நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் மாணவர்கள் ஏன் ஆசிரியர்களைப் பிரதிபலிப்பதில்லை?
![]()
கிரிக்கெட் போட்டிகள் வந்துவிட்டால், சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் பெயர் அல்லது படத்துடன் கூடிய டி-ஷர்ட்களை அணிந்து கொள்கிறார்கள். கால்பந்து உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் நடைபெறும் காலங்களில், தங்களுக்குப் பிடித்த அணியின் ஜெர்சியையோ அல்லது பிரபலமான வீரர்களின் பெயர் பதித்த ஆடைகளையோ அணிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இது வெறும் ரசிகத்தனம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு ஆழமான உளவியல் இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு இளைஞனும் தங்களுக்கென ஒரு முன்மாதிரியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த முன்மாதிரியைப் பிரதி எடுக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் உருவாகிறது.
ஒரு கிரிக்கெட் வீரரின் பேட்டிங் முறையைப் பார்த்து நகலெடுக்குகிறார்கள். ஒரு கால்பந்து வீரரின் விளையாட்டு நுட்பத்தைப் பார்த்து அதைப் பின்பற்றுகிறார்கள். ஒரு நடிகரின் நடனத்தைப் பார்த்து அதை அப்படியே செய்து பார்க்கிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் அடிப்படை எண்ணம் ஒன்றுதான்: நானும் அவரைப் போல ஆக வேண்டும். இந்த எண்ணம் தவறானதல்ல. உண்மையில், மனிதர்களின் வளர்ச்சியில் முன்மாதிரிகளுக்கு முக்கியமான இடம் உண்டு.
குறிப்பாக, வளரிளம் பருவத்தினர் சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும், பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவும், மதிக்கப்படவும் விரும்புகிறார்கள். அதனால், பெரும்பாலானவர்கள் தங்களைக் கவர்ந்த நபர்களை பிரதிகளாகக் கொண்டு தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், இங்கே ஒரு முக்கியமான கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. திரையில் தோன்றும் காட்சிகள், நடனங்கள், உடை அலங்காரங்கள், பேச்சு முறைகள், விளையாட்டு வீரர்களின் திறமைகள் போன்றவற்றை மிக எளிதாகப் பார்த்து அவற்றைப் பிரதிபலிக்க முயற்சி செய்யும் மாணவர்கள், ஏன் அதே ஆர்வத்துடன் தங்களது கல்வியையும் பிரதிபலிக்க முயற்சி செய்வதில்லை?
ஒரு கிரிக்கெட் வீரரையோ, ஒரு கால்பந்து வீரரையோ, ஒரு சினிமா நட்சத்திரத்தையோ பிரதிபலிக்க முயற்சி செய்யும் மாணவர்களால், தங்களுக்கு தினமும் அறிவையும் வாழ்க்கைப் பாடங்களையும் போதிக்கும் ஆசிரியரை ஏன் பிரதிபலிக்க முடியவில்லை? ஆசிரியரின் கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் ஏன் உருவாகவில்லை? அந்த முயற்சி ஏன் அவர்களிடம் இயல்பாகத் தோன்றுவதில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலை மாணவர்களிடம் மட்டுமே தேட முடியாது. நமது கல்விச் சூழலிலும், கற்பித்தல் முறைகளிலும், ஆசிரியர்–மாணவர் உறவிலும் தேட வேண்டியுள்ளது.
மாறிவிட்ட மாணவர்களின் கற்றல் உலகம்
இன்றைய மாணவர்களின் கற்றல் உலகம், முந்தைய தலைமுறையினரின் கற்றல் உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு தசாப்தத்திற்கு முன் ஆசிரியர், பாடப்புத்தகம், கரும்பலகை ஆகியவைதான் மாணவர்களின் கற்றலுக்கான முக்கிய ஆதாரங்களாக இருந்தன. ஆனால் இன்று, அந்த உலகத்துடன் YouTube, கல்விக் காணொளிகள், ஸ்மார்ட்போன், டிஜிட்டல் பாடப்புத்தகங்கள், பல்லூடக வளங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய கற்றல் வளங்களும் இணைந்துள்ளன.
இதனை வெறும் தொழில்நுட்ப மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது. இது மாணவர்களின் கற்றல் பழக்கத்திலும், கற்றல் எதிர்பார்ப்பிலும் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். பள்ளி நேரம் முடிந்த பிறகும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பாடங்களைத் தேடி கற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு கருத்து புரியவில்லை என்றால், அதையே மீண்டும் மீண்டும் பார்க்க முடிகிறது. ஒரே கருத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு முறைகளில் விளக்குவதைக் கேட்க முடிகிறது. மிக முக்கியமாக தங்களுக்குப் புரியும் வேகத்தில் கற்றுக்கொள்ள முடிகிறது.
இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், Kanvaria மற்றும் Jain (2025) ஆகியோர் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளிகளை நிரப்புவதில் YouTube கல்விக் காணொளிகளின் பங்கை ஆய்வு செய்தனர். 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய இவ்வாய்வு, YouTube கல்விக் காணொளிகள் மாணவர்கள் தங்களது சொந்த வேகத்தில் கற்கவும், கற்றல் இடைவெளிகளை நிரப்பவும், படிப்பில் எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் துணைபுரிவதாகக் கண்டறிந்தது. YouTube ஒரு துணை கற்றல் தளமாக (Complementary Learning Platform) செயல்படுகிறது என்ற கருத்தையும் அந்த ஆய்வு முன்வைத்தது.
இந்தக் கருத்தின் பொருள், மாணவர்கள் ஆசிரியர் அல்லாமல் கற்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, மாணவர்கள் கற்கும் வழிகள் மாறிவிட்டன என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. ஒரு மாணவன் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள YouTube-ல் காணொளியைத் தேடுகிறான் என்றால், அவன் தனக்குப் புரியும் வழியைத் தேடி கற்றுக்கொள்கிறான் என்பதே அதன் அர்த்தம்.
ஒரு சிறந்த ஆசிரியர், தொழில்நுட்பத்தைத் தனது போட்டியாளராகப் பார்க்க மாட்டார். அதைத் தனது கற்பித்தலுக்கான துணைக் கருவியாகப் பயன்படுத்துவார். “YouTube மாணவர்களை கெடுக்கிறது” என்று கூறுவதற்குப் பதிலாக, “YouTube-ல் மாணவர்கள் என்ன கற்கிறார்கள்?” என்று கேட்பார். “மொபைல் போனை விட்டு விலகுங்கள்” என்று மட்டும் கூறாமல், “மொபைல் போனை கற்றலுக்காக எவ்வாறு பயன்படுத்தலாம்?” என்று கற்றுக் கொடுப்பார். இதுதான் இன்றைய ஆசிரியரின் புதிய சவாலும் பொறுப்புமாகும்.
பாடப்புத்தகத்தைத் தாண்டிய கற்றல்
சிக்கலான கல்விசார் நூல்களைப் படிக்கும் போது, மாணவர்களின் புரிதலையும் கற்றலில் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்கு செயலில் ஈடுபட்ட வாசிப்பு (Active Reading) மிகவும் அவசியமானதாகும். இன்று அச்சு வடிவிலான பாடப்புத்தகங்களுடன் டிஜிட்டல் பாடப்புத்தகங்கள் மற்றும் பல்லூடக வளங்களும் இணைந்து வருகின்றன. ஸ்மார்ட்போன் அடிப்படையிலான துணைச் செயலிகள் மூலம் மாணவர்கள் பல்வேறு ஊடகங்களை இணைத்து கற்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
Prajapati மற்றும் Das (2025), ஆகியோர் இந்திய உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு முறைகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் புரிந்துகொள்ள ஸ்மார்ட்போன்கள், இணைய வளங்கள் மற்றும் கல்விக் காணொளிகள் போன்ற கூடுதல் வளங்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. குறிப்பாக, அச்சுப் பாடப்புத்தகத்துடன் ஸ்மார்ட்போன் துணைச் செயலியை இணைத்த Phygital learning முறையில், முழுமையான டிஜிட்டல் பாடப்புத்தக முறையுடன் ஒப்பிடும்போது குறைந்த அறிவுசார் சுமையும் (Cognitive Load), அதிக கற்றல் ஈடுபாடும் காணப்பட்டதுடன், மாணவர்களின் எழுத்துப் பதில்களிலும் அதிக மொழிசார் செழுமை காணப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது. பாடப்புத்தகம் மறைந்து போகவில்லை; ஆனால் பாடப்புத்தகத்தைப் பயன்படுத்தும் முறை மாறிக்கொண்டிருக்கிறது. அதேபோல, ஆசிரியரும் மறைந்து போகவில்லை; ஆனால் ஆசிரியரின் பங்கு மாறிக்கொண்டிருக்கிறது.
முன்மாதிரி ஆசிரியர்கள்
இன்றைய மாணவர்களின் முன்மாதிரிகளைத் தீர்மானிப்பதில் சமூக ஊடகங்களுக்கும் இணைய உலகத்திற்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. அவர்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சிகள், குறுகிய காணொளிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் என அவர்களின் கற்பனை உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் போட்டியில் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது.
சமகால மாணவர்களின் கற்றல் உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறோமா? மாணவர்கள் எந்த வழியில் கற்க விரும்புகிறார்கள்? எந்த வடிவிலான விளக்கம் அவர்களுக்கு எளிதாகப் புரிகிறது? எப்போது அவர்கள் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள்? எந்தச் செயல்பாடுகளில் அவர்கள் அதிகமாகப் பங்கேற்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஆசிரியரே, மாணவர்களின் உண்மையான முன்மாதிரியாக மாற முடியும்.
ஆசிரியரின் தேவை
வெறும் ஏட்டுக் கல்வி, மனப்பாடக் கல்வி, நீண்ட நேரம் ஒரே மாதிரியான சொற்பொழிவு ஆகியவற்றிற்கு பதிலீடாக இணையம் சார்ந்த மாற்று முறைகளை கையாள வேண்டிய அதே நேரத்தில் முக்கியமான விஷயத்தை மறந்துவிடக் கூடாது. தொழில்நுட்பம் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கலாம்; ஆனால், ஆசிரியரின் உறவுதான் அந்தக் கவனத்தை கற்றலாக மாற்றுகிறது. ஒரு காணொளி ஒரு கருத்தை விளக்கலாம். ஒரு செயலி ஒரு பயிற்சியை வழங்கலாம். ஒரு டிஜிட்டல் தளம் தகவலை வழங்கலாம். ஆனால், ஒரு மாணவனின் குழப்பத்தைப் புரிந்து கொண்டு, அவனது மனநிலையை அறிந்து, அவனுக்குத் தன்னம்பிக்கை அளித்து, ”உன்னால் முடியும்” என்று சொல்லக்கூடிய மனித உறவை ஆசிரியரால் மட்டுமே உருவாக்க முடியும்.
மாணவர்கள் ஆசிரியர்களை பிரதி எடுக்க வேண்டுமென்றால், முதலில் ஆசிரியர்கள் அதற்கு தகுந்த முன்மாதிரிகளாக மாற வேண்டும். ஒரு ஆசிரியர் தொடர்ந்து வாசித்தால், மாணவர்களும் வாசிப்பைக் கற்றுக் கொள்வார்கள். ஒரு ஆசிரியர் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால், மாணவர்களும் கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒரு பயணமாகப் பார்ப்பார்கள். ஒரு ஆசிரியர் கேள்விகளுக்கு மதிப்பளித்தால், மாணவர்களும் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.
ஒரு ஆசிரியர் தெரியாத ஒன்றை, தனக்குத் தெரியவில்லை என்று வெளிப்படையாகக் கூறி நாம் அனைவரும் சேர்ந்து தெரிந்து கொள்வோம் என்று சொல்லும்போது, மாணவர்களும் அறிவு என்பது எல்லையற்றது என்பதை மெல்ல மெல்ல புரிந்து கொள்வார்கள். ஒரு ஆசிரியர் புத்தகத்தைத் தாண்டிய உலகத்தை வாசித்தால், மாணவர்களும் உலகத்தை ஒரு திறந்த புத்தகமாகப் பார்க்கத் தொடங்குவார்கள். எனவே, மாணவர்களுக்கு ஆசிரியர் தாமே கற்றுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதே மிகப்பெரிய கற்பித்தலாக, முன்மாதிரியாக மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களை பிரதி எடுப்பதற்கான திறவுகோலாக அமையும்.
தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே. கற்றலை உயிர்ப்பிக்கும் சக்தி ஆசிரியரிடமே இருக்கிறது. மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது முதல் படி. அந்தக் கவனத்தை கற்றலாக மாற்றுவது அடுத்த படி. கற்றலை வாழ்க்கையுடன் இணைப்பது அதற்கும் மேலான படி. இறுதியில், மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளத் தொடங்குவதே கல்வியின் உண்மையான வெற்றி.
ஆய்வுக் குறிப்புகள்
Kanvaria, V. K., & Jain, P. (2025). YouTube educational videos in bridging the learning gaps among school students. Indian Journal of Educational Technology, 7(1), 269–276. https://reference-url-citation.invalid/4
Tanwar, P. (2017). Effectiveness of audio–video material in teaching-learning process at secondary stage. School Science, 55(4), 36–40. https://reference-url-citation.invalid/5
Prajapati, S. P., & Das, S. (2025). Understanding students’ active reading in phygital learning environments: A study of smartphone-based textbook companions in Indian classrooms. Frontiers in Education, 10, 1660133. https://doi.org/10.3389/feduc.2025.1660133 https://reference-url-citation.invalid/6

