கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

Loading

“Who taught you to hate yourself?” என்பது மிகப் பிரபலமான கேள்விகளில் ஒன்று. அக்கேள்விதான் கருப்பின மக்கலிடம் ‘நம்மை வெறுக்க நமக்கு யார் கற்றுத் தந்தது?’ என்கிற மிகப்பெரிய சிந்தனா மாற்றத்தை உருவாக்கியது. கருப்பின மக்கள் குழுமியிருந்த அந்த மிகப் பெரிய சபையில் இச்சிந்தனையை உதிர்த்தவர் புரட்சியாளர் மால்கம் எக்ஸ். அவர் உதிர்த்த அதே புள்ளியில் இருந்து நானும் இக்கட்டுரையை துவங்குகிறேன்.

காலம் காலமாக சினிமாக்களில் முஸ்லிம்களுக்கான இடமும் கருப்பொருளில் அவர்கள் காட்டப்படும் இடமும் வெறுமென உப்புக்கு சப்பாக இருந்திருக்கிறது. முஸ்லிம்கள் இன்ன இன்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று, அல்லது எழுதப்படாத விதி. அதையும் மீறி சில திரைப்படங்கள் ஆறுதலாக வந்தாலும், அவற்றில் பொது சமூகம் துறக்க மறுக்கிற எல்லா அடையாளங்களையும் அந்த முஸ்லிம் கதாபாத்திரம் துறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகிறது.

இக் காலகட்டத்தில்தான் ‘ஹபீபி’ வடிவத்தில் அசல் தன்மையுள்ள கதைகளையும் கதை மாந்தர்களையும் பொது சமூகத்திற்கு அப்பட்டமாக ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். ஹபீபி என்ன பேசுகிறது?

ஹபீபி அடிப்படையில் நெசவை நேசிக்கிற, அதுதான் தனது தொழில் என முழுமூச்சாக நம்புகிற யூசுஃப் என்பவரின் குடும்பத்தை சுற்றி பின்னப்பட்ட கதை. அத்துடன், நெசவு நொடிந்து போனதால் அக்குடும்பம், கிராமம், சுற்று வட்டாரம் சந்திக்கிற பிரச்னைகள், வெளிநாட்டு வேலை, சொந்த ஊரை பிரிந்து செல்கிற வலி, டேப் ரெக்கார்டர் வழியாக வலிகளை பகிர்ந்து கொள்ளும் கணவன் – மனைவி, துள்ளலான இளைஞர்கள் என கதை முழுக்க தமிழ் சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான எதார்த்த வாழ்வியலை பேசுகிறது.

கடையநல்லூருக்கு நெசவு எனில் எனது சொந்த கிராமமான ராமநாதபுரத்தின் எக்ககுடிக்கு உழவுதான் அடிப்படை. எனது அத்தம்மாவின் ஊரான பனைக்குளத்திற்கோ உப்பளமும், மீன்பிடித் தொழிலும்தான் அடிப்படை. இந்த எல்லாத் தொழில்களும் தொழிற்புரட்சிக்கு பின், இயந்திரங்களின் வருகைக்குப் பின், நொடிந்து போனதால் எல்லாருக்கும் கிடைத்த ஒரே வாய்ப்பு வெளிநாடுதான். ஹபீபிக்கு சொந்த ஊர் கடையநல்லூராக இருக்கலாம். ஆனால், உழவு, மீன்பிடி, குயவு என எங்கெல்லாம் தொழில்கள் நொடிந்து, உழைப்போடு காலத்தையும், இளமையையும் விற்று திர்ஹம்களாகவும், தீனார்களாகவும், ரியால்களாகவும் மாறியதோ அந்த எல்லா கிராமங்களின் கதைதான் ஹபீபி.

Landscape-ம் நேர்த்தியும்.!

கதைக்களம் பேசும் நிலம், கதபாத்திரங்கள் மற்றும் அக்கிராமம் அடைகிற Transformation-ஐ மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கையாண்டது மிகச் சிறப்பு. அதேபோல சின்னச் சின்ன டீட்டெய்லிங் படத்தின் கதையோட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. கிராமம் குறித்த எனது பால்யகால நினைவுகள் இன்னும் அப்படியே தங்கியிருக்கின்றன.

என்னை விட ஐந்து அல்லது ஆறு வயது மூத்த எனது மாமி மகளும் அவள் தோழிகளும் கதையில் வருகிற நிலோபரை போலவே காலை பஜ்ர் பாங்கு சொல்லும் முன்பு அல்லது மஹ்ரிப் பாங்கு சொன்ன பின்பு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். அதுதான் அவர்களின் ரிலாக்ஸான நேரம். அந்நேரத்திற்காக அவர்கள் காத்திருப்பார்கள், தங்களை சூடிக் கொள்வார்கள், கதைகளை சேகரித்துக் கொள்வார்கள். அவர்களை ஓரம் நின்று பார்ப்பதற்கு ஒரு இளைஞர் கூட்டம் இருக்கும். ஹபீபியில் சோப்பு ஒரு Reference என்றால் எனது கிராமத்தில் ஏதாவது ஒரு வெளிநாட்டு பொருள்தான் Reference. பவுடர், வாசனைத் திரவியம் என ஏதோவோன்று தாங்கள் நேசிக்கிற பெண்களுக்காக சேமித்து வைக்கப்பட்டது.

இப்படத்தில் வரும் சாலிஹாவின் கதாபாத்திரம் போன்று பெரும்பாலும் எல்லா முஸ்லிம் வீடுகளிலும் ஒரு சாச்சியோ, மாமியோ, பெரியம்மாவோ, மச்சியோ நிச்சயம் இருப்பார்கள். அவர்கள்தான் சரியத் தொடங்கும் குடும்பத்தை தனது உச்சபட்ச பலம் கொண்டு தூக்கி நிறுத்துவார்கள். அந்த சாச்சிகளை நினைவு கூராமல் எந்த கதையும் நிறைவுறுவதில்லை.

யூசுஃபின் காலத்தில் கடையநல்லூர் எப்படி இருந்தது, அது எப்படி வெளிநாடு வாழ்க்கைக்கு பிறகு மாறுகிறது என்பதை ஒரு ட்ரோன் காட்சியில் மிக நேர்த்தியாக காண்பித்திருப்பார் இயக்குநர் மீரா கதிரவன்.

எது வாழ்வியல்??

பொதுவாக இந்திய சினிமாக்களில் வாழ்வியலாக காட்டப்படும் பெரும்பாலான கதைகள் கட்டமைக்கப்படும் பிம்பங்களாக மட்டுமே இருக்கின்றன. அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு கதை நம்மை துளைக்க வேண்டும் எனில் அக்கதையோடு நகமும் சதையுமாக நாம் பிணைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அக்கதை நம்முடைய கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. அது நமது மென்னுணர்வுகள் சம்பந்தப்பட்டது. ஈரானிய சினிமாக்களும், ஆப்கானிய நாவல்களும், பாகிஸ்தானிய நாடகங்களும் நமக்கு ஏன் Connect ஆகிறது என்று பார்த்தால் அவை கடத்துகிற மென்னுனர்வுகள்தான்.

Landscape, Language, Life என எல்லாவற்றையும் தாண்டி நமக்கு கடத்த வேண்டிய உச்சமான உணர்வுகளை அவை கடத்துகின்றன. ‘நமது வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தானே. பிறகு திரையிலும் அது வேண்டுமா?’ என நீங்கள் கேட்கலாம். நியூட்டனுக்கு கிடைத்த ஆப்பிள் இப்போதுதான் எங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. நாங்களும் கொஞ்சம் கதை சொல்கிறோம். எங்களிடமும் தொப்பி, தாடி, தாயத்து, முட்டி வரை கட்டப்பட்ட கைலியை கடந்து சொல்லப்பட வேண்டிய ஒரு வாழ்வியல் இருக்கிறது. அதுவும் அசல் தன்மையோடு இருக்கிறது. அதை கேளுங்கள் அன்பானவர்களே என ஒரு அழைப்பிதழை விட்டிருக்கிறது ஹபீபி.

ஹபீபி வரத் தாமதம் ஏன்?

ஹபீபி வர ஏன் இத்தனை காலம் என்கிற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கிறது. மலையாள சினிமாவின் வெற்றிக்கு, அதிலும் குறிப்பாக ஆதமிண்டே மகன் அபு, தள்ளுமலா, சுலைகா மன்சில், மாலிக் என பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததற்கு வெறுமனே கதையின் அசல் தன்மை மட்டும் காரணம் அல்ல. அதற்கு முன்பே வைக்கம் முகம்மது பஷீர், மொய்தின்குட்டி வைத்தியர், புனத்தில் குஞ்சு அப்துல்லா உள்ளிட்ட எழுத்தாளர்கள் முஸ்லிம் கதாபாத்திரங்களால் மலையாள எழுத்துலகில் சமரசமின்றி தங்களது ஆக்கங்களை கொண்டு வந்ததன் விளைவுதான் இன்று மலையாள சினிமா சிறிதளவேனும் அதனை அறுவடை செய்கிறது.

ஒரு சமூகத்தின் வாழ்வியல் சாயலாக எப்போதும் இலக்கியங்கள்தான் இருந்திருக்கின்றன. அப்படி தமிழ் இலக்கியத்தில் பால்யகால சகி மாதிரியான ஒரு கதைக்களம் எழுதப்படவே இல்லை என்று பொதுவாக கூற முடியாது. ஆனால் அவை பொது நீரோட்ட வாசிப்பு தளத்தில் சேர்க்கப்படவில்லை; அல்லது சேர்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் வாழ்வியலை தாங்கி நிற்கும் கதைகளின் பின்னடைவிற்கான காரணம். அந்த வெற்றிடம் இலக்கியத்தின் அடுத்த நகர்வாக பார்க்கப்படுகிற சினிமாவுக்குள்ளும் வந்துவிட்டது. அதுதான் ஹபீபி மாதிரியான படங்களை பிரசவிப்பதை தாமதப்படுத்தியது என்றே சொல்லலாம்.

ஹபீபி திரைப்படத்தில் ஒரு விமர்சகனாக எனை கவர்ந்த இரண்டு காட்சிகள் இருக்கிறது. அதில் சினிமாத்தனத்தை தாண்டி கவிதை உள்ளது. அபுதாஹிர் சுன்னத் கல்யாணம் முடிந்து தேங்காய் கொரித்துக் கொண்டிருப்பான். நிலோபர் ஜன்னல் ஓரத்தில் நின்று எட்டிப் பார்த்து சிரித்து விட்டுச் செல்வாள். இதே காட்சியை அப்படியே பால்யகால சகி கதையில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியிருப்பார்.

அதேபோல சாலிஹாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து பெட்டி பிரிக்கும்போது ஊரில் உள்ள வெறொரு நபரின் பெயரில் தனியாக பார்சலை மனைவிக்காக ஒளித்து வைத்துக் கொண்டு வரும் காட்சி. அக்காட்சியில் கணவன் கெஞ்சுவான்.., சாலிஹா அதனை தட்டிவிடுவது போல கோபப்பட்டுக் கொண்டே, அதுவரை மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்த ஜமுக்காலத்தை எடுத்து கட்டிலில் விரித்து ஒழுங்குபடுத்துவாள். இந்த காட்சியில் காத்திருப்பு, காதல், ஊடல், கோபம் என எல்லாம் இருக்கும். ஒரு காதல் கவிதைக்கு நிகராக இக்காட்சியை வடிவமைத்திருப்பார் மீரா கதிரவன்.

கதைக்குள் கதைகள்!

கதையின் ஆழமான ஓட்டங்களுக்கு இடையே கதையை எந்த தொந்தரவும் செய்யாமல் மாயா ஏஞ்சலோ, காயிதே மில்லத், மார்டின் லூதர் கிங் , பெரியார், அண்ணல் அம்பேத்கர், கவிஞர் இன்குலாப் ஆகியோர் வந்து போகிறார்கள். அவர்களின் தீப்பொறி வார்த்தைகள் சுருக்கென்று குத்தத்தான் செய்கிறது. அஞ்சுமன் நூலகத்தின் நூலகரும், மதரஸாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சுதந்திர தின உரையாற்றுகிற சமூக செயல்பாட்டாளரும் பேராசிரியருமான மஞ்சுளாவும் கன கச்சிதமாக பாத்திரத்திற்கு பொருந்திப் போகிறார்கள். குறிப்பாக பர்வீன் கதாபாத்திரத்தின் தந்தையாக வரும் சன் டிவி சாகுல் ஹமீது தனது பாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.

கதைக்கு வலு சேர்த்த எழுத்து, இசை, கலை, ஒப்பணை..!

ஹபீபியில் அழுத்தமான கதை சொல்லல் இருக்கிறது. அது திரைமொழியின் திசைவழியை அழகாகக் கொண்டு செல்கின்றது. கடையநல்லூரின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை மூன்று தலைமுறை இடைவெளிக்கு ஏற்றவாறு வித்தியாசங்களை திரைக்கதையில் காட்டியுள்ளார்கள். அதற்கு மிக முக்கியக் காரணம் இப்படத்தின் திரைக்கதைதான். இதனை பல ஆய்வுகள் செய்து எழுதிய வி.எஸ்.முஹம்மது அமீனின் அளப்பரிய உழைப்பை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்ததாக கதைக்கு வலு சேர்த்த மிக முக்கிய அம்சங்களில் ஒன்று இசை. நாகூர் ஹனிபாவின் குரல், சூஃபி பாணியில் பாடல் இடையிடையே வரும் பின்னணி இசை என சாம்.சிஎஸ் மெனக்கெடல் படத்தோடு ஒன்றிப்போய் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

படம் பேசும் கதைக்களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு தேவைப்படும் கலை நயம் முக்கியமான ஒன்று. அதை கலை இயக்குநர் மிக அருமையாக செய்திருக்கிறார். மிக முக்கியமாக ஹபீபியை நம்முடையது என்று சொந்தம் கொண்டாடியது படத்தில் இடம்பெற்ற ஒப்பணைகள்தான். சிறு குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள், மரணப் படுக்கையில் கஸ்தூரி ராஜா என எந்த கூடுதலும் இல்லாமல் கன கச்சிதமாக ஒப்பணையை கையாண்டிருக்கிறார் ஒப்பணைக் கலைஞர் சலீம். அதிலும் குறிப்பாக சாலிஹா வயதின் பரிமாற்றம், காத்திருப்பின் வலி, அவளது கணவனின் தோற்றம் என அச்சு பிசகாமல் தனது வேலையை செய்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் நிலோபரின் உருமாற்றம், அவளின் முகத்தில் இருக்கிற வெறுமை என ஒப்பணைக் கலைஞரின் மெனக்கெடலை பாராட்டியே ஆக வேண்டும். கதையின் நாயகன் ஈசா ஒவ்வொரு பருவத்தின் மாற்றங்களையும் மிக நேர்த்தியாக கையாண்ட விதம் அருமை.

Who taught you to hate yourself?

ஹபீபி திரைப்படம் வெளியானதிலிருந்து பாராட்டும் எதிர்ப்புமாக விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அவை சிலபோது எல்லை மீறிய, பெண்டுலத்தின் இரு பக்கங்களை போல Extreme அளவுக்கு சென்றன. முஸ்லிம்களின் வாழ்வியலில் இருக்கிற நல்லது , கெட்டது என எதையும் நீக்காமல் எதார்த்தத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது ஹபீபி. முஸ்லிம்களில் யூசுஃப் போல, சாலிஹா போல, அபுதாஹிர் போல, பணம் வாங்கி ஏமாற்றும் மன்சூரைப் போல , பர்வீனின் தந்தை போல என எல்லாரும் இருக்கிறார்கள். பிறகு என்ன பிரச்னை?? நமது எதார்த்த வாழ்வியலை திரையில் கண்டு வெறுக்க நமக்கு யார் கற்றுத் தந்தது.??.

இத்தனை காலம் தீவிரவாதிகளாகவும், சமரசம் செய்து கொள்பவர்களாகவும், பயந்து நடுங்குகிறவர்களாகவும், பாவப்பட்ட புனிதமானவர்களாகவும், திருமணத்திற்காக மதம் மாறுகிறவர்களாகவும் பார்த்துப் பார்த்து வெறுத்த நமக்கு, நமது நல்லது கெட்டது எல்லாமே இருக்கிற எதார்த்த வாழ்வியலை பார்த்தவுடன் வெறுக்க யார் கற்றுத் தந்தார்கள்? சிறை, மாநாடு ஆகிய திரைப்படங்களை கண்டு ஆறுதல் என சிலாகித்தவர்கள் அசல் தன்மையுள்ள ஒரு முழு முதல் முஸ்லிம் வாழ்வியல் திரைப்படத்தை எதற்காக இவ்வளவு காத்திரமாக எதிர்க்க வேண்டும்?

நம்மை நாமே வெறுக்க நம்மை அறியாமல் யாரோ நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். ஈரானிய சினிமாக்களை உலகம் கொண்டாடுகிறது. அதன் வாழ்வியலை , மென்னுணர்வுகளை தனதாக்கி போற்றுகிறது. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? வெகுஜன ஊடகங்களாக இருக்கிற இலக்கியத்திற்குள்ளும் சினிமாவிற்குள்ளும் புகாமல் பச்சாதாபம் தேடவோ, மீட்பருக்காக காத்திருப்பதோ நம்மை எப்படி முன்னோக்கி இட்டுச் செல்லும்?

ஹபீபியில் எதிர் விமர்சனங்களே இல்லையா எனக் நீங்கள் கேட்கலாம். இயக்குநர் மீரா கதிரவன் மலையாள இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அதனால் இயல்பாக மலையாள திரைமொழியின் சாயல் இருக்கத்தான் செய்கிறது. யூசுஃபின் மாற்றுமத நண்பராக வருகிறவரின் கதாபாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அதேபோல பர்வீன் கதாபாத்திரத்தில் ஏதோவொரு Perfection மிஸ் ஆவதைப் போல தோன்றுகிறது.

மொத்தத்தில் ஹபீபி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கமாகட்டும். ஹபீபியின் கரங்களை பற்றிக் கொண்டு நட்பு பாராட்ட ஓராயிரம் விரல்கள் வரட்டும். உலக அரங்கில் அவ்விரல்கள், அக்கரங்கள் நமது வாழ்வியலின் காத்திரமான கதைகளுக்காக கரவொலி எழுப்பட்டும். பேரன்பின் ஆதி ஊற்றிலிருந்து சிந்திய ஓர் துளி ஹபீபி.

‘சிங்கம் தனது கதைகளை சொல்லாதவரை இந்த உலகம் வேட்டையாடிகளையே புகழ்ந்து கொண்டிருக்கும்’ – ஆப்ரிக்க பழமொழி –

Related posts

Leave a Comment