கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் இஸ்லாத்தை நோக்கிய பெருந்திரள் மதமாற்றங்கள்
ஒரு வரலாற்றுப் பார்வை

Loading

ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் தங்களது ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஸ்திரப்படுத்திக்கொண்டதும் அவர்கள் செய்த முதல் வேலை, பெரும்பான்மையினராகவுள்ள இந்துச் சமுதாயத்தை பல பிரிவுகளாகப் பிரித்துவைக்கும் பணியை முழுமூச்சுடன் மேற்கொண்டதுதான். பிராமணர்களின் ஆதிக்கத்தில்தான் ஹிந்து மதம் அதுவரை இருந்துவந்தது. ஹிந்துப் பெருங்குடி மக்களும் பிராமணர்களின் கட்டுப்பாட்டின கீழேயே இருந்துவந்தனர். அவர்கள் சொல்லி வந்ததைத்தான் வேதவாக்காக நம்பி நடந்துவந்தனர். இந்நாட்டை எண்ணூறு ஆண்டுகள் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் ஆண்டுவந்தபோதிலும், அவர்கள் ஹிந்துப் பெருங்குடி மக்களின் மார்க்க விவகாரங்களில் தலையிட்டதில்லை; அவர்களது மதங்களில் குறுக்கிட்டதில்லை. அம்மக்களை தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துவைக்க எண்ணியதில்லை; முயற்சித்ததில்லை. பிராமணர்களின் மேலாதிக்கத்தில் ஹிந்து மதம் இருந்துவந்ததில் அம்மன்னர்கள் தலையிட்டதில்லை.

ராஜ தந்திரத்தில் சாணக்கியர்கள் எனப் பெயர் பெற்ற ஆங்கிலேயர்கள், ஹிந்துக்களை பல பிரிவுகளாக, இனங்களாகப் பிரித்துவைத்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்துவதிலேயே ஆரம்பத்தில் இருந்து கண்ணுங்கருத்துமாக இருந்தனர். பிராமணர்கள், பிராமணர் அல்லாதார், மேல்ஜாதியினர், கீழ் ஜாதியினர், தீண்டப்படாதார் என ஒவ்வொரு ஜாதியினரையும் தனிமைப்படுத்துவதற்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் முயற்சித்து வந்தனர். முதன்முதலில், ஆங்கிலேயர்களுக்கு தங்களது பட்டாளத்தில் சிப்பாய்களாகப் பணிபுரிய ஆட்கள் தேவைப்பட்டார்கள். கீழ் ஜாதியினர், தீண்டப்படாதவர்கள் போன்றவர்களை ஆங்கில ராணுவத்தில் சேர்த்து அவர்களுக்கு ஆங்கிலேயர்கள் பயிற்சி அளித்தனர்; அவர்களைப் படிக்க வைத்தனர்; அவர்களுக்கு சலுகைகள் பலவும் செய்தனர்.

குறிப்பாக தென்னிந்தியாவில்தான், பிரிட்டிஷ் ராணுவத்திற்கு இந்திய சிப்பாய்களை பிரிட்டிஷ் அரசாங்கம் அதிக அளவில் திரட்டியது. சமுதாயத்தில் மிகவும் கீழான நிலையில் இருந்த மக்களை பிரிட்டிஷார் உயர்த்திவிட்டதல்லாமல், அவர்களது வரலாறு தனியானது, உயர்வானது, அவர்கள் தனி இனத்தவர், அவர்களது மொழி, கலை, கலாச்சாரம் எல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டன. அவர்களது பழம்பெருமைகள் மறைக்கப்பட்டுவிட்டன, மூழ்கடிக்கப்பட்டுவிட்டன என்பன போன்ற பிரச்சாரங்களில் நேரடியாகவும் மறைமுகவும் ஆட்சியாளர்கள் இறங்கினார்கள்.

பாரம்பரியப் பெருமையைத் தொட்டுவிட்டதுடன், தூண்டிவிட்டதுடன், திராவிட இனமக்களில் அறிவார்ந்தவர்கள் உஷாராகிக்கொண்டனர். தங்களது மொழி கலை, கலாச்சாரம், இலக்கியங்கள் போன்றவற்றை புதிய கண்ணோட்டத்துடன் புரட்டிப்பார்க்க ஆரம்பித்தனர். இதை ஆட்சியாளர்களும் ஊக்குவித்தனர். இந்தியாவின் இதர பாகங்களில் இந்த ராஜதந்திரம் உடனடியாகப் பலன்கொடுக்காவிட்டாலும், தமிழ்நாட்டில் இக்கொள்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது. பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற பாகுபாடு விரிவடைந்தது; வலுப்பெற்றது; ஒரு இயக்கமாகவே அது உருப்பெற்றுவிட்டது. சுயமரியாதை இயக்கங்கள் திராவிட இன மக்களிடம் சட்டெனப் பிடித்துக்கொண்டது; வேரூன்ற ஆரம்பித்துவிட்டது. மதறாஸ் ராஜதானியில் 1920-35க்கும் இடைப்பட்ட காலத்தில், மாகாண ஆட்சியையே பிராமணர் அல்லாதார் கைப்பற்றி நடத்தும் அளவுக்கு அந்த இயக்கம் வலுத்துவிட்டது; வளர்ந்துவிட்டது.

பிராமணர் அல்லாதாரிடம் ஆட்சிப் பொறுப்பு சென்றுவிட்டதைப் பார்த்த பிராமணர்கள், இந்நாட்டிற்கு சுயாட்சியே தேவையில்லை, பிரிட்டிஷ் ஆட்சியே நீடிக்கட்டும் என்றுகூட சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. சைமன் கமிஷன் 1928ஆம் ஆண்டு இந்தியா வந்தபொழுது அதன் முன்னர் சாட்சி சொன்ன பிராமணப் பிரமுகர்கள் மேற்கூறிய கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். பெரியார் ஈ.வே.ரா. அவர்களது வரலாற்றை ‘தமிழர் தலைவர்’ என்ற தலைப்பில் சிதம்பரனார் என்பவர் நூலாக எழுதியிருக்கிறார். ஈரோடு குடியரசு பதிப்பகத்தால் அது வெளியிடப்பட்டது. அந்நூலில் 118, 119ம் பக்கங்களில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:

சுய மரியாதை இயக்கத்தின்மூலம் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி பெற்றது கண்டு வைதீக பிராமணர்களும் தேசீய பிராமணர்களும் திடுக்குற்றனர். எங்களுக்கு சுயராஜ்ஜியம் வேண்டாம், வெள்ளைக்காரனே இருக்க வேண்டும் என்று சொல்லவும் தொடங்கிவிட்டனர். 1929ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் நாள் திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுய மரியாதை மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. அம் மாநாட்டை நமது மகாண மந்திரியாக இருந்த எஸ்.குமாரசாமி ரெட்டியார் திறந்துவைத்தார். அச்சமயம் இச்செய்தியைத் தெளிவாக விளக்கியுள்ளார். அது வருமாறு:

“நம்மியக்கத்தைக் கண்டு பார்ப்பனர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதற்கு சைமன் கமிஷன் விசாரணையில் பார்ப்பனர் கொடுத்த சாட்சியமே போதுமானது. அதாவது தேசீய பார்ப்பனரும் வருணாசிரமப் பார்ப்பனருமாகிய ஒரு பிரபல பார்ப்பனர் சைமன் கமிஷனிடத்தில் சாட்சியம் கொடுக்கும்பொழுது ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமைப் பதவிகளாகிய ஜில்லா போர்டு தலைவர் முதலிய பதவிகளை வகிக்கத் தகுந்த இந்தியர் நமது நாட்டில் இல்லையென்றும், இந்தியர்கள் சுய ராஜ்ஜியத்திற்குத் தகுதியுடையவர்கள் அல்லயென்றும் என் முன்னாலேயே எடுத்துச் சொன்னார்.

நான் அவரை “இது உம்முடைய அபிப்ராயமா அல்லது எல்லா பார்ப்பனர்களுடைய அபிப்பிராயமா?” என்று கேட்டேன். அவர் சற்றும் வெட்கமின்றி, “இதுவே இந்நாட்டு எல்லா பார்ப்பனர்களுடையவும் அபிப்பிராயம்” என்று சொன்னார். நான் “நீங்கள் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்தீர்களே, அப்போது தகுதியுடையவர்களாக இருந்தீர்களா, தகுதியில்லாதவர்களாக இருந்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

அப்போது திரு. சைமன் அவர்கள், நண்பர் மீது அனுதாபப்பட்டு, “போதும் விட்டு விடுங்கள்” என்றும், “அவரது அபிப்பிராயம் விளங்கிக்கொண்டது” என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார்… சுயராஜ்ஜியமே வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு அவர்களைக் கொண்டு வந்து விட்டதற்குக் காரணம் நமது சுயமரியாதை இயக்கமேயாகும்.”

இவ்வாறு ‘தமிழர் தலைவர்’ என்ற நூலில் சிதம்பரனார் சித்தரித்துள்ளார்:

தாமிரபரணி ஆற்றங்கரையில் வா.வே.சு. அய்யர் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரமத்தில் பிராமணப் பையன்கள் தனியாகவும், சூத்திரப்பையன்கள் தனியாகவும் உணவருந்துவதைக் கண்ட பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்தே ராஜினாமா செய்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளலானார். பார்ப்பனீய மேலாதிக்கத்தை எதிர்த்து அவர் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்யலானார். அது மட்டுமல்ல, ஹிந்து மதத்தை விட்டே கீழ் ஜாதியினரையும் தாழ்த்தப்பட்டவர்களையும் வெளியேறி இஸ்லாம், கிருஸ்தவம் போன்ற மார்க்கங்களில் போய்ச் சேர்ந்துவிடும்படி அவர் பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்தார். 1925ம் ஆண்டு முதலே இத்தகைய பிரச்சாரத்தை ஈ.வே.ரா. பெரியார் தமிழ்நாட்டில் துவங்கிவிட்டார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்களிலும் இப்பிரச்சாரத்தை அவர் முடுக்கிவிட்டிருக்கிறார். ‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்ற நூலிலிருந்து இவ்வுண்மை புலப்படுகிறது.

“மலையாளத்திலும் (திருவிதாங்கூர், கொச்சியிலும்) 1924 முதல் 34 வரை பிரச்சாரம் செய்து மலையாள ஈழவர்களையும், மற்றும் தீண்டப்படாத மக்கள் என்பவர்களையும் மத மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தேன். இவர்கள் ஒப்புக்கொண்டு தங்கள் மாநாட்டில் தீர்மானங்கள் செய்து மொத்தத்தில் சுமார் 600, 700 பேர்களும் இஸ்லாத்தைத் தழுவியதுடன் அவர்கள் இழிவுகள் சிறிது சிறிதாக நீக்கப்பட்டு அவர்களது உரிமைகள் இன்று வழங்கப்பட்டுத் தீர வேண்டிய அளவுக்கு வெற்றி ஏற்பட்டுவிட்டது. திருவனந்தபுரம் ஆலயப் பிரவேசம், கொச்சி (எண்ணிக்கைக்கு ஏற்ற) வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதனால்? இஸ்லாத்தாலா? இந்து தர்மத்தாலா?

சென்னை சட்டசபையில் ஆலயப் பிரவேச மசோதாவைப் பிரரேபித்த பார்ப்பனராகிய டாக்டர் T.S.S. ராஜன் என்ன சொல்லிப் பிரரேபித்தார்? இந்து சமுதாயம் நாளுக்குநாள் குறைந்து பலவீனமடைந்து போகாமல் இருப்பதற்கு (இந்து தர்மத்தைக் காப்பதற்கு) ஆக இந்த ஆலயப் பிரவேச மசோதாவைப் பிரரேபிக்கிறேன்” என்று சொன்னாரே ஒழிய, மக்களுக்கு கடவுள் தரிசனம், கடவுள் பிரார்த்தனை, கடவுள் பிரசாதம் கிடைத்து சீக்கிரம் மோட்சம் கிடைக்க வேண்டுமென்றோ, மக்கள் பக்தியால் பாவம் மன்னிக்கப்பட்டு மோட்சத்திற்குப் போக வேண்டுமென்பதற்காகவோ பிரரேபிக்கிறேன் என்று சொல்லவில்லையே! …” (பக்கங்கள் 31, 32)

ஈரோட்டிலிருந்து வெளிவந்த ‘குடியரசு’ பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்த ஈ.வே.ரா. பெரியாரின் சொற்பொழிவுகளில், மேற்கூறிய கருத்துகளைத் தாங்கிய வாசகங்களே அதிகமதிகம் காணப்பட்டன. அப்பத்திரிகையைத் தொடர்ந்து படித்துவந்திருப்பவர்கள் இப்போக்கை கவனித்திருக்கலாம். 1947ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி திருச்சி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், ‘இன இழிவு நீங்கவேண்டுமானால் கீழ் ஜாதியினர் மதம் மாறியே தீரவேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தியே ஈ.வே.ரா. பெரியார் சொற்பொழிவாற்றியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிலைபெற்ற பின்னரே, தீண்டப்படாத மக்களுக்கு தாராளமாகக் கல்வி அறிவு கிடைக்கவழி வகுக்கப்பட்டது. பொருளாதாரத்தில் அவர்களை கைதூக்கிவிடவும் ஆங்கில ஆட்சியாளர்கள் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்துடன், அந்தச் சமுதாயம் அரசியல் துறையிலும் செல்வாக்குப் பெற வேண்டும் என்ற தூரநோக்குடன், தீண்டப்படாதவர்களுக்கு தேர்தல் முறையில் ‘தனித்தொகுதி’ கொடுக்கவும் அந்த சர்க்கார் முன்வந்தது. 1930-32ம் ஆண்டுகளுக்கிடையில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுகளின்போது, டாக்டர் அம்பேத்கர் இந்த சலுகை வேண்டுமென்றுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார். ‘தனித்தொகுதி’ மூலம் தீண்டப்படாதவர்களிடையே தேர்தல் நடத்தினால்தான், அச்சமுதாயத்தின் உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; அப்படிப்பட்ட பிரதிநிதிகள் மூலமே இந்தச் சமுதாயம் அரசியல் துறையில் உண்மையான முன்னேற்றம் காண முடியும் என்றும் லண்டன் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கார் முழக்கமிட்டார்.

அவரது கோரிக்கையை ஏற்று பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டப்படாதவர்களுக்கு தனித்தொகுதி தேர்தல் முறையை வழங்க முன்வந்தது. 1932ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதியன்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டனால்டு அளித்த ‘வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்ப்பில்’ (Communal Award) இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், போன்றோருக்கு தனித்தொகுதி முறை வழங்கப்பட்டிருந்ததுடன், தீண்டப்படாதவர்களுக்கும் இத்தீர்ப்பு மூலம் தனித்தொகுதி வழங்கப்பட்டிருந்தது. இம்முறை மட்டும் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமானால், தீண்டப்படாதவர்களின் அரசியல் முன்னேற்றம் அபரிமிதமாக வளர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால், தீண்டப்படாதவர்களுக்கு தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்று காந்திஜீ அவர்கள் ஒரே பிடிவாதமாக இருந்தார். அதற்காக அவர் பூனா நகரில் சாகும்வரை உண்ணாவிரதமும் இருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இந்தியத் தலைவர்கள் பலரும் டாக்டர் அம்பேத்கரை அணுகி, தனித்தொகுதி கோரிக்கையைக் கைவிடும்படி வற்புறுத்தினார்கள். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளுக்குள் சிக்கிக்கொண்ட டாக்டர் அம்பேத்கர், காந்திஜீயின் விருப்பத்திற்கு இணங்க வேண்டியதாயிற்று. 1932ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதியன்று பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிரகாரம், தீண்டப்படாதவர்களுக்காகத் தனித்தொகுதி என்பதை இனி வற்புறுத்துவதில்லை என்று டாக்டர் அம்பேத்கர் ஒப்புக்கொண்டார். தனித்தொகுதிக்குப் பதிலாக ‘ரிசர்வேஷன்’ (தொகுதி ஒதுக்கீடு) அச்சமுதாய மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது பூனா ஒப்பந்தத்தின் பிரதான அம்சமாகும்.

டாக்டர் அம்பேத்கர், நிர்பந்தம் காரணமாக பூனா ஒப்பந்தத்திற்கு 1932ம் ஆண்டில் ஒத்துக்கொண்டார் என்ற போதிலும், ஒரு உண்மையை அவர் பரிபூரணமாகப் புரிந்துகொண்டார். தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் துறையில் முன்னேறி ஆட்சிப் பொறுப்புகளில் சரிநிகர் சமானமாக அமருவதை மேல்ஜாதியினர் விரும்பவில்லை என்பதை அவர் உணரலானார். ஏதாவது ஒரு வகையில் முட்டுக் கட்டைகளைப் போட்டு, இப்பாமர மக்களை மட்டந்தட்டியே வைக்க வேண்டும் என்ற அந்தரங்க எண்ணம் மேல்வகுப்பாரிடம் குவிந்துகிடக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டார்; உணர்ந்துகொண்டார். அவரது தன்மான உணர்வு பீறிட்டு எழுந்தது.

1932க்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரின் சிந்தனையில் புரட்சிகரமான மாற்றங்கள் தென்படலாயின. தாழ்த்தப்பட்ட மக்களை ஹிந்து மதத்திலிருந்து வெளியேறிவிடும்படி அவர் வெளிப்படையாகவே பேசலானார். இஸ்லாத்தில் போய்ச் சேருங்கள், கிருஸ்துவ மார்க்கத்தில் போய்ச் சேருங்கள், சீக்கிய மதத்தையாவது தழுவிக்கொள்ளுங்கள், எப்படியிருந்தபோதிலும் ஹிந்து மதத்தில் மட்டும் இனியும் நீடித்திருந்து சிறுமைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் எனத் தமது மக்களுக்கு அவர் அறிவுரை புகலலானார்; தாமும் மதம் மாறப் போவதாகவும், தாம் ஒருபொழுதும் ஹிந்துவாக இறக்கப்போவதில்லை என்றும் அவர் வீர முழக்கம் செய்தார். அவ்வளவு தூரம் அவர் மனம் வெதும்பிப் போயிருந்தார்.

டாக்டர் அம்பேத்கரின் சொற்பொழிவுகளையும் எழுத்தோவியங்களையும் ஒன்றுதிரட்டி மஹாராஷ்டிர மாநில அரசு ‘லோக ராஜ்யா’ (Loka Rajya) என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதியன்று, அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி இந்நூல் அந்த மாநில சர்க்காரால் வெளியிடப்பட்டது. நாஸிக் மாவட்டம் யவ்லா என்ற ஊரில் 1935ம் ஆண்டும், பம்பாய் நகரில் 1936ம் ஆண்டு மே மாதத்திலும் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய சொற்பொழிவுகளும் அந்நூலில் அடங்கி இருக்கின்றன. அச்சொற்பொழிவுகளில் அவர் உதிர்த்த கருத்துகளில் சிலவற்றை நினைவுகூர்வது பொருத்தமானதாகும்.

“சிறு குழந்தைகள் நடத்தும் கண்ணாமூச்சி விளையாட்டல்ல மத மாற்றம். கேளிக்கைக்காக நடத்தப்படும் விஷயமுமல்ல இது. மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றியது மத மாற்றம். பயணம் புறப்படும் முன் படகோட்டி எவ்வாறு தகுந்த ஆயத்தங்கள் செய்து கொள்கிறானோ, அதுபோல நாமும் மத மாற்றத்திற்கு ஆயத்தங்கள் செய்துகொள்ள வேண்டும்; தயாராகிக்கொள்ள வேண்டும்; மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

“…ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இதர சமுதாயங்களுடன் நீங்கள் நெருக்கமாக ஒன்றிவிடும்பொழுதுதான், அவர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் மற்றொரு மதத்தை ஏற்றுக்கொள்ளும்பொழுதுதான், பிற சமுதாயங்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது; நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? தற்போதைய மதத்தை விட்டு நீங்கள் வெளியேறிவிட பிற சமுதாயங்களுடன் நீங்கள் ஒன்றிவிட வேண்டும்; ஐக்கியமாகிவிட வேண்டும்; சங்கமமாகிவிட வேண்டும் என்பதுதானே! அப்படிச் செய்யாது, நீங்கள் பலம் பெறவே முடியாது…

“ஜாதியையும் தீண்டாமையையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டுமென்றால், மதம் மாறியே ஆக வேண்டும். அது ஒன்றே மருந்து; அருமருந்து. இந்த மருந்தைத் தவிர இந்த நோய்க்கு வேறு மருந்தே கிடையாது. உங்களை முஸ்லிம் என்று அழைத்துக்கொள்ளுங்கள்; கிருஸ்தவன் என்று அழைத்துக்கொள்ளுங்கள்; சீக்கியன் என்று அழைத்துக்கொள்ளுங்கள்; புத்தன் என்று அழைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பெயரை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்; முஸ்லிம்களையும் கிருஸ்தவர்களையும் தங்களுக்குச் சமமானவர்கள் என ஹிந்துக்கள் பாவிக்கிறார்கள்; மதிக்கிறார்கள். எனவே நாமும் மதிக்கப்பட வேண்டுமானால், மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே! சமத்துவம் எவ்வளவு இலகுவான வழியில் நம்மை வந்து அடைகிறது பார்த்தீர்களா?

“இன்றைய தினம் முஸ்லிம்களாக, கிருஸ்துவர்களாக, சீக்கியர்களாக இருப்பவர்கள் யார்? இவர்களுடைய மூலம் என்ன? அவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஹிந்துக்களாக இருந்தவர்கள்தான். அதிலும் தீண்டப்படாதவர்களாக, கீழ் ஜாதியினராக இருந்தவர்கள்தான். இன்று அவர்கள் சம அந்தஸ்து பெற்ற மக்களாக வாழ்கிறார்கள்.

“பூனா ஒப்பந்தம் சாசுவதமானதல்ல; நிரந்தரமானதல்ல. ஆங்கிலேயர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்ப்பை (Communal Award) அளித்தபொழுது, இது 20 ஆண்டு காலத்திற்குப் பொருந்தும் என்றுதான் அறிவித்தார்கள். எனவே, எதுவும் சாசுவதமானதல்ல. பூனா ஒப்பந்தமும் மாற்றியமைக்கப்பட வேண்டிய ஒன்றே.

“மதம் மாறினால் உங்களுடைய அரசியல் உரிமைகள் பறிபோய்விடும் என்று பயப்படுகிறீர்களா? நீங்கள் முஸ்லிமாக மாறிவிடும்பொழுது ஏனைய முஸ்லிம்களுக்குரிய உரிமைகள் உங்களுக்கும் கிடைக்கின்றன. நீங்கள் கிருஸ்துவர்களாக மாறிவிடும்பொழுது, கிருஸ்துவர்களுக்குரிய உரிமைகள் உங்களை வந்து அடைகின்றன. நீங்கள் சீக்கியர்களாகிவிடும்பொழுதும் இதேநிலைதான். பின் ஏன் பயப்படுகிறீர்கள்?

“நீங்கள் பலம் பொருந்தியவர்கள் ஆக வேண்டுமானால், நீங்கள் உங்களை ஸ்தாபன ரீதியாக அமைத்துக்கொள்ள வேண்டுமானால், சமமானவர்களாக நீங்கள் மதிக்கப்பட வேண்டுமானால், சுதந்திர புருஷர்களாக நீங்கள் திகழ வேண்டுமானால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமானால் மதம் மாறுவது ஒன்றே வழி. அதை விடுத்து வேறு வழியில்லை …”

(ஆதாரம்: லோக ராஜ்யா, மஹாராஷ்டிர மாநில அரசு வெளியீடு)

டாக்டர் அம்பேத்கரின் இத்தகைய பேச்சுகள் நாடெங்கிலும் பரவலாயின. குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் வாழ்ந்த மக்களை இப்பேச்சுகள் சிந்திக்கத் தூண்டின. மத்திய கேரளாவில் சேர்தலை பகுதியில் வாழ்ந்த ‘தீயா’ (Thiya) ஜாதி மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுவது என முடிவுசெய்தனர். 3-1-86ம் தேதியிட்ட ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில் “50 ஆண்டுகளுக்கு முன்” என்ற பெட்டிச் செய்தியில் இது குறித்த விபரங்கள் காணப்படுகின்றன. திரு V.K வேலாயுதம் தலைமையில் அகில கேரள தீயா இளைஞர் லீக், சேர்தலையில் 1936 ஜனவரி மூன்றாம் தேதி கூடியது. இம்மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கர் பம்பாயிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அக்கூட்டத்தில் ஹிந்து மதத்தை விட்டு தீயா ஜாதியினர் வெளியேறிவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ‘ஹிந்து’ நாளிதழ் பெட்டிச் செய்தியிலிருந்து அறியமுடிகிறது. டாக்டர் அம்பேத்கரின் அறவுரை வீண்போகவில்லை என்று இதிலிருந்து தெரியவருகிறது.

1930 முதல் 1935ம் ஆண்டுக்கிடையில் டாக்டர் அம்பேத்கர் மேலே கூறிய பாணியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் ஈ.வே.ரா. பெரியார் அதற்கு முன்னரே இம்மாதிரிப் பிரச்சாரங்களில் வெகுதூரம் சென்றுவிட்டிருந்தார். 18-3-1947ம் தேதி திருச்சியில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் அவர் உரையாற்றும்பொழுது, “இழிவு நீங்க இஸ்லாம் என்ற மந்திரம்தான் நம்மை மனிதராக்க முடியும். இதை நான் இன்று சொல்லவில்லை; நேற்று சொல்லவில்லை. 1919, 1920 முதல் இன்று வரை 25 வருஷங்களாகச் சொல்லிவருகிறேன். டாக்டர் அம்பேத்கர் இப்படிப் பிரச்சாரம் செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் 1925ல் சொன்னேன்..” என்று கூறியுள்ளார் (இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, பக்கம் : 14, 18).

கல்வியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறவாரம்பித்தது, சுயமரியாதை இயக்கம் தீவிரமடைந்தது, பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் வலுத்தது, டாக்டர் அம்பேத்கர் குரல் கொடுத்தது போன்று சங்கிலித்தொடர் போல பலப்பல நிகழ்ச்சிகள் 1920 முதல் 1935 ஆண்டுகளுக்கிடையில் இந்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்தன. சந்தடியில்லாமல் சமுதாயப் புரட்சி ஒன்று தலைதூக்கிக்கொண்டிருந்தது. இந்த அறைகூவலை முதன் முதலாகச் சிந்தித்துப் பார்க்கவாரம்பித்தது தமிழகமே. இந்நாடு முழுவதிலும் தமிழகத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களிடையேதான் மத மாற்றச் சிந்தனை முதன்முதலாக முளைவிட ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் வாழ்ந்த தீண்டப்படாதவர்களே அத்தகைய பக்குவநிலையை அன்றைய தினம் அடைந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்து “ஹிந்து மதத்திலிருந்து நீங்கள் வெளியேறிவிடுங்கள்” என்ற குரல் வடக்கேயிருந்து கிளம்பியபோதிலும், அதற்கு செவிமடுத்தது தெற்கில் வாழ்ந்த கீழ் ஜாதியினரே. பம்பாயிலும் அதைச் சுற்றிலுமுள்ள மாவட்டங்களிலும் ‘மஹர் ஜாதி’ மாநாடுகளை டாக்டர் அம்பேத்கர் கூட்டி மதமாற்றப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார். ஆனால் அதன் எதிரொலி தமிழ்நாட்டிலும் மலையாளத்திலும்தான் முதன்முதலாகக் கேட்டது; அம்பேத்கரின் அறைகூவலுக்கு தெற்கில்தான் கைமேல் பலன் கிடைத்தது.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் மதமாற்ற அலைகள் 1925-35 ஆண்டுகளுக்கிடையில் முதலில் வீசியது. அதற்கு முன்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் என்ன நிகழ்ந்தது என்பது நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை; ஆதாரங்கள், அத்தாட்சிகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டில் வலிமார்கள், அவ்வியாக்கள், நாதாக்கள் மூலமாக ‘இஷாஅத்’ பிரச்சாரம் நடைபெற்றது. மனிதப் புனிதர்களான ஒலிமார்களின் பேச்சைக் கேட்டும், அவர்களது செயல் முறைகளையும் முன்மாதிரிகளையும் பார்த்தும் முந்திய நூற்றாண்டுகளில் கூட்டங்கூட்டமாக மக்கள் தீனுல் இஸ்லாத்தில் இணைந்தார்கள். ஆனால் 20ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுக்கவாரம்பித்தது, இந்நாட்டில் எழுந்த சமுதாயப் புரட்சிகளின் விளைவாகவே என்பது தெளிவு.

இந்நூற்றாண்டின் முதல் மதமாற்ற அலை தமிழ்நாட்டில் 1925-35 கால கட்டத்தில் நடைபெற்றது எனலாம். மதுரை மாவட்டம் கம்பம், சின்னமனூர் அருகிலுள்ள சீலையம்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, முகவை மாவட்டம் கீழக்கரையைச் சுற்றியுள்ள சில கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியைச் சுற்றிலுமுள்ள சில கிராமங்கள் போன்ற இடங்களில் இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டங்கூட்டமாக தீனுல் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதற்குப் பிறகு மத மாற்ற வேலைகளில் ஒரு மந்த நிலை காணப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் இப்பணி ஸ்தம்பித்துப்போய் கிடந்தது.

இரண்டாவது அலை 1940-45 காலகட்டத்தில் தலை தூக்கிற்று. திருநெல்வேலி மாவட்டம் தெற்குப்பட்டி, சீதக்குறிச்சி, சக்கம்மாள்புரம், சம்பன்குளம், பாண்டவர் மங்கலம் போன்ற ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவில் இஸ்லாத்தில் இணைய முன்வந்தனர். 1947க்குப் பிறகு இந்த அலையும் ஓய்ந்து காணப்பட்டது.

மூன்றாவது அலை 1967க்கு பிறகு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் கம்பம் பகுதி, அதே மாவட்டம் வருசை நாடு பகுதி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் கணிசமான அளவு மத மாற்றங்கள் நிகழ்ந்தன. 1967-71 கால கட்டத்தில் இது நிகழ்ந்தது. அதற்குப் பிறகு ஒரு தேக்க நிலை.

நான்காவது அலை 1981 பிப்ரவரியில் தென்காசித் தாலுகா மீனாட்சிபுரத்திலிருந்து ஆரம்பித்தது. இந்த அலை நெல்லை மாவட்டத்தைவிட, முகவை மாவட்டத்தில்தான் சூடு பிடித்தது; அதிவேகத்தில் காரியங்கள் நிகழ்ந்தன. அதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று, 1979-80 ஆண்டுக்கிடையில் அம்மாவட்டத்தில் ஏற்பட்ட ஜாதிக் கலவரமாகும்.

1930-35 கால கட்டத்தில் தென்காசித் தாலுகா மத்தளம்பாறை என்ற கிராமத்தை அடுத்துள்ள திப்பனம்பட்டி என்ற சிற்றூரில் வாழ்ந்த தீண்டப்படாதவர்கள் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். மு.ந.அ. அவர்கள் இத்துறையில் முன் நின்று ஆவன செய்தார்கள். அம்மக்கள் இஸ்லாத்தில் இணைந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் V.S. தமீம் காசிம் தரகனார் தலைமையில் ஒரு பெருமாநாடே அந்த கிராமத்தில் அன்றைய தினம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதற்கெல்லாம் மு.ந.அ. அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து 1936ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதியன்று திருநெல்வேலி ஜங்ஷனில் “இஸ்லாமிய பிரச்சார சபை” என ஒரு அமைப்பு இஷாஅத் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. பேட்டை மர்ஹும் ஹாஜி சி.கா. சேக் இப்றாஹீம் அவர்கள் இச்சபையில் தலைவராகவும் மு.ந.அ. அவர்கள் காரியதரிசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒரு சில ஆண்டுகளே இந்த அமைப்பு இயங்கியது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்களும் சூழ்நிலைகளும் என்னவென்று தெரியவில்லை. 1932-35 ஆண்டுகளில் கீழக்கரை பகுதியில் மத மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. தைக்காதம்பி என்ற அல்ஹாஜ் அப்துல் கையூம் சாகிப் அவர்களும், ஹாஜி தைக்கா அஹமது அப்துல் காதர் ஆலிம் அவர்களும் இக்காரியங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.

*****

1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழ முற்பட்டதும் இந்நாட்டில் ஒரு கொந்தளிப்பே ஏற்பட்டது. அளவுக்கதிமான பிரச்சாரத்தில் ‘தேசீய ஏடுகள்’ இறங்கின. சர்வதேச முக்கியத்துவம் இதற்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. பாரதத்தின் மூலை முடுக்குளில் இருந்து எல்லாம், ஏன் உலகின் பல பாகங்களில் இருந்தும் பத்திரிகைக்காரர்கள், ஆராய்ச்சியாளர்கள், உண்மையை நேரில் கண்டறிய விரும்பியவர்கள் மீனாட்சிபுரம் நோக்கி சாரிசாரியாகப் படையெடுக்க ஆரம்பித்தனர். அவ்விதம் வந்த அறிஞர் பெருமக்களில் டாக்டர் மும்தாஜ் அலிகானும் ஒருவர். பங்களூரைச் சேர்ந்த இவர், அம்மாநில சர்வகலா சாலை ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சமூகப் பிரச்சினை குறித்து பற்பல ஆராய்ச்சிகள் செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். மீனாட்சிபுரம் வந்து பல நாள்கள் தங்கி சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்து ‘Mass-Conversions of Meenakshipuram: A Sociological Enquiry’ என்ற நூலையே எழுதியிருக்கிறார். இந்நூலை மதராசிலுள்ள கிருஸ்துவ லிடரேச்சர் சொசைட்டி வெளியிட்டுள்ளது [இந்நூலின் தமிழாக்கம் சீர்மை பதிப்பக வெளியீடாக ‘மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு’ என்ற தலைப்பில் கிடைக்கிறது —மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர்]. வாவா நகரத்தில் என்னை டாக்டர் மும்தாஜ் அலிகான் சந்தித்து விசாரணை நடத்தினார். அவர் விடுத்த வினாக்களில் ஒற்றை இங்கு நினைவுகூர்வது சாலப் பொருந்தும் என நினைக்கிறேன்.

இந்தியாவில் 1947க்குப் பிறகு, மதமாற்றம் என்பது தெற்குப் பகுதியில்தானே நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தானே தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்த எண்ணம் தலைதூக்கி நிற்கிறது. வட இந்தியாவில் இச்சமுதாய மக்களிடம் அந்த எண்ணம் எழவில்லையே! தமிழ்நாட்டில் மட்டும் மதமாற்றத்திற்கான சூழ்நிலை சாதகமாக இருப்பதற்குக் காரணங்கள் என்ன? இப்படி டாக்டர் தாஜ் கேட்டார். இதே கேள்வியை, ஹைதராபாத்திலிருந்து மீனாட்சிபுரம் வந்த மஜ்லிஸே தமீரே மில்லத் அமைப்பின் துணைத் தலைவரான மௌலானா சிக்கந்தர் சுலைமான் சாகிபும் என்னிடம் போட்டார். எனக்குத் தெரிந்த நிலவரத்தை நான் எடுத்து விளக்கினேன்.

பிராமணர் – பிராமணர் அல்லாதார் போராட்டம் தமிழ்நாட்டில் 20ம் நூற்றண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. பிராமணர்களின் ஆதிக்கத்தை எல்லாத் துறைகளிலும் மட்டம் தட்ட வேண்டும் என்ற சிந்தனை சுயமரியாதை இயக்கம் வாயிலாகத் தமிழகம் முழுவதும் பரவி நின்றது. இப்போக்கு வட இந்தியாவில் 1970 வரை ஆரம்பமாகவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் மத்தியில் தங்கள் மீது முன்பொரு காலத்தில் வடக்கிலிருந்து வந்தவர்களால் ஹிந்து மதம் திணிக்கப்பட்டது என்ற கருத்து இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே முளைவிட ஆரம்பித்துவிட்டது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற முழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது; மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் தீனுல் இஸ்லாத்தில் மக்கள் சேருவதை நல்லதொரு உதாரணத்தின் வாயிலாக பேரறிஞர் அண்ணா அவர்கள் விளக்கினார். மீலாதுக் கூட்டங்களில் இந்த உவமையை அவர் அடிக்கடி எடுத்துச் சொன்னார். திருவிழாக் காலங்களில் தனது சிறு குழந்தையைத் தவறவிட்டுவிட்ட தாய், பல ஆண்டுகள் கழித்து காணாமல் போய்விட்ட தனது சேயை சந்திக்க நேரிட்டு மீண்டும் ஒன்றிணைந்துகொள்ளும்பொழுது அவ்விருவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, பூரிப்பு பீறிட்டு எழுமோ, அதுபோல தமிழக மக்கள் இஸ்லாத்தின் ஏக தெய்வக் கொள்கையை விளங்கிக்கொண்டபொழுது, தனது தாயைக் கட்டிப்பிடித்து வாரி எடுத்து அணைத்துக்கொள்வதைப் போல இஸ்லாத்தையும் தமிழர்கள் தழுவிக்கொண்டார்கள்! பேரறிஞர் அண்ணா உதிர்த்த உதாரணம் இது. இதில் அனேக உண்மைகள் இலைமறை காயாக மறைந்துகிடக்கின்றன.

ஜாதிக் கலவரங்கள், ஜாதிக் கொடுமைகள் ஏற்பட்டபொழுதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் பின்பற்றிய மார்க்கத்திலிருந்து வெளியேறத் துடித்தார்கள்; மாற்று வழி என்ன என்பதைச் சிந்திக்கலானார்கள்; இதற்கு விமோசனம் என்ன என்ற விசாரணையில் இறங்கினார்கள். இத்துறையில் வடஇந்தியாவில் வாழ்ந்த கீழ் ஜாதியினரைவிட தமிழ்நாட்டில் வாழ்ந்த இத்தகையோருக்கு இப்பிரச்சினை இலகுவில் முடிந்துவிடும் போலத் தோன்றியது. மதமாற்றத்தினால் அவர்களுக்கு சிரமங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. இஸ்லாத்தில் இணைய விரும்பியவர்கள் தங்களது மொழியை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இல்லை; நடை உடை பாவனைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டியதில்லை; உணவுப் பழக்கங்களில் தீவிர மாறுதல்கள் தேவைப்படவில்லை. கலிமாவை உச்சரித்து, தொழுகை முதலான நடைமுறைகளை ஏற்று, ஏவல் விலக்கல்களைக் கடைப்பிடித்துவந்தால் போதும் என்ற சூழ்நிலையே தமிழ்நாட்டில் அன்றும் நிலவியது; இன்றும் நிலவுகிறது. மதமாற்றம் ஒரு சிரமமான காரியமாக, கஷ்டசாத்தியமான விஷயமாக, மொழி, உடை, உணவுப் பழக்கங்களை விட்டுக்கொடுத்து மேற்கொள்ள வேண்டிய சங்கதியாகத் தமிழ்நாட்டில் இல்லை. சர்வசாதாரணமாக அதை மேற்கொள்ளலாம். அத்துடன் புதிதாக இணையும் சமுதாயத்தில் இம்மக்கள் ஒன்றரக் கலந்தும் விடுகிறார்கள்; இணைந்தும் விடுகிறார்கள். வித்தியாசமே தெரிவதில்லை. இணைப்பு மிகவும் சுமுகமானதாகவே நிகழ்ந்துவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களும் கீழ் ஜாதிக்காரர்களும் மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஓடோடி வருவதற்கு இத்தியாதி சூழ்நிலைகளே காரணங்கள் என நான் கூறினேன். இதில் பொதிந்துகிடந்த கருத்துகளை அந்த அறிஞர் பெருமக்களும் ஒத்துக்கொண்டார்கள்.

மதமாற்ற அலைகள் திரும்பத் திரும்பத் தமிழகத்தைச் சுற்றியே சுழன்றடித்துக்கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லைதானே!

(நன்றி: சமுதாய நீரோட்டத்தில் சங்கமம்: தென்காசி மு.ந.அ. அவர்களின் வாழ்க்கை வரலாறு, A.K.ரிபாயி, 1987, தென்காசி)

Related posts

Leave a Comment