று என்று கூறுகிறார் மார்க்சிய எழுத்தாளர் ஆலம் (Alam, 1999). இவ்வாறு சாதியைப் பேசாமல் இருந்தாலே சாதி ஒழிந்துவிடும் என்பது, சாதியைப் பொது விவாதமாக்காமல் தவிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் யுக்தி என்று அவர் முன்வைக்கிறார். சாதியை நவீன இந்தியர்கள் பொதுத் தளத்திலிருந்து ஒழிக்கவில்லை; மாறாக அதைத் தமது அடையாளம் இல்லை என்று மறுக்கிறார்கள் என்கிறார் எழுத்தாளர் ஆதித்ய நிகாம் (Nigam, 2019). இது மிகமிகச் சிக்கலானது.

சாதியை, அதன் வெளிப்பாடுகளால் பயனடையும் ‘நவீன உயர் சாதிகள்’ அது தங்கள் அடையாளம் இல்லையென மறுப்பது வாடிக்கைதான். அதன் விளைவு, சாதியைப் பொதுவெளியிலிருந்து அந்நியப்படுத்தி வெறுமனே அதை மதவெளியின் அல்லது தனிமனித வெளியின் பிரச்சினையாகச் சுருக்குவது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, கிரிக்கெட்டில் சாதியின் இருப்பைப் பற்றிக் கேட்கப்பட்டபோது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:  “நாங்கள் யாரும் சாதிகளாக இல்லை. அப்படிப் பார்த்து அணியைத் தேர்வுசெய்வதில்லை. மாறாக, நாங்கள் அனைவரும் இந்தியர்கள்.”

ஆக, நவீன உயர் சாதி இந்தியர்கள் தமது வாழ்க்கை, அதிகாரம், மூலதனம், சமூக அந்தஸ்து என அனைத்தும் சாதியிலிருந்து வந்திருந்தாலும், அவை அனைத்தையும் அனுபவித்துக்கொண்டே, அவை எதையும் மறுக்காமலேயே, சாதி எங்களின் அடையாளமல்ல என்று கூறி சாதியை பொதுவிவாதத் தளத்திலிருந்து மறைக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

நவீன இந்தியாவில் சாதி அழித்தொழிக்கப்படவில்லை, மட்டுப்படுத்தப்படவில்லை; மாறாக, ஒளித்துவைக்கப்படுகிறது. நவீன தாராளவாதச் சமூகத்தில் பொதுமன்றம் (public sphere) என்பது விமர்சனப்பூர்வமாகச் சமூகத்தை அணுகுவதற்கான தளமாக இருக்கும் என்கிறார் ஹேபர்மாஸ். அவ்வாறு பார்க்கையில், இந்தச் சாதியை பொதுமன்றத்திலிருந்து ஒளித்துவைக்கும் போக்கினை உயர் சாதிகள் தொடர்ந்து செய்துவருகின்றனர். அந்த வகையில், எவ்வாறு வகுப்பறைகளிலும், இன்னும் பிற நவீன பொதுத் தளங்களிலும் இருந்து சாதி மறைக்கப்படுகிறது என்பதையும்; அதன் இருப்பையே நவீன பொதுத் தளங்களில் உயர் சாதிகள் எப்படி மறுக்கின்றனர் அல்லது மறைக்கின்றனர் என்பதையும் பேராசிரியர் யஷ்பால், ரோகித் வெமுலா குறித்த தனது கட்டுரையில்,வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இவ்வாறு சாதியை பொதுவெளிகளிலிருந்து மறைக்கும் யுக்தியைக் குறிப்பிட பேராசிரியர் யஷ்பால் ‘சாதிக் குருட்டுத்தன்மை’ (caste blindness) என்ற பதத்தை அறிமுகப்படுத்துகிறார் (Jogdand Y., 2017).  ஆக சாதி என்பதை ‘நவீன’ உயர் சாதிகள் கடந்தகாலச் சங்கதியாக, அதாவது ஒழிந்துபோன ஒரு அமைப்பாகவே கருதுகின்றனர். அவ்வாறு கருதி, சாதி நீக்கமற நிறைந்துள்ள இந்தியப் பொதுவெளிகளை சாதியற்றவையாக (casteless) முன்வைக்கின்றனர். அவ்வாறு கருதுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால், அவர்கள் நவீன பொருளாதார அமைப்பிலும், நவீன தேச அரசிலும், இன்ன பிற நவீன நிறுவனங்களிலும் அவர்கள் அனுபவித்துவரும் அனைத்து விதமான சலுகைகளையும் பார்வையிலிருந்து மறைத்துவிடுகிறார்கள்.

நவீன முதலீட்டியப் பொருளாதார அமைப்பில் முதலாளிகளாகவும், நவீன தேச அரசில் ஆளும் வர்க்கமாகவும், நவீன கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் அவர்களே இருக்கின்றனர். இவ்வாறு நவீனப் பொதுவெளிகளில் சாதியின் இருப்பை மறுப்பதன் மூலம் இந்த நவீனக் கட்டுமானங்களில் அவர்களின் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்ப்பதற்கும் சமர் புரிவதற்குமான வாய்ப்பு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான் எம்.எஸ்.எஸ். பாண்டியன் நவீனத்துவம் குறித்த தனது கட்டுரையில் (Pandian, 2002), பார்ப்பன உயர்சாதிகள் பொதுவெளிகளில் எப்படித் தம்மை சாதியற்றவற்களாகவும் செக்குலர்களாகவும் காட்டிக்கொண்டே தமது தனிவாழ்வில் சாதியைப் பின்பற்றுகின்றனர் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருப்பார்.

இவ்வாறு நவீனத்துவத்தினால், நவீன சாதி அமைப்பினால் பயனடையும் சாதிகள்தாம் சாதியை ஒரு பழைய கட்டமைப்பு, கடந்தகாலச் சங்கதி என்று ஒதுக்குகிறார்களா என்று கேட்டால் அதுதான் இல்லை. சாதியை எதிர்க்கும் சாதி எதிர்ப்பாளர்களுமேகூட இந்த நவீன சாதி அமைப்பை, அதன் வெளிப்பாடுகளைப் புரிந்துக்கொள்ளாமல், சாதியை வெறுமனே ஒரு சடங்காச்சார அமைப்பாகவும், இந்து மதத்தால், பார்ப்பனியத்தால் உற்பத்தி செய்யப்பட்ட அமைப்பாகவும் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நவீன சாதியை, அதன் பண்புகளை, அதன் வெளிப்பாடுகளை நாம் இன்னும் சரியாக உள்வாங்கவில்லை. மதம், அதன் புனிதம் – தீட்டு என்னும் கற்பிதங்களைத் தாண்டி (அது மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது) இன்று சாதி நவீன அமைப்புகளுக்குக்கேற்ப,  உயர் சாதிகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. சாதியை நியாயபடுத்தும் யுக்திகளுமேகூட மதம்சாராதவையாக மாறியுள்ளன. நவீன காலத்துக்கு முன்பு உயர்சாதிகளின் ஆதிக்கத்தை நியாயப்படுத்த எவ்வாறு மதம் பயன்படுத்தப்பட்டதோ, அதுபோலவே நவீன காலத்தில் ‘தகுதி’ (merit) போன்ற செக்குலர் யுக்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கான சமீபத்திய உதாரணம்தான், ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் தனியார் துறையில் இடவொதுக்கீடு குறித்தான விவாதத்தில் அதை எதிர்க்கும் தரப்பினர் முன்வைத்த, merit காலியாகிவிடும் என்னும் வாதம். எப்படி நவீன காலத்துக்கு முன்பு, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுக்கும் பொருட்டு, அதை உள்வாங்கக்கூடிய திறமை அவர்களுக்கில்லை எனப் பார்ப்பனியப் பிரதிகள் கூறினவோ, அதுபோலவே இப்போது இடவொதுக்கீட்டில் வருபவர்களிடத்தில் ‘தரம்’ இருக்காது என நைச்சியமாக சாதி வெறுப்பை உமிழ்கின்றனர்.

ஆக, இவ்வாறு நவீன காலத்தில் சாதி நவீன அமைப்புகளுக்கு ஏற்ப மாறியிருப்பதால் அதை எதிர்ப்பதற்கு நாம் பார்ப்பன-மையத்துவவாதிகளின் போக்கிலிருந்தும், கீழைதேயவாதிகளின் போக்கிலிருந்தும் விடுபட்டு நோக்கினால்தான் சாதியை மீண்டும் பொதுவெளிக்கு இழுத்துவரவும், ஒடுக்கப்பட்ட சாதிகளின் வலிகளை, துயரங்களை வெளிப்படுத்தவும் முடியும். எனவே, நவீன சாதியை, லூயி டுமோன்ட் குறிப்பிடுவதுபோல், இந்தியச் சமூகத்தின், அதன் பிற்போக்குதனத்தின் வெளிப்பாடு எனக் காண்பதும், சாதியைக் கடந்தகால அடையாளம் என்று மறுப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவங்களைப் பொதுவெளியிலிருந்து விலக்கி வைப்பதற்கு மட்டுமே உதவும்.

தற்போதைய சாதி, நம்மில் பலர் குறிப்பிடுவதுபோல், பிற்போக்கானதல்ல; டுமோன்ட் போன்ற கீழைதேயவாதிகள் குறிப்பிடுவதுபோல், வெறுமனே மதம் கற்பிக்கும் புனிதம் – தீட்டு இருமையின் வெளிப்பாடுமல்ல, மாறாக, பேராசிரியர் சமரேந்திரா (2016) கோடிட்டுக் காட்டுவதுபோல், மக்களை ஆள்வதற்காக காலனியத்திற்குத் தேவைப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றவற்றால் கூர்தீட்டப்பட்டு, பின்காலனிய நவீனத்தால் உயர் சாதிகளின் நலன்களைக் காப்பதற்கென்றே நிலவும் அமைப்பே தற்போதைய நவீன சாதி.

இந்த நவீன சாதி அமைப்பினை பிற்போக்கானது, அல்லது மார்க்சிய மொழியில் கூறுவதாயின், நிலபிரபுத்துவ அமைப்பின் எச்சம் என்பதாகப் பார்த்தோமெனில், எப்படி அது நவீன உலகில் இயங்குகிறது, அல்லது மார்க்சிய மொழியில் கூறுவதாயின், முதலீட்டியச் சமூகத்தில் இயங்குகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

நவீன சாதியை பின்காலனிய முதலீட்டியம், வளர்ச்சி (development), தேசிய – பிராந்திய அரசியல், விளையாட்டு, கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திலுமுள்ள உயர் சாதிகளின் ஆதிக்கத்தோடு பொருத்திப் பார்த்தே புரிந்துகொள்ள வேண்டும். இதில் எதுவொன்றையும் மறுத்துவிட்டோ, அல்லது அனைத்தையும் மறுத்துவிட்டோ சாதியை மீண்டும் மதம் சார்ந்த சடங்காச்சார அமைப்பாகச் சுருக்கி பார்ப்பதென்பது, ‘நவீன’ உயர் சாதிகள் சாதியை எவ்வாறு முடிந்துபோன ஒன்றாகக் கருதுகின்றனரோ, அதற்கு ஒப்பானதே.

ஆக ஒடுக்கப்பட்ட சாதிகள் நவீன இந்தியாவில் எவ்வாறு புறந்தள்ளப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துக்கொள்ள, சாதியைப் பொதுவெளிக்கு இழுத்துவர நாம் நவீன சாதி குறித்தான நமது புரிதலை மறுவரையறை செய்துகொள்ள வேண்டும். இந்த மறுவரையறை சாத்தியப்பட வேண்டுமெனில், பார்ப்பனியப் பிரதிகள் சார்ந்து சாதியைப் புரிந்துகொள்வதிலிருந்தும், கீழைதேயவாத நோக்கிலிருந்து சாதியைப் புரிந்துகொள்வதிலிருந்தும் விடுவித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான மேட்டிமைப் பார்வைகளிலிருந்து விடுபட வேண்டுமெனில், நாம் பார்ப்பனிய மனநிலையிலிருந்தும், காலனியச் சிந்தனை முறைகளிலிருண்டும் முற்றாக நீக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது மட்டும்தான் நம்மால் சாதி குறித்தான புரிதலை ஒடுக்கப்பட்ட சாதிகளின் நோக்குநிலையிலிருந்து அமைத்துக்கொள்ள முடியும்.

பேராசிரியர் யஷ்பால் ஜோக்தந்த் சாதி குறித்தான தனது கட்டுரையில் இதுபோன்ற பார்ப்பனிய, காலனிய மேட்டிமைப் பார்வைகளை முன்வைத்து, அவை எவ்வாறு தலித்துகளின், ஒடுக்கப்பட்ட சாதிகளின் அனுபவங்களுக்கு எதிராக உள்ளன என்பதை எடுத்துரைப்பதோடு, இப்பார்வைகளுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் நோக்குநிலையிலிருந்து எவ்வாறு சாதியைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் முன்வைக்கிறார் (Jogdand Y. A., 2016).

ஆக, சாதியைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதென்பது ஒடுக்கப்பட்ட சாதிகளின் நோக்குநிலையிலிருந்து சாதியை வரையறுத்துப் புரிந்துகொள்வதில்தான் தொடங்குகிறது. மாறாக, பார்ப்பனியப் பிரதிகளின் நோக்கிலிருந்தும், காலனிய நோக்கிலிருந்தும் பார்த்தோமெனில் சாதி ஒரு பழைய பஞ்சாங்கம் என்றுதான் நாமும் முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

துணைநின்றவை

Alam, J. (1999). Is Caste Appeal Casteism? Oppressed Castes in Politics. Economic and Political Weekly, 757–761.

Jogdand, Y. (2017). The drowned and the saved: caste and humiliation in the Indian classroom. Women Philosopher’s Journal, 304-311.

Jogdand, Y. A. (2016). Understanding the Persistence of Caste: A Commentary on Cotterill, Sidanius, Bhardwaj and Kumar . Journal of Social and Political Psychology, 554-570.

Nigam, A. (2019). HINDUTVA, CASTE AND THE ‘NATIONAL UNCONSCIOUS. In V. Satgar, Racism After Apartheid: Challenges for Marxism and Anti-Racism (pp. 118-136).

Pandian, M.S.S. (2002). One step Outside Modernity. EPW, 1735-1741.

Samarendra, P. (2016). Local jatis and pan-Indian caste: The unresolved dilemma of M.N. Srinivas. Contributions to Indian Sociology, Volume 50 Issue 2, June 2016, 214-239.

Related posts

Leave a Comment