கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிலருக்கான  சிறப்புச் சலுகையே மனிதநேயம்: விசாரணையின்றி ஆறாண்டுகளாக இந்தியச் சிறையில் வாடும் உமர் காலித்

Loading

சிறைச்சாலைகளில் மாலைப் பொழுதுதான் மிகவும் கொடுமையானது. டெல்லியின் மிக மோசமான அந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள், தங்களின் அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருள் சூழும் வரை ஈரமான வெளி முற்றத்தில் இருக்க வற்புறுத்தப்படும்போது, கைதி எண் 626714-க்கு ஒருவித பயமும் நடுக்கமும் தொற்றிக் கொள்கிறது.

இருப்பினும், உமர் காலித் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் அந்த அரசியல் கைதி, இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஒரு முகாமில் நாடுகடத்தப்பட்ட மற்றொரு அரசியல் கைதி, சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்றதொரு மனநிலையைப் பற்றி எழுதியிருப்பதை அறிந்து நெகிழ்ந்து போனார்.

2020-இல் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் அளிக்கும் இந்த முதல் நேர்காணலில், “சிறை நினைவுக் குறிப்புகளில் தஸ்தயேவ்ஸ்கி சூரியன் மறையும் வேளையில் ஏற்படும் இந்த மனநிலையைக் குறிப்பிட்டுள்ளார்,” என்று காலித் கூறினார். “உங்கள் வாழ்க்கையின் மற்றொரு நாளும் சிறையிலேயே கழிந்துவிட்டது என்பது மனதிற்குள் உறைக்கத் தொடங்குவதால்தான் இந்த நிலை ஏற்படுகிறதோ என்று நான் நினைக்கிறேன்.”

திஹார் சிறையின் சுவர்களுக்கு வெளியே, இந்தியாவில் காலிதின் பெயரை அறியாதவர்கள் மிகச் சிலரே. கடந்த பத்தாண்டுகளில், முதலில் ஒரு தீவிரமான மாணவர் தலைவராகவும், பின்னர் 2019-இல் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதையும் உலுக்கிய குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் முகமாகவும் அவர் உருவெடுத்தார். இதுவே அந்த அரசு எதிர்கொண்ட முதல் பெரிய சவாலாகும். ஆனால், செப்டம்பர் 2020-க்குள், டெல்லியில் நடந்த கொடூரமான மதக் கலவரங்களுக்குப் பின்னால் இருந்த “முக்கிய சதியாளர்” என்றும், “வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை” ஏற்படுத்த முயன்றார் என்றும் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் அவரது பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.

மனித உரிமை அமைப்புகளைப் பொறுத்தவரை, 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்துவரும் பாரதிய ஜனதா கட்சி (BJP), எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்காக நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டின் பின்னணியில், காலித் மாற்றுக் கருத்துக்களை ஒடுக்குவதற்கான ஒரு குறியீடாகவே மாறிவிட்டார்.

முஸ்லிம் மற்றும் இடதுசாரி மனித உரிமை செயல்பாட்டாளரான காலித், இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாட்டிலிருந்து இந்து தேசமாக மாற்ற முயலும் பாஜகவின் இந்து தேசியவாத கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சிப்பவர் ஆவார். மோடி அரசு நாட்டின் 20 கோடி முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலைத் தூண்டிவிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், மதப் பாகுபாடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், விசாரணையின்றி காலித் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அநீதியானது என்று பரவலாகக் கண்டித்துள்ளன. நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி, காலிதுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கையால் எழுதிய ஒரு கடிதத்தை அனுப்பினார். இது இந்திய அரசின் கடுமையான கோபத்தைத் தூண்டியது. இந்தியாவின் நீதித்துறை சுதந்திரமானது என்றும், காலித் மீதான சட்ட நடவடிக்கை அரசியலோடு தொடர்புடையது அல்ல என்றும் பாஜக வாதிடுகிறது.

அவரது சிறைவாசக் கட்டுப்பாடுகள் காரணமாக, ‘தி கார்டியன்’ நாளிதழால் காலிதை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை. எனவே கேள்விகளும் பதில்களும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலமாகவே பரிமாறப்பட்டன.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு பெரும் பொய்ப் பிரச்சாரத்தை இத்தனை ஆண்டுகளாக எதிர்கொண்ட பிறகு, தான் முற்றிலும் நிலைகுலைந்து போகாமல் இருப்பதே கடினமாக உள்ளது என்று 38 வயதான காலித் ஒப்புக்கொள்கிறார்.

“நீங்கள் வெறும் ஒரு பிம்பமாக (நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ) மட்டுமே சுருக்கப்படும்போது, சில நேரங்களில் உங்கள் மனிதநேயத்தை மட்டுமல்ல, உங்கள் மனநலத்தைக் கூட தக்க வைத்துக் கொள்வது கடினமாகிவிடுகிறது” என்று அவர் கூறினார்.

“உங்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள் கூட, நானும் பலவீனங்கள், பயங்கள் மற்றும் குறைபாடுகள் கொண்ட ஒரு மனிதன் என்பதை மறந்துவிடுகிறார்கள். சிறையில் கழிந்த இந்த நீண்ட ஆண்டுகள் என் மனதையும் உடலையும் கடுமையாகப் பாதித்து, எனக்குள் இருக்கும் கவலைகளையெல்லாம் மேலும் அதிகமாக்கியுள்ளன” என்கிறார்.

இருப்பினும், சிறை ஆண்டுகள் மோடி அரசு மீதான அவரது நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தியாவில் இந்து தேசியவாதம் ஆதிக்க சக்தியாக மாறியுள்ள நிலையில், வெறுப்புப் பேச்சுகளும் கொடூரமான மொழியும் இயல்பாக்கப்பட்டு, பெருமையாகப் பேசப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சியடைவதாகக் காலித் விவரிக்கிறார்.
இன்று, “இந்தியா உண்மைகளுக்குப் புறம்பான ஒரு சமூகமாக (Post-truth society) மாறும் நிலை கிட்டத்தட்ட முழுமையடைந்து விட்டது” என்று அவர் கூறினார்.

அவரது வழக்கு அல்லது திஹார் சிறையின் நிலமைகள் குறித்து விவாதிக்க வேண்டாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் மௌனமாக இருப்பது ஒரு வழியே அல்ல என்பதை காலித் தெளிவுபடுத்தினார்.
“உடன் அமர்ந்து உணவு உண்ட சக கைதிகள் கூட ‘பயங்கரவாதி’ என்று உங்களுக்குப் பின்னால் முணுமுணுப்பதை நீங்கள் கேட்க முடியும். இந்தப் பிரச்சாரம் மக்களின் பார்வையில் என்னை ஒரு மனிதனாக இல்லாதவாறு மாற்றிவிடுகிறது. மனிதநேயம் என்பது என்னைப்போன்ற மனிதர்களுக்கு வழங்கப்படாத ஒரு தனிச்சிறப்புரிமை (Privilege) ஆகும்” என்று அவர் கூறினார்.

‘மௌனம் இந்த ஆட்சிக்குத் துணிச்சலைத் தருகிறது’

தென்கிழக்கு டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜாமியா நகர் பகுதியில் வளர்ந்த காலித், இந்து தேசியவாத அரசியலின் எழுச்சி எவ்வாறு சமூகத்தை மத ரீதியாகப் பிளவுபடுத்தத் தொடங்கியது என்பதையும், முஸ்லிம்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் எவ்வாறு பறித்தது என்பதையும் நேரில் கண்டதாகக் கூறினார்.

“முஸ்லிம்கள் மென்மேலும் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, அரக்கர்களாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நான் ஒரு முஸ்லிம் சேரியில் (Ghetto) வளர்ந்தேன். எந்தவொரு உணர்வுப்பூர்வமான மனிதனும் இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருப்பது சாத்தியமே இல்லை” என்று அவர் கூறினார்.
டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் (PhD) படிக்கும் போது, அங்கு செழித்து வளர்ந்த மாணவர் அரசியலில் காலித் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆனால், இடதுசாரி செயல்பாடுகள், அறிவுஜீவித்தனம் மற்றும் விவாதங்களின் கோட்டையாகக் கருதப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தை வலதுசாரி சிந்தனையாளர்கள் உடைக்க முயன்ற  போது, காலித் முன்னிலைக்குக் தள்ளப்பட்டார்.

2016-ஆம் ஆண்டு JNU-வில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் பங்கேற்ற பிறகு, காலித் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது ஊடகங்கள் அவரை நாட்டிற்கு ஆபத்தான “தேச விரோதி” என்று சித்தரித்து அதிர்ச்சியூட்டும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. அந்தப் புள்ளியிலிருந்து, “என் வாழ்க்கை ஒருபோதும் பழையபடி இருக்கவில்லை” என்று காலித் கூறினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பதைக் கூட தடுக்க முயன்றது, அதை அவர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடி வென்றார். அது இந்த மாதம் அவரது முதல் புத்தகமாக ‘ஃபிராக்சர்டு கம்யூனிட்டீஸ்’ (Fractured Communities) என்ற பெயரில் வெளியாகவுள்ளது. (இப்புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது)

பாஜக அரசுடன் காலிதின் நேரடி மோதல் 2019-இல் அதன் உச்சத்தை எட்டியது. அப்போது அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்குப் பாகுபாடு காட்டுவதாகக் கருதப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் மையப்புள்ளியாக JNU வளாகம் மாறியது. பின்னர், மோடி அரசுக்கு எதிரான முதல் குறிப்பிடத்தக்க அரசியல் சவால்களில் ஒன்றாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

இந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக காலித் இருந்தார். “வன்முறைக்கு வன்முறையால் நாம் பதிலளிக்க மாட்டோம். வெறுப்புக்கு வெறுப்பால் பதிலளிக்க மாட்டோம். அவர்கள் வெறுப்பைப் பரப்பினால், நாம் அதை அன்பால் எதிர்கொள்வோம்,” என்று அவர் ஒரு புகழ்பெற்ற உரையில் கூட்டத்தினரிடம் பேசினார்.
ஆனால், அரசு இதற்கு இரக்கமற்ற முறையில் பதிலடி கொடுத்தது. போராட்டங்கள் கொடூரமான காவல்துறை வன்முறையால் ஒடுக்கப்பட்டன; பாஜகவோடு தொடர்புடைய நபர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைப் பேச்சுகளைப் பேசினர்.

பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரியில் டெல்லியில் மதக்கலவரங்கள் வெடித்தன. இணையவழிப் பொய்ப் பிரச்சாரங்களால் தூண்டப்பட்ட இந்து கும்பல்கள் தலைநகரில் வன்முறையில் ஈடுபட்டு, பள்ளிவாசல்களையும், முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்களையும் குறிவைத்தன. சில முஸ்லிம்களும் இதற்குப் பதிலடி கொடுத்தனர்.

மூன்று நாட்கள் நீடித்த இந்த வன்முறையில் உயிரிழந்த 53 பேரில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் டெல்லி காவல்துறை தங்களின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தபோது, எந்தவொரு பாஜக புள்ளியோ அல்லது இந்து வன்முறையாளர்களோ அதில் சேர்க்கப்படவில்லை. மாறாக, கலவரம் நடந்த சமயத்தில் 1,000 மைல்களுக்கு அப்பால் இருந்த காலித், இந்த கலவரங்களின் “முக்கிய சூத்திரதாரி” என்று குற்றம் சாட்டப்பட்டார்.

அவரோடு சேர்த்து ஒரு டசனுக்கும் மேற்பட்ட பிற முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர்களும் மாணவர் தலைவர்களும், “ஆயுதமேந்திய கிளர்ச்சி” மூலம் “நாட்டின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதலை” நடத்தச் சதி செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை “அதிர்ச்சியூட்டும் கற்பனைக்கதை” என்று காலித் விவரிக்கிறார். ஆனால் ஏழு மாதங்களுக்குப் பிறகு டெல்லி காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்து, நாட்டின் மிகக் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைது செய்தனர். அதன்பின்னர், டெல்லி கலவர வழக்குகளில் டெல்லி காவல்துறை போலி ஆதாரங்களை உருவாக்கியதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களை ஜோடித்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை தரப்பு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இதே வழக்கில் தொடர்புடைய சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், காலித் உள்ளிட்டவர்கள் வழக்கு மட்டும் தள்ளிப்போடப்பட்டு வருகிறது. அவரது பிணை மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணையைத் தொடர்ந்து தள்ளிவைப்பதும், தங்களை வழக்கில் இருந்து விடுவித்துக்கொள்வதுமாக உள்ளனர். அனைவருமே அவரது மனுக்களை நிராகரித்துள்ளனர். காலிதின் வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக கூறினாலும், அவரது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுவதை அது பகிரங்கமாக வரவேற்றுள்ளது.

“விடுதலைக்கான நம்பிக்கைகள் தொடர்ந்து சிதைக்கப்படுவது மிகவும் மனவேதனை அளிக்கிறது. மெல்ல மெல்ல எதிர்பார்ப்புகள் அழியத் தொடங்கின. எந்தவொரு நம்பிக்கையையும் பற்றிக்கொள்ளாமல் சிறைக்குள் உயிர்வாழ்வது உச்சக்கட்டக் கொடுமையாகும். அது உங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கும்” என்று காலித் கூறினார்.

காவல்துறை விசாரணை எந்தவொரு தெளிவான முடிவும் இன்றி, விசாரணைக்கான தேதியும் குறிக்கப்படாமல் நீண்டு கொண்டே போகும் நிலையில் அவர் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் சிறையிலடைக்கப்படும் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தவறிய, பலவீனமடைந்து வரும் எதிர்க்கட்சிகள் குறித்துக் காலித் தனது ஏமாற்றத்தை மறைக்கவில்லை. செயல்பாட்டாளர் தந்தை ஸ்டான் சுவாமி உட்பட சிலர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலேயே உயிரிழந்துள்ளனர்.

“ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நான் உண்மையிலேயே ஏமாற்றமடைந்திருப்பதையும் தனித்து விடப்பட்டிருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். எதிர்க்கட்சிகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் மக்கள் இயக்கங்களைப் பயன்படுத்தித் தங்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பிய பிரபல சமூகச் செயல்பாட்டாளர்களின் (Celebrity Activists) மௌனம், மாற்றுக்கருத்துடையோரை மேலும் வேட்டையாடுவதற்கு இந்த ஆட்சிக்குத் துணிச்சலைத் தருகிறது” என்றார்.

இரவு நேரங்களில்தான் காலிதுக்கு அமைதி கிடைக்கிறது. சிறை அறைக்குள் திரும்பியதும், வார்டனின் சாவிகளின் சத்தம் தேய்ந்து அமைதி நிலவும் போது, அவரது நாட்குறிப்பிலிருந்து எடுத்துச் சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள் – அவர் உறங்குவதற்கு முன் அவருக்குச் சில ஆறுதல்களைத் தருகின்றன.

காலனித்துவ எதிர்ப்புப் புரட்சியாளர் பகத் சிங்கின் படத்திற்கு அருகில், காலித் அவரது புகழ்பெற்ற வாக்கியத்தை எழுதியுள்ளார்:
“சிறைவாசத்திலும் சுதந்திரமாக இருக்கும் அந்தப் பைத்தியக்கார ஆன்மா நான்.”

ஹன்னா எல்லிஸ்-பீட்டர்சன், டெல்லி

தமிழாக்கம்: A. செய்யது அலீ

The Guardian

Related posts

Leave a Comment