இந்து முகங்கள், முஸ்லிம் முகமூடி
![]()
டிசிஎஸ் (டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ்) நாசிக் வழக்கின் பின்னணியில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட குற்றமயமாக்கலின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பாதிப்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றங்களை முஸ்லிம் அடையாளங்களின் கீழ் மறைத்து, ஊடகங்களும் அதிகார அமைப்புகளும் எவ்வாறு “முஸ்லிம் குற்றவாளி” என்ற பிம்பத்தைக் கட்டமைக்கின்றன என்பதை இது விவரிக்கிறது.
பெருந்தொற்றும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அவற்றோடு தற்போதைய இந்துத்துவ அரசியலும்—’முகமூடி’ என்பதை நம் காலத்தின் நெருக்கமானதொரு வாழ்வியல் அடையாளமாய் மாற்றி அமைத்திருக்கின்றன.
2026 பிப்ரவரியில், டிசிஎஸ் நாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தன் சக ஊழியரான டேனிஷ் ஷேக் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தார். இதற்கு முன்பாகவே, அந்தப் பெண்ணின் பெற்றோர் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரைச் சந்தித்து, தங்கள் மகளின் வழிபாட்டு முறைகளிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கவலைப்பட்டிருந்தனர். அந்த அரசியல்வாதியின் தூண்டுதலால் பெற்றோர் புகார் அளிக்க, காவல்துறையின் ரகசிய நடவடிக்கைக்குப் பின் தௌசிஃப் அத்தார், ரசா மேமன், ஷாருக் குரேஷி, ஷபி ஷேக், ஆசிஃப் அஃப்தாப் அன்சார், ஷாருக் ஷேக் ஆகியோரின் மீது முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பாய்ந்தன.
டேனிஷ் மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டும், தௌசிஃப், ரசா, ஷபி ஆகியோர் மீது ஆபாச சைகைகள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன. தௌசிஃப், டேனிஷ், நிதா கான் ஆகியோர் மத உணர்வை புண்படுத்தியதாகவும்; தௌசிஃப், டேனிஷ், ஷாருக் ஷேக், ரசா ஆகியோர் மதமாற்றத்தைத் தூண்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
வெவ்வேறு நபர்கள் மீதான இந்த வெவ்வேறு புகார்களை ஒன்றிணைத்த ஊடகங்கள், இதை ஒரு பெரிய மதமாற்றக் கும்பலின் சதி என்றும், “கார்ப்பரேட் ஜிகாத்” (Corporate Jihad) என்றும் சித்தரித்தன. ஆனால், நாசிக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் சந்தீப் மித்கே, ‘தி பிரிண்ட்’ இணையதளத்திடம் பேசும்போது, “நாங்கள் இதை ஒட்டுமொத்தமாக மதமாற்றக் கும்பல் என்று சொல்லவில்லை, வெவ்வேறு புகார்களில் வெவ்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்று நிதானம் காத்தார்.
இதற்கிடையில், காவி நிற ஹிஜாப் அணிந்திருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்களைப் பரப்பிய ஊடகங்கள், நிதா கான் என்ற முஸ்லிம் பெண்மணிதான் பாலியல் புகார்களை மூடிமறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றிய மனிதவள (HR) துறை முதன்மைச் சூத்திரதாரி என பழி சுமத்தின. ஆனால், நிதா கான் அங்கு வெறும் செயல்முறை மேலாளர் (Process Manager) மட்டுமே. உண்மையில், பாலியல் வன்கொடுமைத் தடுப்புக் குழுவின் (PoSH Committee) தலைவராக இருந்து, அந்தப் பெண்ணின் புகார்களைப் புறக்கணித்துக் கடமை தவறியவர் அஸ்வினி சைனானி என்ற இந்துப் பெண்மணி என்பது பிறகுதான் தெரியவந்தது. ஆனால், குற்றவாளிகளை அஸ்வினி காப்பாற்றுகிறார் என்று யாரும் பேசவில்லை.
“கார்ப்பரேட் ஜிகாத்” என்ற கதையாடலை உருவாக்க, அஸ்வினி என்ற பெண்ணின் குற்றம், நிதா கான் என்ற முஸ்லிம் பெண்ணின் முகத்தைக் கொண்டு மறைக்கப்பட்டது. பணியிடப் புகாரை அலட்சியப்படுத்திய ஒருவரை பாதுகாக்க ஹிஜாப் அணிந்த நிதாவின் முகம் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்புரை செய்யப்பட்டது. ”முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கைகோர்த்து, மாற்று மதத்தினருக்கு எதிராகக் கூட்டுச் சதியில் ஈடுபடுகிறார்கள் என்ற தப்பெண்ணத்தை இயல்பாகவே ஏற்றுக் கொண்ட ஒரு பொதுப்புத்தியைக் கொண்ட சமூகத்தில், இந்த முகமூடி மிக எளிதாகத் தன் இலக்கை அடைந்தது.
பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் செய்யும் குற்றத்தை, முஸ்லிம் முகத்தைக் கொண்டு மறைக்கும் இந்த விசித்திரப் போக்கை நாம் “இந்து முகங்கள், முஸ்லிம் முகமூடி” என்கிறோம். இந்த அபாயகரமான போக்கை 2023 நவம்பரிலேயே ‘சப்ராங் இந்தியா’ இதழ் சுட்டிக்காட்டியிருந்தது.
ஊடகங்களோ அல்லது சட்ட அமைப்புகளோ, விசாரணையின் போதே குற்றத்தை முஸ்லிம் அடையாளத்தோடு பிணைப்பது, முஸ்லிம்களை மட்டுமே இயல்பான குற்றவாளிகளாகக் காட்டும் ஆபத்தான முயற்சியாகும். இது இந்தியாவில் முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியல் நிலையைத் தலைகீழாக மாற்றுகிறது.
பொருளாதாரப் புறக்கணிப்பை மறைத்தல்
முஸ்லிம்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் இந்த அரசியல், ஏதோ ஒரு சமூக வெற்றிடத்தில் நடப்பதில்லை; ஏற்கனவே பொருளாதார ரீதியாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் மீதுதான் இது திணிக்கப்படுகிறது. ‘அரசு ஆதரவு ஊடகங்களால் (Godi media) உருவாக்கப்படும் இந்த ‘முஸ்லிம் குற்றவாளி’ பிம்பம், உண்மை வெளிவருவதற்கு முன்பாகவே அந்தச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேலும் நசுக்குகிறது.
இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்த ‘சச்சார் குழு அறிக்கை’ (2006) அவர்களின் கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பை அப்பட்டமாகத் தோலுரித்தது. மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள முஸ்லிம்கள், அரசு உயர் பதவிகளில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே உள்ளனர். கல்வி மறுப்பு, பொருளாதாரப் பாதுகாப்பற்ற சூழல் போன்றவற்றால் அவர்களின் நிலை பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை விடவும் மோசமாக உள்ளதாக அந்த அறிக்கை கூறியது.
இதன் தொடர்ச்சியாக வெளியான ‘Marginalities and Mobilities Among India’s Muslims: Elusive Citizenship’ என்ற நூல், முஸ்லிம்களுக்கு குடியுரிமை என்பது ஒரு “எட்டாக் கனி” ஆக இருப்பதை விளக்குகிறது. அதாவது, அரசு அவர்களை குடிமக்களாக அங்கீகரித்தாலும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரம் (Ghettoised economy – ஒரு சமூகத்தை மற்றவர்களிடமிருந்து பொருளாதார ரீதியாகப் பிரித்து, அவர்களுக்குள் மட்டுமே வணிகமும் வேலை வாய்ப்பும் சுழலும் நிலை) மற்றும் கட்டமைப்புத் தடைகளால் அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
குற்றமயமாக்கல் எவ்வாறு பொருளாதாரப் புறக்கணிப்பை ஆழமாக்குகிறது என்பதை சச்சார் அறிக்கை விவரிக்கவில்லை. ஆனால், நடுநிலையான விசாரணைக்கு முன்பாகவே, இந்துக்களின் குற்றங்கள் மீது முஸ்லிம் முகமூடியைத் திணிக்கும் இப்போக்கு, வேலைவாய்ப்புச் சந்தை, நேர்காணல் அறைகள், வங்கிக் கடன்கள் மற்றும் வாடகைக்கு வீடு தேடும் இடங்கள் என அனைத்திலும் முஸ்லிம் பெயர்களையும் முகங்களையும் ஒரு பெரும் சுமையாக மாற்றுகிறது என்பதை நாம் உணர்கிறோம்.
ஒரு இந்து நபர் வேண்டுமென்றே முஸ்லிம் அடையாளத்தைப் பயன்படுத்தி குற்றம் செய்யும்போது, அக்குற்றம் வலதுசாரி ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது. இதனால், அந்த முஸ்லிம் முகமூடி அகற்றப்படுவதில்லை. மாறாக, அது குற்றத்தின் முகமாகவே மாறும் வரை இறுக்கப்படுகிறது. இது, முஸ்லிம் அடையாளத்திற்கும் குற்றத்திற்கும் உள்ள பொதுவான பிணைப்பைச் சமூகத்தில் ஆழமாக்குகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை, வாழ்விட உரிமையை, சமூக நகர்வை முடக்கி குடியுரிமையை எட்டாக் கனியாக்குகிறது.
எனவே, நிதா கானின் முகமூடிக்கு பின்னால் அஸ்வினி இருந்த உண்மை வெளிப்பட்டதை வெறும் ஊடக விவாதமாக மட்டும் பார்க்கக் கூடாது; அது ஒரு பொருளாதார நிகழ்வு. இத்தகைய சம்பவங்கள் பணியிடங்களிலும் சமூகத்திலும் பரவும்போது, முஸ்லிம்களின் கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்புக்குச் சமூகம் அமைதியாக அனுமதி அளிக்கிறது. இந்த முகமூடி வெறுமனே வார்த்தை ஜாலம் அல்ல; அது தப்பெண்ணங்களை பொருளாதார ஒடுக்குமுறையாக மாற்றி, முஸ்லிம்களின் பொருள்சார் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பொருளாதாரக் கருவியாகும்.
இந்த பொருளாதார ஒடுக்குமுறை அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பறித்து, “முஸ்லிம்கள் படிப்பறிவற்றவர்கள், காட்டுமிராண்டிகள், எனவே குற்றவாளிகள்” என்ற இஸ்லாமோஃபோபியா தர்க்கத்தை மேலும் வலுவூட்டுகிறது. சுருக்கமாக, முஸ்லிம் முகமூடி அணிந்த இந்து முகங்கள் “முஸ்லிம் குற்றவாளி” என்ற பிம்பத்தை உற்பத்தி செய்கின்றன.
முஸ்லிம் குற்றவாளி
லவ் ஜிகாத், கார்ப்பரேட் ஜிகாத், மாட்டிறைச்சி பயங்கரவாதம், மக்கள் தொகைப் பெருக்கம் எனத் திட்டமிட்டு உருவாக்கப்படும் அச்சங்கள், முஸ்லிம்கள் செய்யும் குற்றங்களின் அதிகரிப்பால் எழுபவை அல்ல; மாறாக, “குற்றப்பின்னணி என்பதே இயல்பாகவே முஸ்லிம்களுக்குரியது” என்ற புதிய இந்தியாவின் தர்க்கத்தை நிலைநிறுத்தவே இவை பயன்படுகின்றன.
குற்றத்தன்மை என்பது ஒரு மனிதனுக்கு பிறவியிலேயே வருவதோ அல்லது திருட்டு போன்ற செயல்களின் மூலம் நேரடியாகத் தெரிவதோ அல்ல. அது, சமூக ஒழுங்கைப் பராமரிப்பதற்காகச் சில பழக்கவழக்கங்களைக் குற்றம் என வகைப்படுத்தித் தண்டிக்கும், அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒரு சமூக உடன்படிக்கை ஆகும். ஆனால், இன்றைய இந்துத்துவ இந்தியாவில், இந்த உடன்படிக்கையானது பழக்கவழக்கங்களைக் குற்றம் காண்பதற்குப் பதிலாக, ‘முஸ்லிமாக இருக்கும் அடையாளத்தையே’ குற்றமாக மாற்றுகிறது. இதனால் ‘முஸ்லிம் குற்றவாளி’ என்பது ஒரு உண்மையல்ல; அது இந்துத்துவாவிற்கும் முஸ்லிம் எதிர்ப்பு சமூகத்திற்கும் இடையிலான கூட்டுச் சதியால் உருவாக்கப்பட்ட ஒரு புனையப்பட்ட கற்பிதமாகும்.
பொதுப்புத்தியில் முஸ்லிம்கள் இயல்பாகவே சந்தேகத்திற்குரியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு, கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகளில் இருந்து விலக்கப்படுகிறார்கள். இந்த விலக்கமே, பிறகு அவர்கள் “வேலையில்லாதவர்கள், படிப்பறிவற்றவர்கள், எனவே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்” என்ற பழிச்சொல்லுக்குச் சான்றாக மாற்றப்பட்டு, அவர்களை நியாயமான சமூக-பொருளாதாரப் பங்களிப்பில் இருந்து விலக்குகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுவதும் உலகெங்கும் அவர்கள் ஒடுக்கப்படுவதும் தொடரும் நிலையிலும், பயங்கரவாதம் என்பது முஸ்லிம் சமூகத்திற்கே உரியது எனச் சித்தரிக்கும் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற கருத்தாக்கத்தின் நீட்சியே இந்த ‘முஸ்லிம் குற்றவாளி’ பிம்பம். பயங்கரவாதம் என்பது ஒரு அசாதாரண நிகழ்வாகக் காட்டப்பட்டு, அதைக் கட்டுப்படுத்த அரசுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
இப்போது, ‘முஸ்லிம் பயங்கரவாதி’ என்பதிலிருந்து ‘முஸ்லிம் குற்றவாளி’ என்ற பிம்பத்திற்கு நகர்வதன் மூலம், குற்றத்தன்மை என்பது ஏதோ ஒரு அசாதாரண நிகழ்வல்ல, அது நம் அருகாமையிலேயே அன்றாடம் நிகழும் ஒரு சாதாரண நிலை என்ற எண்ணத்தைச் சமூகத்தில் விதைக்கிறார்கள். (பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஜார்ஜியோ அகம்பன் கூறும் ‘விதிவிலக்கான நிலையை’ எவ்வாறு சாதாரண அன்றாட அனுபவமாக மாற்றியதோ, அதே போன்றது இதுவும்).
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உலகளவில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பலிவாங்கியுள்ளது என்றால், டிசிஎஸ் நாசிக் போன்ற நிகழ்வுகள் மூலம், நம் பணியிடங்களிலும் பொது இடங்களிலும் கட்டமைக்கப்படும் ‘முஸ்லிம் குற்றவாளி’ பிம்பத்தின் கொடூரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இது அன்றாட வாழ்க்கையில் “ஒரு முஸ்லிம் யார்?” என்ற அடையாளத்தின் அர்த்தத்தையே சிதைத்துவிடுகிறது.
இதனுடன், டெல்லி காவல்துறை உள்ளிட்ட மாநிலக் காவல்துறையினரின் முஸ்லிம் எதிர்ப்பு பாரபட்சமும் இணைகிறது. கட்டமைக்கப்பட்ட ‘முஸ்லிம் குற்றவாளி’ பிம்பத்தோடு இதைப் பார்க்கும்போது, இவை வெறும் பயிற்சித் திட்டங்கள் மூலம் சரிசெய்யக்கூடிய சாதாரணப் பாரபட்சங்கள் அல்ல என்பது புரியும்.
மாறாக, இவை சமூகத்தின் ஆழத்தில் வேரூன்றிய தத்துவார்த்த, சமூகக் கட்டமைப்புகள் ஆகும். குற்றப் பின்னணியில் இருந்து இந்த முஸ்லிம் அடையாளத்தை நீக்கி, அந்த முகமூடியைக் கழற்ற வேண்டுமானால் இச்சமூக அடித்தளம் உலுக்கப்பட வேண்டும். அப்போதுதான், நடக்கும் ஒவ்வொரு குற்றத்தின் பின்னாலும் எப்போதும் ஒரு முஸ்லிம் இருப்பதில்லை என்ற உண்மை வெளிப்படும்.
Source: https://maktoobmedia.com/post?id=115508&slug=hindu-faces-muslim-mask
ஆங்கிலத்தில்: முஹம்மது அல்ஃபாஸ் அலீ
தமிழ் மொழிபெயர்ப்பு: செய்யது அலீ

