Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் முதற்கட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவைச் சந்திக்கின்றன. திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளின் தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைந்தாலும், திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேதான் போட்டி இருக்கிறது.

முஸ்லிம் கட்சிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகும், மனிதநேய மக்கள் கட்சியும் (மமக) திமுக அணியிலும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) அதிமுக அணியிலும் அங்கம் வகிக்கின்றன. முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ கட்சிகளுக்குத் தலா ஓர் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிரப் பிரதானக் கட்சிகள் எதுவும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. மேலும், இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் எத்தனை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தேடியபோது கிடைத்த முடிவுகள் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் மக்கள் தொகை 5.86 சதவிகிதம், அதாவது ஏறத்தாழ 42 இலட்சம். இந்த விகிதாச்சாரக் கணக்கின்படி ஒருமுறை நடைபெற்ற மக்களவைக்குத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டுமுதல் மூன்று முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடைபெற்ற பதினேழு மக்களவைத் தேர்தல்களிலும் சேர்த்தே மொத்தம் பதினேழு முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1957, 1967, 1989, 2004 மற்றும் 2009இல் நடைபெற்ற தேர்தல்களில் இரண்டு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1962, 1971, 1980, 1984, 1991, 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் மட்டுமே மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1952, 1977, 1996, 1998, 1999 தேர்தல்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்தப் பதினேழு நபர்களும் எந்தக் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் எனப் பார்த்தால், முடிவுகள் அதைவிட ஆச்சர்யமாக இருக்கிறது.

.எண்தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிதொகுதி
சென்னை மாகாணம்
11952இல்லை  
21957குலாம் முகைதீன்காங்கிரஸ்திண்டுக்கல்
 1957எம்.கே.எம். அப்துல் ஸலாம்காங்கிரஸ்திருச்சி
31962அப்துல் வாஹித்காங்கிரஸ்வேலூர்
41967M.ஷெரீஃப்சுயேச்சைஇராமநாதபுரம்
 1967அஜ்மல் கான்சுதந்திரா கட்சிபெரியகுளம்
தமிழ்நாடு மாநிலம்
51971S.M. முகம்மது ஷெரீஃப்சுயேச்சைபெரியகுளம்
61977இல்லை
71980அப்துல் சமதுசுயேச்சைவேலூர்
81984பக்கீர் முகம்மதுகாங்கிரஸ்மயிலாடுதுறை
91989பக்கீர் முகம்மதுகாங்கிரஸ்மயிலாடுதுறை
 1989அப்துல் சமதுமுஸ்லிம் லீக் (காங்கிரஸ் சின்னம்)வேலூர்
101991அக்பர் பாஷாகாங்கிரஸ்வேலூர்
111996இல்லை
121998இல்லை
131999இல்லை
142004ஹாரூன் ரஷீத்காங்கிரஸ்பெரியகுளம்
 2004காதர் முகைதீன்முஸ்லிம் லீக் (திமுக சின்னம்)வேலூர்
152009அப்துல் ரஹ்மான்முஸ்லிம் லீக் (திமுக சின்னம்)வேலூர்
 2009ஹாரூன் ரஷீத்காங்கிரஸ்தேனி
162014அன்வர் ராஜாஅதிமுகஇராமநாதபுரம்
172019நவாஸ் கனிமுஸ்லிம் லீக்இராமநாதபுரம்

ஆதாரம்: https://www.indiavotes.com/lok-sabha


காங்கிரஸ் கட்சி சார்பாக ஒன்பது முறை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூன்று முறை சுயேச்சைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருமுறை சுதந்திரா கட்சி, அதிமுக, முஸ்லிம் லீக் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக சின்னத்தில் இரண்டு முறை முஸ்லிம்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி சின்னத்திலும் ஒருமுறை முஸ்லிம் லீக் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் நலன், சமூக நீதி என்று உயர்த்திப் பிடிக்கும் திமுக சார்பாக ஒரு முஸ்லிம் கூட மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காயிதே மில்லத் தனது மரணத்தருவாயில் கருணாநிதியின் கரங்களைப் பிடித்து ‘இந்தச் சமுதாயத்தை உங்களிடம்தான் ஒப்படைக்கிறேன்’ என்று கூறியதாக திமுகவினர் பல்லாண்டுகளாக ஒரு செய்தியைக் கூறி வந்தனர். இப்போது அதனைக் கூறுகிறார்களா எனத் தெரியவில்லை. கையை பிடித்து ஒப்படைத்த சமுதாயத்திற்கு திமுக செய்யும் கைமாறு இதுதானா?

ஒரு சமூகத்தின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிட்டு சமூக நீதியை நிலைநாட்டியதாக எப்படிப் பெருமையடித்துக்கொள்ள முடியும்? முஸ்லிம்களை நிறுத்தினால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு, அதனால்தான் அவர்களை நிறுத்துவதில்லை என்று திராவிடக் கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு சாக்குபோக்குகளைக் கூறுகின்றனர். இந்தக் காரணத்தைக் கூறுவதற்கு உண்மையில் அவர்கள் வெட்கித் தலைகுனியவே வேண்டும்.

முஸ்லிம்களை இந்திய அரசியலிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கும் வேலையை இந்துத்துவச் சக்திகள் செய்து வரும் இன்றைய சூழலில் அதனைத் தவிடுபொடியாக்கும் விதத்தில் திராவிடக் கட்சிகள் செயற்பட வேண்டுமல்லவா? ஆனால், அதற்கு மாறாக பாசிசத்திற்கு ஒத்துழைப்பது போல் அல்லவா இவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இப்பொழுது இருக்கட்டும், ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரும் கூட முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது ஏன் என்பது நமக்கு இன்னும் விளங்கவில்லை.

திராவிடர் கழகத்தின் காலத்திலிருந்தே அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் பங்களிப்பு கணிசமானது. திமுகவின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் கூட முஸ்லிம்களின் பங்களிப்பை மறுக்கமுடியுமா? இத்தனைக்கும் நாத்திகத்தைப் போதிக்கும் கட்சி எனும் குற்றச்சாட்டையும் கடந்து அக்கட்சியின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இவ்வளவு இருந்தபோதும் முஸ்லிம்களுக்கு இதுவரை ஒரு மக்களவை இடம் கூட வழங்கப்படாததை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியுமா? சாதி கணக்கைக் கச்சிதமாகப் பார்த்து வேட்பாளர்களையும் அமைச்சர்களையும் நியமனம் செய்பவர்களுக்கு முஸ்லிம்களுக்கு உரிய பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று இதுநாள் வரை ஏன் தோன்றவில்லை? இதயத்தில் இடம் கொடுத்தால் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!

மீலாது கூட்டங்களில் பேசியதையும் மீலாது நபிக்கு விடுமுறை அளித்ததையும் மிகப்பெரும் சாதனையாகப் பேசுவதில் என்ன சமூக நீதி இருக்கிறது? அரசியல் அதிகாரத்தை ஒரு சமூகத்திற்கு மறுப்பதன் மூலம் எந்தத் திராவிட மாடலை இவர்கள் நிலைநாட்டப் போகிறார்கள்? ‘உங்களின் பிரச்சனைகளை நாங்கள் பேசுகிறோம். எங்களுக்கு வாக்கு மட்டும் அளியுங்கள்’ என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இங்கு ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் தனித்துவமானவை. முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம்களால் மட்டும்தான் பேச முடியும். கியான்வாபி பள்ளிவாசல் விவகாரத்தில் நீதியைக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் முஸ்லிம் லீக்கின் மூன்று உறுப்பினர்கள் மட்டும் பதாகையைப் பிடித்து நின்ற காட்சி இதற்கான ஒரு சமீபத்திய உதாரணம். ஓர் அடையாளப் போராட்டத்தில் கூட முஸ்லிம்களின் பக்கம் நிற்க முன் வராதவர்கள் முஸ்லிம்களின் நலன்களில் எங்ஙனம் அக்கறை கொள்வார்கள் என்ற கேள்வியை இச்சம்பவம் எழுப்பியது.

திமுகவிலிருந்து தோன்றிய அதிமுகவும் மதிமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிமுக சார்பாக ஒரு நபராவது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2000இற்கு பிறகு தோன்றிய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குச் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது. மமக, மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் முதலில் அதிமுக சின்னத்தில்தான் வெற்றி பெற்றனர்.

முஸ்லிம்கள் இல்லாத இந்திய அரசியல் என்ற இலக்கை நோக்கி பாஜக வேகமான பயணித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் வாக்குகளே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள அக்கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மலப்புரம் தொகுதியில் மட்டும் ஒரு முஸ்லிமை நிறுத்தியுள்ளது. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாத முதல் ஆட்சியை அக்கட்சி நடத்திவிட்டது.
ஆனால், முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் இங்கு எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கவே செய்கிறது. இதில் பாசிசம், சோசியலிசம், திராவிடம் என எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. முஸ்லிம்களை அரசியலிலிருந்து அந்நியப்படுத்தும் இப்போக்கை முஸ்லிம் பொலிடிகோஃபோபியா என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பாஜகவையும் கடந்து அனைவரையும் இந்நோய் தாக்கிவிட்டதோ என்ற பலமான சந்தேகம் நமக்கு எழுகிறது. முஸ்லிம்களுக்கான உரிமைகளை மறைப்பதற்காக பாஜக அச்சத்தை மதச்சார்பற்ற, சோசியலிச கட்சிகள் விதைக்கின்றனரோ என்ற சந்தேகம் மக்களிடம் எழாமல் இல்லை. முஸ்லிம்களை வைத்தே இந்த அச்சத்தை முஸ்லிம்களிடம் லாவகமாகப் பதிய வைக்கின்றனர். இதன் காரணமாக முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட கட்சிகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.
ஒரு சீட் கலாச்சாரம், வாடகைச் சின்னம், பாஜகவின் பி டீம், பச்சை சங்கி என்று எதற்கும் உதவாத விமர்சனங்களை எதிர்கொண்டே இக்கட்சிகளின் நாள்கள் நகர்கின்றன. இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு அவை மக்கள் மன்றங்களில் விவாதிக்கப்படாமல் தடுத்து விடுகின்றனர். திமுகவும் அதன் அடிவருடிகளும்தான் இதனை முன்னின்று செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

முஸ்லிம்களின் நிலை, அவர்களின் தேவைகள், அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பேசுவதற்கு முஸ்லிம்களால் தான் முடியும் என்பதாலேயே அந்த உரிமையை முஸ்லிம்கள் கேட்கின்றனர். இத்தனைக்கும் அனைத்துச் சமூகங்களும் கேட்டு அனுபவித்துக் கொண்டிருப்பதைத்தான் முஸ்லிம்களும் கேட்கிறார்களே அல்லாமல் புதிதாக எதையும் அவர்கள் கேட்கவில்லை.

ஆனால், இந்த உரிமையை இத்தனை ஆண்டுகள் ஏன் மறுத்தார்கள் என்ற கேள்வியிலிருந்து இவர்களால் ஒருபோதும் தப்ப முடியாது. குறிப்பாக, திமுகவிற்கு அக்கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய கடமை அதிகமாகவே இருக்கிறது.
•••••
(இணையதளத்தில் பெறப்பட்ட முஸ்லிம் மக்களவை உறுப்பினர்களின் விபரங்களைச் சரி பார்த்து உறுதிப்படுத்திய வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்).

Related posts

2 Thoughts to “மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்”

  1. Ismail

    மமக முதல்முறையாக அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் மூன்று இடங்களில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்றனர்

  2. Mohamed Abusheik

    1967 M.ஷெரீஃப் சுயேச்சை இராமநாதபுரம்
    1971 S.M. முகம்மது ஷெரீஃப் சுயேச்சை பெரியகுளம்
    மதுரையைச் சார்ந்த இவர் எமது தாய் வழி குடும்பத்தில் வரும் பாட்டனார் ஆவார்.

Leave a Comment