இந்திய முஸ்லிம்கள் ஏன் தங்கள் விசுவாசத்தை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும்?
கடந்த மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏராளமான வெறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் துப்பாக்கி தாங்கிய சிலர் 26 பேரைக் சுட்டுக் கொன்றதன் பிறகான இரண்டு வார காலத்தில், இந்தியா முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக 184 வெறுப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதாக புது தில்லியைச் சேர்ந்த ‘சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு’ (Association for Protection of Civil Rights) பதிவுசெய்துள்ளது.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை, வெறுப்புப் பேச்சு தொடர்பானவை. மற்றவை மிரட்டல், துன்புறுத்தல், தாக்குதல், சேதப்படுத்தல், அச்சுறுத்தல், சொற்களால் இழிபடுத்துதல் என்பவற்றுடன் தொடர்புடையவை. இவற்றுடன் மூன்று கொலைகளும்கூடப் பதிவாகியுள்ளன. இவற்றில் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பஹல்காம் தாக்குதலே ஒரு ‘தூண்டுதல் காரணியாக’ இருந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வன்முறைக்கு எதிர்வினை என்பதைக் காட்டிலும் ஆபத்தான ஒரு போக்கு இது. முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தை அரசியல் மையநீரோட்டப் போக்காக ஆக்கவும், இந்தியாவில் முஸ்லிமாக இருப்பதன் பொருளை மறுவரையறை செய்யவுமான ஓர் முயற்சி இது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னிருந்து உதவியது பாகிஸ்தானே என்ற இந்தியாவின் குற்றச்சாட்டினை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பஹல்காம் கொலைகளுக்குப் பதிலடி தரும் விதமாக இந்திய அரசு பாகிஸ்தானில் உள்ள சில இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையை அறிவித்தது. அதிகாரப்பூர்வமாக, இது ஒரு தேசியப் பாதுகாப்பு நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பிராந்தியத்தில் அது பதற்றத்தை பெருமளவு அதிகரித்தது.
அதன் பக்கவிளைவுகள், உள்நாட்டிலும் — குறிப்பாக, பொது மற்றும் அரசியல் உரையாடல்களில் இந்திய முஸ்லிம்கள்மீதான பார்வையிலும், அவர்கள் நடத்தப்பட்ட முறையிலும் — எதிரொலித்தன
முஸ்லிம்களை “ஊடுருவல்காரர்கள்” என்றும், “தேசத்துரோகிகள்” என்றும் முத்திரை குத்துவதில் அதி தேசியவாத சமூக ஊடகக் கணக்குகள் முக்கியப் பங்கு வகித்தன. ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதங்கள், அரசாங்கம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பினைக் கையாண்ட விதத்தைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, (இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பஹல்காம் தாக்குதலை ஒருமனதாகக் கண்டித்திருந்த போதிலும்) இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியைச் சோதித்துப் பார்க்கும் களங்களாக விரைந்து மாறின.
முஸ்லிம்கள் கொடுக்கும் விலை
வரலாறு நெடுக இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ, இராஜதந்திர மோதல்களில் ஈடுபடும்போதெல்லாம், இந்திய முஸ்லிம்கள் சமூக, அரசியல், உளவியல் ரீதியாகப் பெரிய விலைகொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது நடப்பதும் அதுதான்.
எழுத்தாளர் ஹுசைன் ஹைதரீ ‘மிடில் ஈஸ்ட் ஐ’யிடம் கூறியதாவது: “பல தசாப்தங்களாகவே, இந்தியாவின் பெரும் எண்ணிக்கையிலான மக்களால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களின் குடியிருப்புப் பகுதிகள் ‘மினி பாகிஸ்தான்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்கள் என்பதாகக் கேலி செய்யப்படுகிறார்கள். ‘பாகிஸ்தானுக்குத் திரும்பிப் போ’ என்று தூற்றப்படுகிறார்கள்.
“எனவே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றங்கள் நிலவும்போது, பெரும் எண்ணிக்கையிலான மக்களால் இந்திய முஸ்லிம்களுக்கு எல்லா வகையிலும் தீங்குகள் இழைக்கப்படுவது யாருக்கும் அதிர்ச்சி தருவதாக இல்லை. ஏனெனில், இந்தப் படுமோசமான பாகுபாடு, வன்முறை ஆகியவற்றுக்குச் சாதகமான கலாச்சாரக் கட்டமைப்பு ஏற்கனவே இங்கு உருவாகி நிலைபெற்றுள்ளது.”
இந்த முறை, எதிர்வினை மேலும் கூர்மையடைந்துள்ளது, அம்பாலாவில் சமீபத்தில் ஒரு கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூச்சலிட்டுக்கொண்டே முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை எரித்தது. இது தன்னிச்சையாக உருவான சமூகக் கோபத்தின் வெளிப்பாடு அல்ல; வலதுசாரிக் குழுக்கள் பகிரங்கமாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட ஆக்ரோஷத்துடனும் முன்னணிக்கு வந்துள்ளன.
இந்தக் கொடுமை, உடல் ரீதியான வன்முறையைத் தாண்டிய ஒன்றாக உள்ளது. இந்த வகையில், முஸ்லிம்கள்மீதான சந்தேகம் மையநீரோட்டப் போக்காக மாறியுள்ளது. ‘இந்திய முஸ்லிம் குடியுரிமை’ என்னும் கருத்து நிபந்தனைக்குட்பட்டதாகவும், பலவீனமானதாகவும், நிரந்தரச் சந்தேகத்திற்குரியதாகவும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.
இது திடீர் மாற்றம் அல்ல. மாறாக, இது பள்ளிப் பாடப்புத்தகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், அரசியல் உரைகள், வாட்ஸ்அப் செய்திகள், ஆன்லைன் பிரச்சாரங்கள் மூலம் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கருத்தியல் உற்பத்தியின் விளைவாகும். பஹல்காம் தாக்குதலானது, நீண்ட காலமாக உருவாக்கப்பட்ட அந்த அழுத்தத்தை வெளியிடுவதற்கு ஒரு வினையூக்கியாக மட்டுமே இருந்துள்ளது.
இப்போதெல்லாம், ஒவ்வொரு இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இந்திய முஸ்லிம்கள்மீது ஒரு முறைசாரா விசுவாசப் பரிசோதனைக்கு வித்திடுகிறது. மட்டுமின்றி, இந்தச் சோதனை மென்மேலும் வெளிப்படையானதாகவும் பகிரங்கமானதாகவும் மாறிவருகிறது.
“முஸ்லிம்கள் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று மட்டுமல்ல, பாகிஸ்தானை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்” என்று ஆய்வாளர் சாரா அத்ஹர் மிடில் ஈஸ்ட் ஐயிடம் கூறினார். “காஷ்மீரிகளிடமும் இந்திய முஸ்லிம்களிடமும் மைக்ரோஃபோன்களை நீட்டி மோதல் குறித்துக் கருத்து கேட்கும் பத்திரிகையாளர்களின் எண்ணற்ற வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம். இது தேசபக்தியுடன் தொடர்புடையது அல்ல, அவர்களை இழிவுபடுத்துவதற்காகச் செய்யப்படுவது.”
விலக்கிவைப்பதற்கான கருவிகள்
தேசியவாதத்தின் வெளிப்பாடுகள், (முஸ்லிம்களை) விலக்கிவப்பதற்கான கருவிகளாக மாறியுள்ளன என்று குறிப்பிட்ட அத்ஹர் மேலும் கூறியதாவது: “‘ஏற்றுக்கொள்ளத்தக்க’ ஒரு முஸ்லிமாக இருப்பதற்கென்று ஒரு தரநிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. செய்தி தெளிவானது: நீங்கள் இந்தியச் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், இந்தக் குறைந்தபட்சத் தரநிலையை நீங்கள் பூர்த்தி செய்தாக வேண்டும், இல்லையெனில், நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளராக, பயங்கரவாதியாக, அல்லது அதைவிட மோசமான ஒருவராகக் கருதப்படுவீர்கள்.”
இது (தேசத்தை) ஒருங்கிணைப்பதல்ல; (முஸ்லிம்களை) பலவந்தமாகக் கரைத்தழிப்பது. அந்தத் தரநிலையைப் பூர்த்தி செய்திட மறுத்தாலோ தயக்கம் காட்டினாலோ அது அரச கண்காணிப்பு, சமூக ஒதுக்கல், துன்புறுத்தல், வன்முறை ஆகியவற்றுக்கு வித்திடும்.
பிரதான அரசியல் தரப்புகளிடமிருந்து வெளிப்படும் ஏறக்குறைய முழுமையான மௌனம்தான் மிகவும் கவலை தருவதாக இருக்கிறது. வளர்ந்துவரும் இந்த வெறுப்பு அலையை எதிர்கொள்வதை எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் தவிர்த்தேவந்துள்ளன, அதை அவை எதிர்கொள்ளும் பட்சத்தில், அது தங்களை பொதுச் சமூகத்தின் பார்வையில் சந்தேகத்திற்குரியவையாகவும், அரசின் பார்வையில் கண்காணிப்புக்கு உரியவையாகவும் ஆக்கிவிடும் என்பது அக்கட்சிகளுக்குத் தெரியும். வெறுப்பு இயல்பாக்கப்படுவதையும், சட்டங்கள் புறக்கணிக்கப்படுவதையும், சில கும்பல்கள் தேசபக்தி என்னும் முகமூடி அணிந்துகொண்டு தண்டனையின்றிச் செயல்படுவதையும் இந்தச் சூழல் அனுமதிக்கிறது.
இந்தியாவெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு, இதன் விளைவுகள் மோசமானவையாகவும் அப்பட்டமானவையாகவும் இருக்கின்றன. இம்மாதத்தின் தொடக்கத்தில், உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரால் ‘பாகிஸ்தானியர்‘ என்று குற்றம் சாட்டப்பட்டுத் தாக்கப்பட்ட ஒரு முஸ்லிம் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்தி வெளியானது. அந்தப் பத்திரிகையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வெறும் சந்தேகம் மட்டுமே ஒருவருக்கு மரண தண்டனையாக மாறிவிடக்கூடிய ஒரு சூழலைப் பிரதிபலிப்பதாக அந்த முஸ்லிமின் மரணம் அமைந்துவிட்டது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இப்போதைக்கு துப்பாக்கிகள் மௌனித்திருக்கலாம். ஆனால், இந்திய முஸ்லிம் அடையாளத்தின் மீதான போர் உக்கிரமடைந்துள்ளது. குறியீடுகள், மௌனம், குறைந்துகொண்டே செல்லும் உரிமைகள் ஆகியவற்றைக் கொண்டு இப்போர் நடத்தப்படுகிறது. ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் அவர் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிட்டாக வேண்டும்; சக இந்தியக் குடிமக்களின் மரணங்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் முன்பாகவே அவர் பாகிஸ்தானை பகிரங்கமாகக் கண்டித்தாக வேண்டும் என்று ஒவ்வொரு முறை அவர் நிர்பந்திக்கப்படும்போதும் இந்தப் போர் நடத்தப்படுகிறது.
இனி, இந்திய முஸ்லிம்கள் போதுமான அளவு நாட்டுக்கு விசுவாசமாக உள்ளார்களா என்பது அல்ல கேள்வி. மாறாக, இந்தியா தனது முஸ்லிம் குடிமக்களிடம் அவர்கள் தமது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று கோராமல், முடிவற்ற விசுவாசப் பரிசோதனைகளுக்கு அவர்கள் உட்பட வேண்டும் என்று கூறாமல், அடிப்படையிலேயே சந்தேகத்திற்குரியவர்கள் என்ற சூழலில் அவர்களை நிறுத்தாமல், அவர்களை அவர்களது இயல்பான நிலையில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறதா என்பதுதான் இங்கு கேள்வி.
மதத்தின் அடிப்படையில் விசுவாசப் பரிசோதனைகளைக் கோரும் ஒரு ஜனநாயகம், உண்மையான ஜனநாயகமே அல்ல. அது விலக்கிவைக்கும் தன்மையும், பெரும்பான்மைவாதப் போக்கும் கொண்ட ஜனநாயக விரோத அமைப்பாகும்.
இந்நிலை மாறாத வரையில், இந்திய முஸ்லிம்கள் தாங்கள் தொடங்காத போர்களுக்காகத் தம் உயிர், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை விலையாகக் கொடுக்கும் நிலை தொடரவே செய்யும்.
— நபியா ஃகான் (தில்லியைத் தலமாகக் கொண்டு இயங்கும் கவிஞர், ஆய்வாளர்)
(நன்றி: Middle East Eye)
தமிழில்: உவைஸ் அஹ்மது