சிறைவாசிகளின் வாக்குரிமை?
![]()
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் கணிசமான தொகையை செலவு செய்து பிரச்சாரங்களை மேற்கொண்டது. ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வாக்காளர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு சட்ட ரீதியாக வாக்குரிமையை மறுத்துவிட்டுத்தான் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தே தேர்தல் ஆணையம் இதனை மேற்கொள்கிறது.
சமூகத்தில் இருந்து தூரமாக்கப்பட்டு பிரம்மாண்ட சுவர்களுக்குப் பின்னால் நிரந்தர கண்காணிப்பில் உள்ள சிறைவாசிகள் இந்த பிரிவினர். இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சிறைவாசிகளின் வாக்குரிமை மறுக்கப்படுவது குறித்து சிறிய சலசலப்பு கூட எந்த தேர்தலிலும் எழுவதில்லை. சிறைவாசிகள் குறித்த பொதுவான எதிர் மனநிலை பொதுப் புத்தியில் நன்றாக திணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் இதனை கண்டுகொள்வதில்லை.
டிசம்பர் 31, 2023 கணக்கின்படி இந்திய சிறைகளில் மொத்தம் 5,30,333 சிறைவாசிகள் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இவர்களில் 3,89,910 பேர் விசாரணை சிறைவாசிகளாக உள்ளனர். அதாவது, தண்டனை உறுதிப்படுத்தப்படாமல் இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் 6,031 தண்டனை சிறைவாசிகளும் 12,351 விசாரணை சிறைவாசிகளும் 1,354 தடுப்புக் காவல் சிறைவாசிகளும் இரண்டு ஏனைய சிறைவாசிகளும் என மொத்தம் 19,738 இருந்ததாக அதே அறிக்கை தெரிவித்தது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஏறத்தாழ 18,000 சிறைவாசிகளால் வாக்களிக்க முடியாது.
பல கோடி வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் சில இலட்சம் சிறைவாசிகள் வாக்களிக்கவில்லையென்றால் இங்கே எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று யாரும் வியாக்கியானம் கூற முடியாது. ‘ஒவ்வொரு வாக்கும் அவசியம்’ என்று தேர்தல் ஆணையம் வீதி தோறும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இலட்சக்கணக்காக மக்களின் வாக்குரிமையை மறுப்பது மிகப்பெரும் ஜனநாயக அநீதியாகும். அரசியல் சாசனத்தின் பிரிவு 326, பதினெட்டு வயதை பூர்த்தி செய்த அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துகிறது.
‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற கொள்கையை முன்வைத்த பி.ஆர்.அம்பேத்கர் அதன் மூலம் அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்தினார். சமூக அந்தஸ்துகளை மையமாக வைத்து ஏற்றத் தாழ்வுகளை கற்பிக்காமல் அனைவரையும் அரசியல் ரீதியாக சமமாக நடத்துவது இதன் நோக்கமாகும். ஆனால், இந்த அரசியல் சமத்துவம் சிறைவாசிகளுக்கு வெளிப்படையாகவே மறுக்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரே காரணத்திற்காக அரசியல் சமத்துவத்தை சிறைவாசிகளுக்கு மறுக்க முடியாது.
சட்டப்படி நீக்கப்பட்ட உரிமை!
சிறைவாசிகளுக்கு வாக்குரிமையை மறுப்பது காலங்காலமாக தொடரும் அவலமாக உள்ளது. தேச துரோக குற்றம் மற்றும் கொடுங்குற்றங்களில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை ஆங்கில சொத்து பறிமுதல் சட்டம் (1870) பறித்தது. 1935ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டமும் சிறைவாசிகளுக்கு வாக்குரிமையை மறுத்தது. தடுப்பு காவலில் உள்ளவர்களுக்கு மட்டும் வாக்குரிமையை வழங்கிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951), தண்டனை சிறைவாசிகளுக்கும் விசாரணை சிறைவாசிகளுக்கும் அந்த உரிமையை மறுத்தது. தடுப்புக் காவலில் உள்ளவர்கள் பெரும்பாலும் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றுகின்றனர்.
‘சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நபர்’ அல்லது ‘காவல்துறையின் சட்டப்பூர்வ காவலில் உள்ள நபர்’ ஆகியோரால் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951இன் பிரிவு 62 (5) குறிப்பிடுகிறது. சிறையில் உள்ளவர் தண்டனை சிறைவாசியா அல்லது விசாரணை சிறைவாசியா என்பது குறித்தெல்லாம் இந்த சட்டம் ஆராயவில்லை. ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டாலே அவருக்கு வாக்குரிமை மறுக்கப்படும் என்று மட்டும் இந்த சட்டம் தெரிவிக்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசிகளின் வாக்குரிமையும் சேர்த்தே பறிக்கப்படுகிறது. இந்திய சிறைகளில் உள்ள சிறைவாசிகளில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பேர் விசாரணை சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை சிறைவாசிகளில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம் சமூக செயற்பாட்டாளர் சுனிதா சர்மா, உச்சநீதிமன்றத்தில் சிறைவாசிகள் வாக்குரிமை தொடர்பான பொது நலன் மனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 10 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் ஒன்றிய அரசாங்கத்திற்கும், நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே. வினோத் சந்திரன் அமர்வு, இது தொடர்பாக பதல் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணை சிறைவாசிகளின் வாக்குரிமை குறித்து இந்த வழக்கில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான முறைகேடுகள் அல்லது தேர்தல் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை மட்டும் வாக்களிப்பதில் இருந்து விலக்கி வைக்கலாம் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவும் கூட ஒரு பாரபட்சமே. குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறைவாசியாக இருந்தாலும் அவரின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
மேலே குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணை சிறைவாசிகளின் வாக்குரிமையை கருத்தில் எடுத்துக் கொண்டாலும் இதற்கு முந்தைய தீர்ப்புகளில் சிறைவாசிகளின் வாக்குரிமை மறுப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அனுகுல் சந்திரா பிரதான் எதிர் இந்திய ஒன்றியம் (1997) வழக்கில், வாக்குரிமை என்பது வெறும் சட்டரீதியான உரிமையே அன்றி அது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. சிறைகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு ஏராளமான வளங்கள் தேவைப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன், சிறைவாசிகள் வாக்களிப்பதை தடுப்பதன் மூலம் அரசியலை கிரிமினல் மயமாவதில் இருந்து பாதுகாக்கலாம் என்றும் நீதிபதிகள் அத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், மக்களவை உறுப்பினர்களில் 46 சதவிகிதமும் மாநிலங்களவை உறுப்பினர்களில் 40 சதவிகிதமும் குற்ற வழக்குகளை எதிர்கொள்வதாக அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபாம்ஸ் அமைப்பு 2024இல் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 45 சதவிகிதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, சிறைவாசிகளின் வாக்குரிமையை பறிப்பதன் மூலம் அரசியல் கிரிமினல் மயமாவதை தடுக்க முடியாது என்பதை நீதிபதிகள் இப்போது உணர்ந்திருக்கலாம்.
வாக்களிக்க முடியாது, ஆனால் போட்டியிடலாம்!
ஜன் சித் சத்ர மோர்ச்சா எதிர் இந்திய யூனியன் வழக்கில் (2013), சிறைச்சாலையில் உள்ள நபர் வாக்களிக்க முடியாது என்பதுடன் அவர் வாக்காளர் என்ற அந்தஸ்தையும் இழப்பதால் அவரால் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக செயலில் இறங்கிய நாடாளுமன்றம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது. சிறையில் இருக்கும் நபர் வாக்காளர் என்ற அந்தஸ்தை இழக்க மாட்டார் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் கிடையாது என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையை பெற்றவர்கள் இந்திய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மக்கள் பிரதிநிதிகள் எதற்காக சிறையில் உள்ளவர்கள் வாக்களிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஏராளமான அரசியல்வாதிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களாகவும் சிறைச்சாலைகளில் இருந்துள்ளனர், தற்போதும் இருந்து வருகின்றனர். இவர்கள் சிறையில் இருக்கும் காலத்தில் தேர்தல்கள் வரும் பட்சத்தில், அதில் இவர்களால் போட்டியிட முடியுமே அல்லாமல் வாக்களிக்க முடியாது என்பது வினோதமானது. ‘சிறையில் இருந்தே வெற்றி பெறுவேன்’ என்று இவர்கள் பெருமை பேசலாமே தவிர, ‘சிறையில் இருந்து வாக்களித்தேன்’ என்று இவர்களால் கூற முடியாது.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழாவில் கணிசமான எண்ணிக்கையிலான குடிமக்களை ஒதுக்கி வைப்பது அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணாக உள்ளது. சிறைவாசிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை 1993இல் வழங்கிய கனடா உச்சநீதிமன்றம், இரண்டு அல்லது அதற்கு அதிக காலம் தண்டனை பெற்றவர்கள் வாக்களிக்க முடியாது என்றும் கூறியது. 2002இல் இந்த தடையையும் நீக்கிய கனடா உச்சநீதிமன்றம் அனைத்து சிறைவாசிகளும் வாக்களிக்கலாம் என்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. விசாரணை சிறைவாசிகள் வாக்களிக்கும் நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது.
இது போன்று உலகின் பிற பகுதிகளில் சிறைவாசிகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை தேர்தல் ஆணையமும் அரசும் அலசி ஆராய்ந்து இந்திய சிறைகளில் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தண்டனை காலம் முடிந்து அல்லது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு சிறையை விட்டும் வெளியே வரும் சிறைவாசிகள், சமூகத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றிணைந்து வாழ்வது அவசியமாகும். இந்த ஒன்றிணைதலுக்கு சமூகம் மீதான அவர்களின் நம்பிக்கை மிக அவசியமாகும். இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதில் வாக்குரிமையும் ஒரு பங்கு வகிக்கும் என்பதை மறுக்க முடியாது.

