கமால் மௌலா: கோயிலாக மாற்றப்பட்ட பள்ளிவாசல்!
![]()
மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள கமால் மௌலா பள்ளிவாசல் அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் ஸூஃபி அறிஞர் கமால் மௌலாவின் அடக்கஸ்தலமும் அமைந்துள்ள இந்த வளாகம் இந்துக் கடவுள் சரஸ்வதியுடன் தொடர்புடையது என்று தீர்ப்பளித்துள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், இது விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளைக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பள்ளிவாசலாக செயற்பட்டுவந்த இடத்தை சர்ச்சைக்குரிய ஆய்வின் மூலம் நீதிமன்றம் கோயிலாக அறிவித்துள்ளது என்றும், பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தை ‘போஜ்ஸாலா’ என்று அழைக்கும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், எவ்வித ஆதாரமும் இன்றி முன்வைக்கப்பட்ட கருத்து என்றும் முஸ்லிம்கள் வாதிடுகின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்துத்துவச் சக்திகள் தொடங்கிய பாபரி பள்ளிவாசல் பிரச்சினை, இந்து அணிதிரட்டலுக்கான ஆயுதமாக சங்பரிவாரச் சக்திகளால் பயன்படுத்தப்பட்டது. 2019 நவம்பர் 9 அன்று பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைத்த உச்சநீதிமன்றம், அதே தீர்ப்பில், வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் 1991 உறுதியாகப் பின்பற்றப்படும் என்ற உத்தரவாதத்தை இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கியது.
‘1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று ஒரு வழிபாட்டுத் தலம் என்ன மதத்தன்மையுடன் விளங்கியதோ, அது அதே தன்மையுடன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று இதன் மூலம் பிரகடனப்படுத்தப்படுகிறது’ என்று இச்சட்டத்தின் பிரிவு 4(1) தெளிவாகக் குறிப்பிடுகிறது.
‘1947 ஆக்ஸ்ட் 15க்குப் பிறகு அத்தகைய வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றியமைத்தது தொடர்பாக, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகள், மேல்முறையீடுகள் அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். மேலும் இது தொடர்பாக புதிய வழக்குகள் எதுவும் தொடரப்படக் கூடாது’ என்று பிரிவு 4 (2) கூறுகிறது. பாபரி பள்ளிவாசலுக்கு இச்சட்டம் பொருந்தாது என்றும், தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் பிரிவு 5இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபரி தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாதத்தை மிகப்பெரும் கேடயமாகக் கண்ட இந்திய முஸ்லிம்களின் ஒரு பிரிவினர், பாபரி பள்ளிவாசல் நிலம் இந்துக்களுக்கு ஒப்படைக்கப்பட்டதை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்றும், அது இந்திய வரலாற்றின் முடிந்துவிட்ட பக்கம் என்றும் முஸ்லிம்களுக்குப் பாடம் எடுத்தனர்.

பாபரி பள்ளிவாசல் விவகாரத்தின் மூலம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இயக்கத்தை நன்றாக வளர்த்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத் தீர்ப்பு வெளிவந்தவுடன் அன்பை போதிக்கும் அறிஞர்போல் கருத்துகளை முன்வைத்தார். ‘அயோத்தியா விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருந்தது. இல்லையென்றால் ஒரு இயக்கமாக நாங்கள் போராட்டங்களில் ஈடுபடுவதில்லை’ என்று கூறிய அவர், ‘நாங்கள் மனிதர்களைக் கட்டமைக்கும் எங்கள் பணிக்குத் திரும்புவோம்’ என்று மேனேஜ்மெண்ட் குரு போல் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
2022 ஜூன் 2 அன்று நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். முகாம் ஒன்றில் உரையாற்றிய அவர், ‘எதற்காக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் சிவலிங்கத்தைத் தேடி அலைய வேண்டும்?’ என்று ஞானோதயம் பெற்றவர்போல் கேள்வி எழுப்பினார். ஞான்வாபி பள்ளிவாசல் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது இந்த உரையை அவர் ஆற்றினார்.
‘ஆர்.எஸ்.எஸ். தலைவரே அகிம்சையின் தூதுவராக மாறிவிட்டார்’ என்று முஸ்லிம்களில் சிலர் அப்போதும் திருப்தி கொண்டனர். ஆனால், பள்ளிவாசல்களைக் குறிவைக்கும் வேலையை இனி ஆர்.எஸ்.எஸ். நேரடியாக மேற்கொள்ளாது, தன் துணை அமைப்புகள் அல்லது பெயர் தெரியாத உள்ளூர் அமைப்புகள் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்றும் என்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து அறிந்தவர்கள் அப்போதே எச்சரித்தனர். பாபரி விவகாரத்தை விஷ்வ இந்து பரிஷத் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டது என்பதையும் நினைவூட்டினர்.
பாபரி தீர்ப்பிற்குப் பிறகு நமது நாட்டில் அதுதான் நடைபெற்றுவருகிறது. காசி, மதுரா என்று ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக அறிவித்த பள்ளிவாசல்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல பள்ளிவாசல்களுக்கான உரிமைகோரல்களை இந்து அமைப்புகள் புதிய பெயர்களில் முன்வைக்கத் தொடங்கினர்.
பிரச்சனையைக் கூர்மையாக்கி, மக்களைத் திரட்டி, பல வருடப் போராட்டங்களுக்கு பிறகு பள்ளிவாசலை அபகரிக்கும் நிலையில் சங்பரிவார்கள் இப்போது இல்லை. நேரடியாக நீதிமன்றங்களை அணுகி மிக விரைவாகவே தங்களின் திட்டங்களை நிறைவேற்றிவருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் கமால் மௌலா பள்ளிவாசலில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கமால் மௌலா பள்ளிவாசலின் சுருக்கமான வரலாறு
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் ஒரு பள்ளிவாசலும் ஸுஃபி அறிஞர் கமாலுத்தீன் மலாவியின் கல்லறையும் ஒரு அடக்கஸ்தலமும் அமைந்துள்ளன. இந்தப் பள்ளிவாசல் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1313ற்கு முன்) கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கி.பி. 1392-1393இல் திலாவர் கான் கோரி இந்தப் பள்ளிவாசலில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாக அடக்கஸ்தலத்தின் அருகிலுள்ள ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன், தார் மாவட்ட கவர்னராக திலாவர் கான் நியமிக்கப்பட்டார்.
மத்திய கால இந்தியாவில் ஒரு கட்டடத்தைத் கட்டும்போது ஏற்கெனவே இருந்த கட்டடத்தின் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டும் வழக்கம் இருந்தது. வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் ஒரு அரசியல் மரபாகவும் இந்த முறை பின்பற்றப்பட்டுவந்தது. பழைய கோயில்களின் தூண்களையும் கற்களையும் கொண்டு கமால் மௌலா பள்ளிவாசல் கட்டப்பட்டதே அல்லாமல், கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டெல்லியில் உள்ள குதுப் மினார் வளாகத்தைப் போன்றே இந்த வளாகத்தையும் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது கட்டப்பட்டது. பல பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட பொருட்களைக் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஒரு கோயிலை இடித்துவிட்டுத்தான் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற கூற்றிற்கு எவ்வித ஆதாரங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
ஜான் மால்கம், வில்லியம் கின்செய்ட் போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கால ஆங்கிலேய நில அளவையாளர்களும் இதனை ஒரு பள்ளிவாசல் என்றே குறிப்பிட்டுள்ளனர். 1822இல் மால்வா மாகாணம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த ஜான் மால்கம், இதனை ஒரு ‘சிதிலமடைந்த பள்ளிவாசல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்துக் கடவுள் சரஸ்வதியுடனும், பழமையானவொரு சமஸ்கிருதக் கல்வி நிறுவனத்துடனும் இந்த வளாகத்தைத் தொடர்புபடுத்தும் போக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கியது. 1893இல் இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் பணியாற்றிய ஜெர்மனியை சேர்ந்த இந்தியவியல் அறிஞரான அலாய்ஸ் ஆண்டன் ஃபூரர், பள்ளிவாசலின் இரண்டு தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள இலக்கணச் சூத்திரங்கள், இவை ஒரு காலத்தில் கல்விசார் கட்டடத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கக் கூடும்’ என்று தெரிவித்து பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளியை வைத்தார். கல்விசார் மோசடிக்காக இவர் தனது பணியிலிருந்து பின்னர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1898இல் வரலாற்றாசிரியரும் அரசு அதிகாரியுமான வின்செண்ட் ஸ்மித், ஃபூரரின் பணிகளை ஆய்வுசெய்து, அவை மோசமான புலமைத்தன்மையும் தொல்லியல்தன்மையும் கொண்டவை’ என்று விமர்சித்தார்.
ஆண்டன் ஃபூரர் தொடங்கிய கதையை உள்ளூர் கல்வி அதிகாரியான கே.கே. லீலே, 1902-1903 காலகட்டத்தில் விரிவாக எழுதினார். இந்தியாவின் வைஸ்ராய் கர்ஸனின் தார் நகர வருகையைத் தொடர்ந்து அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழகுபடுத்தும் வேலையை கேப்டன் எர்னஸ்ட் பேர்ன்ஸ், செப்டம்பர் 1902இல் லீலேயிடம் வழங்கினார்.
‘போஜ்சாலா’ (மன்னர் போஜாவின் பள்ளிக்கூடம்) என்ற பதத்தை இவர்தான் உருவாக்கினார். பள்ளிவாசல் வளாகத்தில் பாம்பு வடிவக் கல்வெட்டுகளைக் கண்ட லீலே, இந்த இடத்தை ‘ராஜா போஜாவின் பள்ளிக்கூடம்’ (ராஜா போஜா கா மதரஸா) என்று அழைக்கும் வழக்கம் உள்ளூர் மக்களிடம் உள்ளதாகக் கதை கட்டினார். ‘மதரஸா’ என்ற உருது வார்த்தை இந்து அடையாளத்தை வெளிப்படுத்துவதற்குச் சரியாக இருக்காது என்பதால், ‘போஜ்சாலா’ பதத்தைக் கண்டுபிடித்தார். ஒரு மன்னரின் பெயரைக் கொண்டு கல்வி நிறுவனத்தை அழைக்கும் வழக்கம் சமஸ்கிருதப் பாரம்பரியத்தில் இல்லை என்றாலும் அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் தனது கதையை விரிவாக்கினார்.
தான் சமர்ப்பித்த அறிக்கையிலும் (Summary of the Dramatic Inscription found at the Bhoja Shala (Kamal Maula Mosque), Dhar, C.I., in November 1903) இதே பதத்தைப் பயன்படுத்தினார். 1903இல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில்தான் ‘போஜ்சாலா’ என்ற வார்த்தை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
1924இல் அருங்காட்சியத்திலிருந்த ஒரு சிலை சரஸ்வதி தேவியின் சிலை என்று சில இந்திய அறிஞர்களும் அப்போதைய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குநரும் தெரிவித்தனர். ஆனால் 1875இல் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிலை சமணர்களின் கடவுளான அம்பிகாவின் சிலை என்றும், தார் நகரத்தில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இச்சிலை கண்டெடுக்கப்பட்டதே அல்லாமல் பள்ளிவாசலில் கண்டெடுக்கப்படவில்லை என்றும் 1981இல் நிரூபிக்கப்பட்டாலும் ‘போஜ்சாலா’ கதையை இவர்கள் விடுவதாக இல்லை.
பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை
சம்பந்தப்பட்ட இந்த இடம் ஒரு பள்ளிவாசல் என்றும் எதிர்காலத்திலும் இது பள்ளிவாசலாகவே இருக்கும் என்றும் ஆகஸ்ட் 1935இன் ஆங்கிலேயர் காலத்து அரசிதழில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1950களில் பள்ளிவாசலுக்கான உரிமை கோரலை இந்து தேசியவாதிகள் முன்வைக்கத் தொடங்கினர். பாபரி பள்ளிவாசல் விவகாரமும் இதே காலகட்டத்தில் தீவிரமாக்கப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.
பாபரி பள்ளிவாசல் போன்று பெரியளவில் இல்லை என்றாலும் கமால் மௌலா விவகாரத்தில் இந்துத்துவச் சக்திகள் தொடர்ந்து பிரச்சினைகளை மேற்கொண்டனர்.
இந்துத் தரப்பினர் எவ்வித உறுதியான ஆதாரங்களையும் சமர்ப்பிக்காத நிலையில் அவர்களுக்கான வழிபாட்டு அனுமதியை தொல்லியல் ஆய்வகம் வழங்கியது. முஸ்லிம்கள் தரப்பில் அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதும் அவர்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டது.
2003 பிப்ரவரி 6 அன்று பஸந்த் பஞ்சமி தினத்தில், சங்பரிவாரத்தினர் ஏறத்தாழ இருபதாயிரம் மக்களைத் திரட்டி, ‘இந்து ஜாக்ரன் மன்ச்’ அமைப்பின் சார்பாக பத்து நாள்கள் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் ரத யாத்திரையை நடத்தினர். அருகிலுள்ள கிராமங்களிலும் சிறிய அளவில் யாத்திரைகள் நடத்தப்பட்டன. வழிபாட்டை முடித்துவிட்ட பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட தர்ம சங்கமத்தில் கலந்துகொண்டனர்.

‘இங்கு கோயில்கள் இடிக்கப்பட்டு பள்ளிவாசல்களாக மாற்றப்பட்டுள்ளன. சரஸ்வதியை வணங்குவதற்கு தாரில் அனுமதி வழங்கப்படுவதில்லை. இது இந்துஸ்தானா இல்லை அரபிஸ்தானா?’ என்று கேள்வி எழுப்பினார் விஷ்வ இந்து பரிஷத்தின் அப்போதைய முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா. ‘இந்துக்கள் வழிபாடு செய்வதற்கான நெருக்கடிகள் நீக்கப்படவில்லை என்றால், தாரை மற்றொரு அயோத்தியாக மாற்றுவேன்’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் மிரட்டலும் விடுத்தார்.
பிப்ரவரி 18 அன்று பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இந்து ஜாக்ரன் மன்ச் உறுப்பினர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனைத் தொடர்ந்து கல்வீச்சிலும் வன்முறையிலும் இந்துத்துவச் சக்திகள் இறங்கின. (மத்திய பிரதேசத்தில் அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது).
2003 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்து அமைப்புகள் ஒரு மாத காலம் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய சுற்றுலாத்துறை ஒன்றிய அமைச்சர் ஜக்மோகன், செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்களுக்கு போஜ்சாலா வளாகத்தைத் திறந்துவிட வேண்டும் என்று 2003 மார்ச் மாதம் கோரிக்கை வைத்தார். ஒன்றிய அரசு மற்றும் தொல்லியல் ஆயவகத்தின் பதில்களைப் பெற்ற பிறகு, இதற்கான அனுமதியை மாநில பாஜக அரசு வழங்கியது.
அதன் பிரகாரம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பசந்த் பஞ்சமி தினத்தன்றும் பூஜைகள் செய்வதற்கு இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஜூம்ஆ தொழுகை நடத்துவதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தொடங்கினர் சங்பரிவாரத்தினர். பசந்த் பஞ்சமி வெள்ளிக்கிழமைகளில் வந்தால் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்காமல் பிரச்சினைகளை எற்படுத்தினர்.

அதிசயமாகத் தோன்றிய சரஸ்வதி சிலை!
2023 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் கமால் மௌலா பள்ளிவாசல் வளாகத்தில் சரஸ்வதி சிலையை வைக்க முயன்ற நான்கு நபர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்து மகா சபையுடன் தொடர்பில் உள்ளவர்கள். பள்ளிவாசல் வளாகத்திற்குள் சரஸ்வதி சிலை தானாக எழுந்தருளியதாக இந்து மகா சபை தனது வழக்கமான கதையைக் கூறியது.
1949 டிசம்பர் 22 இரவில் பாபரி பள்ளிவாசலுக்குள் திருட்டுத்தனமாக ராமன் சிலையை வைத்துவிட்டு, ராமன் எழுந்தருளியதாகத் தங்களின் முன்னோர்கள் மேற்கொண்ட அதே வழிமுறையை இங்கும் கையாண்டனர்.

கமால் மௌலா பள்ளிவாசலில் சிலையை வைத்ததற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஷிவ் குமார் பார்கவா, சரஸ்வதி தேவி தனது கனவில் தோன்றி, (பள்ளி) வளாகத்தில் தான் எழுந்தருளியதைத் தெரிவித்ததாக ‘தி கேரவன்’ இதழிடம் தெரிவித்தார்! இந்து மகா சபை உறுப்பினர்கள் கனவில் மட்டும் இந்துக் கடவுள்கள் வரும் அதிசயம் இதுவரை புரியாத புதிர்தான். ‘நாங்கள் அந்த வளாகத்திற்குள் சென்றபோது, சிலை கோயிலுக்கு வெளியே எழுந்தருளியது. நாங்கள் அதனை கர்ப்பக் கிரகத்திற்குள் கொண்டுசென்றோம்’ என்று மேற்கொண்டு கூறினார்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள ஒரு கைவினைஞரிடம் சிலையைச் செய்வதற்கு தான் கூறியதாகவும் புதிதாக செய்த சிலைபோல் அது இருக்கக் கூடாது என்று கூறியதாகவும் ‘தி கேரவன்’ பத்திரிகையாளர்களிடம் அவர் வெளிப்படையாகவே கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையும்
தொல்லியல் ஆய்வகத்தின் முடிவை எதிர்த்து இந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு நீதிமன்றத்தை அணுகி, ஒட்டுமொத்த வளாகத்திற்கான உரிமை கோரலை முன்வைத்தது. வளாகத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறிவியல் பூர்வமான ஆய்வை மேற்கொள்ளுமாறு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வைத் தொடர்ந்து 2016 மே 15 அன்று தனது தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம், இந்துக் கடவுள் சரஸ்வதியுடன் தொடர்புடைய போஜ்சாலாவே இந்த இடம் என்று கூறியது.
அத்துடன் தொல்லியல் ஆய்வகத்தின் முந்தையை நடைமுறையை ரத்து செய்ததன் மூலம் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கான உரிமையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1935இல் ஆங்கிலேயரின் அறிவிப்பையும் ரத்து செய்த உயர்நீதிமன்றம், ஆங்கிலேய அருங்காட்சியத்தில் உள்ள சரஸ்வதியின் சிலையை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. இல்லாத சரஸ்வதியின் சிலையைக் கொண்டுவருவதற்கு இந்திய அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
முஸ்லிம்கள் தரப்பில் வழக்கை நடத்திவரும் மௌலானா கமாலுதீன் வெல்ஃபேர் சொசைட்டி, உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உச்சநீதிமன்றம் நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் உள்ளனர்.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி நடத்தப்பட்ட ஆய்வைக் குறித்து முஸ்லிம்கள் நியாயமான எதிர்வாதங்களை வரலாற்றுச் சான்றுகளுடன் முன்வைக்கின்றனர். கோயிலை இடித்துவிட்டுத்தான் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்பதற்கான எந்தவொரு சான்றையும் இந்த ஆய்வு முன்வைக்கவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பழைய கட்டடங்களின் பொருட்களைக் கொண்டு புதிய கட்டடங்களைக் கட்டும் நடைமுறை மத்திய கால இந்தியாவில் சர்வசாதாரணமாக இருந்த வழக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட இப்பொருட்களைக் கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
பழைய பொருட்களைப் பயன்படுத்தும் இந்த வழக்கத்தை முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை இந்த மண்ணில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் ராஷ்ட்ரகுடர்கள் கட்டிய கோயில்களின் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சோழ அரசர்கள் கோயில்களைக் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன.
இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் நம்பகத்தன்மை குறித்தும் பக்கச்சார்பற்ற தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்துத்துவச் சக்திகளின் கைப்பாவையாக இந்த ஆய்வகம் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைஸி குற்றம் சாட்டுகிறார். அரசியல் உள்நோக்கம் கொண்ட, தரம் குறைந்த இத்தகைய ஆய்வுகள் சர்வதேசத் தரத்தில் அமையவில்லை என்று புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் ஆட்ரே ட்ரஸ்கி சுட்டிக்காட்டுகிறார். இந்துத் தரப்பினரின் ஒட்டுமொத்த வாதங்களும் ஆண்டன் ஃபூரரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன என்பதையும், கல்விசார் மோசடிகளுக்காக அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதையும் முஸ்லிம்கள் குறிப்பிடுகின்றனர்.
நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் நியாயமான, வலுவான ஆதாரங்களை முன்வைத்தே முஸ்லிம்கள் தங்களின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றனர். இந்து வலதுசாரிகளின் அராஜகங்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், அதிகாரத்தில் உள்ளவர்கள் முஸ்லிம் விரோதப் போக்கை தங்களின் கோட்பாடாகக் கொண்டுள்ள நிலையில், இந்திய நீதித்துறையின் மீதே முஸ்லிம்கள் இறுதியாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய முஸ்லிம் சமூகம் நீதியைத்தான் கோருகிறதே அல்லாமல் சலுகைகள் எதையும் கேட்கவில்லை.
ஆனால், வழக்கை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததுடன், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைத் தொழுகைகளை நடத்துவதற்கு கமால் மௌலா பள்ளிவாசல் அருகில் ஒரு இடத்தை ஒதுக்குமாறு மாநில அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பும் அமைதியாக இருக்குமாறும் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்ச்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கான இடத்தை வாங்குவதற்கு வழியில்லாமலும், வேறு இடத்தை ஒதுக்குமாறும் கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை அணுகவில்லை. மாறாக, இந்திய நாட்டின் சக குடிமக்களாக தங்களுக்கும் இங்கு வழிபாட்டு உரிமை உள்ளதை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். எனவே, வழக்கின் போக்கை திசை திருப்பும் வேலைகளைச் செய்யாமல், கமால் மௌலா பள்ளிவாசல் விவகாரத்தில் நீதிமன்றம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே நீதியின் மீது நம்பிக்கை கொண்டோரின் விருப்பமாக உள்ளது.
References:
- Hindu order runs India: Court declares another medieval mosque a temple, www.aljazeera.com
- Madhya Pradesh’s Ayodhya: How the British manufactured the myth of Bhojshala, www.scroll.in
- Dhar, Bhoja and Sarasvati: From Indology to Political Mythology and Back, Michael Willis, Journal of the Royal Asiatic Society
- Historian challenges Kamal Maula Mosque’s temple narrative, www.muslimnetwork.tv
- Same Script, Different State, www.caravanmagazine.in


இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சமூகத் தாக்குதல்கள் எவ்வளவு தீர்க்கமாகவும், தெளிவாகவும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாகவே கமால் மௌலா பள்ளிவாசல் விவகாரத்தை நாம் அணுக வேண்டியுள்ளது.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அது எவ்வாறு உண்மையைப் போல் தோற்றமளிக்கச் செய்யப்படுகிறது என்பதையும், மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு உண்மையை மறைப்பதற்கும், சிதைப்பதற்கும் எத்தகைய திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் இக்கட்டுரை மிகத் தெளிவான தரவுகளுடன் நம் முன் எடுத்துக்காட்டுகிறது.
அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஒரு தனிநபரின் அதிகார துஷ்பிரயோகம், எந்த அளவிற்கு ஒரு ஒட்டுமொத்த சமூகத்திற்கான அநீதியாகவும் உரிமை மறுப்பாகவும் மாறுகிறது என்பதையும் இக்கட்டுரை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.
அதேபோன்று, நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளும், உத்தரவாதங்களும் எவ்வாறு சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் மட்டும் சிதைக்கப்படுகின்றன அல்லது நடைமுறையில் புறக்கணிக்கப்படுகின்றன என்பதையும் இக்கட்டுரை தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
நீதியை மென்று விழுங்கும் அநீதியின் பல்வேறு முகங்களைத் தொடர்ந்து மெய்ப்பொருள் இணையதளம் தனது எழுத்துகளின் மூலம் கோடிட்டுக் காட்டி வருகிறது. அந்த வகையில், சகோதரர் ரியாஸ் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, உண்மையின் பக்கமும் நீதியின் பக்கமும் நிற்பவர்கள் அனைவரிடமும் பரவலாகச் சென்றடைய வேண்டிய முக்கியமான பதிவாகும்.
அன்புடன்,
ஷா. காதர் கனி