விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்
![]()
சிறைகளின் உருவாக்கம் குறித்து தனது ‘Discipline and Punish: The Birth of the Prison’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார் பிரான்ஸ் சிந்தனையாளர் மைக்கேல் ஃபூக்கோ. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாட்டு மன்னரை கொலை செய்ய முயற்சி செய்த ஒரு நபருக்கு பொதுவெளியில் தண்டனை விதிக்கப்படுவதை அந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் மிக தத்ரூபமாக விவரித்திருப்பார் ஃபூக்கோ. பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அந்த மனிதனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வாசிக்கும் போது நமது இதயத் துடிப்பு நம்மையும் அறியாமல் அதிகரிக்கும்.
அரசின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்படும் இத்தகைய தண்டனைகள் இனி யாரும் மன்னருக்கு எதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதை உறுதிப்படுத்த பொதுவெளியில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திய இத்தகைய தண்டனைகள் சில சமயங்களில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தவும் செய்தன. குற்றவாளிக்கு தண்டனை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சித்திரவதையை காணும் மக்களுக்கு அவன் மீது பரிதாபமும் ஏற்பட்டது. இந்த பரிதாபம் சில சமயங்களில் மன்னருக்கு (அரசிற்கு) எதிரான சிந்தனையையும் செயல்பாட்டையும் தோற்றுவிக்கும் ஆபத்தும் இருந்தது.
இந்த ஆபத்தை உணர்ந்த ஆட்சியாளர்கள் மக்கள் முன்நிலையில் நிறைவேற்றப்பட்ட தண்டனைகளை சிறைச்சாலை என்ற நான்கு சுவர்களுக்குள் கொண்டு சென்றனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும் சிறைச்சாலைகள் இப்போதும் தனித் தீவுகளாகவே உள்ளன. சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளுடன் அவர்களின் நிலையும் வெளியுலகிற்கு தெரிவதில்லை.
வயது மூப்பு, நோய்கள், மனநல பிரச்சனைகள் என சிறைவாசிகள் எத்தகைய பிரச்சனைகளை சந்தித்தாலும் அது குறித்து பொதுமக்களுக்கு தெரிவதில்லை. பொதுமக்களை விடுங்கள், சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு கூட அவர்களின் நிலை பெரும்பாலும் தெரிவதில்லை. நீதிமன்ற விசாரணைக்கு வரும் போது அல்லது வழக்கறிஞர்கள் மூலம், என சில விதிவிலக்குகள் மூலமே அவர்களின் நிலையை குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர்.
குற்றவாளிகள் மட்டுமின்றி விசாரணை சிறைவாசிகள் அடைக்கப்படும் இடங்களாகவும் சிறைச்சாலைகள் உள்ளன. இந்திய சிறைகளில் உள்ள சிறைவாசிகளில் ஏறத்தாழ 75 சதவிகித சிறைவாசிகள் விசாரணை சிறைவாசிகள் என்பதை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒவ்வொரு வருடமும் வெளியிடும் அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ‘விசாரணை சிறைவாசிகள்’ என்று அழைக்கப்பட்டாலும் அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் விசாரணையும் இன்றி தண்டனையும் இன்றி சிறைச்சாலைகளில் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பதே கசப்பான உண்மையாகும்.
பீமா கொரேகான் வழக்கில் விசாரணை சிறைவாசியாக அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கப்படாததால் அவர் விசாரணை சிறைவாசியாகவே மரணத்தை சந்தித்தார். இச்சம்பவம் அப்போது சிறு சலசலப்பை ஏற்படுத்திய போதும் அதிகார வர்க்கம் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுவது மனித உரிமை மீறல் என்றால், உரிய மருத்துவ சிகிச்சையை மறுப்பது மற்றுமொரு மீறலாக உருவெடுத்து நிற்கிறது.
இ.அபூபக்கரின் நிலை
டெல்லி திஹார் சிறையில் ஏறத்தாழ நான்கு வருடங்கள் விசாரணை சிறைவாசியாக அடைக்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த இ.அபூபக்கரின் நிலை குறித்து ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவரான அபூபக்கர், செப்டம்பர் 22, 2022 அன்று அவரின் வீட்டில் வைத்து தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அந்த அமைப்பின் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். கைது படலத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்தது.
வயிற்றுப் புற்றுநோய்க்காக 2019இல் அபூபக்கருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றுப் பகுதியின் 80 சதவிகிதம் அகற்றப்பட்டது. இதன் பின்னர் 35 டிகிரி சாய்மானத்தில் இருக்கும் வகையில் அவருக்காக பிரத்யேக நாற்காலிகளை அவரின் குடும்பத்தினர் வடிவமைத்து அவரை கவனித்து வந்தனர். இந்த நிiயில் அமரவில்லையென்றால் அவர் உட்கொண்ட உணவு வெளியே வந்துவிடும். தற்போது 74 வயதாகும் அபூபக்கருக்கு பார்க்கின்ஸன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீர் அடைப்பு, உள்ளிட்ட நோய்களும் உள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்கு மருந்துகளை முறையாக உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அவரால் தனத சட்டை பொத்தானை கூட சுயமாக போட முடியாது.
செப்டம்பர் 22, 2022 அதிகாலையில் கைது செய்வதற்காக வந்த என்ஐஏ அதிகாரிகளிடம் இந்த விபரங்களை அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். முழு மருத்துவ ஆவணங்களையும் பெற்றுச் சென்ற என்ஐஏ அதிகாரிகள், அனைத்தையும் தாங்கள் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தனர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்வில் உள்ள இதுவரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லாத இந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்று அவரின் குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர். ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் இந்த நான்கு வருடங்களில் அவர் ஒருமுறை கூட தனது வீட்டிற்கு வரவில்லை.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் செல்பவர்களே நோயாளிகளாக மாற்றப்படும் சிறைச்சாலையில் வயதான, நோய்களை கொண்ட நபர்களின் நிலையை என்னவென்று சொல்வது? அபூபக்கரை மே 2026இல் பரிசோதனை செய்த டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர், ‘நோயின் இறுதிக் கட்;டத்தில் அவர் உள்ளதாகவும் நடப்பதற்கோ அல்லது நிற்பதற்கோ பிற நபர்களின் உதவி அவருக்கு தேவை’ என்றும் தனது மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்கே அவர் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் குறைந்து வந்த சர்க்கரை அளவு ஆகிய பிரச்சனைகள் இருந்த போதும், தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அவரை சேர்ப்பதற்கே மூன்று நாட்கள் ஆனது. அவரின் பாதுகாப்பிற்கு சென்ற டெல்லி காவல்துறையினர் அவரின் உடல்நிலை நன்றாக உள்ளதாக கூறி மீண்டும் மீண்டும் சிறைக்கே அவரை கொண்டு வந்தனர். மருத்துவ அதிகாரி ஒவ்வொரு முறையும் அவர்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். மூன்று நாட்கள் இதே நிலை நீடித்தது என்று அபூபக்கரின் மகள் அமல் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அபூபக்கரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தீனதயாள் மருத்துவமனையில் இருந்து நான்கு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். இன்னும் நல்ல சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக மற்றொரு இடத்திற்கு அவரை மாற்றுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.
அபூபக்கரின் மோசமான உடல்நிலை காரணமாக, சிறையிலேயே மரணித்த ஸ்டேன் சுவாமி, பண்டு நரோட்டே ஆகியோரின் நிலை அவருக்கு ஏற்பட்டுவிடுமோ என்று குடும்பத்தினரும் சமூக செயல்பாட்டாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சிறையில் நோய்களால் பாதிக்கப்பட்ட பலரும் இதே நிலையில்தான் உள்ளனர். இதே பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், ஒன்றரை வருடங்களுக்கு முன், சிறையில் வைத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் தொடர் சிகிச்சைகளை சிறை மருத்துவமனையிலேயே அவர் பெற்று வருகிறார். இது போன்ற நபர்களுக்கு மருத்துவ ஜாமீன் வழங்குவதற்கும் நீதிமன்றங்கள் ஏன் முன்வரவில்லை என்ற கேள்வியை செயல்பாட்டாளர்கள் எழுப்புகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்: மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
விசாரணை சிறைவாசிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக சமீபத்தில் மெட்ராஸ் (சென்னை) உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், தனியார் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மைலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநருமான இவர் மீது 600 கோடி மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இவர் பாஜக சின்னத்தில் போட்டியிட்டார்.
சிகிச்சை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லெட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையை பெறும் உரிமை விசாரணை சிறைவாசிகளுக்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியது. தான் சிகிச்சை பெற விரும்பும் மூன்று மருத்துவமனைகளின் பெயர்களை மனுதாரர் வழங்க வேண்டும் என்றும் அதில் ஒன்றில் சிகிச்சை அளிக்க அரசு தரப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில், ஒரு வாரத்தில் அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று ஜூன் 1 அன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பத்து வாரங்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பதற்கும் அனுமதி வழங்கினர். அவருக்கு ஜாமீன் வழங்கிவில்லை என்றும் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு மட்டுமே சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் விசாரணை சிறைவாசிகளுக்கும் பொருந்தும் என்றும் சிறை வாசல்களில் அவை நின்றுவிடாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சில வழக்குகளில் விசாரணை சிறைவாசியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாத நிலையில் தான் விரும்பும் மருத்துவரிடம் சிகிச்சை பெறும் உரிமை அவருக்கு இருக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜூன் 2023இல் அபூபக்கரின் முதல் ஜாமீன் மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றம், அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. ஆனால், இது நிறைவேற்றப்படவே இல்லை என்று அவரின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பத்து மருத்துவர்களை கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அவர் நல்ல நிலையில் உள்ளதாக மூன்றரை வருடங்களாக அந்த குழு கூறி வருவதை குடும்பத்தினர் சுட்டிக் காட்டுகின்றனர். உடல் நிலை மோசமான நிலையில் உள்ள ஒரு நபரை நன்றாக உள்ளதாக இவர்கள எவ்வாறு கூறுகின்றனர் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது மோசமான அனுபவங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்த அபூபக்கர், தனியார் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளார். தங்களின் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதி அளிக்குமாறு குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மார்ச் 2026இல் இக்கோரிக்கைiயை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அபூபக்கரின் சிகிச்சையை தாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறும் என்ஐஏ தரப்பு, சிகிச்சையை அரசு மருத்துவமனையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.
சிறையில் நிகழும் மரணங்கள்
சிறைவாசிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய அனைத்து உரிமைகளும் உள்ளன என்பதை நீதிமன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதில் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உரிமையும் அடங்கும். அதிலும் குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறைவாசத்தை அனுபவித்து வரும் விசாரணை சிறைவாசிகளின் இந்த உரிமையை யாரும் மறுக்க இயலாது. 2024இல் இந்திய சிறைகளில் 1,737 சிறைவாசிகள் இயற்கையாக மரணம் அடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதில் 1,656 மரணங்கள் நோய்களின் காரணமாகவும் 81 மரணங்கள் வயது மூப்பின் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கேன்சர், பக்கவாதம், காலரா, மூளை இரத்தப் போக்கு உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் மரணங்கள் நோய்களின் காரணமாக ஏற்படும் மரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
இது தவிர 166 இயல்புக்கு மாறான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் 57 மரணங்களுக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை, சக கைதிகளால் கொலை செய்யப்படுவது, துப்பாக்கிச் சூட்டினால் ஏற்படும் மரணம், அலட்சியம் காரணமாக ஏற்படும் மரணம் ஆகியவை இயல்புக்கு மாறான மரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
‘இயற்கை மரணங்கள் மற்றும் இயல்புக்கு மாறான மரணங்கள் இடையிலான வித்தியாசங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை. உதாரணமாக, சரியான மருத்துவ சிகிச்சை அல்லது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தினால் நிகழும் மரணம் இயற்கை மரணம் என்று குறிப்பிடப்படுமா அல்லது இயல்புக்கு மாறான மரணம் என்று குறிப்பிடப்படுமா?’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் 2013இல் வழங்கிய தீர்ப்பொன்றில் முக்கியமான கேள்வியை எழுப்பியிருந்தார்.
பொதுவாக உடல் ரீதியான நேரடி சித்திரவதையை மட்டுமே சிறைவாசிகள் மீதான உரிமை மீறலாக நாம் கவனப்படுத்துகிறோம். ஆனால், சிறைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படாததை அல்லது உரிய நேரத்தில் வழங்கப்படாததை நாம் உரிமை மீறலாகவோ சித்திரவதையாகவோ கருதுவதில்லை. வருடந்தோறும் வெளியிடப்படும் குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. உதாரணமாக, சிறையில் நிகழும் இயற்கை மரணம், சிறைவாசி சிறைக்கு வரும் முன்னர் இருந்த நோய்களால் ஏற்பட்டதா அல்லது சிறைக்கு வந்த பின் ஏற்பட்ட நோய்களால் ஏற்பட்டதா, போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதா போன்ற விபரங்கள் எதையும் இந்த அறிக்கைகள் குறிப்பிடுவதில்லை.
விசாரணை சிறைவாகளின் மருத்துவ உரிமைகள் குறித்து ஏற்கெனவே நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. பிப்ரவரி 2012இல் மகாராஷ்டிராவின் பீட் மாவட்ட சிறைச்சாலையில் மரணமடைந்த 32 வயதான பிரதாப் குடேயின் மரணத்திற்கு சிறை அதிகாரிகள் உரிய மருத்துவ சிகிச்சை வழங்காததே காரணம் என்று மார்ச் 2023இல் பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் இறந்தவரின் குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டை மகாராஷ்டிரா அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய், ஆர்.எம்.ஜோஷி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
உடல் வலி மற்றும் நெஞ்சு வலி காரணமாக தனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு கோரி மாவட்ட நீதிமன்றத்தில் பிப்ரவரி 7, 2012 அன்று பிரதாப் மனு தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கையை அரசு தரப்பு எதிர்த்தது. மனுவை நிராகரித்த நீதிபதி, சிறைவாசிக்கு சிறப்பு சிகிச்சையை வழங்க வேண்டியது சிறை அதிகாரிகளின் கடமை என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்பதையும் உடல்நிலை மோசமான பின்னரே பீட் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவுரங்காபாத்தின் பெரிய அரசு மருத்துவமனைக்கு மாற்றுமாறு கூறிய போது, அங்கிருந்த கான்ஸ்டபிள் அவரை மாற்ற இயலாது என்று கூறியதுடன் அவர் மரணித்தால் தங்களுக்கு எந்த புகாரும் வரப்போவதில்லை என்று கூறியதையும் நீதிபதிகள் பதிவு செய்தனர். காவல்துறை மற்றும் சிறைத்துறையின் உணர்வற்ற, கடுமையான மனநிலையை இது வெளிப்படுத்துகிறது என்று நீதிபதிகள் பதிவு செய்தனர்.
2014இல் கஞ்சன் நானாவாரேயும் அவரின் கணவரும் மாவோயிச இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இருதய பிரச்சனை இருந்த கஞ்சனுக்கு அதற்கான அறுவை சிகிச்சைகளும் அவர் கைதிற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏறத்தாழ ஏழு வருடங்கள் விசாரணை சிறைவாசியாக இருந்த கஞ்சன், 2021இல் மரணமடைந்தார். மருத்துவ சிகிச்சை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, புனே கூடுதல் செசன்ஸ் (யுஏபிஏ) நீதிமன்றம் நிராகரித்தது. சிறையிலேயே அவருக்கு நல்ல சிகிச்சை வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கொரோனா காலத்தில் சிறைகளில் நெருக்கடியை குறைப்பதற்கு சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தவரவிட்ட போது, யுஏபிஏ வழக்கை காரணம் காட்டி, கஞ்சனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலை மோசமாக உள்ள கஞ்சனுக்கு இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பிப்ரவரி 18, 2020இல் மருத்துவமனை தெரிவித்தது. இந்த வசதிகளை கொண்ட அரசு மருத்துவமனைகளை கண்டறியுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அவ்வாறு எந்த மருத்துவமனையும் இல்லை என்று அதிகாரிகள் பதில் அளித்தனர். வேறு எந்த உருப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் ஜனவரி 24, 2021இல் 38 வயதில் கஞ்சன் மரணமடைந்தார்.
உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சிகிச்சைக்கான உரிமையை தனிநபர் உரிமை மறுக்கப்பட்டுள்ள சிறைவாசிக்கு மறுக்க முடியாது, உயிர் வாழும் உரிமை என்பது கண்ணியத்துடன் வாழ்வதையும் குறிக்கும் என்று நீதிபதிகள் பிரதாப் வழக்கின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள போதும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள விசாரணை சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவது தொடர் கதையாகவே உள்ளது.
பிரதாப் மரணித்த 2012இல் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 126 இயல்புக்கு மாற்றமான மரணங்கள் நிகழ்ந்தாக குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை தெரிவித்தது. அதில் ஒரு மரணம் கூட ‘சிறை அதிகாரிகளின் அலட்சியம் அல்லது வரம்பு மீறலால் நிகழ்ந்தது’ என்று குறிப்பிடப்படவில்லை. 2021 அறிக்கையில் இத்தகைய மரணம் ஒன்று மட்டும் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2021-2022 காலகட்டத்தில் 2,152 நபர்கள் நீதிமன்ற காவலிலும் 155 நபர்கள் காவல்துறை காவலிலும் இருந்த போது மரணித்ததாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் 137 வழக்குகளில் தேசிய மனித உரிமை ஆணையம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிக்கை, அதே அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கிய அறிக்கைக்கு முற்றிலும் முரண்படுகிறது.
இந்த விவகாரத்தில் உண்மையான புள்ளிவிபரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரு துறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு உண்மையான, தெளிவான அறிக்கைகள் மிக அவசியமாகும். அதனை செய்யும் பட்சத்திலேயே சீர்திருத்தம் நோக்கிய நகர்வும் உண்மையாதாக அமையும். பிரதாப்பின் மரணம் அவரின் குடும்பத்தினரின் சட்டப் போராட்டங்கள் மூலமே வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதிலும் 11 வருடங்களுக்கு பின்னரே அவர்களுக்கு நீதி வழங்கப்பட்டது.
சிறையில் மரணித்த பிரதாப்பும் கஞ்சனும் ஸ்டேன் சுவாமியும் விசாரணை சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையை மேற்கொண்டு அவர்களின் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கான ஜாமீனை வழங்கி அவர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகை செய்திருக்கலாம். இதில் எதையும் செய்யாத நிலையில் சிறையிலேயே குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அவர்கள் மரணத்தை தழுவினர். இது போன்ற வெளிவராத மரணங்கள் இந்திய சிறைகளில் ஏராளம் இருக்கலாம். இனியும் விசாரணை சிறைவாசிகளின் மருத்துவ சிகிச்சைக்கான உரிமையை சிறைத்துறையும் காவல்துறையும் மறுக்காமல் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது தொடர்பாக வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்புகளும் சிறைவாசிகளின் மருத்துவ சிகிச்சை உரிமைகள் குறித்து பேசும் தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டல்களும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
‘சிறைவாசிகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். சமூகத்தில் உள்ளவர்கள் பெறும் அதே சிகிச்சை தரத்தை சிறைவாசிகளும் பெற வேண்டும். அவர்களின் சட்டப்பூர்வ நிலை குறித்த பாகுபாடின்றி தேவையான சிகிச்சைகளை இலவசமாக பெற வேண்டும்’ என்று சிறைவாசிகளை நடத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குறைந்தபட்ச தர நிலைகள் குறிப்பிடுகிறது. (விதி 24.1)
சிறையில் உள்ளவர்களும் மனிதர்கள்தான். நம்மைப் போன்றே அவர்களுக்கும் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் உள்ளன என்பதை பொது சமூகம் உணர்ந்து செயல்பட வேண்டும். அதுவே மருத்துவ சிகிச்சை இன்றி அல்லல்படும் சிறைவாசிகளின் அவலத்தை முடிவுக்கு கொண்டு வரும்.
References:
Discipline and Punish: The Birth of the Prison, Michel Foucault
Death and Denial of Care in Indian Prisons, Indian Journal of Medical Ethics, Vol VIII, Issue 3, July 2023
Laws temporality and the construction of death – worlds: Custodial neglect of older prisoners in India, Deblina Dey, Jindal Global Law Review, Published: December 6, 2022, Volume 13, Pages 307 – 327
Years into jail without trial, a veteran Muslim political prisoner battles failing health in Tihar, www.maktoobmedia.com
Undertrial inmate died due to jail staff and police negligence over medical aid: Bombay High Court, www.timesofindia.com

