மால்கம் X மூட்டிய புரட்சித் தீ
![]()
Black Power Salute கலகத்தின் கதை
ஆரவாரக் கூச்சலும் உற்சாகக் கூக்குரல்களும் அந்த விடுதியின் உறைபனிக் கால இரவின் அமைதியைக் குலைத்தன. வெள்ளை இன மாணவர்கள், பாட்டில்களைக் குலுக்கி ஒருவர் மீது ஒருவர் மதுவை பீய்ச்சி அடித்து களித்துக் குடித்தனர். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து கைகளைக் குலுக்கிக் கொண்டனர். பெரும் சாதனையை நிகழ்த்திய பெருமிதத்துடன் ஒய்யாரமாக விடுதி வளாகத்தை சுற்றிச் சுற்றி வந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கார்னெல் பல்கலைக் கழக விடுதி அது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியைக் கேட்டுத்தான் வெள்ளை மாணவர்கள் குதூகலித்தனர், அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தனர்.
கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில், வாகை சூடியதற்கான கொண்டாட்டமா? இல்லை. அமெரிக்க ராணுவ வீரர்கள் போரில் எதிரிகளை துவம்சம் செய்த செய்தி கேட்டதால் இந்தக் கொண்டாட்டமா? அதுவுமில்லை. வேறு எதற்கு?
1965-ஆம் ஆண்டு, பிப்ரவரி 21.
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு ஞாயிறாக அன்றைய தினம் பதிவானது.
ஹார்லெம் நகரில், கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்த கறுப்பினப் போராளி மால்கம் X, துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்டுத்தான் அந்த வெள்ளை மாணவர்கள் துள்ளிக் குதித்தனர்.
“அமெரிக்க வெள்ளை இனவெறியின் குரூரத்தை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய கறுப்பின தீவிரவாதி ஒழிந்தான்…”
வெள்ளை இன வெறியர்களின் கொண்டாட்டத்தில் வன்மம் மறைந்திருக்கவில்லை. வெளிப்படையாகவே ஒருவரின் மரணத்தை ரசிக்கும் உச்சக்கட்ட இனவெறி அங்கு அப்போது நிலவியது.
அந்த விடுதியின் ஓர் அறையில், இந்த செய்தி கேட்டு குமைந்து கொண்டிருந்த கறுப்பின இளைஞனுக்கோ, வெள்ளையர்களின் கொண்டாட்ட இரைச்சல் எரிச்சலாக இருந்தது. உதிரம் கொதிக்க, பற்களைக் கடித்துக் கொண்டான். சமூகவியல் மாணவன் அவன்; சிறந்த தடகள வீரன். சிரித்து மகிழும் வெள்ளையர்களின் குரூரம் அவனுடைய உள்ளத்தில் ஓர் உண்மையை அறைந்து சொல்லியது.
மால்கமின் மார்பைத் துளைத்த தோட்டாக்கள் மாபெரும் தலைவனின் மூச்சை நிறுத்தி இருக்கலாம்; ஆனால், ஒடுக்குபவனுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. இனித்தான் அடுத்த அத்தியாயம் தொடங்கப் போகிறது என நினைத்துக் கொண்டான். மால்கமின் கொடூர மரணம், அவனுள் கலக நெருப்பை விதைத்தது; மால்கமின் இன்மை அவனுள் புரட்சித் தீயை பற்ற வைத்தது.
சித்தாந்த முன்னோடியின் பாதையில்…
அந்த கறுப்பின் மாணவனின் பெயர் ஹாரி எட்வர்ட்ஸ். அவனுக்கும் மால்கம் X-க்குமான உறவு, தலைவன் – தொண்டன் உறவல்ல. ஆசிரியர் – மாணவன் உறவல்ல. அதற்கும் மேலே. கார்னெல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகையாளர் ஒருவரின் துணையோடு மால்கமை சந்தித்தார் ஹாரி. ஹாரியின் அரசியல் சிந்தனையில் மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது அந்த ஒரேயொரு சந்திப்பு,
அதுவரை கறுப்பினம் மீது, கறுப்பர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க குடியுரிமை அமைப்புகள் நடத்தி வந்த போராட்டங்கள் மீது அவர் வைத்திருந்த கருத்துகளை அடியோடு மறுவரையறை செய்யத் தூண்டியது அந்தச் சந்திப்பு. அப்போது முதல் மால்கம் X என்பவர் ஹாரியின் சித்தாந்த முன்னோடியானார் (Ideological Pioneer).
அவரிடம் பேசிய அந்தக் கணங்களை ஹாரியின் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மால்கமின் கனல் கக்கும் தீர்க்கமான பார்வை, கறுப்பர்களின் விடுதலைக்கான சமரசமற்ற தீர்க்கதரிசனமான பார்வை. மால்கமின் ஆகிருதியைக் கண்டு உறைந்தார் ஹாரி. அந்தக் கணம் ஹாரி எட்வர்ட்ஸ் என்ற ஆளுமையில் ஆழமாகப் பதிந்தது. சிந்தனையில் மட்டுமல்ல தோற்றத்திலும்கூட அந்தத் தாக்கம் வெளிப்பட்டது. ஆம், மால்கம் போலவே, Browline மாடல் கண்ணாடி அணிந்தார். குறுந்தாடி வைத்து மால்கமைப் போலவே மாறினார்.

குடியுரிமை போராட்டங்களுக்கு அப்பால் சென்று, மால்கமின் சிந்தனையைத் தொட்டு, அமெரிக்க கறுப்பர்களின் அவலங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த ஓர் அதிரடி நடவடிக்கையில் இறங்க ஹாரியைத் தூண்டியது அந்தச் சந்திப்புதான். அதுவும் மால்கமின் மரணச் செய்தி கேட்டு குதூகலித்த வெள்ளையர்களின் திரிந்த மனங்களுக்கு எதிராக – திருந்தாத மனங்களுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உந்தித் தள்ளியது அந்தச் சந்திப்புதான்.
விளையாட்டுக் களமெனும் சிறை
நாட்கள் கடந்தன. மால்கமின் மார்பைத் துளைத்த குண்டுகளின் காயம் ஹாரியின் மூளையில் வடுவாகப் பதிந்திருந்தது. மால்கம் X போதித்த, கறுப்பின தேசியவாத சித்தாந்த பரவலுக்கு தன்னால் இயன்ற எதையேனும் செய்யத் துடித்தார்.
ஹாரிக்கு ஒரு பொறி தட்டியது. அப்போது அவர் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். தடகள வீரர் கென் நோயலுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் மூளையில் வெட்டியது அந்த மின்னல்.
விளையாட்டு.
அமெரிக்கர்களின் இன்னொரு மதம், விளையாட்டு.
விளையாட்டு வருவாயில் கை வைத்தால் என்ன? வெள்ளையர்களின் பொருளாதார வளங்களில் ஒன்றான விளையாட்டுத் துறையில் விளையாடிப் பார்த்தால் என்ன? விளையாட்டை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்ற சிந்தனையை அவருள் விதைத்ததுகூட மால்கம் X-தான்.
விளையாட்டுத் துறை கறுப்பர்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்தது. மால்கம் X அடிக்கடி இப்படிக் கூறுவார்:
ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்து செலுத்தி நமது பற்களைப் பிடுங்குவார். மயக்க மருந்தால் நமக்கு வலி தெரியாது, ஆனால் வாயில் இரத்தம் வழிந்தோடும். என்ன நடந்ததென்றே நமக்கு தெரியாது. வலி தெரியாமல் துன்புறுத்துவது இப்படித்தான்.
அவருடைய பிரபலமான இந்த கூற்றைப் போல விளையாட்டுத் துறையின் மயக்கத்தில் கறுப்பர்கள் வீழ்ந்து கிடப்பதாக உணர்ந்தார் ஹாரி.
விளையாட்டுப் போட்டிகளில் ஒளிர்ந்த கறுப்பின இளைஞர்களின் ஆட்டத் திறனை, மெச்சாத வெள்ளையர்களே கிடையாது. வெற்றி வாகை சூடும் கறுப்பின இளைஞர்களே அமெரிக்க இன ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாக, வெள்ளையர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். ஆனால் எதார்த்தம் வேறு மாதிரியாக இருந்தது. வெள்ளையர்களின் தம்பட்டத்திற்கு பின்னால் ஆதாய வெறி என்ற சுயநலம் மட்டுமே ஒளிந்திருந்தது. இதனை ஒரு சில கறுப்பினப் போராளிகளே கண்டுணர்ந்தனர். அவர்களில் மிக முக்கியமானவர் ஹாரி எட்வர்ட்ஸ்.
சட்டப்பூர்வமாக அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பின்பு, படிப்படியாக விளையாட்டு துறையில் நுழைந்த கறுப்பர்கள் அபரிமிதமான திறமைகளை வெளிப்படுத்தினர். பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் கறுப்பர்கள் தனித்து மிளிர்ந்தனர். இதனால், போட்டி போட்டுக் கொண்டு கறுப்பின வீரர்களை கல்லூரிகள் சேர்த்துக் கொண்டன. அதேசமயம், விவசாயம், உடற்கல்வி போன்ற பாடப் பிரிவுகளில்தான் (Mickey Mouse Course) அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டன. விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதால், படிப்பதற்கு இலகுவான பாடப் பிரிவுகளை தேர்வு செய்யவே கறுப்பின மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இருப்பினும், விளையாட்டில் அளவுக்கதிகமாக அக்கறை காட்டியதால், படிப்பை நிறைவு செய்யாமலே – பட்டம் பெறாமலேயே கறுப்பின விளையாட்டு வீரர்கள் கல்லூரியை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக இருந்தது.
அதாவது, கறுப்பின வீரர்களின் திறமைகளைப் பயன்படுத்தி விளையாட்டு உத்வேகத்தை விளம்பரப்படுத்தி வெள்ளை இன முதலாளிகள் பெருமளவில் வருவாய் ஈட்டினர். அவர்களைப் பொறுத்தவரை, கறுப்பின விளையாட்டு வீரர்கள் விற்பனைப் ‘பொருட்கள்’ (Athletic Commodity). மறுபக்கம், வகுப்பில், விடுதியில், விளையாட்டுக் களத்தில் கறுப்பின வீரர்களிடம் தீவிரமாக இனப்பாகுபாடு காட்டப்பட்டது. இலவச கல்விக்காக இவ்வளவு இழிவுகளையும் கறுப்பின வீரர்கள் சகித்துக் கொண்டனர்.
அந்தச் சகிப்புத் தன்மைக்குப் பின்னால் இருந்தது, “அமெரிக்க இன ஒற்றுமைக்கு பாலமாக விளங்குவது கறுப்பின விளையாட்டு வீரர்களே” என்ற வெற்று விளம்பரம்தான். இந்த வெற்று விளம்பரத்துக்காக கறுப்பின விளையாட்டு வீரர்கள் கொடுத்த விலை அதிகம். சிறப்பாக விளையாடாவிட்டால் ஒட்டுமொத்த கறுப்பினத்துக்கும் அவமானம் என்ற உள நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாகினர். இதையெல்லாம் சகித்துக் கொண்டு, மிகச் சிறப்பாக விளையாடி, தொடர் வெற்றிகளைத் தேடித் தந்த கறுப்பின வீரர்களுக்கு அணியில் முக்கிய இடம் வழங்கப்படுவது கிடையாது. கேப்டன் பொறுப்பு கறுப்பர்களுக்கு வழங்கப்படுவது கிடையாது. கால்பந்து விளையாட்டில், தடுப்பாட்ட உத்தி உள்ளிட்ட அணியின் ஆட்டத் திட்டங்களை வகுக்கும் முக்கிய பொறுப்புகளிலும் (Quarterback) கறுப்பின வீரர்கள் நியமிக்கப்படுவதில்லை.
அணியில் இருக்கும் வரை கறுப்பின வீரர்களின் திறமையை உறிஞ்சி எடுத்துவிட்டு, ஓய்வை அறிவித்த பின் அந்தக் கறுப்பின வீரர்களை குப்பையைப் போல தூக்கி எறிந்தனர். ஓய்வை அறிவிப்பதற்கு முன்பு வரை கறுப்பின வீரர்களை புகழ்ந்து கொண்டாடும் அணி நிர்வாகம், திறமை குன்றும் போது அவர்களை ஒதுக்கி விட்டு, அடுத்த இளம் தலைமுறை கறுப்பின வீரர்களை ஒப்பந்தம் செய்வது வழக்கம். அணியின் ஆலோசகர் பொறுப்போ, பயிற்சியாளர் பணியோ கறுப்பின வீரர்களுக்கு ஒரு போதும் வழங்கப்படுவது கிடையாது. அவர்கள், மீண்டும் சேரிக்குள் முடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. கறுப்பின இளைஞர்களுக்கு, விளையாட்டுத் துறை என்பது தங்க முலாம் பூசப்பட்ட சிறைச்சாலைக் கம்பிகளாகும்.
விளையாட்டுக் களமெனும் மோசடி
கல்லூரி அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி என்பது அணிகளை நிர்வகிக்கும் வெள்ளையர்களுக்கு டாலர்களை கொட்டித் தரும் லாபம் கொழிக்கும் பிசினஸ். அதில் கைவைத்தால் என்ன? இந்தப் பாதையில் சிந்தித்த ஹாரி எட்வர்ட்ஸ், கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டிகளில் கறுப்பின வீரர்கள் களமிறங்க மாட்டார்கள் என அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, அமெரிக்க உள்ளூர் கால்பந்து விளையாட்டுக் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திறமையான கறுப்பின வீரர்கள் இல்லாத அணியால் வெற்றிபெற முடியாது. தாங்கள் நேசிக்கும் அணி வெற்றி பெறாவிட்டால், மைதானத்தில் ரசிகர்களால் வன்முறை வெடிக்கும் எனப் பயந்த கல்லூரி நிர்வாகம், முதன்முறையாக போட்டியை ரத்து செய்தது.
இந்தச் செய்தி, வெள்ளை ஆதிக்கவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை. கறுப்பின வீரர்களுக்கு நம்பிக்கை தரும் பிரகடனம்.
இதனிடையே, ஜப்பானில் நடைபெற்ற தடகளப் போட்டியொன்றில் பங்கேற்ற கறுப்பின ஓட்டப் பந்தய வீரர் டாமி ஸ்மித்திடம் பத்திரிகையாளர் ஒரு கேள்வியை முன்வைத்தார்:
“1968-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை அமெரிக்க கறுப்பின வீரர்கள் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் அடிபடுகிறதே…?”
“ஆமாம்… அப்படியொரு சிந்தனை கறுப்பின வீரர்களிடையே ஓடிக் கொண்டுதானிருக்கிறது…” என டாமி ஸ்மித் எதார்த்தமாக சொல்லி வைத்தார். நீண்ட நாட்களாகவே இப்படியொரு சிந்தனை கறுப்பின வீரர்கள் மத்தியில் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் போட்டியை புறக்கணிக்க யாரும் திட்டமிடவில்லை; அதனை முன்னெடுக்க யாரும் துணியவில்லை.
ஜப்பான் செய்தியை அமெரிக்க ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிடவும், வெள்ளை இனவெறியர்கள் டாமி ஸ்மித்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவருக்கு தார்மீக ஆதரவு அளிக்கவும், பற்றிக் கொண்ட நெருப்பை மேலும் வளர்த்து புரட்சித் தீயை பரவச் செய்யவும் களமிறங்கினார் ஹாரி.
டாமி ஸ்மித் உள்ளிட்ட முன்னணி கறுப்பின வீரர்களை ஒருங்கிணைத்து, ‘மனித உரிமைகளுக்கான ஒலிம்பிக் திட்டம் (Olympic Project for Human Rights – OPHR)’ என்ற அமைப்பை உருவாக்கினார். மால்கமை நினைவுகூர்வதற்காகவே இந்தப் பெயரை தேர்வு செய்தார் ஹாரி. குடியுரிமை (Civil Rights) என்ற வரையறைக்குள் நின்று, கறுப்பர்களுக்கான உரிமைகளை அமெரிக்க அரசிடம் கெஞ்சிப் பெறுவதற்குப் பதிலாக, கறுப்பர்களின் விடுதலையை மனித உரிமை பிரச்சனையாக பார்க்க வேண்டுமென்ற சிந்தனையை கறுப்பர்கள் மத்தியில் விதைத்தவர் மால்கம் X. அந்த வழிகாட்டுதலையொட்டி புதிதாக உருவாக்கிய அமைப்புக்குப் பெயர் வைத்தார் ஹாரி.
அமெரிக்காவில் கறுப்பர்கள் அனைத்து வழிகளிலும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருவது போலவே விளையாட்டுத் துறையிலும் அவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றி மால்கம் X கூர்மையான விமர்சனங்களை முன் வைத்தார். “கறுப்பின விளையாட்டு வீரன் சாதிப்பதன் மூலம், தங்களுக்கு பணம் ஈட்டிக் கொடுப்பான் என்றால் மட்டுமே அவனைச் சாதிக்க அனுமதிக்கிறான் வெள்ளையன்” என்றார் மால்கம்.
பணத்துக்காக உயிரைப் பணயம் வைத்து குத்துச் சண்டைப் போட்டியில் இறங்குவது பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மால்கம் X, அதனை “மோசடி” என வர்ணித்தார். “வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டு என்பது சோம்பேறிப் பணக்காரர்களின் மகிழ்ச்சிக்கானது…” எனச் சாடினார். ஏழை கறுப்பனை அடித்து வீழ்த்தும் இன்னொரு ஏழை கறுப்பனை பணக்கார வெள்ளையன் சுரண்டுகிறான் என அமெரிக்க விளையாட்டுத் துறையின் கோரமான முகத்தை அம்பலப்படுத்தினார்.
என்னுடைய அடிமையை விடச் சிறந்தவனா உன்னுடைய அடிமை? என குத்துச்சண்டை வளையத்திற்கு வெளியே வெள்ளையர்கள் பந்தயம் கட்டும் போட்டிதான் குத்துச்சண்டை விளையாட்டு. “நாங்கள் வளையத்திற்குள்ளே இரண்டு அடிமைகளைப் போலத்தான் இருந்திருக்கிறோம்…” என்றார் பிரபல குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி.
விளையாட்டுக் களமெனும் அரசியல் கருத்தியல்
துரிதமாக செயலில் இறங்கினார் ஹாரி எட்வர்ட்ஸ். கறுப்பின இளைஞர்களின் மாநாட்டை கூட்டிய அவர், விளையாட்டு உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் தீர்மானத்தை எடுத்தார். 1968-ல் மெக்சிகோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை கறுப்பின வீரர்கள் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்தார்.
அது மட்டுமல்ல, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன் சில கோரிக்கைகளை OPHR அமைப்பினர் முன்வைத்தனர்.
- குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின், பறிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கத்தை திரும்ப வழங்க வேண்டும்.
- இனவெறியரான ஏவரி புருண்டேஜை (Avery Brundage) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
- நிறவெறி கொண்ட தென் ஆஃப்ரிகா மற்றும் தெற்கு ரோடீசியா நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும்.
- அமெரிக்க ஒலிம்பிக் அணியில் கறுப்பினப் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.
- அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியில் கறுப்பின உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.
- நியூயார்க் தடகள சங்கத்தில் (NYAC) நிலவும் இனப்பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்.
கறுப்பின வீரர்கள் அமைப்பாகத் திரண்டது, அமெரிக்க வெள்ளையின விளையாட்டு நிர்வாகத்தை அதிர்ச்சியில் உறையச் செய்தது. ஹாரிக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்தன. “என்னைக் கொல்வது என்றால் சுட்டுக் கொன்று விடுங்கள், நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை” என அவர் உறுதியோடு நின்றார். மால்கம் X கொலை மிரட்டல்களை எதிர் கொண்டபோது, மரணத்தை எதிர் கொள்ள அவர் வெளிப்படுத்திய அதே தீரத்தை ஹாரியும் வெளிப்படுத்தினார்.
வியட்நாம் போருக்குச் செல்ல மறுத்ததால், குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின் ஒலிம்பிக் (1960) தங்கப் பதக்கத்தை திரும்பப் பெற்றனர். வியட்நாம் போருக்கு நான் ஏன் செல்ல வேண்டும்? அப்போது அவர் கேட்ட கேள்வி மிகவும் பிரபலமானது: “என்னை அடிமை (Nigger) என்று கூட அழைக்காத வியட்நாம் மக்கள் மீது குண்டு வீச, நான் ஏன் 10,000 மைல்கள் பயணம் செய்ய வேண்டும்? என் ஊரிலேயே கறுப்பின மக்கள் நாய்களைப் போல நடத்தப்படும்போது, நான் ஏன் இன்னொரு நாட்டு மக்களுடன் போரிட வேண்டும்?”
மால்கமின் சொற்களை பிரதிபலித்தன அலியின் வார்த்தைகள். முஹம்மது அலிக்கு இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகம் செய்ததும், சன்னி லிஸ்டனை வீழ்த்தி உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வெல்ல மனரீதியாக அவரை தயார்படுத்தியதும் மால்கம் X-தான். அமெரிக்க விளையாட்டுத் துறை என்பது கறுப்பின வீரர்களை மோசடி செய்யும் வெள்ளையர்களுக்கான களம்; அதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கறுப்பன் அதை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என அலிக்கு போதித்ததும் மால்கம் X-தான். மெக்சிகோ ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்த கறுப்பின வீரர்களின் பிரதான கோரிக்கையே முஹம்மது அலிக்கு மீண்டும் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்பதுதான்.
இதனிடையே, கறுப்பின வீரர்களின் ஒலிம்பிக் புறக்கணிப்பை நீர்த்துப் போகச் செய்ய, வெள்ளை இனவெறியர்கள் வழக்கம் போல ‘கையாட்களை’ கண்டுபிடித்தனர். ஜெஸ்ஸி ஓவன்ஸ் போன்ற கறுப்பின வீரர்களை ஊடகங்களில் பேச வைத்தனர். “விளையாட்டு என்பது இன நல்லிணக்கத்திற்கான களம், தேசத்துக்காக திறனை வெளிப்படுத்தும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பது தேசத் துரோகம்” என அந்த விலை போன கறுப்பின வீரர்கள் வீராப்பு பேசினர்.
ஆனால், இதையெல்லாம் ஹாரி கண்டு கொள்ளவில்லை. இவர்களைத்தான், பழைய தலைமுறை கறுப்பர்கள் – நவீன மனை நீக்ரோ – நவீன அங்கிள் டாம்கள் என மால்கம் X அடையாளம் காட்டிச் சென்றிருந்தார். அதனையே ஹாரியும் வழிமொழிந்தார்: “பழைய தலைமுறையின் சமரசங்கள் எங்களுக்குத் தேவையில்லை.”
பதுங்கிப் பாய்!
புரட்சியின் பாதை எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லை.
யாரும் எதிர்பாராத விபரீதமொன்று நிகழ்ந்தது. ஏப்ரல் 4-ம் தேதி, 1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த மாபாதகச் செயல் கறுப்பின வீரர்களை கடுமையாகப் பாதித்தது. OPHR உருவாக்கிய அழுத்தம் காரணமாக, தென் ஆஃப்ரிகாவையும், ரொடீசியாவையும் ஒலிம்பிக் சங்கத்திலிருந்து நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. இது ஹாரிக்கும் OPHR-க்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
ஆனால் இந்த மாபெரும் பாய்ச்சலே ஒரு பாதகத்தையும் கொண்டு வந்தது. முக்கியமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால், புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுவிடலாம் என சில கறுப்பின வீரர்கள் முனகினர்; போராட்டக் குணத்தை மெதுவாக கைவிடத் தொடங்கினர். புறக்கணிப்பு திட்டத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் மங்குவது ஹாரிக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் வீரர்களுக்குப் பதிலாக, விலைபோகும் கறுப்பின வீரர்களை தேர்வு செய்து ஒலிம்பிக் களத்திற்கு அனுப்பும் கயமைத்தனத்தை வெள்ளை நிர்வாகம் செய்யலாம். அப்படிச் செய்தால், மனித உரிமைகளுக்கான ஒலிம்பிக் திட்டம் என்ற புரட்சி பலனளிக்காது. இது நடந்து விடக்கூடாது என அச்சப்பட்டார் ஹாரி.
“காலத்திற்கேற்ப செயல்திட்டம் மாறலாம். நிகழ்ச்சி நிரல் மாறலாம். ஆனால், இலக்கு ஒரு போதும் மாறாது. உங்கள் இலக்கை அடைவதற்கான பாதை மாறலாம். ஆனால் இலக்கு மாறாது. எங்கள் இலக்கு முழுமையான சுதந்திரம், முழுமையான நீதி, முழுமையான சமத்துவம் – அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது நாங்கள் அடைவோம். இந்த இலக்கு என்றும் மாறாது. மனிதர்கள் என்ற நிறைவான, உடனடியான அங்கீகாரம்தான் எங்களுக்கு தேவை.”
மால்கம் X-ன் இந்தக் கூற்றுக்கு இணங்க, புறக்கணிப்பு திட்டத்தை கைவிட்டார் ஹாரி. திட்டம் ‘அ’வை கைவிட நேர்ந்ததால், திட்டம் ‘ஆ’வை செயல்படுத்த ஒலிம்பிக் வீரர்களுக்கு சமிக்ஞை கொடுத்தார். கறுப்பின வீரர்கள் மெக்சிகோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வார்கள்; தேசத்துக்காக களமிறங்குவார்கள்; வெற்றிவாகை சூடுவார்கள்; ஆனால், கறுப்பர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் வலியையும் விடுதலையின் தேடலையும் அந்த வெற்றி மேடை பறைசாற்றும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார் ஹாரி.
கறுப்புக் கையுறைப் புரட்சி
அக்டோபர் 16.
1968-ம் ஆண்டின் அந்தத் தினம் வரலாற்றில் விநோதமான புரட்சி தினமாக பதிவாகும் என்பது ஒரு சில கறுப்பின விளையாட்டு வீரர்களுக்கே தெரியும். அதேசமயம், அந்தப் புரட்சிக்கு கொடுக்கப் போகும் விலை என்னவாக இருக்கும் என்பதை அவர்களில் ஒருவரும் அறிந்திருக்கவில்லை.
200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்று.
அமெரிக்க கறுப்பின வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ், அமெரிக்காவின் ஒரே வெள்ளை இன வீரரான லாரி கொஸ்டாட் ஆகியோருடன் ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜமைக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த எட்டு வீரர்கள் துப்பாக்கி சுடும் ஒலியைக் கேட்கக் காதுகளை கூர்மையாக வைத்திருந்தனர்.
போட்டி தொடங்கியதும் வீரர்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்தனர். டாமி ஸ்மித் 19.83 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனையுடன் முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் பீட்டர் நார்மன் இரண்டாவது இடத்தையும், மற்றொரு அமெரிக்க வீரர் ஜான் கார்லோஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பதக்கம் பெறும் தருணம். ஒலிம்பிக் சாம்பியன்களை ஆரவாரத்துடன் உற்சாகமாக அழைக்கும் வாழ்த்தொலி அரங்கில் எதிரொலித்தது. மைதானத்தின் மையத்திலிருந்த பதக்க மேடையை நோக்கி மூவரும் மெதுவாக நடந்து வந்தனர். பதக்க வீரர்களை வாழ்த்தி, அந்த அரங்கிலிருந்த ஏறத்தாழ 80 ஆயிரம் ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.
அமெரிக்க கறுப்பர்கள் இருவரின் கால்களிலும் காலணிகள் இல்லை. மறந்து விட்டோ, அவசர அவசரமாகவோ, பதக்கம் வென்ற படபடப்பிலோ அவர்கள் அப்படி வரவில்லை. திட்டமிட்டே அவ்வாறு வந்தனர். அப்படி வெறுங்காலுடன் நடந்து வரும்போது, கைகளில் கறுப்பு நிற கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டுமென இரு கறுப்பின வீரர்களுக்கும் ஹாரி அறிவுறுத்தி இருந்தார். ஆனால், ஜான் கார்லோஸ் கையுறைகளை ஒலிம்பிக் கிராமத்தில் மறந்து வைத்து விட்டார்.
உடனே டாமி ஸ்மித்திடம் இருந்த ஒரு ஜோடி கையுறையை ஆளுக்கொன்றாக அணிந்து கொள்ளுமாறு பீட்டர் நார்மன் ஆலோசனை கூறினார். டாமி ஸ்மித் வலது கையிலும், ஜான் கார்லோஸ் இடது கையிலும் கறுப்பு நிற கையுறையை அணிந்து மைதானத்துக்குள் நடந்து வந்தனர். கையுறை அணியாத இன்னொரு கையில் காலணியொன்றை வைத்துக் கொண்டே இருவரும் பதக்க மேடையை நோக்கி நடந்தனர்.
முதலிடம் பெற்ற மேடையில் ஏறிய தங்கப் பதக்கம் வென்ற டாமி ஸ்மித், ரசிகர்கள் முன்பாக இரண்டு கைகளையும் தூக்கி வெற்றி ஆரவாரம் செய்தார். ஒரு கையில் கறுப்பு நிற கையுறை. இன்னொரு கையில் காலணி. அவருக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் நார்மனுக்கு வெள்ளிப் பதக்கம் அணிவிக்கப்பட்ட பின், மூன்றாமிடம் பிடித்த ஜான் கார்லோஸும் டாமி ஸ்மித் போல காட்சி தந்த பின் அவருக்கு வெண்கலப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி வழக்கப்படி தங்கப் பதக்கம் வென்ற வீரரின் நாட்டைச் சேர்ந்த தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படுவது வழக்கம். அந்தக் கணத்துக்காகத்தான் அமெரிக்க கறுப்பின சமூகத்தின் இரண்டு பிரதிநிதிகளான, புரட்சிக்காரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ் காத்திருந்தனர்.
‘ஸ்டார் ஸ்பாங்கிள் பேனர்’ (The Star Spangled Banner) என்ற அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், அந்த இரண்டு கறுப்பர்களும் திட்டமிட்டபடி வெள்ளை இன எதிர்ப்பை வெடிக்கச் செய்தனர். கையுறை அணிந்த உள்ளங்கையை இறுக மூடி வலது கையை உயர்த்தி தலை கவிழ்ந்தார் டாமி ஸ்மித். கையுறை அணிந்த உள்ளங்கையை இறுக மூடி இடது கையை உயர்த்தி தலை கவிழ்ந்தார் ஜான் கார்லோஸ். இருவரின் கரங்களும் வானை நோக்கி கூர்மையான ஈட்டிகளைப் போல உயர்ந்து நின்றன (Black Power Salute).

அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது. இந்தத் திடீர் எதிர்ப்பு நடவடிக்கையை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதை இழிவுபடுத்தும் விதமாக இப்படி முஷ்டியை உயர்த்துவதை அங்கிருந்த எவரும் சகித்துக் கொள்ளவில்லை. இரண்டு கறுப்பர்களுக்கு எதிராக அரங்கத்திலிருந்த ரசிகர்கள் வெறித்தனமாக அலறினர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத இரு கறுப்பர்களும் தேசிய கீதம் முடியும் வரை, குனிந்த தலை நிமிராமலும் உயர்த்திய கையை இறக்காமலும், உலகை தங்களை நோக்கி திரும்பிப் பார்க்க வைக்க அசையாமல் நின்றனர். நான்கு நூற்றாண்டு அடிமை வாழ்க்கையில் பட்ட அவலங்களை தலையைக் குனிந்து அமைதியாக பறைசாட்டினர். எதைக் கொண்டும் எங்கள் விடுதலையைத் தடுக்க முடியாது என்று அமைதியாக பிரகடனப்படுத்தினர்.
இரண்டாவது இடத்துக்கான மேடையில் நின்ற பீட்டர் நார்மனும் அமைதி காத்தார். OPHR இயக்கத்தின் இலச்சினையை தன்னுடைய உடையில் அணிந்து, கறுப்பர்களின் இந்த புரட்சிக்கு மெளனமாக தார்மீக ஆதரவு அளித்தார்.
தத்துவமாக வாழும் மால்கம் X
கறுப்புக் கையுறை கலகத்துக்குப் பின் பல நுட்பமான குறியீடுகள் இருந்தன. தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அதனை இழிவுபடுத்துவது போல தோற்றம் தந்து வெறுமனே, அமெரிக்க வெள்ளை இன அரசுக்கு எதிரான கலகமாக மட்டும் இந்தப் புரட்சி சுருங்கி விடக்கூடாது என்பதில் OPHR குழு கவனமாக இருந்தது. அமெரிக்க கறுப்பர்களின் அவலங்களை உலகம் அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக தேசிய கீதம் இசைக்கப்படும் நேரத்தை தீர்க்கமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது மட்டுமே அவர்களின் திட்டமாக இருந்தது.
காலுறைகளை மட்டும் அணிந்து சென்றது, கறுப்பர்களின் வறுமையின் கோரத்தைக் காட்டும் குறியீடு.
டாமி ஸ்மித்தின் உயர்ந்த வலது கரம் கறுப்பின மக்களின் அதிகாரத்தை – ஆற்றலை (Black Power) உலகுக்கு பறைசாற்றும் குறியீடு. ஜான் கார்லோஸின் உயர்ந்த இடது கை கறுப்பின மக்களின் ஒற்றுமையை (Black Unity) உரத்து முழங்கும் குறியீடு.
டாமி ஸ்மித் கழுத்தில் சுற்றியிருந்த கறுப்பு வண்ண ஸ்கார்ஃப், நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட கறுப்பினப் பெருமையின் அடையாளம்.
ஜான் கார்லோஸ் கழுத்தில் அணிந்திருந்த கறுப்பு பாசி மணிகள், வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டு அநியாயமாக கொல்லப்பட்டு உயிரிழந்த கறுப்பின மூதாதையர்களை உலகின் முன் காட்டும் சான்று.
இரு கறுப்பின வீரர்களும் தலை தாழ்த்தி நின்றது, கறுப்பின விடுதலைக்காக அமெரிக்க மண்ணில் இரத்தம் சிந்திய மால்கம் X, மார்ட்டின் லூதர் கிங் போன்ற போராளிகளுக்கு செலுத்தப்பட்ட நெஞ்சார்ந்த அஞ்சலி.
பீட்டர் நார்மன் தனது மேலாடையில் அணிந்திருந்த OPHR-ன் இலச்சினை ஒருமைப்பாட்டைக் காட்டும் குறியீடு. அவர் வெள்ளை இனம்தான். சர்வதேச சமூகம் இப்படித்தான் ஆதரவு தர வேண்டும் என்பதை நாகரிகமாக அடையாளப்படுத்தினார்.
2006-ம் ஆண்டு பீட்டர் நார்மன் இறந்த போது டாம் ஸ்மித்தும் ஜான் கார்லோஸும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, சக போராளியின் உடலைச் சுமந்து பிரியாவிடை அளித்தனர். பல்லாண்டுகளாக ஆஸ்திரேலிய விளையாட்டுத் துறை அவரை ஒதுக்கியே வைத்திருந்தது. அவரின் ஒற்றுமை உணர்வை தாமதமாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய அரசு, இறப்புக்குப் பின்பே அவரை அங்கீகரித்து, மெல்பர்ன் நகரில் சிலை வைத்து கவுரவித்தது.

ஹாரி எட்வர்ட்ஸ் பற்ற வைத்த நெருப்புக்கு, பதக்கம் வென்ற மூன்று வீரர்களும் தங்கள் விளையாட்டு வாழ்வையே விலையாகக் கொடுத்தனர். மெக்சிகோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பதக்கம் வென்ற மூவரின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஏவரி புருண்டேஜ் கொதித்தெழுந்தார்.
இந்த வீரர்களின் செயல் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை, இது ஒலிம்பிக் கொள்கைகளுக்கு நேரெதிரானது என கண்டித்ததோடு, மூவரும் 48 மணி நேரத்துக்குள் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதித்தார். மூவரும் அமெரிக்க – ஆஸ்திரேலிய ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். மறுபுறம், ‘கறுப்புத் தோல் கொண்ட நாஜிகள்’ என்ற அளவுக்கு மிக மோசமாக அமெரிக்க ஊடகங்கள் ஊளையிட்டன. தாயகம் திரும்பிய இரண்டு கறுப்பின வீரர்களுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. மூவரின் விளையாட்டு வாழ்க்கையும் அத்துடன் முடிவுக்கு வந்தது. வேலை கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் வறுமை தொடர்ந்தது.
ஆனாலும் தங்களின் செயல்களுக்காக அவர்கள் ஒரு போதும் வருந்தவில்லை. அவர்களின் பார்வை இதுவாகவே இருந்தது:
“அமெரிக்கா எங்களுக்கு விளையாட்டுக் களம் எனும் தளத்தை அளித்தது. விளையாட்டுக் களத்தின் ஆன்மாவை எங்கள் விடுதலைக்கான சான்றாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்.”
பின்னாட்களில் இந்தக் கலகத்தைப் பற்றி குறிப்பிட்ட ஜான் கார்லோஸ், “என் உள்ளுணர்வில் நான் சரி என்று நினைத்ததைச் செய்வதற்கான தார்மீக நியாயத்தையும் அரசியல் ரீதியான தைரியத்தையும் எனக்கு கொடுத்தது மால்கம் X-தான்…” என நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.
“அப்போது அப்படிச் செய்ததற்காக எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அமைதியாக இருக்க முடிவெடுத்தவர்கள்தான் குற்றவுணர்வால் எப்போதும் தவிக்கிறார்கள். என் விடுதலை அவர்களின் சுமையாக மாறிவிட்டது. வாழ்க்கையில் செயலற்றிருப்பதே வருத்தமான செயலாகும்…” என கார்லோஸ் முத்தாய்ப்பாக கூறினார். மால்கம் X மார்பைத் துளைத்த தோட்டாக்கள் அவரின் போராட்ட அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக வெள்ளை இன வெறியர்கள் கொக்கரித்த தருணத்தில், மால்கம் ஏந்திய விடுதலை தீபத்தை, தொடர் ஓட்டப் பந்தய வீரனைப் போல மால்கமிடமிருந்து வாங்கி கொண்டார் ஹாரி எட்வர்ட்ஸ். டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ் போன்ற கறுப்பின இளைஞர்கள் மால்கமின் மார்பைத் துளைத்த தோட்டாக்களை கறுப்பின விடுதலைக்கான விழிப்புணர்வு வித்துகளாக ஊன்றினர். மெக்சிகோ ஒலிம்பிக் அரங்கில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பு காற்றைக் கிழித்துக் கொண்டு உயர்ந்தது வெறும் கறுப்பு நிற கையுறைகள் மட்டுமல்ல, அது மால்கம் X-ன் ஆன்மா! அவர் கொல்லப்படவில்லை; ஒடுக்குமுறைக்கு எதிரான தத்துவமாக என்றும் வாழ்கிறார்.
(அக்டோபர் 16 – Black Power Salute Day)

