குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்காவிலிருந்து மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம்!

Loading

மால்கம் எக்ஸின் இயற்பெயர் மால்கம் லிட்டில். 1925இல் அமெரிக்காவின் ஒமாஹாவில் பிறந்தார். காப்பகத்தில் வளர்ந்தார். திருட்டு வழக்கிற்காக 21 வயதில் சிறைவாசம் அனுபவித்தார்.

சிறையில் இருந்தபோது ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பின் அறிமுகம் கிடைத்தது. இந்த அமைப்பு வெள்ளை அமெரிக்கர்களிடமிருந்து விடுதலை பெறுவதையும் கறுப்பின மக்களைச் சக்திப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் மால்கம் அந்த அமைப்பிலும், கறுப்பர் உரிமைகளுக்கான இயக்கத்திலும் தனிப்பெரும் முதன்மைக் குரலாக உருவெடுத்தார்.

ஆரம்பத்தில் மால்கம் எக்ஸ் கறுப்பினப் பிரிவினைவாதத்தை ஆதரித்துவந்தார். வெள்ளை இனத்தவர்களுடன் ஒருங்கிணைவதை வெறுத்தார். அகிம்சை முறையை நிராகரித்ததோடு ‘அவசியமான அனைத்து வழிகளிளிலும்’ தற்காப்பை ஊக்குவித்தார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தாக்கத்தால், வெள்ளையர்கள் இயல்பாகவே ஊழல்வாதிகள், தீயவர்கள் என்றும்; கறுப்பின மக்களின் பல்லாண்டுக்காலத் துயரங்களுக்கு அவர்களே காரணம் என்றும் உறுதியாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் அவர் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்குப் பயணமானார்.

“இப்றாஹீம் (அலை), முஹம்மது (ஸல்), இதர நபிமார்கள் ஆகியோரின் புனித மண்ணில், பல்வேறு இன-நிற மக்களால் கடைப்பிடிக்கப்படும் உன்னதமான சகோதரத்துவ மாண்பை, அவர்கள் அளித்த மனப்பூர்வமான அன்பு நிறைந்த உபசரிப்பை நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை. கடந்த ஒரு வாரமாக என்னைச் சுற்றியுள்ள அனைத்து நிற மக்களும் பொழியும் அன்பும் கருணையும் என்னை முற்றிலுமாகத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.”

மால்கம் எக்ஸின் கடிதம்

“நான் புனித மக்காவுக்குப் பயணமாகும் பாக்கியம் பெற்றேன். கஅபாவை ஏழு முறை தவாஃப் செய்தேன். உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். நீல நிறக் கண்கள் முதல் கறுப்புத் தோலுடைய ஆஃப்பிரிக்கர்கள் வரை அனைத்து நிறங்களிலும் மக்கள் இருந்தனர்.

அமெரிக்காவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், வெள்ளையர் – வெள்ளையரல்லாதோர் இடையே ஒற்றுமைக்குச் சாத்தியமில்லை என்பதாக நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், கஅபாவில் ஒற்றுமையையும் சகோதரத்துவ உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான கிரியைகளை நிறைவேற்றினோம்.

அமெரிக்கா இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்த மார்க்கம் மட்டும்தான் தன்னுடைய சமூகத்திலிருந்து இனப் பிரச்சினையை முற்றிலுமாகத் துடைத்து அகற்றியிருக்கிறது.

முஸ்லிம்கள் நாடுகளில் நான் மேற்கொண்ட பயணங்களில், அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்று அறியப்படும் மக்களைச் சந்தித்தேன், அவர்களுடன் பேசினேன். அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினேன். அவர்கள் மனங்களிலிருந்த வெள்ளை நிறவெறி மனப்பான்மையை இஸ்லாம் நீக்கியிருந்தது. எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைத்து நிற மக்களும் ஒருசேர உண்மையான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியதை நான் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை.

என்னிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.

ஆனால், இந்த யாத்திரையில் நான் கண்டவையும் அனுபவித்தவையும் என் சிந்தனையையும் முந்தைய நிலைப்பாடுகளையும் முற்றிலுமாக மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தியிருக்கின்றன. இதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. நான் எப்போதும் நிதர்சனத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனிதனாக இருக்கவே முயன்றிருக்கிறேன். நான் எப்போதும் திறந்த மனத்துடன் இருந்திருக்கிறேன். சத்தியத்தைத் தேடும் அறிவார்ந்த பயணத்தில் நெகிழ்வான மனப்பாங்கு அவசியம்.

கடந்த 11 நாள்கள் அறபு நாடுகளில் பயணம் செய்தபோது நீல நிறக் கண்கள், பொன்னிறத் தலைமுடி, வெள்ளைத் தோல் எனப் பலதரப்பு முஸ்லிம்களுடன் ஒரே தட்டில் உணவருந்தி, ஒரே குவளையில் பருகி, ஒரே படுக்கையில் உறங்கி, ஒரே இறைவனை வணங்கினேன். நைஜீரியா, சூடான், கானா ஆகிய கறுப்பின ஆஃப்பிரிக்க முஸ்லிம்களிடையே கண்ட அதே நேர்மையை வெள்ளையர்களிடமும் கண்டேன்.

உண்மையில், நாம் அனைவரும் சமம். ஓரிறைக் கொள்கை அவர்கள் மனங்களிலும், நடத்தையிலும், அணுகுமுறையிலும் இருந்த ‘வெள்ளை’ நிறவெறியை அழித்துவிட்டது. வெள்ளை அமெரிக்கர்களாலும் ஓரிறைக் கொள்கையை ஏற்க முடிந்தால் அவர்களும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடும்.

நிறத்தால் வேறுபடுத்தித் தீங்கு விளைவிப்பதை நிறுத்தக் கூடும். குணப்படுத்த முடியாத புற்றுநோயைப் போன்று அமெரிக்காவை இனவெறி பீடித்திருக்கும் நிலையில், தாமதிக்காமல், கிறிஸ்தவர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் வெள்ளை இன அமெரிக்கர்கள் ஆக்கப்பூர்வமான இந்தத் தீர்வை திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புனித பூமியில் நான் செலவிட்ட ஒவ்வொரு மணி நேரமும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்க்கும் வெள்ளையர்களுக்கும் இடையே என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய ஆன்மிக நுண்ணறிவைப் பெற எனக்கு உதவியது. 400 ஆண்டுகாலக் கொடுமைகளுக்கு அமெரிக்க நீக்ரோக்கள் எதிர்வினையாற்றுகின்றனர். ஆனால் இந்த இனவெறி, அமெரிக்காவை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும்போது இளம் தலைமுறையினர் அதன் பேராபத்தை உணர்வார்கள் என்று நம்புகிறேன். அவர்களில் பலர் சத்தியத்தின் ஆன்மிகப் பாதைக்குத் திரும்புவார்கள். அது ஒன்று மட்டுமே இனவெறியால் ஏற்படும் அழிவைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி.

இதற்கு முன்பு நான் இந்தளவுக்கு உச்சபட்ச கண்ணியத்தோடு நடத்தப்பட்டதில்லை. இது என்னைத் தகுதியற்றவனாகவும் தாழ்மையாகவும் உணர வைக்கிறது. ஓர் அமெரிக்க நீக்ரோவுக்குக் கிடைத்த இந்தப் பாக்கியங்களை யார்தான் நம்புவார்? அமெரிக்காவில் நீக்ரோவுக்குக் கிடைக்காத, ஓர் அரசனுக்கு மட்டுமே கிடைக்கும் கெளரவத்தை நானும் அடைவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

எல்லாப் புகழும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ்வுக்கே!”

(நன்றி: The Companion)

(தமிழில்: அபு ஹம்ஸா)

Related posts

Leave a Comment