கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்

Loading

(சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணை சிறைவாசியாக அடைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவரும் செயல்பாட்டாளருமான ஷர்ஜீல் இமாமுடன் Article-14 இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் பேட்வா சர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம்).

ஷர்ஜீல் இமாமுடன் பேசுவதற்காக நாங்கள் மேற்கொண்ட மூன்றாவது முயற்சி இது. தனது சகோதரனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் பெறுவது குறித்து தனது வழக்கறிஞருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களுக்கு மத்தியில், குறுகிய நேரத்தில் இந்த நேர்காணலை மேற்கொண்டோம். இதற்கிடையில் தன்னிடம் வந்து சேர்ந்த சில புத்தகங்களையும் அவர் பெற்றுக் கொண்டிருந்தார். அவர் சிறையில் தள்ளப்படுவதற்கு காரணமான குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அவர் ஆற்றிய உரைகளை குறித்து அவரிடம் கேட்டோம். அந்த உரைகளுக்காக அவர் வருத்தம் கொள்கிறாரா என்று வெளிப்படையாகவே அவரிடம் கேட்டேன்.

பீகார் மாநிலம் ஜெஹனாபாத்தைச் சேர்ந்த மறைந்த அரசியல்வாதியின் மகன், ஐஐடி (IIT) பட்டதாரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்ட இமாமிடம், அவர் ஆற்றிய அந்த உரைகள் அவருக்கு ஒரு பெரும் சுமையாக மாறிவிட்டதை நான் சுட்டிக் காட்டினேன்.

டெல்லி கலவரம் தொடர்பாக காவல்துறை சுமத்திய சதி வழக்கில், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அரசு தரப்பு முன்வைக்கும் வாதங்களுக்கு இந்த உரைகளே அடிப்படை ஆதாரமாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இமாம் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்.

இமாமின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக  அந்த உரையின் சில பகுதிகள்  பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், அந்தத் திரைப்படம் சட்ட நடைமுறைகளிலும் தணிக்கைக் குழுவிலும் சிக்கிக் கொண்டதாலும், பாரபட்சமான தன்மையைக் கொண்டிருப்பதாலும் இன்னும் வெளியாகவில்லை.

2026 ஜனவரியில் இமாமுக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்ற உத்தரவில், அவர் பேசிய மிகவும் சர்ச்சைக்குரிய சில வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன: “நம்மிடம் 5 லட்சம் பேர் இருந்தால், நம்மால் இந்துஸ்தானிலிருந்து வட கிழக்குப் பகுதியை நிரந்தரமாகத் துண்டிக்க முடியும். அஸ்ஸாம்-யை துண்டிப்பது நமது பொறுப்பு, நாம் அஸ்ஸாம்மையும் இந்தியாவையும் துண்டித்தால், அவர்கள் நமது பேச்சைக் கேட்பார்கள். ‘சிக்கன்ஸ் நெக்’ (Chickens neck) பகுதி முஸ்லிம்களுக்குச் சொந்தமானது.” (மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள சிலிகுரி பாதை ‘சிக்கன்ஸ் நெக்’ என்று குறிப்பிடப்படுகிறது. மிகவும் குறுகலான இந்த பாதை அஸ்ஸாம் உள்ளிட்ட எட்டு வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நிலப் பாதை ஆகும். – மொழிபெயர்ப்பாளர்)

டெல்லி கலவரம் தொடர்பான “பெரிய சதித் திட்டம்” என்று சொல்லப்படும் வழக்கில், இமாம் கடந்த ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் ஜாமீன் அல்லது விசாரணை ஏதுமின்றி அவர் கழித்த ஐந்து ஆண்டுகள், எட்டு மாதங்களும் அடங்கும்.

வன்முறைக்கு அழைப்பு விடுக்கவில்லை: வழக்கறிஞர்கள்

இமாமுடன் அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஜாமீனும் இன்றி, விசாரணையும் இன்றி சிறையில் இருக்கும் உமர் காலித், இமாமை விட நன்கு அறியப்பட்டவரும்  பிரபலமானவருமாவார். காலித்தின் பேச்சுகளை விட, இமாமின் உரைகள் பலருக்கு வெறுக்கத்தக்கதாகவும் ஏற்புடையதாக இல்லாமலும் இருந்தன.
இருப்பினும், இமாமின் உரைகளில் வன்முறைக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.

கேதார் நாத் எதிர் பீகார் மாநில அரசு (1962) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில்,
“அரசின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம் அல்லது கருத்துகள் எவ்வளவு கடுமையான சொற்களால் சொல்லப்பட்டிருந்தாலும், அவை நியாயமான எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும். மேலும், அவை பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையுடன் ஒத்துப்போகின்றன. எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட சொற்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அல்லது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் தீய நோக்கத்தைக் கொண்டிருக்கும்போது மட்டுமே, பொது நலன் கருதி அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கச் சட்டம் தலையிடும்” என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அஸ்ஸாமை இந்தியாவிலிருந்து துண்டிப்பது என்ற சர்ச்சைக்குரிய வரிகளுடன், (இமாமின் ஜாமீன் மனுவை விசாரித்த) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அரசுத் தரப்பின் மற்றுமொரு வாதத்தையும் சுட்டிக்காட்டினர். அதாவது, “திட்டமிடப்பட்ட ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) மூலம் டெல்லியை முடக்குவது, சாலைகளை மறிப்பது, தண்ணீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைத் தடுப்பது போன்ற உத்திகளை இமாமின் பேச்சு வெளிப்படுத்தியதாக” அரசுத் தரப்பு வாதிட்டது.

யுஏபிஏ சட்டத்தின் கீழ் “பயங்கரவாதச் செயல்” என்பது, “சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் அல்லது சேவைகளை சீர்குலைக்கும் செயல்களையும், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களையும் உள்ளடக்கும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தான் ஒருபோதும் வன்முறைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற இமாமின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், “இது பாதுகாப்பு அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் எல்லையைத் தாண்டி குற்றவியல் நடவடிக்கையாக மாறுகிறதா என்பதும், அரசுத் தரப்பின் விளக்கம் விசாரணையில் உறுதி செய்யப்படுமா என்பதும் (வழக்கின்) இறுதித் தீர்ப்பின் போது முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்கள்” என்று குறிப்பிட்டது.

2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களில் அவர் ஆற்றிய உரைகளுக்காக, டெல்லி கலவரம் தொடங்குவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே—அதாவது 2020 ஜனவரி 28 அன்று—இமாம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில், அவர் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கினார், ஒரு பிரதான சாலையை மறித்து ஷாஹீன் பாக் போராட்டக் களத்தை அமைக்க உதவினார், சிஏஏ-விற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்று இந்த காலக்கட்டத்தை சதித்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் என்று காவல்துறை குற்றம் சாட்டியது.

அந்தத் துண்டுப் பிரசுரங்களில், இந்திய முஸ்லிம்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தவறிவிட்டதாகவும் இமாம் கருதிய விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக பாபரி மஸ்ஜித் வழக்கில், பள்ளிவாசல் இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்ட போதிலும், சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை இந்து தரப்பிற்கே வழங்கிய தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இமாமின் உரைகள், 2020 டிசம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் வெடித்த வன்முறைகள் போன்ற குற்றச்சாட்டுகள் ஏனைய குற்றவியல் வழக்குகளிலும் கொண்டு வரப்பட்டு அவற்றில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்படியிருக்கையில், ஒரே விஷயத்திற்காக அவர் ஏன் இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர்.

இருப்பினும், விசாரணை தாமதம் காரணமாக யுஏபிஏ வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட சமீபத்திய முன்னுதாரணங்கள் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்று முடிவு செய்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வழங்கப்பட்ட பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தனக்கும் சம உரிமை (Parity) வேண்டும் என்ற இமாமின் கோரிக்கையையும் நிராகரித்தது.

அரசுத் தரப்பு அவர் மீது ஒரு வலுவான முதல்நிலை வழக்கைத் (prima facie case) தொடுத்துள்ளதாகவும், சுமத்தப்பட்ட சதித்திட்ட குற்றச்சாட்டில் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, அவர்கள் மேலும் ஓராண்டு காவலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கை விரைந்து நடத்துமாறு அரசுக்கு அறிவுறுத்தியது.

குற்றம் எங்கே இருக்கிறது?’

தனது உரைகளுக்காக உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுக்கவில்லை என்றும், மாறாக ஜனவரி 28-ஆம் தேதி தான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, டிசம்பர் மற்றும் ஜனவரி தொடக்கத்தில் இந்தச் சதித் திட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்ததாக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டின் காரணமாகவே தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாக இமாம் வலியுறுத்தினார்.

“எனது உரைக்காக ஜாமீன் மறுக்கப்படவில்லை. ஜேஎன்யு (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) மாணவர் அணித் திரட்டலில் நான் ஒரு மையப் புள்ளியாக இருந்ததாக அவர்கள் கருதியதாலேயே ஜாமீன் மறுக்கப்பட்டது. ஜாமிஆ (மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக) மாணவர்கள் போலவே, நாங்களும் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தோம் என்பதே இதற்குக் காரணம்” என்றார் இமாம்.

“டெல்லியின் வீதிகளிலும் பள்ளிவாசல்களிலும் நாங்கள் அயராது உழைத்தோம், அதேபோன்ற நடவடிக்கைகளை ஜாமிஆ மாணவர்களும் சுதந்திரமாக மேற்கொண்டனர். ஆனால், இதில் குற்றம் எங்கே இருக்கிறது என்பதே எனது கேள்வி” என்றார் அவர்.

“இவை அனைத்தையும் டெல்லி கலவரத்துடன் அவர்கள் தொடர்புபடுத்துவதும், டெல்லி கலவரத்தைத் திட்டமிடுவதற்காகவே இதெல்லாம் செய்யப்பட்டது என்று கூறுவதும், கலவரத்தைத் தூண்டுவதற்காக நாங்கள் முயற்சிப்பதால் சாலை மறியல் என்பது ஒரு பயங்கரவாதச் செயல் என்று சொல்வதுமே தவறானது.  “இந்தத் தீர்ப்பில் உள்ள குறைபாடு இதுதான். இதுவே எனது முக்கியமான வாதம்.” என்று அவர் தெரிவித்தார்.

டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட 53 பேரில் முக்கால்வாசிப் பேர் முஸ்லிம்கள். கலவர சதி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 18 பேரில் 16 பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டில் தேவாங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு அமர்வைத் தவிர, மற்ற அனைத்து நீதிமன்றங்களும் அரசு தரப்பு வாதத்தையே முதன்மை உண்மையாக ஏற்றுக்கொண்டுள்ளன. இது பயங்கரவாத வழக்கு என்பதற்கான முதற்கட்ட ஆதாரம் ஏதுமில்லை என்றும், பயங்கரவாத நடவடிக்கைக்கும் போராட்டத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை அரசு மழுங்கடித்துவிட்டது என்றும் அந்த உயர் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டிருந்தது.

பொருத்தப்பாடு குறித்த ஒரு கேள்வி

இமாம் பேசும்போது மிக விரைவாகவும், ஒருவித அவசரத்துடனும் பேசினார்; ஏனெனில் அவர் சொல்ல வேண்டியவை நிறைய இருந்தன. நேரம் முடிய முடிய சிறைக்காவலர் அடிக்கடி அங்கு வந்து சென்றதால், பேசுவதற்கு மிகக் குறைவான நேரமே இருந்தது.

அவரது எழுத்துகளைப் போலவே, அவரது பேச்சிலும் ஒரு ஆழ்ந்த சந்தேகத்தால் உருவான பார்வை வெளிப்பட்டது. தற்போதைய அமைப்பில் இந்தியாவின் நிறுவனங்களும், ஏன் அதன் அரசியலமைப்புச் சட்டமும்கூட, இந்திய முஸ்லிம்களுக்கு அடிப்படையாகப் பலன் அளிக்கவில்லை என்பதே அப்பார்வை.

இது உமர் காலித் போன்றவர்களிடமிருந்து இமாமை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஜேஎன்யு-வில் முனைவர் பட்டம் பெற்ற உமர் காலித், சிஏஏ சட்டத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை ‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம்’ என்று கட்டமைத்தார். இதன் மூலம் அவர் பெரிய அளவில் மக்களின் ஆதரவைப் பெற்றார். இதற்கு நேர்மாறாக, இமாம் ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்திலான மக்களிடம் மட்டுமே பேசுபவராகத் தெரிகிறார்.

நான் இதைச் சொன்னபோது, தனது எழுத்துக்கள் வங்காளம், உருது, மலையாளம் மற்றும் தமிழ் பேசும் குறிப்பிட்ட மொழி மற்றும் பிராந்திய சமூகங்களை நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார். தனக்கு வரும் ஆதரவுக் கடிதங்கள், தனக்கென ஒரு வாசகர் வட்டம் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

உரையாடலை மீண்டும் அந்தப் பேச்சுகளை நோக்கித் திருப்பிய நான், அந்த உரைகளுக்காக, குறிப்பாக இந்தியாவை வட கிழக்குப் பகுதியிலிருந்து துண்டிப்பது பற்றிய அந்தப் பகுதிக்காக, அவர் வருந்துகிறாரா என்று இமாமிடம் கேட்டேன்.

“நான் இன்னும் சிறந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம். அந்தத் தொடரில் ஒரு வார்த்தையை மாற்றியிருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் ஒரு மூத்த வழக்கறிஞர் (நீதிமன்றத்தில்) கூறியது போல அது கேட்பதற்கு இவ்வளவு மோசமாக இருந்திருக்காது. ஆனால் அந்த முழு உரையும் ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) பற்றியதுதான்; அந்த இரண்டு மாதங்களில் நான் செய்த அனைத்து வேலைகளும் சாலை மறியலைப் பற்றியவைதான்” என்றார்.

“அந்த உரை இந்திய வரலாறு மற்றும் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பற்றியது. ஒரு வார்த்தையை மாற்றியிருக்கலாம் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. ஆனால், அந்த ஒரு சிறிய பகுதி எப்படி அதன் மொத்த கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டது என்பது அதைவிட முக்கியமான விஷயம். இதை அரசுத் தரப்பு மட்டுமல்ல, தாராளமயம் மற்றும் மதச்சார்பின்மையின் ஆதரவாளர்களும் செய்தனர். தாராளவாதிகள் என்று சொல்லப்படுபவர்களிடம் ஒருவித இரட்டை வேடம் இருப்பதை இது காட்டுகிறது” என்று மேலும் கூறினார்.

இன்றைய அரசியல் சூழலில் அவரது பொருத்தப்பாடு குறித்தும் நாங்கள் பேசினோம்.

எனது பணி தனித்துவமானது’

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை முதல் வெளியுறவுக் கொள்கை பின்னடைவுகள் வரையிலான ஆட்சிமுறை சார்ந்த விமர்சனங்கள் இருந்த போதிலும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒரு வலிமையான, பிரபலமான அரசியல் தலைவராகவே இருந்து வருகிறார். தனிப்பட்ட உரையாடல்களிலும் டிஜிட்டல் தளங்களிலும் அதிருப்தி வளர்ந்து வருவது தெளிவாகத் தெரிந்தாலும், அது இன்னும் ஒரு ஒருங்கிணைந்த அரசியல் மாற்றாக உருவெடுக்கவில்லை. அதே வேளையில், பாரதிய ஜனதா கட்சி பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து தேர்தல் வெற்றிகளைப் பெற்று வருகிறது.

இத்தகையச் சூழலில், விவாதத்திற்குரியவராகவும், துருவமுனைப்பை ஏற்படுத்துபவராகவும், பெரும்பாலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவராகவும் இருக்கும் இமாம் போன்றவர்களின் குரல்கள், ஒருவேளை விரிவான அரசியல் உரையாடல்களை உருவாக்குவதில் முக்கியத்துவமற்றவையாக இருக்கலாம். ஆனால், தன்னை ஒரு சமூக விஞ்ஞானியாகக் கருதும் இமாமை இது பாதிப்பதாகத் தெரியவில்லை.

“புறக்கணிக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் (Subaltern movements) என்னை பின்தொடர்கின்றன. சிறையில் இருக்கும் எனக்கு மக்களிடமிருந்து கடிதங்கள் வருகின்றன; சில நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு கடிதம் வரும். பல பத்திரிகையாளர்களிடமிருந்து பேட்டிக்கான கேள்விகள் வருகின்றன. நான் எழுதுவதை, குறைந்தபட்சம் 5,000 முதல் 10,000 பேர் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்” என்கிறார்.

“எனது பணி தனித்துவமானது. நான் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் (Niche) இருக்கிறேன். நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன். நான் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பதாலும், நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து எதையோ தொடங்கிக் கொண்டிருப்பதாலும் நான் தனித்துத் தெரிகிறேன்” என்று அவர் கூறினார்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டு, அபாயகரமான விளைவுகளைச் சந்திக்கும் இன்றைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தனது கருத்துகளின் தீவிரத்தை ஏன் அவர் குறைத்துக் கொள்ளவில்லை என்று இமாமிடம் கேட்டேன். அவரது நண்பர்கள் அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவருக்கு மாற்றுக் கருத்துகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

“எனது நண்பர்கள் என்னிடம் கொஞ்சம் நிதானமாக இருக்குமாறு சொன்னபோது, நான் நேரடியாகவே பதில் கூறினேன். சமூக அறிவியல் மற்றும் இந்தியக் குடியரசில் முஸ்லிம்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற முறையில், மக்களுக்காகப் பிரச்சனைகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் முன்னணியில் நிற்பது நமது பொறுப்பு. நாம் நமது பாதுகாப்பான சூழலிலிருந்து (comfort zone) வெளியே வர வேண்டும்” என்றார்.

“மதச்சார்பின்மை குறித்து ஏற்கனவே பேசித் தீர்க்கப்பட்ட அதே பழைய தேய்ந்துபோன விஷயங்களையே நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து தொடங்க வேண்டும். அந்தப் புதிய சித்தாந்தம் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் இதயங்களில் வேரூன்ற வேண்டும்” என்று மேலும் கூறினார்.

வார்த்தைத் தெரிவு

அஸ்ஸாமிலிருந்து வடகிழக்குப் பகுதியைத் துண்டிப்பது குறித்த அந்த வரிகளுக்கு உரையாடல் மீண்டும் திரும்பியது. ஒருவேளை அவர் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

“குறிப்பாக அந்த அலிகர் உரையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் சிறைக்கு வந்து அதை மீண்டும் மீண்டும் வாசித்தபோதுதான் ஒன்றை உணர்ந்தேன். ‘துண்டிப்பது’ (cut) என்ற வார்த்தைக்குப் பதிலாக, ‘முடக்குவது’ (block) அல்லது நெடுஞ்சாலைகளை முடக்குவது என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது இன்னும் தெளிவாக இருந்திருக்கும். அந்த வாக்கியத்திற்கு அடுத்த வரியிலேயே, ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு நம்மால் அதை முடக்க முடியும் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

“ஆனால், அவர்கள் ஒரு பத்து விநாடி காட்சியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் ‘துண்டிப்பது’ என்ற வார்த்தை இருப்பதைக் காட்டுவதால், அதற்குப் பின்னால் நான் பேசியவை அனைத்தும் முக்கியத்துவமற்றதாகி விடுகின்றன” என்று மேலும் கூறினார்.

“எனவே, ‘துண்டிப்பது’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘முடக்குவது’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்கலாம். ஏனெனில், அந்தச் சூழலில் நான் ஒரு தற்காலிகமான முடக்கத்தைப் பற்றித்தான் பேசுகிறேன் என்பதும், பிரிவினைவாதம் பற்றிப் பேசவில்லை என்பதும் தெளிவாகத் தெரியும். அதிகாரப் பரவலாக்கம் தான் எனது கோரிக்கையாக இருந்ததே தவிர, பிரிவினைவாதம் அல்ல” என்றார் விளக்கினார்.

“அந்த ‘துண்டிப்பது’ என்ற வார்த்தையை ‘முடக்குவது’ என்று மாற்றியிருக்கலாம். ஆனால் நூற்றுக்கணக்கான உரைகளை ஆற்றும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் மிக நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

உரையாற்ற செல்வதற்கு முன், தனது உரைகளைத் தயாரித்துச் செல்வாரா என்று கேட்டேன்.

“நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு பேச்சாளராகவே இருந்திருக்கிறேன். நான் ஐஐடி-யில் படித்துக் கொண்டிருந்தபோது கூட, பல மணிநேரம் இத்தகைய தலைப்புகளைப் பற்றி எனக்குள்ளேயே விவாதித்துக் கொள்வேன். பேசுவது என்பது எனக்கு இயல்பாக வரக்கூடிய ஒன்று. ஆயிரக்கணக்கான மணிநேரங்களை இவற்றுக்காக நான் செலவிட்டிருப்பதால், அவை தன்னிச்சையாக வெளிப்படுபவை. இப்போது நான் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பதைப் போல, எதையும் திட்டமிட வேண்டிய அவசியமில்லை” என்றார் பதில் அளித்தார்.

“ஆயிரக்கணக்கான மணிநேரம் எனக்குள்ளும், என் பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கும் நண்பர்களிடமும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதுதான் எனது தினசரிப் பயிற்சி. நான் எதையும் திட்டமிடுவதில்லை, எதையும் எழுதுவதில்லை. சில நேரங்களில் சில முக்கியக் குறிப்புகளை மட்டும் குறித்துக் கொள்வேன்” என்று மேலும் கூறினார்.

“அந்த சர்ச்சை வரிதான் அவரை அடையாளப்படுத்துகிறதா?” என்று நான் மீண்டும் கேட்டேன்.

“உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. இது கருப்பு-வெள்ளை என இரண்டில் ஒன்றான விஷயம் அல்ல. ஒருமுறை, டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை என்னிடம் விசாரணை நடத்தியபோது, துணை ஆணையரே நான் ஏன் அப்படிப் பேசினேன் என்று கேட்டார். ‘இந்த வரியினால்தான் நான் காப்பாற்றப்பட்டேன். நான் இதைச் சொல்லியிருக்காவிட்டால், நீங்கள் என்னை உடனடியாகக் கைது செய்திருக்க மாட்டீர்கள். டெல்லி கலவரத்திற்குப் பிறகுதான் என்னைக் கைது செய்திருப்பீர்கள், அப்போது என் மீதான வழக்கு இன்னும் வலுவாக இருந்திருக்கும்” என்று அவருக்கு உடனடியாக பதில் அளித்ததை நினைவு படுத்தினார்.

“டெல்லி கலவரம் நடந்த உடனேயே நான் அதை உணர்ந்தேன். விதி விசித்திரமான வழிகளில் செயல்படுகிறது. நான் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கிறேன். ஆனால் இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை அனைவரும் புறக்கணிக்கிறார்கள்” என்றார்.

‘நான் தயாராக இருக்கிறேன்’

இறுதியாக, அவருக்குப் போதுமான ஆதரவு இருப்பதாக உணர்கிறாரா என்று கேட்டேன்.
“நான் கைது செய்யப்பட்டபோது, என்னைக் கைவிட்ட பலர், நான் இந்தப் போராட்டத்திற்குத் தீங்கு விளைவிப்பவன் என்றெல்லாம் கூறினார்கள். ஜேஎன்யு முதலில் களமிறங்கியிருக்காவிட்டால், இந்தப் போராட்டத்தின் முக்கிய நகர்வுகளே நடந்திருக்காது என்பதை அவர்கள் உணரவில்லை. எனவே, அது எனக்கு நிச்சயமாகக் கோபத்தை ஏற்படுத்தியது”.

“ஆனால் ஐஐடி-யில் பயின்ற எனது நண்பர்கள் — அவர்கள் அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள் — எனது சட்டச் செலவுகளுக்கு உதவினார்கள். எனக்கு அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் அறிந்திருந்தனர். பின்னர் ஜேஎன்யு, அலிகர் மற்றும் ஜாமிஆ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று எனக்கு உதவ முன் வந்தது. இதில் பொதுமக்கள் ஒருபுறம், அறிவுஜீவிகள் மற்றொரு புறம் உள்ளனர். அறிவுஜீவிகள் என்னைக் கைவிட்டனர், ஆனால் சாமானிய மக்கள் என்னைக் கைவிடவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,” என்று கூறினார்.

அவர் எதைச் சாதிக்க விரும்புகிறார் என்று கேட்டேன்.

“ஒன்று, சாமானிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது; பிரிவினை குறித்த உண்மையான சிக்கல்கள் மற்றும் அது ஏன் நடந்தது என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஏனெனில் ஒரு பிராமணிய சக்தியே அந்தப் பிரிவினையை நம்மீது திணித்தது. மற்றொரு விஷயம், ஆய்வாளர்களின் ஒரு முன்னணிப் படையை உருவாக்குவது. அது ஒரே நாளில் நடந்து விடாது, மெதுவாகத்தான் நடக்கும். ஒவ்வொரு நாளும், நான் ஒரு புதிய ஆய்வாளரை வென்றெடுப்பேன்” என்று பதில் அளித்தார்.

அடுத்த ஓராண்டை வாசிப்பிலும் எழுத்திலும் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆனால் தவிர்க்க முடியாத அந்தக் கேள்வியை கேட்டேன்: “ஒருவேளை அவர் விடுவிக்கப்படாவிட்டால்?”

“எனக்கு தண்டனை விதிக்கப்பட்டால், சிறையில் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்று விதிக்கப்படும் காலத்தை சிறையில் கழிப்பேன்.  என்னால் அதைத்தான் செய்ய முடியும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.”

“நாங்கள் இதற்காக ஏற்கனவே எங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டோம். நாங்கள் முயற்சிப்பதெல்லாம், ஒவ்வொரு நாளும் ஒரு சகப் பயணியைப் பெறுவதுதான். நாங்கள் ஒரு மிகக் கடினமான போரை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் எளிய பதில்கள் ஏதுமில்லை,” என்று அவர் முடித்தார்.

Source: ‘Where is the crime? Sharjeel Imam on the speech that defined his imprisonment, www.article-14.com

பேட்டி: பேட்வா சர்மா
மொழிபெயர்ப்பு: B. ரியாஸ் அகமது

Related posts

Leave a Comment