மகாஸிதியச் சிந்தனை: ஓர் ஆய்வு முறைமை
பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் ஆய்வுமுயற்சிகளினூடான புரிதல்
![]()
ஆய்வுச் சுருக்கம்
சமகால உலகில் இஸ்லாமிய புலமைத்துவ வட்டாரத்தில் அதிக கவனயீர்ப்பை பெற்று வரும் ‘மகாஸித்’ பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது. வரலாறு நெடுகிலும் உஸூலுல் ஃபிக்ஹ் மற்றும் ஃபிக்ஹ் கலையோடு மட்டுப்படுத்தி நோக்கப்பட்ட மகாஸிதை, ஷரீஆவின் எல்லாத் துறைகளோடும் தொடர்புபடுத்தி நோக்கும் நிலையை சமகால ஆய்வுகளில் காண முடிகின்றது. இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் தோன்றிய ஒரு கலையாக நோக்குவதற்கு அப்பால், மகாஸிதை ஓர் ஆய்வு முறைமையாக விளக்கும் சமகால மகாஸிதிய்ய ஆய்வாளர் பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய்கிறது. மகாஸித் துறைக்கு கலாநிதி ஜாஸிர் அவ்தாவினால் வழங்கப்பட்ட அறிவுப் பங்களிப்புகளை ஆராய்ந்து, பகுப்பாய்வு முறைமையை கையாண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய மகாஸித் ஆய்வுப் போக்கினை ஆழ்ந்த விமர்சனத்துக்கு உட்படுத்தும் அவ்தா, மகாஸிதிய்ய ஆய்வு முறையை தீர்வுத் திட்டமாக முன்வைப்பதை இவ்வாக்கம் பிரதானமாக ஆராய்கிறது.
திறவுச்சொற்கள் : மகாஸிதுஷ் ஷரீஆ, மகாஸித் மைய இஜ்திஹாத், மகாஸிதிய சிந்தனை, மகாஸித் முறைமை, ஜாஸிர் அவ்தா
அறிமுகம்
‘மகாஸித்’ என்ற அரபுமொழிச் சொல்லிற்கு “இலக்குகள்” அல்லது “நோக்கங்கள்” என்பன அர்த்தமாகும். மகாஸிதுஷ் ஷரீஆ என்றால், இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள்.
இஸ்லாமிய ஷரீஆ என்பது வெறும் கட்டுப்பாடுகள், தண்டனைகள், அல்லது பரம்பரைச் சட்டங்கள் போன்றவை அல்ல. அது ஒரு மனித நேய அடிப்படையிலான, சமூகநலக் குறிக்கோள்களை அடைவதற்கான ஒரு வாழ்வியல் முறையாகும். அத்தகைய ஷரீஆ தனது போதனைகள் மூலம் அடைந்து கொள்ள நாடும் நோக்கங்களே ‘மகாஸிதுஷ் ஷரீஆ’ எனப்படும். அந்த வகையில் ஷரீஆவின் முக்கிய நோக்கங்கள், இலக்குகளாக பின்வரும் ஐந்து விடயங்கள் கருதப்படுகின்றன:
i. ஹிப்ழுத் தீன் (மார்க்கம்) – மத நம்பிக்கையை பாதுகாத்தல்
ii. ஹிப்ழுந் நஃப்ஸ் (உயிர்) – மனித உயிரை பாதுகாத்தல்
iii. ஹிப்ழுல் அக்ல் (அறிவு) – அறிவை வளர்த்தல் மற்றும் மதிப்பிடல்
iv. ஹிப்ழுந் நஸ்ல் (சந்ததி) – குடும்பம் மற்றும் சந்ததியை பாதுகாத்தல்
v. ஹிப்ழுல் மால் (செல்வம்) – சொத்துகளை பாதுகாத்தல்
மகாஸிதுஷ் ஷரீஆ என்பது, இஸ்லாமிய சட்டதிட்டங்களை பூரணமான நோக்கில், அதன் உயிரோட்டத்தோடு அணுக துணைபுரியும் சிந்தனையாக நோக்கப்படுகின்றது. சட்டங்கள் எதற்காக இயற்றப்பட்டுள்ளன என்ற வினாவை தனது ஆய்வுப் பரப்பில் முக்கியமானதாகக் கொண்டு இது இயங்குகின்றது.
சமகாலத்தில் மகாஸிதுஷ் ஷரீஆ எனும் இஸ்லாமிய அறிவியற்துறையின் வளரச்சிக்கு அளப்பரிய பங்காற்றிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிந்தனையாளர்களில் முதன்மையானவர் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா. கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் மகாஸித் ஆய்வகம் (Maqasid Institute) எனும் சிந்தனை தளத்தின் (Think Tank) பணிப்பாளராக தற்போது பணியாற்றி வரும் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா, மகாஸித் துறையில் பல புதுமையான ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதோடு, மகாஸிதை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அறிவியற்துறையை சமகால ஒழுங்கிற்கேற்ப மீளொழுங்குபடுத்த ஓர் ஆய்வு முறைமையை வடிவமைத்துள்ளார்.
இக்கட்டுரை பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவுடைய மகாஸித் குறித்த முக்கியமான ஆய்வுமுயற்சிகளான பின்வரும் ஐந்து நூட்களை மைப்படுத்தியதாக அமைந்துள்ளது.
I. மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில் முப்ததிஃ
II. மகாஸிதுஷ் ஷரீஆ கஃபல்ஸஃபதின் லித் தஷ்ரீஃ அல்இஸ்லாமி : ருஃயா மன்ழூமிய்யா
III. இஜ்திஹாத் அல்மகாஸிதி : மினத் தஸவ்வுர் அல்உஸூலி இலத் தன்ஸீல் அல்அமலி
IV. தஃப்கீர் அல்மகாஸிதி:முராஜஆதுன் லிதர்தீபில் அக்லில் முஸ்லிம்
V. அல்மன்ஹஜிய்யா அல்மகாஸிதிய்யா : நஹ்வ இஆததி ஸியாகதின் முஆஸிரதின் லில்இஜ்திஹாத் அல்இஸ்லாமி
இந்த ஐந்து ஆக்கங்களையும் நன்கு வாசிப்பிற்கும், பகுப்பாய்விற்கும் உட்படுத்துவதன் மூலம் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா தனது மகாஸித் பற்றிய புரிதலை எவ்வாறு மேம்மபடுத்தியும், செம்மைப்படுத்தியும் வந்துள்ளார் என்பதை காலக்கிரமப்படி புரிந்துகொள்ள முடியும். பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் குறிப்பிடத்தக்க இந்த ஐந்து ஆக்கங்கள் தெரிவுசெய்ததற்கு இதுவே காரணமாகும்.
- பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் ‘மகாஸிதுஷ் ஷரீஆ’ பற்றிய அவதானங்கள்
1.1. மகாஸித் எனும் சிந்தனையை மக்கள் மயப்படுத்துவதற்கான முயற்சி
‘உஸூல் மற்றும் ஃபிக்ஹ் துறையினரின் வாசிப்புக்கு மட்டும் உட்பட்டது’ என்ற கருத்தில் இல்லாமல், மகாஸிதுஷ் ஷரீஆ எனும் கலையை ‘முஸ்லிம் சமூகத்திற்கு பொதுமையான அறிவுக் கலாச்சாரம்’ என்ற வகையில் எளிமையான விளக்கங்கள் மூலம் ‘மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில் முப்ததிஃ’ எனும் நூல் வழியே விளக்குகின்றார் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா (அவ்தா,2008). உஸூலுல் ஃபிக்ஹ் துறைக்கே உரிய கனதியான, ஆழ்ந்த புரிதலை வேண்டி நிற்கும் கலைச்சொல் பிரயோகங்கள் மூலம் மகாஸிதை அடையாளப்படுத்துவதை தவிர்த்து, எளிய நடைமுறை உதாரணங்களின் வழியாக மகாஸித் பற்றிய யதார்த்தத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் இந்த துறைக்கே உரித்தான கலைச்சொற்களை மிக நுட்பமாகவும் இலகுவாகவும் புரியவைக்க முயன்றுள்ளார். அந்த வகையில் மகாஸித் குறித்த பின்வரும் எளிமையான புரிதல்களை நோக்கி இந்த நூல் வாசகர்களை நகர்த்துவதை காண முடியும் .
I. மகாஸித் என்பது, ஷரீஆவின் வழிகாட்டல்கள், போதனைகள் மற்றும் சட்டதிட்டங்களை ‘ஏன்?’ என்ற கேள்வியினூடாக அவற்றின் நியாயத்தை கண்டறிந்து அதன்படி அமல்படுத்த முனைவதாகும்.
II. மகாஸித் என்பது ‘மனித நலன்களை மையப்படுத்திய போதனைகள்’ ஆகும். எந்தவொரு சட்டமும் மனிதனுக்கு நலனை ஈட்டிக்கொடுக்கக் கூடியதாகவே இருக்கும், அல்லது அவனுக்கு ஏற்பட இருக்கும் கெடுதிகளை, தீங்குகளை தவிர்ப்பதாக இருக்கும்.
III. மகாஸிதானது தனி மனிதனை மையப்படுத்தி அத்தியாவசியங்கள் (ழரூரிய்யாத்), தேவைகள் (ஹாஜ்ஜிய்யாத்), ஆடம்பரங்கள் (தஹ்ஸீனிய்யாத்) என மூவகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, முழு சமூகத்தையும் மையப்படுத்தி முழுமொத்த ஷரீஆவினதும் பொது இலக்குள் (மகாஸித் ஆம்மா), குறிப்பான சில சட்டப் பகுதிகளுக்குரிய இலக்குகள் (மகாஸித் ஹாஸ்ஸா), ஷரீஆவின் ஒவ்வொரு ஏவல் மற்றும் விலக்கல்களுக்கான தனித்தனியான இலக்குகள் (மகாஸித் ஜுஸ்இய்யா) என வகைப்படுத்தப்பட முடியும்.
IV. மகாஸித் என்பது இஸ்லாமிய அறிவியற்துறை வரலாற்றில் புதுமையான ஒரு கலை என்பதை தாண்டி இந்த மார்க்கம் அருளப்பட்டதிலிருந்து நாளை மறுமை வரை அதன் உயிரோட்டத்திற்கான உறுதிப்படுத்தவல்ல காரணியாகும்.
V. மகாஸித் என்ற கலைச்சொல் இஸ்லாமிய அறிவியற்துறைக்கு புதுமையாக இருப்பினும் அதற்கு நெருக்கமான, அதன் கருத்தை ஒத்த கருத்தாடல்கள் பல கோணங்களில் பல சொல்லாடல்கள் வழியே, பல இமாம்களால் தத்தமது ஆக்கங்களில் பேசப்பட்டுள்ளது. மகாஸித் என்பது வெறுமனே ஒரு கருதுகோளோ அணுமானமோ அல்ல மாறாக அது ஒரு கோட்பாட்டு உண்மை என்பதை இது எடுத்துச் சொல்கிறது.
1.2. மகாஸித் எனும் கலையின் உட்கட்டமைப்பையும் இயக்கத்தையும் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள்
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் அவ்தா தனது ‘மகாஸிதுஷ் ஷரீஆ கஃபல்ஸஃபதின் லித் தஷ்ரீஃ அல்இஸ்லாமி’ எனும் நூலில், மகாஸித் குறித்த புரிதலில் மற்றுமொரு பரிமாணத்தை காண்பிக்க முயல்கின்றார். வெறுமனே ‘முஜ்தஹிதிற்கான நிபந்தனைகள்’ என்ற தரத்தில் அல்லாமல், இஸ்லாமிய ஷரீஆவின் ஒட்டுமொத்த போதனைகளையும் இயக்குவிக்கும் உயிர் நாளமாக மகாஸிதை காண்பிக்கின்றார் (அவ்தா, 2021). பேராசிரியர் ஜாஸிர் அவ்தா இந்நூலில் தன் கருத்துகளை நிறுவ ‘System Approach’ (கட்டமைப்பு வழி அணுகல்) எனும் அறிவுப்புல ஆய்வொழுங்கை கையாண்டுள்ளார் (அவ்தா,2008).
முன்னர் பெயர் குறிப்பிட்ட நூலில் மகாஸித் பற்றிய புரிதலை பொது முஸ்லிம் சிந்தனைக்கு இலகுவாக முன்வைக்க முயன்ற பேராசிரியர் ஜாஸிர் அவ்தா, இக்குறிப்பிட்ட இரண்டாவது நூலில் பல்வகைப்பட்ட இஸ்லாமிய அறிவியல் கலைகளுக்கு மத்தியில் இஸ்லாமிய சட்டவாக்கத்தை சீரமைக்க அறிவியல் கோட்பாடாக மகாஸிதை முன்மொழிவதோடு, அதற்கான அறிவியல் சான்றுகளை மகாஸித் மீதான கட்டமைப்பு வழி அணுகல் (System Approach) மூலம் நிறுவ முயல்கிறார். ஆக ‘மகாஸித் என்பது ஷரீஆ சட்டங்கள் குறித்த பரந்த மற்றும் ஆழமான கோட்பாட்டு உண்மைகளை நமக்கு அதன் உயிரோட்டத்தோடு தத்துரூபமாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற இஸ்லாமிய அறிவியற்கலை’ என்பதை இந்நூல் மூலம் அவ்தா விளக்குகின்றார்.
1.3. சமகால சூழலில் மகாஸித் குறித்த கருத்தாடலை அபிவிருத்தி செய்வதற்கான பங்களிப்புகள்
இதனை தொடர்ந்து ‘இஜ்திஹாத் அல்மகாஸிதி : மினத் தஸவ்வுர் அல்உஸூலி இலத் தன்ஸீல் அல்அமலி’ எனும் நூல் மூலமாக பேராசிரியர் ஜாஸிர் அவ்தா ‘சமகால சிந்தனை, அறிவியல் நிலைகளுக்கேற்ப மகாஸித் குறித்த கருத்தாடல்களை எப்படி நாம் அபிவிருத்தி செய்யலாம்?’ என்ற கேள்விக்கு விடை காண்பதற்கான ஆழ்ந்த முயற்சியில் இறங்கியுள்ளார். மகாஸிதை நமது சமகால விவகாரங்களை அணுகும் ஒரு அறிவியல், மூல கோட்பாடாக முன்வைப்பதாயின், மரபுவழி முதுசங்களில் மகாஸித் குறித்து பேசப்பட்டு வரும் கருத்தாடல்களை விட்டும் வெகு நீண்டதொரு சிந்தனைப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் (அப்துல்கஃப்ஃபார், 2021).
இதனை பலர் ‘மகாஸிதின் பெயரில் இஸ்லாமிய அறிவியற்துறை மரபுகளை கட்டுடைப்பு செய்தல்’ என தவறாக விளங்க முடியும். ஆகவே மிகவும் கவனமாக ‘முதுசங்களின் (துராஸ்) மீதான மீள்வாசிப்பு’ எனும் அறிவியல் செயற்பாட்டினூடாக மிகவும் நிதானமாக ஆரம்பகால அறிஞர்கள் தத்தமது கால, நேர, சூழலை கருத்தில் கொண்டு எப்படி மகாஸித் எனும் கருத்தாடலை தொடர் வரலாற்று கிரமத்தினூடாக நகர்த்தி வந்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்திய பின்னர், சமகால சூழலில் மகாஸிதை அணுகத்தக்க பல்பரிமாணங்களையும், அப்படி அணுகப்படுவதற்கான நியாயங்களையும் சீரானதொரு ஆய்வின் மூலம் அவ்தா முன்வைக்கின்றார் (அப்துல்லாஹ், 2023).
அந்த வகையில், மரபுவழியாக பேசப்பட்டுவரும் மகாஸித் பற்றிய கருத்தாடல்களை ஆரம்பகால அறிஞர்களின் கருத்துகளில் தங்கியிருக்காமல் அவர்கள் நமக்கு காட்டித் தந்த மீள்வாசிப்பு, பகுப்பாய்வு மற்றும் விமர்சன அணுகுமுறை போன்றவற்றின் வழியாக சமகாலத்திற்கேற்றவாறு அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் பின்வரும் கருத்துகளை அவர் இந்நூல் வழியாக முன்வைக்கின்றார் (அவ்தா,2025).
I. மகாஸிதை உஸூலுல் ஃபிக்ஹ் கலைக்குள்ளான கோட்பாட்டு வாதப்பொருளாக மாத்திரம் கருதுவதை தாண்டியும் நடைமுறை விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு யதார்த்த சிந்தனை என்று காட்சிப்படுத்துகின்றார்.
II. அறிஞர்கள் மகாஸிதை தங்களுடைய ‘இஜ்திஹாதில்’ பயன்படுத்தல் என்ற நிலையை தாண்டி, மகாஸிதை புரிந்துகொள்வதிலும், அதனை நவீன அறிவியற்கலைகளுக்கு நிகராக வளர்ப்பதிலும் ‘இஜ்திஹாத்’ (அறிவியல் ஆய்வு முயற்சிகள்) மேற்கொள்ளல் என்ற விரிந்த கண்ணோட்டத்தில் உரையாடுகின்றார்.
III. ‘மகாஸித்’ என்ற ஒழுங்கு இஸ்லாமிய ஷரீஆவின் வட்டத்திற்குள் மாத்திரமின்றி ‘அகீதா’ எனப்படும் நம்பிக்கை கோட்பாட்டு பரப்பில் கூட புரிந்து கொள்ள முடியும் என்பதை நிறுவ முற்படுகின்றார்.
IV. இஸ்லாமிய உலகக் கண்ணோட்டத்தை (Islamic Worldview) சீரமைப்பதற்கான மூலக் கருவியாக மகாஸிதை தொழிற்படுத்தும் முயற்சியை இந்நூல் வழியாக மேற்கொள்கின்றார்.
- மகாஸிதிய சிந்தனை: முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்கான தீர்வாக பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் முன்மொழிவு
தன்னுடயை ‘தஃப்கீர் அல்மகாஸிதி:முராஜஆதுன் லிதர்தீபில் அக்லில் முஸ்லிம்’ (மகாஸிதிய சிந்தனை:முஸ்லிம் சிந்தையை ஒருங்கமைப்பதற்கான மீள்வாசிப்புகள்) எனும் நூல் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பல்வகைப்பட்ட மட்டங்களிலும், பல்வகைப்பட்ட பிரச்சினைக்கு ஆணிவேராக காணப்படும் சிந்தனைச் சிக்கலுக்கு மகாஸிதை முன்னிறுத்தி ஒரு சிந்தனை முறையை தீர்வாக முன்மொழிகின்றார் (அவ்தா,2017). இக்குறித்த நூலில் மகாஸிதை ஏற்கனவே தனது பல நூட்களில் உரையாடப்பட்டது போல் ஒரு கலையாக அன்றி ஒரு சிந்தனை மாதிரியாக பேராசிரியர் ஜாஸிர் அவ்தா முன்வைக்கின்றார்.
பத்து வகையான சிந்தனை சிக்கல்களை இந்நூல் வழியாக அடையாளப்படுத்துவதோடு, அவற்றிலிருந்து முஸ்லிம் சிந்தையை மீட்கவல்ல பத்து வகையான மகாஸித் மைய கருத்தாடல்களோடு இரண்டரக் கலந்த சிந்தனை முறைகளை மாற்றுத் திட்டமாக முன்மொழிகின்றார். அந்த வகையில் பின்வரும் வகையில் இந்நூலின் கருப்பொருள் மகாஸித் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் சிந்தனை மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நகர்கின்றது.
I. சீரான, தர்க்க ரீதியான சிந்தனையில் ஏற்படும் பலவீனத்தை தவிர்க்க ‘இறை மற்றும் பிரபஞ்ச நியதிகள்’ எனும் ஒழுங்கை நமது சிந்தனை முறையில் கடைப்பிடித்தல்.
II. வெறும் அணுமானங்கள், கருதுகோள்களின் அடியான யூகங்களை சிந்தனைக்கான மூலமாக கொள்ளாமல் எந்த கோட்பாடுகளையும், தத்துவங்களையும் விமர்சன பூர்வமாக அணுகி அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து நிறைகளை மனிதகுல வளத்திற்காக பயன்படுத்துதல்.
III. ‘வெள்ளை, இல்லையேல் கருப்பு’ என்ற இரண்டில் ஒன்றுதான் சரி என்கின்ற மனோநிலையை தவிர்த்து ‘பல்வகைமை’ அல்லது ‘பல்பரிமாணங்கள்’ எனும் யதாரத்தத்தை புரிய முயலுதல்.
IV. பகுதிவாரியான சிந்தனையால் அல்லது ஒரு பக்கப் பார்வையால் அனைத்தையும் அரைகுறையாக அணுகாது, பூரண சிந்தனையினூடாக அனைத்தையும் உள்வாங்கிய விதத்தில் சிந்தித்தல்.
V. ‘என்ன?’,எப்படி?’ என்ற கேள்வியிலிருந்து ‘ஏன்?’ என்ற கேள்வியை நோக்கி நகர்தல்.
VI. சிந்தனை தேக்கத்திலிருந்து விடுபடும் பொருட்டு அறிவுக்கோட்பாட்டில் மாறும் மற்றும் மாறா காரணிகளை இனம்கண்டு அவற்றிற்கு மத்தியில் சமநிலை பேணுதல்.
VII. தான்தோன்றித்தனமாக சிந்திக்காமல், முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களை (அவ்லவிய்யாத்) மையமாகக் கொண்டு சிந்தித்தல்.
VIII. படிமுறை ஒழுங்கில் செயலாற்ற வேண்டிய இடங்களில், தருணங்களில் அவசரமின்றி, ஆரவாரமின்றி இயற்கையின் ஒழுங்கில் அவற்றை இயங்கவிடுவதன் மூலமாக நமது விவகாரங்களை நிவர்த்தி செய்தல்.
IX. மூடுண்ட சிந்தனைக்குள்ளால் சிக்குண்டு இருக்காமல் அனைவரையும் அரவணைக்கும், உள்வாங்கும் திறந்த மனப்பான்மையுடனான சிந்தனை முறைக்கு பழக்கப்படுதல்.
X. பௌதீக அம்சங்களையும், சடரீதியான காரணிகளையும் மட்டும் வைத்து சிந்திக்கும் வரண்ட சிந்தனையை தவிர்த்து இதயங்களை ஈர்க்கும், உணர்வுப் பூர்வமாக சிந்திக்கும் சிந்தனைகளை நோக்கி நகர்தல்.
மகாஸிதை மையப்படுத்திய எந்தவொரு இஸ்லாமிய பணி அல்லது அறிவியற்துறை வேலைத்திட்டமாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மேற்சொன்ன விடயங்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆகவேதான் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா, முஸ்லிம் சிந்தை சிக்கலுக்கான தீர்வாக மகாஸிதிய சிந்தனையை மேற்சொன்ன ஒழுங்கில் முன்மொழிகின்றார் (ஸுப்ஹானி, 2023).
- பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் முறைமை (Maqasid Methodology) : இஸ்லாமிய அறிவியற்துறையை மீளொழுங்குபடுத்தல்
சமகால உலக ஒழுங்கானது பல்வேறுபட்ட கருத்தியல் அடிப்படைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமான, இஸ்லாத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலான எத்தனையோ கருத்தியல்கள் பங்கு வகித்துள்ளன. இந்நிலையில் சமகால ஒழுங்கில் இஸ்லாத்தை ஒரு மாற்று வழித்திட்டமாக முன்வைப்பதாயினும், இஸ்லாத்தின் இருப்பை பாதுகாப்பதாயினும் இஸ்லாத்தின் போதனைகளை அதன் உயிரோட்டம் குன்றாது, சமகால கருத்தியல்களுக்கு நிகராக கோட்பாட்டாக்கம் செய்ய வேண்டிய தேவையும், பொறுப்பும் முஸ்லிம் சமூக புத்திஜீவிகளுக்கும், அதன் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கும் இருக்கிறது.
அந்த வகையில், பேராசிரியர் ஜாஸிர் அவ்தா தன்னுடைய முன்சென்ற ஆய்வு முயற்சிகள் மற்றும் அவதானங்களின் வழியாக மகாஸிதை மையமாகக் கொண்ட கோட்பாட்டு உருவாக்கத்திற்கான ஆய்வு முறைமை ஒன்றை வடிவமைத்துள்ளார். அம்முறைமையை ‘அல்மன்ஹஜிய்யா அல்மகாஸிதிய்யா’ அதாவது ‘மகாஸித் முறைமை’ என அவர் அடையாளப்படுத்துகின்றார் (Maqasid Methodology). ஆங்கிலத்தில் ‘Re-envisioning Islamic Scholarship: Maqasid Methodology as a new approach’ எனும் பெயரிலும், அரபுமொழியில் ‘அல்மன்ஹஜிய்யா அல்மகாஸிதிய்யா: நஹ்வ இஆததி ஸியாகதில் இஜ்திஹாத் அல்முஆஸிர் அல்இஸ்லாமி’ எனும் பெயரிலும் வெளியான அவரது அண்மைக்கால ஆய்வு நூலில் இது குறித்து அவர் ஆழமாகப் பேசுகின்றார் (அவ்தா,2021).
முஸ்லிம் சமூகத்தின் எவ்வகையான எழுச்சிக்கும் மகாஸித் குறித்த அறிவுப் பின்னணி அவசியமானது என்பதை ஷரீஆ துறை நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என பலரும் பல விதமாக வழியுறுத்தியுள்ளதை இஸ்லாமிய சிந்தனையின் வரலாற்றை படிக்கும் எவரும் புரிந்துகொள்வர். அந்த வகையில் ஷெய்ஹ் முஹம்மத் அப்துஹூ, இமாம் ரஷீத் ரிழா, ஷெய்ஹ் முஹம்மத் அல்கஸ்ஸாலி, இமாம் யூஸுப் அல்கர்ளாவி என ஒரு நெடும் அறிவுப்பாரம்பரியத்தினூடாக தான் உள்வாங்கிய மகாஸிதிய சிந்தனை மரபை சமகால உலக ஒழுங்கில் கோட்பாட்டு உருவாக்கத்திற்கான ஆய்வு முறைமையாக உருமாற்றி, வடிவமைத்து தரும் மிகப்பெரும் அறிவுத்துறை பங்களிப்பை மேற்கொண்டுள்ளார் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா (ப்ரோட்ரர்ட், 2022). அந்த வகையில் ‘மகாஸித் முறைமை’ என்பது பின்வரும் கோட்பாட்டு அடிப்படைகளையும் இயக்கக் கூறுகளையும் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது (நஜிமுடீன், 2022).
I. அறிவுக்கோட்பாட்டில் வஹியையும், தர்க்க ஒழுங்கில் மகாஸிதையும், கோட்பாட்டு உருவாக்கத்தில் அரபு மொழியையும் மையமாகக் கொண்ட ஆய்வு முறைமை.
II. இஸ்லாமிய அறிவியற் துறையின் கடந்தகால வரலாற்றனுபவங்களை மீள்வாசிப்பு செய்து அதன் வழியாக நிகழ்கால விவகாரங்களை அணுகுவதன் மூலம் வளமான எதிர்காலத்தை திட்டமிடும் முறைமை.
III. ‘ஏன்?’ என்ற கேள்வியை மையமாகக் கொண்ட ஆய்வு வினாக்களை (கஸ்துல் பஹ்ஸி) கொண்ட ஆய்வு முறைமை.
IV. (ஏவல்கள் மற்றும் விலக்கல்கள், தர்க்கவியல் நியாயங்கள், விழுமியங்கள், பிரபஞ்ச நியதிகள், தொடர்புபட்ட தரப்பினர்கள், கோட்பாடுகள், இலக்குகள் ஆகிய) ஏழுபெரும் எண்ணக் கருக்களின் சேர்க்கையில் உருவாக்கப்பட்ட இணை கருத்தாக்கத்தை (தஸவ்வுர் அல்முரக்கப்) மையப்படுத்தி இயங்கும் ஆய்வு ஒழுங்கு.
V. ஷரீஆ கலை நிபுணர்கள், பிற துறைசார் நிபுணர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், மூலோபாய மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகிய நான்கு பிரிவினரையும் ஒன்றினைத்த ஆய்வுக் குழுவின் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் ஆய்வு முறைமை (அவ்தா, 2025).
முடிவுரை
ஆக, மகாஸிதை மரபுவழி உஸூல் துறைசார்ந்த புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு புத்தாக்ககரமான சிந்தனையாக முன்வைத்தது மட்டுமன்றி வெறுமனே ‘சட்டவாக்கம்’ என்பதையும் தாண்டி ‘முஸ்லிம் சமூகத்தின் தொடரியக்கத்திற்கான கொள்கை சாதனம்’ என்ற நிலை வரை நம்மால் மகாஸித் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அவ்தாவின் ஆய்வு முயற்சிகள் அமைந்துள்ளன. அப்படி பிரயோகிப்பதற்கான அவசியத்தையும், சாத்தியப்பாடுகளையும் நடைமுறை விவகாரங்களை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் நிறுவுகின்றார் (ஸுப்ஹானி, 2021) அந்த வகையில் பார்க்கும் போது மகாஸித் குறித்த கருத்தாடலை மேம்படுத்தி முன்னேற்றத்தை நோக்கி நகர்த்துவதற்கான பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் ஆய்வு முயற்சிகளின் சிறம்பம்சங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம் (அப்துல்லாஹ், 2023).
I. மகாஸித் குறித்த சிந்தனைகளை வெகுஜன மொழியில் மக்கள் மயப்படுத்தியமை.
II. உஸூலுல் பிக்ஹ் துறைக்குள்ளால் மட்டுப்படுத்தப்பட்டு புரியப்பட்ட மகாஸிதின் இஸ்லாமிய கலைகளுக்குள்ளாலும், அதற்கும் அப்பால் சமூகவியல் துறை கண்ணோட்டங்களின் அடியாகவும் அணுக முடியுமான பல்பரிமாணங்களை தெளிவாக நிறுவியமை.
III. மகாஸித் எனும் துறையின் வளரச்சிப் போக்கையும், உட்கட்டமைப்பையும் ஒழுங்கு முறையாக சித்தரித்தமை.
IV. மகாஸிதை வெறும் ஒரு அறிவியற் துறை என்ற நிலையிலிருந்து ஒட்டுமொத்த இஸ்லாமிய அறிவியற் பரப்பையும் மீளொழுங்குபடுத்தவல்ல ஓர் ஆய்வு முறைமையாக மேம்படுத்தியமை.
References:
Auda, Jasser. Ijtihad al-Maqasidi: Min al-Tasawwur al-Usuli ila al-Tanzil al-‘Amali. First edition. Beirut, Lebanon, 2013.
Auda, Jasser. Maqasid al-Shari‘ah as Philosophy of Islamic Law. Herndon, VA: International Institute of Islamic Thought (IIIT), 2008.
Auda, Jasser. Maqasid al-Shariah: A Beginner’s Guide. Illustrated ed. Vol. 14 of Occasional Papers. Herndon, VA: International Institute of Islamic Thought, 2008.
Auda, Jasser. Re-Envisioning Islamic Scholarship: Maqasid, Methodology and Reform. London: Claritas Books, 2021.
Auda, Jasser.Tafkir al-Maqasidi Beirut, Lebanon: Dar al-Mashriq, 2017.
Abdullah, Ahmad Badri. “Re-Envisioning Islamic Scholarship: Maqasid Methodology as a New Approach: A Book Review.” Journal of Contemporary Maqasid Studies 2, no. 2 (2023): 103–108. https://doi.org/10.52100/jcms.v2i2.117.
Najimudeen, Mohamed Rishard. “Re-Envisioning Islamic Scholarship: Maqasid Methodology as a New Approach.” ICR Journal 13, no. 1 (2022): 168–171. https://doi.org/10.52282/icr.v13i1.906.
Subhani, Zulqernain Haider. “Book Review: Re-Envisioning Islamic Scholarship: Maqasid Methodology as a New Approach by Jasser Auda (2021).” Journal of Al-Tamaddun 18, no. 2 (2023): 299–303. https://doi.org/10.22452/JAT.vol18no2.22.
Abdelgafar, Basma. Maqasid Methodology: Challenges of Application. YouTube video, 1:59:44. Posted by Maqasid Institute, December 20, 2021. https://youtu.be/Bc8al4F1WoQ?si=aH-TM5WmGHq_PhkK.
Auda, Jasser. An Islamic Methodology for Today. YouTube video, 1:28:05. Posted by Al Sharq Youth, January 28, 2021. https://youtu.be/gl3LqQ5bqsM?si=X7-G8SkEUrVk2eYS.
Auda, Jasser. Maqasid Methodology: A New Approach. YouTube video, 24:36. Posted by Maqasid Institute, February 19, 2025. https://youtu.be/K9oabMm0CGY?si=vDPcqmRfzWpbOGKx.
Auda, Jasser. Re-Envisioning Islamic Scholarship: Maqasid Methodology as a New Approach. 4th International Conference on Islamic Epistemology (4th ICIE). YouTube video, 45:21. Posted by IAIS Malaysia, April 11, 2024. https://youtu.be/5-bLx1WbY7E?si=7v26DvWzIm60WbKq.
Brodrard, Baptiste. Application of the Maqasid Methodology in Practical Research. YouTube video, 1:04:09. Posted by Dr. Baptiste Brodrard, August 6, 2022. https://youtu.be/4enFyAVFP3A?si=_rY1n8kx2QP6ItDn.

