ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக ஃகலீல் அல்ஹய்யா
![]()
ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக (அரசியல் பிரிவு) ஃகலீல் அல்ஹய்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக 2026 ஜூலை 20 அன்று அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸியோனிசப் படையினரால் 2024 அக்டோபர் 16 அன்று ஹமாஸ் இயக்கத் தலைவர் யஹ்யா சின்வார் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 22 முதல் ஐந்து நபர்கள் கொண்ட ஒரு தற்காலிகக் குழுவின் கீழ் ஹமாஸ் இயக்கம் செயற்பட்டுவந்தது. இயக்கத்தின் அரசியல் பிரிவின் தற்காலிகச் செயற்குழுவாகச் செயற்பட்ட இக்குழுவிற்கு முஹம்மது தர்வேஷ் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். ஃகலீல் அல்ஹய்யா, ஃகாலித் மிஷ்அல், ஸாஹிர் ஜபாரீன், நிஸார் அவாதல்லாஹ் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இருந்தனர்.
இரண்டாம் இன்திஃபாதாவின் (2000-2005) காலகட்டத்தில் ஸலாஹ் ஷஹாதா, ஷெய்ஃக் அஹ்மது யாசீன், அப்துல் அஜீஸ் றன்தீசீ என அடுத்தடுத்து ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு தற்போதைய இனப்படுகொலையில் இயக்கம் பல உயர்மட்டத் தலைவர்களை இழந்துள்ளது. ஸாலிஹ் அல்ஆறூரீ, இஸ்மாயில் ஹனிய்யா, யஹ்யா சின்வார், முஹம்மது தெய்ஃப், அபூ உபைதா என பல தலைவர்கள் தற்போதைய இனப்படுகொலை காலகட்டத்தில் வீர மரணம் அடைந்துள்ளனர். ஆனால், தனி நபர்களின் இழப்புகளால் தடுமாறாத இயக்கம் என்பதை ஹமாஸ் தொடர்ந்து நிரூபித்துவந்துள்ளது.
1948 பேரழிவிற்கு (நக்பா) பின் கடும் இழப்புகளையும் நெருக்கடிகளையும் ஃபலஸ்தீன மக்கள் சந்தித்துவரும் நிலையில் பிரதான இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஃகலீல் அல்ஹய்யா ஏற்றுள்ளார். ஹமாஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆரம்ப நாள்களிலிருந்து அதன் முக்கிய அங்கமாகத் திகழ்ந்துவரும் அல்ஹய்யாவின் அடுத்த கட்டப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது.
பிறப்பும் கல்வியும்
1960 நவம்பர் 5 அன்று ஃகலீல் இஸ்மாயில் இப்றாஹீம் அல்ஹய்யா காஸா நகரத்தில் பிறந்தார். நக்பா பேரழிவின் ரணங்கள் மறையாத நாள்களில் பிறந்த அல்ஹய்யா, 1967இன் ஆறு நாள் யுத்தம் ஏற்படுத்திய தாக்கங்களைத் தனது இளம் வயதில் அனுபவித்துள்ளார். வீடுகளில் சோதனை, உறவினர்கள் சிறைப்பிடிப்பு, உணவிற்கான ஏக்கம் என ஃபலஸ்தீன மக்கள்மீது ஸியோனிச இஸ்ரேல் திணித்த அனைத்து அடக்குமுறைகளையும் அவலங்களையும் ஃகலீலும் அனுபவித்தார். அவரின் சுதந்திர வேட்கைக்கு இவை முக்கியப் பங்காற்றின என்றால் அது மிகையல்ல.
காஸாவின் அல்ஹித்தீன், ஹிஷாம் பின் அப்துல் மனாஃப், யாஃபா ஆகிய பள்ளிக்கூடங்களில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற ஃகலீல், 1983இல் காஸா இஸ்லாமியப் பலக்லைக்கழகத்தின் இஸ்லாமிய இறையியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். 1986இல் ஹதீஸ் துறையில் முதுகலைப் பட்டத்தை ஜோர்டான் பல்கலைக்கழத்தில் பெற்ற அவர், 1997இல் அதே துறையில் சூடானின் புனித குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். காஸா பல்கலைக்கழகத்தில் சிறிறு காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். அத்துடன் அங்குள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்திய உரைகள் மூலம் மக்களிடையே அரசியல் கருத்துகளைக் கொண்டுசேர்த்தார்.
இயக்க ஆரம்ப நாள்களும் சிறைவாசமும்
1980இல் ஹமாஸ் இயக்க மூத்த தலைவரான ஷெய்ஃக் அஹ்மது யாசீன் உடனான சந்திப்பு இவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். ஷெய்ஃக் யாசீனுடன் இவர் மேற்கொண்ட தொடர் உரையாடல்கள் காரணமாக ஆன்மீகத்தைக் கற்றுக்கொண்டதுடன் சமூகப் பணிகளிலும் அக்கறை கொண்டார் அல்ஹய்யா. ஷெய்ஃக் யாசீனின் பாசறையில் பாடம் பயின்ற நூற்றுக்கணக்கான செயல்வீரர்களில் இவரும் ஓர் அங்கமானார். பிந்தைய நாள்களில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய நபராகப் பரிணமிப்பதற்கு இது தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
சமூகச் செயற்பாடுகளின் தொடக்கத்துடன் ஃபலஸ்தீனில் சிறைவாசமும் தொடங்கிவிடும். அல்ஹய்யாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1980இல் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டவர், ஒன்றரை மாதங்கள் இஸ்ரேலியச் சிறையில் அடைக்கப்பட்டார். 1982இல் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் மட்டும் சிறைவாசம் அனுபவித்தாலும் கடும் சித்திரவதைகளை அப்போது ஸியோனிசவாதிகளிடமிருந்து எதிர்கொண்டார்.
1983இல் காஸா பல்கலைக்கழகத்தில் படித்த நாள்களில் ஃபலஸ்தீன முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் (அல்இஃக்வானுல் முஸ்லிமூன்) தொடர்புடைய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஃபலஸ்தீனின் பல தலைவர்களின் பாலர் அமைப்பாக இந்த இளைஞர் அமைப்பு இருந்துள்ளது. ஃகலீல் அல்ஹய்யாவுடன் இஸ்மாயில் ஹனிய்யா, யஹ்யா சின்வார் ஆகியோரும் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே அழைப்புப் பணியையும் பாதுகாப்புப் பணியையும் மேற்கொள்வதற்காக அல்மஜ்து (முனழ்ழமத் ஜிஹாது வத் தஅவா) என்ற இயக்கம் 1981-82 காலகட்டங்களில் ஃபலஸ்தீனில் செயற்பட்டது. 1985இல் யஹ்யா சின்வாரால் மறுகட்டமைப்புச் செய்யப்பட்ட இந்த இயக்கத்தில் ஃகலீல் அல்ஹய்யா பங்கேற்றார். இக்காலகட்டத்தில் யஹ்யா சின்வார், றவ்ஹீ முஷ்தஹா, தவ்ஃபீக் அபூ நஈம், ஃகாலிது ஹிந்தீ உள்ளிட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பை அல்ஹய்யா ஏற்படுத்திக்கொண்டார். இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்த கைக்கூலிகளைக் குறிவைத்தே இந்த இயக்கம் முதன்மையாகச் செயற்பட்டது.
1987இன் முதலாம் இன்திஃபாதாவில் பங்கேற்றார் அல்ஹய்யா. அவ்வருட இறுதியில் ஹமாஸ் இயக்கம் அதிகாரப்பூர்வமாகத் தனது வருகையை அறிவித்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இயக்கத் தலைவர் ஷெய்ஃக் யாசீன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டது இயக்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. அப்போது அமெரிக்காவில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மூசா அபூ மர்ஸூக் ஃபலஸ்தீனிற்கு வந்து மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டார். ஃகலீல் அல்ஹய்யா இதில் முக்கியப் பங்கு வகித்தார்.
ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் நெருக்கடிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்த தலைமைத்துவம் முக்கியத்துவம் பெற்றது. ஜோர்தானுக்குச் சென்ற மூசா அபூ மர்ஸூக் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவராகச் செயற்பட்டார். 1995இல் அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஃகாலித் மிஷ்அல் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 2017 வரை அரசியல் பிரிவின் தலைவராக அவர் செயற்பட்டார்.
1991இல் முதலாம் இன்திஃபாதா காலகட்டத்தில் மூன்றாவது முறையாகக் கைது செய்யப்பட்டார் அல்ஹய்யா. சூடானில் இருந்து திரும்பிய பிறகு 1997இல் காஸா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இணைந்தார். 1998இல் காஸா பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் யூனியனின் துணைத் தலைவராகவும் 2001இல் அதன் தலைவராகவும் அல்ஹய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபலஸ்தீன அறிஞர்களின் சபையான Association of Palestinian Scholars அமைப்பில் உறுப்பினராகும் தகுதியை தனது கல்விசார் புலமை காரணமாகப் பெற்றார்.
இயக்கத்தில் வளர்ச்சி
தஅவா கல்வி நிறுவனம் போன்ற இயக்கத்தின் சமூக நல நிறுவனங்களிலும் ஃகலீல் முக்கியப் பங்காற்றினார். இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஃபத்ஹீ ஹமாதின் முயற்சியால் 2002இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் கிளை வடக்கு காஸாவில் நிறுவப்பட்டது. இளம் தலைமுறையினருக்கு அழைப்புப் பணியையும் இயக்கத்தையும் குறித்து அறிந்துகொள்வதற்கு நல்லதொரு பயிற்சிப் பட்டறையாக இந்நிறுவனம் திகழ்ந்தது. இயக்கத்தின் முன்னணித் தலைவர்களான ஷெய்ஃக் அஹ்மது யாசீன், அப்துல் அஸீஸ் றன்தீசீ, இப்றாஹீம் முகத்தமா, முஹம்மது ஷமாஹ், அப்துல் ஃபத்தாஹ் தோகன், ஃபத்ஹீ ஹமாது, ஃகலீல் அல்ஹய்யா ஆகியோரின் நேரடி அனுபவங்களில் இருந்து மாணவர்கள் தங்கள் பாடங்களைப் பயின்றனர்.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு, காஸா பிரிவின் துணைத் தலைவர், அறபு-இஸ்லாமியத் தொடர்புப் பிரிவின் தலைவர் எனப் பல பொறுப்புகளை நிர்வகித்துள்ளார். 2006இல் நடைபெற்ற தேர்தலில் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அரசியலும் போராட்டத்தின் ஓர் அங்கமே என்பதை நிரூபித்த ஹமாஸ், அதிலும் சாதித்துக் காட்டியது. ஹமாஸ் இயக்க நாடாளுமன்றக் குழுத் தலைவராக ஃகலீல் அல்ஹய்யா தேர்வுசெய்யப்பட்டார்.
2024 ஜூலை 31 அன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இயக்கத் தலைவராக யஹ்யா சின்வாரும் துணைத் தலைவராக ஃகலீல் அல்ஹய்யாவும் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டதாக 2024 ஆகஸ்ட் 6 அன்று ஹமாஸ் அறிவித்தது.
படுகொலை முயற்சிகள்
ஸியோனிச எதிர்ப்பின் முன்னணியில் இருப்பதன் காரணமாக பலமுறை அவர் இஸ்ரேலால் குறிவைக்கப்பட்டார். 2007 மே 20இல் அவரின் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் இரண்டு சகோதரர்கள் உட்பட ஏழு குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஃகலீல் அல்ஹய்யாவைக் குறிவைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது பின்னர் நிரூபணமானது. 2008 பிப்ரவரி 28இல் இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் பிரிவில் இருந்த அவரின் மகன் ஹம்ஸா படுகொலை செய்யப்பட்டார்.
2014 ஜூலை 20இல் கிழக்கு காஸாவின் ஷுஜாஇய்யா பகுதியில் அவருடைய மகன் உசாமாவின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் மகன், மருமகள், மூன்று பேரக்குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். ஃகலீலும் அவரின் மனைவியும் இரண்டு பேரக் குழந்தைகளும் வீட்டிற்கு வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தனர்.
அக்டோபர் 2023 அல் அக்ஸா பிரளயத்தை (தூஃபானுல் அக்ஸா) தொடர்ந்து ஹமாஸ் தலைவர்களை மீண்டும் குறிவைக்கத் தொடங்கிய இஸ்ரேல், அக்டோபர் 9 அன்று அல்ஹய்யாவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியது. 2024 ஜனவரி 2 அன்று லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஃகலீல் அல்ஹய்யா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இத்தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் ஸாலிஹ் அல்ஆறூரீயும் இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் பிரிவின் இரண்டு தளபதிகளும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டபோது ஃகலீல் அல்ஹய்யா லெபனானில் இல்லை என்பதை ஹமாஸ் உறுதிப்படுத்தியது.

2025 செப்டம்பர் 9 அன்று சமாதானப் பேச்சுவார்த்தைக்காக கத்தார் தலைநகர் தோஹா சென்ற ஹமாஸ் குழுவினர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா முன்வைத்த சமாதானக் கோரிக்கைகள்குறித்து ஹமாஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஃகலீல் அல்ஹய்யா, ஃகாலித் மிஷ்அல் உள்ளிட்ட தலைவர்கள் பிழைத்தபோதும் ஃகலீலில் மகன் ஹம்மாம் உள்ளிட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டனர்.
2026 மே 7 அன்று, வான் தாக்குதலில் காயம் அடைந்த ஃகலீலின் மற்றொரு மகன் அஸ்ஸாம் மரணம் அடைந்தார்.
முதன்மைத் தூதுவராக அல்ஹய்யா
ஹமாஸ் இயக்கத்தின் ராஜதந்திர நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக ஃகலீல் கருதப்படுகிறார். 2012இலும் 2014இலும் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஹய்யா முக்கியப் பங்கு வகித்தார். இயக்கத்தின் அறபு-இஸ்லாமியத் தொடர்புத் துறையின் தலைவராக இருந்த காரணத்தினால் பல அறபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் நல்ல உறவுகளையும் அவர் கொண்டுள்ளார். இஸ்ரேல் உடன் மட்டுமின்றி, ஃபலஸ்தீன அதிகார சபை உடனான பேச்சுவார்த்தைகளிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளர்.
2006 தேர்தலில் ஹமாஸ் இயக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரேல், அமெரிக்கா, மற்றும் அறபு நாடுகளின் கூட்டுச் சதியில் பங்கெடுத்த ஃபலஸ்தீன அதிகார சபை ஆட்சியை ஹமாஸ் இயக்கத்திடம் ஒப்படைக்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. ஃபலஸ்தீன வரலாற்றின் இருண்ட பக்கங்களாக இவை பதிவுசெய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2008இல் ஹமாஸுக்கும் ஃபலஸ்தீன அதிகார சபைக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் தனது தரப்பின் நியாயத்தை அல்ஹய்யா எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை. மேற்குக் கரையில் ஃபலஸ்தீன அதிகார சபையால் கைது செய்யப்பட்ட மூன்று ஹமாஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படாதவரை பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். ஏனைய மூன்று போராட்ட அமைப்புகளும் இந்த முடிவில் உறுதியாக இருந்தன. சமாதானப் பேச்சுவார்த்தையின் முதல் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்ளாமல் அனைத்து கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் அதிகார சபையின் தலைவர் மஹ்மூது அப்பாஸ் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஹமாஸ் – ஃபத்தாஹ் பிரிவினர் இடையே சமாதானத்தை ஏற்படுத்தியது, ஃபலஸ்தீனில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது, ஃபலஸ்தீன விடுதலை அமைப்பில் (பி.எல்.ஓ.) ஹமாஸ் இயக்கத்தை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது எனப் பல முயற்சிகளை மேற்கொண்டுவந்த நிலையில்தான் 2007இல் இஸ்ரேல் அவரின் இல்லத்தைக் குறிவைத்தது. அத்தாக்குதல் நடத்தப்பட்டபோது ஃபத்தாஹ் இயக்கம் உடனான ஆறாவது கட்ட உடன்படிக்கைக்கான இறுதி நகர்வுகளை அல்ஹய்யா எகிப்து தூதரகத்தில் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஃபத்தாஹ், பி.எல்.ஓ., அதிகார சபை ஆகிய மூன்றும் ஒன்றல்ல. யாசர் அறஃபாத்தால் தொடங்கப்பட்ட ஃபலஸ்தீன விடுதலை இயக்கம் ஃபத்தாஹ். ஃபலஸ்தீன இயக்கங்களின் கூட்டமைப்பு ஃபலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ.) என்று அழைக்கப்படுகிறது. இதில் ஃபத்தாஹ் உள்ளிட்ட இயக்கங்கள் உள்ளன. இந்த அமைப்பின் பெரிய உறுப்பினரான ஃபத்தாஹ், இதில் ஹமாஸ் இணைவதற்குத் தடையாக இருந்துவருகிறது. ஆஸ்லோ ஒப்பந்தங்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு ஃபலஸ்தீன அதிகார சபை. தற்போது மேற்குக் கரையின் சில பகுதிகளை இது நிர்வகித்துவருகிறது).
அல்அக்ஸா பிரளயத் தாக்குதலைத் தொடர்ந்து எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஹய்யா முக்கிய அங்கமாக இருந்தார்.
புதிய சூழலில் புதிய தலைவர்
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றம் இருக்கலாம் என்று சிலர் கணிக்கின்றனர். பெரும்பான்மை அறபு நாடுகள் ஃபலஸ்தீன விவகாரத்தில் உருப்படியாக எதையும் செய்யாவிட்டாலும் அனைவரிடமும் சுமூகமான உறவை ஹமாஸ் பேணிவருகிறது. ஈரான் உடனான தங்களின் உறவு மற்ற நாடுகளுடனான தங்களின் உறவில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக உள்ளனர். ஏனைய உலக நாடுகளைவிட ஃபலஸ்தீன விவகாரத்தில் நியாயமான பங்களிப்பை அளித்து வரும் நாடாக ஈரான் உள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் ஆரம்ப நாள்களில் இருந்தே அதன் ஈரான் உறவு தொடங்கிவிட்டது. அக்டோபர் 1990இல் ஹமாஸ் பிரதிநிதியை ஈரான் நியமித்தது. 1992பிப்ரவரியில் ஹமாஸின் அதிகாரப்பூர்வ அலுவலகம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திறக்கப்பட்டது. 1990களில் இருந்து ஈரானிடமிருந்து பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்றபோதும் தனது தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் ஹமாஸ் பேணிவருகிறது. ஹிஸ்புல்லாஹ் போன்று ஈரானின் ஓர் அங்கமாக ஹமாஸ் மாறவில்லை.
ஈரான் உடனான உறவைப் பேணிவரும் அதே சமயம், அறபு நாடுகள் உடனான உறவையும் ஹமாஸ் முறித்துக்கொள்ளவில்லை. ‘சிரியா மற்றும் ஈரான் உடனான எங்களின் நல்லுறவின் காரணமாக நாங்கள் அவர்கள் திட்டத்தின் ஓர் அங்கம் என்று கூற முடியாது’ என்று ஃகாலித் மிஷ்அல் ஒருமுறை தெரிவித்தார். 2007 மோதல்களைத் தொடர்ந்து ஹமாஸுக்கும் ஃபலஸ்தீன அதிகார சபைக்கும் இடையே மக்கா உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த சமாதான உடன்படிக்கைக்கான முயற்சிகளை சஊதி அறபியா மேற்கொண்டது. ‘சஊதி அறபியா உடனான எங்களின் உறவு, ஈரானை பாதிக்கும் வகையிலானது அல்ல. சிரியாவுடனான எங்களின் உறவு, எகிப்து உடனான உறவை பாதிக்கும் வகையிலானது அல்ல’ என்று ஃகாலித் மிஷ்அல் தெளிவுபடுத்தினார்.
2006 தேர்தல் மற்றும் 2007இல் காஸா பகுதியை ஹமாஸ் கைப்பற்றியதைத் தொடர்ந்து அறபு நாடுகளிடமிருந்து ஹமாஸ் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது ஈரான் அதற்குத் துணையாக இருந்தது. பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா, அரசியல் பிரிவுத் தலைவர் ஃகாலித் மிஷ்அல் உடனான சந்திப்புகளின்போது ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலீ ஃகாமினயீ உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் ஃபலஸ்தீன ஆதரவையும் ஹமாஸ் ஆதரவு நிலைப்பாட்டையும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் இறுதியில் தொடங்கிய அறபுலக வசந்தம் 2011இல் சிரியாவிலும் வீசியது. தனது ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கடும் அடக்குமுறைகள் மூலம் எதிர்கொண்டார் அதிபர் பஷார் அல்அசது. ஹமாஸ் இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரிவு அப்போது சிரியாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தது.
பொதுவாகவே, தாங்கள் வசிக்கும் நாட்டின் உள்விவகாரங்களில் ஹமாஸ் இயக்கம் தலையிடுவதில்லை. ஆனால், பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் சிரியாவில் இருந்து வெளியேறுவதாக அரசியல் பிரிவின் தலைவராக இருந்த ஃகாலித் மிஷ்அல் அறிவித்தார். சிரியா அரசாங்கத்துடன் நிற்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையையும் ஹமாஸ் ஏற்கவில்லை. சிரியா மக்கள் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் ஈடுபடக்கூடாது என்று ஃகாலித் மிஷ்அல் கூறியது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
சிரியா அரசாங்கத்தைக் கண்டித்து அங்கிருந்து மிஷ்அல் உள்ளிட்ட தலைவர்கள் வெளியேறி கத்தார் சென்றதை காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஹமாஸின் வெளிநாட்டுத் தலைமை சிரியாவில் இருந்த நாள்களில்தான் ஈரான், சிரியா, ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ் இணைந்த ஒரு வலுவான இஸ்ரேல் எதிர்ப்பு அணி உருவாக்கப்பட்டதை மறுக்க முடியாது. ஈரான் – ஹமாஸ் உறவில் விரிசல் இல்லை என்று இரு தரப்பினரும் தெரிவித்தாலும், ‘சிரியாவின் நிகழ்வுகள் ஈரான் உடனான எங்களின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈரானுடன் அதே அளவில் உறவைப் பேண நாங்கள் முயன்றாலும் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களின் மக்களையும் நோக்கத்தையும் பாதுகாப்பதற்காக இதனை சரி செய்ய முயன்றுவருகிறோம்’ என்று மூசா அபூ மர்ஸாக் போன்ற மூத்த ஹமாஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், அதன் பின்னரும் ஹமாஸ் இயக்கத்திற்கான ஆதரவை ஈரான் நிறுத்தவில்லை. நவம்பர் 2012 தாக்குதலின்போது, முதன் முறையாக டெல் அவிவ் நகரை ஹமாஸின் ராக்கெட்கள் பதம் பார்த்தன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் ஈரான் உள்ளதை அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
தற்போதைய மிக முக்கியமான சூழலில் ஈரான் ஆதரவு தரப்பின் ஃகலீல் அல் ஹய்யா இயக்கத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2022இல் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்ற அவர், அந்நாட்டின் அதிபர் பஷார் அல்அசதை சந்தித்தார். இச்சந்திப்பை வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு என்றும் ஃபலஸ்தீன் – சிரியா உறவுகளின் புதிய தொடக்கம் என்றும் அவர் வர்ணித்தார். லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்துடனும் நல்ல உறவினை ஃகலீல் அல்ஹய்யா பேணிவருகிறார்.

ஃபலஸ்தீன விவகாரத்தில் சமரசமற்ற ஆதரவாளராகவும் அதற்காக கடும் இழப்புகளையும் தியாகங்களையும் எதிர்கொண்ட ஈரான், மேற்கு ஆசியாவில் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. இஸ்ரேலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகளைக் கொண்டுள்ள அறபுலக ஆட்சியாளர்கள் ஈரானுக்கு எதிராக இருந்தாலும் அந்நாடுகளின் மக்கள் ஈரானுக்கே ஆதரவாகவே உள்ளனர். ஜூன் மாதம் முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதல்களை வலிமையாக எதிர்கொள்வது சர்வதேச அளவில் ஈரானின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. ஃபலஸ்தீன் விவகாரத்தில் துருக்கி, கத்தார் நாடுகளின் நிலையற்ற போக்கு அந்நாடுகள் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது. இச்சூழலில்தான் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட ஃகலீல் அல் ஹய்யா பிரதான இயக்கத்தின் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஹமாஸ் இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் அடக்குமுறைகள், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தடையற்ற உதவிகள், அறபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கள்ள மௌனம் எனப் பல நெருக்கடிகளுக்க மத்தியில் பயணித்துவரும் ஹமாஸ் இயக்கத்திற்கு இனி வரும் நாள்கள் மிகச் சவாலானவையாகவே இருக்கும். ஆனால் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு புத்தெழுச்சியுடன் அந்த இயக்கம் மிளிர்வதையே அதன் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. ஃகலீல் அல்ஹய்யாவின் தலைமையிலும் அந்த எழுச்சி தொடரும் என்ற நம்பிக்கை சுதந்திரத்தை விரும்பும் அனைவருக்கும் இருக்கிறது.
References:
Khalil al-Hayya and the Hamas Movement’s Recent Foreign Policy, Mujamma Haraket
Hamas’s new leader must bridge a movement divided over Iran, Azzam Tamimi, www.aljazeera.com
The Islamic Resistance Movement (Hamas): Studies of Thoughts & Experience, Dr. Mohsen Mohammad Saleh, Chapters 8 and 9

