Uncategorized உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சலஃபீ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

Loading

இத்தொடர் வகுப்பின் அமைப்புபற்றி நினைவூட்டி இன்றைய வகுப்பைத் தொடங்குகிறேன். நாம் முதலில் நமது அரசியல் பண்புகுறித்துப் பார்த்தோம். அரசியல் பண்பு என்று சொல்லும்போது அதில் உள்ளடங்கிய வேறுபாடுகள் அல்லது வேற்றுமைகள் (இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்) போன்றவை குறித்தும் பார்த்தோம். இது நம் பொது அரசியல் பண்பாகும். சிலவேளை கறாரான அல்லது இணக்கத்துக்குச் சாத்தியமற்ற கருத்துவேறுபாடுகளுக்கு இட்டுச் செல்லுமளவுக்கு இப்பொதுப் பண்பிலிருந்து பிரிந்துசெல்ல விரும்பும் தனிநபர்களிடமிருந்தும், சிந்தனைப் போக்குகளிடமிருந்தும் நான் தனிப்பட்ட முறையில் பணிவுடன் மாறுபடுகிறேன்.

இவ்வகுப்புகளின் மூலம், நாம் கருத்துவேறுபாடு கொள்ளும் பிற முஸ்லிம்களிடமிருந்து விலகிச் செல்வது அல்லது இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்கள்மீது இறைநிராகரிப்புக் குற்றம் சுமத்துவது என்றில்லாமல் (இன்று நம் மத்தியில் இவ்வாறு நிகழ்வதை நாம் அனைவரும் அறிவோம்), அவர்களுக்குத் துணைநிற்கும் வகையிலான செம்மையான ஆளுமைகளாக நம்மை நாம் வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

இரண்டாம் கட்டமாக, நம் பண்புக்கூறுகளில் கட்டமைந்துள்ள கோட்பாட்டு அல்லது தத்துவார்த்த வேறுபாடுகளில் கவனம் செலுத்தினோம். ஏறத்தாழ 1200 வருடங்களுக்கு முன் தோன்றிய இவ்வேறுபாடுகளின் தாக்கம் இன்றளவும், அரசியல் பிரிவுகளில் உள்ள அளவிற்கு அகலமாகவோ ஆழமாகவோ இல்லாமல் வலுவிழந்து, காணப்படுகிறது. சொல்லப்போனால் பள்ளிவாசல்கள், மாநாடுகள் அல்லது முஸ்லிம்கள் கூடும் பிற கூட்டங்களில் இப்பிரிவினைகள்குறித்த பிரக்ஞைகூட அவர்களிடையே இல்லை.

இதன் மூன்றாம் கட்டத்தில் நம் பொதுப் பண்பில், நம் பொது இஸ்லாமிய வரலாற்றில், நம் பொது இஸ்லாமிய நாகரிகத்தில் கட்டமைந்துள்ள சட்டவியல் வேறுபாடுகளின் மீதும், மாறுபட்ட கண்ணோட்டங்களின் மீதும் கவனம் செலுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

விளக்கம்

கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் வரிசையில் அடுத்ததாக சலஃபிய்யீன் (சலஃபிகள்) என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். இவர்கள் தங்களை முன்னோர்களின் நீட்சியாகக் கருதுகின்றனர். ‘சலஃப்’ என்ற சொல்லின் பொருளும் அதுதான். சலஃப் என்றால் முன்சென்ற தலைமுறை, நமக்கு முன் வாழ்ந்த தலைமுறை என்று பொருள். இதன் மூலம் அவர்கள் தங்களை முன் சென்ற தலைமுறையினரை — குறிப்பாக இறைத்தூதரின் (ஸல்) மரணத்தைத் தொடர்ந்து வாழ்ந்த தலைமுறையினரை — பின்பற்றுபவர்கள் எனக் கூறுகின்றனர். அவர்களின் கருத்துப்படி அதுதான் மிகச்சிறந்த முஸ்லிம் தலைமுறை ஆகும்.

தோற்றமும் வளர்ச்சியும்

சலஃபிகள் ஹிஜ்ரீ 4ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் அவர்கள் தங்களின் சுவடுகளை இமாம் அஹ்மது இப்னு ஹம்பலோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்றனர். சுன்னீ சட்டவியல் கண்ணோட்டத்தில் அல்அஹ்னாஃப் எனப்படும் ஹனஃபிகள், அஷ்ஷவாஃபிஹ் எனப்படும் ஷாஃபிஈகள், அல்மாலிகிய்யா எனப்படும் மாலிகிகள் வரிசையில் நான்காவது சிந்தனைப் பள்ளியாக அல்ஹனாபிலா என்ற ஹம்பலீ சிந்தனைப் பள்ளி இருப்பதை நாம் அறிவோம்.

அவர்களின் கருத்துப்படி ஆரம்பத்தில், அஹ்மது இப்னு ஹம்பலின் காலத்தின்போது சலஃபித்துவம் பரபரப்பாகச் செயற்பட்டு வந்தது. அந்தச் சமயத்தில்தான் இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனின் படைப்புத்தன்மை பற்றிய குழப்பம் ஏற்பட்டது. ‘ஃபித்னத்துல் ஃகல்கில் குர்ஆன்’ என்று அறபியில் சொல்லப்படும் இப்பிரச்சினை அஹ்மது இப்னு ஹம்பலின் காலத்தில் உச்சத்தை அடைந்தபோது, அவர் “குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல” என்றார். அவருடைய இந்தக் கருத்து அன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தனிப் போக்காக உருவாகியது. எனினும் அன்று அவர்கள் தங்களை சலஃபிகள் என்று அழைத்துக்கொள்ளவில்லை.

அஹ்மது இப்னு ஹம்பலும் தான் ஒரு சலஃபீ என்று ஒருபோதும் கூறவில்லை. பிற்காலத்தில் வந்த முஸ்லிம்கள்தாம் இக்கருத்தாக்கத்தை உருவாக்கினர். ஆக, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து வந்த முஸ்லிம்களின் விளக்கப்படி அஹ்மது இப்னு ஹம்பல் ஒரு சலஃபீ. பின்னர் முஃதஸிலாக்களுக்கும் அஷாயிறாக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட, சலஃபீ சிந்தனையானது சில காலம் செயலற்றுப் போனது.

பிறகு ஹிஜ்ரீ 7ஆம் நூற்றாண்டில் இது ஒருவிதமாக மறுமலர்ச்சி பெற்றது. அதை வழிநடத்தியவர் ஷைஃகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா என்று அழைக்கப்படுபவர். நீங்கள் இப்பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இவர் தான் சலஃபீ போக்கிற்கு மீண்டும் ஒர் ஊக்கத்தைக் கொடுத்தார் எனச் சொல்லலாம். பின்னர் மீண்டும் இது செயலற்றுப் போனது. ஏனெனில் அன்று ஓட்டுமொத்த இஸ்லாமியச் சிந்தனையுமே அவ்வாறு செயலற்றுப் போயிருந்தது.

பின்னர் ஹிஜ்ரீ 12ஆம் நூற்றாண்டில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு வருகிறார். அவரும் இந்த சலஃபீ சிந்தனைப் போக்கை உயிர்ப்பிக்க முயல்கிறார். இதை ஒரு சிந்தனைப் பள்ளி என்று சொல்ல முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. ஏனெனில் நாம் பின்னர் பார்க்கப்போவது போல இதில் சிந்தனைக்குப் பெரிதும் இடம் கிடையாது. ஆக இவைதாம் சலஃபிகள் பற்றி நம் இஸ்லாமிய வரலாற்றில் காணப்படும் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.

தவ்ஹீது

சலஃபிகளின் இலக்கியங்களில் பரிச்சயமுள்ள எவரும் அதில் ‘தவ்ஹீது’ என்ற பதம் அதிகம் பயன்படுத்தப்படுவதை அறிவார். அதை அவர்கள் தங்கள் எழுத்துகளிலும், உரைகளிலும் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம் உலகின் சில பகுதிகளிலும் சில கலாச்சாரங்களிலும் மண்ணறைகள்மீது கட்டடங்கள் எழுப்பப்படும் வழக்கம் உள்ளது. இறந்தவரின் பெயர், அவருடைய பிறப்பு-இறப்பு தேதிகள் பொறிக்கப்பட்ட சாதாரணப் பலகையைத் தாண்டி, சில இடங்களில் உயர்ந்த கட்டடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. சலஃபிகள், ஏதோ வினோதக் காரணத்துக்காக தவ்ஹீதுக்கான விளக்கத்தை இத்தகைய கட்டடங்கள், சமாதிகள், மணிமண்டபங்கள் போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கினர். இத்தகைய கட்டடங்களை தவ்ஹீதுக்கு எதிரானவையாகக் கருதினர்.

மேலும் சலஃபிகளுக்கும் அஷ்அரிகளுக்கும் இடையே ஒர் உரசல் இருந்துகொண்டே வந்தது. பல விஷயங்களில் அவர்களிருவரும் ஒத்துப்போகவில்லை.

சலஃபிகளும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தும்

அபுல் ஹசன் அல்அஷ்அரீ இவ்வாறு கூறினார்: “முஹம்மதின் (ஸல்) ஷஃபாஅத்தின் பொருட்டால் நிச்சயமாக அல்லாஹ் மக்களை நெருப்பிலிருந்து விடுவிப்பான். (இன்னல்லாஹ யுஃக்ரிஜு மினன் நாரி கவ்மன் பி ஷஃபாஅத்தி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்).”

அவருடைய இக்கூற்றானது சட்டவியல் மற்றும் வரலாற்று நூல்களில் பிரபலமாகக் காணக்கிடைக்கிறது. வழக்கமாக ‘ஷஃபாஅத்’ என்பது பரிந்துரை என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால், இது அதன் துல்லியமான மொழிபெயர்ப்பு அல்ல. ‘ஷஃபாஅத்’ என்றால் ஜோடி, ‘வித்ரு’ என்றால் ஒற்றை என்று பொருள். ‘பரிந்துரை’ என்ற மொழிபெயர்ப்பு, வேண்டிய கருத்தை வெளிப்படுத்தினாலும் அது அச்சொல்லின் நேர்ப்பொருள் கிடையாது. ஆக ‘இறைத்தூதரின் ஷஃபாஅத் என்றால், அவர் மக்களோடு ஜோடி சேர்ந்துவிடுவார் எனப் பொருள்படும். எனவே அதை கண்ணியப்படுத்தும் விதமாக அல்லாஹ் மக்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான்’ என்று கூறினார். அஷ்அரியின் இக்கூற்றை சலஃபிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து இவர்களுக்குள் விவாதங்கள் தோன்றின.

இன்று தங்களை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்களின் முதன்மைக் கோட்பாடாக அல்அஷாயிறாவே இருக்கிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆக நாம் இங்கு அஷ்அரிகள் என்று சொல்லும்போது, வெகு காலத்திற்கு முன் வாழ்ந்த, தற்காலத்தோடு தொடர்பற்ற, இன்றைய சூழலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒரு தத்துவக் குழுவைப் பற்றிப் பேசவில்லை. தான் பின்பற்றும் கோட்பாடு, அஷ்அரியோடு தொடர்புடையது என்று கற்றறிந்த எந்தவொரு சுன்னீ முஸ்லிம் அறிவார். ஆக சலஃபிகள் செல்வாக்கோடு இருந்த காலகட்டங்களில் சுன்னிகளைத்தான் எதிர்த்தனர்.

இவ்வரலாற்று விவரங்களை அறியாத பலர், சலஃபிகள் என்போர் சுன்னிகளைச் சார்ந்தோர் என்று நினைக்கின்றனர். அறியாமை வியாபித்திருக்கும்போது, அதனோடு சேர்ந்து பணமும் விளையாடினால், யார் வேண்டுமானாலும் தங்களை சுன்னிகள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கொள்கையையும் சத்தியத்தையும்விட சப்தமாகப் பணம் பேசும்போது, அதை எதிர்க்க எவரும் இருப்பதில்லை — இன்று நடப்பதைப் போல.

அதிகாரம், செல்வாக்கு, வளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாங்கள்தாம் உண்மையான சுன்னிகள் என்று சலஃபிகள் உரிமை கோருகின்றனர். அப்படியே அதற்கு ஒரு எதிர்ப்பு இருந்தாலும் அது பலவீனமாக, யாருக்கும் கேட்காதபடி இருக்கிறது. இப்படித்தான் இன்று சில முஸ்லிம்களிடையே, ‘சலஃபிகள் சுன்னிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், வரலாற்றுத் தடங்களைப் பின்பற்றிச் சென்றால் இதில் உண்மை இல்லை என்பதை உணர முடியும்.

கோட்பாடு

இப்போது சலஃபிகளின் சிந்தனைக்குள் புகுந்து அவர்களை அறிய முயல்வோம். சிந்தனை என்ற சொல்லையும் சலஃபீ என்ற சொல்லையும் ஒருசேரப் பயன்படுத்துவது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் குறைவாகவே சிந்தனையைப் பயன்படுத்துகிறார்கள். எனவே ‘இவர்களுடைய எண்ணங்களுக்குள் புகுந்து’ என்று சொல்வது சரியாக இருக்குமா?

இஸ்லாமியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் பயன்படுத்திய முறைமைகளை இப்னு தைமிய்யா நான்காகப் பிரித்தார். தொடர்ந்து இவ்வகுப்பினுள் செல்லும் முன் ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் இப்னு தைமிய்யாவின் கருத்தைத்தான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். இது என்னுடைய கருத்து அல்ல.

முதல் வகை அல்ஃபலாசிஃபா என்று அழைக்கப்படும் தத்துவவாதிகள் (philosophers). இப்னு தைமிய்யாவின் கருத்துப்படி, இவர்கள் குர்ஆனை ஒரு சொற்பொழிவாக (ஃகதாபு) கருதுபவர்கள். அதில் தர்க்கரீதியான போதனைகள் உள்ளன. இவற்றை நம்புவதற்கு தர்க்கரீதியான கட்டமைப்பு அதில் இருக்க வேண்டும். நான் இப்னு தைமிய்யாவைப் புரிந்துகொண்டது சரியானால், ‘தர்க்கரீதியான கட்டமைப்பு இல்லாதபட்சத்தில், நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும்’ என்று இதைச் சொல்லலாம்.

இரண்டாவது வகையினர் முஃதஸிலாக்கள். இவர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்னு தைமிய்யாவைப் பொறுத்தவரை முஃதஸிலாக்கள் என்போர், குர்ஆனுக்கு மேலாகப் பகுத்தறிவை முன்னிறுத்துபவர்கள். அதாவது குர்ஆன் வசனங்களின் அர்த்தங்கள் பகுத்தறிவுப் புரிதலுக்கு உட்பட்டிருந்தால், பிரச்சினை எதுவும் இல்லை. இல்லையெனில், அவர்கள் ‘உட்பொருள் அறிய’ (தஃவீல்) முற்படுகின்றனர் என்று இப்னு தைமிய்யா கூறுகிறார்.

உட்பொருள் அறிதல்

தஃவீல்’ எனும் சொல் குர்ஆனில் ஆலஇம்றான் அத்தியாயத்தில் வருகிறது. அவ்வசனம் பின்வருமாறு:

அவன்தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் தெளிவான வசனங்களும் இருக்கின்றன. இவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை பல அந்தரங்கங்களைக் கொண்டவை (முதஷாபிஹாத்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்கள் நிலையற்று இருக்கின்றனவோ அவர்கள் முதஷாபிஹ் வசனங்களின் முதன்மை அர்த்தத்தைத் தேடி (தஃவீலிஹி) அதனால் குழப்பம் ஏற்படுத்த முனைகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் முதன்மை அர்த்தத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் ‘அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதாம். நாங்கள் அவற்றை நம்பிக்கை கொள்கிறோம்’ என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7)

அதாவது குர்ஆனில் தெளிவான, ஒற்றை அர்த்தம் தரும் (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன; பல அர்த்தங்களைத் தரும் (முதஷாபிஹாத்) வசனங்களும் உள்ளன.

முதஷாபிஹாத் என்று சொல்லும்போது எனக்கு ஒர் ஓவியம் நினைவுக்கு வருகிறது. உளவியல் நூல்களில் பிரபலமாகக் காணப்படும் ஓவியம் அது. அந்த ஓவியம் சிலருக்கு ஒரு மூதாட்டியின் படம் போலத் தெரியும்; வேறு சிலருக்கு ஒர் இளம் பெண்ணின் படம் போலத் தெரியும். இருவரும் ஒரே படத்தைத்தான் பார்க்கின்றனர். இருவருமே சரியாகத்தான் பார்க்கின்றனர். இவ்வசனத்தில் வரும் தஷாபஹு – முதஷாபிஹாத் என்ற சொல்லின் கருத்தை இத்தகைய ஓவியம் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

இத்தகைய வசனங்களைப் பலரும் பலவிதமாகப் புரிந்துகொள்ள முடியும். அவை அனைத்துமே சரியான புரிதல்களாகவும் இருக்க முடியும். மேலும் அவை ஒன்றுக்கொன்று முரணான அல்லது எதிர்க்கருத்துகள் கொண்ட அர்த்தங்களாக அன்றி ஒன்றையொன்று பலப்படுத்தக்கூடியவையாக இருக்கும்.

இவ்வசனத்தில் வரும் ‘ஸைஃக்’ என்ற பதத்தை ‘ஒருநிலையற்ற’ தன்மை என்று சொல்லலாம். மேலும் இங்கு இறைவன், ‘ஃபிக்ரு’ என்று சொல்லாமல் ‘குலூபு’ என்று சொல்வதைக் கவனிக்கவும். இங்கு வேதத்தைப் புரிந்துகொள்வதைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கு புரிந்துகொள்வதற்கு ‘சிந்தனை’யைக் குறிப்பிடாமல், ‘கல்பு‘ என்பதை இறைவன் குறிப்பிடுகிறான்.

கல்பு’ என்பது சிந்தனையும் மனதும் இணையும் புள்ளி ஆகும். இவை இரண்டும் சேர்ந்துதான் ‘கல்பு’ என்றாகிறது. இவ்வாறாக பகுத்தறிவும், உணர்வும் இணையும்போது அது சமமற்ற நிலையில் இருந்தால், அவர்கள் பல அர்த்தம் தரும் — தெளிவு குறைந்த — வசனங்களின் பின் சென்று அதில் அவர்கள் என்ன புரிந்துகொள்கிறார்களோ அதுதான் அதன் பிரதானமான, ஒரே அர்த்தம் என்று கூறுவார்கள். இங்கு ‘தெளிவு குறைவான’ என்பது மனிதர்களாகிய நம் பார்வையிலிருந்து சொல்லப்படுவது ஆகும். அல்லாஹ்வைப் பொறுத்தவரை அவன் அவற்றின் தெளிவான பொருளை அறிந்தவன்.

இப்போது, அவர்கள் உண்மையிலேயே தெளிவு குறைந்த வசனங்களின் முதன்மை அர்த்தத்தை அறிந்திருக்கிறார்களா அல்லது அறிவைப் பொருட்படுத்தாமல் அப்படிக் கூறுகிறார்களா என்பது குறித்து கருத்துவேறுபாடுகள் உள்ளன. இதை விளக்குவதற்கு இந்த வசனத்தின் அறபி மூலத்தில் இடப்பட்டுள்ள நிறுத்தற்குறிகளைக் கவனிப்போம். ‘வ மா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு’ என்ற சொற்றோடரின் இறுதியில் முற்றுப் புள்ளியிட்டு, ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அவற்றின் முதன்மை அர்த்தத்தை அறியமாட்டார்கள்’ என்று சலஃபிகள் பொருள் கொள்கின்றனர்.

முஃதஸிலாக்களோ அச்சொற்றொடரின் இறுதியில் காற்புள்ளியிட்டு ‘வ மா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு, வர் றாசிஃகூன ஃபில் இல்மீ’ என்று படிக்கின்றனர். இப்போது இதன் பொருள் ‘அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களையும் தவிர வேறு எவரும் அவற்றின் முதன்மை அர்த்தத்தை அறியமாட்டார்கள்’ என மாறுகிறது.

இவ்விரண்டிலும், ஒன்று மட்டும் சரியானது, மற்றொன்று தவறானது என்று யாரும் கூற முடியாது.

சலஃபிகளும் முஃதஸிலாக்களும்

சலஃபிகளின் கருத்துப்படி, எல்லா வசனங்களும் இறைவனிடமிருந்து வந்தவை என்பதால் அறிஞர்கள் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும்போதிலும் அவர்கள் முதஷாபிஹாத் வசனங்களின் உள்ளே சென்று அறிவைப் பயன்படுத்தி அவற்றின் உள்ளர்த்தங்களை வெளிக்கொணர முயற்சி செய்வதில்லை. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்கின்றனர். முஃதஸிலாக்களோ அல்லாஹ்வும் அறிஞர்களும் இத்தகைய வசனங்களின் முழு அர்த்தங்களை அறிவர் என்கின்றனர்.

இப்போது கேள்வி என்னவென்றால், இவ்வாறு கருத்துவேறுபாடு கொண்டோரிடையே ஏன் இறுக்கம் ஏற்பட வேண்டும். ஒருவர்மீது ஒருவர் குற்றம் சுமத்தி, ஏன் பிரிவினை ஏற்படுத்த வேண்டும்? மாற்றுக் கருத்து கொண்டோரையும் சேர்த்து வாழும் சூழலை நாம் உருவாக்க முடியாதா என்ன? சிலர் ஒரு விஷயத்தை ஒரு கோணத்தில் புரிந்துகொள்வர். இன்னும் சிலர் அதை வேறு கோணத்தில் புரிந்துகொள்வர். மேலும் சிலர் அவ்விஷயத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ளக் கூடும். இதை வைத்துக்கொண்டு முஃதஸிலீ என்றும் சலஃபீ என்றும், ‘நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்றும் சொல்வது சரியா? இன்று நம் மத்தியில் இதுதானே நிகழ்கிறது?!

கிட்டத்தட்ட 800 அல்லது 1000 ஆண்டுகளாக நாம் மனதளவில் கோமா நிலையில் இருந்துவிட்டதால் இவ்வரலாறுகளின் மீது படிந்துவிட்ட தூசு அகற்றப்படாமலேயே உள்ளது. எனவே இதன் மீது ஒரு புதுப்பார்வை செலுத்துவது அவசியமாகிறது. எல்லோரையும் உள்ளடக்கிய இத்தகைய பார்வை, முஸ்லிம்களிடையே பாலங்களை உருவாக்கும். மேற்சொன்ன வசனத்தின் கருத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் எனில், இதுகுறித்து நான் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. நாம் இதற்கு மேல் இவ்வகுப்புகளை நடத்துவதற்கான தேவைகூட இருக்காது. எனினும் இது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து நாம் மேலும் பார்ப்போம்.

அடுத்து, சிலர் (ஷீஆக்கள்) இவ்வசனத்தில் வரும் ‘கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள்’ என்போர் இமாம்கள் என்கின்றனர். இமாம்கள் மீது மரியாதை வைத்தவனாகச் சொல்கிறேன், அப்படியெனில் அல்லாஹ் அந்த வசனத்தில் வெளிப்படையாகவே ‘இமாம்’ என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? எனவே ‘கல்வியில் உறுதிப்பாடு உடையோர்’ என்பதில் இமாம்களும் இருக்கக்கூடும்; அவர்களோடு சேர்ந்து பிறரும் இருக்கக்கூடும் என்ற பரந்த பொருள் கொள்வதே சரியானது.

மேலும் தொடர்வதற்கு முன் குர்ஆனில் இடப்பட்ட நிறுத்தற்குறிகள்பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். முதலில் குர்ஆன் இறக்கப்பட்டபோது அதில் குறிகள் எதுவும் இருக்கவில்லை. அதில் உயிரொலிக் குறிகள்கூட (ஃபத்ஹா, கஸ்றா போன்றவை) இருக்கவில்லை. அறபு அல்லாத பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இது பெரும் சிரமத்தைக் கொடுத்தது. இமாம் அலீ காலத்தில் இப்பிரச்சினை கவனம் பெற்றபோது, அவர் அபுல் அஸ்வது அத்துவலீ என்பவரிடம் இதற்குத் தீர்வு காணப் பணித்தார். அதன் பின்னர்தான் அறபி எழுத்துக்களின் மீது புள்ளிகள் இடுவது புழக்கத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து பிற குறிகளும் நிறுத்தற்குறிகளும் இடுவது புழக்கத்திற்கு வந்தது. அப்பாசிய்யா ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் விஞ்ஞானமும் அறிவொளியும் உச்ச நிலையில் இருந்தபோது இது நிகழ்ந்திருக்கும் என்று கணிக்கிறேன்.

மேலும், குர்ஆனில் வேறுசில இடங்களிலும் இத்தகைய வசனங்கள் உள்ளன. அதாவது, முற்றுப்புள்ளியிட்டு நிறுத்திவிட வேண்டுமா, அல்லது காற்புள்ளியிட்டு தொடர்ந்து படிக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு நிலவும் வசனங்கள் வேறுசிலவும் உள்ளன.

சிந்தனையும் நம்பிக்கையும்

பெரும்பாலான முதஷாபிஹாத் வசனங்கள் பரிசுத்தமான அல்லாஹ் குறித்து வரும் வசனங்கள் ஆகும். குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அல்லாஹ் பற்றிய செய்திகளையும் விவரணங்களையும் மனித அறிவு ஒன்று, சிந்தித்துப் பொருள்கொள்ள முயலும்; அல்லது ‘என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியாது, எனவே அல்லாஹ் சொல்வதைப் பொதுவாகப் புரிந்துகொண்டு அதன் குறிப்பான அர்த்தங்களை அவனிடமே விட்டுவிடுவோம்’ என்று சொல்லி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும். இதில், சிந்தித்து அவற்றின் அர்த்தங்களைச் செம்மையாக்க விரும்பியவர்கள் அவை குறித்து ஆழ்ந்து சிந்தித்தனர்.

எடுத்துக்காட்டாக, பரிசுத்தமான  அல்லாஹ் குர்ஆனில் ‘யதுல்லாஹி ஃபவ்க அய்தீஹிம்’ என்று கூறுகிறான். ‘யதுல்லாஹ்’ என்றால் அல்லாஹ்வின் கை என்று பொருள். சலஃபிகள், முஃதஸிலாக்கள் என எல்லோரும் இவ்வசனத்தை சிந்தித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர். அறபி மொழியில் ‘மஜாஸ்’ என்று ஒர் இலக்கணக் கோட்பாடு உண்டு. ஒரு சொல்லை அதன் நேர்ப்பொருளில் புரிந்துகொள்ளாமல், அது ஆற்றும் செயலை வைத்து அதைப் புரிந்துகொள்வது ‘மஜாஸ் லுகவீ ’ எனப்படுகிறது. ஆக ‘யதுல்லாஹ்’ என்பதை, கையின் ஆற்றல்கள் என்ற பொருளில் அல்லாஹ்வின் அதிகாரம் அல்லது அல்லாஹ்வின் உதவிக் கரம் அல்லது அல்லாஹ்வின் ஆதரவுக் கரம் என்று பொருள் கொள்ளலாம். இப்படிச் சில சிந்தனைப் பள்ளிகள் பொருள் கொண்டன. வேறுசில சிந்தனைப் பள்ளிகள் “இல்லை. அல்லாஹ் ‘கை’ என்று சொல்கிறான் எனில், அதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். எனினும் அதன் அசல் கருத்து என்ன என்று நாங்கள் அறிய மாட்டோம். இதற்கு மேல் இதில் சிந்திக்க மாட்டோம்” என்று கூறின.

அடுத்து ‘முஷப்பிஹாத்’ என்று மற்றொரு சிந்தனையும் இருந்தது. இவர்கள், சொற்களை நேர்ப்பொருளில் அர்த்தம் கொண்டனர். ‘யதுல்லாஹ்’ எனும்போது, அல்லாஹ்வும் மனிதர்களைப் போலவே கைகளைப் பெற்றிருக்கிறான் என்றனர். எனினும் இவர்கள் மிகச் சொற்பமாகவே இருந்தனர்.

சலஃபிகள், அல்லாஹ் ‘கை’ என்று கூறுகிறான் எனில் அதற்கு மனித அடையாளம் கொடுக்க முடியாது என்றனர். அல்லாஹ் கூறியபடி அது ஒரு கை. ஆனால், அதன் தன்மையைப் பற்றி நாங்கள் அறிய மாட்டோம் என்றனர். அதாவது அல்லாஹ்தான் அதன் உள்ளர்த்தத்தை அறிவான் (வ மா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்). மேலும் தங்களையே அறிவில் சிறந்தவர்களாகக் கருதி, ‘நாங்கள் அதன் அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறோம்’ என்கின்றனர்.

இவ்வசனத்தின் இறுதியில் வரும் ‘அல்பாபு’ (ஒருமை: லுபு) என்பதற்கு ‘மையம்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது அறிவு ஞானத்தின் மையமாகத் திகழ்வோரைத் தவிர வேறு எவரும் இதை உணரமாட்டார்கள் என்று பொருள்படுகிறது. இவ்வசனத்தின் கடைசிப் பகுதிகூட இருவிதக் கருத்துகளுக்கு இடமளிக்கிறது.

இப்னு தைமிய்யா அறிஞர்களை நான்காக வகைப்படுத்தினார் என்று பார்த்தோம். தத்துவவாதிகள், முஃதஸிலாக்கள், மாதுரீதியா என்று அழைக்கப்படும் முஃதஸிலாவின் ஒரு கிளையினர், இறுதியாக அஷ்அரிகள். முஃதஸிலாவுக்கும் மாதுரீதியாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

இந்நான்கு வகையினரும் அசல் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லர் என்று இப்னு தைமிய்யா கூறினார். இதை இப்னு தைமிய்யாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “இந்த நான்கு வகை முஸ்லிம் அறிஞர்களும் சலஃபுகளின் பாதையைச் சார்ந்தவர்கள் அல்லர் (மின்ஹாஜு சலஃபு லைச ஹாதிஹில் அர்பஅ)”. தங்களைச் சாராத பிற முஸ்லிம்களை ஏளனமாகப் பார்க்கும் இப்போக்கு இன்றும்கூட இத்தகைய சில மக்களிடம் இருப்பதை நாம் அறிவோம்.

அவர் மேலும் கூறுகிறார், “மூல உரைகளிலிருந்து அன்றி வேறு எதிலிருந்தும் கோட்பாடுகளைப் பெற முடியாது (லி அன்னல் அகாயித இல்லாமல் மஃஸூஸ்)”. இது பிரச்சினைக்குரிய வாதம் ஆகும். மூல உரைகளை பகுத்தறிவுரீதியாகப் புரிந்துகொள்ளாமல் அதிலிருந்து கோட்பாடுகளைப் பெறுவது எப்படிச் சாத்தியமாகும் என்பது எனக்கு விளங்கவில்லை. அவர் இருந்திருந்தால் இதை அவரிடமே கேட்டிருக்கலாம்.

அவர் மேலும் கூறுவதாவது “சலஃபிகள் உள்ளத்தை நம்புபவர்கள் அல்லர். ஏனெனில் உள்ளம் வழிதவறக் கூடும். எனவே, அவர்கள் மூல உரைகளின் மீதுதான் உறுதியான நம்பிக்கை கொள்கின்றனர்.” மீண்டும் அதே கேள்வியை எழுப்புகிறேன். சிந்திக்கும் உள்ளமின்றி, உரைகளைப் புரிந்துகொள்ளாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?!

சலஃபிகள், பகுத்தறிவுரீதியாகக் குர்ஆனுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்குப் புறம்பானது என்பது போலச் சொல்கின்றனர். ஏனெனில் இது சலஃபுகளான முஸ்லிம்களின் முன்னோர்கள் —நபித்தோழர்களும், அவர்களுக்கடுத்த தலைமுறையினரும் (தாபிஈன்கள்) — செய்திராதது என்கின்றனர்.

வசீலா அல்லது தவஸ்ஸுல் என்ற அறபிச் சொல்லை மன்னிக்கப்படுவதற்கான வழி என்று சொல்லலாம். சிலர் தவஸ்ஸுலை மத்தியஸ்தம் என்று மொழிபெயர்க்கின்றனர். சலஃபிகள், தவஸ்ஸுலும் ஓரிறைக் கொள்கையும் (தவ்ஹீது) ஒன்றுக்கொன்று முரணானவை என்று நம்புகின்றனர். இக்கருத்தை இன்னும் பெரிதாக்கி, இறைத்தூதரின் அடக்கத்தலத்துக்குச் செல்வதே ஓரிறைக் கொள்கைக்கு முரணானது என்றும் சொல்கின்றனர். மேலும் அங்கு இறைத்தூதரை மனதில் வைத்துச் செய்யப்படும் வழிபாடுகளும் ஏதோ ஒருவிதத்தில் தவ்ஹீதுக்கு எதிரானவை என்று கருதுகின்றனர். அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வது, இறந்தவர்களை நினைவுகூர்வது போன்ற விஷயங்கள் அவர்கள் புரிந்துவைத்துள்ள ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என்று கருதி மிக எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். இவையனைத்தும் நூதனச் செயல் (பித்அத்) என்று கருதுகின்றனர்.

அல்லாஹ்வின் கை குறித்து அவர்கள் கொண்டுள்ள கருத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். இப்னுல் ஜவ்ஸீ என்றொரு பிரபல ஹம்பலீ சிந்தனையாளர் ‘தஃபா அத்தஷ்பீஹ்’ என்றொரு நூலை எழுதினார். அதன் பொருள் தஷ்பீஹை மறுப்பது என்பதாகும். தஷ்பீஹ் என்பது அல்லாஹ்வின் கரம்பற்றி சலஃபிகள் கொண்டிருக்கும் கருத்தைக் குறிக்கும். ஆக ஒரு ஹம்பலீ சிந்தனையாளரே, சலஃபிகளின் கருத்தை மறுத்து எழுதியிருக்கிறார் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

மற்றொரு வசனத்தில் ‘அல்லாஹ்வின் முகத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழிந்தே போகும் (குல்லு ஷைய்யின் ஹாலிகு இல்லா வஜ்ஹஹு)’ (28:88) என்று அல்லாஹ் கூறுகிறான். இதையும் சலஃபிகள், ‘மஜாஸி’ முறையில் புரிந்துகொள்ளாமல் நேர்ப்பொருளில் புரிந்துகொள்கின்றனர். இதில் முகம் என்பதன் பொருள் என்ன என்று கேட்டால் “எங்களுக்குத் தெரியாது. இதை யாரும் விளக்க முடியாது. இறைவன் சொல்வதை நாங்கள் அப்படியே நம்பிவிடுவோம்” என்கின்றனர்.

இத்தகைய கருத்து நபிமொழிகளிலும் காணக்கிடைக்கிறது. சலஃபீ நூல்களிலும் பிறவற்றிலும் வரும் ஒரு நபிமொழி, “நிச்சயமாக அல்லாஹ் ஆதமை தன் கையால் பக்குவப்படுத்தினான் – இன்னல்லாஹ ஃகம்மற இப்ன ஆதம பி யதிஹி” என்று சொல்கிறது. இதிலும் கை என்பதன் பொருள் என்னவென்று சலஃபிகளிடம் கேட்டால் அவர்கள் அதே பதிலைத்தான் தருவர்.

பிரபலமான மற்றொரு ஹதீஸில் இறைத்தூதர் கூறியதாக அவர்கள் கூறுவதாவது: “பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களின் உள்ளம் அர்றஹ்மானின் இரு விரல்களுக்கிடையே உள்ளது (கல்புன் முஃமினி பைன இஸ்பஐனி மின் அஸாபி அர்றஹ்மான்)”. இதிலுள்ள விரல்கள் என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்று அவர்களிடம் கேட்டால், “அது விரல்கள்தாம், ஆனால் எங்களால் அதை விவரிக்க முடியாது” என்று பதில் சொல்வர். இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இறந்தவர்களின் நிலை

அடுத்து ‘இஸ்திஃகாஸா’ பற்றிப் பார்ப்போம். இதன் பொருள் ‘காப்பாற்றுதல்’ என்பதாகும். அதாவது ஆபத்தில் சிக்கிய ஒருவர் தன்னைக் காப்பாற்றக் கோருவது என்று சொல்லலாம். சலஃபிகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமாவது இவ்வாறு கோருவது — அவர்கள் புரிந்து வைத்துள்ள — ஓரிறைக் கொள்கையை மீறுவதாகிவிடும். அப்படிச் செய்யும் ஒருவர் பெரும் பாவம் செய்தவராகிவிடுகிறார். இதற்கு ஆதாரமாக அவர்கள் சில நபிமொழிகளை மேற்கோள் காட்டுகின்றனர். அதில் ஒன்று பின்வருமாறு: ‘இன்னமா லா யுஸ்திஃகாஃபு பி வ இன்னம யுஸ்திஃகாஃபு  பில்லாஹ்’. இறைத்தூதர் கூறியதாக அவர்கள் சொல்வதாவது ‘உங்களைக் காப்பாற்றுமாறு என்னிடம் நீங்கள் உதவி கோர முடியாது. அல்லாஹ்விடம் மட்டுமே அவ்வாறு கோர முடியும்’. ஃகவுஃப் என்பது மரண அபாயத்தில் இருக்கும் ஒருவரை உயிரூட்டி மீட்பது போன்றதாகும். இதிலிருந்து, அவர்களுடைய சில அறிஞர்கள் பின்வரும் கோட்பாட்டை முன்மொழிந்தனர்: ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கேட்பது, மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் மூழ்கிக்கொண்டிருக்கும் மற்றொருவன் உதவி கேட்பது போன்றதாகும் (இஸ்திஃகாஃபி தில் மஹ்லுக் பில் மஹ்லுக் அஸ்திஃகாஃபி அல் கரீக் பில் கரீக்).

இறைத்தூதர்களும் இறைநேசர்களும் இறந்த பிறகு மண்ணறையில் உயிரோடிருப்பார்கள் என்று கருதப்பட்டாலும்கூட முஸ்லிம்கள் அவர்களிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று இப்னு தைமிய்யா கூறுகிறார். இறந்தவர்களின் மண்ணறை நிலைகுறித்துப் பல கருத்துகள் உள்ளன. ஒருவர் இறந்த பிறகு அவரிடம் யாராவது பேசினால் அது அவர்களுக்குக் கேட்கும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர் என்பதை சலஃபீ வகையினர் உணர்ந்துள்ளனர்.

இறைத்தூதரின் நம்பகமான வரலாற்றில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு போருக்குப் பிறகு, இறைத்தூதர் போரில் கொல்லப்பட்டவர்கள் அருகே சென்று சிதறிக் கிடக்கும் சடலங்களைப் பார்த்துப் பேசினார். அப்போது அவருடன் இருந்த சிலர், ‘இறந்தவர்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, அதற்கு அவர் ‘நீங்கள் என்னைச் செவிமடுப்பதைப் போலவே அவர்களும் செவிமடுக்கின்றனர்’ என்று பதிலளித்தார்.

தங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டி, சலஃபிகள் இந்த நபிமொழியை எப்படியாவது மறுதலிக்க விரும்பக்கூடும். எனினும் இது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபிமொழியாக இருப்பதால் இதை ஏற்றுக்கொண்டு சமாளிக்கும் கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்கள், ‘இறைத்தூதர்களும் இறைநேசர்களும் மண்ணறையில் உயிரோடு இருந்தாலும்கூட, யாரும் அவர்களிடம் பேசவோ, எதுவும் கேட்கவோ கூடாது. (வ இன் கானு அஹ்யாவு ஃபீ அல் குபூரிஹிம்).’ இந்தப் பேச்சுக்கே இங்கு இடமில்லை என்பது போல முடித்துக்கொள்கின்றனர்.

இறந்தவர்களைப் பொறுத்தவரை சலஃபிகளின் நிலைப்பாடு அவர்களை மட்டம் தட்டுவதாகவும், அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதாகவும்தான் இருக்கிறது. இவ்விஷயத்தில் நான் ஓரளவிற்குத் துல்லியமாக சலஃபிகளை விளக்க முயன்றால் இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: ‘இறந்தவர்கள் இவ்வுலகைவிட்டு அறுதியாகச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கும், உலகில் வாழ்பவர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பு எதுவும் இல்லை. இறந்தவர்கள் சம்பந்தமாக எதைச் செய்தாலும் அது நேர விரயம் மட்டுமின்றி, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயலாகிவிடும். அது இறைநம்பிக்கையை அகற்றிவிடும்’ என்று சலஃபிகள் கருதுகின்றனர். இது ஒருவரை இணைவைப்பவராக்கிவிடுகிறது (முஷ்ரிக்) என்ற அளவுக்கு அவர்கள் செல்கின்றனர். இவ்வாறு அவர்களின் நூல்களிலேயே சொல்லப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் பற்றியும், சமாதிகள் பற்றியும் அவர்களுடைய நூல்களில் கூறப்பட்டுள்ளதை நான் நேர்மையாக இங்கு எடுத்துச் சொல்லியாக வேண்டும். அன்னை ஆயிஷா அறிவிப்பதாக ஒரு ஹதீஸை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். அதில் ‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கண்டித்துள்ளான். ஏனெனில் அவர்கள் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை பள்ளிவாசல்களாக மாற்றிவிட்டனர். அல்லாஹ்வே, என் அடக்கத்தலத்தை வழிபாட்டுத்தலமாக மாற்றிவிடாதே (லஅனல்லாஹு யஹூத வந்நாசாரா இத்தஃகது குபூற அன்பியாஹிம் மசாஜிது)’ என்று இறைத்தூதர் தன் மரணத் தருவாயில் (ஃபீ மறளி மவ்திஹி) கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

மற்றொரு நபிமொழியையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். ‘இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை பள்ளிவாசல்களாக மாற்றிவிட்ட மக்களின் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகரிக்கும்’ என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.

முரண்

சலஃபிகளின் நூல்களிலேயே மற்றொரு அறிவிப்பும் உள்ளது.  இப்னு தைமிய்யா கூறுவதாவது: ‘நல்லோர்களான முன்னோர்கள் (சலஃபுஸ் ஸாலிஹ்) இறைத்தூதரின் மண்ணறை அருகே செல்லும் பொழுதெல்லாம், அவருக்கு சலாம் சொல்வர் (கானு சல்லிமூன அலை). இவர்களின் நூல்களில் இறைத்தூதரின் மண்ணறை ‘அர்றவ்ளா அஷ்ஷரீஃபா’ (கண்ணியமான சிறு தோட்டம்) என்று அழைக்கப்படுகிறது. ஆக இப்னு தைமிய்யா ஒத்துக்கொண்ட விஷயத்தை நாம் செய்தால், அவர்கள் நம்மைத் தடுக்கின்றனர். இத்தனைக்கும் நபித்தோழர்கள் செய்ததுதான் ஆதர்சமானது என்று இவர்கள் நம்புகின்றனர். நபித்தோழர்கள் இறைத்தூதரின் மண்ணறைக்குச் சென்று சலாம் கூறினார்கள் எனில் நம்மை ஏன் தடுக்கின்றனர்?! ஆக இவர்களுக்குள்ளாகவே ஒரு முரண்பாடு காணப்படுகிறது.

சலஃபீ நூல்களில் உள்ள மற்றொரு நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை இப்போது படித்துக் காட்டுகிறேன். ‘வலகது கால நாஃபிஅ மவுலா அப்தில்லாஹ் இப்னு உமர் கான இப்னு உமர் யுசல்லிம அலல் கப்ரு றஅய்துஹு மிஅத மர்ற அவ் அக்ஃபர் யஜீஉ இலல் கப்ரு வ ருஇய வாதி அன் யதஹு அலா மக்அதிந் நபிய்யி (ஸல்) மினல் மிம்பர் ஸும்ம வலஅஹா அலா வஜ்ஹி’. அதாவது, நாஃபிஅ என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமருக்கு மிக நெருக்கமானவர் (மௌலா). இவர்தான் அப்துல்லாஹ் இப்னு உமர் கூறும் ஹதீஸ்களின் முதன்மை அறிவிப்பாளர். நாஃபிஅ அறிவிப்பதாவது ‘இப்னு உமர் இறைத்தூதரின் மண்ணறைக்கு சலாம் சொல்பவராக இருந்தார். அவர் இவ்வாறு செய்வதை நான் நூற்றுக்கும் அதிகமான முறை பார்த்திருக்கிறேன். இறைத்தூதரின் அடக்கத்தலத்துக்கு வரும்போதெல்லாம் அவர், இறைத்தூதர் மிம்பரில் அமரும் இடத்தின் மீது கை வைத்து, பிறகு தன் முகத்தின் மீது கை வைப்பார்’.

என்னால் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது. எனினும் இன்று ஹஜ் அல்லது உம்றாவுக்குச் செல்பவர்கள் இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். (இமாம் அல்ஆஸி ஹஜ் செய்வதற்கு சஊதி அரசு விசா அளிப்பதில்லை – மொழிபெயர்ப்பாளர்) எனில் அப்துல்லாஹ் இப்னு உமரை இவர்கள் என்ன செய்வார்கள்? அவருக்குக் கசையடி கொடுத்து, உதைத்து வெளியே தள்ளுவார்களா? இது நூதனச் செயல் என்று சொல்லி அவரை ‘இணைவைப்பவர்’ என்று அழைப்பார்களா? இத்தகவல்கள் எல்லாம் ஏதோ பெயர் தெரியாத அறிஞர்களிடமிருந்து பெறப்பட்டவை அல்ல. இவையனைத்தும் சலஃபிகளின் நூல்களிலிருந்தே பெறப்பட்டுள்ளன.

எல்லா ஹதீஸ் நூல்களிலும் பல முறை இடம்பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸையும் இப்னு தைமிய்யா மேற்கோள் காட்டுகிறார். அதில் சொல்வதாவது ‘மக்காவிலுள்ள புனிதப் பள்ளிவாசல், மதீனாவிலுள்ள இறைத்தூதரின் பள்ளிவாசல், அல்குத்ஸில் இருக்கும் அக்ஸா பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர்த்து வேறு எந்தப் பள்ளிவாசலுக்கும் நீங்கள் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளக் கூடாது (லா துஷத்துர் ரிஹாலு இல்லா இலா ஸலாஸதி மசாஜிது அல்மஸ்ஜிதுல் ஹறாம் வ மஸ்ஜிதி ஹாதா வ மஸ்ஜிதுல்  அக்ஸா)’. இதன் பொருள் என்ன? இவை தவிர உள்ள பிற பள்ளிவாசல்களிருந்து விலகியிருக்க வேண்டுமா?

மதீனாவில் இறைத்தூதரின் (ஸல்) பள்ளிவாசல், ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தது. அதன் அளவுபற்றிய தகவல்களை நான் பார்த்ததில்லை. எனினும் ஊகித்துச் சொன்னால் சில நூறு பேர் நின்று தொழும் அளவுக்கு அது இருந்தது எனலாம். அக்கட்டடமும் சாதாரணமாக இருந்தது. அதன் தரை பாலைவன மணலால் ஆனது. அதன் அருகில் இருந்த வீட்டில்தான் அன்னை ஆயிஷாவோடு இறைத்தூதர் வசித்துவந்தார். அவர் இறந்த பிறகு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படாமல் அவருடைய வீட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டார். பிற்காலத்தில் அப்பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டபோது, இறைத்தூதரின் வீடாகிய அடக்கத்தலம் பள்ளிவாசலோடு இணைந்தது. ஆக இறைத்தூதர், பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதைக் கவனிக்கவும்.

இறந்தவர்கள், அடக்கத்தலம் போன்றவை குறித்த சலஃபிகளின் கருத்தைச் சரிபார்க்க வேண்டுமெனில், இறைத்தூதர் விஷயத்திலும் அவ்வாறே செய்யப்பட்டிருக்க வேண்டும். நல்லோர்களான முன்னோர்கள் (சலஃபுஸ் ஸாலிஹீன்) இறைத்தூதரை தொலைவான இடத்தில் அடக்கம் செய்திருக்க வேண்டும். பொது அடக்கத்தலமான அல்பகீயா (ஜன்னதுல் பகீ) அங்கிருந்து தொலைவில் உள்ளது. அவர்கள் அவரை அங்கு அடக்கம் செய்திருக்கலாமல்லவா?!

இதுபற்றியெல்லாம் சலஃபிகள் சிந்திக்கிறார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. எளிமையான இதைக் கூடச் சிந்திக்காததால் விஷயமானது பிரச்சினையில் சென்று முடிகிறது. இதுபற்றி வேறு என்னதான் சொல்வது?!

இதையெல்லாம் நேர்மையாக நின்று பார்க்கும்பொழுது, இறைத்தூதரின் அருளை உணர முயல்வது (தபர்ருக்) அனுமதிக்கப்பட்டது என்று சொல்வதே சரி என நினைக்கிறேன். அவ்வாறு செய்வது உறுதிகொண்ட முஸ்லிம் ஒருவரின் ஆகுமான பண்புகளுள் உள்ளதே. அதாவது இறைத்தூதரின் பள்ளிவாசலைக் காணச் செல்வது, அவர் வாழ்ந்த இடத்தில் அவருடைய அன்றாட வாழ்வு, போராட்டம் போன்ற நினைவுகளை மீட்டெடுப்பது போன்றவை விரும்பத்தக்க செயல்கள் (முஸ்தஹ்சன்) ஆகும்.

இவை எல்லாமே நம் வரலாற்றின் அங்கமாகும். நம்முடைய அங்கமாகும். நம் எண்ணங்களில், நம் உணர்வுகளில் இறைத்தூதரைக் கண்ணியப்படுத்தவில்லை எனில் வேறு எப்படித்தான் அவரைக் கண்ணியப்படுத்தப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை. சாதாரணமாக மரணித்த மற்ற மனிதர்களைப் போல அவரையும் கருதி மறந்துவிடப் போகிறோமா என்ன? இப்படிச் செய்வது சரிதானா?

எதிர்வினையா?

மண்ணறை பற்றிய சலஃபிகளின் கருத்து, அக்காலக்கட்டத்தில் இருந்த வேறுசில குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிர்வினையாக உருவானதா? அல்லது அவை அவர்களின் சொந்தச் சிந்தனையின் வெளிப்பாடா என்று பார்ப்போம்.

அடக்கத்தலங்கள் குறித்து சலஃபிகள் கொண்டுள்ள கருத்துகள், வேறு சிலவற்றின் எதிர்வினையாகத் தோன்றியவை என்ற பார்வையிலும் உண்மை உள்ளது. சலஃபிகளின் மூன்று காலகட்டங்களைப் பற்றி ஏற்கனவே கூறினேன். இதில் மூன்றாவது கட்டத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு ஈராக், ஈரான் மற்றும் மேலும் சில ஷீஆ பகுதிகளுக்குச் சென்றார். அப்போது ஈரானில் சஃபவீ ஷீஆயிசமும், உஸ்மானியத் துருக்கியில் ஸூஃபித்துவ இஸ்லாமும் நடைமுறையில் இருந்தன. அங்கு சில முஸ்லிம்கள் மண்ணறைகளுக்குச் சென்று அதில் அடக்கம் செய்யப்பட்ட வலீ, ஷைஃகு அல்லது இமாம் போன்றோரிடத்தில், அவர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு செவிசாய்ப்பர் என்று நம்பி அவர்களிடம் நோய் நிவாரணம் போன்றவற்றைக் கேட்பதைக் கண்டார். இவை கோட்பாட்டு அடிப்படையில் உருவான நடைமுறைகள் அல்ல.  நான் அறிந்தவரையில், இதற்கு எந்தத் தத்துவப் பின்னணியோ, அறிஞர்களின் ஆய்வோ இல்லை. இவை இஸ்லாமிய நடைமுறை அல்லது வழிபாட்டு முறை என்று யாரும் சொல்லவில்லை.  கல்வியறிவற்ற, அன்றைய கலாச்சாரத்தில் ஊறிய சில மக்கள்தாம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சில விரும்பத்தகாத மக்கள் (இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். எனினும் இக்கருத்தை உணர்த்துவதற்காக இப்படிச் சொல்கிறேன்) இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த இப்னு அப்துல் வஹ்ஹாபு, அம்மக்கள் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே  இருக்கும் உறவை மீறிவிட்டனர் என்று நினைத்தார். இதை ஊதிப் பெரிதாக்கி, ‘இப்படியே சென்றால் எல்லா முஸ்லிம்களும் வழிதவறிச் சென்றுவிடுவார்கள். ஆகவே காலம் கடந்துவிடும் முன் ஏதாவது செய்தாக வேண்டும்’ என்று எண்ணிய அவர், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அப்பாமர முஸ்லிம்களைத் தேவையின்றி எதிர்த்தார். பிறகு இது ராணுவ நடவடிக்கையாக மாறியது.

இந்தப் பிரச்சினையை சரியாக அணுக வேண்டுமெனில் அதன் வேரைத்தான் களைய வேண்டும். அதாவது அத்தகைய கல்வியறிவற்ற, பாமர மக்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். தமக்கிருந்த அறிவைக் கொண்டு மிகச் சிறந்த முஸ்லிம்களாக இருக்க அவர்கள் முற்பட்டனர். தங்கள் செயல்களால் மிகச் சிறந்த முஸ்லிம்களாகத் திகழ முயன்ற பாமர மக்களைத் தாக்குவதும், அவர்களுடைய பள்ளிவாசல்களை இடிப்பதும் என்ன மாதிரியான அணுகுமுறை? ‘எங்கிருந்தோ வந்த நீங்கள் சிறந்த முஸ்லிம்களாக இருந்ததற்காக எங்களைத் தாக்குகிறீர்களா?!’ என்று அவர்கள் நினைத்திருக்கமாட்டார்களா?  இது அவர்களிடையே மனக்கசப்பையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது; இன்றளவும் இது நீடிக்கிறது.

நஜ்து பகுதியின் அறபுக் கோத்திரங்கள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை ஆதரித்தன. சஊதுக் குடும்பத்துக்கும், அப்துல் வஹ்ஹாபுக்கும் இடையே திருமண உறவு இருந்தது. அப்துல் வஹ்ஹாபின் மகளையோ, பேரப்பிள்ளையையோ முஹம்மது இப்னு சஊது மணமுடித்திருந்தார். இப்னு சஊது பாமர மக்களுக்கு எதிராகப் போராட்ட மனப்பான்மையைக் கொண்டிருந்தார். அவர்களை ‘நூதனவாதிகள்’ என்றும், ‘இணைவைப்பவர்கள் என்றும் கூறினார். அறியாமையில் இருந்த மக்கள்மீது இணைவைப்புக் குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராகப் போர் தொடுப்பது சரிகாணப்பட்டது. முதலில் இவர்களுக்கு எதிராகப் போர் செய்யத் தொடங்கி, பின்னர் உஸ்மானிய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டது. இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஈராக்கில் வஹ்ஹாபிகள் ஷீஆக்களுக்கு எதிராக அளவுமீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், நானறிந்தவரையில் இவர்களுக்கும் சஃபவீகளுக்கும் போர் எதுவும் நடக்கவில்லை. மாறாக வஹ்ஹாபிகளுக்கும் உஸ்மானியர்களுக்கும் இடையேதான் கடும் போர்கள் நிகழ்ந்தன. இதற்குக் காரணம், வஹ்ஹாபிகள் தஸவ்வுஃபுக்கு எதிராக இருந்ததே.

அன்று மொத்த உலகமும் உஸ்மானியர்களுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தது. பிரிவினைவாதிகள், ஐரோப்பியர்கள், அர்மீனியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோரும் சேர்ந்து உஸ்மானியர்களை எதிர்த்துக் கொண்டிருந்தபோது, இது போதாதென்று முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் அவர்களுக்கு எதிராகச் சமயப் போர் தொடுத்தார். வஹ்ஹாபிகளை அடக்குவதற்காக எகிப்தின் ஆட்சியாளரான முஹம்மது அலீ பாஷா ராணுவத்தை அறபியாவுக்கு அனுப்பினார். இதில் தோற்கடிக்கப்பட்ட வஹ்ஹாபிகள் தோல்வியை வெளிக்காட்டாமல் பதுங்கிவிட்டனர். தக்க சமயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனக் கருதி அமைதியாயினர். ஆக இவர்கள் எப்போதுமே பிற முஸ்லிம்களை வெறுக்கும்படியான போர் மனப்பான்மையிலேயே இருந்தனர். இதுதான் நாம் இங்கு விவாதிக்கும் அனைத்தையும் சீர்குலைக்கிறது.

முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களை — வஹ்ஹாபிகளையும்தான் — புறந்தள்ளுவதில்லை. பிறகு போர்தொடுப்பது எப்படிச் சரியாகும்? ஆனால் வஹ்ஹாபிகள் தங்கள் வெறுப்புப் பிரச்சாரத்தால், தங்களோடு உடன்படாத மற்ற அனைவருடனும் போருக்குச் செல்கின்றனர். எல்லோரும் இணைவைப்பவர்கள் ஆகிவிடுகின்றனர். ‘இணைவைப்பு’, ‘நிராகரிப்பு’ போன்ற சொற்கள் சர்வசாதாரணமாக பிரயோகிக்கப்படுகின்றன.

வஹ்ஹாபிகள் தங்கள் பிரச்சாரத்தின் ஆரம்ப நாள்களில், புகை பிடிப்பது தடுக்கப்பட்டது (ஹறாம்) என்றனர். புகைபிடிப்பது தீங்கானது என்ற கருத்தோடு நான் உடன்படுகிறேன். அதை வெறுக்கவும் செய்கிறேன். புகை பிடிப்பதை என்னைவிட அதிகம் வெறுப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் நான் வெறுக்கிறேன் என்பதற்காக புகைபிடிக்கும் வேறொருவரை இணைவைப்பவர் என்றோ, நிராகரிப்பவர் என்றோ சொல்ல முடியாது. ஆனால் வஹ்ஹாபிகள் இதைத்தான் செய்தனர். இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் அவர்கள் காபி அருந்துவதையும் தடை செய்தனர் (ஹறாம்). பின்னாள்களில் இதைத் தளர்த்திக்கொண்டனர்.

இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் போர்களும், பிற அடக்குமுறைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இன்று சஊதி அறபியாவில் நிகழும் சம்பவங்களை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள முடியும். சஊதி அரசு லெபனானிலுள்ள கிறிஸ்தவர்களோடு மிக இணக்கமாக நடந்துகொள்கிறது. ஏனெனில் அவர்கள் வேதக்காரர்களாம் (அஹ்லுல் கிதாபு). ஆனால் பிற முஸ்லிம்களிடம் தஸவ்வுஃப் அல்லது தஷய்யு கோட்பாடுகளின் ஒரு நூலிழையைக் கண்டுவிட்டால் போதும்; ஸூஃபி அல்லது ஷீஆ என்ற வார்த்தைகளைக் கேட்டுவிட்டால் போதும் இவர்கள் உஷார் ஆகிவிடுகின்றனர். இச்சொற்களின் உள்ளர்த்தம் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.

கல்வியறிவுக்கு சஊதிகள் வைத்துள்ள அளவுகோலின்படி பார்த்தால்கூட கற்றறிந்த மிகச்சிறந்த ஷீஆக்கள் பலர் உள்ளனர். அவ்வளவு எளிதில் அவர்களை முஸ்லிமல்லாதவர்கள் என்று புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் நிராகரிப்பவர்கள்தாம். இதனால் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளலாம்; கொலைகூடச் செய்யலாம். இதுவெல்லாம் இவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மட்டும் வேதக்காரர்கள் என்பதற்காகக் கண்ணியப்படுத்த வேண்டும்?! இது நியாயமா?

சிறிய விஷயங்களை இவர்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டனர். அதன் தாக்கம் இன்றுவரை காணப்படுகிறது. இன்றுவரை சஊதிகள் தங்கள் நடவடிக்கைகளால் எல்லோருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் யாருக்கும் வேறுபாடு இல்லை.  அவற்றைப் புரிந்துகொள்வதில்தான் ஒருவரையொருவர் எதிர்க்கின்றனர். அல்லாஹ் எல்லோருக்கும் சிந்தனை ஆற்றலை வழங்கியுள்ளான். அவ்வாற்றல் பரந்த எல்லைகளைக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் அனைவரும் ஒன்று சேர்ந்து கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்ப்பதுபற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? ஆனால் அவர்களோ சுற்றியிருக்கும் அனைத்தையும் எரித்துவிடும் அமிலத்தைப் போல் இருக்கின்றனர். மன்னிக்கவும். நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அரசியல் நடவடிக்கைகளை நாம் அறிவோம். இப்னு தைமிய்யாவின் அரசியல் பின்னணி என்ன? அவருக்கும் அன்றைய ஆட்சியாளர்களுக்கும் இருந்த தொடர்பு எப்படி இருந்தது? என்று பார்ப்போம்.

உண்மையில், இப்னு தைமிய்யா தன் கருத்துகளுக்காக அடக்குமுறைக்கு உள்ளானார். அன்றைய அரசாங்கம் ஆரம்பத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாமல் சிறையில் அடைத்தது. அதுதான் அவரைப் பிரபலமாக்கியது. அறிஞர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும்போது, சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகும்போது பிரபலமடைந்து விடுகின்றனர். அப்போது மக்கள் அவர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வம் காட்டுவர். இப்னு தைமிய்யாவும் அப்படித்தான்.

இத்தனை கோணல்களுக்கு மத்தியிலும் — உண்மையைச் சொன்னால் — எல்லாவற்றிலும் இருப்பதுபோல இதிலும் நல்ல சலஃபிகளும் உள்ளனர்; கெட்ட சலஃபிகளும் உள்ளனர். ஆனால் இங்கு வருந்தத்தக்க விதமாக கெட்டது மற்ற அனைத்தையும் விழுங்கிவிட்டது. நான் ஏற்கனவே மேற்கோள் காட்டிய பல நிகழ்வுகள் இப்னு தைமிய்யாவின் நூல்களில் உள்ளவைதாம். உதாரணமாக வெளியூருக்குச் செல்லும்போது நபித்தோழர்கள் இறைத்தூதரின் அடக்கத்தலத்தை தரிசித்துவிட்டுச் செல்வர் போன்ற செய்திகள் இப்னு தைமிய்யாவின் நூலில் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் இவர்கள் இவற்றை சந்தர்ப்ப சூழலில் வைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றனர். எனவே சலஃபீ என்றாலே மொத்தமாக கெட்டது, மோசமானது என்று சொல்வதற்கில்லை. இதில் மிக நல்ல விஷயங்களும் உள்ளன; பல நல்ல கூற்றுகளும் உள்ளன.

இன்றைய சலஃபிகள், சலஃபீ சிந்தனையைத் தோற்றுவித்த அஹ்மது இப்னு ஹம்பல் அல்லது இப்னு தைமிய்யா போன்று இல்லை. அவர்கள் இருவருமே அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு உள்ளாயினர். ஆனால் இன்று, சலஃபிகள் கிட்டத்தட்ட சஊதி அரசாங்கத்தின் சமய வெளியுறவுத்துறைபோலச் செயல்பட்டுக்கொண்டுள்ளனர். மொத்த சலஃபீ சிந்தனையும் ஒர் அரசாங்கத்தால் கடத்தப்பட்டுவிட்டால், நாம் சொல்ல என்ன இருக்கிறது?! முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும்கூட முன்னிருந்தவர்களின் திசையில் சென்றிருந்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். ஆனால் அவர் வேறு திசையில் சென்றுவிட்டார். அவர் பெற்ற புகழ் எல்லாம், சஊதி அறபியாவின் செல்வத்தால் மட்டுமே பெறப்பட்டது.

தமிழில்: ஜுந்துப்

(நன்றி: மெல்லினம்)

ஆங்கிலத்தில்: Islamic History / Al Salafiyun School of Thought

Related posts

Leave a Comment