அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே! ஹுசைனே! (பாடல்)
![]()
பூமியை விரித்து வைத்தோன்,
வானங்களைப் படைத்தோன் — அந்த
இறைவனின் மீது சத்தியமாக!
வேத வெளிப்பாட்டின் மீதும்,
வானவர் கோன் கொணர்ந்த
அத்தாட்சிகள் மீதும் சத்தியமாக!
உயிர்த்தெழுப்பப்படும் நாள்வரை
கண்ணியத்துடன் நான் கூவியழைப்பேன்!
கண்ணியத்துடன் மரணிப்பேனே அன்றி,
இழிவுடன் அல்ல. ஒருபோதும் அல்ல!
ரத்த தாகம் கொண்ட வாள் என் தலையை
வெட்டித் துண்டாக்கினாலும்,
போருக்கு உருவிய வாள் எனது
ஈரலைக் கூறுபோட்டாலும்,
அன்றுதித்த என் பூவிடம் அவர்கள்
நீருக்குப் பதிலாக திரிசூலம் பாய்ச்சினாலும்,
என் சகோதரரின் வேதனையால்
பகைவர் என் முதுகை முறித்தாலும்,
கண்ணீரால் யாம் கொல்லப்பட்டு
கவலைகள் எம்மைச் சிறைப்பிடித்தாலும்,
கர்பலாவில் யான் அடைந்த துயரங்களை
வெறுமனே பேனாவும் மசியும் கொண்டா எழுதுவீர்?
ஒருபோதும் இல்லை! துயரங்கள்
கண்ணீரால் மட்டுமே எழுதப்பட இயலும்!
பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு
நாற்றிசையில் இருந்து கணை தொடுத்தாலும்,
என் தலையும் தோளும் உடலும்
வாளின் வீச்சுகளை வாங்கினாலும்,
கல் ஒன்று என் நெற்றியைத் தாக்கி
முகத்தைக் குருதியால் மூடினாலும்,
நீருக்குப் பதிலாக என் பகைவன்
நெருப்பினை எனக்களித்தாலும்,
என் மகனின் கடுங் காய்ச்சலால்
நான் நூறு முறை இறந்துபட்டாலும்…
அவர்கள் எனக்கு அநீதம் செய்தனர்;
என்னைக் கொன்றனர்;
நான் யார் என்பதை மறந்துவிட்டனர்!
நான் துயரும் நோவுமான ஓர் உலகில் உய்ந்தேன்.
உலகின் சோகங்கள் அனைத்தும் அங்கே திரண்டன.
நூறு வெட்டுகளை நான் காணும்படி
விதித்த அந்த இறைவன் மீது சத்தியமாக!
இருநூறு ஈட்டிகளும் வாள்களும்
ஒருபோதும் என் உடலைப் புண்படுத்தவில்லை.
வானங்களிலும் பூமியிலும் வசிப்போர்
அனைவரையும் அழைத்துவந்து
என்னை எதிர்த்து அவர்கள் போரிட்டாலும்,
கொடுங்கோலரின் கையில் கை சேர்க்க மாட்டேன்!
இழிவை ஒருபோதும் ஏற்கமாட்டேன்!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
*****
இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்னும்
வாக்குறுதியை உடைத்ததில்லை ஒருபோதும் நான்!
சத்தியமிட்டுச் சொல்கிறேன்,
இறைவன் அல்லாததை ஒருபோதும்
வணங்கியதில்லை நான்!
சத்தியமிட்டுச் சொல்கிறேன்,
அல்லாஹ்வின் சிங்கத்தின் மைந்தன் நான்!
தூய அன்னை ஃபாத்திமாவின் மகன் நான்!
அறபி நான், அலவி நான்,
குறைஷி என்னும் விருட்சத்தின்
கிளையில் உதித்தவன் நான்!
உஹது, பத்ருப் போர்க் களங்களின்
உன்னத வீரன் பெற்ற குமரன் நான்!
நிலவு நிகர் ஃபாத்திமாவின் புதல்வன் நான்!
என் அனைத்தையும் அர்ப்பணித்தேன்!
என்னுடன் எழுபத்திரண்டு பேர்
இன்னுயிரை ஈந்தனர் இங்கே!
செந்தூர முகத்துடன் இதோ நான்!
சங்கறுந்து சிந்தும் குருதியுடன் நான்!
குறுவாள் கொண்ட தாகத்துடன் நான்!
இளமை தாளாத் துயருடன் நான்!
பாலை நிலத்தின் புழுதியுடன் நான்!
புரவிகளின் குளம்படிக்கீழ் கிடக்கிறேன் நான்!
நேர்வழியில் நடத்தும் இறைவனின் நேசன்,
கர்பலாவில் இதோ தன்னந்தனியே
ஆடை கிழிந்து, புழுதி படிந்து,
தாகத்துடன் நான் மரணத்தைச் சுவைப்பது
விசித்திரமே! விசித்திரமே!
குருதியால் தாடி சிவப்பாகிக் கிடக்கும்
என்னைப் பாதுகாக்க யார் இங்கே?!
வெட்டுண்ட நரம்புகளும் நாளங்களுமாய்
இதயம் புண்ணாகி இங்கே கிடக்கிறேன்;
தாகம் கொண்ட என் பச்சிளங் குழவியுடன்,
சிறை அடைந்த என் செல்ல மகளுடன்
இதோ பாலையில் கிடக்கிறேன்!
இருந்தாலும் இங்கே நான் இருக்கிறேன்,
நித்திய ஜீவியனும் பூர்வீகனுமான
என் இறைவனுடன்!
என்னினும் மேலாய் இங்கே
இறைவனை வணங்குவோர் யாவர்?!
எவரிடம் தொழும்போது வாள் வந்து சேர்ந்ததோ,
அவருக்கொரு குவிமாடம் நான்!
என் குழந்தை வெட்டப்பட்டு,
என் குடும்பம் பிடிக்கப்பட்டு,
என் கழுத்தும் துண்டிக்கப்பட்டு
நதியருகில் தாகத்துடன்
நான் நசிக்கப்படும்போது
குருதி வழியும் காயங்களுடன் இருக்கிறேன்!
குர்ஆனின் வசனங்களுடன் இருக்கிறேன்!
உலர்ந்து போன நாக்குடன் இருக்கிறேன்!
அம்பு நுனிகள் தைத்தவனாய் இருக்கிறேன்!
எல்லோரும் வந்து காணுங்கள்…
எம் நிலைப்பாடு, கண்ணியம், மேன்மை!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
*****
இங்கே காணலாம் எல்லோரும்,
என்ன ஆயிற்று எனக்கு என்று!
ஹுசைனை இந்த மிருக நகங்கள் கிழிப்பதை
மனித குலத்தின் சிகர நபி சகிப்பார்களா?
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைவனின் திருத்தூதரின் மீதும்,
அபூ தாலிபின் மகனான அலீயின் மீதும்,
பரிசுத்த ஃபாத்திமத்துஸ் ஸஹ்றா மீதும்,
நற்குண நாயகராம் என் அண்ணன்
ஹசன் அல்முஜ்தபா மீதும்…
என் சகோதரனே!
குதிரைகள் என் நெஞ்சின் மீது
ஏறி மிதிப்பதைப் பார்த்தீரே, எப்படி இருந்தது?!
என் எழுபத்திரண்டு சகவாசியர்..
என் ஹபீபு, என் ஸுஹைர், என் திர்மாஹ்,
என் ஜுன்னு, என் வஹ்பு என்னும் தூய இதயத்தர்.
அப்பாஸின் கண்ணியம், மேன்மை,
கண்டிப்பின் மீது சத்தியமாக!
உஸ்மான் மற்றும் ஜஅஃபர் மீதாணை!
அகீலின் உயிர்த் தியாகியர் இருவர் மீதாணை!
அப்துல்லாஹ் மற்றும் காசிமின்
தூய இதங்களின் மீதாணை!
அலீ அக்பர் மீதாணை!
அவருற்ற நோவின் மீதாணை!
அலீ அஸ்கரின் மீதாணை!
அவர் உகுத்த ரத்தத்தின் மீதாணை!
துயர் மிகுதியால் இரு கைகள் கொண்டு
நிலவும் தன் நெஞ்சில் அடித்துக்கொள்கிறது!
மனமுடைந்து, புலம்பி, அழுது அரற்றியபடி
வெள்ளியென ஓடும் கண்ணீரைச் சொரிகிறது
’ஓ என் துணையே! என் தூண்டலே!
ஓ என் நேசரே! ஓ ஹுசைனே!’
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
*****
மதீனாவின் மல்லிகை மீது ஆணையாக!
ருகைய்யா மீதும், சகீனா மீதும் ஆணையாக!
ஸைனபின் உடைந்த இதயத்தின் மீதும்,
அவரின் மகன்களாம் தியாகியர் இருவர் மீதும்,
என் சின்னஞ் சிறு பிள்ளைகளின்
உலர்ந்து போன உதடுகளின் மீதும்,
என் பிரிய மகன் சஜ்ஜாதின் துவளுடல் மீதும் ஆணை!
இந்தக் கொடுங்கோலருக்கு அஞ்சி
ஒருபோதும் இங்கிருந்து ஓடமாட்டேன்!
உடன்படிக்கை செய்ய மாட்டேன்!
சமாதானம் பேசிப் பணிய மாட்டேன்!
ஈட்டி முனையில் இருக்கிறது என் தலை,
அல்லாஹ்வின் வழியில்,
என் நேசனுடன் உரையாடியபடி!
கவண் கற்களையும் கணைகளையும் தாங்குவேன்.
ஏனெனில், சத்தியமிட்டுச் சொல்கிறேன்,
இறைவனை அன்றி வேறு எதையும்
காணவில்லை நான்!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
*****
அறபியும் நபியும் ரசூலும் ஆனவரின் மீது ஆணை!
அன்னாரின் அருமை சகோதரராம்,
அல்லாஹ்வின் சிங்கமாம் அலீயின் மீதாணை!
அன்னை ஸஹ்றாவின் மீதாணை!
அவர் தந்தையின் அன்னை மீதாணை!
அன்னாரின் திருப்பேரர்களாம்,
அன்னாரின் சிங்கக் குருளைகளாம்
பரிசுத்தப் பிச்சளங்கள் மீதாணை!
அஸ்சஜ்ஜாது, அல்பாக்கிர், அஸ்ஸாதிக்
ஆகியோர் மீதாணை!
மூசா, அலீ, தகீ, நகீ மீதாணை!
சமர்ராவில் சிறைப்பட்டார் எனினும்
இறை வல்லமையால்
உண்மையுடன் எழ இருப்பவராம்,
ஊழிவரை ஆட்சி செய்ய
வாள் கொண்டு தாக்குபவர் மீதாணை!
முஹம்மது மீதாணை, முஹம்மது மீதாணை!
அலீயின் மீதாணை, அலீயின் மீதாணை!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
ஹுசைனே! அநீதம் இழைக்கப்பட்டீர் என் உயிரே!
(பாடியவர்: நஸார் அல்கத்தரீ; தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)

