‘இந்துச் சமூகமே உச்சத்தில் இருக்க வேண்டும்!’
சில வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் மத அடிப்படையில் விண்ணப்பங்களை வடிகட்டுவது ஏன்?
இத்தகைய வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், வெற்றிடத்திலிருந்து தோன்றியவையல்ல. அவை, முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஷால் துராஃபேவின் புதிய செயலியின் தோற்றம், மற்றெந்தவொரு வேலைவாய்ப்புத் தளத்தையும் போன்றதுதான் என்பதாக முதற் பார்வையில் தோன்றலாம். ‘வேலை’யைக் குறிக்கும் வகையில் கையில் ஒரு பிரீஃப்கேஸுடனும் தலையில் தொப்பியுடனும் நடந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் ஓவியம் தெளிவாக வரையப்பட்டுள்ளது.
அடுத்து கவனித்தால், காவி நிறம் கண்ணில் படும். செயலியின் பெயரும், அத்துடன் ஓவியத்தைச் சுற்றிலும் தடித்த பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்ட “ஒழுங்கமைக்கப்பட்ட இந்து! ஆற்றல்மிக்க இந்து!” “இந்துவை அழையுங்கள். முதலில் இந்துவிடம் பேசுங்கள்” முதலான முழக்கங்களும் தென்படும்.
இது உருவாகிவரும் ஒரு சாதாரண வேலைவாய்ப்புத் தளம் அல்ல. வேலைவாய்ப்புக்கான தளம் என்பதில் சந்தேகமில்லைதான், ஆனால் அது முதன்மையாக ஓர் சமூகத்தைப் பற்றி — அதாவது, இந்துக்களைப் பற்றி —மட்டும் அக்கறை கொள்கிறது.
“நான் இதர சமூகங்களைப் பற்றி எதிர்மறையாகச் சிந்திக்கவில்லை, ஆனால் நம் இந்துச் சமூகமே உச்சத்தில் இருக்க வேண்டும்” என்று துராஃபே ‘தி குவின்ட்’ தளத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். “நம் இந்துச் சகோதரர்கள் ஏதேனும் சேவை அல்லது வேலை என்று வரும்போது இந்துக்களையே அழைக்க வேண்டும். இந்துக்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே மற்றவர்களை அழைக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
துராஃபே வடிவமைத்துவரும் Call Hindu செயலி, வெறும் வேலைவாய்ப்பை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. இந்த வலைத்தளம் தன்னை, ‘சனாதன தர்மத்தின் நிலையான ஒளிர்வுக்காகவும், இந்துக் கலாச்சாரத்தின் மகத்தான பாரம்பரியத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மத-சமூக-டிஜிட்டல் தளம் என்பதாக வர்ணித்துக்கொள்கிறது. ‘Call Hindu Jobs’ என்ற பிரிவு மட்டுமின்றி, பின்வரும் பிரிவுகளையும் அது உள்ளடக்கியதாக அமைந்துள்ளது:
- Hinduzon: இந்து விற்பனையாளர்களால் வழங்கப்படும் சேவைகள், தயாரிப்புகளை மட்டும் காட்சிப்படுத்தும் ஒரு பிரத்யேகச் சந்தைப் பகுதி.
- Travo Hindu: கோயில் தரிசனங்கள், புனித யாத்திரைகள், பண்பாட்டுச் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றை முன்பதிவு செய்வதற்கான சேவை.
- Hindu Skill Workforce: திறமைவாய்ந்த இந்துத் தொழில்வல்லுநர்கள், தொழிலாளர்கள் ஆகியோரைப் பட்டியலிடும் தளம்.
- Hindu Mandi: இந்துக்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களின் மளிகைப் பொருட்களுக்கான சந்தையாகத் தெரிகிறது.
- Call Hindu Shakti: தேசியவாதப் பரப்புரைகள், தேசபக்தி இயக்கங்கள், இந்து தர்மத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் ஆகியவற்றுடன் இணைவதற்கு உதவும் தளம்.
- Call Hindu Mandir: கோயில்களுடன் டிஜிட்டல் முறையில் தொடர்புகொள்வதற்கான இணையவாயில்.
- Call Hindu Vivah: ‘சமூக உணர்வு கொண்ட’ இந்துத் திருமணங்களை ஊக்குவிக்கும் முயற்சி.

இந்த வலைத்தளம், ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையில், மகாராஷ்டிராவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான மங்கள் பிரபாத் லோதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் தளம் “வேலை அளிப்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயற்படும்” என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.
“யாராவது ஒருவர் இந்துச் சமூகத்திற்காக மட்டுமென ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய முடிவெடுத்தால், அதில் எந்தத் தவறும் இல்லை” என்றும், “நாளை வேறொரு சமூகம் இதேபோன்றொரு முயற்சியுடன் வந்தால், அரசாங்கம் அவர்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

விஷ்வ இந்து பரிஷத்துடன் தொண்டுசெய்வதும், பசுக்களை வழிபடுவதும்
42 வயதாகும் துராஃபே, 2018இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்பு மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (NCP) தொடர்பில் இருந்தார். அவர் பாஜக யுவ மோர்ச்சாவின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தற்போது, ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய வலதுசாரி அமைப்பான இந்து ஜாக்ரன் மஞ்ச் உடன் இணைந்துள்ளார். இந்த அமைப்புதான் துராஃபேவுடன் கூட்டணி அமைத்து இந்தச் செயலியைத் தொடங்கியுள்ளது.
விருப்பமுள்ள பயனர்கள் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்யுமாறு இந்த வலைத்தளம் கோருகிறது. தற்போது, தொடர்பு விவரங்கள், வயது போன்ற அடிப்படைத் தகவல்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இருப்பினும், பயனர்கள் தங்களுடைய ஆதார் அட்டைகளை வழங்க வேண்டும் என்றும், பெயரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அவை சரிபார்க்கப்படும் என்றும் துராஃபே கூறுகிறார்.
“இதர சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பதிவுசெய்யவே முடியாது என்பதல்ல, அவர்களும் பதிவுசெய்யலாம். ஆனால் யாரை இணைத்துக்கொள்வது, யாரை விலக்குவது என்ற உரிமை எங்களிடம் இருக்கும். எங்களுக்குச் சில நெறிமுறைகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. ஒருவர் அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயாராக இருந்தால், அது மிகவும் நல்லது” என்று கூறிய விஷால் துராஃபே, இந்த ‘நெறிமுறைகள்’ இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறினாலும், அவை எப்படி இருக்கலாம் என்பதற்குச் சில உதாரணங்களைக் கூறினார்: விஷ்வ இந்து பரிஷத் (VHP) அல்லது இந்து ஜாக்ரன் மஞ்ச் போன்ற குழுக்களுடன் சில நாள்கள் களப்பணியில் தன்னார்வத் தொண்டு செய்வது, பசு வழிபாடு போன்ற ‘சடங்குகளை’ இணைந்து நிறைவேற்றுவது முதலானவை அவற்றில் இருக்கும்.
வலைத்தளத்தின் பெயர், நோக்கம் ஆகியவற்றுக்கு துராஃபே கூறும் நியாயம்: “அனைவரும் இந்துக்களே!”
Call Hindu தளத்திற்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ நிதியுதவியும் கிடைக்காத நிலையிலும், அது “ஓலா அல்லது ஊபர் போல மிகப் பெரிய அளவில் வளரும்” என்று துராஃபே நம்பிக்கை தெரிவிக்கிறார். செயலி இன்னும் உருவாக்க நிலையிலேயே இருந்தாலும், தொடங்கப்பட்ட இரு வாரங்களுக்குள் 500க்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவுசெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘இந்துக்களுக்கு மட்டுமான’ தளங்களின் வளர்ச்சி
ஒரு முக்கிய அமைச்சரால் இந்த வலைத்தளம் தொடங்கிவைக்கப்பட்டது, அதற்குப் பெரிய அளவில் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், இது வளர்ந்துவரும் ஒரு பெரிய வலைப்பின்னலின் ஒரு பகுதி மட்டுமே.
2022ஆம் ஆண்டில், “இந்துக்களையும் அவர்களின் தயாரிப்புகள், தீர்வுகள், சேவைகள் ஆகியவற்றையும் நீங்கள் இணைக்கவும், ஆதரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் ஒரு நம்பகமான வழிமுறை“ என்ற முழக்கத்துடன் Hindu Links என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டது.
இந்தத் தளம், இந்துத் தச்சர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், வணிக உரிமையாளர்கள், வேலை தேடுபவர்கள், ஓவியர்கள், தோட்டக்காரர்கள், தெரு வியாபாரிகள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட இந்துக்களின் தொடர்பு விவரங்களைப் பகிருமாறு பயனர்களை ஊக்குவிக்கிறது.
வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினால், பெயர், வயது, கல்வி, தொழில் போன்ற விவரங்களைக் கேட்கும் தானியங்கு பதில் ஒன்று வருகிறது. இந்த வலைத்தளம் தொடர்பாகக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அதன் நிறுவனர்களைத் தொடர்புகொள்ள ‘தி குவின்ட்’ செய்தி நிறுவனம் முயன்றும் முடியவில்லை.
அதே சமயம், Shoorvir Programme என்ற மற்றொரு வலைத்தளம் தொடங்கப்பட்டது. இது இந்துக்களுக்கான சேவைகளையும் சேவை வழங்குநர்களையும் இணைக்கும் ஒரு ‘சமூக சேவைத் தளம்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது.
இந்த வலைத்தளத்தின் விளக்கக் குறிப்பு இவ்வாறு கூறுகிறது:
“நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நம்மில் சிலரால் நேரடியாகப் போராடவோ, குரல் கொடுக்கவோ முடிவதில்லை. ஆனால், பொருளாதார ரீதியில் அவர்களின் சேவைகளையும் தயாரிப்புகளையும் புறக்கணிப்பது போன்ற பல வழிகளில் நாம் அவர்களை எதிர்க்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.” இதன் நோக்கம், “நாம் செலவிடும் ஒவ்வொரு பைசாவும் நம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதற்காக, நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைய வேண்டும்.”
ஷூர்வீர் தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரம் ஒன்றில், ஒரு முஸ்லிம் சேவைப் பணியாளர் குறித்த ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. அதில் அவர், சுர்மா பூசப்பட்ட கண்களுடனும், உருது கலந்த இந்தி உச்சரிப்புடனும் காவித் துண்டு அணிந்த ஒரு வீட்டு உரிமையாளருடன் மின்விசிறி பழுதுபார்ப்புக்கான கட்டணம் குறித்து வாதிடுகிறார். அந்தப் பணியாளர் அதிகப் பணம் கேட்க முயலும்போது, வீட்டு உரிமையாளரின் மகள் குறுக்கிட்டு அவரை வெளியேறச் சொல்கிறாள். அன்றிலிருந்து ஷூர்வீர் மூலம் மட்டுமே நபர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்றும், “இவனைப் போல ஒழுங்கீனமான நபர்கள் அல்லாதவர்களை” மட்டுமே தேர்ந்தெடுப்போம் என்றும் அவள் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறாள்.
‘இந்துச் சேவை’, வேலை வாய்ப்புகள், ‘இந்து ஊழியர்கள்’ முதலான பல்வேறு சேவைகளை ஷூர்வீர் வழங்குகிறது. வேலை தேடுபவர்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் உரிய படிவங்களில் ஆதார் அட்டை எண், மதம் (இந்து, முஸ்லிம், சீக்கியர், பிறர் எனத் தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன) போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன.
இந்தத் திட்டக் குழுவில், வலதுசாரி இணைய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட வினோத் அண்ணா (ஸ்ட்ரிங் ரிவீல்ஸ் என்ற புனைப்பெயரில் அறியப்படும் வலதுசாரி இன்ஃப்ளூயன்சர்), யதி நரசிம்மானந்த் (வெறுப்புப் பேச்சு தொடர்பாக இவர்மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன), அஜீத் பாரதி (ஓப்-இந்தியா இணையப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்), ஜெய்ப்பூர் டயலாக்ஸின் சஞ்சய் தீட்சித் முதலானோர் உள்ளனர். இந்த வலைத்தளத்தின் நிறுவனர், விரேந்திர பாண்டே என்ற நபர் ஆவார்.
ஷூர்வீர் அமைப்பின் பிரதிநிதி ராகுல், ‘தி குவின்ட்’ ஊடகத்திடம் பேசுகையில், “மூர்க்கர்கள் தங்கள் வீடுகளுக்குள் நுழைவதை விரும்பாதோருக்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கும்படி அழைக்கும் பல பதிவுகளைப் பகிர்ந்திருக்கும் ஷூர்வீரின் X (முன்பு ட்விட்டர்) பக்கம், “மூர்க்கர்கள்” என்று அவர் யாரைக் கருதுகிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
“இத்தகைய மூர்க்கர்கள் வேண்டாமெனக் கருதுவோருக்கு ஒரு மாற்று வழியை நாங்கள் உருவாக்குகிறோம். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை, பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கவும்கூட இல்லை. ஆனால், செய்திகளைப் பின்தொடர்வதன் மூலம், இந்துக்கள் எவ்வாறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்பவர்கள் எங்களுடன் இணைய விரும்புவர்.”
தாங்கள் எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை என்று ஷூர்வீர் கூறினாலும், அதன் வலைத்தளம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எல்லாப் போர்களுக்கும் நிதி அவசியம். நீங்களும் இந்தப் புரட்சியில் ஓர் அங்கமாகுங்கள். செயலி, பணியாளர் ஊதியம், தொழில்நுட்ப உபகரணங்கள், இணைய வசதி போன்றவை இந்தப் போருக்கும் தேவை. இவை இலவசமாகக் கிடைப்பதில்லைதானே!”
இந்தப் ‘புரட்சி’, ‘போர்’ என்பவை எவற்றைக் குறிக்கின்றன என்று வினவியபோது, ராகுல், “இந்துக்களே உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர். பைபிள், குர்ஆன், யூத மத நூல்கள் போன்றவை இறைநம்பிக்கை அற்றவர்களுக்கு வாழ உரிமையில்லை எனக் கூறுகின்றன. நாங்கள் அவற்றை எதிர்த்துப் போராடி உயிர்வாழவே முயல்கிறோம். நாங்கள் தாக்குதல் தொடுப்பவர்கள் அல்லர், தற்காத்துக் கொள்ளப் போராடுபவர்கள்” என்று விளக்கமளித்தார்.
வலைத்தளத்தின் தகவல்படி, இதுவரையில் 50,000க்கும் அதிகமான சேவை கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டையும் கேரளாவையும் தவிர்த்து, இந்தியா முழுவதும் இதன் செயற்பாடுகள் விரிவடைந்துள்ளன. ‘புதிய கல்வி நலச் சங்கம்’ (New Education Welfare Society) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இது இணைந்து செயல்படுகிறது.
DO Politics நிகழ்ச்சியில் அஜீத் பாரதிக்கு அளித்த நேர்காணலில், “ஹலால் பொருளாதாரம், முஸ்லிம் அல்லாதவர்களை பொருளாதார ரீதியாக எவ்வாறு விலக்கி நிறுத்துகிறது” என்பதுகுறித்துப் பேசிய பாண்டே, “நாம் அவர்களை அடிப்பதன் மூலமோ வெளியேற்றுவதன் மூலமோ அல்ல, பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும்“ என்று அழுத்தமாகக் கூறினார்.
படிப்படியாக வளர்ந்துவரும் அபாயகரமான போக்கு
இணையத்தின் மற்றொரு பகுதியில், Hindu Jobs என்ற பெயரிலான ஒரு டெலிகிராம் சேனல் 2021 முதல் செயற்பட்டுவருகிறது. அந்தக் குழுவில் பதிவிடப்பட்ட முதற் செய்திகளில் ஒன்று:
“இந்தச் சேனல் இந்துக்களால் இந்துக்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறது. இந்துக்கள் அல்லாதோருடன் இதைப் பகிர வேண்டாம். அவ்வாறு செய்தால், உங்கள் சகோதர சகோதரிகள் வேலை பெறுவதில் சிரமங்களைச் சந்திப்பர்.”
இந்தச் சேனலின் நிர்வாகி, விற்பனை முதல் மென்பொருள் பொறியியல், நிதி ஆய்வாளர் வரையிலான பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பகிர்ந்துவருகிறார். அந்த வேலைப் பட்டியல்களில் வெளிப்படையாக மத அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், குழுவின் முதன்மைச் செய்தி, ஓர் குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இத்தகைய தளங்கள் திடீரெனத் தோன்றிவிடவில்லை. முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே வலதுசாரிப் பேரணிகளிலும் நிகழ்வுகளிலும் தொடர்ந்து ஒலித்துவருகின்றன. பாஜக தலைவர்களான நிதேஷ் ரானே, டி ராஜா சிங் போன்றோர் பொதுக் கூட்டங்களில் இத்தகைய கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவருகின்றனர்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம் கடைக்காரர்களும் வியாபாரிகளும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், Call Hindu வலைத்தளத்தைத் தொடங்கிவைத்துள்ளார் லோதா.
நகர்ப்புற முறைசாரா வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களின் சதவீதம் குறித்து 2017இல் ஆய்வறிக்கை ஒன்றை இணைந்து எழுதிய பொருளாதார நிபுணர் ஃகாலிது ஃகான், “இத்தகைய தளங்கள் சமூகத்தில் ஏற்பட்டுவரும் ஆழமான மாற்றங்களை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.
“இத்தகைய போக்கு திடீரென்று உருவானது எனச் சொல்வது தவறு. இது முன்னரும் இருந்ததுதான்; அப்போது சில உதிரிகளால், சிறு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இத்தகைய கருத்துகளைப் பரப்புவதில் அரசியல் ஆதாயமும் இருக்கிறது” என்று ஃகான் மேலும் கூறுகிறார்.
சுயதொழிலில் — குறிப்பாக தச்சு வேலை, இறைச்சி விநியோகம், வாகனப் பழுதுபார்ப்பு போன்ற துறைகளில் — முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதனால், இத்தகைய பொருளாதாரப் புறக்கணிப்புக்கு அவர்கள் எளிதில் இலக்காகிறார்கள் என்றும் ஃகான் சுட்டிக்காட்டுகிறார்.
“பாகுபாடு என்பது சமூகத்தில் எப்போதும் இருந்துவந்துள்ளதுதான். ஆனால் முன்னரெல்லாம், ஏதேனுமொரு சமூகத்திற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவது என்பது ஓர் அறமற்ற செயல் என்ற எண்ணமாவது நிலவியது. இப்போது, அதில் ஆதாயம் இருக்கிறது. அதிகாரம் படைத்தவர்கள் இவற்றை வெளிப்படையாகக் கண்டிக்கப் போவதில்லை. கண்டிக்கப்படாமையால் இத்தகைய முயற்சிகள் மென்மேலும் அதிகரிக்கும்“ என்று அவர் கூறுகிறார்.
சட்ட ரீதியான ஓட்டை!
இந்திய அரசியலமைப்பின் சரத்து 14, அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று உத்தரவாதம் அளிக்கிறது. அதேபோல் சரத்து 15, மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு குடிமகனையும் பாகுபடுத்துவதைத் தடை செய்கிறது.
ஆனால், இந்தச் சட்டப் பாதுகாப்புகள் அரசின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். ‘கால் இந்து’ அல்லது ‘ஷூர்வீர்’ போன்ற தனியார் முயற்சிகள் இவற்றால் கட்டுப்படுத்தப்படாமல் விடப்படுகின்றன.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர், ‘தி குவின்ட்’ ஊடகத்திடம் இதைப் பற்றிக் கூறும்போது:
“உண்மையில், எந்தச் சட்டமும் இதை நடைமுறையில் தடை செய்யவில்லை. ஏனெனில், அரசியலமைப்பு விதிகள் அரசுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், இது ஒரு பொதுப் போக்காக மாறினால், அது மிக ஆபத்தானது. மத நம்பிக்கையில் தொடங்கியுள்ள இது, பின்னர் பாலினம் போன்றவற்றுக்கும் விரிவடையலாம். இதற்கு முடிவே இல்லை.”
விதி சட்டக் கொள்கை மையத்தின் (Vidhi Centre for Legal Policy) இணை நிறுவனரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான அலோக் பிரசன்னா, இந்தப் போக்கு, ஏன் இந்தியாவுக்கு ஒரு சீரான பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் (uniform anti-discrimination code) அவசரமாகத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்தியாவில் அரசு, தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு பொதுவான சட்டம் இல்லாததுதான் நம்மிடமுள்ள குறைபாடு. இத்தகைய நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும், தெளிவாக வரையறுக்கப்பட்ட, முழுமையான சட்டம் எதுவும் இல்லை.”
தீண்டாமையைக் குற்றமாக்கும் ‘எஸ்சி/எஸ்டி சட்டம்’ (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) குறித்துப் பேசிய அவர், பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினரைத் தாண்டியும் தனிநபர்களைப் பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டது என்று கூறினார்.
“தீண்டாமை புதிய வடிவங்களில் வெளிப்படுவதால், அரசியலமைப்பு ரீதியான தீண்டாமைத் தடை சட்டம் இன்னும் பரந்த அர்த்தத்தில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படிச் செய்யப்படும் பட்சத்தில், இத்தகைய மத அடிப்படையிலான புறக்கணிப்புகளும் அந்தச் சட்ட வரம்புக்குள் வரக்கூடும். இருப்பினும், நீதிமன்றங்கள் இன்னும் அந்த வாசிப்பை முழுமையாக அங்கீகரிக்கவோ ஆய்வுக்குட்படுத்தவோ இல்லை.”
பிரசன்னா மேலும் சுட்டிக்காட்டுகையில், இந்தியாவில் ‘குடிமைப் பாதுகாப்புச் சட்டம்’ (Protection of Civil Rights Act), ‘மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்’ (Protection of Human Rights Act) போன்றவை இருந்தாலும், அவை அவற்றின் உண்மையான பொருளில் நடைமுறையில் இல்லை என்றார்.
இது தொடர்பாக, ‘ஸொராஸ்ட்ரிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்’ எதிர் ‘மாவட்டப் பதிவாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள்’ (2005) வழக்கினை அவர் மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில், ஃபார்சி வீட்டு வசதி சங்கங்கள், ஃபார்சி மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க முடியுமா என்பதுதான் பிரச்சினை. மாவட்டப் பதிவாளர் அத்தகைய மத அடிப்படையிலான விதிமுறையானது ‘பாகுபாடு காட்டுவதாகும்’ என்று கருதிய நிலையில், சங்கத்தின் விதிமுறைகள் அங்கத்துவத்தை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமாகச் சுருக்குவது சட்டப்பூர்வமானதுதான் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
“அந்த வழக்கில் நீதிமன்றம், ஒரு சமுதாயம் தனது சமூக-கலாச்சார உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் அளித்தது. அரசியலமைப்பு இதற்கு உரிமை வழங்கியுள்ளது. ஆனால், சட்டம் எந்த அளவிற்கு இதை அமல்படுத்த முடியும் என்பது கேள்வி. வாடிக்கையாளர்கள் இந்துத் தொழிலாளர்களுக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ பணம் செலுத்தத் தயாராக இருக்கும் பட்சத்தில், அதில் அரசு தலையிடுவதற்கு வழியில்லை. பாரத் மேட்ரிமோனி போன்ற தளங்கள் சாதி, மதத்தின் அடிப்படையில் வடிகட்டுவதை நாம் நீண்ட காலமாகவே சகித்துவந்துள்ளோம்.”
அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள்கூட இனத்தின் அடிப்படையில் சம வாய்ப்புகளை மறுக்க முடியாது என்பதை சிவில் உரிமைகள் சட்டம் உறுதிசெய்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவின் குடிமைப் பாதுகாப்புகள் விரிவானவை அல்ல. பாகுபாட்டை எதிர்க்கும் நெறிமுறைகளுக்கும், சிறுபான்மையினர் தமக்குள் ஒன்றிணைவதற்கான அல்லது தமது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமைகளுக்கும் இடையே ஓர் சமநிலையை ஏற்படுத்துவதுதான் இங்குள்ள சவால்.
அதேவேளை, மக்களுக்குச் சிறந்த சேவைகள் அல்லது வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் ‘Urban Company’ போன்ற மாற்று வழிகளைத் தேடிச் சென்றுவிடுவார்கள். கழிவறையின் அடைப்பு சரி செய்யப்படாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு மதப் பற்று கொண்டவரா நீங்கள்?”
— தனிஷ்கா சோதி
(நன்றி: The Quint)
(தமிழில்: A. செய்யது அலீ)