ஃபலஸ்தீனின் குழந்தைகள்
![]()
குதூகலமான குழந்தைப் பருவத்தை சிதைப்பதில் மோதல்களும் கட்டாய வெளியேற்றங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தை பருவத்தின் இயல்புகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இவை, அக்குழந்தைகளிடம் நிரந்தரமான உடல், மன, மற்றும் உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
குண்டுவெடிப்புகள், வான் தாக்குதல்கள், பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் மரணம், அழிக்கப்பட்ட வாழ்விடங்கள், உடல் உறுப்புகள் இழப்பு என பலவிதமான இழப்புகளையும் சிக்கல்களையும் இந்த குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்.
போர்களும் தாக்குதல்களும் நடைபெறும் அனைத்து இடங்களிலும் குழந்தைகள் இந்த பாதிப்புகளை எதிர்கொண்டாலும் ஃபலஸ்தீன குழந்தைகளின் பாதிப்பு இவற்றை விட அதிகமாகவே உள்ளது. ஃபலஸ்தீன காஸாவின் மொத்த மக்கள் தொகையான 22 இலட்சத்தில் பாதிக்கும் அதிகமானோர் குழந்தைகளாவர்.
இந்த குழந்தைகளை திட்டமிட்டு அழிக்கும் திட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. ஒரு முழு தலைமுறையையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கும் கொடூரமான செயல்திட்டம் நாம் வாழும் சம காலத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அக்டோபர் 2023 தாக்குதல்களுக்கு முன்னரே காஸாவின் குழந்தைகள் கடுமையான உடல் மற்றும் உள சிக்கல்களை எதிர்கொண்டனர். இஸ்ரேலின் தாக்குதல்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
ஃபலஸ்தீனின் காஸா மீது கடந்த முப்பது மாதங்களாக கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த போதும் அது இஸ்ரேலின் படுகொலை எண்ணிக்கையை குறைத்துள்ளதே தவிர, பெரிய மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை.
அக்டோபர் 2023 முதல் அக்டோபர் 1, 2025 வரை, காஸாவில் 18,069 பள்ளி செல்லும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதாகவும் 26,391 குழந்தைகள் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2023 முதல் அக்டோபர் 2025 வரை காஸாவில் மொத்தம் 20,179 குழந்தைகள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டதாகவும் இவர்களில் 1,029 குழந்தைகள் ஒரு வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் காஸா சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இனப்படுகொலை காலத்தில் பிறந்த 420 குழந்தைகளும் படுகொலை பட்டியலில் உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதாவது, காஸா இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 30 சதவிகிதம் குழந்தைகளாவர். காஸாவில் 52 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குழந்தையை இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது. இது தவிர, ஏறத்தாழ 45,000 குழந்தைகள் காயங்களை அடைந்துள்ளனர்.
நேரடி படுகொலையும் மறைமுக படுகொலையும்
இஸ்ரேலின் தாக்குதல்களால் கடும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுடன் ஏராளமான குழந்தைகள் தற்போது ஃபலஸ்தீனில் வளர்ந்து வருகின்றனர். அக்டோபர் 2023 தாக்குதல்களுக்கு முன்னரே காஸாவின் மருத்துவமனைகள் போதிய வசதிகள் இன்றி இருந்த நிலையில் தற்போது காஸாவில் மருத்துவமனைகளே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு சில மணிநேரங்களுக்கு முன் பிறந்த நூர், மறு தினமே தனது வாழ்நாளின் கடினமான நாட்களை எதிர்கொள்ளத் தொடங்கினாள். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் எழுப்பிய நச்சுப் புகை, பிறந்த குழந்தையின் உடலை வெகுவாக பாதித்ததை தொடர்ந்து வடக்கு காஸாவில் உள்ள அந் – நஸ்ர் மருத்துவமனையில் நூர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாள்.
இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவமனைகள் கூட தப்பவில்லை என்ற செய்தி மட்டும்தான் அப்போது வெளிவந்தது. மருத்துவமனைகளை ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்துவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, இந்த இஸ்ரேல் நியாயப்படுத்தியது. இத்தாக்குதல்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள், அவர்களுடன் இருந்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனை தாக்குதல்களுடன் இஸ்ரேல் படைகள் நடத்திய கொடூரங்கள் சில நாட்களுக்கு பின்னரே வெளியுலகிற்கு தெரிய வந்தன. தாக்குதலுக்கு பின் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர், குழந்தைகளுக்கான உயிர் பாதுகாப்பு கருவிகளை துண்டித்தனர். இதனால் இறந்த குழந்தைகளின் அழுகிய உடல்கள் சில நாட்கள் கழித்து அவர்களின் குடும்பத்தினரால் கண்டெடுக்கப்பட்டன.
இஸ்ரேலின் இந்த அராஜங்களை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை யாரும் நிறைவேற்றவில்லை. குண்டு வீச்சுகளில் பலி, மருத்துவ வசதி இன்றி மரணம், இஸ்ரேல் ராணுவத்தால் சிகிச்சை நிறுத்தப்பட்டு கொலை என காஸாவில் குழந்தைகளின் படுகொலைகள் பல ரூபங்களில் தொடர்ந்தன.
அந் – நஸ்ர் மருத்துவமனை தாக்குதலில் நூர் மட்டும் ஆச்சர்யமாக உயிர் தப்பினாள். ஆனால், உயிர் பிழைத்த போதும் அவளால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை. அவளால் உட்காரக் கூட முடிவதில்லை என்று அவளின் தந்தை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். ஆனால், நூர் அங்கே தனி நபர் அல்ல. இஸ்ரேல் தாக்குதல்களின் காரணமாக முதுகுத் தண்டில் மட்டும் பாதிப்பை சந்தித்த 1200 குழந்தைகள் உள்ளதாக காஸாவின் சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவிக்கிறது. நூரின் நிலை பகுதி பக்கவாதத்தை விட மோசமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2025இல் மட்டும் பிறவிக் குறைபாடுள்ள 322 குழந்தைகளை தாங்கள் கண்டறிந்ததாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. நச்சுப் புகையை கர்ப்பிணி தாய்மார்கள் சுவாசித்தது, பட்டினி, உரிய மருத்துவ வசதிகள் இல்லாதது ஆகியவற்றை இதற்கான காரணங்களாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குண்டுவீச்சின் காரணமாக எழுந்த நச்சுப் புகையை தாய்மார்கள் சுவாசித்ததன் காரணமாக சில குழந்தைகள் கருவிலேயே மரணத்தை சந்தித்த நிலையில், உலகிற்கு தப்பி வந்தவர்களும் நிரந்தர பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
காஸாவில் ஏறத்தாழ ஆயிரம் குழந்தைகள் உறுப்பு அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்களாக அல்லது கடுமையான, நிரந்தர தழும்புகளால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்று சுகாதாரத்துறை மேலும் தெரிவிக்கிறது. தீக்காயம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு அழுத்த முகக் கவசம் அணிவிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு இதனை அணிவிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்று அவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
மிக மோசமான காயம் அடைந்த ஏறத்தாழ 4000 குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. ஃபலஸ்தீனில் இதற்கான வசதிகள் இல்லாததால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அவசியமாகிறது. ஆனால், இஸ்ரேலின் நெருக்கடிகள் காரணமாக பயண அனுமதியை எதிர்நோக்கியே ஏறத்தாழ 500 குழந்தைகள் மரணத்தை சந்தித்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் எகிப்து உடனான ரஃபா எல்லையை இஸ்ரேல் பகுதியாக திறக்க அனுமதித்த பின், 154 குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஃபா எல்லையை மூடுவது ஃபலஸ்தீன குழந்தைகளின் மரண விகிதத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
2025இல் மட்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான பெண்கள் குறைப் பிரசவத்தை சந்தித்தனர் என்றும் 4,800 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்தனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது போருக்கு முந்தைய எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டில் மட்டும் 457 பச்சிளம் குழந்தைகள் பிறந்த முதல் வாரத்திலேயே மரணத்தை சந்தித்தனர். இஸ்ரேலின் நேரடி தாக்குதல்களில் இவர்கள் கொல்லப்படவில்லை என்றாலும், மருத்துவ வசதி குறைபாடுகளால் இவர்கள் மரணித்தனர், அல்லது கொல்லப்பட்டனர் என்று கூட சொல்லலாம்.
இஸ்ரேலின் படுகொலைகள், குறைவான பிறப்பு விகிதம் காரணமாக, வரலாற்றில் முதன் முறையாக காஸாவில் மக்கள் தொகை வளர்ச்சி எதிர்மறை நிலையை எட்டி, – 1.3 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 38 சதவிகிதமும் 2025இல் 13 சதவிகிதமும் வீழ்ச்சியை சந்தித்தன.
குழந்தைகளை குறிவைத்து படுகொலை செய்வதை தனது வழக்கமான நடைமுறையாக இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இனப்படுகொலை அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தனது இனப்படுகொலை திட்டத்தின் ஓர் அம்சமாக, ஃபலஸ்தீனில் எதிர்கால சந்ததியை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
ஒரு குழுவின் உறுப்பினர்களை படுகொலை செய்வது, அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது, அக்குழுவில் பிறப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றை இனப்படுகொலையின் கூறுகளாக ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ளது. இவை அனைத்தையும் ஃபலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
விபரீத விளையாட்டுகள்
விளையாட்டு குழந்தைகளின் சோர்விற்கு ஒரு தீர்வாக இருக்கும் நிலையில், ஃபலஸ்தீன குழந்தைகள் அத்தீர்வை நோக்கியும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். குறைவான உணவு அல்லது பட்டினியுடன் குழந்தைகள் விளையாடினால், அவர்கள் இன்னும் சோர்வடைவார்கள் என்ற அச்சத்தில் பெற்றோர் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை.
இனப்படுகொலை காரணமாக சாதாரண விளையாட்டுகள் கூட போர் தொடர்பான விளையாட்டுகளாக மாறியுள்ளதையும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இறந்த உடல்களை தூக்கிச் செல்வதை சித்தரிக்கும் வகையில் ஃபலஸ்தீன குழந்தைகள் விளையாடும் வீடியோவை நம்மில் பலர் கண்டிருப்போம்.
மற்ற குழந்தைகள் சாதாரணமாக விளையாடும் ‘கண்ணாமூச்சி’ விளையாட்டைக் கூட, ட்ரோன்களில் இருந்து தப்பிப்பதை சித்தரிக்கும் வகையில் விளையாடுவது எந்தளவிற்கு அவர்கள் உள ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் என்பதை காட்டுகிறது.
கல்வியை பெறுவதில் எதிர்நோக்கும் சவால்கள்
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வியை வெகுவாக பாதித்தது. உலகின் பிற பகுதிகள் அச்சிக்கலில் இருந்து வெளியே வந்த போதும் தொடர் இஸ்ரேல் தாக்குதல்கள் ஃபலஸ்தீன குழந்தைகளுக்கு கல்வியை இன்னும் எட்டாக் கனியாகவே வைத்துள்ளது. இதே நிலை நீடிப்பது குழந்தைகளின் கல்வித் தரத்தை வெகுவாக பாதிக்கும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அக்டோபர் 2023 முதல் ஃபலஸ்தீனின் மற்றொரு பகுதியான மேற்குக் கரையில் 891 பள்ளி செல்லும் குழந்தைகள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர நூற்றுக்கணக்கான குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டரை ஆண்டு காலம் கல்வியை இழந்துள்ள மேற்குக் கரை குழந்தைகளுக்கு தினமும் பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்புவதே திகிலும் சாகசமும் நிறைந்த பயணமாக உள்ளது. இஸ்ரேலின் சோதனைச் சாவடிகளையும் தடைகளையும் இராணுவத்தினரின் மிரட்டல்களையும் கடந்தே அக்குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏராளமான ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது.
ஃபலஸ்தீனில் கல்வியை மீட்டெடுப்பதற்கு 1.38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று ஒரு சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தனை சவால்களையும் கடந்து கல்வியின் மூலம் தங்களின் அடையாளத்தை பாதுகாப்பதில் ஃபலஸ்தீனர்கள் மும்முரமாக உள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் காஸாவில் பள்ளிக்கூடங்கள் வேகமாக திறக்கப்பட்டதை உலகம் ஆச்சர்யத்துடன் நோக்குகிறது.
ஃபலஸ்தீன குழந்தைகள் தங்களின் இயல்பான குழந்தைப் பருவத்தை எவ்வாறு இழந்து வருகின்றனர் என்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஸாவின் கல்வி நிலை மோசமாக உள்ளது என்று இரண்டு வருடங்களுக்கு முன் அறிக்கைகளில் குறிப்பிட்டவர்கள் தற்போது குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சீர்குலைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
கல்வி மறுக்கப்பட்டு, பட்டினியின் பிடியில் வாழும் ஃபலஸ்தீன குழந்தைகள் சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் ‘காஸாவை (ஃபலஸ்தீனை) சேர்ந்தவர்கள் என்பதற்காகவே தாங்கள் படுகொலை செய்யப்படுகிறோம்’ என்று அவர்கள் உறுதியாக நம்புவதாகவும் அந்த அறிக்கைகளில் உள்ளன. குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள இந்த நம்பிக்கையின்மை குறித்து சர்வதேச சமூகம் உரிய அக்கறை செலுத்த வேண்டும் என்று அறிக்கைகளை தயாரித்தவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவை அனைத்தையும் கடந்து ஃபலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளனர் என்று அவர்களை புகழ்வது சர்வதேச சமூகத்தின் வழமையாக மாறியுள்ளது. ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்னால் நமது கையாலாகாத தன்மையும் மறைந்துள்ளதை வசதியாக மறந்து விடுகிறோம்.
References:
Born during Israel’s genocide: Gaza’s child survivors bear the scars of war, www.aljazeera.com
‘Patients are dying’: Wat we know about Gaz hospital under Israeli siege, www.aljazeera.com
After more than two years of war, Palestinian children are hungry, denied education and ‘like the living dead’ – report, University of Cambridge, www.cam.ac.uk
20,179 children killed in genocide, Over 12 lakh kids food – deprived: Gaza Health Ministry, www.thewire.in

