கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

குவாண்டனாமோவில் எனது கடைசி நாள்

Loading

(பதினைந்து வருடங்கள் குவாண்டனாமோவில் சிறை வைக்கப்பட்டிருந்த மன்சூர் அழ்ழைஃபி தனது அனுபவங்களையும் அங்கிருந்து வெளியேறும் போது சக சிறைவாசிகளுக்கு தான் கொடுத்த முக்கியமான வாக்குறுதியையும் 2023இல் எழுதப்பட்ட இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்).

‘சகோதரனே, தயவு செய்து எங்களை மறந்து விடாதே’

‘உங்களில் யாரையும் நான் மறக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் அனைவரும் விடுதலையாகாமல் என்னுடைய விடுதலை முழுமையடையாது.’

ஜூலை 2016இல் மிக மோசமான குவாண்டனாமோ சிறைச்சாலையை விட்டும் நான் இறுதியாக வெளியேறிய போது சக கைதிகளுடன் நான் பரிமாறிய கடைசி வார்த்தைகள் இவை.

கேம்ப் ஐந்தின் தனிமைச் சிறைகளில் விடை பெறுவதற்காக நாங்கள் ஒன்று குழுமினோம். பொழுதுபோக்கும் இடத்தில் சங்கிலித் தொடர் வேலிகளால் ஆன கூண்டுகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம்.

சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட போதும் பல வருடங்களாக அங்கேயே இருந்தனர். இன்னும் சிலர் நிரந்தர கைதிகளாக இருந்தனர்.

காலம் கடந்தது. எங்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. வெள்ளை முடியும் உடல் நலப் பிரச்சனைகளும் எங்களை வாட்டின. இந்த இரவில் பல முகாம்களில் உள்ள கூண்டுகளில் நாங்கள் அடைக்கப்பட்டுள்ளோம். சிறைக் கம்பிகளுக்கு பின்னால் எங்களின் 14 வருடங்கள் நாசமாகிவிட்டன.

இறுதியாக ஒருமுறை என்னைப் பார்த்து பேசுவதற்காக என்னுடைய சகோதரர்கள் இங்குள்ளனர். இராணுவ காவலர்கள் அவர்களை ஒவ்வொருவராக அழைத்துச் சென்றனர். சங்கிலிகளாலும் விலங்குகளாலும் பிணைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் கொண்டு செல்லப்படுவதை கண்டபோது, என்னுள் கண்ணீர் பெருக்கெடுத்தது. .

‘இந்த இரவில் பிரச்சனைக்குரிய அனைவரும் ஒன்றாக உள்ளனர்’ என்று காவலர் ஒருவர் கூறிய போது அவை கண்களை விட்டும் சிந்தின.

அவர்கள் விடுதலை அடையாமல் எனது விடுதலை முழுமையாகாது. அவர்கள் என்னில், எனது வாழ்க்கையின் ஓர் அங்கம். தங்களின் உயிர் உள்ளிட்ட அனைத்தையும் தியாகம் செய்வதற்கு தயாராக உள்ள சிவப்பு கண்களைக் கொண்ட எதிர்ப்புப் படையின் தோழர்கள் அவர்கள்.

யாஸர், அலீ, மனீஆ, அத்னான் உள்ளிட்ட குவாண்டனாமோவில் உயிரிழந்தவர்களை அத்தருணத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். குவாண்டனாமோவில் இருந்து சவப்பெட்டியில் அவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்பட்ட போது அவற்றில் ஐஎஸ்என் எண்களும் அவர்களின் மரணித்த தேதியும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. (ஐஎஸ்என் – குவாண்டனாமோ சிறைவாசிகளை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட எண்கள். அச்சிறைவாசிகள் அவர்களின் எண் மூலமாகவே அறியப்பட்டனர்)

மரணத்தின் பயணம்

அமெரிக்க விசாரணை அதிகாரிகளுடனான எனது பயணம் தொடங்கியதில் இருந்து சித்திரவதையும் மரணமும் நிரந்தர நண்பர்களாக இருந்தனர். ஆஃப்கானிஸ்தானில் உள்ள சிஐஏ-வின் ரகசிய தடுப்பு மையத்தில் இருந்த நாட்கள் மிக மோசமானவை. குளிர்ந்த, அந்த பாதாள ஓட்டையில் நான் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

நிர்வாணமாக்கப்பட்ட நான், தொங்கவிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டேன். பின்னர் நான் கந்தகார் இராணுவ தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டேன். அங்கு என்னை அடித்து துன்புறுத்திய காவலர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர், எனது மரண தண்டனை ஆவணத்தில் கையெழுத்திடுமாறு என்னை வற்புறுத்தினர்.

கூர்மையான முள் வேலிகளுக்கு நடுவே, இரண்டு கோபுரங்களில் இருந்த இயந்திரத் துப்பாக்கிளும் பிரகாசமான விளக்குகளும் என்னை நோக்கி நீட்டிக் கொண்டிருக்க, பல வாரங்களாக ஒரு விமானக் கொட்டகையில் தரையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டேன். கடுமையான விசாரணைகளும் சித்திரவதைகளும் இடைவிடாமல் தொடர்ந்தன. என் உடல்நிலை மோசமடைந்ததால் அந்த மோசமான சூழலில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

தனது 11 வயது மகனுக்கு முன்னால் ஒரு முதியவர் நிர்வாணமாக்கப்பட்டதும் அந்த அவமானத்தை பார்க்குமாறு அச்சிறுவன் கட்டாயப்படுத்தப்பட்டதும் நான் கண்ட மிகக் கொடூரமான காட்சிகளில் ஒன்றாகும். 

எனக்குத் தெரிந்த அனைத்து வார்த்தைகளைக் கொண்டும் அந்த இராணுவத்தினரை சபித்தேன். ஆனால், டக்ட் டேப் கொண்டு என் வாய் மூடப்பட்டு, மேற்கொண்டு சித்திரவதை செய்யப்படுவதற்காக அந்த விமான கொட்டகைக்கே கொண்டு செல்லப்பட்டேன்.

யெமன் நாட்டைச் சார்ந்த 19 வயதான மன்சூர் அழ்ழைஃபி ஆப்கானிஸ்தானில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த போது 2002இல் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டார்

ஒரு கூடாரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, தொங்கவிடப்பட்டேன். இராணுவத்தினர் எங்கள் உடல்களின் முடிகளை மழித்து, எங்களை ஏளனம் செய்தனர். எங்கள் மீது உரசிய பெண் இராணுவத்தினர் எங்களை ஏளனம் செய்து இழிவுபடுத்தினர். அப்போது கைதி ஒருவர் அழுவதைக் கண்ட நான் அவருக்கு தைரியமூட்டினேன். இராணுவத்தினர் மீது எச்சிலை உமிழ்ந்தேன்.

முழு பலத்துடன் சங்கிலிகளை இழுத்து என்னை விடுவித்துக் கொள்ள முயன்றேன். ஆனால், தப்பிப்பது சாத்தியமற்றதாக இருந்தது. குறைந்தபட்சம் கூடாரத்தை அதிரச் செய்தேன். அது இராணுவத்தினரை பயமுறுத்தியது. ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருந்த அவர்கள், என்னை சுட்டுவிடுவதாக மிரட்டி உள்ளே விரைந்தனர். அப்போது அதைப்பற்றியெல்லாம் நான் கவலை கொள்ளவில்லை. சிஐஏ-வின் ரகசிய இடங்களில் நான் ஏற்கெனவே மரணத்தை பலமுறை சந்தித்திருந்தேன்.

என் வாய் டக்ட் டேப்பால் ஒட்டப்பட்டது. எனது ஆசன வாயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தியது போல் இருந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்டு, விலங்கிப்பட்டு, ஆரஞ்சு நிற சிறை உடை அணிவிக்கப்பட்ட நான், கழுத்தில் ‘என்னை அடி’ (‘Beat me’) என்று எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டபடி குவாண்டனாமோவிற்கு அனுப்பப்பட்டேன்.

40 மணிநேர விமானப் பயணத்தில் இராணுவத்தினர் அக்கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றினர். ஒரு கட்டத்தில், அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட வேண்டும் என்று கூட நான் விரும்பினேன்.

விமானம் தரையிறங்கிய பிறகு, உயிருடன் இருப்பதே ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், கப்பல் படையினர் எங்களை இரக்கமின்றி அடித்து, உதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு படகுத் துறைக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய போது எனது கடல் நண்பனை சந்தித்தேன். எல்லாம் சரியாகிவிடும் என்று அவன் உறுதியளித்தான். 

செய்திகளில் அடிக்கடி காட்டப்படும் அந்த செயல்முறை மையத்தில் நான் இருந்தேன். ‘மிகவும் மோசமானவர்கள்’ குவாண்டனாமோவிற்கு அழைத்து வரப்பட்டதாக அமெரிக்க அரசாங்கம் அந்த இடத்தில் இருந்து அறிவித்தது.

தலையின் மீது அணிவிக்கப்பட்ட முகமூடி, கண்ணாடிகள், முகக் கவசம், காதுகளை மூடும் கவசங்கள் ஆகியவற்றைத் தவிர, அனைத்து ஆடைகளும் அகற்றப்பட்ட நிலையில், என் உடல் மீது அதிக அழுத்தத்துடன் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அத்துடன் பெரிய துடைப்பங்களால் இடைவிடாமல் தாக்கப்பட்டேன். இராணுவத்தினரின் பூட்ஸ் கால்களால் உதைக்கப்பட்டேன். என் தலையில் இருந்த முகமூடி நனைந்ததால் வாயில் ஒட்டப்பட்டிருந்த டேப் இடம் மாறியது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

சங்கிலித் தொடர் வேலிகளால் அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு முகாமான கேம்ப் எக்ஸ் ரேவிற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு கழிப்பறைகளும் கிடையாது, சூரியனிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான இடமும் கிடையாது. ஒவ்வொரு கைதியும் தனித் தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டனர். மிருகக் காட்சி சாலையில் ஆரஞ்சு நிற ஆடை அணிந்த விலங்குகளைப் போல் அவர்கள் இருந்தனர்.

முகத்தில் காயம், உதட்டில் வெடிப்பு, நீல நிறக் கண்கள் ஆகியவை அங்கு சாதாரண காட்சிகள். அது, மிக மோசமானவர்கள் என்று கருதப்பட்டவர்களை அடைப்பதற்காக கட்டப்பட்ட முதல் தடுப்பு முகாம். குவாண்டனாமோவிற்கு செல்வதற்கு முன் எங்களுக்குள் அந்த அறிமுகமும் கிடையாது. 50 நாடுகளைச் சேர்ந்த நாங்கள் 20 மொழிகளைப் பேசினோம். நாங்கள் எங்குள்ளோம் என்பதையோ அடுத்து என்ன நடக்கும் என்பதையோ முற்றிலும் அறியாதவர்களாக இருந்தோம்.

நாங்கள் வெறும் எண்களாக சுருக்கப்பட்டோம். நான் 441 என்று அழைக்கப்படலானேன். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஆயிரக்கணக்கான கேள்விகளும் அச்சங்களும் குழப்பமும் எல்லோருடைய முகத்திலும் நிறைந்திருந்தன. நாங்கள் தந்தையராக, சகோதரர்களாக, கணவன்களாக, மகன்களாக – ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, மாணவர்களாக, விவசாயிகளாக, இராணுவத்தினராக, கமாண்டர்களாக, சமையல் கலைஞர்களாக, கலைஞர்களாக, பத்திரிகையாளர்களாக, பாடகர்களாக, போதைப் பொருள் வியாபாரிகளாக, முன்னாள் உளவாளிகளாக, குழந்தைகளாக இருந்தவர்கள்.

எக்ஸ் ரே கேம்ப்பில் விதிகள் எதுவும் கிடையாது. வெறுப்புணர்வு கொண்ட காவலர்களையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் விசாரணை முகமைகளையும் கொண்ட அந்த முகாமில் முழுமையான குழப்பம் நிலவியது.

விசாரணை செய்தவர்கள் மிரட்டியது போல், சில சமயம் எங்களை கொலை செய்துவிடுவார்கள் என்று நம்பினோம். நாங்கள் அப்பாவிகள் என்பதை உணர்ந்து எங்களை விடுவிப்பார்கள் என்று சில சமயம் நம்பினோம்.

ஆனால், குற்றம் அல்லது அப்பாவித்தனம் என்பதை கடந்து இந்த கதை மிக சிக்கலானது. எங்களின் சிந்தனை அப்பாவித்தனமானது என்பதை விரைவாகவே புரிந்து கொண்டோம்.

குவாண்டனாமோவில் இருந்து அன்புடன்

நான்கு மாதங்களுக்குப் பிறகு, கண்டெய்னர்களை கொண்ட ஓரளவு நிரந்தரமான கேம்ப் டெல்டாவிற்கு மாற்றப்பட்டோம். தரைகளில் போடப்பட்ட துளைகள் கழிவறைகளாகவும் சுவர்களில் போடப்பட்ட துளைகள் கழிவறைத் தொட்டிகளாகவும் இருந்தன. சூரியனில் இருந்து பாதுகாக்க கூரைகள் இருந்தன.

நாங்கள் குவாண்டனாமோவில் உள்ளோம் என்பதை இப்போதுதான் உண்மையில் அறிந்து கொண்டோம். புதிதாக வந்த கைதிகள் இத்தகவலை பரிமாறினர். அனைத்து முஸ்லிம்களையும் குவாண்டனாமோவிற்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா திட்டமிடுகிறது என்று நாங்கள் நம்பினோம்.

அதுவரை குவாண்டனாமோ குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களாக, இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தோம். 19 வயதான என்னை, முப்பதுகளில் இருந்த அனுபவம் வாய்ந்த எகிப்திய அல் காய்தா ஜெனரல் என்று அமெரிக்க ஆவணங்கள் சித்தரித்தன.

2002ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஜெனரல் ஜெஃப்ரி மில்லர் குவாண்டாமோவை ஓர் இராணுவ ஆய்வகமாக மாற்றும் பணிகளைத் தொடங்கிய போது அங்கு ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. முகாமிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்த அவர், உளவு அமைப்புகளையும் படைகளையும் கூட்டுப் பணிப் படை (Joint Task Force) மற்றும் கூட்டுத் தடுப்புக் குழு (Joint Detention Group) ஆகியவற்றின் கீழ் ஒருங்கிணைத்தார்.

சித்திரவதை முறைகளை உள்ளடக்கிய திட்டத்தை வடிவமைத்து முன்னெடுத்தவரும் இவரே. இம்முறைகள் ‘மேம்படுத்தப்பட்ட விசாரணை முறைகள்’ என்று மென்மையாக அழைக்கப்பட்டன. (குவாண்டனாமோவில் இருந்த போது அவர் ஈராக்கிற்கும் பயணம் மேற்கொண்டார்).

கேம்ப் டெல்டாவின் கேம்ப்கள் 1, 2, மற்றும் 3இல் எங்கள் வாழ்நாளின் நான்கு வருடங்களை நாங்கள் கழித்தோம். இந்த முகாம்கள் 2006இன் இறுதியில் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன. அந்த நாட்களின் துன்பகரமான மற்றும் சந்தோஷமான நினைவுகள் எங்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்தன. ஆனால் சில சகோதரர்களை நாங்கள் இழந்தது மிக மோசமான நிகழ்வுகளாகும்.

முகாமிற்கு எதிராக நாங்கள் பலமுறை கிளர்ந்தெழுத போதும் ஒவ்வொரு முறையும் நாங்கள் அடக்கப்பட்டோம். எங்களை அறியாமலேயே ஒவ்வொரு எதிர்ப்பும் எங்களை வலிமைப்படுத்தி ஒருங்கிணைத்தன. அந்த கூண்டுகளில் போராடி, வளர்ந்து, பக்குவம் அடைந்த நாங்கள், முக்கியமான பாடங்களையும் கற்றுக் கொண்டோம்.

With Love From Guantanamo (குவாண்டனாமோவில் இருந்து அன்புடன்) என்ற விறுவிறுப்பான, திகிலூட்டும், கணிக்க முடியாத தொலைக்காட்சித் தொடரைப் போல் அங்கு நிகழ்வுகள் அரங்கேறின. கதை எப்படி விரியும் என்பதை எழுத்தளார்களோ, தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ, அல்லது நடிகர்களோ அறிந்திருக்கவில்லை.

எங்களைச் சுற்றி அனைத்தும் மாறின. புதிய பணியாளர்கள், விசாரணை அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மாறிக் கொண்டிருக்க குவாண்டனாமோவின் முகமே மாறியது. முகாமின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளும் மாறிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் புதிய கைதிகளின் வருகை புதிய முகாம்கள் கட்டுமானத்திற்கு வழி வகுத்தது. வெளியுலகிற்கு காட்டுவதற்காக நடுத்தர பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கேம்ப் 4 கட்டப்பட்டது. அங்கு வசித்தவர்கள் வெள்ளை சீருடை அணிந்திருந்தனர். அவர்களை காண்பதற்கும் படம் பிடிப்பதற்கும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கேம்ப்கள் 5, 6, மற்றம் 7 ஆகியவை உயர் பாதுகாப்பு முகாம்களாக திகழ்ந்தன. சட்ட ரீதியான சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் கேம்ப் எக்கோ இருந்தது. கேம்ப் இகுவானாவில் குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

பதினான்கு வருடங்களாக ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு, ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு நாங்கள் மாறிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு இடப்பெயர்வும் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை சிதைத்தது.

2005இல் நாங்கள் பெருந்திரளாக உண்ணாவிரதம் இருந்த போது, எங்களின் உறுதியை குலைப்பதற்காக புதிய பணியாளர்களை அமெரிக்க அரசாங்கம் அனுப்பி வைத்தது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட எங்களுக்கு கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டது. ஜூன் 2006இல் எங்களின் மூன்று சகோதரர்கள் மர்மான முறையில் மரணித்தனர்.

குவாண்டனாமோவில் இருந்த நாட்கள் அதிகரிக்க, எங்களின் விலைமதிப்பற்ற உயிர்கள், எங்களின் நினைவுகள், உணர்வுகள், உறவுகள் அனைத்தும் எங்களை விட்டும் தூரமாகின.

எங்களின் சிறைவாசத்துடன் தொடர்புடைய புதிய நினைவுகள், உறவுகள், அனுபவங்களை எங்களின் மூளைகள் வடிவமைக்கத் தொடங்கின. எங்களை ஒன்றிணைத்த பொதுவான வாழ்க்கையாக குவாண்டனாமோ மாறியது. அது எங்கள் சிந்தனைகளை வடிவமைத்து, ஆளுமைகளைச் செதுக்கி, எங்கள் இருப்பின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகத் திகழ்ந்தது.

(போலி) நம்பிக்கையின் மினுமினுப்பு

குவாண்டனாமோவை மூடுவதற்கு 2009இல் அதிபர் ஒபாமா ஒரு அரசாங்க உத்தரவை கையெழுத்திட்ட போது ஒரு போலி நம்பிக்கை உதித்தது. அது உண்மையாக இருக்கும் என்ற நாங்கள் நம்ப முற்பட்டோம். ஆனால், நாங்கள் குவாண்டனாமோவில் இருந்த நாட்கள் அமெரிக்க அரசாங்கம் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தன.

பல வருடங்களாக அடிப்படை மனித உரிமைகளை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க, முகாமின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதன் மூலம் எங்களின் கவனத்தை திசை திருப்ப அமெரிக்க அரசாங்கம் முயற்சித்தது. இது குவாண்டனாமோவின் புதிய தொடக்கமாக அமைந்தது.

இறுதியாக, 2010இல் எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கப்பல் படையும் இராணுவமும் முன் வந்தன. குவாண்டனாமோவில் இருந்த நாட்கள் எங்களை வயதானவர்களாக மாற்றின, உண்ணாவிரதப் போராட்டங்கள் எங்கள் உடல்களை கடுமையாகப் பாதித்தன, சித்திரவதைகள் தழும்புகளை விட்டுச் சென்றன.

எந்தவொரு முடிவும் தெரியாத நிலையில், நாங்கள் பல இன்னல்களைச் சகித்துக் கொண்டிருந்தோம். பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எங்கள் சகோததர்களுடன் கலந்தாலோசித்தோம். வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மையினர் ஒப்புக் கொண்டனர்.

கேம்ப் 6, ஒரு கூட்டு வாழ்விடமாக (Communal Living Camp) மாற்றப்பட்டது. முகாம் வாழ்க்கை தலைகீழாக மாறியது. பாதுகாப்பு அதிகாரிகள் எங்களை மரியாதையுடன் நடத்தினர்.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி ஆங்கிலத்தை கற்கவும் கலைகளில் ஈடுபடவும் எங்கள் குடும்பத்தினருடன் காணொளி அழைப்புகள் மூலம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளாகப் பார்க்காத சக கைதிகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். இதன் மூலம் குவாண்டனாமோவில் நாங்கள் ஒன்றாகக் கழித்த நாட்களின் நினைவுகள் மீண்டும் உயிர்பெற்றன.

ஒவ்வொரு முகமும் எண்ணும் பெயரும் எங்களை ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு அல்லது தொகுதிக்கு அல்லது முகாமிற்கு கொண்டு சென்று, எங்களை சிறைவாசத்தின் ஆழத்தில் மேலும் மூழ்கடித்தன. அந்த அனுபவத்தை நாங்கள் மீட்டுப் பார்த்தோம். எங்கள் குடும்பத்தினருடன் பேசும் போது, அனைத்தும் மாறிவிட்டதை உணர்ந்தோம்.

இனியும் அறியாமையிலும் வெறுமையிலும் இருக்கக் கூடாது என்று உறுதி பூண்ட நான், இக்காலகட்டத்தில் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினேன். 2010இல் எனது முதல் புத்தகத்தின் தொடக்கப் பகுதியின் வரைவை அறபியில் எழுதி பின்னர் அதனை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தேன்.

குவாண்டனாமோவின் இந்த பொன்னான வருடங்கள் எங்கள் வாழ்க்கையின் சில முக்கிய தருணங்களாக இருந்தன. நாங்கள் சிறைகளில் இருந்தது உண்மைதான் என்றாலும் எங்களுக்கு இருந்த குறைவான வாய்ப்புகளைக் கொண்டு வாழ்ந்தோம்.

2012இல் கப்பல் படையிடம் இருந்து குவாண்டனாமோவின் கட்டுப்பாட்டை இராணுவம் பெற்றுக் கொண்டது. எங்களுக்கு இருந்த சிறு சலுகைகளும் ஜெனரல் ஜான் கெல்லிக்கு பிடிக்கவில்லை. கடும் முயற்சிகளுக்குப் பின் நாங்கள் பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டன. எங்களின் கலைப்படைப்புகள் அழிக்கப்பட்டு, உடைமைகள் கைப்பற்றப்பட்டன. இரவும் பகலும் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளானோம்.

‘உங்களுக்கு இங்கு உரிமைகள் ஏதும் கிடையாது. உங்களுக்கு வழங்கும் சலுகையை எப்போது வேண்டுமானாலும் பறித்துக் கொள்வோம்’ என்று முகாம் அலுவலர்கள் தெரிவித்தனர். எங்களின் இருப்பே சலுகையாக கருதப்பட்டதா?

சிறைவாசம் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதம் இருந்தோம். ‘சில சமயங்களில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வெற்றி பெறும் போதே நாம் (எதையாவது) இழக்க வேண்டியிருக்கும்’ என்று எனது சகோதரர்களிடம் நான் கூறினேன்.

எங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, மறு ஆய்வுக் குழுக்கள் (Periodic Review Boards) மீண்டும் கொண்டுவரப்பட்டு சிறைவாசிகள் விடுதலைக்கான ஒப்புதலை வழங்கத் தொடங்கின. கைதிகளை சந்தித்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் குவாண்டனாமோவிற்கு வந்தனர். சிறைவாசிகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர்.

எனது மறுஆய்வு மற்றும் விடுதலை தொடர்பாக உதவி செய்வதற்காக 2015இல் எனது புதிய வழக்கறிஞர் பெத் ஜேக்கப் வருகை புரிந்தார். ஒரு வகுப்பறையின் தரையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நான் அவருக்கு தினமும் கடிதங்கள் எழுதினேன். ஒவ்வொரு வாரமும் நான் எழுதிய கடிதங்களின் தொகுப்பை அவருக்கு அனுப்பினேன்.

‘எங்களை மறந்து விடாதீர்கள்’ (Don’t Forget us Here) என்ற எனது புத்தகத்தை சட்ட ரீதியான கடிதங்களாக, இவ்வாறுதான் குவாண்டாமோவில் இருந்து கடத்தினேன். 2016இல் எனது விடுதலைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு என்னை செர்பியாவிற்கு அனுப்புவதாகக் கூறினார்கள். அந்த நாட்டைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த விவகாரத்தில் எனக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை.

குவாண்டனாமோ அனுபவங்கள் குறித்து மன்சூர் எழுதிய புத்தகம். பின்னணியில் குவாண்டனாமோவில் இருந்து அவர் எழுதிய கடிதங்கள்

கடைசி இரவு

ஜூலை 10, 2016 அன்று கேம்ப் 5இன் கூண்டுகளில் எனது சகோதரர்கள், நண்பர்கள், தோழர்களுடன் எனது கடைசி இரவைக் கழித்தேன். குவாண்டனாமோவில் எனது சிறப்பு நண்பர்களான பூனைகளையும் எலிகளையும் உடும்புகளையும் நான் மறக்கவில்லை. அவற்றை கவனித்து உணவளிக்குமாறு எனது சகோதரர்களை கேட்டுக் கொண்டேன். இருள் நிறைந்த அந்த நாட்களில் எனக்கு துணையாக இருந்ததற்கும் அன்பு செலுத்தியதற்கும் எனது விலங்கு நண்பர்களுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.

ஒவ்வொரு அறையும், கதவும், முகாமும், தொகுதியும் எனக்கு அனைத்தையும் அனைவரையும் நினைவூட்டின. நாங்கள் சந்தித்த கஷ்டங்களும் சித்திரவதையும் நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் உறுதியான பிணைப்பை சிறைவாசிகளிடம் மட்டுமின்றி சில பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேம்ப் பணியாளர்களிடமும் ஏற்படுத்தின.

அந்த கூண்டுகளிலும் சிமெண்ட் அறைகளிலும் வளர்ந்த நாங்கள், பல மொழிகளில் பாடினோம், பல வடிவங்களில் ஆடினோம், கற்றுக் கொடுத்து ஒருவரையொருவர் பாதுகாத்தோம், நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் மாறினோம், கொண்டாடினோம், அழுதோம். சில பாதுகாவலர்களுடன் சண்டையிட்ட நாங்கள் சிலருடன் நண்பர்களானோம்.

எதிர்ப்பை பதிவு செய்த நாங்கள் முகாமில் அநீதிக்கு எதிராகவும் அக்கிரமத்திற்கு எதிராகவும் போராடினோம். பல முறை தோற்ற போதும் அவ்வப்போது வெற்றியும் பெற்றோம். யார் மீதும் வெறுப்பும் கசப்பும் கொள்ளாதது எங்களுக்கு அமைதியைத் தந்தது.

சந்தோஷமான, அழகான நினைவுகளும் தருணங்களும் எங்களுக்கு இருந்தன. வாழ்க்கை, அன்பு, வலி, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, மரணம்..என குவாண்டனாமோவில் எல்லாம் இருந்தன. ஜார்ஜ் புஷ்யும் டிக் சென்னியும் வேறு மாதிரியாக நினைத்த போதும் நாங்கள் உலகின் ஓர் அங்கமாவோம். குவாண்டனாமோவின் சுவர்களுக்குள் இருந்து கொண்டே அவர்களின் தவறை நிரூபித்தோம்.

‘சகோதரனே! தயவு செய்து எங்களை மறந்துவிடாதே!’. ஏனைய சிறைவாசிகள் என்னிடம் கூறய கடைசி வார்த்தைகள் இவை. நான் அவர்களை மறக்கவில்லை. குவாண்டனாமோவை மூடி, விடுதலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறைவாசிகளையும் நிரந்தர சிறைவாசிகளையும் விடுதலை செய்வதற்கு (அமெரிக்க அதிபர்) பைடனிடம் கோரிக்கை வைத்து எனது வாக்குறுதியை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்.

குவாண்டனாமோவை மூடுவதற்கான தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2022இல் 400 கிலோ மீட்டர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தற்போது குவாண்டனாமோ தடுப்பு முகாமில் 30 சிறைவாசிகள் உள்ளனர். இரண்டு தசாப்தங்களாக இந்த தடுப்பு முகாமை வாட்டி வதைக்கும் தொடர் அநீதி மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் கடுமையான நினைவூட்டலாக இவை உள்ளன.

சட்டச் சிக்கல்களில் சிக்கி அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் இங்குள்ள பெரும்பான்மையானவர்கள் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாதவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. எஞ்சியுள்ள 30 சிறைவாசிகளில் 16 நபர்கள் விடுதலைக்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள். இது அவர்களின் நீண்ட கால தடுப்புக் காவலின் ஆழமான குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.

‘அவர்கள் ஏன் இன்னும் அடைபட்டுள்ளார்கள்?’ என்று தொக்கி நிற்கும் கேள்விக்கு பல பதில்கள் உள்ளன. இவர்களை ஏற்றுக் கொள்ளும் நாடுகளை கண்டுபிடிப்பதில் அமெரிக்க அரசாங்கத்திற்கு உள்ள சிக்கல் அவர்கள் தாய்நாடு திரும்புவதில் அல்லது மீள் குடியேற்றம் செய்யப்படுவதற்கான முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்துகிறது. சிறைவாசிகளை அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்வதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் இதற்கு தீர்வு காண்பது கடினமாகியுள்ளது.

தொடர் அமெரிக்க அரசாங்கங்களின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குவாண்டாமோவின் மோசமான வரலாற்றை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

குவாண்டனாமோவை உண்மையாக மூடுவதற்கு பல முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறைவாசிகளை ஏற்றுக் கொண்டு அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தும் நாடுகளை அமெரிக்க அரசாங்கம் முதலில் அக்கறையுடன் தேட வேண்டும். இரண்டாவதாக, விசாரணையை எதிர்கொள்பவர்களுக்கு நீதி மற்றும் முறையான சட்டக் கோட்பாடுகளின் படி நியாயமான, விரைவான விசாரணை வழங்கப்பட வேண்டும்.

குவாண்டனாமோ, அநீதி மற்றும் துஷ்பிரயோகத்தின் அடையாளமாகும். மனித உரிமைகளுக்கான உலகளாவிய ஆதரவாளராக அமெரிக்காவிற்கு இருந்த நற்பெயரை இதன் இருப்பு களங்கப்படுத்தியுள்ளது. இதனால், இத்தகைய விழுமியங்களுக்காக அந்நாடு குரல் கொடுப்பது சவாலாக மாறியுள்ளது.

வரலாற்றின் கரும்புள்ளியாக குவாண்டாமோ உள்ள போதும், தீர்விற்கான சிறிய நம்பிக்கையும் இருக்கிறது. இந்த முகாமை மூடுவது வெறும் முதல் படியாக மட்டுமே அமையும். அங்கு நிகழ்த்தப்பட்ட கடந்த கால அத்துமீறல்களுக்கு அமெரிக்க அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்.

அங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளையும் துஷ்பிரயோகங்களையும் ஒப்புக் கொள்வது, அதிகாரப்பூர்வ மன்னிப்பை வழங்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவது, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை இதனை உண்மையாக மூடுவதை நோக்கிய அடிப்படை செயல்பாடுகளாக அமையும்.

22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குவாண்டாமோவில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை சரி செய்வதே இந்த கருப்பு அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு நீதமான, அறநெறியுடன் கூடிய எதிர்காலத்தை அமைப்பதற்கான ஒரே வழியாகும்.

நான் எப்படி வந்தேனோ அப்படியே குவாண்டனாமோவில் இருந்து வெளியேறினேன். முகம், கண்கள், காதுகள், வாய் ஆகியவை மூடப்பட்டு ஒரு சரக்கு விமானத்திற்கு நான் இழுத்துச் செல்லப்பட்டேன். தரைக்குப் பதிலாக இந்த முறை கட்டாய உணவூட்டும் நாற்காலியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டேன்.

அறியாத எதிர்காலத்தை நோக்கிய ஒரு புதிய பயணத்தின் இத்தொடக்கத்தை குறித்து நீங்கள் விரைவாக ஒரு புதிய புத்தகத்தில் வாசிப்பீர்கள்.

(எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி 15 வருடங்கள் குவாண்டனாமோவில் சிறை வைக்கப்பட்டிருந்த மன்சூர் அழ்ழைஃபி தற்போது எழுத்தாளராகவும் செயல்பாட்டாளராகவும் களம் காண்கிறார். 2016இல் விடுதலை செய்யப்பட்ட இவர் செர்பியாவிற்கு கொண்டு செல்லப்பட்டார். சமூக நீதி ஊடகத்திற்கான அபுனைவு எழுத்தாளர்களுக்கான ரிச்சர்ட் ஜெ. மர்கோலிஸ் விருதை 2019இல் இவர் பெற்றார். இவரின் சுயசரிதையான ‘எங்களை மறந்து விடாதீர்கள்’ (Don’t Forget us Here) 2021இல் வெளிவந்தது. குவாண்டாமோவை மூடுவதற்காக இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்).

Source: My Last Day in Guantanamo, www.newarab.com https://www.newarab.com/opinion/my-last-day-guantanamo

தமிழாக்கம்: B. ரியாஸ் அகமது

Related posts

Leave a Comment