கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மகாஸிதிய சிந்தனைக்கான இரு மாதிரிகள்: அஹ்மத் ரைஸூனி, ஜாஸிர் அவ்தா ஆகியோரின் சிந்தனைகள் மீதான வாசிப்பு

Loading

அறிமுகம்:

இன்றைய காலத்தில் சிந்தனைகள், கோட்பாடுகளை உருவாக்கும் முயற்சிகள், ஆய்வுகள் மற்றும் அறிவார்ந்த உரையாடல்கள் ஆகியவற்றில் ‘மகாஸிதை’ ஒரு சிந்தனைச் சட்டகமாகக் கொண்டு பல்வேறு கோணங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் மகாஸித் துறையில் சமகால முன்னோடிகளான அஹ்மத் ரைஸூனி மற்றும் ஜாஸிர் அவ்தா ஆகிய இருபெரும் அறிவாளுமைகளின் ‘மகாஸிதிய சிந்தனை’ குறித்த ஆக்கங்கள் மீதான விவரண, ஒப்பீட்டாய்வாக இவ்வாக்கம் திகழ்கிறது.

அறிமுகக் குறிப்புகள்:

ஒப்பீடுகளுக்கும், தனித்துவங்கள் குறித்த உரையாடல்களுக்கும் முன்னதாக இரு அறிவாளுமைகளின் ஆக்கங்கள் குறித்த ஓர் அறிமுகக் குறிப்புரையை வழங்குகிறோம்.

அஹ்மத் ரைஸூனியின் ‘ஃபிக்ருல் மகாஸிதி – கவாஇதுஹு வ ஃபவாஇதுஹு’

முதலாவதாக, அஹ்மத் ரைஸூனியின் ‘ஃபிக்ருல் மகாஸிதி – கவாஇதுஹு வ ஃபவாஇதுஹு’ (மகாஸிதிய சிந்தனை – அடிப்படைகளும் பயன்களும்) எனும் நூல் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள ‘தாருல் கலிமா லிந்நஷ்ரி வத்தவ்ஸீஃ’ எனும் பதிப்பகத்தால் 1999களில் முதலில் பதிப்பிக்கப்பட்டது. மூன்றாம் பதிப்பு 2014இல் பதிப்பிக்கப்பட்டது.

இந்நூல், நூலின் உள்ளடக்கம், அதன் விளக்க ஒழுங்கு மற்றும் குறித்த பேசுபொருளின் அவசியம் என்பவற்றைத் தெளிவுபடுத்தும் வகையிலான ஒரு முன்னுரையையும் பேசப்படும் கருத்தை நுட்பமாகவும், நுணுக்கமாகவும் எளிய அமைப்பில் விளக்கும், தர்க்க ஒழுங்கில் அமைந்த மூன்று அத்தியாயங்களையும் கொண்டமைந்துள்ளது.

முன்னுரையில் அறபு, இஸ்லாமிய புலமைத்துவ வட்டாரங்களில் ஒன்றை ஒன்று ஏற்று உள்வாங்கிக் கொள்ளும் பாணியிலும், ஒன்றை ஒன்று மறுத்து எதிரிடையாக நகரும் பாணியிலும் நடந்தேறும் கருத்தாடல்களின் பன்முகத்தன்மைக்குக் காரணமாக இரு வகை அறிவு மூலங்களை அடையாளப்படுத்திக் காட்டுகிறார் அஹ்மத் ரைஸூனி (ரைஸூனி,2014). அவையாவன:

  1. இஸ்லாமிய உலக அறிவு மூலம்
  2. மேற்குலக அறிவு மூலம்

மேற்சொன்ன இருவகை அறிவு மூலங்களிலும் மரபுவழி சிந்தனைகள் (அஸாலா) காணப்படுவது போன்றே நவீன சிந்தனைகளும் (முஆஸரா) காணப்படுகின்றன. இவற்றுள் மேற்குலக அறிவு மூலத்தைப் பொருத்தவரை அதன் மரபுவழி சிந்தனைகள் அவற்றின் பலவீனத் தன்மையாலும் அவற்றின் அறிவுப்பூர்வத்தன்மையிலுள்ள போதாமையினாலும் வெகுவாக வழக்கொழிந்து நவீன சிந்தனைகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் மிகைத்ததோர் அறிவு மூலமாகக் காணப்படுவதாகவும், இஸ்லாமிய உலக அறிவு மூலமானது நம்பகத்தன்மையிலும், அறிவுப்பூர்வத்தன்மையிலும், தலைமுறை தலைமுறையாக வேறூன்றிய மரபுவழி சிந்தனைகளைக் கொண்டுள்ளதாகவும் ரைஸூனி குறிப்பிடுகிறார் (ரைஸூனி,2014).

அதே நேரம் சமகால உலக விவகாரங்களை அணுகுவதில் அம்மரபுவழி சிந்தனைகளின் போதாமையின் விளைவாகத் தோற்றம் பெற்ற நவீன சிந்தனைப் போக்குகளையும் இஸ்லாமிய உலக அறிவு மூலம் கொண்டமைந்துள்ளது என்பதும் அவரது கருத்தாகும்.

இங்கு மேற்குலக அறிவு மூலத்தில் இருப்பது போலவே ‘மரபு வழி சிந்தனைகள் நிகர் நவீன சிந்தனைகள்’ என்ற போக்கு இஸ்லாமிய உலக அறிவு மூலத்திலும் தாக்கம் செலுத்தியதன் விளைவாகப் பின்வரும் இருசாரார் அதன் செயற்பாட்டுப் பரப்பில் உருவானதாக ரைஸூனி குறிப்பிடுகிறார்.

  1. மரபுவழிவாத செயற்பாட்டாளர்கள் (முஹாஃபிழீன்)
  2. நவீன சீர்திருத்தச் செயற்பாட்டாளர்கள் (இஸ்லாஹிய்யீன்)

“மரபுவழிச் சிந்தனை ஆழமான புலமைத்துவ வரலாற்றையும் உறுதியான அடிப்படைகளையும் கொண்டது. ஆகவே அதனை விட்டுக்கொடுக்க முடியாது” என்பது ‘முஹாஃபிழீன்’ என ரைஸூனி அடையாளப்படுத்தும் மரபுவழி சிந்தனையாளர்களின் அடிப்படையான வாதமாகும். மறுபக்கம் ‘இஸ்லாஹிய்யீன்’ எனப்படும் நவீன சீர்திருத்த சிந்தனையாளர்கள் “சமகால உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாம் நகர வேண்டுமாயின் மரபுவழி சிந்தனைகளின் போதாமைகள் சுட்டிக்காட்டப்பட்டு அவை மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும்” என்று கருதுகின்றனர். இவ்விருசாராரின் கருத்துகள், நிலைப்பாடுகளில் நியாயமும், ஏற்புத் தன்மையும் இல்லாமலும் இல்லை. இருவரது தரப்பிலும் கணிசமான அளவு சரிகளும், தவறுகளும் இருக்கவே செய்கின்றன.

ஆகவே இவ்விரு சிந்தனைப் போக்குகளின் இயக்கம் ஒன்றை ஒன்று எதிர்ப்பதாகவோ, மறுதலிப்பதாகவோ, கருத்தாதிக்கத்தில் மிகைப்பதாகவோ இருப்பது நமது இஸ்லாமிய சிந்தனையின் உயிர்ப்புக்கும், இயக்கத்திற்கும் பாதகாமானவையாகும். ஆகவேதான் இஸ்லாத்தின் அடிப்படை அறிவு மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவை அளவுகோளாகக் கொண்டு ‘மரபைப் பேணல்’ அல்லது ‘புதிதாக உருவாக்கல்’ என்ற நேரிடையான தத்தமது தனித்த இயங்குதளத்திலிருந்து வெளிவந்து ‘மரபைப் பேணிய வகையில் புதிதாக உருவாக்கல்’ என்ற பொதுத்தளக் கூட்டிணைவை நோக்கி நகர வேண்டும் என்கிறார் ரைஸூனி.

மேலும் இத்தகைய பொதுத்தளக் கூட்டிணைவிற்கான உரையாடலை சாத்தியப்படுத்தும் அறிவுப்புலமாக அவர் ‘மகாஸிதை’ பரிந்துரை செய்கிறார். இப்படியாக, ‘ஏன் மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் மகாஸிதிய சிந்தனைகள் குறித்த உரையாடல்கள் அவசியம்?’ என்பதைச் சுருங்கக் கூறும் அருமையான ஒரு முன்னுரையை ஆக்கியுள்ளார் ரைஸூனி.

முன்னுரையைத் தொடர்ந்து ‘அல்மகாஸித் வல் ஃபிக்ருல் மகாஸிதி’ (மகாஸிதும் மகாஸிதிய சிந்தனையும்) என்ற முதலாவது அத்தியாயம் அமைகிறது. இம்முதல் அத்தியாயம் கிட்டத்தட்ட தொண்ணூறு வீதம் ‘மகாஸிதுஷ் ஷரீஆ’ எனும் கலை குறித்த இலகுபடுத்தப்பட்ட அறிமுகக் குறிப்புகளைக் கொண்டதாக உள்ளது. ரைஸூனி தனது ஒவ்வொரு ஆக்கத்திலும் முடியுமான அளவு எளிமையாகவும், அடிப்படையிலிருந்து மேல்மட்ட உரையாடல்கள் வரை கட்டம் கட்டமான அமைப்பிலும் ‘மகாஸிதுஷ் ஷரீஆ’ குறித்த கருத்துத் தெளிவை வழங்கும் விதமான ஒரு பகுதியை அத்தியாயமாகவோ கிளைத் தலைப்பாகவோ ஆக்கியிருப்பார்.

‘அஃமால் காமிலா’ எனும் ரைஸூனியின் ஆக்கங்களின் தொகுப்பை வாசிக்கும் போது இதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து மகாஸிதிய சிந்தனை குறித்துத் தெளிவூட்டும் அவர், மகாஸிதிய சிந்தனையை ஐந்து வகையான பரப்புகளுக்குள்ளால் நின்று வரைவிலக்கணப்படுத்துகிறார்.

  1. மகாஸிதிய சிந்தனை என்பது ‘மகாஸிதுஷ் ஷரீஆ’ எனும் கலை குறித்த அடிப்படைக் கருத்துத் தெளிவைப் பெறுவதற்கான சிந்தனாரீதியான முயற்சியாகும்.
  2. மகாஸிதிய சிந்தனை என்பது “ஷரீஆவின் அடிப்படை மற்றும் கிளை சட்டவாக்கப் பரப்புகள் யாவுமே அவற்றின் செயல்பாட்டின் மூலம் குறித்த சில அடைவுகளை நோக்கமாக, இலக்காகக் கொண்டமைந்தவையாகும்” என்ற கண்ணோட்டம் வழியே ஷரீஆவை புரிந்துகொள்ளத் துணைசெய்யும் சிந்தனை முறையாகும்.
  3. மகாஸிதிய சிந்தனை என்பது ஷரீஆவின் இலக்குகள் என அறியப்பட்ட விடயங்களினூடாக அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் போதனைகளைப் புரிந்துகொள்வதாகும்.
  4. மகாஸிதிய சிந்தனை என்பது ஷரீஆ துறையில் குறிப்பாகவும் இன்ன பிற துறைகளில் பொதுவாகவும் மகாஸிதைப் பயன்படுத்திக் கணிப்பீடு செய்தல், தீர்மானம் எடுத்தல், விளக்கமளித்தல் ஆகும்.
  5. மகாஸிதிய சிந்தனை என்பது மகாஸிதின் கோட்பாட்டு விதிகளைச் சார்ந்து நின்று, மகாஸிதின் பயன்கள், விளைவுகள் அடையப் பெறுவதை ஊர்ஜிதம் செய்து மகாஸிதை தூரநோக்கோடு இயக்குவிக்கும் அறிவுசார் முயற்சியாகும்.

ஆக மொத்தத்தில் மகாஸிதிய சிந்தனை என்பதை மகாஸிதுஷ் ஷரீஆ என்ற கலையோடு ஒட்டியதோர் அறிவுசார் இயக்கமாக அடையாளப்படுத்துகிறார் ரைஸூனி.
இதனைத் தொடர்ந்து ‘கவாஇதுல் ஃபிக்ரில் மகாஸிதி’ (மகாஸிதிய சிந்தனையின் அடிப்படைகள்) எனும் நூலின் இரண்டாம் அத்தியாயம் இடம்பெறுகிறது. இவ்வத்தியாயத்தின் ஆரம்பத்தில் கோட்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டிய தேவை குறித்து விளக்குவதுடன், மகாஸிதிய சிந்தனை என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளக்கூடாது, மகாஸிதிய சிந்தனை என்று எதனைக் கருதக்கூடாது என்பவற்றையும் தெளிவுபடுத்துகிறார்.

அந்த வகையில் “அல்குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ இருந்து கருத்துப் பெறுவதற்கான நியதிகளையும், மொழியியல் விதிகளையும் பேணாது, வெளிப்படை கருத்துகளையும், பொருள்களையும் முற்றிலுமாக மறுத்து அனைத்திற்கும் வலிந்து மறைமுக விளக்கமளித்து அதனை ‘மகாஸித்’ மூலம் நியாயப்படுத்த முனைவது ஒரு போதும் மகாஸிதிய சிந்தனையாகாது” எனத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார் ரைஸூனி.

ஆகவேதான் மேலோட்டமான புரிதல்களோடு மகாஸிதை அணுகாதிருக்கவும், தனது மனோ இச்சைக் கருத்துகளை மகாஸித் மூலம் நியாயப்படுத்தாமல் இருக்கவும் மகாஸிதிய சிந்தனைக்கெனக் கோட்பாடுகள் காணப்பட வேண்டும் என்கிறார். பின்வரும் முப்பெரும் விதிகள் மூலம் மகாஸிதிய சிந்தனை நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது ஆய்வு முடிவுகளாகும்.

1. அஹ்காமுஷ் ஷரீஆ முஅல்லலதுன் பி மகாஸிதிஹா (ஷரீஆவின் சட்டங்கள் யாவும் அவற்றிற்கான இலக்குகள் மூலம் நியாயப்படுத்தப்பட்டுள்ளவை ஆகும்)

இப்பகுதியில் ‘தஃலீலுல் அஹ்காம்’ (சட்டங்களுக்கான நியாயம் காணல்) குறித்தும் ‘அஹ்காம் அத்தஅப்புதிய்யா’ (உள்ளது உள்ளபடி மறுதலிப்பின்றி அமலாக வேண்டிய சட்டங்கள்) குறித்தும் தெளிவுபடுத்திவிட்டு மூன்று முக்கியமான கருத்துகளை பதிவுசெய்கிறார்.

  1. ஷரீஆவின் சட்டங்கள் அனைத்திற்கும் குறிப்பிட்ட இலக்குகள், நோக்கங்கள் காணப்படுகின்றன என்பது தெட்டத்தெளிவான உண்மையாகும்.
  2. ஒரு சட்டத்திற்கான காரணி, இலக்கு அல்லது நோக்கம் அறியப்படவில்லை அல்லது கண்டறியப்படுவது சிரமமாக உள்ளது என்பதற்காக அதற்குப் பின்னால் எந்த நோக்கமும் கிடையாது என்று கூற முடியாது.
  3. ஒரு சட்டத்திற்குப் பின்னுள்ள காரணி, இலக்கு என்பன ஷரீஆ துறையில் அறிவுபடைத்த ஒருவருக்குப் புலப்படாவிட்டால் அவரைப் போன்ற மற்றொருவருக்குப் புலப்பட வாய்ப்புண்டு. ஆகவே, சட்டங்களுக்கான காரணிகளை, இலக்குகளைக் கண்டறியும் ஆய்வுகள் கால, நேர, சூழல்களால் வரையறுக்கப்பட்டு முடக்கப்படாமல் பரந்துபட்டு தொடரப்பட வேண்டும்.
2. லா தக்ஸீத இல்லா பி தலீல் (ஆதாரமின்றி ஒன்றை இதுதான் ஷரீஆவின் இலக்கு அல்லது சட்டத்திற்கான காரணி என்று கூற முடியாது)

இப்பகுதியில் மகாஸிதை தீர்மானிக்க ஆதாரங்கள், சான்றுகள் அவசியம் என்பதை வலியுறுத்தி, அல்குர்ஆன், ஸுன்னா ஆதாரங்களின் மூலம், இதுதான் ஷரீஆவின் குறித்த சட்டத்திற்குப் பின்னுள்ள காரணி அல்லது இலக்காகும் என்று நிர்ணயிப்பதற்கான ஆய்வின் இரு அடிப்படைகளைத் தெளிவுபடுத்துகின்றார்.

  1. அறபு மொழியை அதன் இலக்கண, பிரயோக வழக்கின் வழி ஆழமாகப் புரிதல்.
  2. ‘மஸாலிகுல் இல்லா’ அல்லது ‘மஸாலிகுத் தஃலீல்’ எனப்படும் ஒரு சட்டத்திற்கான காரணியைக் கண்டறியும் படிமுறைகள் குறித்த அறிவும் தெளிவும்.
3. தர்தீபுல் மஸாலிஹ் வல் மஃபாஸித் (மனித நலன்களையும், தீங்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தரப்படுத்தல்)

இங்கு, நன்மைகள் மற்றும் தீமைகளை அளவிடுவதற்கான இஸ்லாத்தின் அளவுகோல் என்ன என்பதை விளக்குகிறார். மேலும், நன்மைகளையும் தீமைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தல், நன்மைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைத் தரப்படுத்துதல், அவற்றில் மிக முக்கியமான நன்மையை அடைவதற்குச் செயல்படுதல் போன்ற விடயங்களை இஸ்லாமிய மூல ஆதாரங்களிலிருந்து சான்றுகளை எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்துகிறார்.

4. தம்ஈஸ் பைனல் மகாஸித் வல் வஸாஇல் (நோக்கத்தையும் அதனை அடைவதற்கான வழிமுறைகளையும் பிரித்தறிதல்)

ஷரீஆவினது சட்டதிட்டங்களுக்குப் பின்னால் இலக்குகள், நோக்கங்கள் இருப்பது போலவே அவற்றை அடைவதற்கெனச் சில வழிகளையும் இஸ்லாம் காட்டித் தந்திருக்கும். இவ்வழிகள் காலமாற்றத்தின் போதும், பிரயோக மாற்றங்களின் போதும் மாறுபடுவதற்கான இடத்தை ஷரீஆ வழங்கியுள்ளது. ஆகவே அவற்றைக் கருத்தில் கொண்டு மகாஸித் குறித்த ஆய்வில், கலந்துரையாடலில் ஈடுபடுவதன் அவசியத்தை இப்பகுதியில் தெளிவுபடுத்துகிறார்.

இதனோடு ‘கவாஇதுல் ஃபிக்ரகல் மகாஸிதி’ எனும் மகாஸிதிய சிந்தனையின் அடிப்படைகள் குறித்த அத்தியாயத்தை நிறைவுசெய்துவிட்டு அதனைத் தொடர்ந்து நூலின் இறுதி அத்தியாயமான ‘ஃபவாஇதுல் மகாஸித்’ எனும் அத்தியாயத்தில் மகாஸிதை பிரயோகிப்பதால் அறிவுப்புலத்திலும், செயற்களத்திலும் ஈட்டப்படும் அனுகூலங்களையும், அதன் பிரயோக நலவுகளையும் பட்டியலிடுகிறார்.

குறிப்பாக, மகாஸித் மற்றும் மகாஸிதிய சிந்தனையின் பயன்களாக, மார்க்கச் சட்டங்களை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் இஜ்திஹாதை வழிநடத்துதல், ஒரு விடயத்தைப் பல கோணங்களில் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான முழுமையான பார்வையை வழங்குதல், தஃவா பணியைத் (இஸ்லாத்தின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வது) தெளிவான நோக்கத்துடனும் எதிர்காலத்தை மனதில் கொண்டும் சரியான வழியில் நடத்துதல் ஆகியவற்றை அவர் குறிப்பிடுகிறார்.

ஜாஸிர் அவ்தாவின் ‘தஃப்கீர் அல்மகாஸிதி – முராஜஆத் லி தர்தீபில் அக்லில் முஸ்லிம்’

அடுத்ததாக, மகாஸித் சிந்தனைக்கான இரண்டாவது மாதிரியாக நாம் எடுத்துக்கொண்ட ஜாஸிர் அவ்தாவின் ஆக்கம் மீதான அறிமுகக் குறிப்புரையை நோக்குவோம். ‘தஃப்கீர் அல்மகாஸிதி – முராஜஆத் லிதர்தீபில் அக்லில் முஸ்லிம்’ (மகாஸிதிய சிந்தனை – முஸ்லிம் சிந்தனையை ஒழுங்கு செய்வதற்கான மீள்வாசிப்புகள்) எனும் ஜாஸிர் அவ்தாவின் நூல், 2018ஆம் ஆண்டு எகிப்தின் தாருல் மஷ்ரிக் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.

குறித்த வகை ஆக்கத்தின் பின்னணியையும் நூலின் கருவையும் சுருக்கமாக விளக்கும் ஒரு முன்னுரையையும், அதனைத் தொடர்ந்த பத்து அத்தியாயங்களையும் இந்நூல் கொண்டுள்ளது. பத்து அத்தியாயங்களும் முஸ்லிம் சிந்தனையின் நெருக்கடிக்கு வழிவகுக்கும் பத்து வகையான சிந்தனைச் சீர்குலைவுகளையும் அதற்கான தீர்வுகள் அல்லது மாற்றீடுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அத்தியாயமாகத் தனியாக விளக்கும் பாணியில் அமைந்துள்ளதோடு அவற்றின் இறுதியில் அவை எப்படி மகாஸிதை மையப்படுத்தி அமைகின்றன என்பதையும் ஜாஸிர் அவ்தா தர்க்கப்பூர்வமாகத் தெளிவுபடுத்துகிறார் (அவ்தா,2017).

முன்னுரையில் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நிலவும் பிரச்சனைகளுக்கு, முஸ்லிம் சிந்தனை என்பது பலவீனப்பட்டு, உருக்குலைந்து போயுள்ளமையை தலையாயக் காரணமாக அடையாளப்படுத்தும் ஜாஸிர் அவ்தா அதன் விளைவாகச் சமூகத்தில் பரவியுள்ள பத்து வகையான அணுகுமுறைகளையும் நடத்தைக் கோளாறுகளையும் இனங்கண்டு குறிப்பிடுகிறார். (அவ்தா,2017).

மேற்சொன்ன ஆக்கத்தின் பத்து அத்தியாயங்களினூடாக ஆசிரியர் வகைப்படுத்திக் கூறும் முஸ்லிம் சிந்தனை நெருக்கடிகளையும் அதற்கு மகாஸிதிய சிந்தனையினூடான தீர்வுகளாக முன்மொழிபவற்றையும் சுருக்கமாக இங்கே குறிப்பிடுகின்றோம்:

1. ஒருங்கிணைவும், சீரான இயக்கமுமற்ற சிந்தனைப் போக்கு. பொதுவாகச் சிந்தனை நெருக்கடி என்பது ஒரு விவகாரத்தை அதன் இயல்பில் அணுகத் தவறும் போதும், யதார்த்தங்களை மறந்து அதனைக் கையாள முனையும் போதுமே தோன்றுகிறது. ஒன்றை பற்றிப் படிப்படியாக அறிதல், அதனோடு தொடர்புபட்ட ஏனைய கிளை விவகாரங்கள் அவற்றுடனான இடைத் தொடர்புகள் என்பவற்றைப் புரிதல், அதன் இயல்பை மீறாது அதனை அணுக முற்படல் போன்றனவே ஒரு விவகாரத்தைச் சிந்தனை நெருக்கடிக்கு உட்படாமல் இணக்கத்தோடு அணுகுவதற்கான வழிகளாகும். இதுவே ‘ஸுனன் இலாஹிய்யா’ எனும் இறைநியதிகளையும் பிரபஞ்ச விதிகளையும் மனங்கொண்டு செயலாற்றல் எனப்படுகிறது.

இத்தகைய வழிமுறையே பல ஆரம்பக் கட்ட சிந்தனை நெருக்கடிகளுக்குத் தீர்வாக அமைவதாகக் குறிப்பிடுகிறார். மகாஸித் என்பது இஸ்லாமிய போதனைகளுக்கு இடையேயான தொடர்புகளையும், அவற்றின் இயல்புகளையும் வெளிப்படுத்தி நிற்கும் ஓர் அறிவுப்புலம் என்ற வகையில் மகாஸிதை இங்கு ஓர் மாதிரியாக முன்மொழிகிறார்.

2. வெறும் கருதுகோள்களையும், ஊகங்களையும் நம்பி செயலாற்றுதல். இதற்கான தீர்வு, எந்தவொரு எண்ணக்கருவையும் விமர்சனப்பூர்வமாக அணுகி அதன் நேர் மற்றும் எதிர்மறை பக்கங்கள் குறித்த உரையாடல் மூலம் அவற்றைப் புரிய முனைவதாகும். மகாஸித் என்பது ஆதாரப்பூர்வமான சான்றுகள், ஊர்ஜிதமான முடிவுகள் என்பவற்றின் அடிப்படையிலானது. ஆகவே இயல்பிலேயே அது தொகுத்தாய்வு, சம்பூரணமான அவதானம் என்பவற்றை நம்மிடம் ஊக்குவிப்பதாக இருப்பதால் மகாஸிதை இங்கு ஒரு சிந்தனை மாதிரியாகக் கொண்டு வருகிறார்.

3. ‘கருப்பு இல்லையேல் வெள்ளை’ எனும் இருமை மனநிலை. அதாவது நம்மைச் சுற்றியுள்ள யாவற்றையும் ஹராம் அல்லது ஹராம், நல்லது அல்லது கெட்டது என்று இரண்டில் ஒன்றாக மாத்திரம் தீர்ப்பளித்து அணுகும் முறையும் அவை இரண்டும் இல்லாத பல விடயங்களின் இருப்பை அங்கீகரிக்க முடியாத மனநிலையும். அல்குர்ஆன் பிரபஞ்ச ஒழுங்கில் பல்வகைமை என்பதை ஓர் அத்தாட்சியாகக் குறிப்பிடுகின்றது. அதன் பின்னுள்ள நோக்கம் (மகாஸித்) ‘பரஸ்பர அறிதலும், ஒத்துழைப்பும்’ போன்றனவாகும் என்பதையும் அது பல இடங்களில் விளக்கிச் சொல்கிறது. இவ்வடிப்படையில் இதற்குத் தீர்வாக, பல்வகைமையை அதாவது பல வகையான சிந்தனை கோணங்களையும் அங்கீகரிக்கும் மனப்பாங்கை வளர்த்தலை மகாஸிதிய சிந்தனை அடிப்படையில் தீர்வாகக் காண்கிறார்.

4. கிளை விவகாரங்களில் மாத்திரம் கவனம் செலுத்தும் பகுதிவாரியான, முழுமொத்தப் பார்வையற்ற சிந்தனைமுறை. அதாவது ஒரு கிளை விவகாரத்தை எடுத்துக்கொண்டு அது மட்டும்தான் இஸ்லாம், அது மட்டும்தான் மார்க்கம் என்று எண்ணிக் கொண்டு செயற்படுதல். மகாஸித் என்பது தொகுத்தாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு விவகாரத்தின் அனைத்துக் கோணங்களையும், அம்சங்களையும் உள்வாங்கிக் கொள்ளும் சம்பூரண அணுகுமுறையாகும். அந்த வகையில் எந்த விடயத்தையும் அதன் அடிப்படையிலிருந்து நோக்கும், அவற்றின் பல்பரிமாணங்களைக் கவனத்தில் கொள்ளும், முழுமையான, சம்பூரணமான பார்வையை வளர்ப்பதே இதற்குத் தீர்வாகும்.

5. எப்போதும் ‘என்ன செய்வது?’ ‘எப்படிச் செய்வது?’ என்று வழிமுறைகளோடு சுருங்கும் சிந்தனைப் போக்கு. இதற்குத் தீர்வு ஏன் செய்ய வேண்டும்? இதனைச் செய்வதால் எதிர்பாக்கப்படும் முடிவுகள் யாவை? என இலக்குகள், நோக்கங்களை மையப்படுத்தின சிந்தனையை மேம்படுத்திக் கொள்வதாகும்

6. மரபுவழி சிந்தனைகளை அடியொட்டிப் பழகியதால் ஏற்படும் சிந்தனைத் தேக்கமும், அபிவிருத்தியும், இற்றைப்படுத்தலும் இன்மை. இதற்குத் தீர்வாகச் சிந்தனைகள், கோட்பாடுகளில் மாறும் காரணிகளையும் (முதகய்யிராத்) நிலையான மாறாக் காரணிகளையும் (ஸவாபித்) பிரித்தறியும், அவற்றுக்கிடையே ஒப்பீடு செய்து செயலாற்றும் ஆற்றலை வளர்க்க வேண்டியுள்ளது.

7. தான்தோன்றித் தனமாகச் சிந்திக்கும் செயற்படும் முறை. இதற்குத் தீர்வு முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை (அவ்லவிய்யாத்) நிரலிட்டு அவற்றுள் அத்தியாவசியமானவற்றை மையப்படுத்திச் சிந்தனையையும் செயற்பாடுகளையும் அமைத்தல்.

8. செயற்களத்திலோ, அறிவுப்புலத்திலோ ஒரு கட்டத்தை அடைய அவசரப்பட்டு முந்திக்கொள்ளும் மனநிலை. ஒவ்வொன்றும் உரிய கட்டத்தில் அதற்குரிய கால ஓட்டத்திலே அடையப்பெறும் என்ற பிரபஞ்ச நியதியை மனங்கொண்டு செயலாற்றும் பக்குவத்தைப் பயிற்றுவிப்பதே இதற்கான தீர்வு.

9. மூடுண்ட, பிறரை உள்வாங்காத சிந்தனை முறை. இதற்குத் தீர்வு பரந்துபட்ட, அதே நேரம் விமர்சனப்பூர்வமான உரையாடல் தளத்தை நோக்கி நகருதல் ஆகும்.

10. சடவாதத்தில் மூழ்கிய சிந்தனை முறை. மகாஸித் என்பது வெறுமனே லௌகீக நலன்களை மையப்படுத்தியதல்ல. அதன் தூரநோக்குப் பார்வை மறுமை எனும் மறுவுலக வாழ்வையும் கவனத்திற் கொள்ளும் அளவு விசாலமானது. அந்த வகையில் வணக்கவழிபாடுகளின் இலக்குகளைச் சரிவரப் புரியவைக்கும் விதமான ஆன்மீக ரீதியிலான பயிற்றுவிப்பும் பக்குவப்படுத்தலுமே சடவாத சிந்தனைப் பரவலுக்குத் தீர்வாகும்.

முடிவுரை:

இறுதியாக மேலே நாம் அறிமுகப்படுத்திய இரு ஆக்கங்கள் குறித்த விவரணங்களினூடாக அவற்றை ஒப்பிட்டு அவற்றிலிருந்து மேலதிக உரையாடல்களுக்கு நகர்வதற்கான சில ஆய்வுக் குறிப்புகளை இங்கே வழங்குகின்றோம். இரு ஆளுமைகளும் தங்களுடைய ஆக்கங்களை மகாஸிதை மூலமாகக் கொண்டு ஆக்கியுள்ளனர் என்பது தெளிவு. இருப்பினும் அவர்கள் இருவரும் மகாஸித் குறித்துச் சிந்தித்த மற்றும் மகாஸிதை சிந்தனைக்கான மாதிரியாகக் கண்ட, கையாண்ட விதம் வெவ்வேறானது.

அஹ்மத் ரைஸூனி மேற்குறிப்பிட்ட தனது ஆக்கத்தில் மகாஸித் கலையினுடைய கோட்பாடுகளைச் சார்திருந்து, அதனைப் பிரயோகிப்பதால் கிட்டும் பலன்கள் சரிவர அடையப் பெறுகின்றனவா என்று அவதானித்து தூரநோக்குடன் சிந்தித்தல் என்பதையே மகாஸிதிய சிந்தனையாக வரைவிலக்கணப்படுத்துகிறார். இங்கு மகாஸித் சிந்தனை என்பது ஷரீஆ கலைகளுக்குள்ளால், குறிப்பாகச் சட்டவாக்க செயற்பாடுகளுக்குள்ளால் ஏதோ ஒரு வகையில் வரையறுக்கப்படுவதைக் காண முடிகின்றது. மகாஸிதை பிற துறைகளில், சிந்தனைக் களங்களில் பிரயோகிப்பது, மகாஸித் வழி நின்று அவற்றை நோக்குவது போன்றவற்றைப் பொறுத்தவரையில் பொதுவாகவே அஹ்மத் ரைஸூனி குறிப்பிட்டுச் செல்கிறார்.

ஜாஸிர் அவ்தாவை பொறுத்தவரையில் அவர் மகாஸிதை ஷரீஆ துறை அல்லது அதுவல்லாத பிற சமூகவியல், மானுடவியல் துறைகளுக்குள்ளால் வரையறுக்காது அதன் அறிவுப்புல இயக்கத்தை நன்கு அவதானித்ததன் விளைவாக வெறும் அறிவுப் புலத்தில் மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் வெகுஜன சிந்தனையைச் செப்பனிட்டு நெறிப்படுத்துவதற்கான ஆற்றலும், செறிவும் அக்கலைக்கு இருப்பதாக ஆணித்தரமாக நம்புவதோடு அதனை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்பதற்கான வரைவாகவே மேற்சொன்ன அவரது ஆக்கத்தை ஆக்கியுள்ளார்.

ஆக, மகாஸிதிய சிந்தனை என்பதற்கான இரு வகைகளில் பொருள் கொள்ளத்தக்க இருவகை மாதிரிகளை நாம் இங்கு காண்கிறோம்.

  1. மகாஸித் எனும் கலையின் ஷரீஆ துறைக்குட்பட்ட கோட்பாட்டு மற்றும் பிரயோக இயக்கம் தொடர்பான சிந்தனை. இது மகாஸிதை ஓர் இஸ்லாமிய அறிவுப்புல துறையாக அதன் ஆழ அகலங்களோடு புரிந்துகொள்வதற்கு துணை செய்யும்.
  2. மகாஸிதை முஸ்லிம் வெகுஜன சிந்தனையைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான அளவீடாகவும் அதனை நெறிப்படுத்துவதற்கான கருவியாகவும் காணும் சிந்தனை. இது மகாஸிதை வெறுமனே புலமைத்துவ உரையாடல்களுக்குள்ளால் சிறைப்படுத்தாமல் யதார்த்த உலக ஒழுங்கில் நமது வாழ்வியலை புரிந்துகொண்டு அதனை நெறிப்படுத்திக்கொள்ளத் துணைசெய்யும்.

இவை இரண்டும் உண்மையில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டுப் பிரயோகிக்கப்பட வேண்டிய மாதிரிகள் ஆகும். சமகால இஸ்லாமிய சிந்தனையோட்டத்தில் ஒரு புரட்சிகரமான எண்ணக்கருவான மகாஸிதிற்கு அதன் தோற்றக்காலத்திலிருந்து இந்த இருவகை மாதிரிகளையும் ஒத்த பரப்புகள் வாய்த்திருந்தன. என்றாலும் முறையான அணுகுமுறைகளின் போதாமையால் அவை கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் காலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுப் பிக்ஹ் மற்றும் உஸூல் துறை நூல்களுக்குள்ளால் சிறைப்படுத்தப்பட்டது.

பின்னர், அவை பல அறிஞர்கள், சிந்தனையாளர்களின் மறுசீரமைப்பு முயற்சிகளால் தூசு தட்டி, வெளிக்கொணரப்பட்டு அதற்குரிய அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அதன் அறிவுப்புல இயக்கம், தொழிற்பரப்பு போன்றவை குறித்துப் பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டும், வாசிப்புக்குட்பட்டும் வருகிறது.

கற்பனா வாதங்கள், வரண்ட கோட்பாட்டு உரைகள் போன்றவற்றின் பிடியிலிருந்து தூரமான கோட்பாட்டுத் தெளிவுடனும் நமது சூழலைப் புரிந்து கொண்டு அதன் தேவைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் மகாஸிதை நாம் கையாள்வது இங்கு நமக்கு முன்னுள்ள அறிவுத்துறை பொறுப்பாகும். இதற்கு வெறுமனே பிக்ஹ் மற்றும் உஸுல் துறைகளுக்குள் மாத்திரம் நின்று மகாஸிதை வாசித்தல் அல்லது மகாஸிதை தத்தமது கருத்தியல்சார் நலன்களுக்கேற்ப வளைத்து நெகிழச் செய்து அதன் அடிப்படையை விட்டும் மிகத் தூரமான விதத்தில் கருத்துரைத்தல் போன்ற இருவகைப் போக்குகளையும் தவிர்த்த நிதானமான, பரிபூரணமான ஒரு வாசிப்பு முறை சீரிய மகாஸிதிய சிந்தனைக்கு அவசியமானதாகும்.

‘மேற்சொன்ன இருவகை மாதிரிகளையும் ஆய்வு, மீள்வாசிப்பு மூலம், அத்தகையதொரு வாசிப்பு முறையைச் சாத்தியப்படுத்தலாமா?’ என்பது இவ்வாய்வு உரையாடலுக்காக விட்டுவிடும் கேள்வியாகும்.


உசாத்துணைகள்:

ரைஸூனி, அ. (2014). அல்-ஃபிக்ர் அல்-மகாஸிதி: கவாஇதுஹு வ ஃபவாஇதுஹு. தார் அல்-கலிமா லின்னஷ்ர் வத்தவ்ஸீஃ.

அவ்தா, ஜா. (2017). அல்-தஃப்கீர் அல்-மகாஸிதி: முராஜஆத் லி தர்தீப் அல்-அக்ல் அல்-முஸ்லிம். தார் அல்-மஷ்ரிக்.

Related posts

Leave a Comment