கொடிக்கால் மாமா — முக்கால் நூற்றாண்டுக் காலப் பெருந்தடம்
![]()
பொதுவாக இரவுறக்கத்திற்கு முன் நான் செல்பேசியை அணைப்பதுண்டு. அன்று நான் படுப்பதற்குச் சற்று தாமதம். நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினரும் நண்பருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அழைத்தார். நெடுநாள் நட்பென்றாலும் அபூர்வமாகத்தான் சந்திப்போ தொலைபேசி வழி உரையாடலோ நடக்கும்.
நான் குழம்புவதற்குள் அவர் செய்தியைச் சொல்லி முடித்தார். “நாங்கள் கொடிக்கால் மாமாவைப் பார்க்க வந்தோம். அவர் மிகவும் முடியாமல் உள்ளார். சால பசீர பாக்கணும்ன்டு சொல்றாரு. அதான் போன் போட்டேன். நெலம சரியில்ல. வேகமாகப் போயி பாத்துரு.”
மூப்பின் விளைவாக கடந்த சில வருடங்களாகவே கொடிக்கால் படுக்கையிலிருப்பது தெரியுமென்றாலும் சில நடைமுறைத் தடங்கல்களினால் அவரைப் பார்க்கவியலாமலேயே இருந்தது. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அழைப்புக்குப் பிறகு இரண்டாம் நாளே கிளம்பினேன். குறுகிய அழைப்பில் ஊர், நாகர்கோவில், திருவனந்தபுரம் என மூவிடங்களிலிருந்தும் நண்பர்கள் எஸ்.கே.ஸாலிஹ், முஹ்யித்தீன் அப்துல் காதர், மாதவ லாயத்திலிருந்து ஹாஜா, கோட்டாறிலிருந்து அன்சார், திருவனந்தபுரத்திலிருந்து அப்துல் மஜீத் நத்வி ஆகியோர் வந்திணைந்துகொண்டனர்.

ஜெயசேகரன் மருத்துவமனையின் அருகிலுள்ள டிரஸ்ட் மருத்துவமனையில் கொடிக்கால் அவர்கள் பராமரிக்கப்படுகிறார். இம்மருத்துவமனை கூடுதலாக வெளியில் அறியப்படாத கிறித்துவச் சேவை நிறுவனம் என நினைக்கிறேன். செவிலியர்களால் பராமரிக்கப்படும் முதியோர்களுக்கான விடுதி எனத் தோன்றுகிறது. கொடிக்காலைப் பார்க்கும் அவசரத்தில் இதுபற்றி எதுவும் கேட்டறிய இயலவில்லை.
கொடிக்கால் மெலிந்திருந்தார். பெயரைச் சொன்னவுடன் “யம்மா சால ப்பசீரா? காயல்பட்டணோம்…” கைகளைப் பற்றிக்கொண்டார். அன்றைய காலகட்டத்தில் எனது பெயரைச் சரியாக ஒலிக்கச் சொல்லி எடுத்த முயற்சிகள் எதுவும் கொடிக்கால் விஷயத்தில் சரிப்பட்டு வரவேயில்லை, எனது சிறு பருவத்தில் “மருமவன்” என்றும், நான் வளர்ந்த பின்னர் “பசீரே” என்றும் அழைத்து அதுவே நிலைத்தும் விட்டது.
பார்வை அறவேயில்லை. கேட்கும் திறனும் மங்கிவிட்டிருக்கிறது. இத்தனை நலிவுகளையும் தாண்டி அவரின் நினைவாற்றல் தெளிவாக நீடிக்கிறது.
செவிலியர்கள் அவரை நன்றாகவே பார்த்துக்கொள்கின்றனர். அன்றாடம் குளிப்பாட்டப்படுவதால் படுக்கைப் புண்ணிலிருந்து காக்கப்பட்டிருக்கிறார். இந்நுட்பம் தெரியாமல் எத்தனையோ கிடை நோயாளிகளை படுக்கைப்புண் வடிவில் இறப்பு கொத்திக்கொண்டு போயிருக்கிறது என எஸ்.கே.ஸாலிஹ் சொன்னார். அவர் அக்யூஹீலரும் கூட.

தலைக்கு சங்கையாகத் துண்டெல்லாம் போட்டு கொடிக்கால் வெள்ளுடையில்தான் இருந்தார். தன் துயரங்கள், வேதனைகள் பற்றி எந்தப் புலம்பலுமில்லை. 1992இல் நானும் அவரும் இன்னும் ஏராளமான நண்பர்களுடன் கலந்துகொண்ட மும்பை ‘இக்தாமே உம்மத்’ மாநாட்டில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே நினைவுகூர்ந்தார். அதுதான் எனது முதல் மும்பைப் பயணமும் கூட.
வல்லாதிக்க எதிர்ப்புப் போராளி ஒருவரை சந்தித்த நிகழ்வுதான் அது. வெள்ளை வெளேரென்ற இளம் முகம். இப்போதும் அவ்வுருவம் அப்படியே நினைவில் நீடிக்கிறது. சில நிமிடச் சந்திப்புதான். “இனி எப்போது சந்திப்போம்?” எனக் கேட்டதற்கு “இன்ஷா அல்லாஹ்!” என்ற அவரின் அந்த ஒற்றை வரி மறுமொழியை நெகிழ்ச்சியுடன் மீட்டினார் கொடிக்கால்.
1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாகூர் — அதுதான் கொடிக்கால் மாமாவுடனான முதல் சந்திப்பு என நினைவு. தான் பிறக்க நேர்ந்த சாதியிலிருந்தும் இடதுசாரிச் செயற்பாடுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு நீரோட்டம் அப்துல்லா அடியாரின் வழிகாட்டலில் அவர் இஸ்லாத்தை ஏற்றுச் சில ஆண்டுகளே ஆகியிருந்தன.
பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் திருநெல்வேலியைத் தாண்டாத எனக்கு அதுதான் முதல் நீண்ட தொலைவுப் பயணமும் கூட. அன்றைய திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகப் பேருந்தை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி காயல்பட்டினத்திலிருந்து சலஃபி மாநாட்டில் பங்கெடுப்பதற்காக நாகூருக்குக் கிளம்பினோம்.
அப்போது எனக்கு இருபது வயது. சலஃபி கோட்பாடுகளின்பால் தீவிர ஈடுபாடு துளிர்விடத் தொடங்கிய காலகட்டம். நாகூருக்கு நாங்கள் பங்கெடுக்கச் சென்ற சலஃபி மாநாடானது தமிழகத்தின் முதல் சலஃபி மாநாடு என்றும் சொல்லலாம்.
கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களும் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். நான் சலஃபிச் சிந்தனைகளில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய சிறிது காலத்திலேயே இஸ்லாத்தை முழு வாழ்வியலாகப் போதிக்கும் சிந்தனையின்பால் கவனம் திரும்பி அதில் கூடுதல் ஈடுபாடு காட்டத் தொடங்கிய காலகட்டம். மு.குலாம் முஹம்மது, நீடுர் மன்சூரலீ ஆகியோருடனான முதல் சந்திப்பை நீடூர் மன்சூரலியின் வீட்டில் கொடிக்கால் ஏற்படுத்திய தருணமது.
இம்மூவரும் ஒன்றாகச் சமூக மறுமலர்ச்சிக்காகப் பணியாற்றிவந்தனர். குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாடுகளினால் மூவரும் அவரவர் வழிகளில் பயணிக்க, இம்மூன்று மரங்களிலிருந்தும் என்னைப் போன்றவர்கள் கனிகளைப் புசிக்கத் தவறவில்லை.
சங்கி வன்முறைக்கெதிரான தற்காப்புப் போராட்டங்களை “மூட்டைப்பூச்சி மருந்து” என்று விமர்சித்துவந்த கொடிக்கால் அதற்கான சான்றுகளை நக்சலிய இயக்கத்திலிருந்தும் மேற்கோள் காட்டுவதோடு “மன உறுதிதான் சிறந்த ஆயுதம் மருமவனே!” என்பார். இந்திய அரசியல் யாப்பைவிட நமக்குச் சிறந்த பாதுகாப்பு எது எனக் கடைசிவரை வாதிட்டவர். இன்றைய ஆட்சியில் அரசியல் யாப்பும் நீதிமன்றங்களும் சுயேச்சையான பொது அமைப்புகளும் படும் பாட்டை அவர் அறிய நேர்ந்தால் என்ன சொல்லியிருப்பார்?!
சில வருடங்கள் அவரின் நேரடி வழிகாட்டுதலில் வாழ்ந்திருக்கிறேன். நிறைய சுவையான மறக்கவியலாத நிகழ்வுகள். ஏராளமான பட்டறிவுகள். நான் அவரை நாகர்கோவிலில் சந்தித்துக்கொண்ட வருடங்களின் இறுதியான காலகட்டம் அது. 1996ஆம் ஆண்டு. அச்சமயம் நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து சம்மேளனத்தை நடத்திற்று. ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்கசாலக் ராஜேந்திர சிங் கலந்துகொண்ட நிகழ்வு.
அங்கு விற்கப்பட்ட ‘இந்துக்கள் தெரிந்திருக்க வேண்டிய குர்ஆன் வசனங்கள்’ என்ற கையடக்க நூலை வாங்கி வாசித்தேன். இதை எழுதியவர் டி.இராமன் என்ற புனைப்பெயரில் ஒளிந்திருந்த கேப்டன் எஸ்.பி.குட்டி என்ற நாகர்கோவில்காரர். தீவிர சங்கி. பின்னாள்களில் அவர் நண்பரானார். அவர் வீட்டுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். அச்சமயம் அவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இந்நூலுக்கு மறுப்பாக நான் கொஞ்சம் தாள்களில் எழுதிக்கொண்டுபோய் கொடிக்காலிடம் காட்டினேன். அவர் அதை வாசித்துவிட்டு, “எதிரி கூர்மையாகக் குற்றஞ்சாட்டுகிறான். நீங்கள் சுற்றிவளைத்து எழுதாமல் நேரடியாக அதை எதிர்கொள்ளுங்கள்” என்று வழிகாட்டினார்.
இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட பிறகு அவர் எழுதிய முதல் நூல் ‘புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி!’ ஆங்கிலம் உட்பட சில இந்திய மொழிகளிலும் மொழியாக்கப்பட்ட நூல். குமரி முனையிலுள்ள விவேகானந்த கேந்திரம் ஏற்பாடு செய்திருந்த பல்சமயக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் தொகுப்பே இந்நூல். உரை அதன் மையக்கருத்தை எட்டவும் அதை பதிந்துகொண்டிருந்த அரசின் வானொலி, வானொளித்துறையினர் தங்களின் பதிவுக் கருவிகளையும் விளக்குகளையும் பாய்ந்தடித்து அணைத்ததாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அவர் இஸ்லாத்தை ஏற்பது தொடர்பாக சுந்தர ராமசாமி (சு.ரா.) உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான ஆளுமைகளுடன் பல கட்டங்களில் விவாதித்துவந்திருக்கிறார். அப்படியான முடிவிலிருந்து கொடிக்காலைப் பின்வாங்க செய்ய முயன்றிருக்கிறார் சு.ரா.
அதுபோல ஒரு சந்திப்பில் சு.ரா., கொடிக்காலுடன் மூன்றாவதாக ஓராளும் இருந்திருக்கிறார். அவர் பெரும்பாலும் இலக்கியவாதியாக இருக்க வாய்ப்புண்டு. அவரின் பெயர் என் நினைவிலில்லை. “கிளி பறக்கப் பாக்குது” என்று கொடிக்காலைக் காட்டி சு.ரா.விடம் சொன்னவர், இரு கைகளையும் கத்தியாக்கி இறக்கி “றெக்கய வெட்டீற வேண்டியதுதான்” என்றிருக்கிறார். அதற்கு சு.ரா. சொல்லியிருக்கிறார், “அதுலாம் தேவப்படாது. கிளி பறந்தே போய்ட்டுது.” இதை அப்படியே நடித்தும் காட்டுவார் கொடிக்கால். ஆனால் தன்னால் நடமாட முடிந்த நாள்கள் வரைக்கும் காலச்சுவடு குடும்பத்தினருடன் அணுக்கமான உறவைப் பேணிவந்தவர் கொடிக்கால்.
தென்னெல்லைப் போராட்டத் தியாகியான கொடிக்காலுக்கு தாணுலிங்க நாடார் முதலான பல இடது, வலதுசாரித் தலைவர்களுடனும், அரசியல், இலக்கிய ஆளுமைகளுடனும் நேரடித் தொடர்பும் நல்லுறவும் உண்டு. பல கோணங்களில் விவாதித்து அசை போட்டேயல்லாமல் தன் நிலைப்பாட்டையும் கண்ணோட்டத்தையும் மாற்றுவாரே தவிர, உறவு அணுக்கத்திற்காகவெல்லாம் அவற்றை விட்டுக் கொடுக்காதவர். எதிர்ப் பக்கத்தை முழுமையாகக் கேட்கக் கூடியவர்.
அவருக்கு காந்தி, அண்ணா, காமராஜர், கக்கன் மேல் நல்ல ஈடுபாடுண்டு. உயர்சாதி அரசு அலுவலர்களின் சூழ்ச்சிகளை முதலமைச்சராகவிருந்த காமராஜர் முறியடித்த விதத்தை தனக்கே உரிய வெட்டென மொழிநடையில் சொல்வார். அவருக்கு எல்லோருடனும் உரையாட இயன்றிருக்கிறது. சுருங்கிய சொற்களில் மனங்களுடன் உரையாடும் கவிதையின் வல்லமை அவரின் எள்ளல்களில் உண்டு. பகடிக்குப் பகடி, பாடத்துக்குப் பாடம்.
இந்திராகாந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களுடனும், கலைஞர் உள்ளிட்ட மாநில ஆளுமைகளுடனும் நேரடியாகப் புழங்கியவர். தான் இஸ்லாத்தை ஏற்ற செய்தியை கலைஞருடன் பகிர்ந்தபோது அவர் “இப்போ இதுவா?” எனக் கேட்டுவிட்டுப் பிறகு ஒன்றுமே சொல்லவில்லையாம். அந்நிகழ்வுக்குப் பிறகு அவருடனான நெருக்கம் குறைந்துபோயிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியமைக்க முடியாமல் போன தருணங்களில் கொடிக்கால் மிகவும் வருந்தியிருக்கிறார்.
காங்கிரஸின் தலையாய ஆளுமைகளில் ஒருவரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகரின் தனிச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய அரசியல் யாப்பு உருவாக்கத்தின்போது நடந்த சுவையான விவாதங்கள் உள்ளிட்ட அக்காலத்தின் பல அரசியல் நிகழ்வுகளை அவ்வப்போது நடக்கும் உரையாடல்களில் நினைவுகூர்வார்.
தமிழக ஒடுக்கப்பட்ட சமூகத்தலைவர்களில் ஒருவரான இளைய பெருமாளை கொடிக்காலின் அரசியல் ஆசான், முன்னோடி எனலாம். இளைய பெருமாளைப் பற்றிச் சொல்வதற்கு அவரிடம் ஏராளமுண்டு. ஆனால், அச்செய்திகளில் “இரவு எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் வைகறையில் எழுந்து, குளித்து அன்றலர்ந்த தாமரைப் போலிருப்பார்” என்ற வர்ணனை மட்டும் நினைவில் தங்கிநிற்கிறது.
நான் அன்று போய் கொடிக்காலைச் சந்தித்த நாகர்கோவில் என்பது இன்றிருக்கும் நாகர்கோவில் அல்ல. திரும்பும் திசையெல்லாம் காவி மயம். பொன்.இராதாகிருஷ்ணனும், எம்.ஆர்.காந்தியும் குமரியிலும் அண்டை மாவட்டங்களிலும் முழுக்க முழுக்க பிரிவினைப் பேச்சுகளைப் பேசித் திரிந்த காலம். காணும் திசையெல்லாம் இராம.கோபாலன் பெயர் தாங்கிய சுவரெழுத்துகளும் சுவரொட்டிகளும். மண்டைக்காடு வன்செயல் நடந்து ஆறோ ஏழோ ஆண்டுகள்தாம் முடிந்திருந்தன. அதன் குருதித்தடங்கள் காயாத நாள்கள். அக்காலக்கட்ட நினைவுகளிலிருந்து மீளாமலிருந்தார் கொடிக்கால்.
வன்செயல் களத்தில் விளைவுகளைப் பற்றி அஞ்சாத கடற்கரை மீனவர்களுக்கும் பெரும்பான்மைச் சாதியினரைக் கொண்டிருந்த காவல்துறைக்குமிடையே நடந்த ஒரு மோதல் பற்றி அவர் சொன்னதை இங்கு பதிவிடவியலாது. அவ்வளவு கொடூரமானவை அவை.
மண்டைக்காடு இந்து விவசாய நாடார்களுக்கும் மீனவக் கிறித்தவர்களுக்குமிடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக தவத்திரு குன்றக்குடி அடிகளார் நிறுவிய திருவருட்பேரவையின் தலையாய செயற்பாட்டாளர்களில் கொடிக்காலும் ஒருவர். உள்ளூர் இந்துக்களை இராம.கோபாலன் பகிரங்கமாகத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தில் கொடிக்காலும் இருந்திருக்கிறார்.
“சாமீ, நீங்க சொல்றதெல்லாம் சரிதான். வடிவீஸ்வரத்து சாமிகளோட தலமய்ல நாமள்லாம் ஊர்வலமா பொறப்பட்டுப் போகலாம்” எனக் கொடிக்கால் சொல்லி முடிக்கவும் முகம் சிவந்து தன்னிரு கைகளையும் அறுத்த கோழியின் இறக்கைகளைப் போலத் துடித்து ஆட்டிய இராம.கோபாலன் “இது ஹிந்துக்கள பிரிக்க நடக்குற சதி!” எனக் கணக்கு குழம்பிய ஆவேசத்தில் கூச்சலிட்டிருக்கிறார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் சாகித்ய அகாதமி விருதாளருமான பொன்னீலன் மண்டைக்காட்டு வன்செயலைப் பின்புலமாகக் கொண்டு எழுதிய ‘மறுபக்கம்’ நாவலில் கோலப்பன் பாத்திரமாக உலா வரும் கொடிக்கால், சொந்தமாக ஒரு மாத இதழை ‘உங்கள் தூதுவன்’ என்ற பெயரில் நடத்தியவர்.
அம்மாத இதழின் பிறப்பிற்கு உடனிருப்பு சாட்சியான நான் அதில் எழுதியுமிருக்கிறேன். ’ஓர் ஆலிம் எழுத்தாளராகிறார்’ என்ற தலைப்பில் பிரபல மார்க்க அறிஞர் முஹம்மது கான் பாகவி தொடர்ந்து எழுதினார். அவருடன் வேறு சிறந்த எழுத்தாளர்களும் எழுதிவந்தனர். இஸ்லாத்துக்கும் கம்யூனிசத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வுக்கான வாய்ப்பு லெனின் அவர்களின் காலத்தில் நடக்கவிருந்தது ஏனோ நடக்காமல் போயிற்று என்பது போன்ற அரிய தகவல்கள் உங்கள் தூதுவனில் வெளிவந்தன.
உங்கள் தூதுவனுக்கான அச்சகம் நாகர்கோவில் மணிமேடையருகிலுள்ள கலாச்சாரப் பள்ளிவாசலில்தான் இயங்கிவந்தது. தொழுகை நேரங்களுக்குப் பின்னர் பல ஆளுமைகளுடன் கொடிக்கால் அங்கு பல தீவிரத் தலைப்புகளில் விவாதிப்பார். ஒரு வகையில் பார்த்தால் அப்பள்ளிவாயில்தான் அவரின் தலைமைச் செயலகம்.
வைகறைத் தொழுகைக்குப் பிறகு வேப்பமூடு சந்தியில் உள்ள பிரபல தேநீர்க்கடையில் சூடான சிறுகடியுடன் நல்ல தேநீரும் அவருடன் போய் அருந்துவோம். அந்தத் தேநீர் நடையில் பிரபல அரசியல் தலைவரொருவரின் இருண்ட பக்கங்களெல்லாம் கொடிக்காலுக்கே சொந்தமான பகடியுடன் வந்து விழும்.
செயலாளிகளுக்கான பயிற்சி முகாம் ஏற்பாடு செய்வது அவருக்கு அத்துபடி. அதை மிக விருப்புடன் செய்வார். அவருக்கு நன்கு சமைக்கவும் தெரியும். ஒரு தடவை அவர் வீட்டுக்குக் கூட்டிப் போய் கடலைப் பருப்பு, வெல்லம், அண்டிக்கொட்டை, ஏலம் கலந்து அவர் செய்துதந்த பாயசத்தின் சுவை காலாதீதமானது.
மக்கள் களப்பணியாளர், பொதுவுடைமைவாதி, தென்னெல்லைத் தியாகி, தீவிர வாசிப்பாளர், ஊடகவியலாளர், சமாதானத் தூதுவர், அரசியலாளர் எனப் பல பரிமாணங் கொண்டவர்.
குமரி மாவட்டத்திலும் அதற்கு வெளியேயும் கொடிக்காலுடன் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். அவருக்கு எல்லைப் போராட்டத் தியாகிக்கான இலவசப் பேருந்துப் பத்திரம் இருந்ததால் அவரின் முடிவற்ற பயணங்களுக்குப் பெரும் உறுதுணையாக அது இருந்தது. அந்த இலவசச் சீட்டினால் அவருக்குக் கிடைத்த நன்மைகளைப் போலவே சில அவமானங்களையும் பேருந்து நடத்துநர்களிடம் சந்திக்க வேண்டிவந்திருக்கிறது, அத்தகைய அவமானங்களைத் தவிர்க்க ஆளில்லாப் பேருந்தில் முதல் ஆளாய் ஏறுவதைத் தவிர்ப்பார். முதல் பயணச்சீட்டே கட்டணமில்லாப் பயணச்சீட்டு என்றவுடன் சாத்திரம் பார்க்கும் நடத்துநர்களிடமிருந்து பல சமயங்களில் மனம் வருந்தும்படி வரும் சொற்களைக் கொள்ளாமலிருப்பதற்காக.
நான் நோன்பு காலங்களில் பேருந்துப் பயணங்களை இப்பொழுதெல்லாம் மேற்கொள்வதில்லை. அன்றைய இளமைப் பருவத்தில் பேருந்து, இரயில் என்ற வேறுபாடில்லை. ஊரிலிருந்து தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டிக்கு அவருடன் பகலில் பேருந்தில் புறப்பட்டேன். அங்கு போய்ச் சேர மாலையாகிவிட்டது. தண்ணீருக்கான விடாயை அன்றுணர்ந்ததுபோல் இதுவரை நான் உணர்ந்ததில்லை, நா வறட்சியில் சுருண்டுவிட்டேன். அவரோ குட்டானில் போட்ட புளி போல அயராமலிருந்தார். “கீரத்தண்டு போல வாடீட்டியளே. இப்பிடி இருந்தா எப்படி புரட்சி வரும்?!” என எள்ளினார்.
மக்கள் தொடர்பாடலில் அவர் வல்லவர். அவரால் எல்லா வயதினரோடும் உரையாட இயலும். அவரின் பிள்ளைகளை ஒத்த வயதில் உள்ளவர்களின் தோளில் கை போட்டு உடன் நடப்பார். எல்லோருக்கும் “மருமவனே..” என்ற ஒரே விளிதான். ஒற்றைப் புன்னகையில் ஆள்கள் அவரின் வசப்படுவர். அதனாலும் நீண்டகாலக் களப்பணிகளாலும் அவர் தமிழ்நாட்டின் எந்த ஊர் பேருந்து நிலையத்தில் போய் இறங்கினாலும் அங்கு அவருக்கென ஓராளாவது இருக்கும்.

அவர் தனது வாழ்நாளில் சம்பாதித்தது மனிதர்களைத்தான். அவருடனான பயணங்களில் பிடிபி கட்சியின் நிறுவனரான அப்துந்நாசர் மஃதனி, நன்னெறியழைப்பாளர்கள், தலித் செயற்பாட்டாளர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள், இடதுசாரிகள்… என நிறைய ஆளுமைகளை அவர் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அப்படியானதொரு பயணத்தில் மதுரைப் பேருந்து நிலையத்தில் நீளக் காற்சட்டையணிந்த வளர்ந்த மனிதரொருவர் கொடிக்காலுடன் பேருந்து புறப்படும் வரைக்கும் உரையாடிக்கொண்டிருந்தார். வண்டி புறப்பட்ட பிறகு அவரைப் பற்றி கொடிக்கால் இப்படிச் சொன்னார்: “வந்துபோனவர் மூன்று முதுகலைப் பட்டங்கள் வாங்கியவர். நக்சல் நிறுவனர் சாரு மஜும்தாரிடம் நேரடியாகப் பயின்றவர். தற்சமயம் காந்தியப் பாதையைத் தேர்ந்திருப்பதாகச் சொன்னார். அதுபற்றி விவாதித்துக்கொண்டுமிருந்தார்.”
குமரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் கொடிக்கால். தனது அரசியலுக்காகச் சிறை சென்றவர். கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீங்கிய பிறகும்கூட அக்கட்சியின் அணிகள் & தலைவர்களிலுள்ள ஈகியரை மறக்கவில்லை. பன்னிரண்டு வருடம் சிறையேகிய தோழர் பாலன் என்ற பாலதண்டாயுதத்தின் இணையரை அவரது கட்சி தோழர் பாதுகாத்துத் திரும்ப ஒப்படைத்ததைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிகரமாகத் தோன்றுவார்.

அவருடைய இளமையானது தீவிர அரசியல் செயற்பாடுகளுடன் பட்டினியும் வறுமையும் வாய்ந்தது. அதுதான் அவருக்கு உடல் வலுவையும் மனத் திடத்தையும் கொடுத்தது எனத் தோன்றுகிறது.
ஒரு முறை பொது வேலையொன்றிற்காக கடுங்கூதல் பருவத்தில் தில்லி வந்திருந்தார். அச்சமயம் அங்குள்ள தட்ப வெப்பத்தின் அளவு இருபது பாகைகளுக்கும் கீழ். அவரைத் தவிர எல்லோரும் குளிராடை அணிந்திருந்தனர். அவரோ கேரள/குமரி பாணி பளபள ஜுப்பாவுடன் வேட்டி அணிந்திருந்தார்.
தனது இளமையில் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வரையிலான எழுபத்தியிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவை நடந்துகடந்தவர். அதே உடல்தான், இப்போது வருடங்களின் கூம்பாரத்தின் கீழ் நசிந்துகிடக்கிறது.
நான் அவரோடு பழகிய வரையில் கொடிக்கால் இரு கட்டங்களில் மனம் வருந்தியதுண்டு. முதல் நிகழ்வுக்குக் காரணமானவர் தற்சமயம் உயிருடனில்லை. அவரால் இவருக்கு மனவேதனை ஏற்பட்டிருந்தாலும் பின்னாள்களில் இருவரும் நல்ல தோழமைகளாக விளங்கினர்.
இரண்டாவது கட்டம், அவரது பழைய பெயர் தொடர்பானது. தான் இஸ்லாத்தை ஏற்ற பிறகும் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்ட விளம்பரப் பதாகைகளில் அவரது பழைய பெயரைக் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி, “நான் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போலிருக்கே” எனச் சங்கடப்பட்டாலும் அதையும் ஒரு நகைச்சுவையாக மாற்றினார். “நல்ல வேள செல்லப்பாக்குப் பதிலா வேற மாதிரி பெயரு இல்லாமலிருந்ததே.”
பெயர் தொடர்பான அவரின் உளைச்சல் உச்ச கட்டத்தை எட்டியது, முஸ்லிம் பெயருடைய ஒரு தாராளவாதப் படைப்பாளியிடமிருந்துதான். திராவிட அரசியலுக்காக வேண்டி முஸ்லிம் அரசியல்/அடையாள அரசியலை வசைபாடும் அவர் தனது பிள்ளைக்குத் தனித்தமிழ்ப் பெயரை சூட்டியவர். அவர் ஏதோ ஒரு தேவைக்காக கொடிக்காலை தொலைபேசியில் அழைக்கும்போது “செல்லப்பா இருக்கிறாரா?” எனக் கேட்டிருக்கிறார். அதைச் சொல்லிச்சொல்லி உளைந்தார் கொடிக்கால்.
நான் அதை தொடர்புடையவரிடம் சுட்டிக்காட்டிய போது அவர் தனது அரசியலைத்தான் வலியுறுத்தினார். தனது பெயர் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்ற உரிமை ஒருவருக்கு இல்லையா? நமது பெயர்களுக்கும் பட்டங்களுக்கும் அடையாளங்களுக்கும் பின்னால் எதுவுமே தொழிற்படவில்லை என்ற பாசாங்கிற்கு என்ன பெயரிட?!
1995க்குப் பிறகு கொடிக்காலுடனான எனது தொடர்பில் பல காரணங்களால் இடைவெளி ஏற்பட்டது. ஆனாலும், அடிப்படைத் தொடர்பை விடாது பேணிக்கொண்டிருந்தோம். எட்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற எனது மகள் திருமணத்திற்கு அவர் வந்திருந்ததை கிடையிலிருக்கும் இந்நிலையிலும் நினைவுகூர்ந்தார். கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகள் பொது வாழ்வில் ஓடி ஓடித் தேய்ந்த ஒரு தேரினை சு.ராவின் மொழியில் சொல்வதானால், காலம் காகிதத்தைப் போலக் கசக்கிப் போட்டிருக்கிறது (கொடிக்காலைப் பற்றி சு.ராவே சொன்ன வரிகள்தாம் இவை).
பொது வாழ்வினால் அவர் குடும்ப வாழ்வில் இழந்தது இழந்ததுதான். அவ்விழப்பை இம்முதுமை இன்னும் உருப்பெருக்கியுள்ளது. தன்னைத் தேடிவந்த பொருளையும் சரிவரக் கையாளத் தெரியாதவர். காரணம் அவர் பொருளுக்காக வடிவமைக்கப்பட்டவரல்லர்.
இம்முதுமை கொண்டுவந்திருக்கும் அல்லல்களின்போது அவரது பொதுவாழ்வு உறவுகளும் தொடர்புகளும் அவ்வப்போது தாங்கிவந்தாலும் அவரது ஒரு நாளைய/ஒரு மாதத்தின் மருத்துவத் தேவையென்பது அதையும் தாண்டியது. அவரது அன்றாடத் தேவைகளை பெருமாள் என்ற அவரது தோழமைதான் ஒருங்கிணைக்கிறார். பெருமாளின் செல்பேசி எண்: 9942033226. கொடிக்கால் மாமாவிற்கு உதவ முடிபவர்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
என்வாப்பா சொல்வதுண்டு: “பெற்றோர் உயிருடனிருக்கும்போது கண்டுகொள்ளாமல் அவர்களின் இறப்பிற்குப் பிறகு கப்ருக்கு மேல் பூமாலை சூட்டி அழுது என்ன பயன்?!” பெற்றோர் என்பது ஒரு குறியீடுதான். சமூகத்தின் மூத்தோர், முதிர்ந்தோருக்கு இதை அப்படியே நீட்டிக்கலாம். அதனால்தான் இவ்வளவு நீண்ட பதிவு.
*****
கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் மருத்துவத் தேவைகளுக்காக உதவ விரும்புபவர்கள் கீழுள்ள எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பெயர்: திரு. பெருமாள் (கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் நண்பர்)
அலைபேசி எண்: 9942033226

