பயத்தால் மௌனிக்கப்பட்டவர்கள்
இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நெருக்கடி
இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கான சொந்தக் குரலைக் கொண்டிருப்பதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் இதே நிலைதான். உதாரணமாக, தேசியவாதத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம் கருத்து தெரிவித்தால், அவன் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான். இதுபோன்ற முத்திரைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, முஸ்லிம் அல்லாதவர்களை மேற்கோள் காட்டியே தங்கள் கருத்துகளை நியாயப்படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த வகையில், கூட்டணிகளை அமைத்தே தீர வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பின்விளைவுகளை எதிர்கொள்ளாமல், சமூக-அரசியல் களத்தில் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு முஸ்லிம்களால் இயலவில்லை. அவர்களின் குரல் ஒலிப்பதற்கு மற்றவர்களின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. அரசாங்கத்தை அல்லது ஒரு கொள்கையை ஒரு முஸ்லிம் விமர்சனம் செய்தால், அவன் சிறையில் அடைக்கப்படும் அல்லது மரணத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தலித்துகள், இடதுசாரிகள், இந்துக்கள், மதச்சார்பற்றவர்கள் என முஸ்லிம் அல்லாத எவரையேனும் தங்கள் சார்பாகப் பேசுவதற்கு அனுமதிக்கின்றனர்.
இந்தப் போக்கு ஆழமாக வேரூன்றி உள்ளது. தங்கள் குரல் மட்டும் ஒலித்தால் அது எடுபடாது; மற்றவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம்கள் அறிந்துள்ளனர். ஆனால், அவர்கள் சார்ந்திருக்கும் அந்த நபர்கள் இவர்களை ஆதரவளிக்காமல் போனால் என்ன நடக்கும்? “ஒரு தீவிர முஸ்லிமைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று என் மக்களிடம் கூறினேன்” என்ற முன்னாள் உத்தர பிரதேச முதலமைச்சர் மாயாவதியின் கருத்துகளில் இதற்கான பதில் இருக்கிறது. உறுதிமிக்க அரசியல் தலைவர்களாக இல்லாமல், முஸ்லிம்கள் செயலற்ற வாக்காளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு மனநிலையை அவரின் கருத்து பிரதிபலிக்கிறது. தைரியமான, சுதந்திரமான முஸ்லிம் தலைமை வரவேற்கப்படுவதில்லை என்பதை இது காட்டுகிறது.
முதலாவதாக, முஸ்லிம்களுக்காக தலித்துகளோ கம்யூனிஸ்டுகளோ ஏன் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது? அப்படியே அவர்கள் ஆதரவளித்தாலும், அது வாக்குகளையோ, அரசியல் விசுவாசத்தையோ பெறுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா?
உதாரணமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் முதலில் ஷர்ஜீல் இமாம் என்ற சமயப்பற்றுள்ள ஓர் முஸ்லிமாலேயே ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. பின்னர், இடதுசாரிகள் அதைக் கைப்பற்றி அதன் முழுக் கட்டுப்பாட்டையும் தமதாக்கிக்கொண்டனர். அனைத்து முஸ்லிம்களும் இதனை அனுமதித்தனர்.
இந்த நாட்டில் ஒரு சுதந்திரமான முஸ்லிம் தலைமைத்துவம் ஏன் இல்லை என்பதற்கான ஆழமான காரணத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு யாதவ் அல்லது ராஜ்பர் அல்லது தலித் அல்லது பிராமணனுக்கு அருகில் வாழும் ஒரு உத்தர பிரதேச முஸ்லிமின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த முஸ்லிம் தனது உரிமைகள் அல்லது முஸ்லிம் உரிமைகள் குறித்துப் பேசினால், அவனுக்கு அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவனை ஒரு மற்றமையாக அல்லது எதிரியாகப் பார்க்கத் தலைப்படுகின்றனர். அதேவேளை, அவர்களோ தங்களுக்கெனச் சொந்தமாக அரசியல் குரல்களையும் உரிமைகளையும் கொண்டிருக்கின்றனர் என்பதுடன், அவற்றை வெளிப்படையாக வலியுறுத்தவும் செய்கின்றனர். இதையே ஒரு முஸ்லிம் செய்தால் மட்டும், அவர் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுகின்றார்.
முஸ்லிம்களிடையே இந்த மனநிலை தலைமுறைகளைக் கடந்து கடத்தப்படுகிறது. ‘உவைஸிக்கு வாக்களிக்காதீர்கள். அவர் சென்றுவிடுவார்; நாம்தான் இங்கிருக்க வேண்டும். எனவே முடிவுகளைத் தெளிவாக எடுங்கள்’ என்று நமது பெரியவர்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம். முஸ்லிம்களின் உள்ளத்தில் இந்த அச்சம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறதா? நான் உவைஸி ஆதரவாளர் கிடையாது. ஆனால், சுதந்திரமான தலைமைத்துவம் குறித்து நான் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? இதில் அச்சம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? சமூகத்தின் பிரச்சனைகளை திறம்படப் தீர்ப்பதற்கு உண்மையாக உதவிசெய்யும் சுதந்திரமான முஸ்லிம் தலைமையே பிரதிநிதித்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலிமைப்படுத்தும்.
ஒரு முஸ்லிம், யாதவை ஆதரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவன் தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளை முன்வைத்தால், அல்லது தனக்கான சொந்தத் தலைமையைக் கோரினால், அந்தக் கணமே யாதவர்களுக்கு அது பிரச்சனையாகிறது. எனவே ஓர் முஸ்லிம், தனது சொந்த அண்டை வீட்டாரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக அனைத்தையும் அமைதியாகச் சகித்துக்கொண்டு, யாதவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறார்.
இதனால்தான், சுதந்திரமானவோர் முஸ்லிம் தலைமையின் எழுச்சியை நம்மால் காண இயலவில்லை. இதே நிலைதான் எப்போதும் தொடர்கிறது.
முஸ்லிம்களிடமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. ‘நாம் ஏதாவது கூறினால், அது இந்துக்களைப் புண்படுத்திவிடும் (என்று நாம் நினைக்கிறோம்)’ என்று ஷர்ஜீல் இமாம் தனது உரை ஒன்றில் கூறியது கவனிக்கத் தக்கது. ஆனால் ஒரு முஸ்லிம், தனது பிரச்சனை அல்லது உரிமையைக் குறித்துப் பேசினால் இவர்கள் ஏன் புண்பட வேண்டும்? தனது சொந்த விவகாரங்கள், நிலைகள் குறித்துப் பேசுவதால் அந்த முஸ்லிம், இந்துச் சமூகத்திற்கு என்ன ஊறு விளைவிக்கிறார்?
பிராந்தியவாத அச்சம், முஸ்லிம் தலைமைக் குறைபாட்டிற்கு மற்றுமொரு காரணமாகும். அதாவது, அரசியல்வாதிகளுக்கு இடையே உள்ள உள்ளார்ந்த பிரிவினை மற்றும் ‘மற்றமையாக்கும்’ போக்கு. உதாரணமாக, கேரளாவில் இருந்து ஒரு முஸ்லிம் தலைவர் பிரச்சாரத்திற்கு வந்தால், “தேர்தலுக்குப் பிறகு அவர் சென்றுவிடுவார். ஆனால், நீங்கள்தாம் இங்கிருக்க வேண்டும்” என்று உள்ளூர் முஸ்லிம்களிடம் அடிக்கடி சொல்லப்படுகின்றது. எனவே, இங்கு பெரும்பான்மை இந்துக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அவர்களிடம் கூறப்படுகிறது. ‘முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். அவ்வாறு ஆதரவு அளித்தால், பெரும்பான்மை இந்துக்கள் கோபமடைந்து நமக்கு எதிராகத் திரும்புவார்கள்’ என்ற செய்தி தெளிவாகக் கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி தேர்தல்களில் இதே வழிமுறை பின்பற்றப்பட்டதை நாம் கண்டோம். “டெல்லி கலவரத்தின்போது இவர் எங்கே இருந்தார்? (ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழக) நூலகத்தில் நமது பிள்ளைகள் தாக்கப்பட்டபோது இவர் எங்கே இருந்தார்?” என்று அசதுத்தீன் உவைஸி குறித்து ஆம் ஆத்மி தலைவர் அமானத்துல்லாஹ் ஃகான் கேள்வி எழுப்பினார். இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் உவைஸி பேசியிருந்தாலும், அவர் இக்கேள்விகளை எழுப்பினார். ‘இந்த ஹைதராபாதியை நீங்கள் முதன்முறையாகப் பார்க்கிறீர்கள்’ என்றுகூடத் தனது உரை ஒன்றில் அமானத்துல்லாஹ் கூறினார். மத அடையாளத்தைவிட பிராந்திய அடையாளம் முக்கியமானது என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார். இருவரும் முஸ்லிம்களாக இருந்தபோதும் உவைஸியிடமிருந்து தன்னைத் தூரமாக்கிக்கொள்ளவே அவர் விரும்பினார்.
ஆனால், வக்ஃப் சொத்து, (வசிப்பிடங்கள், வணிக நிறுவனங்கள்) இடிப்பு, அல்லது அரசு வன்முறை ஆகியவை அரசியல் கட்சி அல்லது பிராந்தியம் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கின்றன. “அவர் நம்மைச் சேர்ந்தவர் கிடையாது. நமது பிரச்சனைகளின்போது அவர் இங்கு இருக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு அவர் சென்றுவிடுவார். நான் இங்கேயே இருப்பதால் என்னையும் ஆம் ஆத்மி கட்சியையும் ஆதரியுங்கள்” என்று அமானத்துல்லாஹ் மக்களிடம் கூறுகிறார்.
இத்தகைய செய்திகள் உள்ளூர் முஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, சுதந்திரமான தேசிய அளவிலான முஸ்லிம் தலைமை உருவாக்கத்தைத் தடுக்கிறது. தமது சொந்தக் குரலை வெளிப்படுத்தாமல் ஆளும் அல்லது மதச்சார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்திருப்பதே நமது இருப்பைத் தக்கவைக்கும் என்ற செய்தியை இது கொடுக்கிறது.
பாஜகவுக்கு எதிரான பயம், முஸ்லிம் வாக்காளர்களிடையே மிகவும் பொதுவான ஒரு விஷயமாகும். இது உள்ளூர் முஸ்லிம்களின் மனதில் தற்போதைய எம்எல்ஏக்களால் வேண்டுமென்றே புகுத்தப்படுகிறது. இந்த முறை டெல்லி தேர்தல்களிலும், சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தல்களிலும், குறிப்பாக சிவாஜி நகர்–மன்குர்ட், போன்ற தொகுதிகளில் இதைக் காண் முடிந்தது.
உதாரணமாக, எம்எல்ஏ அபூ ஆஸிம் ஆஸ்மி, வாக்குகள் பிரிவதால் பாஜக வெற்றி பெறும் என்றும், “பாஜகவின் நோக்கம் என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும்” என்றும் தொடர்ந்து கூறிவந்தார். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சிவசேனாவைச் சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத்தைக்கூட அழைத்திருந்தார்.
இதே சஞ்சய் ராவத்துதான், கரசேவகர்கள் வெறும் 17 நிமிடங்களில் பாபரிப் பள்ளியைத் தகர்த்தார்கள் என்று பெருமையோடு கூறியவர். இதே சிவசேனாதான் பிராந்தியவாத அரசியலிலும், 1992 கலவரங்கள் உள்ளிட்ட முஸ்லிம் விரோத அரசியலிலும், வட இந்தியர்கள் மீதான தாக்குதல்களிலும் ஈடுபட்டது. இருந்தபோதும், அபூ ஆஸ்மி முஸ்லிம்களுக்காகப் பேசுவதாக கூறிக்கொள்கிறார்.
அவுரங்கசீப் குறித்த ஆஸ்மியின் கருத்துகளுக்காக அவரை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பின்னர் அழைப்புவிடுத்தார். இந்த அபூ ஆஸ்மி என்னுடைய தலைவர் அல்லர். “இந்தியாவில், முஸ்லிம்களுக்கான தலைவர்கள் இந்துக்களிடையே மட்டுமே உள்ளனர். முஸ்லிம் தலைமை வேண்டுபவர்கள் பாகிஸ்தானிற்குச் செல்லட்டும்” என்றும் அபூ ஆஸ்மி கூறுகிறார். இந்த அறிக்கை அவரின் மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. யாதவர்களால் வழிநடத்தப்படும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபூ ஆஸ்மி சிவாஜி நகர்–மன்குர்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும் சமாஜ்வாதி கட்சி, கும்பல் படுகொலை, பாபரிப் பள்ளிவாசல் தீர்ப்பு, புல்டோசர் தகர்ப்புகள் ஆகிய முஸ்லிம் விவகாரங்கள் குறித்து நேரடியாகப் பேசுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குப் பதிலாக, ‘சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்’ அல்லது ‘அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது’ போன்ற பாதுகாப்பான சொற்றொடர்களையே அது பயன்படுத்துகிறது. முஸ்லிம் சமூகத்தின் வலிகளையும் கோரிக்கைகளையும் குறித்து அது நேரடியாகப் பேசுவதில்லை.
முஸ்லிம்களின் முழு ஆதரவுடன் புகழ்வெளிச்சத்திற்கு வந்த கன்னையா குமார் இதற்கு மற்றுமொரு உதாரணம். அங்கீகாரம் கிடைத்தவுடன், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அவர் தனது சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டார். இதற்கிடையில், அவரின் நண்பர் உமர் ஃகாலிது UAPA சட்டத்தின் கீழ் சிறையில் தொடர்ந்து வாடுகிறார். இதனால்தான் நமக்கு நமது சொந்தத் தலைமை அவசியம். முஸ்லிம் அல்லாத தலைவர்கள் வந்து நமது வாக்குகளைப் பெறலாம். ஆனால், மிக முக்கியமான தருணங்களில் அவர்கள் நமக்காகப் பேசுவதில்லை.
முஸ்லிம்களிடையே ஆழ்ந்த பய உணர்வும் நிலவுகிறது. உதாரணமாக, அசதுத்தீன் உவைஸி உத்தர பிரதேசத்திற்கு முஸ்லிம் தலைமை பற்றிப் பேச வரும்போது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிற மதச்சார்பற்ற கட்சிகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய முஸ்லிம்கள், பொதுமக்களிடையே பயத்தைப் பரப்புகின்றனர். “உவைஸி பேசிவிட்டு ஹைதராபாத்திற்குத் திரும்பிவிடுவார். நாம்தான் இங்கு வாழ வேண்டும். எனவே, சமூக நல்லிணக்கத்தைப் பேணி, பிளவைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறி பிராந்திய அச்ச மனப்பான்மையைப் பரப்புகின்றனர்.
ஆனால், வெறுமனே முஸ்லிம் தலைமை குறித்துப் பேசுவது எவ்வாறு ஒற்றுமையின்மையை அல்லது குழப்பத்தை உருவாக்குகிறது? முஸ்லிம்களின் அரசியல் உறுதிப்பாடு, ஏன் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகச் சித்தரிக்கப்படுகிறது? இந்தப் பயம் சார்ந்த கதையாடல், முஸ்லிம்களை அவர்களின் உரிமைகளைக் கோருவதிலிருந்தும், அவர்களின் சொந்த அரசியல் குரலை உருவாக்குவதிலிருந்தும் தடுக்கிறது.
உதாரணமாக, முஸ்லிம் தலைமைக்கான அழைப்பை அசதுத்தீன் உவைஸி விடுக்கும்போது, அவரை ‘நவீன ஜின்னா’ என்று பாஜக முத்திரை குத்துகிறது. அதே சமயம், அவரை ‘பாஜகவின் B டீம்’ என்று காங்கிரஸ் அழைக்கிறது. உவைஸி எவ்வளவுதான் பாகிஸ்தானைத் தொடர்ந்து தாக்கி, அவமதித்து தனது விசுவாசத்தை நிரூபிக்க முயன்றாலும், அவர் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தனது விசுவாசத்தை நிரூபிப்பதிலேயே வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால், பாகிஸ்தான் மீதான அவரின் விமர்சனங்கள் அவருக்கு எதையும் பெற்றுத் தரவில்லை என்பதே உண்மையாகும். மாறாக, அவர் சமூகத்திற்குள் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் உருவாக்கிய கூட்டணிகள்கூட இறுதியில் பாஜகவுடன் இணைந்துவிட்டன என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் பயமோ சமரசமோ இன்றித் தங்கள் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்தும்வரை, உண்மையான ஜனநாயகம் முழுமையடையாது. மற்றவர்களின் இணைப்பாக இல்லாமல், தேசத்தின் எதிர்காலத்தில் சமமான பங்குதாரர்களாக இந்திய முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து, தலைமையேற்று, பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சுதந்திரமான, தயக்கமற்ற முஸ்லிம் தலைமைக்கான தேவையை தற்போதைய சூழல் தெளிவாக உணர்த்துகிறது. சமூகத்திற்காக எவ்விதத் தயக்கமும், நிபந்தனைகளும், பெரும்பான்மையினர் புண்படுவார்கள் என்ற பயமும் இல்லாமல் கேள்விகளை எழுப்பும் தலைவர்கள் சமூகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். வக்ஃப் பிரச்சனைகள், பாபரிப் பள்ளிவாசல், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இயல்பாகிவிட்ட அன்றாட அநீதிகள் குறித்து தைரியமாகப் பேசும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அரிதாகவே எதிர்ப்பை ஏற்படுத்தும் கொலைகள், துஷ்பிரயோகம், சமூக-பொருளாதார-அரசியல் புறக்கணிப்பு, வீடுகள், பள்ளிவாசல்கள், மதரசாக்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுதல் ஆகியவையும் இதில் அடங்கும். இது வெறுமனே வீடுகளை இடிப்பதல்ல; இது நம்பிக்கையை இடிப்பதாகும்.
— அபூ சைஃப் ஷைஃக்
(நன்றி: The Observer Post)
தமிழில்: ரியாஸ்