கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

[மாபெரும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னால் மறைந்திருப்பது, அச்சம் மற்றும் ஒடுக்குமுறையின் சூழலே —குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டவோர் நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை இது உணர்த்துகிறது.]

இந்தியா மற்றுமொரு மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் இருக்கிறது. ஏறத்தாழ 100 கோடி மக்கள் வாக்களிக்கவிருக்கும் ‘வரலாற்றிலேயே மிகப்பெரும் தேர்தல் ஜனநாயக நடைமுறை’ என்று ஊடகங்கள் இதனை வருணிக்கின்றன. ’உலகிலேயே மிகப்பெரிய…’ எனும்படியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஒப்பீடுகளில் இதுவும் ஒன்று.

17 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (பாஜக)தான் உலகிலேயே மாபெரும் அரசியல் கட்சி; நடைபெறும் தேர்தலோ ‘புவியிலேயே மாபெரும் மானுட நிகழ்வு’.

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு’ என்ற முந்தைய வர்ணிப்புடன் கூடுதலாக, பிரதமர் மோடி இப்போது இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று வேறு வர்ணித்திருக்கிறார்.

‘ஜனநாயகத்தின் பிறப்பிடம் கிரேக்கம்’ என்ற மேற்கின் கோஷத்திற்குப் போட்டியாகக் கட்டமைக்கப்பட்ட கோஷம் இது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தற்போதைய சிரியா, ஈராக், ஈரான் ஆகிய பகுதிகளில் கிரேக்கத்திற்கு வெகுமுன்னரே ஜனநாயகம் தோன்றிவிட்டது எனக் கூறி மேற்கத்தியக் கட்டுக்கதையை அரசியல் கோட்பாட்டாளர் ஜான் கீன் ஏற்கெனவே உடைத்துவிட்டார் என்பது தனி விசயம்.

அச்சத்தின் ஜனநாயகம்

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

ஊழல், மோசடி அல்லது சட்டவிரோத வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய புலனாய்வு ஆணையமும் (CBI) இந்தியாவில் பொருளாதாரக் குற்ற முகமையான அமலாக்கத்துறை இயக்குநகரமும் (ED) பா.ஜ.க.வின் இந்து மேலாதிக்கச் சித்தாந்தத்திற்குக் கட்டுப்படாத (அல்லது கட்டுப்படுவதை நிறுத்திவிட்ட) அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன. எதிர்ப்போர் பலரும் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

சாதாரணக் குடிமக்களிடம், — குறிப்பாக, அதிகாரமற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள முஸ்லிம்களிடம் — இந்த அச்சம் அதிகமாகவே நிலவுகிறது. இந்துச் செயல்பாட்டாளர்கள்போல் அல்லாமல், முஸ்லிம்கள் அவர்களின் மதநம்பிக்கைக்காகவே அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள்.

கடந்த வருடம், மும்பையில் ஓடும் ரயிலில் ஆயுதம் ஏந்திய இந்து ரயில்வே காவல்துறை அதிகாரி சேதன் சிங், மூன்று முஸ்லிம்களைக் கொலைசெய்தார்.

கொலை செய்யப்பட்ட அஸ்கர் அப்பாஸ் அலியின் ரத்தம் தோய்ந்த உடல்மீது தனது இடது காலை வைத்தவராக, ‘உங்கள் எஜமானர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் இங்கே வாழ வேண்டுமென்றால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார் சேதன் சிங்.

தனது கணவரின் தாடி, தொப்பி போன்ற வெளிப்படையான இஸ்லாமிய அடையாளங்களின் காரணமாகவே சிங் அவரைக் கொலைசெய்ததாக அலியின் மனைவி உமைஸா பேகம் கூறுகிறார்.

பேகம் போன்ற பெரியவர்கள் மட்டும் காவல்துறையின் அட்டூழியத்தால் பாதிக்கப்படுவதில்லை. குழந்தைகளும்கூட குறிவைக்கப்படுகின்றனர்.

ஜனவரி மாதம் தலைநகர் டெல்லியில் ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA), 600 ஆண்டுகாலப் பள்ளிவாசலை தன்னிச்சையாக புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியது.

இந்தப் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு அடக்கத்தலமும், அநாதைகள் இலவசக் கல்வி பெறும் ஒரு மதரஸாவும் இருக்கின்றன. டெல்லி வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான இந்த முழுச் சொத்தும் சட்டவிரோதமானது என்று கூறப்பட்டு தற்போது தரைமட்டமாக்கப்பட உள்ளது. ‘எதைக் கண்டால் அச்சம்?’ என்று அந்த மதரஸாவில் பயின்றுவரும் 12 வயது ஸீஷானிடம் கேட்டபோது ‘புல்டோசர்களையும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும் கண்டால்…’ என்று அவன் பதிலளித்தான்.

பிற்பாடு, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளிவாசல் எதன் அடிப்படையில் இடிக்கப்பட்டது என்பதை விளக்குமாறு உத்தரவிட்டு டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தைக் கண்டித்தது.

இந்து மேலாதிக்கச் செயல்திட்டத்தை எதிர்க்கும் முஸ்லிம்களின் வீடுகளும் சமயத்தலங்களும் 2014 முதல் டெல்லி, குஜராத், ஹரியானா, கஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் என இந்தியா முழுவதும் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்படுகின்றன. புல்டோசர்களின் இந்தப் பயன்பாடு, ஒடுக்கப்பட்ட ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் கைக்கொள்ளும் வன்முறையான இனஒதுக்கல் கொள்கையை நினைவூட்டுகிறது.

இந்தியா முழுவதும் முழு வீச்சிலுள்ள இந்த அச்சம், ஜனநாயகத்திற்கு அந்நியமானது. பிரெஞ்சு மெய்யியலாளர் மாண்டெஸ்கியூவின் கூற்றுப்படி, அச்சமென்பது சர்வாதிகாரத்திற்கு அடித்தளமாகும். ஆனால் தேர்தல்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், மக்களின் ஒப்புதல் என்கிற பெயரில் தன்னைத்தானே புனிதப்படுத்திக்கொண்டும் இந்தியா சர்வாதிகாரத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மற்றொரு பிரெஞ்சு மெய்யியலாளர் அலக்சி டி டோக்குவில் இதனை ‘பெரும்பான்மையின் கொடுங்கோன்மை’ என்று வருணிக்கிறார்.

முஸ்லிம் ‘அபாயம்’

பேகம், ஸீஷான் போன்றோர் எதிர்கொள்ளும் அச்சத்தின் யதார்த்தத்தை பெரும்பாலும் மூடிமறைத்துவிடும் அதிகாரப்பசி கொண்ட ஊடகங்கள், முஸ்லிம்களை இந்தியாவிற்கொரு அச்சுறுத்தலாகத் தொடர்ந்து சித்தரித்துவருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போதான பல்வேறு உரைகளில் மோடியும்கூட இதையே மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறார்.

உதாரணமாக, ஏப்ரல் 21, 2024 அன்று முஸ்லிம்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்றும், ‘அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள்’ என்றும் வருணித்தார். எட்டு தினங்கள் கழித்து, 2001இல் செய்ததுபோலே, இஸ்லாத்தை பங்கரவாதத்துடன் சமன்படுத்திப் பேசினார்.

‘முஸ்லிம் அச்சுறுத்தல்’ என்ற இந்த முக்கிய அரசியல் விளையாட்டை பெரும்பாலும் அனைத்து தீவிர வலதுசாரிக் கட்சிகளும் மும்முரமாக விளையாடி வருகின்றன. விளையாடுபவர்களின் பாத்திரங்கள் சிலபோது மாறினாலும், விளையாட்டும் திரைக்கதையும் மாறுவதில்லை. இந்த விளையாட்டு பெருமளவு ஒரு சர்க்கஸிற்கு இணையானது.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1947 முதல் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக் கூட்டணி (இந்தியா) என்ற இரண்டு அரசியல் கூட்டணிகள் களத்தில் போட்டியிடுகின்றன.

2023இல் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியைக் கட்டமைத்தார். ஆயினும், அவரே பிறகு ஆளும் கூட்டணியில் இணைந்தார். ‘அவர்களுடன் (பாஜகவுடன்) இணைவதைவிட நான் இறப்பது சிறந்தது‘ என்று இந்த அணி தாவலுக்குச் சற்று முன்னர்தான் அவர் கூறியிருந்தார். தன்னை சோசலிசவாதி என்று அழைத்துக்கொள்ளும் இந்த நிதிஷ் குமார், இதற்கு முன்பும்கூடவலதுசாரி இஸ்லாமோஃபோபிய பாஜக கூட்டணியில் இருந்திருக்கிறார்.

நிதிஷ் குமாரின் முன்னும் பின்னுமான இந்நகர்வுகள், எதிரிகள் நண்பர்களாகவும், நண்பர்கள் எதிரிகளாவும் மாறுவதென்பது இந்தியத் தேர்தல் அரசியலின் ஓர் அங்கம் என்பதைக் காட்டுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணியின் நண்பன். எனவே தேசிய அளவில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியின் நண்பனுமாகும். ஆனால் சிபிஎம் ஆட்சியில் உள்ள கேரளாவில் இருவரும் அரசியல் எதிரிகள். ‘பாஜகவும் காங்கிரசும் திருடர்கள்; ஒன்றுவிட்ட சகோதரர்கள்’ என்பதே 1990களில் சிபிஎம் கட்சியின் கோஷமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

முஸ்லிம்களை தொடர்ந்து எதிரியாக முன்னிறுத்தும் இந்திய அரசியலின் மிக மோசமான இப்போக்கு, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசியலில் மாறாதவோர் அம்சமாக நீடித்துவருகிறது. சமீபத்திய ஒரு தேர்தல் பிரச்சாரத்தில்கூட, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக மோடி தாக்கினார்.

ஆங்கிலேய இந்தியாவின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் பொருட்டு இந்துப் பெரும்பான்மைவாதத்தை எதிர்த்தது. ஆனால், பெரும்பான்மை இந்துக்கள் அதனை வகுப்புவாதக் கட்சியாகவும், பாகிஸ்தான் உருவாவதற்குக் காரணமான கட்சியாகவும் கருதுகிறார்கள். முஸ்லிம் லீக்கின் தலைவர் முகம்மது அலி ஜின்னா, இந்திய அரசியலில் மிகவும் இகழப்பட்ட நபர்களில் ஒருவர். பாகிஸ்தானும் அப்படித்தான்.

காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் லீக்குடன் தொடர்புபடுத்தியதில் மோடிக்கு இருந்த உண்மையான இலக்கு முஸ்லிம்களே அன்றி காங்கிரஸ் அல்ல என்பதை வரிகளுக்கிடையில் வாசித்தால் புரிந்துகொள்ள முடியும். அதாவது, முஸ்லிம்களே இறுதி எதிரிகள்; காங்கிரஸ் அவர்களின் முத்திரையைச் சுமந்திருக்கிறது, அவ்வளவே. மோடியின் பேச்சை விஷமத்தனமானது என்பதாகக் கையாள்வதற்குப் பதில் இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் அதனை ‘உண்மை’ என்பதாக வெளியிட்டன.

மோடியின் மீது எதிர்த் தாக்குதல் நடத்திய காங்கிரஸ், மோடியின் அரசியல் முன்னோடிகள்தாம் முஸ்லிம் லீக் கட்சியுடன் நேசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டியது. ‘அறம் சார்ந்த ஊடகச் செயல்பாட்டிற்காக’ ரமோன் மகசேசே விருது பெற்ற, பாஜவை விமர்சிக்கும் லிபரலாக அறியப்படும் ரவீஷ் குமார், காங்கிரசின் இந்தப் பதிலடியை ஆதரிப்பதை அறம் சார்ந்ததாகக் கண்டார்.

இந்த நிழல் தாக்குதல், எதிர்த் தாக்குதல் இரண்டிலுமே பாஜகவும் காங்கிரஸும் முஸ்லிம்களை இறுதி எதிரிகளாக்கியிருப்பதைப் புரிந்துகொள்ள அவர் ஏனோ தவறிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே ஜின்னா தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் என்பதையோ, ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்’ என்று மூத்த காங்கிரஸ் தலைவரான சரோஜினி நாயுடு ஜின்னாவைக் குறிப்பிட்டதையோ சொல்வதற்கு காங்கிரஸ் தயாரில்லை.

அதே தேர்தல் பரப்புரையில், ராமர் கோயில் கும்பாபிசேகச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக காங்கிரஸ் கட்சியை இந்துக்களுக்கு எதிரானது என்று அடையாளப்படுத்தினார் மோடி. ஆனால், ‘பாபரி பள்ளிவாசல் பாதுகாக்கப்படும்’ என்பதாக வெளியில் முஸ்லிம்களை முட்டாளாக்கினாலும், பாபரி பள்ளிவாசல் இருந்த அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் காங்கிரஸ் உதவிசெய்தே வந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ராமர் கோயில் கட்டுவதை தாங்கள் ஆதரிப்பதாக 2019இல் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. முகலாய மன்னர் பாபர் பெயரிலான பள்ளிவாசலின் இடிப்பை நியாயப்படுத்தும் நைச்சியமான வழிமுறையாகும் இது. அரசியல் அரங்கில் எதிரிகளாக இருந்தாலும், இறுதி எதிரி யார் என்பதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்தே நிலவுகிறது.

பத்தாண்டு கால மோடி ஆட்சியில் இவ்விரு கருத்துநிலைகளும் கடும் இணக்கத்துடனே செயல்பட்டு வந்துள்ளன. உதாரணமாக, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ‘உண்மையான இந்தியாவிற்கு’ உரியவர்கள் கிடையாது எனச் சித்தரிப்பதிலும், அதே சமயம் இந்து தேசத்தைக் கட்டமைக்கும் தீவிர முன்னெடுப்பிலும் இரு சாராருக்குமுள்ள பன்மைத்துவ எதிர்ப்புக் கருத்துநிலை தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் இந்தப் பெருந்திரள்வாதத்தின் (populism) வேர் மோடி ஆட்சியை விடப் பழமையானது. சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது, அதி தீவிர வலதுசாரி இந்து அரசியல்வாதிகள் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களாக மாறினார்கள். நீதி, பன்மைத்துவம், சுதந்திரம் ஆகியவற்றுக்காக அல்ல — பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான எளிய வழி அது என்பதற்காகவே ஜனநாயகவாதிகளாக மாறினார்கள். உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் நிலவும் இந்தப் பெருந்திரள்வாத ஆபத்தை எப்போது நாம் அடையாளம் கண்டுகொள்ளப் போகிறோம்?

(இர்ஃபான் அஹ்மது, துருக்கி இஸ்தான்புல் இப்னு ஃகல்தூன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்).

Source: It’s time to face the hard truth about democracy in India (TRT World)

தமிழில்: ரியாஸ்

Related posts

Leave a Comment