கல்வி வளாகங்களில் நிகழும் இனப்படுகொலை!
![]()
இந்திய ஜனநாயகம் தனது மிகப்பெரிய சவாலை தெருக்களில் அல்லாமல், அறிவு உற்பத்தி செய்யப்பட வேண்டிய பல்கலைக்கழக வளாகங்களில்தான் அதிகமாக சந்திக்கிறது. இந்தியாவில் சாதி என்பது வெறும் சமூக முறைமை மட்டுமல்ல, அது நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் ஓர் அதிகாரக் கட்டமைப்பு. கல்விசார் மேன்மை மற்றும் ‘தகுதி’ (Merit) என்ற போர்வையில் தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் இன்று வெறும் துன்புறுத்தல்கள் மட்டுமல்ல, அவை ‘நிறுவனமயமாக்கப்பட்ட கொலைகளாக’ (Institutional Murders) உருமாறியுள்ளன.
இந்தத் துயரத்தின் ஆழத்தை அளவிட, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவின் மரண சாசனத்திலிருந்து, அண்மையில் கேரளாவில் வளாகப் பாகுபாடுகளால் மனமுடைந்து தன்னுயிரைத் துறந்த நிதின் ராஜ் வரையிலான ஒவ்வொரு இறுதிப் பயணங்களும் சாட்சிகளாக உள்ளன. ஒரு முனைவர் ஆய்வு மாணவராகத் தனது கனவுகளை மிச்சம் வைத்துவிட்டு ரோகித் வெமுலா மண்ணோடு மடிந்தபோது, அது கல்வி வளாகங்களில் நிலவும் சாதிப் பாகுபாட்டின் வேர்கள் குறித்த மாபெரும் கேள்விக்குறியாக அமைந்தது. அக்கேள்வி இன்றும் முடிவுக்கு வரவில்லை; மாறாக நிதின் ராஜ், தர்ஷன் சோலங்கி போன்ற புதிய தலைமுறை மாணவர்களின் வாயிலாக அது இன்னும் பயங்கரமாகத் தொடர்கிறது.
சாதிய அதிகாரக்கட்டுமானமும் கல்விசார் வெளிகளும்
உயர் கல்வி நிறுவனங்கள் அறிவின் உன்னத மையங்கள் என்று நாம் நம்பினாலும், அங்கே செயல்படும் சாதி உணர்வு தலித் மாணவர்களுக்கு முன்னால் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவராக உயர்ந்து நிற்கிறது. இந்தப் பாகுபாடு வெறும் உடல் ரீதியான வசைகளுடன் முடிந்துவிடுவதில்லை.
‘தகுதி’ அல்லது ‘திறமை’ என்ற சொல்லை ஆதிக்க வர்க்கத்தினர் ஓர் இனவாத ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இடஒதுக்கீடு மூலம் வரும் மாணவர்களை ‘திறமை குறைந்தவர்கள்’ என்று முத்திரை குத்துவதும், அவர்களின் கல்விச் சாதனைகளைக் கூட சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் இன்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஒரு மனப்பாங்கு ஆகும்.
பல்கலைக்கழகங்களின் உணவுக்கூடங்கள் முதல் ஆய்வகங்கள் வரை தலித் மாணவர்களை ‘அந்நியப்படுத்தும்’ ஒரு திட்டமிட்ட செயல்முறை நடக்கிறது. இது மாணவர்களை மனரீதியாகச் சிதைத்து, அவர்களைக் கல்வியில் பின்னுக்குத் தள்ளுகிறது.
ரோஹித்வெமுலாவின் விவகாரத்தில் நாம் கண்டது போல, ஒரு மாணவனின் கல்வி உதவித்தொகையை நிறுத்துவது, விடுதியிலிருந்து வெளியேற்றுவது, ஒழுங்கு நடவடிக்கைகள் மூலம் மனதளவில் ஒடுக்குவது என இவை அனைத்தும் அதிகார வர்க்கமே முன்னின்று நடத்தும் வன்முறைகளாக மாறுகின்றன.
வரலாறும் நிகழ்காலமும்
ரோகித் வெமுலாவிற்கு முன்பும் பின்பும் இந்தியக் கல்வி வளாகங்களின் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆதிக்க வர்க்க மாணவர்கள் பெறும் சமூக ஆதரவிற்கும், தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் தனிமைப்படுத்தலுக்கும் (Isolation) இடையிலான இடைவெளி இன்றும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவத் துறை போன்ற இடங்களிலும் சாதி எவ்வாறு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை நிதின் ராஜின் மரணம் நமக்கு நினைவூட்டுகிறது.
நிபந்தனையற்ற நட்பிற்கான இடமாகக் கருதப்படும் கல்வி வளாகங்களில் கூட, சாதியைக் கேட்டுத் தெரிந்துகொள்வதும், அவர்களின் உடை மற்றும் உணவுப் பழக்கங்களை ஏளனம் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இந்தப் பாகுபாடு கல்வித் தரத்தை அழிப்பது மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையையும் சிதைக்கிறது. அறிவு என்பது ஜனநாயகப் பண்பு கொண்டது என்பதையும், அது சாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் நாம் உணராதவரை, இத்தகைய ‘நிறுவனமயமாக்கப்பட்ட கொலைகள்’ தொடர்கதையாகவே இருக்கும்.
இந்தியப் பல்கலைக்கழக வளாகங்களில் சாதிக்கு எதிரான போராட்டம் வெறும் அரசியல் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் மாணவர்களின் இருப்புச் சார்ந்த போராட்டமாகும்.
சமூகச் சூழலும் கல்விசார் சாதிப் பாகுபாடும்
இந்திய உயர்கல்வித் துறையில் சாதிப் பாகுபாடு பெரும்பாலும் நேரடி வசைகளை விடவும் கண்ணுக்குத் தெரியாத, கட்டமைப்புச் சார்ந்த ஒன்றாகவே இருக்கிறது. நவீன கால சாதிப் பாகுபாட்டின் மிக நுணுக்கமான வடிவமே ‘தகுதி’ என்ற வாதம்.
1.முத்திரை குத்துதல்: இட ஒதுக்கீடு மூலம் வரும் மாணவர்களுக்கு இயல்பாகவே திறமை குறைவு என்ற முன்முடிவு ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது. இது ஒரு வகையான ‘கல்விசார் பிராமணியம்’. முஸ்லிம் மாணவர்கள் அவர்களின் மத அடையாளங்கள் மற்றும் தேசியத்தின் பெயரால் கேலி செய்யப்படுகிறார்கள்.
2. மன அழுத்தம்: இடஒதுக்கீடு மூலம் வரும் ஒரு மாணவர் (அவர் தலித், முஸ்லிம் அல்லது ஓ.பி.சி யாராக இருந்தாலும்), தனது திறமையை நிரூபிக்க மற்றவர்களை விட இருமடங்கு உழைக்க வேண்டியுள்ளது. அவர்களின் ஒவ்வொரு சிறிய தோல்வியும் அவர்களின் ‘சாதி அல்லது இனத்தின் தோல்வியாக’ சித்தரிக்கப்படுவது மாணவர்களைத் தீராத தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது.
3. மொழிச் சிக்கல்கள்: கிராமப்புறப் பின்னணியிலிருந்தும், மாநில மொழி வழிக் கல்வியிலிருந்தும் வரும் தலித் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் அவர்கள் அறிவு ரீதியாகத் தரம் தாழ்த்தப்படுகிறார்கள். வகுப்பறை விவாதங்களும் நகைச்சுவைகளும் அவர்களைப் புறக்கணிக்கும் விதமாகவே அமைகின்றன.
4. நேர்முகத் தேர்வு(Viva) பாகுபாடு: ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கக்கூடிய நேர்முகத் தேர்வுகளிலும், செய்முறைத் தேர்வுகளிலும் தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கித் தோற்கடிப்பது ஐ.ஐ.டி மற்றும் எய்ம்ஸ் (AIIMS) போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து அறிக்கையிடப்படுகிறது.
சமூகப் புறக்கணிப்பு
வகுப்பறைகளுக்கு வெளியிலான வளாக வாழ்க்கை ஒரு தலித் அல்லது முஸ்லிம் மாணவரைப் பொறுத்தவரை மிகவும் தனிமையானது. கலாச்சார ஆதிக்கம் நிறைந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் மேலாதிக்க வர்க்கச் சடங்குகளின் மறுவடிவமாக அமையும்போது, அங்கே தங்களது தனித்துவம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாக இம்மாணவர்கள் உணர்கின்றனர். இது அவர்களை வளாகத்திற்குள்ளேயே ‘தனித்தீவுகளாக’ மாற்றுகிறது.
2014-க்கு முன்பும் பின்பும்
இந்தத் துயரமான மாற்றத்தை 2014-க்கு முன்பு மற்றும் பின்பு என இரு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம். ரோகித் வெமுலா முதல் நிதின் ராஜ் வரையிலான நினைவுகள் சாட்சியமளிப்பது போல, முன்பு வளாகங்களில் அமைதியாகவும் மறைமுகமாகவும் இருந்த சாதிப் பாகுபாடு, தற்போதைய காலகட்டத்தில் அதிகார வர்க்கத்தின் அரசியல் நலன்களோடு இணைந்து வன்முறையானதாகவும் திட்டமிட்ட ஒன்றாகவும் மாறியுள்ளது.
2014-க்கு முன் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்கள்:
அனில் குமார் மீனா (2012, எய்ம்ஸ் டெல்லி): இந்தி வழியில் பயின்று வந்த இவருக்கு, எய்ம்ஸ் நிறுவனத்தின் ஆங்கில வழி வகுப்புகளும் ஆசிரியர்களின் அலட்சியமும் தாங்கொண்ணாத் துயரத்தைத் தந்து தற்கொலைக்குத் தூண்டின.
பாலமுகுந்த் பாரதி (2010, எய்ம்ஸ்):ஆசிரியர்களின் தொடர்ச்சியான சாதி வசைகளால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர்.
செந்தில் குமார் (2008, ஹைதராபாத் பல்கலைக்கழகம்): கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதாலும் ஆசிரியர்களின் துன்புறுத்தலாலும் தற்கொலை செய்த முனைவர் பட்ட மாணவர்.
2014-க்குப் பிந்தைய நிலைமை:
2014-க்குப் பிந்தைய இந்தியக் கல்வி வளாகங்கள் தீவிர சித்தாந்தப் போராட்டங்களின் களமாக மாறின. இக்காலக்கட்டத்தில் உருவான ‘முஸ்லிம்-தலித் அரசியல் விழிப்புணர்வு’ மிக முக்கியமானது. அதிகார வர்க்கம் பிரித்தாளும் அரசியலை முன்னெடுக்கும்போது, ‘பீம்-மீம்’ முழக்கங்களுடன் உருவான புதிய ஒற்றுமை வளாகங்களில் வலுப்பெற்றது. ரோகித் வெமுலாவின் போராட்டங்களில் அம்பேத்கர் அமைப்புகளுடன் முஸ்லிம் மாணவர் அமைப்புகளும் கைகோர்த்தது இதற்குச் சிறந்த உதாரணம்.
இந்த அரசியல் விழிப்புணர்வு ஆதிக்க வர்க்கத்திற்குப் பெரும் சவாலாக மாறியதால், தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களை ‘தேசவிரோதிகள்’ என்று முத்திரை குத்தி வேட்டையாடும் போக்கு அதிகரித்தது. பாத்திமா லத்தீப் போன்ற மாணவிகள் எதிர்கொண்ட பாகுபாடு வெறும் சாதி ரீதியானது மட்டுமல்ல, அது அவர்களின் மத மற்றும் சமூக அடையாளத்தையும் குறி இலக்காக வைத்ததாகும்.
அண்மைக்கால உதாரணங்கள்:
பாயல் தட்வி (2019, மும்பை): மூத்த மருத்துவர்களிடமிருந்து சாதி வசைகளை எதிர்கொண்ட போதும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்டார்.
பாத்திமா லத்தீப் (2019, ஐ.ஐ.டி சென்னை): ஆசிரியர்களிடமிருந்து எதிர்கொண்ட மதப் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி.
தர்ஷன் சோலங்கி (2023, ஐ.ஐ.டி பாம்பே): இடஒதுக்கீடு மூலம் வந்தவர் என்ற காரணத்தால் சக மாணவர்களால் தனிமைப்படுத்தப்பட்டு மரணமடைந்தவர்.
கேரள அனுபவங்கள்: வெளியே முற்போக்கு, உள்ளே சாதி
கேரளம் பொதுவாக சாதி ஒழிக்கப்பட்ட மாநிலம் என்று உரிமை கோரினாலும், கல்வித் துறையில் தலித்-முஸ்லிம் பாகுபாடு வலுவாகவே உள்ளது. ஜிஷ்ணு பிரணாய், சித்தார்த் மற்றும் நிதின் ராஜ் ஆகியோரின் மரணங்கள் இதற்குச் சான்றுகளாகும். கேரளாவின் ‘முற்போக்கு’ வளாகங்களுக்குள்ளும் கண்ணுக்குத் தெரியாத சாதி உணர்வும், நிறுவனமயமாக்கப்பட்ட சித்திரவதைகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
கல்வி என்பது விடுதலைக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கற்பித்தார். ஆனால், இன்றைய இந்திய வளாகங்கள் தலித் மாணவர்களை அவர்களின் சாதி அடையாளத்திற்குள்ளேயே முடக்கி வைக்க முயற்சிக்கின்றன. சட்டங்களை விடவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனங்களிலுள்ள சாதி உணர்வு மாறாதவரை, இந்த மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
மலையாளத்தில்: சஜீத் காலித்
தமிழ் மொழிபெயர்ப்பு: செய்யது அலீ

