கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத வெறியர்களும் மௌனித்த நீதித்துறையும்

Loading

2022 ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு. மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஒரு லாரி புறப்படுகிறது. அதில் மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த மூன்று பேரும், மாடுகளும் இருந்தன. சியோனி மால்வா காவல் எல்லைக்குட்பட்ட பரகத் கிராமத்திற்கு அருகே ஒரு கும்பல் அந்த லாரியை மறித்தது. கையில் வைத்திருந்த தடி மற்றும் கம்புகளால் லாரியில் இருந்த மூன்று பேரையும் அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியதில் 50 வயதான நசீர் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிர் பிழைத்த மற்ற இருவரும் நடந்த கொடூரத்தை நீதிமன்றத்தில் விவரித்தனர்.

மத்தியப் பிரதேச மாநில சியோனி மால்வா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ஜூன் 12 அன்று தீர்ப்பு வெளியானது. அதன்படி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என கூடுதல் அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகள் ஏழு பேரும் சட்டவிரோதமாகக் கூடி, கூர்மையான ஆயுதங்களுடன் நசீர் அகமதை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, இந்தச் செயலை “கும்பல் படுகொலை” (Mob Lynching) என வரையறுத்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார்.

அந்த நீதிபதியின் பெயர் தபஸ்ஸும் கான். இன்று இந்த பெயர், நாம் நினைத்திராத வகையில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே நீதிபதி மீது மதச் சாயம் பூசப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் இந்துக்கள்; தீர்ப்பளித்த நீதிபதியோ ஒரு முஸ்லிம் பெண். தீவிர வலதுசாரிகளுக்கு இந்த ஒரு விஷயமே போதுமானதாக இருந்தது.

அவர்கள் நீதிபதியின் சட்டப்பூர்வமான நியாயங்களையோ, மருத்துவச் சான்றுகளையோ அல்லது பிற ஆதாரங்களையோ ஆராயவில்லை. மாறாக, ஒரு முஸ்லிம் பெண், இந்து ஆண்களுக்குத் தண்டனை வழங்குவதா என்பது மட்டுமே அவர்களுக்கு உறுத்தலாக இருந்தது. அதனால், “இது நீதி அல்ல; மாறாக ஒரு சதித்திட்டம்” எனப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் காட்டுத்தீயாகப் பரவியது. இணையத்தில் வீடியோக்கள் வெளியாகின. அதில் ஒரு நபர், முஸ்லிம் பெண்களைக் குறிவைத்து பேசப்படும் ஆபாச வசைச் சொற்களை நீதிபதிக்கு எதிராகப் பயன்படுத்தினார். தண்டனை பெற்றவர்களைப் பத்து நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் ரத்த ஆறு ஓடும் என மிரட்டல் விடுத்தார். இதே போன்ற மிரட்டல்களை  பலரும் விடுத்தனர்.

நீதிபதியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. பத்திரிகையாளர் என்ற பெயரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரரான சுரேஷ் சாவன்கே, இந்தத் தீர்ப்பை “நீதித்துறை நிகழ்த்திய படுகொலை” (Judicial Killing) என்று விமர்சித்து, தண்டனை பெற்றவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக நின்றார். அதாவது கும்பல் படுகொலை செய்தவர்களின் குடும்பத்திற்கு துணை நின்றார். நீதிபதியை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் இதுவரை வழங்கிய அனைத்துத் தீர்ப்புகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இணையத்தில் கோரிக்கைகள் எழுந்தன.

இந்தக் கோரிக்கையைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவரது கடந்தகால தீர்ப்புகளை ரத்து செய்யத் துடிக்கிறார்கள். சட்டப்படி தீர்ப்பளிக்கும் தனது கடமையைச் செய்ததற்காக ஒரு நீதிபதியையே பதவியிலிருந்து நீக்க முனைகிறார்கள்.

நீதிபதிக்கு எதிராக மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து மத்தியப் பிரதேசக் காவல்துறை முதற்கட்ட தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளது. ஆனால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது போடப்படும் எஃப்.ஐ.ஆர் என்பது வெறும் ஒரு காகிதக் கோப்புதானே தவிர, அதனால் பெரியளவில் பலன் ஏதுமில்லை. பெண் நீதிபதிக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் முதல் தகவல் அறிக்கை அல்ல; நீதிபதி தபஸ்ஸும் கானுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

முன்னாள் நீதிபதி கெளதம் பட்டேலுக்கு அச்சுறுத்தல் எழுந்தபோது மும்பை அரசு எவ்வாறு கையாண்டது என்பதை நாம் இங்கு அறிந்துகொள்ள வேண்டும். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கெளதம் பட்டேல், 2024 ஏப்ரல் மாதம், தான் ஓய்வு பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, மிக நீண்ட காலமாக விசாரணையில் இருந்த ‘தாவூதி போரா’ தலைமையில் நீடித்த பிரச்னை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில் சையதுனா முஃபத்தல் சைஃபுதீன்தான் உண்மையான ஆன்மீகத் தலைவர் என்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளியான பிறகு அவருக்குத் தொடர் மிரட்டல்கள் வரத் தொடங்கின. மொட்டைக் கடிதங்கள் அனுப்பப்பட்டன; வெளிநாட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினரின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது; லண்டனில் இருந்த அவரது மகள் மீதும் தாக்குதல் நிகழ்ந்தது.

இதையடுத்து, பம்பாய் வழக்கறிஞர் சங்கம், மேற்கிந்திய வழக்கறிஞர் சங்கம், பம்பாய் ஒருங்கிணைந்த சட்டச் சங்கம் (BILS) ஆகிய மூன்று முக்கிய சங்கங்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தன. நீதிமன்றமும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, கடந்த ஜூன் 15ஆம் தேதி, முன்னாள் நீதிபதி கெளதம் பட்டேலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டது. விசாரணையைத் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட மும்பை காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் அப்போது குறிப்பிட்ட ஒரு விஷயம் மிக முக்கியமானது. “இந்த மிரட்டல் நீதிபதி பட்டேலுக்கு மட்டும் விடுக்கப்பட்டதல்ல; இது ஒட்டுமொத்த நீதித்துறைக்கே விடுக்கப்பட்ட சவால்,” என அவர் தெரிவித்திருந்தார். இதுபோன்ற மிரட்டல்களை நீதிமன்றம் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் வாதிட்டார். பம்பாய் உயர் நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு, “தன் கடமையைச் செய்த ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால், அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதி கெளதம் பட்டேலுக்குப் பொருந்தும் அதே தர்மம், நீதிபதி தபஸ்ஸும் கானுக்கும் பொருந்த வேண்டும். நடுவழியில் ஒரு நிரபராதியைக் கொன்ற குற்றவாளிகளுக்கு அச்சமின்றி தண்டனை வழங்கியதற்காகவே தபஸ்ஸும் கான் இன்று மிரட்டல்களுக்கும் ஆபாச வசைகளுக்கும் ஆளாகியிருக்கிறார். கெளதம் பட்டேலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

நீதித்துறையில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பு பதவி, அந்தஸ்தை வைத்தோ, மதத்தைப் பார்த்தோ, அரசியல் சூழலைப் பார்த்தோ மாறுபடக் கூடாது. சொல்லப்போனால், நீதிபதி பட்டேலை விட தபஸ்ஸும் கானுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஏனெனில், நீதிபதி பட்டேல் ஓய்வுபெற்றுவிட்டார்; ஆனால் தபஸ்ஸும் கான் இன்னமும் பணியில் இருக்கிறார். வெளியே ஒரு கூட்டம் அவரால் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மிரட்டிக்கொண்டிருக்கும்போதே, அவர் தினமும் நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வழக்குகளை விசாரித்து வருகிறார்.

நீதிபதி பட்டேலுக்கு வந்த மிரட்டல் ஒரு சமூகத்தின் தலைமைப் போட்டி பற்றியது. ஆனால், தபஸ்ஸும் கானுக்கு வரும் மிரட்டல், சட்டம்-ஒழுங்கின் அடிப்படை அமைப்பையே தகர்ப்பது போன்றது. ஒரு கும்பல் படுகொலையில் தண்டனை வழங்கியதற்காக அவர் மிரட்டப்படுகிறார். கும்பல் படுகொலைகளுக்கான வெளிப்படையான ஆதரவாகவே இந்த மிரட்டல்களை பார்க்க வேண்டும். 

இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கினால், “நீதிபதிகளை மிரட்டிப் பணிய வைக்க முடியும்” என்ற தவறான செய்தியை எதிர்கால வன்முறையாளர்களுக்கு அது கொடுத்துவிடும். எதிர்காலத்தில் எந்தவொரு அப்பாவியையும் சட்டம் பாதுகாக்காது என்கிற செய்தியையும் சொல்லிவிடும்.

இந்திய சைபர் க்ரைம் மையம், நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த ஒருவருக்கு வீடியோவை நீக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்புவது எச்சரிக்கை அல்ல; அது ஒரு சாதாரண வேண்டுகோள். ‘ரத்த ஆறு ஓடும்’ என்ற மிரட்டலுக்கு வீடியோவை நீக்கச் சொல்வது தீர்வாகாது.

பம்பாய் உயர் நீதிமன்றம் செய்ததைப்போல, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுக்க வேண்டும். நீதிபதி தபஸ்ஸும் கானின் வீட்டிற்கும் நீதிமன்றத்திற்கும் பலத்த பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மிரட்டலை ஒரு தனிப்பட்ட நீதிபதிக்கு வந்த ஆபத்தாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான தாக்குதலாகக் கருதி உயர் அதிகாரிகள் மூலம் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அதேபோல, மத்தியப் பிரதேச வழக்கறிஞர் சங்கமும் நீதிபதிக்குத் துணை நிற்க வேண்டும். பம்பாய் வழக்கறிஞர்களைப் போல மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் நீதிபதிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும். ஒரு தீர்ப்புக்காக நீதிபதி மிரட்டப்படுகிறார் என்றால் அவரது பாதுகாப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் பங்கு இருக்கிறது.

தபஸ்ஸும் கான் மிரட்டப்படுவது தொடர்பான செய்திகள் வெளியான பிறகு, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், தப்பஸும் கானுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு கடந்த ஜூலை முதல் வாரத்தில் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க, மத்திய பிரதேச காவல்துறை தலைவருக்கும், மாநிலத்தின் முதன்மைச் செயலாளருக்கும் (உள்துறை) நோட்டீஸ் அனுப்பியது.

முஸ்லிம்களை அடித்துப் படுகொலை செய்ய முடியும். அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதியையும் மிரட்ட முடியும் என்ற போக்கு எழுந்துள்ளது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல. எதிலும் மதச் சாயம் பூசி பிளவுகள் ஏற்படுத்துபவர்கள் நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள். அவர்களை சட்டப்படி தண்டிக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

Related posts

Leave a Comment