கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யூலரிசமும் செக்யூலர்மயமாதலும்

Loading

‘செக்யூலரிசம்’ தொடர்பாக சென்னையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்திய கருத்தரங்கில் SIO மாநிலத் தலைவர் ரிஸ்வான் ஆற்றிய உரை.

செக்யூலரிசம் நவீனச் சிந்தனையில் உருப்பெற்ற ஒரு கருத்தாக்கம். இது தொடர்பாக கல்விப்புலத்தில் ஏராளமான விவாதங்கள் நடந்துவருகின்றன. அதை இஸ்லாமிய நோக்கிலும், பிற சிந்தனைமுறையின் அடிப்படையிலும் விமர்சனப்பூர்வமாகக் கூராய்வு செய்யும் பல அறிஞர்கள் இருக்கிறார்கள். சார்லஸ் டைலர், தலால் அசது, சபா மஹ்மூது, நாகிப் அல்அத்தாஸ் போன்றோர் செக்யூலரிசம் சார்ந்த விவாதங்களுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். நாம் இவர்களின் ஆக்கங்களைக் கற்று நமது விமர்சன நோக்கைக் கூர்தீட்ட வேண்டியது அவசியம். காரணம், பல நாடுகளிலும் இன்றைக்கு முஸ்லிம்கள் செக்யூலரிச அமைப்புமுறையின் கீழேயே வசிக்கிறார்கள். அதனால் இந்தக் கோட்பாடு முஸ்லிம்களின் இருப்பு சார்ந்த ஓர் அம்சமாய் ஆகியுள்ளது.

மதத்தையும் அரசையும் பிரித்தல் என்று செக்யூலரிசத்தை எளிய முறையில் வரையறுக்கலாம். செக்யூலரிசம் பல்வேறு விதமாக மதச்சார்பற்ற நாடுகளில் வெளிப்படும். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது உள்ளடக்கும் (Inclusive) தன்மையில் இருப்பதாகச் சொல்வார்கள். அதுவே பிரான்ஸ் பாணி மதச்சார்பின்மையானது அரசிலிருந்து மதங்களை முற்றிலும் பிரிக்கும் பண்பைக் கொண்டது. அதை ‘லைசிடே’ (Laïcité) என்றழைப்பார்கள். துருக்கியின் மதச்சார்பின்மையை ‘லைக்ளிக்’ என்கிறார்கள். அது பிரான்ஸைவிட மதத்தில் நேரடியாகத் தலையிடுகிறது.

இப்படி செக்யூலரிசம் நடைமுறைப்படுத்தப்படுவதில் வித்தியாசங்கள் இருப்பது உண்மையே. அதேசமயம் அவற்றுக்கு மத்தியிலுள்ள பொதுப் பண்பை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நவீன தேச அரசு எனும் கட்டமைப்புக்குள் இயங்கும்போது அதன் பண்பை அது எல்லா மதச்சார்பற்ற நாடுகளிலும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், சமயத்தை, சமய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரிப்பது அதன் முதன்மையான பொதுப்பண்பு எனலாம். இதுகுறித்து உரையின் பிற்பகுதியில் விவாதிப்போம்.

செக்யூலரிசத்தின் வரலாற்றுப் பின்னணி

பொதுவாக செக்யூலரிசத்தின் வரலாற்றை முற்போக்காளர்கள் எப்படி முன்வைக்கிறார்கள்? தொடக்க காலத்தில் மனிதனிடம் அறியாமையும் மூடநம்பிக்கையும் குடிகொண்டிருந்தன. இடி, மின்னல், கனமழை என எதைக் கண்டாலும் அரண்டுபோகும் நிலையில் அவன் இருந்தான். பின்னாளில் அவற்றையெல்லாம் ஒருவிதமாக அர்த்தப்படுத்தவும் வரையறுக்கவும் அவன் முற்பட்டான். இந்தப் பின்னணியில் சடங்குகளெல்லாம் உருவாகின. அதுவே மதமாக உருக்கொண்டது. பிறகு காலம் முன்நகர்ந்தது, அறிவுசார்ந்த வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து மதச்சார்பற்ற சிந்தனையை மனிதன் அடைந்தான் என முற்போக்காளர்கள் கூறுகிறார்கள்.

நேற்றைவிட இன்று சிறந்தது; இன்றைவிட நாளை சிறந்தது என்பதுதான் முற்போக்குவாதத்தின் அடிப்படை எண்ணக்கரு. அறிவு, பண்பாடு என எல்லா வகையிலும் மனிதன் மேம்பட்டு வருவதாக அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த ஆதாரமான வாதத்தின்படிதான் அவர்கள் மேற்கண்ட கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்கள்.

மதச்சார்பின்மைவாதம் உருவான பின்புலத்தை ஆராயும்போது நாம் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் அறிவியலாளர்களுக்கும் ஏற்பட்ட முரண்களையும், அதனால் வரலாற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் பேசுவதுண்டு. அது உண்மைதான். உலகம் தட்டையானதல்ல, உருண்டையானது என்றதற்காக கலிலியோ துன்புறுத்தப்பட்டார். வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைப் போன்ற இன்னொரு இத்தாலிய விஞ்ஞானி ப்ரூனோ அவரது அறிவியல் கண்டுபிடிப்புக்காக மரண தண்டனை பெற்று, எரித்துக் கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

கத்தோலிக்கத் திருச்சபைக்கும் அறிவியலாளர்களுக்குமான முரண்களைத் தாண்டி வேறு சில வரலாற்று நிகழ்வுகளும் மதச்சார்பின்மைவாதம் மேலுக்கு வரக் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கது. குறிப்பாக, 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கர்களுக்கும், புராட்டஸ்டன்டுகளுக்கும் மத்தியில் ஏற்பட்ட அதீத முரண்பாடும், உக்கிரமான மோதல்களும் செக்யூலரிச உருவாக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணி எனலாம். இந்தப் பின்னணியில் 1555ஆம் ஆண்டு கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டுகளுக்கும் இடையே ஆசுபர்க் உடன்படிக்கை போடப்பட்டது. அதில் கால்வினியக் கிறிஸ்தவர்களுக்கு ஆட்சேபனை எழுந்தது. இவர்கள் புராட்டஸ்டன்டின் உட்பிரிவைச் சார்ந்தவர்கள். ஆசுபர்க் உடன்படிக்கையால் இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

பிறகு 1618ஆம் ஆண்டு தொடங்கி மத்திய ஐரோப்பாவில் 30 ஆண்டுகாலம் நடைபெற்ற உச்சகட்டப் போர் செக்யூலரிச உருவாக்கத்துக்குப் பங்களித்த மிக முக்கியமான நிகழ்வாகும். அதில் சுவீடன், டென்மார்க், பிரான்ஸ் எனப் பல நாடுகள் ஈடுபட்டன. அதன் முடிவில் ஏற்பட்ட வெஸ்ட்பாலியா ஒப்பந்தம் செக்யூலரிசக் கோட்பாட்டாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மட்டுமின்றி, இப்படியான சில வரலாற்று நிகழ்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால், கிறிஸ்தவ வரலாற்று அனுபவங்களின் பின்னணியிலேயே மதச்சார்பின்மைவாதம் உருக்கொண்டது. செக்யூலர் எனும் சொல்லாக்கத்தின் மூலம் என்பது Saeculum எனும் லத்தீன் வார்த்தைதான். ’துன்யா’ (உலக வாழ்வு) என்று அதற்குப் பொருள். அதுவும் கிறிஸ்தவப் பின்புலத்திலிருந்து தோற்றம் பெற்றதே.

செக்யூலரிசம் எப்படி இயங்குகிறது?

நவீன தேச அரசு எனும் வடிவத்துக்குள் செக்யூலரிசம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன் தேச அரசு என்பது என்னவென்று நாம் புரிய வேண்டும். நவீனத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த அரசாட்சிமுறையும், தற்போது இருக்கும் முறையும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. பைசாந்தியப் பேரரசு, ரோமப் பேரரசு, இஸ்லாமியப் பேரரசுகள் போன்றவை ஆட்சிபுரிந்த முறை இப்போது இல்லை. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல்வேறு தேச அரசுகள் இன்றைக்கு இருக்கின்றன. இப்படியான கட்டமைப்பு அதிகபட்சம் இருநூறு முன்னூறு ஆண்டுகளாகவே உள்ளது.

இந்தக் கட்டமைப்புக்குள் செக்யூலரிசம் எப்படி செயல்படுகிறது என்றால், மதம் எது, மதச்சார்பற்றது எது என்பதை வரையறுக்கும் இடத்தில் அரசுதான் உள்ளது. செக்யூலரிசம் என்பது அரசையும் மதத்தையும் பிரித்தல் என்று முன்னர் பார்த்தோம். மதம் எதுவரை ஒருவரின் வாழ்வில் தலையிடலாம், எதையெல்லாம் பொதுவெளியில் அனுமதிக்கலாம் என்பதையெல்லாம் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இன்றைக்கு நவீன தேச அரசுகள் இருக்கின்றன. அரசுதான் மதத்தை வரையறுக்கவும், ஒழுங்குப்படுத்தவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கிறது என்பார் மானுடவியலாளர் தலால் அசது.

இதற்கு சில உதாரணங்களை இங்கு குறிப்பிடல் தகும். இத்தாலியின் ஒரு பள்ளிக்கூட வகுப்பறையில் சிலுவை தொங்கவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாணவரின் தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு லாட்சி Vs. இத்தாலி என்று அறியப்படுகிறது. மத அடையாளமான சிலுவையை வகுப்பறையில் வைப்பது பள்ளிக்கூடத்தின் மதச்சார்பற்றத் தன்மைக்கு விரோதமானது என்று லாட்சி வாதிட்டார். அந்த வழக்கில் என்ன தீர்ப்பு வந்திருக்க வேண்டும்? மதச்சார்பின்மையைக் காக்கும் பொருட்டு சிலுவை அங்கிருந்து நீக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சிலுவை மத அடையாளமல்ல, நமது நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியம் என்று தீர்ப்பு வந்தது.

இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் மதச்சார்பின்மை மசோதா கொண்டுவரப்பட்டு ஹிஜாப், டர்பன் முதலானவை அரசு ஊழியர்களுக்குத் தடை செய்யப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், க்யூபெக் சட்டமன்றத்திலேயே சிலுவை தொங்கவிடப்பட்டிருக்கிறது என்பதே. அது அவர்களுக்கு மத அடையாளமாகத் தெரியவில்லை. அது அந்நாட்டுப் பாரம்பரியம் என்றும், வரலாற்றில் ஒரு பகுதி என்றும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவர்கள் நியாயப்படுத்தினார்கள்.

இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கே சட்டப்பிரிவு 25 மதச் சுதந்திரத்தை வழங்குவதாக வாதிடப்படுகிறது. அதன்படி ஒரு மதத்தை ஏற்கவும் பின்பற்றவும் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒருவருக்கு முழு உரிமை இருப்பதாகச் சொல்கிறார்கள். கர்நாடகாவில் ஹிஜாபுக்குத் தடை விதிக்கப்பட்டபோது இந்த அடிப்படை உரிமையை மேற்கோள் காட்டித்தான் அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் நாம் வாதாடினோம். தீர்ப்பு என்ன வந்தது? ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று வந்தது.

இஸ்லாத்தில் எது கட்டாயம், எது கட்டாயமில்லை என்பதைத் தீர்மானிப்பது யார்? இறைவனும் இறைத் தூதரும்தானே தீர்மானிக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள்தானே அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அரசும், அதன் உறுப்புகளும் அதை முடிவு செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

எது மதம் சார்ந்தது, எது மதச்சார்பற்றது; பொதுத்தளத்தில் அனுமதிக்கப்பட வேண்டிய அடையாளங்கள் என்னென்ன, எவற்றையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்பனவற்றை எல்லாம் அரசுதான் இன்றைக்கு முடிவு செய்கிறது. சொல்லப்போனால் இஸ்லாம் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறது என்பது இங்கு பொருட்படுத்தப்படுவதில்லை என்பதை ஹிஜாப் வழக்கிலேயே நாம் உணர்ந்திருப்போம்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக செக்யூலரிசம் வெளிப்பட்டாலும் அதன் பொதுப் பண்பு என்னவென்றால், பொதுவெளியிலிருந்து மதத்தையும், மத அடையாளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதுதான். இந்தச் செயல்முறையை மதச்சார்பின்மையாதல் (Secularization) என்பார்கள். இதை முன்னெடுக்கும்போது எதிர்ப்பு வந்தால் அரசு சற்று பின்வாங்கும். சில விஷயங்களை தற்காலிகமாக விட்டுக்கொடுக்கும். ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மதத்துக்கான வெளியை சுருக்கிக்கொண்டே போகும்.

மதச் சுதந்திரம் எனும் மாயை

நாம் ஏற்றுள்ள மதத்தைக் கடைப்பிடிப்பதற்கான முழு சுதந்திரத்துடன்தான் நாம் வாழ்கிறோமா? இஸ்லாத்தில் எந்த அம்சங்களையெல்லாம் கடைப்பிடிக்க இந்த தேச அரசு நமக்கு அனுமதியளிக்கிறது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். தனிப்பட்ட வழிபாடுகள், சில குடும்பவியல் சட்டங்களைத் தாண்டி நாம் எதைப் பின்பற்றவும் அரசு அனுமதிப்பதில்லை. கல்விக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, சமூக விழுமியங்கள், அரசியல் என எதுவும் இறை வழிகாட்டுதல்களின்படி அமைந்திருக்கவில்லை. ஒருவேளை நாம் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முனைந்தால் அது சட்டப்படி குற்றமாகக்கூட கொள்ளப்படும் அவலநிலையே நிலவுகிறது.

அப்படியானால் இவர்கள் தரும் மதச் சுதந்திரம் என்பது என்ன? நம்மை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துவிடுகிறார்கள் அல்லது ஒரு சிறிய வட்டத்திற்குள் நிறுத்திவிடுகிறார்கள். அதற்குள் நீங்கள் விரும்பியவாறு இருக்கலாம் என்றும், உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்றும் உத்தரவாதம் அளிக்கிறார்கள். நாம் அவர்கள் விதித்த எல்லையை, கட்டுப்பாட்டை மீறினால் கடும் பின்விளைவுகளையும் தண்டனைகளையும்கூட பெறவேண்டி வரலாம்.

நவீனத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த உலகமும், அதன் சமூக அரசியல் ஒழுங்கும் முற்றிலுமாக மாறியுள்ளது. முற்காலத்தில் குடும்ப அமைப்புதான் சமூகத்தின் மையம். முஸ்லிம் சமூகத்தில் மட்டுமின்றி பொதுவான நிகழ்வுப்போக்காக இதுவே இருந்தது. கல்விப் புகட்டும் அதிகாரம் குடும்ப அமைப்பின் கீழ் இருந்தது. அந்த அமைப்பை மையப்படுத்தியே வணிகச் செயல்பாடுகள் இருந்தன. சமூக அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட அதிகாரம் இருந்தது.

ஆனால், நவீன யுகத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. குடும்ப மையச் சமூகமானது அரசு மைய/ பெருநிறுவன மையச் சமூகமாக மாற்றமடைந்துள்ளது. முன்பு கீழிருந்து மேல் நோக்கி இருந்த அதிகார அமைப்பு, தற்காலத்தில் மேலிருந்து கீழாக மாறியுள்ளது. அரசும், கார்பரேட்டுகளுமே இன்றைய அதிகார மையங்கள். அவர்கள்தாம் நமக்கான கல்வியையும், சுகாதாரத்தையும், அரசியலையும், கொடுக்கல் வாங்கல்களையும், வணிகத்தையும், இன்னபிறவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்; சாமானியர்கள் அல்ல.

பிறப்பு முதல் இறப்புவரை எல்லாமே அவர்களின் பிடியில் உள்ளன. ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அதை முதலில் நாம் அரசாங்கத்திடம் தெரிவித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்தக் குழந்தை இந்நாட்டில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் நேரத்தில் பெரும் பகுதியை அரசும் கார்பரேட்டுகளும் எடுத்துக்கொள்கின்றன. பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், எதிர்காலம், பொழுதுபோக்கு என சகலத்தையும் அவைதாம் முடிவு செய்கின்றன. பெற்றோருக்கு இவ்விஷயங்களில் முழு உரிமை வழங்கப்படுவதில்லை.

நவீனத்துக்கு முந்தைய காலத்தில் கணவன் மனைவிக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டால் அவர்கள் குடும்ப, சமூக அமைப்புக்குள்ளேயே அதைத் தீர்த்துக்கொள்வார்கள். ஊர் என்பதுகூட அவர்களுக்கு ஒருவிதத்தில் பெருங்குடும்பமாகவே இருக்கும். தற்காலத்தில் இந்தக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இன்று ஒரு தம்பதிக்கு மத்தியில் பிரச்சினை எழுந்தால் அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்ற சூழல். இதிலுள்ள மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால், அரசோ அதன் உறுப்புகளோ ஒரு பிரச்சினையை எதன் அடிப்படையில் சரிசெய்ய முயல்கிறது என்பதுதான். அவற்றின் அடிப்படை நிச்சயமாக இஸ்லாம் இல்லை.

மதச்சார்பின்மையாதலின் அடிப்படை

கல்வி தொடங்கி எல்லா மட்டங்களிலும் மத நீக்கச் செயல்முறை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ என்று போர்ட் வைக்கப்பட்டிருக்கும். அந்த போர்டையும் கடையையும் காலி செய்யும் நோக்கத்தில் வருபவன், முதலில் அந்த போர்டிலுள்ள வாசகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணத்தைச் சொல்லி அழிக்க வைத்துவிட்டு கடைசியில் அவன் நினைத்ததைப் போலவே போர்டையும் கடையையும் காலி செய்வான். அதேபோன்றதொரு தந்திரம்தான் நமக்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு சமூகத்தையும் மத நீக்கம் செய்வதற்குத் தோதுவாகவே கல்வித் திட்டமும், சமூக அரசியல் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன. கால ஓட்டத்தில் சத்தமில்லாமல் சமய நடைமுறைகள் ஒழிந்துவிட வேண்டும் என்ற நோக்கில் மதச்சார்பின்மையாதல் எனும் செயல்முறை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அந்தச் செயல்முறைக்கு ஆதாரமாக உள்ள கருத்தியலாக தாராளவாதம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மனித மையவாதம் (Humanism) இருக்கிறது. நாம் கடவுளை மையமாக வைத்து யாவற்றையும் அணுகும் கொள்கை உடையவர்கள் (Theist). இதற்கு முற்றிலும் முரணானது மனித மையவாதம் எனும் நவீனச் சிந்தனை. அது கடவுளை விடுத்து மனிதனை மையமாக வைத்து சிந்திக்க வைக்கிறது. கடவுள் இறந்துவிட்டார், அவரை நாங்கள் கொன்றுவிட்டோம் என்று நீட்சே போன்ற நவீனச் சிந்தனையாளர்கள் அகங்காரமாகச் சொன்னது இந்தப் பின்னணியில்தான். சமகால நவீன அரசுகள் மனிதனை மையமாகக் கொண்டு உருவாகும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன.

மனிதன் யார், கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன, பிரபஞ்சத்துக்கும் அவனுக்குமான உறவென்ன என்பன போன்ற அடிப்படையான கேள்விகளுக்கான உண்மைத்தன்மையை நவீனச் சிந்தனையாளர்கள் உருக்குலைத்திருக்கிறார்கள். அதை கல்வித் திட்டம், ஊடகம் முதலானவற்றின் மூலம் நம்மிடமே திணிக்கிறார்கள். நம் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க முனைகிறார்கள். கடவுளுக்கு மனித வாழ்வில் எந்த அளவுக்கு இடமளிக்க வேண்டும் என்பதை மதச்சார்பற்றவாதிகள் தீர்மானிக்கிறார்கள்.

துரதிருஷ்டம் என்னவென்றால், இந்த மதச்சார்பற்ற அமைப்புமுறைக்குள் வாழும் நாம் இதை விமர்சனபூர்வமாக ஆய்ந்தறியத் தவறிவிட்டோம். இன்றைய சூழ்நிலையில் அப்படி யோசிப்பது நம் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடுமோ என்றுகூட அஞ்சும் நிலைக்கும் நாம் ஆளாகியுள்ளோம். இந்த மனப்பான்மையை முஸ்லிம் சமூகத்தில் மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. அல்ஜீரியச் சிந்தனையாளர் மாலிக் பின்நபி Coloniability என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவார். காலனியவாதிகள் முஸ்லிம் உலகை ஆக்கிரமிக்கும்போது, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் மக்கள் அதற்குத் தோதுவான பலவீனத்தையும் மனப்பான்மையையும் கொண்டிருப்பதைத்தான் அவர் இந்தச் சொல்லாடலின் வழியாகச் சுட்டினார்.

இன்றைக்கும் முஸ்லிம் சமூகத்தில் ஒருவிதமாக Coloniability தொடர்வதாகவே கொள்ள முடிகிறது. நிலவும் சமூக அரசியல் சூழல் குறித்த தெளிவான கண்ணோட்டத்தையும், விமர்சன நோக்கையும் இந்தச் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலம் குறித்து நம்மால் சரியான திசையில் சிந்திக்க முடியும்.

Related posts

One Thought to “செக்யூலரிசமும் செக்யூலர்மயமாதலும்”

  1. நியாஸ்

    மிக அருமையான கட்டுரை செக்குலரிசம் குறித்த விரிவான பார்வையை சகோதரர் ரிஜ்வான் தந்திருக்க்கிறார் அவருக்கு என் வாழ்த்துகள்

Leave a Comment