கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?

Loading

நம் நினைவிலிருந்து ஒருபோதும் அழியக்கூடாத சில காட்சிகள் இருக்கின்றன. அவை தார்மீகப் பொறுப்புணர்வையும் ஆன்மீக மனவலிமையையும் கோரி நிற்கின்றன.

காயமடைந்த, கொல்லப்பட்ட அல்லது பசி பட்டினியால் துடிதுடித்து மடிந்த தங்கள் குழந்தைகளின் உடல்களைக் கைகளில் ஏந்தியிருக்கும் ஃபலஸ்தீனத் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் அந்தத் துயரக் காட்சி… மருத்துவப் பணியாளர்கள் மீதும் மருத்துவமனைகளின் மீதுமான கொடூரமான குண்டுவீச்சுகள்… திட்டமிட்டே மறுக்கப்படும் உணவும் மனிதாபிமான உதவிகளும்.. இரக்கமே இல்லாமல் பச்சைக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்படுவது… ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் நாளுக்கு நாள் திட்டமிட்ட முறையில் இழிவுபடுத்தப்படுவதைத் தாங்கிக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவது… நம் நினைவில் இருந்து ஒருபோதும் அழியக் கூடாத காட்சிகள் இவை.

இவை போரினால் எதிர்பாராமல் நடந்த விபத்துகள் அல்ல. குடியேற்றவாதக் காலனியாதிக்கத்தை நிலைநிறுத்தவும் இயல்பாக்கவும், தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பைத் தொடரவும், மனித மனசாட்சி அனைத்தையும் எள்ளி நகையாடும் ஒரு கொடூரமான நிறவெறி/இனவெறிக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டு வகுக்கப்பட்ட ஒரு உத்தியின் பகுதிகளே அவை.

இத்தகைய காலக்கட்டத்தில், கோபம் ஒரு பலவீனமோ குறைபாடோ அல்ல—அது ஓர் அத்தியாவசியமான நற்பண்பாகும்.

கோபத்தைக் குறித்த பயம்

ஒடுக்குமுறையாளர்களின் மிகப்பெரிய பயம், ஆயுதங்களோ அரசியல் அழுத்தங்களோ மட்டுமல்ல; மாறாக, மிகவும் ஆழமான, விழிப்படைந்த, நீதியான ஒரு கோபத்தைக் கண்டுதான் அவர்கள் பெரிதும் பயப்படுகிறார்கள். அத்தகைய கோபத்தை அவ்வளவு எளிதாக அமைதிப்படுத்தவோ நீர்த்துப்போகச் செய்யவோ முடியாது.

தொடர்ச்சியான ஒடுக்குமுறையின் நோக்கம் — ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல, மனிதர்களை சோர்வடையச் செய்வதும் ஆகும். ஆன்மாவை மரத்துப்போகச் செய்து, உறுதியைக் குலைத்து, ஒரு காலத்தில் எவை பெரும் ஆத்திரத்தைத் தூண்டினவோ, அதே அநீதிகளுக்கு எதிராக மனிதர்களை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதும் ஒடுக்குமுறையின் நோக்கமாகும்.

ஆனால், அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இமாம் இப்னு தைமிய்யா இந்த நுட்பத்தை மிகத் தெளிவான வார்த்தைகளில் விவரித்துள்ளார். “மனிதர்கள் கோபத்தின் விரட்டியடிக்கும் ஆற்றலால் மட்டுமே ஒடுக்குமுறையிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். அதன் மூலமே நீதியும் சமத்துவமும் நிலைநாட்டப்படுகின்றன” என்று அவர் கூறுகிறார்.1

‘குவ்வா களபிய்யா தாஃபிஆ’ (القوة الغضبية الدافعة) — அதாவது நீதியான கோபத்தின் விரட்டியடிக்கும் ஆற்றல் — என்னும் இந்தக் கோட்பாடு, நீதியைப் பாதுகாக்கவும் கொடுங்கோன்மையை முறியடிக்கவும் தேவையான ஒரு தார்மீகப் பெருவிசையாகும். அது இல்லையென்றால், ஒடுக்குமுறை எந்தவொரு சவாலும் இன்றித் தொடரும்; நீதி நடைமுறை வாழ்வின் யதார்த்தமாக இல்லாமல், வெறும் தத்துவக் கோட்பாடாகவே சுருங்கிவிடும். அது இல்லையென்றால், கொடுங்கோலர்கள் எந்த எதிர்ப்புமின்றி ஆட்சி செய்வார்கள்.

இறைத்தூதரின் நெறிமுறைகளுடன் ஒத்திசைவு

‘கோபப்பட வேண்டாம் என்றுதானே இறைத்தூதர் () அறிவுரை வழங்கினார்கள்?’ என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஒரு மனிதர் இறைத்தூதர் () அவர்களிடம் வந்து அறிவுரை கேட்ட ஒரு பிரபல நிகழ்வு இருக்கிறது. அதற்கு இறைத்தூதர் () அவர்கள், “கோபப்படாதீர்கள்” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் தன் கோரிக்கையை மீண்டும் மீண்டும் கேட்டபோதும், இறைத்தூதர் () அவர்கள், “கோபப்படாதீர்கள்” என்றே தொடர்ந்து பதிலளித்தார்கள்.2

முதல் பார்வையில், இது கோபத்திற்கு முற்றிலும் எதிரானதுபோல் தோன்றலாம். ஆனால் இறைத்தூதர் () கோபத்தை அதன் ஒட்டுமொத்த வடிவத்தில் தடை செய்யவில்லை. மாறாக, ஒருவரது குணாதிசயத்தையே ஆக்கிரமித்து, அவரை அடிமைப்படுத்தும் கோபத்தைப் பற்றியே நபி () எச்சரித்தார்கள். அதாவது, புத்தியை மழுங்கடித்து, அநீதிக்கு வழிவகுக்கும் அல்லது விரக்தியாக மாற்றிவிடும் தன்னிச்சையான, சுயநலம் சார்ந்த கோபத்தையே அவர்கள் தடுத்தார்கள்.

“மல்யுத்தத்தில் பிறரை வீழ்த்துபவன் பலசாலி அல்லன்; மாறாக, கோபத்தின் போது தன்னைத் தானே கட்டுப்படுத்துபவனே உண்மையான பலசாலி ஆவான்” என்று மற்றொரு பதிவில் இறைத்தூதர் () தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.3

கோபத்தை வேரறுக்காமல், அதைத் தன்வசப்படுத்தி ஆளுமை செய்வதற்குத்தான் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  திருக்குர்ஆனே அநீதிக்கும் வரம்பு மீறலுக்கும் எதிரான இறைவனின் கோபத்தை விவரிக்கிறது.4 மேலும், இறைவனின் புனிதங்கள் மீறப்பட்டபோது இறைத்தூதர் () அவர்களும் நீதியான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.5 கோபம், அதன் சரியான வடிவத்தில் இருக்கும்போது, அது இயற்கையானது மட்டுமல்ல, மிக உன்னதமானதும் ஆகும்.

அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்ட கோபம், ஒழுங்குபடுத்தப்பட்ட கோபம், இறைவனின் உலகளாவிய விதிகளோடு தன்னை ஒத்திசைத்துக்கொள்ளும் கோபம், இந்த உலகத்தின் அதிகாரச் சமன்பாடுகளை உணர்ந்து நிதானமாகச் செயல்படும் ஒரு கோபமாகும்.

நேர்மையுடன் அநீதியை எதிர்த்தல்

நீதியான கோபம் என்பது கட்டுக்கடங்காததோ தறிகெட்டதோ அல்ல. அது அளவிடப்பட்டதும் கொள்கை ரீதியானதுமாகும்.  இழிவுகளையும் தீமையின் இயல்பாக்கத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது. அது தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ளாமல், பிறரை இழிவுபடுத்துவதை எதிர்க்கிறது. அது கொடூரமாக மாறாமல், கொடூரத்தை எதிர்க்கிறது. அது ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்பதையோ அல்லது அது தொடர்வது குறித்த உணர்வு மரத்துப் போவதையோ நிராகரிக்கிறது.

இந்த வடிவத்திலான கோபம் ஒரு மூலோபாய உத்தியாகும். அது கண்மூடித்தனமாக மோதலுக்குள் குதிக்காது, அதே நேரத்தில் நிரந்தரப் பின்வாங்கலையும் ஏற்காது. அது சரியான நேரத்தைப் பற்றிப் புரிந்துவைத்துள்ளது. தன் ஆற்றலைச் சேமித்து வைக்கிறது. நீண்ட காலத்திற்கு நம்பிக்கையைத் தக்கவைக்கிறது. இறுதியாக, எதிர்ப்பு என்பது பல வடிவங்களை எடுக்க முடியும் என்பதையும் அது அறிந்துவைத்துள்ளது.

சில நேரங்களில், அந்த எதிர்ப்பு வெளிப்படையானதாகவும் சவாலானதாகவும் இருக்க வேண்டும். சில சூழ்நிலைகளிலும் இடங்களிலும் உம்மத்தின் சில பகுதியினரின் மீது முதிர்ச்சியற்ற மோதல்கள் திணிக்கப்படலாம். மற்ற நேரங்களில், நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமது கோபம் அமைதியானதாகத் தோன்றலாம், ஆனால் அது கற்றல், ஒழுங்கமைத்தல், கல்வி புகட்டுதல் என முறையாகத் திட்டமிடப்பட்டதாகும். ஒரு மாணவருக்கு, இது எதிர்காலத் தலைமைக்கான அடித்தளமாக தன் படிப்பில் சிறந்து விளங்குவதைக் குறிக்கலாம். ஒரு பெற்றோருக்கு, தீமையையும் இழிவையும் ஒருபோதும் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளாத படியாக குழந்தைகளை வளர்ப்பதைக் குறிக்கலாம்.

இவை அனைத்தும் கண்ணியத்திற்காகவும் நீதிக்காகவும் மேற்கொள்ளப்படும் நீண்ட, பொறுமையான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆண்டுகளைக் கடந்து தாக்குப் பிடிக்கக்கூடிய அளவுக்கு நெகிழ்ச்சியான, தனக்கான தருணத்திற்காகக் காத்திருக்கக்கூடிய அளவுக்குப் பொறுமையான, அது எழும்போது வெற்றி பெறுவதை உறுதிசெய்யும் அளவுக்கு விவேகமான ஒரு கோபத்தையே நாம் விரும்புகிறோம். அது மற்றொரு ஒடுக்குமுறையாளராக உருவெடுக்கக் கூடாது. எனவே, மிதமிஞ்சிய கோபம் அல்ல, மாறாக உருத்திரிந்த கோபமே மிகப்பெரும் அபாயமாகும்.

“யார் ஒருவர் கோபமூட்டப்பட்டும் கோபமடையவில்லையோ அவர் ஒரு கழுதை; யார் ஒருவரிடம் சமாதானம் கோரப்பட்டும் அதை மறுக்கிறாரோ அவர் ஒரு ஷைத்தான்” என்ற இமாம் ஷாஃபிஈயின் ஞானமிக்க வார்த்தைகள் நமக்கு இதை நினைவூட்டுகின்றன.6

ஒடுக்குமுறைக்கு எதிராக எந்தக் கோபமும் கொள்ளாமல் இருப்பது ஒருவரது மனிதத்தன்மையை சரணடையச் செய்வதாகும். ஆனால் அதே நேரத்தில், நீதி நிலைநாட்டப்பட்ட பிறகும் சமாதானத்தை மறுப்பது கொடூரத்திற்குள் வீழ்வதாகும். கொள்கை ரீதியான எதிர்ப்பிற்கும், ஒருவருடைய சொந்த தார்மீக நேர்மையைப் பாதுகாப்பதற்கும் இடையில் ஒரு சமநிலை எட்டப்பட வேண்டும்.

மன்னிப்பும் கூட சரியான இடத்தில் வழங்கப்பட வேண்டும். தண்டனையிலிருந்து தப்பித்துக்கொண்டு, தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் ஒரு தீவிர ஒடுக்குமுறையாளரை மன்னிப்பது நற்பண்பல்ல. அது, இறையுணர்வு என்ற போர்வையில் தீமையை ஏற்றுக்கொள்வதும் கண்ணியத்தைச் சரணடையச் செய்வதுமாகும்.

நிறைவாக….

இந்தச் சோதனையான காலக்கட்டத்தில், வெறும் ஆத்திரத்தை மட்டும் கொண்டிருப்பது போதுமானதல்ல. முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கும் செய்திகளின் ஊடாக, நம்முடைய ‘ஃபித்றா’ (fitra)—அதாவது இறைவன் நமக்கு அளித்துள்ள திசைகாட்டியை —மழுங்கிப்போக நாம் அனுமதித்துவிடக் கூடாது. இந்த ஆத்திரம் நிலையான ஒன்றாக மாற்றப்பட வேண்டும். அது வெறும் எதிர்ப்பை மட்டுமல்லாமல், ஒரு மறுமலர்ச்சியையும் நோக்கியதாக அமைய வேண்டும்.

நமது இறைநம்பிக்கையில் வேரூன்றிய, நமது நெறிமுறைகளால் வழிநடத்தப்படும், கண்ணியம் என்பது சிலருக்கு மட்டுமேயான சலுகை அல்ல — அது அனைவருக்கும் உரிய உரிமை என்பதை உறுதிசெய்யும் ஓர் உலகத்தை நோக்கிய கோபமே நமக்குத் தேவை.

ஃபலஸ்தீனத்திற்கான நம் முயற்சிகள் மங்கிப்போகவோ, அல்லது நமது ஆன்மாக்கள் செயலற்ற நிலைக்குச் செல்லும் அளவுக்கு சோர்வடையவோ நாம் விட்டுவிடக் கூடாது. ஒடுக்குமுறையாளர்களின் மிகப்பெரிய பயத்தை நாம் நிஜமாக்கிக் காட்ட வேண்டும்.  நன்மைக்கான சக்தியாக விளங்கும் நீதியான கோபத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே இந்த வாழ்வில் கண்ணியம், நீதி, வெற்றிக்கான பாதையாகவும், மறுமையில் ஈடேற்றத்திற்கான வழியாகவும் அமையும்.

குறிப்புகள்:

1. இப்னு தைமிய்யா, மஜ்மு அல்ஃபதாவா, 15:435

2. ஸஹீஹுல் புஃகாரீ, எண்: 6116

3. ஸஹீஹுல் புஃகாரீ, எண்: 6114

4. எடுத்துக்காட்டாக, அல்லாஹ் கூறுகிறான்: “மேலும், ‘மூசாவே! ஒரே வகையான உணவை எங்களால் தொடர்ந்து உண்ண முடியாது. எனவே, பூமி விளைவிக்கும் கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு வகைகள், வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்காக வெளிப்படுத்துமாறு உங்கள் இறைவனிடம் வேண்டுங்கள்’ என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அதற்கு மூசா, ‘சிறந்ததற்குப் பதிலாக தாழ்ந்ததை நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா? ஏதேனும் ஒரு ஊருக்குச் செல்லுங்கள்; அங்கே நீங்கள் கேட்டவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்’ என்று அவர்களைக் கடிந்துகொண்டார். அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்ததாலும், இறைத்தூதர்களை அநியாயமாகக் கொன்றதாலும் அவர்கள் இழிவிற்கும் துயரத்திற்கும் ஆளானார்கள்; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானார்கள். இது அவர்களின் கீழ்ப்படியாமைக்கும் வரம்பு மீறல்களுக்கும் உரிய தண்டனையாகும்” (குர்ஆன் 2:61). மேலும் அவன் கூறுகிறான்: “அல்லாஹ்வுடனான உடன்படிக்கை அல்லது மக்களுடனான ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பு பெற்றாலன்றி, அவர்கள் செல்லும் இடமெல்லாம் இழிவுக்கு ஆளாவார்கள். அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததாலும், இறைத்தூதர்களை அநியாயமாகக் கொன்றதாலும் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, துயரம் என்னும் முத்திரையைப் பெற்றனர். இது அவர்களின் கீழ்ப்படியாமைக்கும் வரம்பு மீறல்களுக்கும் உரிய தண்டனையாகும்” (குர்ஆன் 3:112).

5. எடுத்துக்காட்டாக, “அல்லாஹ்வின் தூதர் () அவர்களுக்கு இரண்டு விஷயங்களுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் பாவம் ஏதுமில்லாத பட்சத்தில் எளிதான ஒன்றையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அதில் பாவம் ஏதேனும் இருந்தால், அதை நாடவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் ஒருபோதும் தமக்காகப் பழிவாங்கியதில்லை; மாறாக, அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்படும்போது மட்டுமே பழிவாங்குவார்கள். அவ்வாறு பழிவாங்குவது அல்லாஹ்வுக்காகவே இருக்கும்.” ஸஹீஹுல் புஃகாரீ, எண்: 3560

6. இமாம் ஷாஃபிஈ, ஹில்யத்துல் அவ்லியா, அபூ நுஅய்ம், 9:143

(Source: We won’t back down: When righteous anger becomes a moral duty, Dr. Hatem Al Haj, yaqeeninstitute.org)

(தமிழில்: B. ரியாஸ் அகமது)

Related posts

One Thought to “நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?”

  1. Kathar Gani

    நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?

    கோபம் குறித்து நாம் கொண்டிருக்கும் வழக்கமான புரிதல்களைத் தாண்டி, கோபத்தின் ஆழமான உளவியல், சமூக மற்றும் தார்மீக பரிமாணங்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கட்டுரையாக இது அமைந்துள்ளது.

    கோபப்படுவது இஸ்லாம் அனுமதித்த ஒன்றா?
    அனுமதித்திருந்தால், எந்தச் சூழலில் கோபப்பட வேண்டும்? எந்த அளவிற்கு கோபப்பட வேண்டும்? எதற்காகக் கோபப்பட வேண்டும்?
    என்பதற்கான ஆதாரப்பூர்வமான விளக்கங்களை மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இக்கட்டுரை முன்வைக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், ‘கோபம் என்றால் என்ன?’ என்பதையும் மிகத் துல்லியமாக வரையறுக்கிறது.

    //நீதியான கோபம் என்பது கட்டுக்கடங்காததோ, தறிகெட்டதோ அல்ல. அது அளவிடப்பட்டதும், கொள்கை ரீதியானதுமாகும். இழிவுகளையும் தீமையின் இயல்பாக்கத்தையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது. அது தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ளாமல், பிறரை இழிவுபடுத்துவதை எதிர்க்கிறது. அது கொடூரமாக மாறாமல், கொடூரத்தை எதிர்க்கிறது. அது ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதையோ, அது தொடர்வது குறித்த உணர்வு மரத்துப்போவதையோ நிராகரிக்கிறது.//

    இந்த வரிகள், கோபத்திற்கும் வன்முறைக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாட்டை நமக்கு உணர்த்துகின்றன.

    நீதிக்காக எழும் கோபம் என்பது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல. அது அநீதிக்கு எதிரான மனசாட்சியின் விழிப்புணர்வு.
    ஒரு மனிதன் தன்னிடம் நிகழும் அநீதிக்காக மட்டுமல்லாமல், மற்றொரு மனிதனுக்கு நிகழும் அநீதியைக் கண்டும் கோபப்படும்போது, அந்தக் கோபம் மனிதநேயத்தின் உயர்ந்த வெளிப்பாடாகிறது.

    அதனால்தான் மிக முக்கியமான கேள்வி ஒன்று நம்முன் எழுகிறது:

    எந்த இடத்தில் கோபப்படுவது ஒரு மனிதநேயப் பண்பாளரின் தார்மீகக் கடமையாகிறது?

    அநீதியைப் பார்த்தும் அமைதியாக இருப்பதா?
    ஒடுக்குமுறையைப் பார்த்தும் மௌனம் காப்பதா?
    இழிவுபடுத்தப்படுபவர்களைப் பார்த்தும் உணர்வற்றவர்களாகக் கடந்து செல்வதா?
    அல்லது, அநீதிக்கு எதிராக நமது மனசாட்சியின் குரலை எழுப்புவதா?

    அதே நேரத்தில், நீதியான கோபத்திற்கும் தனிப்பட்ட மன இச்சைக்கும் இடையிலான எல்லை எங்கே இருக்கிறது? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

    நமது கோபம் உண்மையிலேயே நீதிக்காகவா?
    அல்லது நமது தனிப்பட்ட விருப்பு–வெறுப்புகளுக்காகவா?

    நமது கோபம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவா இருக்கிறது?
    அல்லது நமது அகந்தையின் வெளிப்பாடாகவா இருக்கிறது?

    நமது கோபம் தீமையை எதிர்க்கிறதா?
    அல்லது இன்னொரு தீமையை உருவாக்குகிறதா?

    நமது கோபம் மனித மாண்பைக் காக்கிறதா?
    அல்லது பிறரை இழிவுபடுத்துவதில் முடிகிறதா?

    இத்தகைய மிக முக்கியமான கேள்விகளை நம் மனசாட்சியின் முன் நிறுத்தி, நாம் எந்த வகையான கோபத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்? என்பதை இக்கட்டுரை ஆழமாகப் பரிசீலிக்கச் செய்கிறது.

    வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், மனிதநேயத்திலிருந்து பிறந்த நீதியான கோபம் பல்வேறு சமூக மாற்றங்களுக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கும் அடித்தளமாக இருந்திருப்பதை நாம் காண முடியும். அடிமைத்தனத்திற்கு எதிராக எழுந்த குரல்களும், இனவெறிக்கு எதிரான போராட்டங்களும், பெண்களின் உரிமைக்கான இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும்—அனைத்தும் ஏதோ ஒரு கட்டத்தில் “இது அநீதி; இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்ற மனித மனத்தின் நீதியான கோபத்திலிருந்தே பிறந்தவை.

    ஆனால் அந்தக் கோபம் வெறுப்பாக மாறாதபோதுதான் அது மனிதநேயமாகிறது.
    அது வன்முறையாக மாறாதபோதுதான் அது நீதிக்கான போராட்டமாகிறது.
    அது தனிமனித பழிவாங்கலாக மாறாதபோதுதான் அது தார்மீகக் கடமையாகிறது.

    எனவே, நீதியான கோபம் என்பது கோபப்படுவதற்கான உரிமை மட்டுமல்ல; எப்போது கோபப்பட வேண்டும், எதற்காகக் கோபப்பட வேண்டும், எவ்வளவு கோபப்பட வேண்டும், எவ்வாறு அந்தக் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கான பொறுப்பும்கூட ஆகும்.

    இன்றைய சூழலில், அநீதிகள் நம்மைச் சுற்றி நிகழும்போது நமது கோபத்தை மழுங்கடித்து மௌனமாக வாழ்கிறோமா?
    அல்லது நமது மன இச்சைகளையும் தனிப்பட்ட விருப்பு–வெறுப்புகளையும் “நீதியான கோபம்” என்ற பெயரில் நியாயப்படுத்திக்கொள்கிறோமா?

    இந்த இரண்டிற்கும் இடையிலான மிக நுணுக்கமான வேறுபாட்டை இக்கட்டுரை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கிறது.

    நீதிக்காகக் கோபப்படுவது மனிதநேயம்.
    அநீதியை இயல்பாக ஏற்றுக்கொள்வது மனிதநேயத்தின் வீழ்ச்சி.
    ஆனால் நீதியின் பெயரில் அநீதியைச் செய்வதும் அதே அளவிற்கு ஆபத்தானது.

    எனவே, நமது கோபம் யாருக்காக? எதற்காக? யாருக்கு எதிராக? எந்த அளவில்? எந்த நோக்கத்துடன்? என்ற கேள்விகளை ஒவ்வொரு முறையும் நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.

    அந்த வகையில், கோபத்தை வெறுமனே ஒரு உணர்ச்சியாக அல்லாமல், மனிதநேயம், நீதி, மனசாட்சி மற்றும் தார்மீகப் பொறுப்பு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் அணுகும் இந்தக் கட்டுரை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான சிந்தனைப் பதிவு.

    ஷா. காதர் கனி
    பார்த்திபனூர்

Leave a Comment