கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஸா நிலத்தடி எதிர்ப்புப் போராட்டத்தின் ரகசிய வரலாறு

Loading

காஸா ஒரு சமமான நிலப்பரப்பு. நிலத்தில் ஏற்படும் மிகச்சிறிய மேடு கூட அங்கு குன்று என்று அழைக்கப்படுகிறது. காஸா நகருக்கு கிழக்கே உள்ள ‘தெல் அல் முன்தார்’, ரஃபாவுக்கு அருகிலுள்ள ‘தெல் அல் சுல்தான்’ ஆகிய குன்றுகளுக்கு உள்ளூர் மக்கள் மத்தியில் சிறப்பு இருந்தாலும் ஷாம் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் இவை குன்றுகளாகக் கருதப்பட்டிருக்காது.

தொன்மையான காலத்திலிருந்தே தோன்றிய ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு இத்தகைய நிலப்பரப்பு பொருத்தமற்றதாகத் தோன்றலாம். காஸாவின் மிகச்சிறிய மேட்டின் மீது நிற்பவரால் கீழே நடக்கும் ஒவ்வொரு அசைவையும் காண முடியும். அப்படியென்றால், காஸாவை பாதுகாப்பவர்களால் தங்கள் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள முடிந்தது?

இப்போதைய சூழலில் இக்கேள்வி இன்னும் முக்கியவத்துவம் பெறுகிறது. இஸ்ரேலையும் அமெரிக்காவும் பிற மேற்கத்திய சக்திகளும் வழங்கிய இராணுவ தொழில்நுட்பத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம் எப்படி பல தசாப்தங்களாக தாக்குப் பிடிக்கிறது? கண்காணிப்பு ட்ரோன்கள் பல மணிநேரம் வானில் நிலைத்திருக்கின்றன. தெர்மல் கேமராக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கின்றன. நிலத்தடி நடவடிக்கைகளும் கண்டறியப்படுகின்றன. துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களைக் கொண்டு காஸாவின் எந்தப் பகுதியின் மீதும் தாக்குதல் நடத்த முடியும்.

சிறிய அளவிலான இயற்கை அரண்களை மட்டுமே காஸா பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் எதிர்ப்புப் படையால் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்றே வழக்கமான போர்முறை அளவுகோல்கள் கூறும்.

பொதுவான துயரம், அடையாளம், தேசிய எண்ணம் ஆகியவற்றைக் கொண்ட பரந்த ஃபலஸ்தீனிய அனுபவத்திலிருந்து காஸாவின் வரலாற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதே சமயம், காஸாவின் தனித்துவமான புவியியல் அமைப்பும் வரலாறும் அதற்குரிய தனித்தன்மையை வடிவமைத்துள்ளன.

இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக, ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் ‘வியா மாரிஸ்’ எனும் பண்டைய வணிகப் பாதையில் காஸா அமைந்திருந்தது. வணிகர்கள் மட்டுமின்றி, படையெடுத்து வருபவர்களும் இப்பாதையை பயன்படுத்தினர். அதன் அமைவிடம் காஸாவை ஒரு நுழைவாயிலாகவும் அதே சமயம் போர்க்களமாகவும் மாற்றியது. இங்குள்ள மக்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

1948இல் நக்பா எனும் பேரழிவைத் தொடர்ந்து நவீன காஸா உருவாக்கப்பட்டது. அங்கு வசிக்கும் பெரும்பான்மை மக்கள் அந்நகரத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களோ கிடையாது. அல் மஜ்தல், ஸிம்ஸிம், ஹமாமா, அல் ஃபலூஜா, பெய்த் தராஸ் உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதிகள், விவசாய நிலங்கள், வியாபாரத் தலங்களில் இருந்து சியோனிச படைகளால் விரட்டப்பட்ட அகதிகளும் அவர்களின் சந்ததியினரும் அங்கு அதிகமாக உள்ளனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஃபலஸ்தீனியர்கள் வெறும் 25 மைல் நீளமுள்ள இந்த குறுகிய கடலோரப் பகுதிக்கு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1946இல் ஃபலஸ்தீனின் வரைபடம் (நன்றி:www.palestineremembered.com)

இந்த பெரும் மாற்றம் காஸாவின் சமூகக் கட்டமைப்பையும் போராட்டம் குறித்த அதன் புரிதலையும் மாற்றியது. ஷாத்தி, ஜபலிய்யா, நுஸைரத், கான் யூனுஸ் போன்ற அகதிகள் முகாம்களில் மக்கள் நெருக்கப்பட்டனர். இழப்பு என்பது சமாளிக்கப்பட வேண்டிய, பகிரப்பட்ட, அன்றாட யதார்த்தமாக மாறியது. இதனிடையே முற்றுகை, சிறை, வறுமை, நாடற்ற நிலை ஆகியவை ஒரு எதிரப்புக் பண்பாட்டை வலுப்படுத்தின. சொந்த நிலத்திற்கு திரும்பும் உரிமையும் ‘சுமூத்’ என்ற உறுதியான நிலைப்பாடும் அதன் மையமாக அமைந்தன.

ஆனால், மக்கள்தொகையியல், புவியியல், இராணுவ பலத்தினால் மட்டும் காஸாவின் இந்த தாங்குதிறனை விளக்க முடியாது. ஆன்மீக நம்பிக்கை, பகிரப்பட்ட துயரம், வரலாற்று நினைவு, ஆழமாக வேரூன்றிய அரசியல் கண்ணோட்டம் என பல்வேறு காரணிகளால் இந்த தனித்துவமான தைரியமும் உறுதியும் (சுமூத்) வடிவமைக்கப்பட்டன.

ஆன்மீக மற்றும் உளவியல் பரிமாணங்களை இக்கட்டுரையில் முழுமையாக ஆராயவில்லை என்றாலும் அவை இன்றியமையாதவை. அவை இல்லாமல் காஸாவின் தாங்குதிறனை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது என்பதும் முக்கியமானது.

ஏனென்றால் பல வர்ணனையாளர்கள் ஃபலஸ்தீனியர்களின் பங்களிப்பிற்கு காரணம் கூற முடியாதபோது சதி கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இஸ்ரேலிய ஊடகங்களில் இருந்து குறிப்புகளை பெறுகின்றனர். ‘அக்டோபர் 7 குறித்து நேதன்யாகுவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்து, அது நடைபெறுவதற்கு அவர் அனுமதித்தாரா?’, ‘இஸ்ரேலிய உளவுத்துறையின் திட்டத்தில் ஃபலஸ்தீனியர்கள் வெறும் பகடைக்காய்களாக இருந்தார்களா?’, ‘அக்டோபர் 7யும் அதனைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலையும் அழிவும் பிராந்தியத்தை மறுசீரமைப்பதற்கான இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததா?’ போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர்.     

இத்தகைய விளக்கங்கள், தங்கள் சொந்தப் போராட்டத்தின் பங்காளிகள் என்ற நிலையில் இருந்து ஃபலஸ்தீனியர்களை முற்றிலுமாக நீக்கிவிடுகின்றன. முழு இனத்தையும் வரலாற்றை உருவாக்குவதில் பங்கேற்பாளர்களாக கருதாமல் வெறும் பொருட்களாக அவர்களை சுருக்கிவிடுகின்றன. ஏகாதிபத்திய ஆய்வுகளும் சில பழைய காலனித்துவ எதிர்ப்பு கட்டமைப்புகளும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உள்ள பங்கை மறுத்ததை போன்றே இவர்களும் மறுக்கின்றனர். வேறு யாரோ ஒருவர் தங்கள் கதையை எழுதுவதற்கு காத்திருக்கும் செயலற்றவர்களாக காஸா மக்களை பார்க்க முடியாது. அவர்களின் யுத்திகள், சாதுர்யம், நிலைத்து நிற்கும் திறன் ஆகியவை காலனித்துவ அழிப்பை எதிர்ப்பதற்கான அவர்களின் சொந்த உறுதியில் இருந்து எழுகின்றன.

இச்சூழலை மனதில் கொண்டால்தான், காஸா ஆயுதப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றை நாம் ஆராய முடியும்.

பாதுகாப்பு அரணின் தொன்மையான வரலாறு

பண்டைய காலத்திலிருந்தே அந்நிய ஆதிக்கத்தை காஸா எதிர்த்து வந்துள்ளது. நைல் நதியின் முகத்துவாரத்தை ஷாம் மற்றும் மெஸப்படோமியாவுடன் இணைக்கும் கடற்கரை வழித்தடத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. எனவே, பாரோக்கள், அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், சிலுவைப் படையினர், உதுமானியர்கள் என பல்வேறு படையெடுப்பாளர்களுக்கு காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒரு முக்கியத் தேவையாக இருந்தது.

தங்களை பாதுகாக்க மலைக் கோட்டைகளோ அல்லது அடர்ந்த காட்டுப்பகுதிகளோ இல்லாத நிலையில், தாங்கள் அமைத்த அரண்களையும் தங்களின் மன உறுதியையும் மட்டுமே காஸா மக்கள் நம்பியிருந்தனர். இதற்கான மிகச் சிறந்த உதாரணம் கி.மு. 332இல் மாவீரன் அலெக்சாண்டர் அந்நகரை முற்றுகையிட்ட நிகழ்வாகும். டயர் நகரின் தீவுக் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, எகிப்தை நோக்கிச் செல்லும் பாதையை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில் அலெக்சாண்டர் தெற்கு நோக்கிப் புறப்பட்டார். காஸாவை அடைந்த போது, மணல் பரப்பாலும் திறந்த சமவெளிகளாலும் சூழப்பட்ட ஒரு செயற்கை மேட்டின் மீது அமைந்திருந்த அரண்மிக்க நகரத்தையும் பாதிஸ் என்ற ஆளுநரின் கட்டுப்பாட்டில் அது இருந்ததையும் அவர் கண்டார்.

அலெக்சாண்டரின் முற்றுகை இயந்திரங்களை செயலிழக்கச் செய்யும் நோக்கில், மண்மேடுகள், அகழிகள், நிலத்தடி சுரங்கங்களைப் பயன்படுத்தி ஒரு உறுதியான தற்காப்பை பாதிஸ் ஒழுங்கமைத்தார். பண்டைய உலகின் மிக வலிமையான படைகளில் ஒன்றை இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக காஸா தடுத்து நிறுத்தியது. பெரும் இழப்புகளை மேஸிடோனிய படைகள் சந்தித்ததுடன் அலெக்சாண்டருக்கும் காயம் ஏற்பட்டது.

இறுதியில் சுவர்கள் தகர்ந்த போது, அலெக்சாண்டர் கோட்டையின் காவல்படையினரைக் கொலை செய்தார். பின்னர், ஹெக்டரை அகிலீஸ் நடத்திய விதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதிஸின் கணுக்கால்களை ஒரு தேரில் கட்டி நகரச் சுவர்களை சுற்றி இழுத்துச் செல்லும்படி கட்டளையிட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. (ட்ரோஜன் போரில், தனது நண்பனை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக ஹெக்டரை கொலை செய்த அகிலீஸ், அத்துடன் நிறுத்தாமல், ஹெக்டரின் உடலை தனது தேரில் கட்டி, ட்ரோஜன் நகரைச் சுற்றி இழுத்துச் சென்றான். கிரேக்க காப்பியமான ஹோமரின் இலியட் நூலில் இச்சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது).

இயற்கை அரண்கள் இல்லாத நிலையில் தங்கள் நிலத்தைப் பாதுகாக்க நிலப்பரப்பையே மாற்றியமைக்க வேண்டியிருந்தது என்ற பாடத்தை இந்த முற்றுகை உணர்த்தியது. இப்பாடம் காஸாவின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெளிப்பட்டது. அகழிகள், மண் அரண்கள், நிலத்தடிப் பாதைகள் ஆகியவை புவியியல் அமைப்பு வழங்காத பாதுகாப்பிற்கு மாற்றாக அமைக்கப்பட்டன. 

நக்பா: முகாம்களின் தோற்றம்

காஸாவில் எதிர்ப்பியக்கத்தின் நவீன வரலாறு 1948இல் தொடங்கியது. அதற்கு முன் காஸா ஒரு செழிப்பான கடற்கரைப் பிராந்தியமாக திகழ்ந்தது. வளமான விவசாய கிராமங்களால் சூழப்பட்ட ஒரு நகர்ப்புற மையமான அதன் சமூக, பொருளாதார சூழலை போர் சிதைத்துவிட்டது.

நக்பா பேரழிவின் போது ஹகானா, இர்குன், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இஸ்ரேலிய இராணுவம் ஆகியவை தெற்கு கடற்கரைச் சமவெளியில் இருந்த டஜன் கணக்கான கிராமங்களைத் துடைத்தெறிந்தன. இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் காஸா பகுதிக்கு வந்தனர். அதன் மக்கள் தொகை ஒரே இரவில் மும்மடங்கு அதிகமானதைத் தொடர்ந்து உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றாக காஸா மாறியது. 1949இன் போர் நிறுத்த ஒப்பந்தங்களால் காஸா எகிப்து நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அகதிகளாக வந்தவர்களை தங்க வைப்பதற்காக ஜபலிய்யா, ஷாத்தி, நுஸைரத், அல் புரைஜ், மகாஸி, டயர் அல் பலாஹ், கான் யூனுஸ், ரஃபா ஆகிய எட்டு அதிகாரப்பூர்வ அகதிகள் முகாம்களை ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்பு தொடங்கியது. தற்காலிக முகாம்களாக தொடங்கப்பட்ட இவை நிரந்தர நகரங்களாக மாறின.

காஸாவின் அகதிகள் முகாம்களை சித்தரிக்கும் வரைபடம்

இந்த மாற்றம் காஸாவை நிரந்தரமாக அரசியல் மயமாக்கியது. வீடுகளை விட்டும் நிலங்களை விட்டும் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்ட போதும் மீண்டும் திரும்பிச் செல்வோம் என்ற நம்பிக்கையில் தங்கள் வீடுகளின் சாவிகளை அவர்கள் பத்திரமாக வைத்திருந்தனர். தங்கள் தோப்புகளின் எல்லைகளையும் நினைவில் வைத்திருந்தனர்.

துயரமும் வறுமையும் முகாம்களில் பகிரப்பட்ட அரசியல் அனுபவமாக மாறின. கிராமங்களுக்கும் வயல்களுக்கும் திரும்ப வேண்டும் என்ற அரசியல் செய்தி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

தியாகிகளின் காலம்

1950களின் தொடக்கத்தில் அகதிகளின் கோபமும் விரக்தியும் போர்நிறுத்த எல்லைகளைக் கடந்தன. ஆரம்பத்தில், கைவிடப்பட்ட பயிர்களை அறுவடை செய்யவும் தங்களின் உடைமைகளை மீட்கவும் அல்லது பிரிந்த உறவினர்களை சந்திக்கவும் புதிய எல்லையை பலர் கடந்து சென்றனர். இதனை ‘அத்துமீறல்’ என்று வகைப்படுத்திய இஸ்ரேல் பிடிபட்டவர்களை பெரும்பாலும் சுட்டுக் கொன்றது. காஸாவில் பழிவாங்கும் தாக்குதல்களையும் நடத்தியது.

இந்த வன்முறைகளின் பின்னணியில் ஃபிதாயீன் (தியாகிகள்) என்ற எதிர்ப்புப் படையினர் உருவாகினர். ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து இராணுவ சோதனை சாவடிகளையும் கட்டமைப்புகளையும் தகர்ப்பது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவது என்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 1955இல் இந்த மாற்றத்தை கண்ட எகிப்து அதிபர் ஜமால் அப்துல் நாஸர், எகிப்திய உளவு அமைப்பினரைக் கொண்டு இவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். புதிய போராட்டத்தின் பாதிப்பை உணர்ந்த இஸ்ரேல், 1956 சினாய் போரின் போது கான் யூனுஸ், ரஃபா பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி பெருமளவில் அகதிகளையும் ஃபிதாயீன்களையும் படுகொலை செய்தது.

ஃபலஸ்தீன விடுதலை இயக்கமும் அய்ன் ஜாலூத் படைப்பிரிவும்

சில வருடங்களில் சிறந்த கட்டமைப்புகளைக் கொண்ட அரசு ஆதரவு எதிர்ப்புப் படைகள் காஸாவில் தோன்றின. அறபு லீக்கின் மேற்பார்வையில் 1964இல் தொடங்கப்பட்ட ஃபலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestine Liberation Organization – PLO), 1965இல் ஃபலஸ்தீன விடுதலைப் படையை (Palestine Liberation Army – PLA) நிறுவியது. முந்தைய படையினரை விட இவர்களுக்கு முறையான பயிற்சிகள் எகிப்திய இராணுவத்தால் வழங்கப்பட்டன. ஃபலஸ்தீன விடுதலைப் படையின் முக்கிய அங்கமான அய்ன் ஜாலூத் படைப்பிரிவு ஃபலஸ்தீன மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (கி.பி. 1260இல் ஃபலஸ்தீனின் அய்ன் ஜாலூத்தில் நடைபெற்ற போரில் மங்கோலிய படையினரை மம்லூக் படையினர் தோற்கடித்தனர். இதன் நினைவாகவே இப்படைப்பிரிவிற்கு பெயரிடப்பட்டது).

கனரக ஆயுதங்களை கொண்ட முறையான படிநிலைகளைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட இராணுவப் படையைப் போல் இப்பிரிவு செயல்பட்டது. 1967 ஆறு நாள் யுத்தத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையை வலுவாக எதிர்கொண்ட இப்பிரிவு பெரும்; இழப்புகளை சந்தித்தது.

இத்தோல்விக்குப் பிறகு ஃபலஸ்தீன விடுதலைப் படையின் இராணுவ கட்டமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது. பலர் நாடு கடத்தப்பட்டனர். ஆனால் அய்ன் ஜாலூத் பிரிவு ஒரு முக்கியமான மரபை விட்டுச் சென்றது. காஸாவின் இளைஞர்கள் ஆயுதங்களை கையாள்வதையும் இராணுவ ஒழுக்கத்தையும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொண்டனர். அகதிகள் முகாம்களுக்கு திரும்பிய பலரின் நிபுணத்துவம் 1970, 1980களின் ரகசிய கெரில்லா அமைப்புகளுக்கு உதவியாக இருந்தது.

காஸாவில் இடதுசாரிகளின் செல்வாக்கு

1967 யுத்தத்தை தொடர்ந்து காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. நேரடி இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் எதிர்ப்புப் போராட்டத்தை எப்படி மேற்கொள்வது என்ற முக்கியமான கேள்வியை ஃபலஸ்தீன தேசிய இயக்கத்தினர் எதிர்கொண்டனர். இச்சூழலில் காஸாவும் மேற்குக் கரையும் வெவ்வேறு பாதைகளில் சென்றன.

யாஸர் அரஃபாத்தின் ஃபத்தாஹ் இயக்கம் மேற்குக் கரையில் ஆயுதக் குழுக்களை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் பூகோள மற்றும் நடைமுறை சிக்கல்கள் அவர்களுக்கு பாதகமாக இருந்தன. ஜோர்டானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதால் அங்கிருந்து லெபனானிற்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட ஃபத்தாஹ் இயக்கம் அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொண்டது.

1970இல் ஜோர்டான் தலைநகர் அம்மானில் செய்தியாளர் சந்திப்பில பி.எல்.ஒ. செய்தித் தொடர்பாளர் கமால் நாஸருடன் அதன் தலைவர் யாஸர் அரஃபாத் (வலது). (நன்றி: www.britannica.com)

ஆனால், காஸாவில் மார்க்ஸிய – லெனினிய அமைப்புகள் ஒரு வலிமையான அடித்தளத்தை உருவாக்கி, ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்தே தொடர் கெரில்லா தாக்குதல்களை மேற்கொண்டன. ஜார்ஜ் ஹப்பாஷ்-இன் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் ஃபலஸ்தீன் (Popular Front for the Liberation of Palestine – PFLP) இதில் முக்கியமானது.

காஸாவில் ஃபத்தாஹ் இயக்கத்தால் அமைக்க முடியாத வலிமையான கட்டமைப்பை இடதுசாரி அமைப்புகள் எவ்வாறு அமைத்தன? காஸாவின் சமூக, புவியியல் அமைப்பில் இதற்கான பதில் இருக்கிறது.

  • அடர்த்தியான அகதிகள் முகாம்களும் இடப்பெயர்வின் பகிரப்பட்ட அனுபவமும்

காஸாவின் நெரிசலான அகதிகள் முகாம்கள், இடப்பெயர்வின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட, வறுமையில் வாடும், அரசியல் விழிப்புணர்வுள்ள ஏராளமான ஃபலஸ்தீனியர்களை ஒன்றிணைத்தன. அறபு நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக உணர்ந்த பல அகதிகளை மார்க்ஸிய – லெனினிய கருத்துகள் ஈர்த்தன.

  • பி.எல்.ஏ.யின் மரபு

அய்ன் ஜாலூத் படைப்பிரிவின் பல முன்னாள் வீரர்களும் அதிகாரிகளும் ஏற்கெனவே மதச்சார்பற்ற அறபு தேசியவாத, சோசலிக் கருத்துகளை கொண்டிருந்தனர். இல் இணைந்த அவர்கள், தங்கள் இராணுவப் பயிற்சி, ஒழுக்கம், அனுபவத்தின் மூலம் அந்த இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்கினர்.

  • காஸாவின் புவியியல்

ரகசியக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு காஸாவின் சிறிய அளவும் அடர்த்தியாக கட்டப்பட்ட முகாம்களும் உதவியாக அமைந்தன. இஸ்ரேலிய படையினரிடமிருந்து போராளிகளை காப்பதற்கு அப்பகுதி மக்களே உதவியாக இருந்தனர்.

ஜார்ஜ் ஹப்பாஷ்

செஞ்சதுக்கமும் ஷரோனின் கடுமையான ஒடுக்குமுறையும்

1969 – 1971ற்கு இடைப்பட்ட காலத்தில், காஸாவில், குறிப்பாக, கான் யூனுஸ், ஜபலிய்யா, ஷாத்தி முகாம்களில் இயக்கம் அதிக வலுவுடன் செயல்பட்டது. அதன் உள்ளூர் கமாண்டரான முஹம்மது அல் அஸ்வத், ‘காஸாவின் சே குவேரா’ என்று அழைக்கப்பட்டார். இவரின் தலைமையின் கீழ் PFLP ஒரு விரிவான ரகசிய கட்டமைப்பை கட்டமைத்தது.

பகல் பொழுதுகளில் இஸ்ரேலிய படையினர் முகாம்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இரவு இயக்கத்தினருக்கானதாக இருந்தது. இராணுவ வாகனங்கள், படையினர் மீதான தாக்குதல்கள், வேலைநிறுத்தங்கள், காட்டிக் கொடுப்பவர்களை படுகொலை செய்வது என அவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்தன.

1971இல் ஏரியல் ஷரோனை இராணுவத்தின் தென் பகுதியின் கமாண்டராக இஸ்ரேல் நியமித்தது. பெரும் இராணுவ பலத்துடன் அகதிகள் முகாம்களை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்துடன் ஷரோன் வந்தான். ஜபலிய்யா, ஷாத்தி முகாம்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர். வீடுகள் இடிக்கப்பட்டதால் சாலைகள் அகலமாயின. இந்த புதிய சாலைகள் இஸ்ரேலிய கவச வாகனங்கள் முகாம்களுக்கு எளிதாகச் செல்வதற்கான பாதைகளையும் போராளிகளை எளிதாகச் சுடுவதற்கு தெளிவான வழிகளையும் உருவாகின.

மாறுவேடத்தில் முகாம்களுக்குள் நுழைந்த ஷரோனின் ரகசிய பிரிவினர் போராளிகளைக் கொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன் சந்தேகிக்கப்பட்ட போராளிகளின் குடும்பத்தினர் சினாய் பாலைவனத்தில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டனர். 

மார்ச் 1973இல் காஸாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது முஹம்மது அல் அஸ்வத் கொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலையும் வீடுகள் இடிப்பும் கைதுகளும் நாடு கடத்தல்களும் PFLP இயக்கத்தின் ஆயுதக் கட்டமைப்பின் பெரும் பகுதியை சிதைத்தன. காஸா சோர்வுற்று பேரழிவுக்கு ஆளான போதும், ஆக்கிரமிப்பும் அதன் வழிமுறைகளும் மக்களின் கோபத்தை மேலும் ஆழப்படுத்தின.

இஸ்லாமியவாதிகளின் அமைதியான வளர்ச்சி

PFLP அமைப்பு ஒடுக்கப்பட்டது, அறபு தேசியவாதத்தின் வீழ்ச்சி ஆகியவை காஸாவில் ஒரு சமூக, அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தின. மதச்சார்பற்ற இடதுசாரிகள் உறுதியுடன் போராடிய போதும் விடுதலையும், சொந்த நிலத்திற்கு திரும்புவதும் ஆக்கிரமிப்பின் முடிவும் எட்ட முடியாததாக இருந்தன.

இந்த வெற்றிடத்தை சரி செய்யும் வகையில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த ஷேக் அகமது யாஸின், அல் முஜம்மா அல் இஸ்லாமி என்ற இயக்கத்தை தோற்றுவித்தார்.

அல் ஜூரா என்ற கிராமத்தில் இருந்து அகதியாக வந்த ஷேக் யாஸின் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தார். நேரடி ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லாத சூழலில், யாஸினும் அவரின் சகாகளும் இஸ்லாமிய பிரச்சாரம், சமூகப் பணிகள், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட நீண்ட கால உத்தியைக் கையாண்டனர்.

1970களிலும் 1980களின் முற்பகுதியிலும் மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள், விளையாட்டு மன்றங்கள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி, தொண்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய ஒரு கட்டமைப்பை அல் முஜம்மா உருவாக்கியது. இஸ்ரேலிய இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத, சமூக மையங்களாகத் திகழ்ந்த பள்ளிவாசல்களையும் அது கட்டியெழுப்பியது.

நேரடி இராணுவ மோதல்களைத் தவிர்த்து, சமூகச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்திய போதும் பல்கலைக்கழகங்களிலும் தொழில்முறைச் சங்கங்களிலும் செல்வாக்கு செலுத்துவதற்காக மதச்சார்பற்ற பி.எல்.ஓ. அமைப்புடன் அல் முஜம்மா போட்டியிடவும் செய்தது.

ஆயுதமேந்திய இஸ்லாமியவாதத்தின் முன்னணி அமைப்பாக ஃபலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத்

இதனிடையே 1970களின் இறுதியில் எகிப்தில் உள்ள காஸா மாணவர்கள் ஃபலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பை தோற்றுவித்தனர். நிறுவனங்கள் கட்டமைப்பதிலும் சமூகப் பணிகளிலும் அல் முஜம்மா தனது கவனத்தைக் குவித்துக் கொண்டிருந்த நிலையில் ஃபத்ஹி ஷஃகாகி, அப்துல் அஜீஸ் அவ்தா போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு சித்தாந்த பிளவைக் களைய முற்பட்டது. ஃபலஸ்தீனை விடுவிப்பதில் மதச்சார்பற்ற இஸ்லாமியவாதிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும் ஆக்கிரமிப்புடன் மோதுவதை விட சமூக சீர்திருத்தத்திற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் முன்னுரிமை அளிப்பதாகவும் இவர்கள் கருதினர்.

1979 ஈரானியப் புரட்சி மற்றும் ஃபலஸ்தீன தேசிய விடுதலைச் சிந்தனையின் காலனித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் தாக்கத்தால் இஸ்லாமிக் ஜிஹாத் ஆயுதப் போராட்டத்தை முதன்மைப்படுத்தியது. தனது இராணுவப் பிரிவுடன் சமூக, தொண்டு, அரசியல் நிறுவனங்களையும் வளர்த்தெடுத்த ஹமாஸ் இயக்கத்தைப் போல் அல்லாமல், ஃபலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கம் இராணுவ நடவடிக்கையை மையப்படுத்திய ஒரு சிறிய, முன்னணி இயக்கமாக இருந்தது.

1980களின் நடுப்பகுதியில் காஸாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் நேரடி எதிர்ப்புப் போராட்டத்துடன் இஸ்லாமிய அரசியலை இணைக்க முடியும் என்பதை நிரூபித்தது. 1987இல் வெடித்த முதல் இன்திஃபாதாவிற்கு (மக்கள் எழுச்சி) இதன் ஆரம்ப நடவடிக்கைகள் பங்களித்தன.

காஸாவின் கூட்டு நடவடிக்கைகளில் ஏனைய இயக்கங்களுடன் இணைந்து இஸ்லாமிக் ஜிஹாத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் எழுச்சி

1987 டிசம்பரில் ஜபலிய்யா அகதிகள் முகாம் அருகில், இஸ்ரேலிய இராணுவ வாகனம் ஒன்று மோதியதில் ஃபலஸ்தீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து முதல் இன்திஃபாதா வெடித்தது. போராட்டம் பரவியதைத் தொடர்ந்து, இனி ஒதுங்கியிருக்க வாய்ப்பில்லை என்பதை அல் முஜம்மா உணர்ந்தது.

டிசம்பர் 14இல் ஷேக் அகமது யாஸின், அப்துல் அஜீஸ் ரன்திஸி, ஸலாஹ் ஷிஹாதா உள்ளிட்ட தலைவர்கள் ‘ஹர்கத் அல் முகவ்வமா அல் இஸ்லாமிய்யா’ (எதிர்த்துப் போராடும் இஸ்லாமிய இயக்கம்) என்ற இயக்கத்தை தோற்றுவித்தனர். முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் நிறுவப்பட்ட சமூக அடித்தளத்தை எடுத்துக் கொண்ட ஹமாஸ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தனது நேரடிப் போராட்டத்தையும் தொடங்கியது.

ஹமாஸ் இயக்க தலைவர் ஷேக் அகமது யாஸின்

இயக்கத்தின் இராணுவ கட்டமைப்பு படிப்படியாக வளர்ந்தது. யஹ்யா சின்வரால் தொடங்கப்பட்ட முனாஸமாத் அல் ஜிஹாத் வல் தாவா என்ற உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு இதில் ஒன்றாகும். காஸாவின் அகதிகள் முகாம்களில் இருந்து கொண்டே இஸ்ரேலுக்கு உளவு பார்க்கும் கைக்கூலிகளை களை எடுப்பது இப்பிரிவின் முக்கியப் பணியாகும். இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக ஏறத்தாழ இரண்டு தசாப்தங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் சின்வர். உளவாளிகளின் வலைப்பின்னல்கள் தகர்க்கப்பட்டது, ஒரு நிலத்தடி இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேவையான ரகசியத்தன்மையை ஹமாஸிற்கு வழங்கியது.

1991இல் இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் இராணுவப் பிரிவை ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக நிறுவியது. 1935இல் வடக்கு ஃபலஸ்தீனில் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட சிரியாவின் இஸ்லாமிய அறிஞரின் பெயரே இப்படைப்பிரிவிற்கு சூட்டப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப கால கமாண்டராக ‘இன்ஜினியர்’ என்று அழைக்கப்பட்ட யஹ்யா அய்யாஷ் இருந்தார். முகம்மது தெய்ஃப், மர்வான் இஸ்ஸா போன்றோர் அவரின் பணிகளைத் தொடர்ந்தனர். இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள், இராணுவத்தினரை பிணைக் கைதிகளாக பிடிப்பது என பல தொடர் நடவடிக்கைகளில் இப்பிரிவு ஈடுபட்டது.

2000 முதல் 2005 வரை நிகழ்ந்த இரண்டாவது இன்திஃபாதா அடுத்த மாற்றத்தைக் கொண்டு வந்தது. மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும் புல்டோசர்களையும் இஸ்ரேல் பயன்படுத்திய நிலையில், மறுபுறம், வெளியுலகில் இருந்து ஆயுதங்களை பெற முடியாத நியையில் உள்ளூரிலேயே ஆயுதத் தயாரிப்பை தொடங்கியது கஸ்ஸாம் பிரிவு. காஸாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டான கஸ்ஸாம் 1 துல்லியமாக இல்லையென்றாலும் எல்லையைக் கடந்து தாக்குதல்களை மேற்கொண்டது.

2005இல் காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியதைத் தொடர்ந்து ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. மறுவருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காஸா மீதான முழுமையான தடைகளை இஸ்ரேல் விதித்தது. இச்சூழலில் ஒரு ரகசிய கெரில்லா இயக்கமாக இருந்த அல் கஸ்ஸாம் பிரிவு, கட்டமைக்கப்பட்ட பிராந்தியப் பாதுகாப்புப் படையாக உருப்பெற்றது. நிலத்தடி போர்முறை அதன் உத்தியின் மையமாக இருந்தது.

2006இல் இஸ்ரேலிய இராணுவத்தின் கிலாத் ஷாலித் சிறைபிடிக்கப்பட்ட நிகழ்வு, எல்லை தாண்டிய சுரங்கப் பாதைகளின் முக்கியத்துவத்தை உணர்த்திய முதல் நிகழ்வாகும். 2014இல் காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது, அல் ஷூஜய்யா பகுதியில் சுரங்கப் பாதைகளையும் நகர்ப்புற நிலப்பரப்பையும் பயன்படுத்தி இஸ்ரேலின் கோலனி படைப்பிரிவு மீது கடும் தாக்குதல்களை கஸ்ஸாம் போராளிகள் நிகழ்த்தியதில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கடும் இழப்புகளை சந்தித்தது. இஸ்ரேலின் கவச வாகனங்களை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட யாஸின் ஆர்பிஜி போன்ற ஆயுதங்களுடன் கஸ்ஸாம் படையினர் எதிர்கொண்டனர்.

காஸாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவினர் (2014)

இந்த நீண்ட பயணம் அக்டோபர் 7, 2023 அன்று அல் அக்ஸா வெள்ளப் பிரளயத்துடன் (தூ ஃபான் அல் அக்ஸா) உச்சத்தை எட்டியது. சுரங்கப் பாதைகளுடன் தரை, கடல், மற்றும் வான்வழித் தாக்குதல்களின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை இஸ்ரேலின் தெற்கு இராணுவப் பிரிவை நிலைகுலையச் செய்தது. பல ஆண்டுகால ரகசிய செயல்திட்டம், தந்திரோபாய நடவடிக்கைகள், முற்றுகையின் கீழ் உருவாக்கப்பட்ட உள்ளூர் ஆயுத உற்பத்தி ஆகியவற்றின் விளைவே அக்டோபர் 7, 2023.

இஸ்ரேலின் உருவாக்கமா ஹமாஸ்?

ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல்தான் உருவாக்கியது என்ற கருத்தை சிலர் தொடர்ந்து முன்வைக்கின்றனர். எதிர் விளைவுகளை விளக்குவதற்காக இஸ்ரேலின் விமர்சகர்கள் இதனை சில சமயம் கூறுகின்றனர். அதே சமயம், ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேலிய உளவுத்துறையின் உருவாக்கமாக ‘சதி கோட்பாட்டாளர்கள்’ சித்தரிக்கின்றனர். மிக சிக்கலான ஒரு வரலாற்றை இந்த இரண்டு கூற்றுகளும் எளிமைப்படுத்துகின்றன. ஒரு ஃபலஸ்தீன இயக்கத்தின் இயல்பான வரலாற்றை குழப்பும் காலனித்துவ ஆட்சியின் தந்திரோபாயக் கொள்கையாகவே இக்கூற்று இருக்கிறது.

1970களின் இறுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் ஷேக் அகமது யாஸினின் அல் முஜம்மா அல் இஸ்லாமியின் பணிகளை காஸாவின் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது ஃபலஸ்தீன விடுதலை இயக்கமே இஸ்ரேலுக்கு பெரிய எதிரியாக இருந்தது. மதச்சார்பற்ற தேசியவாத பி.எல்.ஓ. அமைப்பிற்கு எதிர் சக்தியாக ஒரு மதவாத வன்முறையற்ற அமைப்பு செயல்படும் என்ற நம்பிக்கையில் சில சமயங்களில் அதன் செயல்பாடுகளை அவர்கள் ஊக்குவிக்கவும் செய்தனர். ஆனால், அல் முஜம்மாவின் ஆரம்ப கால சமூக நிறுவனங்களின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்வதும் ஹமாஸை உருவாக்குவதும் சமம் அல்ல.

முஸ்லிம் சகோதரத்துவ சிந்தனையை ஃபலஸ்தீனில் இஸ்ரேல் அறிமுகம் செய்யவில்லை. 1940களில் இருந்தே அச்சிந்தனை அங்கு இருந்தது. ஷேக் யாஸினின் மத நம்பிக்கைகளை இஸ்ரேல் உருவாக்கவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் சாசனத்தையும் இஸ்ரேல் எழுதவில்லை. ஜபலிய்யா, ஷாத்தி முகாம்களில் இருந்த இளைஞர்களை அல் கஸ்ஸாம் பிரிவில் சேர்வதற்கும் இஸ்ரேல் கட்டாயப்படுத்தவில்லை. அகதி வாழ்க்கை, மத சிந்தனை மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றில் இருந்தே ஹமாஸ் உருவானது.

டிசம்பர் 1987இல் ஆயுதப் போராட்டத்திற்கு ஹமாஸ் மாறிய உடனேயே இஸ்ரேல் அதனை தடை செய்தது. ஷேக் யாஸின், ரன்திஸி, ஸலாஹ் ஷிஹதா, அகமது அல் ஜாப்ரி உள்ளிட்ட பல தலைவர்களை அது கொலை செய்தது. ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை சிறைகளில் அடைத்தது. ஹமாஸின் ஆட்சியையும் இராணுவத் திறனையும் சிதைக்கும் நோக்கில் ஒட்டுமொத்த காஸாவையும் நீண்ட காலம் முற்றுகைக்கு உட்படுத்தியது.

ஹமாஸை இஸ்ரேலின் உருவாக்கம் என்று கூறுவது கீழைத்தேய வாதமாகும். இக்கூற்று, தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் திட்டமிடவும், தங்களுக்கென நிறுவனங்களை கட்டியெழுப்பவும் ஃபலஸ்தீன மக்களுக்கு திறன் இருக்கிறது என்பதை மறுக்கிறது.

இடிபாடுகளுக்கு இடையே..

1948இன் இன சுத்திகரிப்பு, நெருக்கடியான அகதி முகாம்களில் நிர்ப்பந்தமாக திணித்தல், நீண்ட கால ஆக்கிரமிப்பு, தொடர் முற்றுகை, தற்போதைய இனப்படுகொலைக்கு வழிவகுத்த அழித்தொழிப்பு முயற்சிகள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட நீண்ட, தீர்க்கப்படாத வரலாற்றிலிருந்து காஸாவின் ஆயுதப் போராட்டம் உருவானது.

மாமன்னர் அலெக்சாண்டருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மண் அரண்கள் முதல் போர் நிறுத்த எல்லைகளை இரவில் கடந்த ஃபிதாயீன்கள் வரை, ஷாத்தியில் உள்ள பிஎப்எல்பி-யின் செஞ்சதுக்கம் வரை, இறுதியாக முகாம்களுக்கு கீழுள்ள அல் கஸ்ஸாமின் சுரங்கப்பாதை வலைப்பின்னல் வரை, சக்தி வாய்ந்த ஒரு இராணுவத்திற்கு எதிராக, திறந்த சமவெளியில் எவ்வாறு வாழ்ந்து, போராடுவது என்ற ஒரே சிக்கலை காஸாவின் பாதுகாவலர்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.

முழு காஸாவும் தரைமட்டமாக்கப்பட்டு, மருத்துவமனைகள் முற்றுகையிட்டு அழிக்கப்பட்டு, கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்பட்ட நிலையில், காஸாவின் பேரழிவைக் காண்பவர்கள், ‘இந்த மக்கள் தொடர்ந்து எப்படி வாழ்கிறார்கள்?’ என்று வியக்கின்றனர்.

அந்த மக்களின் நிலைகுலையாமையும் உறுதியுமே அவர்களை தொடர்ந்து வாழ வைக்கிறது. அடக்கமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் இழப்புகளும் உள்ள போதும், தங்கள் நிலத்தோடு இறுக்கமாக பின்னிப் பிணைந்து இருக்கும் அந்த மக்களின் உறுதியும் அழிந்து போக மறுக்கும் ஒரு கூட்டு மனப்பான்மையும் அவர்களை வாழவைக்கிறது. ‘சுமுத்’ எனப்படும் இந்த மன உறுதியை அவர்கள் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நக்பாவின் 77வது நிறைவை குறிக்கும் வகையில் ஜெர்மனியில் மே 2025இல் நடைபெற்ற பேரணி

கட்டாய இடப்பெயர்வு, நாடற்ற நிலை, ஆக்கிரமிப்பு, தாயகம் திரும்பும் உரிமை மறுப்பு ஆகியவை தொடரும் வரை, குண்டுவீச்சுகளோ அல்லது தொழில்நுட்ப மேலாதிக்கமோ எதிர்த்துப் போராடும் உந்துதலை அணைத்துவிட முடியாது என்பதை காஸாவின் வரலாறு உணர்த்துகிறது. காஸாவின் மக்களை வெறும் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது மற்றவர்களின் திட்டங்களின் பகடைக் காய்களாகவோ பார்ப்பவர்களுக்கு அவர்களின் உயிர்வாழும், சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும், எதிர்த்துப் போராடும் ஆழமான வேர்களை புரிந்து கொள்ள முடியாது. 

Source: https://thinkingpalestine.com/outsmarting-the-sky-the-secret-history-of-gazas-subterranean-resistance/

தமிழில்: B. ரியாஸ் அகமது

Related posts

Leave a Comment