கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திமுகவின் கொடுங்கனவான பிம்பச் சிறை

Loading

மிழ்நாட்டு அரசியலுக்கும் கலைத் துறைக்குமான தொடர்பு, காற்றுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை ஒத்தது. அமெரிக்க நடிகர் ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு திரைத் துறையை அரசியலுக்குக் கச்சிதமாகப் பயன்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். அண்ணா, கருணாநிதியின் அர்த்தம் பொதிந்த ஆழமான அரசியல் வசனங்கள், அவற்றைத் திரையில் பிரதிபலித்த எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என திராவிட அரசியலின் வளர்ச்சியில் திரைத் துறையின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது.

வெண் திரை என்ற மாயச் சுவரில் தோன்றி மறையும் கதாபாத்திரங்களை அச்சு அசல் மனிதர்களாக நம்பும் குணம் இப்போதும் தமிழக மக்களின் நனவிலியில் ஆழப் பதிந்துள்ளது. அதை அறியாமை என்று விலக்கிவிட்டு நகர்ந்துசெல்ல முடியாது. அந்த அறியாமை ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் — இட்டுச் சென்ற வரலாறுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு. திரை நாயகன், எதார்த்தத்தில் ‘கதாநாயக’ குணாம்சங்கள் கிஞ்சிற்றும் இல்லாதவனாக இருந்தபோதும், அவனை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கும் அருங்குணம் பெற்றவர்கள் தமிழக மக்கள்.

எம்ஜிஆர் என்ற திரைப் பிம்பத்தின் வழியாக ஊட்டி வளர்க்கப்பட்ட திராவிட அரசியல் கருத்தியலில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை அளவுக்கு, அந்தப் பிம்பத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இருந்ததை எம்ஜிஆர் திமுகவை உடைத்து புதிய கட்சி தொடங்கி ஆட்சி அமைத்த பின்புதான் புரிந்துகொண்டனர் திராவிடக் கருத்தியல் முன்னோடிகள். அப்போது முதல், பிம்பச் சிறை குறித்த ஃபோபியா திராவிடக் கருத்தியலின் ஓர் அங்கமாகியது.

கலை மூலமாகக் கருத்தியலைப் பரப்பும் அதே சமயம், திரைக் கவர்ச்சி ஒன்றே தலைமைக்கு வரத் தகுதி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தனர் உடன்பிறப்புகள். மறுபுறம், இதற்கு நேரெதிராக நடிகர் எம்ஜிஆர் அவர்களை, திரையில் தோன்றிய அதே பிம்பத்துடன் ஏற்றுக்கொண்டு ஆராதிக்கும் போக்கு இப்போதும் அதிமுகவில் நிலவுகிறது. இருந்தாலும், எம்ஜிஆரைப் போன்ற இன்னொரு திரைப் பிம்பத்தை ஏற்று அங்கீகரிக்கும் மனநிலையில் அக்கட்சித் தலைமை இல்லை.

அதாவது, ஓர் எம்ஜிஆர்தான்; மற்ற நடிகர்களெல்லாம் நடிகர்கள்தான், தலைவர்கள் கிடையாது என தீர்க்கதரிசனப் பார்வையை முன்வைக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். “எம்ஜிஆர் பெயரைச் சொல்கிறவர்களெல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததை இங்கு நினைவுபடுத்திக்கொள்வோம்.

இப்படிப்பட்ட சூழலில், தளபதி என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜோசஃப் விஜய் என்னும் நடிகர், தமிழக அரசியலில் கால் பதித்தார். ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ரசிகர் மன்றத்தை அப்படியே ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார்.

எம்ஜிஆருக்குப் பிறகு தமிழக அரசியலில் களம் கண்ட நடிகர்கள் யாரும் — நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உட்பட — சோபிக்கவில்லை. சோபிக்கவில்லை என்பதை நூறு நாள்கள் படம் ஓடவில்லை என்ற பொருளில் புரிந்துகொள்ளக் கூடாது. தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும் ஆதரவை அந்த நடிகர்களின் ரசிகர்கள் வழங்கவில்லை. எனில், சினிமா வேறு – அரசியல் வேறு என்ற புரிதல் தமிழக ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிட்டதா என்றால், இல்லை என்றுதான் சமூக ஆய்வுகள் கூறுகின்றன.

பிறகு ஏன் வெற்றி கிட்டவில்லை? அந்த நடிகர்களின் அரசியல் பயணம் தொடரவில்லை? இது விடை தெரியாத மர்மமான வினாதான். முன்கணிக்க முடியாத, முந்தைய தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட முடியாத, வாக்காளர்களின் உளவியலை அறுதியிட்டுச் சொல்ல முடியாத பூடகமான அமைப்பாகவே தேர்தல் முறை இருந்துவருகிறது. இதுதான் ஜனநாயகத்தின் வெற்றியா? ஆம் என்றும், இல்லை என்றும் பதில் சொல்லத்தக்க விவாதம் இது.

எம்ஜிஆருக்குப் பின் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட உச்ச நடிகர் ஒருவர் தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடாததால், திரைக் கவர்ச்சியின் பலத்தை தமிழக அரசியல் களத்தில் மீளாய்வு செய்ய முடியாத இக்கட்டு இருந்தது. அந்தக் குறையைப் போக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வாய்ப்பை அளிப்பார் என அரசியல் ஆய்வாளர்கள் காத்திருந்தனர். ஆனால், திரைத்துறையின் வழியாக நவரச நடிப்பை மட்டுமின்றி ‘பொருளாதார வருவாய் ஈட்டும் கணக்குகளை’யும் கச்சிதமாகக் கற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ரசிக மனோபாவத்தையும் எடைபோடுவதில் வல்லவராக இருந்தார். கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ளத் தயாரான அவர், திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக மென்மையாக அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.

எம்ஜிஆருக்குப் பிந்தைய திரைக் கவர்ச்சி அரசியலை எடைபோடும் வாய்ப்பு மீண்டும் நழுவிப் போன சூழலில்தான், உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதித்தார். எம்ஜிஆர் அளவுக்கு இல்லை என்றாலும், கமல் என்ற திரைப் பிம்பம் திராவிட அரசியலுக்குச் சவாலாக இருக்குமோ என்ற ஐயம் திமுகவுக்கு இருந்தது. கமலின் அரசியல் வருகையைத் திமுகவினர் எதிர்கொண்ட விதத்தில் இது புலப்பட்டது.

அதேசமயம், எம்ஜிஆரோடு ஒப்பிடுகையில் கமல்ஹாசன் ஒன்றும் மக்கள் நாயகப் பிம்பம் கொண்டவர் கிடையாது. ரசிகர்களின் பலத்தை ஒப்பிடுகையில் ரஜினிக்கு அடுத்த படிக்கட்டில்தான் கமல் நின்றார். மக்களுக்குப் புரியாத மொழியில் பேசக் கூடியவர் என்ற விமர்சனத்துக்கு ஒப்ப கட்சிப் பெயரையும் ‘மக்கள் நீதி மய்யம்’ (மநீம) என வைத்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மநீம தலைமையில் ஒரு கூட்டணி உருவானதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் அவர் கட்சி நடவடிக்கைகளில் அவ்வளவாக தீவிர ஆர்வம் காட்டவில்லை. எனவே, திரைப் பிம்பம் குறித்த அச்சம் விலகியதோடு, திரைக் கவர்ச்சி அரசியலை எடைபோடும் வாய்ப்பும் நழுவியது.

இந்தப் பின்னணியில்தான் நடிகர் விஜய்யின் வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளானது. எம்ஜிஆருக்கு நிகரான ரசிகர் பட்டாளம் விஜய்க்கு நிரம்பி வழிவதால், திராவிடக் கட்சியினருக்கு ‘சற்றே’ கிலியை ஏற்படுத்தியது விஜய்யின் அரசியல் பிரவேசம்.

அரசியல் கவர்ச்சி என்ற மிகப் பெரிய ஆயுதம் மூலம் தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுகவை, அதே திரைக் கவர்ச்சி என்ற ஆயுதம் மூலம் வீழ்த்தினார் எம்ஜிஆர். மீண்டும் வரலாறு திரும்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த திமுக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகப் போட்ட கணக்கு வித்தியாசமானது!

தேர்தலைச் சந்திக்காத, வாக்கு பலம் என்னவென்பதையே அறியாத தவெக, பெருந்திரள் ஆதரவை மட்டுமே கூட்டணி பேரத்துக்கான அச்சாரமாக முன்வைத்தது. அதுவே அக்கட்சிக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது. கரூர் துயரத்தில் 41 பேர் உயிரிழந்த பேரிடரைக் கையாளத் தெரியாத விஜய் மீது மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்த துர்ச்சாம்பல் தங்கள்மீது ஒட்டிக் கொள்ள எந்தக் கட்சியும் முன்வரவில்லை.

அதற்கு முன்பேகூட எந்தக் கட்சியும் விஜய்யை நோக்கி நகரத் தயக்கம் காட்டினர் என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வர் வேட்பாளர் என்ற தோரணையிலிருந்து இறங்கிவர விஜய் தயாராக இல்லை. இதனால், அதிமுகவுடன் கூட்டணி என்ற யூகத்தையும் விஜய் மெய்ப்பிக்கத் தவறினார். வேறு வழியே இல்லை என்ற நிலையில், ஆளும் கட்சியையும் ஆண்ட கட்சியையும் எதிர்க்கத் துணிந்தார். அதைத் தவிர அரசியல் செய்ய அவருக்கு வேறு சரக்கு கிடையாது.

இரண்டு திராவிடக் கட்சிகளின் அதிகாரப் பசிக்கான உணவைப் பங்கு போட வந்ததால் விஜய்யிடமிருந்து இரண்டு கட்சிகளும் முகத்தைத் திருப்பிக் கொண்டன. மற்ற கட்சிகளை இழுக்க, அப்படி இப்படி எனத் தூண்டில்களை வீசியும் கூட்டணிக்கு எந்த மீனும் சிக்கவில்லை. நண்பர்கள் ஏதுமில்லாத ‘சிங்கிள் ஹீரோ’வாக தமிழ் நாட்டு அரசியலில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் விஜய்க்கு ஏற்பட்டது.

‘ஆட்சியில் பங்கு’ என்ற சாவியை கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்க முடியாது என்ற சத்தியத்தை தவெக உடைத்தது. இது தமிழ்நாட்டு அரசியலில் தீவிர விவாதப் பொருளானதே தவிர, விஜய்யுடன் கூட்டணி வைக்குமளவுக்கு நகர்த்திச் செல்லவில்லை. இருந்தாலும், தவெக சோர்ந்து போகவில்லை. தமிழக அரசியலில் கூட்டணி என்ற மாயக் கம்பளமின்றி ஜார்ஜ் கோட்டையை அடைய முடியாது என்ற சமன்பாட்டை தவெக சட்டை செய்யவில்லை.

விஜய் முதல்வர் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான சமரசங்களை அக்கட்சி ஏற்கத் தவறியது, அக்கட்சி தொடங்கப்பட்டதற்கான ஐயங்களை அதிகப்படுத்தியது. எந்தக் கட்சியின் வாக்கைப் பிரிக்க விஜய் வேலை செய்கிறார் என்பதுதான் அந்த ஐயம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குசதவீதக் கணக்கை கணக்கில் கொண்டு விரதத்தைப் பாதியில் முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது அதிமுக. விரதத்தைக் கைவிட்டது ஆச்சரியமல்ல, பகையாளிகளோடு கைகுலுக்கியதுதான் நாடகத்தின் உச்சக் காட்சி. ஆம், அமமுகவோடும் கைகுலுக்கியது அதிமுக. தமாக, ஐஜேகே, அப்பாவோடு பிணங்கிய பாமக என ஒரு வழியாக அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி என பாஜக சொல்லிக்கொண்டது. அதாவது பாஜக தலைமை வகிப்பது போன்ற எண்ணம் அந்தக் கட்சித் தலைவர்களுக்கு இருந்தது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அதிமுக தலைவர்கள் சொல்லிக்கொண்டனர்.

மறுபக்கம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பலமான குற்றச்சாட்டுகளை வீசிவிட்டு வெளியேறினார். இது ஒரு சறுக்கலாக இருந்தாலும், வன்னியர் சமூக ஓட்டுகள் ராமதாஸ் – அன்புமணி குடும்பச் சண்டையில் பிரிந்து கிடந்ததாலும், திமுகவிலேயே முன்னணித் தலைவர்கள் பலர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் வேல்முருகன் வெளியேற்றத்தை பொருட்படுத்தத்தக்க சேதாரமாக திமுக கருதவில்லை.

பொதுவாக, ஒரு தேர்தலில் ‘வெற்றி – தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய வாக்குகள்’ தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும் என்பதே அரசியல் கட்சிகளின் கணிப்பு. எந்த வாக்கு வங்கிக் கணக்கிலும் சேராத அந்த வாக்குகள், எந்தக் கட்சிக்குப் போகிறதோ அந்தக் கட்சியே ஆட்சியமைக்கும். தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வாக்களிக்கும் நிலையற்ற ஓட்டுகள் (Floating / Swing) அவை. அந்த வாக்குகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலை செய்வதுதான் வழக்கம். அந்த வாக்குகளைக் குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதும், நலத் திட்டங்களை அறிவிப்பதும் என அவற்றின் தேர்தல் காலச் செயற்பாடுகள் இருக்கும்.

இந்த உத்திகளை முழுவதுமாகக் கைவிட்டு இரண்டு புதிய உத்திகளை இந்தத் தேர்தலில் கையிலெடுத்தது திமுக. அதில் ஒன்றை ஆட்சிக் காலத்திலேயே செயற்படுத்தத் தொடங்கியது. இரண்டாவது உத்தியை கூட்டணி அமைப்பதில் கடைப்பிடித்தது. முதலாவது உத்தி: பெண்கள் வாக்குகளை முழுவதுமாகக் கவர்வது. அதற்காக மகளிர் விடியல் பேருந்து, உரிமைத் தொகை எனப் பெண்களை மையப்படுத்திய நலத் திட்டங்களை அதிரடியாகச் செயற்படுத்தியது. இரண்டாவது உத்தி: நிலையற்ற ஓட்டுகளைக் குறிவைப்பதற்குப் பதிலாக நிலையான ஓட்டுகளை ஒருமுகப்படுத்துவது. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி தனியாக இருக்குமல்லவா… அந்த வாக்கு வங்கி அனைத்தையும் ஒன்றுசேர்த்தால் வெற்றி எளிது என்ற கணக்கைப் போட்டது திமுக.

இந்தப் பின்னணியிலேயே மதில் மேல் பூனையாக நின்ற தேமுதிகவை ராஜ்யசபா எம்பி என்ற பாலைக் காட்டி தன் பக்கம் இழுத்தது. இன்னொரு திருட்டுப் பூனையாக தவெக வீட்டில் மீன் தேடிய காங்கிரஸ் கட்சிக்கு, கூடுதல் இடங்களை வழங்கி கூட்டணியில் தக்க வைத்தது. இரண்டு இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக எனப் பெருங் கூட்டணியை அமைத்தது. இதுபோக ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்குகளையும் ஒருங்கிணைக்கும் முனைப்பில் மமக, மஜக, முஸ்லிம் லீக், SDPI என முஸ்லிம் கட்சிகளையும் கூட்டணிக்குள் சுவீகரித்துக்கொண்டது. சாதி, மதம், கொள்கை என எந்தப் பின்புலத்திலும் வாக்குகள் பிரிந்துவிடக்கூடாது என்பதில் திமுக கவனமாக இருந்தது.

திமுக தயவால் மாநிலங்களவைக்குள் காலடி எடுத்து வைத்த கமல்ஹாசன், அதற்குப் பிரதிபலனாக இந்தத் தேர்தலில் தனது தலைமையிலான மநீம போட்டியிடாமல், திமுக கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்குவதாக அவருடைய தனித்த பாணியிலேயே அறிவித்தார். ஆக, வாக்கு வங்கித் திரட்சியை சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைத்ததில் திமுக வெற்றி பெற்றது.

இந்தச் சூத்திரங்கள், சூட்சுமங்களையெல்லாம் உடைத்தது திரைக் கவர்ச்சி என்ற தமிழக அரசியலின் பாரம்பரியம். கூடவே, ‘மாற்று ஒன்று தேவை’ என நினைத்த மக்கள், கூட்டணி எதுவுமின்றி வந்த விஜய்யை முழுவதுமாக நம்பி அலை அலையாக வாக்களித்துள்ளனர். மீண்டும் ஒரு முறை திரைக் கவர்ச்சி அரசியலுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக இது அமைந்தது.

இந்த நேரத்தில் வரலாற்றில் ஒரு பத்தியைத் திருத்தி எழுத வேண்டும்:

திரைத்துறையில் நடிகராக விஜய் சோபிக்க சிறப்புத் தோற்றத்தில் (Cameo Roll) நடித்துக் கொடுத்த நடிகர் விஜயகாந்த், அதே விஜய், அரசியல் துறையில் சோபிக்கவும் முன்னோட்டம் பார்த்தார் என…

Related posts

Leave a Comment