தூஃபானுல் அக்ஸா: இழப்புகளுக்கு அப்பால்…
காஸாவில் ஸியோனிச இஸ்ரேல் தனது போரில் தோல்வியடைந்துவிட்டது என்பதாக ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இதழின் ஆசிரியர் டேவிட் ஹெர்ஸ்ட் தனது புதிய கட்டுரையில் கூறுகிறார்.
மிகக் கொடூரமான தாக்குதல்கள் மூலம் தேசத்தையும் மக்களையும் முழுமையாக அழித்த பின்னரும், இந்த யுத்தம் தோல்வியடைந்துவிட்டது என்று கூறும் ஹெர்ஸ்ட், இதனை வியட்நாம் போரில் அமெரிக்கா அடைந்த தோல்வியுடன் ஒப்பிட்டு, இரு இடங்களிலும் எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி உறுதியாவதற்கு இரண்டு முக்கியக் காரணிகள் இருப்பதாக நிறுவுகிறார்: எதிர்த்து நிற்கும் மக்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடும், உலகளவில் வலுப்பெற்ற வெகுசன மக்களின் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுமே அவை.
‘ஹமாஸிடம் இப்போதும் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் இருக்கின்றன. ஆனால், காஸா மக்களுக்குத் தீங்கு நேரும் என்பதற்காகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். காஸாவில் குறைந்தபட்சம் 40,000 ஆயுதமேந்திய போராளிகள் இன்னும் தீவிரமாகக் களத்தில் உள்ளனர். காஸாவின் முக்கியமான பகுதிகளை இணைக்கும் பரந்த நிலத்தடிச் சுரங்க வலைப்பின்னல் இன்னும் வலுவாகவே இருக்கிறது…’ என்பதாக ஸியோனிசப் படையின் ‘எதிரி கண்காணிப்பு’ அறிக்கை (வல்லா இணையதளம்) சொல்கிறது.
காஸாவின் இழப்புகளுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது என்றாலும், ஸியோனிஸ்டுகளின் இனப்படுகொலை முயற்சிகள் எதிர்ப்புப் போராட்ட அமைப்புகளையோ, அவற்றின் திறனையோ, போர் புரியும் மன உறுதியையோ பாதிக்கவில்லை.
இராணுவ நடவடிக்கையின் மூலம் காஸாவை ஒருபோதும் பணியவைக்க முடியாது. தலைவர்கள் என்றோ, வீரர்கள் என்றோ வேறுபாடின்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துச்செல்கிறவர்களின் பொறுப்புகளை உடனடியாக ஏற்கக்கூடிய ஒரு நீண்ட வரிசையும், குறைபாடற்ற செயற்பாட்டு அமைப்பும் அங்கு இருக்கிறது. ஸியோனிஸ்டுகள் போரை நிறுத்தி காஸாவிலிருந்து பின்வாங்க வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹமாஸ் தலைவர் சாமி அபூ ஸுஹ்ரீ அல்ஜஸீறாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இவ்விளக்கங்களை மெய்ப்பிக்கும் கள நிலவர அறிக்கைகள் சமூக ஊடகங்களில் ஏராளமாக காணக் கிடைக்கின்றன.
மறுபுறம், தங்களின் இழப்புகளை மூடிமறைத்து, இராணுவத்தின் ‘வீரத்தை’ நிலைநிறுத்துவதற்காக, தம்முடைய தாக்குதல்களுக்கு தோரா கதைகளில் வரும் பெயர்களை மாறிமாறிச் சூட்டி ‘வியக்க வைக்கிறார்கள்’ ஸியோனிஸ்டுகள். அதில் கடைசியாக இப்போது அவர்கள் சூட்டியுள்ளது, ‘கிதியோனின் தேர்கள்’.
வீரர்களின் ஓயாத அழுகுரல்கள், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஸியோனிச இஸ்ரேல் அழிவின் விளிம்பில் இருப்பதாக இராணுவ-அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தும் அச்சம், மேலும் பகிரங்கமாக இராணுவத்தைக் குறைகூறுவது போன்ற அனைத்தையும் மறைக்கவே இந்த ஒப்பனை முயற்சிகள்.
முன்னாள் பிரதம மந்திரி ஓல்மெர்ட், முன்னாள் துணைப் படைத்தலைவரும் சட்ட அமைச்சருமான யாயிர் கோலான் போன்றோரின் கருத்துகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
மேற்கத்திய நாடுகளில் போர் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் இடதுசாரிகள் முதல் வலதுசாரிகள் வரை பரவிக்கொண்டிருக்கின்றன. இந்த அழுத்தங்கள் காரணமாக, போரை ஆதரித்த அரசாங்கங்களும்கூட புதிய, தந்திரமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. கனடா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியதற்குக் காரணம், ஃபலஸ்தீன மக்கள் மீதான அன்போ, மனித உரிமைகள் பற்றிய அக்கறையோ அல்ல. தீவிர ஸியோனிஸ்டுகளின் இரத்த வெறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு வரும் ஸியோனிச இஸ்ரேல், மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு பெரும் சுமையாக மாறிவருகிறது.
ஸியோனிச இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புகள் வரும்போது, அதனை ஆதரித்த நாடுகள்கூட இப்போது அப்பட்டியலில் இருந்து தப்பிக்க நினைக்கின்றன. மேற்கத்தியர்களால் ஃபலஸ்தீனத்தில் கொண்டுவந்து ஊன்றப்பட்ட ஸியோனிச நாடு, இந்தச் சூறாவளியில் (தூஃபானுல் அக்ஸா) ஆட்டம் காணும்போது, யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனத்திலிருந்து உயிர்பிழைக்க இந்நாடுகளுக்கு ஓடிப்போவது ஐரோப்பிய-யூதப் பிரச்சினையை மீண்டும் தீவிரப்படுத்தக்கூடும்.
அப்படியொரு சூழ்நிலை உருவாவதை மேற்கத்திய அரசாங்கங்கள் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கும். கடந்த நூற்றாண்டில் ஸியோனிச மாநாடுகள் நடைபெற்ற பாரிஸில் இன்று ஃபலஸ்தீன தேசத்திற்காகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூறாவளியின் வேகத்தில் சரிந்துகொண்டிருக்கும் மற்றொரு முக்கியமான கருத்துருவம், ‘மேற்கத்திய தாராளவாத விழுமியங்கள்’. அதைப் பற்றித் தனியாக விளக்க வேண்டும்.
அல்லாஹ் உலகம் முழுவதற்குமான தனது அருளைப் பொழிந்திருக்கும் பூமிதான் அக்ஸாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ
அக்ஸாவைப் பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே அறபு-முஸ்லிம் உலகில் அமைதி நிலவ முடியும், உலகமும் அப்போதுதான் அமைதி பெறும். 12-13ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலிய, சிலுவைப் போர்களின் தாக்குதல்களால் சிதைந்த முஸ்லிம் உலகம் ஐன் ஜாலூத், ஹித்தீன் ஆகிய போர்களுக்குப் பின்னரே மீண்டெழுந்தது. வரலாறு நமக்கு ஒரு பாடத்தை முன்வைக்கிறது. ஒரு வகையில் பார்த்தால், அவற்றை விடவும் சிறந்த வாழும் யதார்த்தமும், ஒளிமயமான வரலாறும் தூஃபானுல் அக்ஸாவின் அர்ப்பணிப்புகளுக்கும் அதன் மூலம் வரவிருக்கும் விளைவுகளுக்கும் இருக்கின்றன.
அந்த நம்பிக்கையை திருக்குர்ஆன் நமக்கு அளிக்கிறது. அது என்னவென்றால்,
அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் (இந்த வழியை அவன் மேற்கொண்டது), உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவார்களோ, அவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டான். அவன் அவர்களுக்கு வழிகாட்டுவான்; அவர்களின் நிலைமையைச் சீர்படுத்துவான். மேலும், எந்தச் சுவனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்திருக்கிறானோ, அந்தச் சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான். (திருக்குர்ஆன் 47: 4-6)
(தமிழில்: A. செய்யது அலீ)
(நன்றி: DrCK Abdulla)