கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

களநிலை vs காலநிலை: அனல் பறக்கும் தேர்தல் – சூழலியல் பார்வை

Loading

தமிழ் நிலம் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை சந்தித்தது. பிரச்சாரத்தின் அனலில் மக்கள் திக்குமுக்காடி நின்றபோது அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கோடைகால வெப்பமும், காலநிலை மாற்றமும் குரூரமாக தன் பங்கிற்கு தாக்கத்தை செலுத்தின. காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படுகிற பிரச்னைகளும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தேர்தல் களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என பலரும் ஆலோசித்து வரும் நிலையில் காலநிலை நமக்கு சாதகமாக இருக்கிறதா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

தேர்தல் VS வெப்பநிலையாருக்கு போட்டி?

சூடான பிரச்சாரங்களும், தீப்பொறி வசனங்களும், அனல் கக்கும் பேச்சுகளுமாக தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்க அதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழ்நாட்டின் வெப்பநிலையும், மண்டையைப் பிளக்கும் வெயிலும் அதிகரித்தன. சாதாரணமாக வெயில் அதிகமுள்ள நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தை காண்பது அரிது. தங்களை வெப்ப அலை மற்றும் வெப்ப பக்கவாதத்திலிருந்து பாதுகாத்துகொள்ள குளிர்ச்சியான உணவு, நிழலான இடம் என நாடிச் செல்வர். ஆனால் தற்போது அப்படி அல்ல.

நடைபாதை வசதி இல்லாத குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை கொளுத்தும் வெயிலில் மக்கள் கட்சிக் கொடியுடன் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டனர். வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள தண்ணீரைத் தவிர்த்து வேறெந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சாமானிய மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுடன் வெயிலிலும், கூட்ட நெரிசலிலும் காத்திருப்பது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய வெயில் நிலவரம்

தற்போது நாம் வாழக்கூடிய உலகம் சாதாரண சராசரி வெப்பநிலை கொண்ட உலகம் அல்ல. உலகம் முழுக்க 1.5 டிகிரி செல்சியல் வெப்பநிலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரி வெப்பநிலையை விட 3.5 – 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த வாரம் கரூர் பரமத்தி வேலுரில் 40.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 4.2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.  இது மேலும் உயரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது. குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப அதிர்ச்சியும் வெப்ப பக்கவாதமும்


வெயில் உச்சத்தில் இருக்கும்போது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடையே மிக அதிகமாக வெப்ப அதிர்ச்சி ஏற்படும். முதியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கும் உடலில் நீர் அளவு போதுமான அளவு இல்லையெனில் வெப்ப அதிர்ச்சி ஏற்படும்.

சமீப காலமாக உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞன் உயிரிழப்பு, கிரிக்கெட் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு, மாரத்தான் ஓடிய மாணவன் உயிரிழப்பு போன்ற செய்திகளை பார்க்கிறோம். இதற்கு வெப்ப அதிர்ச்சிதான் காரணம். நம் மூளையில் உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிப்பதற்கான தெர்மோஸ்டாட் செயலிழப்பதால் வெப்ப அதிர்ச்சி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வெப்ப அதிர்ச்சியின்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து ஆவியாகி அதற்கு உடல் எதிர்வினையாற்றும்போது, மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். இதனால்தான் வெப்ப பக்கவாதம் ஏற்படுகிறது.

தேர்தல் களநிலை vs தேர்தல் காலநிலைசூழலியல் பார்வை

கடும் வெயிலுக்கு மத்தியில்தான் அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும், நட்சத்திர பேச்சாளர்களும், வாக்காளர்களும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றனர். கடந்த சில நாட்களாக Heat Stress -ஆல் ஏற்படும் பாதிப்புக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே இலக்காகி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி திருவிடைமருதூர் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்ரமணியன் வாக்கு சேகரிக்கும்போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையிலிருந்து இறங்கும்போது மயங்கி விழுந்தார். கோவை விஜய் பிரச்சாரத்தில் அக்கட்சியின் சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார் மயங்கினார்.

கட்சியின் வேட்பாளர்களுக்கும் தலைவர்களுக்குமே இந்த நிலை எனில் சாதாரண மக்களின் நிலை இதைவிட கவலைக்குரியது. தங்களுக்கு ஏற்பட்ட சோர்வு, மயக்கம், உபாதைகள் போன்றவை வெப்பநிலையால் ஏற்பட்டது என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரமாண்ட பொருட்செலவில் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் இதுபற்றி முறையான வழிகாட்டல்களை வெளியிட்டதாக தெரியவில்லை. அரசியல் கட்சிகளுக்கும் வெப்ப அலை, வெப்ப அழுத்தம் குறித்த புரிதலும் இல்லை. மிகக் குறிப்பாக காலை 11 முதல் மாலை 5 மணிவரை வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில்தான் அனைத்து பிரச்சாரங்களும் நடத்தப்பட்டன.

முன்பே எச்சரித்த சூழலியல் அமைப்புகள்:

வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முன்பே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தது. காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்து மிகத் தீவிரமான பாதிப்புகளை தமிழ்நாடு எதிர்கொள்வதால் தேர்தல் நடைபெறும் இக்காலத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வமைப்பு கோரிக்கை வைத்திருந்தது.

தீர்வு என்ன?


காலநிலை மாற்றம் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து சூழலியல் செயல்பாட்டளரும், முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பிரபாகரன் வீரஅரசுவிடம் பேசியபோது “காலநிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை குறித்த புரிதல் தேர்தல் ஆணையம் மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு இல்லை. இந்தியா முழுக்க Heat Stress ஆல் நிறைய மரணங்களை சமீபகாலமாக பார்க்கிறோம்.

2024 தேர்தலின்போது கூட இரண்டு நாட்கள் அடித்த வெப்ப அலை காரணமாக பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் 58 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 33 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களாவர். இவர்கள் வெயிலில் பிரச்சாரம் செய்யவில்லை, மாறாக பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டவர்கள். எனவே வெப்ப அலையின் தீவிரத் தன்மையை கொஞ்சம் அக்கறையோடு புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளவதற்கான எந்த நிலையான நடைமுறைகளையும் (Standard Operating Procedure) தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை” என கவலையோடு பகிர்ந்து கொண்டார்.

“வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் முதலில் முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். பிரச்சாரங்களின்போது கூரை அமைப்பது, கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காற்றோட்டமுள்ள இடங்களை பிரச்சாரங்களுக்கு பரிசீலினை செய்வது, உட்காருவதற்கான இருக்கைகள், தண்ணீர் போன்றவை அத்தியாவசியமாக்குவது, பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் முதலுதவி பெட்டியும் வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருந்துகள், கருவிகளுடன் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும்” என இதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார்.  

சூழலியல் அமைப்புகள் காலநிலை மற்றும் அதனால் ஏற்படுகிற சிக்கலின் தீவிரத் தன்மையை கருத்தில்கொண்டு தேர்தலை முன்கூட்டியோ, தள்ளியோ வைக்க கோரிக்கைகள் விடுத்திருந்தன. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தலை தள்ளி வைப்பது சாத்தியமில்லை என்றும் கோடை காலத்தை தவிர்த்தால் அதன் பிறகு மழை காலத்தில் தேர்தலை நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெப்ப காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பது நல்ல யோசனைதான். ஆனால் இதையே காரணமாக வைத்து தேவையற்ற நெருக்கடிகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்துமோ என்ற அச்சமும் அரசியல் கட்சிகளிடம் உள்ளது. பின்பற்ற முடியாத நடைமுறைகளையும் கடுமையான அனுமதி முறைகளையும் பயன்படுத்தி ஜனநாயக உரிமையை ஆணையம் பறிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் இதனால் சிறிய கட்சிகள் பெரியளவில் பாதிப்பை சந்திக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

எனவே, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் திட்டமிடல்களுமே வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும்.


ஜனநாயக மற்றும் சூழலியல் கடமை
வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தத்திலிருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் தற்காத்துக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பாகும். குழந்தைகளை தூக்கிக் கொண்டு நீண்ட நேரம் வெயிலில் நிற்பது, தலைவர்களை துரத்திக் கொண்டு செல்வது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. தலைமுறையை தீர்மானிக்கும் தேர்தல் என சொல்லிக்கொண்டே நம் தலைவிதியை வெயிலுக்கு கொடுத்துவிடக் கூடாது. அரசியல் புரிதலோடும் சூழலியல் புரிதலோடும் வாக்களித்து நமக்கான மக்களாட்சியை தேர்ந்தெடுப்பதுதான் உண்மையான ஜனநாயக கடமை.

Related posts

Leave a Comment