கட்டுரைகள் குறும்பதிவுகள் 

​அமீரகத்தின் பிராந்திய அதிகாரச் செயல்திட்டமும், ‘ஃபலஸ்தீன் விடுதலை’ குறித்த கேள்வியும்

Loading

ஐக்கிய அறபு அமீரகம் (UAE) மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அமைதியை நிலைநாட்டும் ஒரு சக்தியாகச் செயல்படுகிறது என – பல அரசியல் ஆய்வாளர்கள் நம்புவதுபோல் – நம்புவது முற்றிலும் பிழையாகும்.

யமன் தொடங்கி லிபியா முதல் சூடான் வரையான நாடுகளின் உள்நாட்டு மோதல்களின் போக்கைக் கட்டுப்படுத்தும் ராணுவ, அரசியல், பொருளாதாரச் செல்வாக்குமிக்க ஒரு பிராந்திய வலையமைப்பை அமீரகம் உருவாக்கியுள்ளது. இதை அலட்சியப்படுத்துவது அறியாமையாகும்.

ஐக்கிய அறபு அமீரகத்தின் உத்தியைப் புரிந்துகொள்வதற்கு ‘ஃபலஸ்தீன் விவகாரம்’ மையப்புள்ளியாக இருக்கிறது. ஆகையால், ஸியோனிச இஸ்ரேலுடன் அமீரகம் வளர்த்துக்கொண்ட உறவை, அதன் விரிவான பிராந்தியத் திட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

​இந்தச் சூழலில்தான், இஸ்லாமிய போராட்ட இயக்கங்களையும், அரசியல் மாற்றத்தைக் கோரும் பிற வெகுஜன இயக்கங்களையும் அமீரகம் தனது மூலோபாய அச்சுறுத்தல்களாக இனங்கண்டுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்க, கொடூர அடக்குமுறைகளை ஏவும் ஆட்சியமைப்புகள், ராணுவக் குழுக்கள், அரசியல் சக்திகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பதே அதன் தொடர் எதிர்வினையாக இருந்து வருகிறது. இது ஒரு விதத்தில் இஸ்ரேலின் உத்தியாகும். எனவே, இத்தகைய உத்தி இஸ்ரேலின் பாதுகாப்புசார் நலன்களுடன் நேரடியாக ஒத்துப்போவதில் ஆச்சரியம் இல்லை.

​செப்டம்பர் 2020இல் கையெழுத்தான ‘ஆப்ரஹாம் உடன்படிக்கை’ (Abraham Accords) ஐக்கிய அறபு அமீரகத்துக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியில் அதிகாரப்பூர்வத் தூதரக உறவை நிறுவியது. காஸாவின் தொடர் இனப்படுகொலைகளைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு உறவுகள் உட்பட பொருளாதார, வியூகம்சார் ஒத்துழைப்பை விரைந்து விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் வழிகோலியது.

இஸ்ரேலுடனான இந்த இயல்புறவை அமீரகம் அமைதிக்கான ஒரு வழிமுறையாகச் சித்தரித்ததோடு, மேற்குக் கரைப் பகுதிகளை ஆக்கிரமிப்பதிலிருந்து இஸ்ரேலைத் தான் இதனூடாகத் தடுத்துவிட்டதாகவும் அது மார்தட்டியது. ஆயினும் இது அபத்தமான வெற்று முழக்கம் என்பது, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தீவிரமாக நடைபெற்றுவரும் குரூர குடியேற்ற விரிவாக்கத்தின் மூலமும், ஃபலஸ்தீனர்களின் தொடர் இன அழிப்பின் மூலமும் அம்பலமாகியுள்ளது.

ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாகக் கைவிட்ட அமீரகம், ஆக்கிரமிப்புகளுக்கும் படுகொலைகளுக்கும் மத்தியிலேயே, அறபு அரசுகளுடன் இஸ்ரேல் மேன்மேலும் ஒன்றிணைவதற்கான ஒரு நுழைவாயிலாகத் தனது இயல்புறவு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தியது.

அது எந்தக் காலத்திலும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்டத்துக்கு எந்த ஆதரவையும் வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, பிராந்திய ராஜதந்திரங்களிலிருந்து ஃபலஸ்தீன் பிரச்சினை ஒதுக்கி வைக்கப்பட்டது அமீரகத்தின் பிராந்திய உத்தியின் மையக் கருவாகும். இதன் மூலம், ‘ஃபலஸ்தீன் தனிநாடு’ குறித்த பிற அறபு அரசுகளின் போலி நிலைப்பாடும் அம்பலமாகியுள்ளது. இதற்கான சான்றுகள் தெளிவாகவே உள்ளன. ‘ஃபலஸ்தீன் தனிநாடு’ கோரிக்கை தீர்வின்றி இருக்கும் நிலையில்தான், அறபு அரசுகளிடமிருந்து தூதரக அங்கீகாரம், பொருளாதார வாய்ப்புகள், வியூகம்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றை இஸ்ரேல் பெற்றுள்ளது.

டிரம்ப் தன்னிச்சையாக உருவாக்கத் திட்டமிட்ட ‘சமாதானத்துக்கான வாரியம்’ (Board of Peace), ‘காஸா நிர்வாக வாரியம்’ (Gaza Executive Board) ஆகியவற்றில் பங்கேற்பாளராக ஆனதன் மூலம், மனிதநேய உதவிகளை வழங்குவதையும் தாண்டிய ஓர் அதிகார நிலையை அமீரகம் அடைந்துள்ளது எனலாம். அமெரிக்க ஆதரவில் ஸியோனிசப் போர்க்குற்றவாளிகளால் உருவாக்கப்படும் காஸாவை மையப்படுத்திய ‘போருக்குப் பிந்தைய ஓர் அரசியல் கட்டமைப்பில்’ இது அமீரகத்துக்கு ஓர் அதிகாரப் பங்களிப்பை அளித்தாலும், ஆக்கிரமிப்புக் குடியேற்றவாத இஸ்ரேலுடனான அதன் ‘ஒத்துழைப்பு வரலாறு’ எந்த நம்பிக்கையும் தருவதாக இல்லை. இதனால் எந்தப் பயனும் இல்லை.

மட்டுமன்றி, யமனில் உள்ளூர் ஆயுதக் குழுக்களை அமீரகம் ஆதரித்தது; தெற்கு யமனில் தனது செல்வாக்கை அது வளர்த்துக்கொண்டது.

லிபியாவில், அது கிளர்ச்சிப் படைத்தலைவரான ஃகலீஃபா ஹஃப்தாரை ஆதரித்தது; அவருக்கு ராணுவத் தளவாடங்களையும் ட்ரோன்களையும் அளித்தது.

சூடானில், போர்க்குற்றங்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டுவரும் ‘அதிவிரைவு ஆதரவுப் படைகளுடன்’ (Rapid Support Forces) அமீரக ஆதரவு பெற்ற வலையமைப்புகளுக்குத் தொடர்பிருப்பது தெளிவான சான்றுகள், நம்பகப்பூர்வச் செய்திகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சூடான் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதுடன் சூடானின் வளங்களை, குறிப்பாகத் தங்கத்தைக் கொள்ளையடிப்பதில் முன்னணியில் உள்ளது. மேலதிக விவரங்களுக்கு, இப்பேசுபொருளில் நான் பேசிய இரண்டு பாகக் காணொளிகளைப் பார்க்கவும்.

பாகம் 1https://youtu.be/zEDWX6uwmYU?si=9tEgYvKmPxOkjMMf

பாகம் 2 https://youtu.be/wzGNiTLhmfU?si=FzdltvNey-264bVd

அனைத்துக்கும் மேல், ஸியோனிச ஆக்கிரமிப்பால் பல தசாப்தங்களாக அல்லல்பட்டுவரும் ஃபலஸ்தீனர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் எள்ளளவும் ஆர்வமற்ற அறபு அரசுகளில் ஒன்றாக அமீரகம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

அமீரக ஆட்சியாளர்கள் ஃபலஸ்தீனர்களுக்கு டன் கணக்கில் நிவாரண உதவிகளை வழங்குவதாக மார்தட்டுகின்றனர். ஆனால், மனிதநேய உதவிகள் ஒருபோதும் மனிதகுல விரோதப் புவி-அரசியல் கூட்டணியை நியாயப்படுத்தாது.

​சாத்தானியக் கொடூரங்களைக் கட்டவிழ்த்து விடுவோருடன் இயல்புறவைப் பேணிக்கொண்டே, மலக்குகளின் விழுமியங்களைப் பிரகடனப்படுத்துவது அருவருக்கத்தக்க ஒரு நாடகமே அன்றி வேறல்ல. நிச்சயமாக, இத்தகைய முரண்பாடும் நயவஞ்சகமும் தீவிர பரிசீலனைக்கும் கண்டனத்திற்கும் உரியவை.

காஸாவில் மூன்று ஆண்டுகளை எட்டவுள்ள இனப்படுகொலை, ஸியோனிச இஸ்ரேலுடன் முழுமையான தூதரக, வணிக, பாதுகாப்புத் தொடர்புகளைப் பேணுவதிலிருந்து அமீரகத்தைத் தடுக்கவில்லை.

சுருங்கச் சொன்னால், ஐக்கிய அறபு அமீரகம் ஒரு ஸியோனிசக் கைக்கூலி. அது தொடர்ச்சியாக ஃபலஸ்தீனர்களின் முதுகில் குத்துவதோடு, ஸியோனிசப் போர்க் குற்றவாளிகளை எல்லா வகையிலும் அரண்செய்தும் வருகிறது.

Related posts

Leave a Comment